என் வாழ்க்கையின் மதிப்பை ஒரு இலக்கம் முடிவு செய்வதா?
-யாரோ
தொடர் -7
மூன்றாம் உலக நாடுகள்
நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய அந்த காலத்தில் ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நாட்டம் காட்டின என்று கண்டோம். அடிமை வர்த்தகமும் அதில் அடக்கம்.
இன்று என்ன நடக்கிறது?
வளர்முக நாடுகள் என்று சொல்லப்படும் நம் நாடுகளுக்கு, ஏகாதிபத்தியங்கள் அரசியல் விடுதலை கொடுத்துவிட்டாலும் அவர்களின் பொருளாதாரப் பிடியில் விடுதலை கிடைத்துவிட்டதா?
அடிமை வர்த்தகம் இப்போது இல்லையா?
மேற்கு நாடுகளிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கடன் வாங்கிவிட்டு , ஏதோ ஆண்டவன் புண்ணியம் என்று சந்தோஷப் படுகிறோம். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். வட்டியை மட்டும் கட்டுகிறோம்.
வளர்முக நாடுகளின் கடன்கள் 1986 களிலேயே ஒரு ட்ரில்லியன் டாலர்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு வட்டி. மேற்கு நாடுகள் கடனை ரத்து செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
கேட்டால், முதல்ல அவனை ரத்து செய்யச் சொல்லு. அப்ரம் நான் செய்றேன் என்று ஆளுக்காள் கைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாம் உலகத்தை சுரண்டுவது மூலமாகத் தான் அவர்களின் நடுத்தர, எளிய மக்களை அவர்கள் ஜாலியாக இல்லாவிட்டாலும் திருப்தியாக சரி வைத்திருக்க முடிகிறது. இன்றேல் அவர்களின் அரசியல் அழுகி நாற்றமெடுக்க அதிகநாள் போகாது என்று அந்த அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.
புதிய பணம் இந்த அநீதியை சரி செய்ய உதவும் என்கிறார் மார்கரீட் கென்னடி.
இன்று நடைமுறையில் இருக்கும் புதுப் பணம்
இன்றைய கால கட்டத்தில் மேற்குலகில் பல நாடுகளில் அவர்களின் தேசிய பணத்துக்குப் (டாலர், யூரோ.. ) பதிலாக Complimentary currencies என்று சொல்லப்படும் வெவ்வேறு வகைப் பணங்கள் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இப் பணத்தை மாற்றுப் பணம் என்று சொல்லலாமா?
இவ்வகைப் பண அமைப்புகள் அந்தந்த அரசுகளின் அனுமதியோடு சிறு அளவில் பாவனையில் இருக்கின்றன. சில்வியோ கெசெலின் கோட்பாடுகளுக்கு ஏற்ப இயங்குகின்றன.
இந்தப் பணம், ஒரு குறிப்பிட்ட மாவட்டம் அல்லது நகரம் என்று அதன் எல்லைக்குள் மட்டும் பாவனையில் இருக்கும். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது உதவுகிறது.
LETS அமைப்பு
ஒவ்வொரு கிராமங்கள், ஊர்கள், நகரங்களில், இன்னின்ன பொருள்கள் விற்பனைக்கு இருக்கின்றன, அல்லது இன்னின்ன சேவைகள் வழங்கலாம் என்று தனிப்பட்டவர்கள், விளம்பரங்கள் அச்சடித்துப் பொது இடங்களில் ஒட்டியிருப்பதைக் காண்கிறோம். இல்லாவிட்டால் பத்திரிகைகளில், ஏன் இணைய தளங்களில் கூட வருகின்றன.
இவர்களுக்கு இன்றைய வங்கிகளோ அல்லது அங்காடி வசதிகளோ யாரும் ஏற்படுத்தித் தருவதில்லை. அவர்களும் மனிதர்கள். அவர்கள் வாழ்க்கைக்குப் பணம் தேவைப்படுகிறது. அவர்களின் பொருள்கள், சேவைகள் நமக்குத் தேவைப்பட்டாலும் அலட்சியமாய் இருந்து விடுகிறோம்.
இதனால் எத்தனையோ மனிதர்களின் உழைப்பு வீண் போய்விடுகிறது. அவர்களில் திறமைசாலிகள் இருந்தும் அவர்களின் குரல் கேட்காமலேயே போய்விடுகிறது.
LETS என்பது Local Exchange Trading System என்பதன் சுருக்கம். நேரடியான மொழிபெயர்ப்பில், உள்ளூர் வணிக பரிமாற்ற அமைப்பு என்று பொருள் கொள்ளலாம்.
உள்ளூர் மக்களின் பொருளியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய கனடா, பிரிட்டன், அமெரிக்கா, நியூ சிலாந்து, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் திருப்திகரமாக செயல்படுகிறது இந்த LETS அமைப்பு.
இதில் யாரும் உறுப்பினராய் சேர்ந்து கொள்ளலாம். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நம்பிக்கை கொள்வதும் இதில் மிக முக்கியம்.
ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வடிவங்களில் இந்த அமைப்பு செயல்பட்டாலும் அதன் அடிப்படை ஒன்று தான்.
கனடா
கனடாவை எடுத்துக் கொள்வோம். பல நகரங்களில் இதன் பேர்: Green Dollars. இந்தப் பசுமை டாலர்கள் பேரிலேயே சுற்றுச் சூழல், இயற்கையைப் பேணுதல் என்னும் நோக்கம் அடங்கி இருக்கிறது. 1990 களில் சுமார் 600 பேர் அங்கத்தவர்கள். இன்று ஆயிரக்கணக்கில் ஒவ்வோர் ஊரிலும் இருக்கிறார்கள்.
பொருளியல் பரிமாற்றங்களை ஒருங்கிணைக்க, ஓர் மத்திய செயல்பாட்டு நிலையம் இருக்கிறது. உறுப்பினர்கள், என்னென்ன பொருள்கள், சேவைகள் இருக்கின்றன என்பதைக் கணணிகள்/செல்போன்கள் மூலம் அங்கு அனுப்பி விடுகிறார்கள். அதன் இணையத்தில் எல்லாரும் பார்க்கலாம்.
ஏதாவது தேவையா? உறுப்பினர் விற்பவரோடு தொடர்பு கொள்கிறார். விலை பேசி முடித்தபின், மதிப்பு பச்சை டாலர்களில், விற்பவரின் கணக்கில் வரவு, வாங்குபவரின் கணக்கில் பற்று என்று மத்திய நிலையத்தில் பதிவாகிறது.
பச்சை டாலரின் மதிப்பும் கனடா நாட்டின் தேசிய பணமான கனடா டாலரின் மதிப்பும் ஒன்றே.
யாரும் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. பச்சை டாலர் நோட்டுகள் என்று தனியாகப் பாவனையில் இல்லை. ஒரு சிறப்பு அட்டை மூலம் உங்களிடம் எவ்வளவு பணம் வரவு இருக்கிறது அல்லது பற்று (கடன்) இருக்கிறது என்று எப்போதும் பார்த்துக் கொள்ளலாம்.
வரவு இருந்தால் கனடா தேசிய டாலருக்கு மாற்றி எடுக்கலாமா? முடியாது.
கூடுதலாக வரவு இருந்தால் அதை செலவு செய்துவிடுங்கள் என்று அடிக்கடி நினைவூட்டுவார்கள். இல்லாவிட்டால் அது குறிப்பிட்ட காலத்தின் பின் அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும். (சில்வியோ கெசெலின் கோட்பாடு.)
கடன் இருந்தால், அந்த மதிப்பை கனடா தேசிய டாலரில் செலுத்த வேண்டும். அடிக்கடி நினைவூட்டுவார்கள். செய்துவிட்டால் பிரச்னை இல்லையே.
இதில் தெரிவது: பச்சை டாலர் சேர்த்து வைக்க உருவானதல்ல.
ஒருவரின் உழைப்பு உருவாகி அது விலையாகும்போது பச்சை டாலர் உருவாகி அவர் கணக்கில் வரவு ஆக சேர்கிறது. இன்னொருவர் அந்த உழைப்பை வாங்கும்போது அது அவரின் கணக்கில் செலவு என்று ஆகி மறைந்து போகிறது.
இந்த அமைப்பு உருவானபோது எதிர்ப்புகள் நிறைய எழுந்தன என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். சிலர் இது கம்யூனிஸ்ட்டுகளின் சதி என்று புரளி கிளப்பி விட்டார்கள்.
இவர்களுக்கு எதிராகப் பெண்கள் கூட்டம் கூடியது. எங்களுக்கு அது நிறைய நன்மைகள் செய்திருக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று அவர்கள் திருப்பிக் கேட்கப்போக, சொன்னவர்கள் கப்சிப்.
இந்த அமைப்பு ஒரு விதத்தில் பண்டமாற்று முறையைத் தான் இன்னொரு வடிவில் கொண்டு வருகிறது. ஒரு வரவு செலவு அமைப்பு இது.
இன்னார் சிறப்பு அம்சம் : யாரும் பச்சை டாலரைக் களவாட முடியாது.
இந்த அமைப்பில் இருக்கும் குறைகள் :
இந்தப் பரிமாற்றங்களில் வரி ஏய்ப்பு செய்ய நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஆகவே நகர நிர்வாகங்கள் இந்த அமைப்புக்கு ஊக்கம் தருவதில்லை.
நகர நிர்வாகமும் இந்த அமைப்பும் ஒன்று சேர்ந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் எத்தனையோ பேருக்கு உதவலாமே.
அடுத்து, வரவுகளும், பற்றுகளும் அளவுக்கு அதிகம் போய்விட்டால், அதை சீர் பண்ணுவது சிரமமான வேலையாக இருக்கிறது. எனவே எந்த நேரமும் கண்காணிப்பு அவசியம்.
இது சில சமயங்களில் உறுப்பினர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணி, அமைப்பில் இருந்து விலகிவிட அல்லது அமைப்பின் மீது ஆர்வம் குறைந்துபோய்விட ஏதுவாகிறது.
குறைகள் இல்லாது உலகில் எந்த அமைப்பும் இல்லை. இருந்தும் அமைப்பின் நன்மைகளை ஒட்டுமொத்தமாய் நோக்கும்போது குறைபாடுகள் அற்பமாகி விடுகின்றன.
நம் ஊரில் எத்தனையோ மனிதர்கள் பயன் பெறுகிறார்களே என்கிற திருப்தியை, உணர்வை உறுப்பினர்கள் மனதில் அது விதைக்கிறதே.
மேலும் அறிந்துகொள்ள:
LETS System Australia, New Zealand
Chiemgauer Money (கிம்கோவேர் பணம்)

ஜெர்மனியின் கிம்கோவ் (Chiemgau) நகரில் பாவனையில் இருக்கும் கிம்கோவேர் பணம் (1932 களில் வோர்ல் நகரத்தில் அமுல் செய்யப்பட்ட அதே சில்வியா கேசெலின் கோட்பாட்டில்) இன்று பாவனையில் இருக்கிறது.
உள்ளூர் ஆசிரியர் ஒருவரால் (கிறிஸ்டியான் கெல்லரி) 2003 ஆண்டில் அவரின் மாணவர்களுடன் துவங்கப்பட்ட இந்தப் பணம் எப்படி இயங்குகிறது என்பதை Youtube இல் காணலாம். (ஆசிரியரும் பேசுகிறார்)
அந்தப் பண நோட்டை வடிவமைப்பது, அதை நிர்வகிப்பது, கணக்குகளைக் கையாள்வது, விளம்பரம் செய்வது எல்லா வேலைகளையும் அவரின் மாணவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
ஒரு கிம்கோவேர் = ஒரு யூரோ
யூரோ, நாட்டின் தேசிய பணமாக இருந்தாலும், உள்ளூர் கிம்கோவேர் பணத்தையும் உபயோகிப்பதில் மக்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
இந்தப் பணத்தின் சிறப்பு அம்சம் : பாவனையில் அந்த நகர வங்கிகளும் நகர நிர்வாகமும் இணைந்திருக்கின்றன.
மேலும் அறிந்துகொள்ள:
Chiemgauer money-The Guardian UK
Time Banks அமைப்பு
இது அமெரிக்காவில் இயங்கும் அமைப்பு. இவர்கள் பணம் என்பதற்குப் பதிலாக, நேரம் என்பதை அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்.
பணத்தின் மூலம் தான் நாம் எல்லாவற்றையும் அளவிட வேண்டுமா? என்று கேட்கிறார்கள் இவர்கள்.
LETS அமைப்பு, பொருள்கள் சேவைகளை மதிப்பிட டாலரை வைத்திருக்க, இவர்கள் நேரத்தைக் கொண்டு பொருள்கள், சேவைகளை மதிப்பிடுகிறார்கள்.
கிட்டத்தட்ட 30, 000 – 40, 000 பேர் வரை இந்த அமைப்பில் பங்குகொண்டு பயன் பெறுகிறார்கள் என்பது கணிப்பு.
ஓர் சிறப்பு மென்பொருள் (software) அமைப்பின் பரிமாற்றங்களைக் கண்காணிக்கிறது. இல்லாவிட்டால் மத்திய ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொள்ளலாம்.
இவர்களின் கொள்கைகள்:
ஒவ்வொருவரும் மற்றவர் உடன் பகிர்ந்துகொள்ள ஏதோ ஒன்று வைத்திருக்கிறார்கள்.
சில தொழில்களை பணத்தால் மதிப்பிட முடியாது. உதாரணம்: குடும்ப உறவுகள், அண்டை அயலாரோடு நல்லுறவு, எல்லார் உணர்வுகள், குரல்களுக்கு மதிப்பளித்தல் , சமுதாய நீதியை இன்னும் மேம்படுத்தல்.
இவற்றைப் பணத்தால் அளவிட முடியுமா? ஆனால் இவைகளுக்கு நம் அமைப்பில் வரவுகள் உண்டு. அவற்றை நாம் மதிப்பிடுகிறோம் என்கிறது இந்த அமைப்பு.
ஒவ்வொருவரும் சிறு சிறு குழுக்களாய் இயங்குங்கள். பின்பு ஒவ்வொன்றையும் இணையுங்கள். ஒரு வலைப் பின்னல் போல எல்லாக் குழுக்களும் இயங்கட்டும்.
எப்படி இயங்குகிறது இந்த அமைப்பு?
உதாரணமாக, ஒரு டாக்டர் ஒரு மணித்தியாலம் உங்களுக்கு மருத்துவ சேவை தரலாம் என்கிறார். நான் ஒரு சாதாரண மெக்கானிக். ஆகவே என் சேவையை அதற்குப் பதிலாய் 3 மணித்தியாலமாய்த் தருகிறேன் என்கிறேன்.
நம் இடையில் ஒப்பந்தம் உருவாகிவிட்டால் அது மத்திய நிலைய மென்பொருளில் பதியப் படுகிறது.
எப்போது சேவை பரிமாற்றம் என்பதெல்லாம் நாம் இருவரும் பேசி முடிவுக்கு வரலாம்.
குறிப்பிட்ட காலத்துள் உறுப்பினர்களின் வரவுகளும் செலவுகளும் மேல் சொன்ன மற்ற அமைப்புகள் போலவே சரி செய்து கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி.
மேலும் அறிந்துகொள்ள:
Timebanks
WIR அமைப்பு, சுவிட்சர்லாந்து
சாதாரண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேல் சொல்லப்பட்ட அமைப்புகள் உதவுகின்றன. அப்போ, சாதாரண சிறு வணிகர்களுக்கு?
இதோ நாங்கள் இருக்கிறோம்! என்று உதவிக்கு முன்வருகிறது WIR அமைப்பு.
பெரும் பன்னாட்டு நிறுவனங்கள், பெரு வணிகங்கள் பொதுவாக, சிறு வணிகங்களை வளரவிடாமல் அழித்துவிட என்னென்ன சூழ்ச்சிகள் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கின்றன. இதற்கு அரசியல்வாதிகளும் கூட்டாளிகள் என்பது வேதனையான செய்தி.
சிறு வணிகர்களுக்காக, 1934 களிலே வெறும் 16 பேரோடு சுவிட்சர்லாந்தில் துவங்கிய இந்த அமைப்பில் இன்று சுமார் 62,000 வணிகர்கள் உறுப்பினர்கள்.
அதே சில்வியோ கெசெலின் கோட்பாடுகள் செயல்படுகின்றன. வணிகர்களின் கொள்முதல் பற்று வைக்கப்படுகிறது. பண்டங்களின் மதிப்பை அளவிட மட்டும் சுவிஸ் நாட்டின் தேசிய பணத்தை (Swiss Francs) உபயோகிக்கிறார்கள். பொருள் வாங்கிய வணிகர்கள் கணக்கை நேர் செய்யும்போது வரவு வைக்கப்படுகிறது.
யாரும் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது. வரவுகள் கூடிவிட்டால் கட்டாயமாக செலவு செய்யும்படி அடிக்கடி வற்புறுத்தல்கள் வரும். மதிப்பும் குறையும். செலவுகள் கூடிவிட்டால் கட்டாயமாக சீர் செய்ய வேண்டும் அல்லது சுவிஸ் தேசிய பணத்தில் கட்டிவிடவேண்டும்.
WIR இணைய தளத்தில், உறுப்பினர்கள் என்னென்ன பொருள்கள், சேவைகள் கொடுத்து வாங்க விரும்புகிறார்கள் என்று விவரங்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன.
உறுப்பினர்களுக்கு, அவரவர் தரத்துக்கு ஏற்றபடி அமைப்பில் இருந்து கடன் வாங்கலாம். வட்டி இல்லை. நிர்வாக செலவுகளுக்கு சிறு கட்டணம் அவ்வளவே.
மேலும் அறிந்துகொள்ள:
JAK அமைப்பு
முதலாம் உலகப் போர் முடிந்திருந்தாலும் மக்கள் யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து மீள்வது கடினமாகவே இருந்தது.
டென்மார்க்கில் விவாசாயிகள் கடன் தொல்லையால் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள். அரசு கைவிரித்த நிலையில், தனியாரிடம் கடன் வாங்கியும் கட்டமுடியாத இக்கட்டில் இருந்தார்கள். காரணம் அநியாய வட்டி. அதன் எதிரொலியாக, சொந்த நிலங்களையே பறிகொடுக்க வேண்டிய சூழ் நிலை இருந்தது.
இந்த சமயத்தில், சில விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக, விளைச்சலை வாங்கவரும் வியாபாரிகளோடு பேசினார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். வியாபாரிகள் வட்டி இல்லாக் கடன் கொடுப்பார்கள். பதிலாக, விளைச்சலை ஒரு நியாயவிலைக்கு விவசாயிகள் அதே வியாபாரிகளுக்கு மட்டும் கொடுப்பது என்று முடிவாயிற்று.
JAK என்னும் கடன் கொடுக்கும் வங்கி இப்படி உருவாயிற்று. வட்டி இல்லாக் கடன் கொடுக்கும் இந்த அமைப்பு பெரிதாக வளர்ந்தாலும், 1934 – 1938 கால இடைவெளியில் இந்த வங்கிக்குத் தடை போட்டிருந்தது அரசு. மீண்டும் 1960 களில் இயங்க ஆரம்பித்தது வங்கி.
1992 ல் சுவீடனில் இந்த வங்கி துவங்கியது. உறுப்பினர்கள் நாட்டின் தேசிய பணத்தை (சுவீடன் க்ரோனர்) இந்த வங்கியில் வைப்பு நிதியாகப் போடலாம். ஆனால் வட்டி கிடைக்காது. இன்று அந்த நாட்டில் 30 கிளைகளுடனும் 33,000 உறுப்பினர்களுடனும் வளர்ந்து நிற்கிறது.
நாம் சாதாரண வங்கியில் சேமிப்பு துவங்கினால் வட்டி தருவார்கள். அதே சமயம், கடன் வாங்கினால் (வீடு வாங்க, கட்ட அல்லது ஒரு தொழிலுக்கு முதலீடு) அவர்கள் நம்மிடம் அறவிடும் வட்டி இன்னும் அதிகம்.
JAK வங்கியில் முதலில் சிறிது சிறிதாக நாம் சேமிப்பு துவங்கலாம். நாள் போகப்போக, வட்டி வராது. பதிலாய் சேமிப்புப் புள்ளிகள் (credit points) கூடிக்கொண்டு போகும். குறிப்பிட்ட காலத்தின் பின் உங்களுக்கு வட்டி இல்லாத கடன் கிடைக்கும்.
நீங்கள் போட்ட பணம் அப்படியே இருக்கும். கிடைத்த கடனையும் வட்டி இல்லாமல் திருப்பி செலுத்தலாம். நிர்வாகத்துக்கு ஒரு சிறு கட்டணம் செலுத்தினால் போதும்.
நடுத்தர வர்க்கம் இதில் நாட்டம் கொள்வதில் ஆச்சரியம் இருக்காது. அந்த நாட்டின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணக்காரர்களும் இதில் வைப்பு நிதிகள், சேமிப்புகள் என்று சேர்ந்திருக்கிறார்கள்.
என்ன காரணம்? பணம் ஒரு பக்கம் இருக்கட்டும். நாலு பேருக்கு உதவுகிறோமே. அது பெரிய விஷயம் இல்லையா! என்று நம்மிடம் அவர்கள் சொல்லும்போது ஆம் என்று தான் சொல்லமுடியும். இல்லை என்று சண்டையா போட முடியும்?
இந்த அமைப்பின் விவரங்களை, மார்கரீட் கென்னடி, JAK வங்கி நிர்வாகி, அதன் ஊழியர்கள், திட்ட அமைப்பாளர்கள் பேசும் தொடர்கள் நான்கு பாகங்களாக Youtube இல் இருக்கிறது. முதல் பாகம் கீழே.
மேலும் அறிந்துகொள்ள:
JAKbank,Sweden,-Monneta organization
(தொடரும்..)