எங்கே தேடுவேன் ? பணத்தை எங்கே தேடுவேன்?
-கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்
தொடர் – 6
சில்வியோ கெசெல் (Silvio Gesell)
முதலாளித்துவ பொருளியல் கோட்பாடுகளுக்கு அடித்தளம் போட்டவர்களில் முக்கியமானவர் ஆடம் ஸ்மித் என்பதை அறிந்திருக்கிறோம்.
பொருளியலில் பொதுவுடைமைக் கோட்பாட்டைத் தடம் பதித்தவர் கார்ல் மார்க்ஸ் என்றும் அறிந்திருக்கிறோம்.
பொருளியல் மறந்துவிட்ட அல்லது அது அலட்சியம் செய்த அடித்தளமான துறை ஒன்று உண்டு என்றால் அது பண அமைப்பாகத் தான் இருக்க முடியும்.
பண அமைப்புக்குப் புதிய இலக்கணம் வகுத்தவர் சில்வியோ கெசெல். அவரும் ஒரு மேதை தான்.
இருந்தும் அவரின் சிந்தனைகளை இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். அவரின் கொள்கைப்படி செயல்பட்ட அமைப்புகள், வரலாற்று நிகழ்வுகளை அப்படியே மறைத்து விட்டார்கள்.
1862 ல் பிறந்தவர். ஜெர்மனி நாட்டவர். ஆர்ஜென்டீனா போய்ப் பெரும் பொருள் ஈட்டியவர். அவரும் வணிகர். அதனால் பணம் பற்றி இயற்கையாகவே ஆர்வம் இருந்திருக்கிறது.
சிலசமயங்களில், காசு தாராளமாய்ப் புரள்கிறது. சிலநேரங்களில் தட்டுப்பாடாய் இருக்கிறது. ஏன்? என்று யோசித்ததில், எல்லாத் தருணங்களையும் பணத்தின்விலை தான் தீர்மானிக்கிறது என்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு காரணிகள்:
1) மத்திய வங்கியின் வட்டி வீதம், அரசு அல்லது தனியார் வங்கிகளின் வட்டி வீதங்கள் இவை அனைத்தும் பணத்தின் விலையைத் தீர்மானிக்கின்றன.
2) பணம் பதுக்கி வைக்கப்பட்டு, வசதியான நேரத்தில் பாவனைக்கு விடப்படுகிறது.
வட்டி வீதம் கூடும்போது, பணம் ஒளிந்து கொள்கிறது. நான் சொல்லும் வட்டி தருவாயா என்றுபேரம் பேசுகிறது. ஒத்துக் கொண்டால் மட்டும் வெளியே வருகிறது. வேறு வார்த்தையில் சொன்னால்: பணத்தின் விலை என்பது வட்டி.
வட்டி வீதம் குறையும் போது, பணத்தின் விலை குறைந்துவிடுகிறது. அது தாராளமாய்ப் புழங்குகிறது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்காது. தருணம் பார்த்து விரைவிலேயே மீண்டும் பதுங்கிக் கொள்கிறது.
பணத்தின் ஒளிந்து விளையாடும் கலையை உன்னிப்பாகக் கவனித்தவர் சில்வியோ.
தன் அவதானிப்புகளைக் கோர்த்து முடிவுகளுடன் புத்தகமாகவே வெளியிட்டார். பேர்: The Natural Economic Order. (இணையத்தில் இருக்கிறது.)
உதாரணமாக, விலைகள் ஏன் உயர்கின்றன? என்று கேட்டால் உற்பத்தியில், தொழிலாளர்களின் ஊதியம் கூடிவிட்டது அல்லது பணவீக்கம் அல்லது விலைகளைக் குறைக்க அரசு இன்னின்ன செய்யும் என்று போகும். அசல் காரணங்களைச் சொல்லி முடிக்க மாட்டார்கள்.
பொருள்கள், சேவைகளின் தாராளம் அல்லது கிராக்கி என்பதைத் தீர்மானிப்பதே பணத்தின் விலை (வட்டி) தான் என்று அழுத்தமாகவும் ஆதாரத்துடனும் சொன்னவர் அவர்.
பொருள்களோ, சேவைகளோ ஒரே நிலையில் இருப்பதில்லை. நாள் செல்லச்செல்ல, பொருள்கள் துருப்பிடிக்கும் அல்லது பாவனைக்கு உதவாமல் போய்விடும். சேவைகள் கூட, தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் யாரும் கூப்பிட மாட்டார்கள்.
சில்வியோ முடிவுக்கு வந்தார்:
பொருள்கள், சேவைகளின் மதிப்புகள் நாளடைவில் மங்கத் துவங்குகின்றன. இருந்தும் அதை மதிப்பிடும் பணத்துக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை கொடுக்க வேண்டும்? அதையும் ஏன் பண்டங்களின், சேவைகளின் தரத்துக்குக் கொண்டுவரக்கூடாது?
வைத்திருக்க, வைத்திருக்கப் பணமும் தன் மதிப்பை இழக்கிறது என்னும் கோட்பாட்டுக்கு நாம் வரவேண்டும்.
ஆகவே அதை சேர்த்து வைத்திருக்க யாராவது யோசித்தால், அதன் மதிப்பை மாதாமாதம், அல்லது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை அல்லது ஆண்டுக்கு ஒரு தடவையாவது அதன் மதிப்பை இத்தனை சத வீதமாக என்று கழித்து மதிப்பிட வேண்டும்.
பணத்தின் மதிப்பைக் குறைத்துவிட அறவிடும் இந்தக் கட்டணத்துக்கு Demurrage charge என்று பேர்.
பணத்தைத் தேக்கி வைத்துக் கொண்டால், அது ஒரு சிறு குழுவுக்கு மட்டுமே நன்மை செய்யும். மக்களுக்கு அல்ல. அது ஓடிக் கொண்டே இருந்தால் தான் (dynamic system) பொருளாதாரம் பெருகும் என்றார்.
இதெல்லாம் ஒரு கற்பனை உலகத்தில் தான் நடக்க முடியும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நடந்தது.
வோர்ல் நகரத்தில் முதல் மாதிரி சோதனைக்களம்
1932 ம் ஆண்டு. முதலாம் உலகப் போர் முடிந்திருந்த சமயம். பெரும் பொருளாதாரக் கஷ்டத்தில் இருந்தன அய்ரோப்பிய நாடுகள். பணவீக்கம் அதன் உச்சத்தில் இருந்தது.
எங்கும் பஞ்சம், பட்டினி. வேலையின்மை பெருகிப்போய், என்ன செய்வது என்றே தெரியாமல் நகர நிர்வாகங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
ஒரு ரொட்டி வாங்க, ஒரு கைவண்டி நிறைய பண நோட்டுகளை அள்ளிக் கொண்டு போக வேண்டி இருந்த சூழ்நிலை.
வோர்ல் நகரத்தின் (ஆஸ்திரியா) அன்றைய மேயர், தற்செயலாக சில்வியோவின் புத்தகத்தை வாசித்திருக்கிறார். சில்வியோவின் கோட்பாடுகளை சோதனை செய்து பார்த்தால் என்ன? என்று யோசித்திருக்கிறார்.
தலைக்கு மேலே வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது. அதில் சாணாவது, முழமாவது? அந்த அளவுக்கு நொந்து போயிருந்தார் அவர்.
அந்த சின்ன ஊரில் சுமார் 500 பேர் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள். போதாதற்கு, அதை விட, இன்னும் அதிகமான ஆட்கள் வேறு, அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து வந்து ஏதாவது வேலை இருக்கா, இருக்கா? என்று வீடு வீடாய்த் தட்டி, வயித்தெரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.
நகர நிர்வாகத்திடம் மிஞ்சிப் போனால் 40 000 ஷில்லிங்குகள் தான் இருந்தன. பிச்சைக் காசு. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?
அந்தக் காசை அவர் அங்கிருந்த ஒரு உள்ளூர் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டார். வங்கியின் மேலாளரிடம் சொன்னார்: இந்த பணத்துக்குப் பதிலாய், நான் இந்த ஊருக்குத் தனியாக ஒரு சிறப்புப் பணம் அச்சடிக்கப் போகிறேன். 40 000 ஷில்லிங்குகள். வோர்ல் நகரத்து ஷில்லிங் என்று பேர். என்ன பிரச்னை வந்தாலும் நான் உத்தரவாதம் என்றார். ஒப்பந்தம் முடிவாயிற்று.
இந்த சிறப்பு ஷில்லிங், ஒரு பெரிய நோட்டு. நாலாய் மடித்துப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். அவர் விளம்பரம் போட்டார்: வேலைகள் இருக்கின்றன. இந்த நோட்டுகள் தான் உங்கள் ஊதியம். உங்கள் செலவுகளுக்கு இது உத்தரவாதம்.

ஆனால் ஒரு நிபந்தனை: ஒவ்வொரு மாத முடிவிலும், நோட்டுகளின் மதிப்பு ஒரு சத வீதமாகக் குறைந்துவிடும். அதற்கு அத்தாட்சியாய், அஞ்சலகத்தில் போய்க் கொடுத்து நோட்டுகளில் ஒரு முத்திரை ஒட்டிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அடுத்த மாதம் செல்லுபடி ஆகாது.
ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரையாம். எல்லாரும் வேலைகளுக்கு அடித்துப் பிடித்து ஒடி வந்தார்கள். பண நோட்டுகளை சேர்த்து வைக்கிற யோசனை யாருக்கும் வரவில்லை. என்ன பைத்தியமா?
விறுவிறு என்று என்று வேலைகள் நடந்தன. சிதிலமாய் இருந்த நீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது. வீதிகள், நடை பாதைகள் அமைத்தார்கள். ஏன், நகர நிர்வாகத்துக்குக் கட்ட வேண்டிய வரியைக் கூட அதே புதுப் பணத்தில் கட்டிவிட்டார்கள்.
ஒரு பாலமும் கட்டி முடித்தார்கள். அதில் ஒரு வாசகம் பொறிக்கப்பட்டது : இந்தப் பாலம், எங்கள் வோர்ல் நகரத்துப் பணத்தால் கட்டப் பட்டது.
அத்தனை பெருமை அந்த ஊர் மக்களுக்கு. முன்பு பாவனையில் இருந்த ஷில்லிங்கை விட, இந்த ஷில்லிங் 12-14 மடங்கு அதிகமான வேலைகளை உருவாக்கிற்று. அதன் பாவனை 416 மடங்காக உயர்ந்தது. அந்த சின்ன ஊரின் பொருளாதார செயல்பாடுகள் அன்றே 2.5 மில்லியன் ஷில்லிங்குகள்! (இன்றைய மதிப்பில் 7.5 மில்லியன் டாலர்கள்.)
செய்தி கேட்டு, அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள் அசந்து போனார்கள். 1933 களில், கிட்டத் தட்ட, 170 ஊர்கள் இந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்தன. அவர்கள் துவங்க, கொஞ்ச நாளில் இன்னும் 200 ஊர் நிர்வாகங்கள் என்று ஒரே உற்சாகம்.
நாலு நல்லவர்கள் என்று இருந்தால் அங்கே ஒரு வில்லனும் இருப்பான் என்பது தானே உலக நியதி? ஆஸ்திரியாவின் மத்திய வங்கிக்கு இந்த மக்களின் ஆர்வத்தைப் பார்க்கப் பார்க்க மனசுக்குள் ஒரே புகைச்சல். பயம். இத்தனை நாள் நாம் போட்ட ஆட்டத்துக்கு வேட்டு வைத்து விடுவார்களோ?
பண நோட்டு அடிப்பது எங்கள் உரிமை என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். 1933 ம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்களின் வழக்கையே தள்ளிவிட்டது அந்த நீதிமன்றம். அவர்கள் விடவில்லை. உயர்நீதி மன்றம் போனார்கள். அவர்களுக்கு சார்பாகத் தீர்ப்பு வந்தது.
தேவைகள் தோன்றினால் அதை நிறைவேற்ற வழிமுறைகள் தானாகவே தோன்றும். அதை வெளியில் இருந்து கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்த பொருளியலாளர்கள்.
(எப்போதும் அறிவியலாளர்கள் பொடி வைத்துப் பேசுவது தான் வழக்கம். நேரடியாக எதுவும் சொல்வதில்லை. என்னமோ, அது அவர்களுக்குப் பழகிவிட்டது. பாவம்.)
அவர்கள் சொன்னதன் அர்த்தம்: மத்திய வங்கியோ, அரசோ எதுவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட தலைமையோ, மக்களின் தேவைகள் என்ன என்று எனக்குத் தான் தெரியும். எனக்குத் தான் தீர்க்கத் தெரியும் என்று திமிரோடு பேசுவது முட்டாள்த்தனம்.
அந்த வேதனையான தீர்ப்பின் பின், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் அதல பாதாளத்தை நோக்கிப் பாயத் துவங்கியது. அரசியல் பூசல்கள் இன்னும் மோசமாகின. மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.
அப்போது தோன்றினார் ஒரு ரட்சகர். அவர் முழங்கினார்: வரலாற்றிலேயே இல்லாத முறையில் உங்கள் நாட்டைக் கட்டி எழுப்புவேன் என்று இதோ நான் உங்களுக்கு வாக்குத் தருகிறேன். என்னை அரியணையில் அமர்த்துங்கள்!
அவர் பேர்: அடோல்ப் ஹிட்லர். ஆஸ்திரிய நாட்டின் ஆன்ஷுலூஸ் நகருக்கு 1938 ல் அவர் வந்தபோது மக்கள் தந்த மகத்தான வரவேற்பை சொல்லி மாளாது.
அடுத்து நடந்தவை உங்களுக்குத் தெரியும்.
அமெரிக்கா போன வோர்ல் நகரப் புகழ்
அதே 1933 ம் ஆண்டில், வோர்ல் நகரத்துப் பெருமை அங்கேயும் போய்ச் சேர்ந்திருந்தது.
டீட்டர் சூர் (Dieter Suhr) எழுதிய Capitalism at its Best எனும் நூலில், அமெரிக்க நாட்டின் அன்றைய பொருளியலாளர்கள், ஹான்ஸ் கோர்சன், இர்விங் பிஷர் இருவரும் சேர்ந்து சில்வியோவின் கொள்கைகளைப் பரப்புரை செய்ய நினைத்தார்கள் என்று விவரிக்கிறார்.
100 க்கும் மேலான நகரங்கள், நாமும் செய்து பார்ப்போமே என்று துவங்கின. இதில் சிக்காகோ போன்ற பெரு நகரங்களும் அடக்கம்.
செய்தி, நாட்டின் கருவூலத்துக்குப் (Treasury) பொறுப்பாக இருந்த செயலர் வரை போனது. அவரோ, இதற்கு நான் எந்த மறுப்பும் சொல்ல மாட்டேன். தவிர, எனக்கு எந்த அதிகாரமும் இல்லையே என்றார்.
அந்த ஆண்டு மார்ச் மாதம், நாட்டின் அதிபர், ரூஸ்வெல்ட், அப்படி எல்லாம் யாரும் துவங்க முடியாது. மத்திய அரசு தான் பணம் அச்சடிக்கும் என்று ஒரேயடியாய் உத்தரவு போட்டு விட்டார்.
முளையிலேயே கிள்ளிவிட்டார்கள்.
எப்படி புதிய பணத்தைப் பாவனைக்கு விடலாம்?
பொருளியலாளர் யோஷிட்டோ ஒட்டானி (Yoshito Otani) இந்தப் புதிய பணம் பற்றி விளக்கம் தருகிறார்:
இந்தப் பணத்தைப் பாவனையில் விடப் போகிறோம், ஒவ்வோர் தவணையிலும் அதன் மதிப்பைக் குறைக்கப் போகிறோம் என்றால் என்ன நடக்கும்? இந்தக் கழிவுக் கட்டணத்தைப் பார்த்து யாரும் பயம் கொள்ளத் தேவை இல்லை.
இன்றைய 90 சத வீதமான பணம், கணனிகளில் வெறும் இலக்கங்களாக மட்டுமே இருக்கிறது. புதிய பணத்தின்படி, ஒவ்வொரு பாவனையாளரிடமும் இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும். ஒன்று நாளாந்த பாவனைக் கணக்கு (Current Account). இந்தக் கணக்கு மூலம் உங்கள் நாளாந்த/மாத வருமானம், செலவுகளைக் கவனித்துக் கொள்ளலாம்.
மற்றது சேமிப்புக் கணக்கு (Savings Account). மாத முடிவில், நாளாந்தக் கணக்கில், உங்கள் செலவுகள் போக மிஞ்சுவது எதுவோ, அதன் 1/2 சத வீதம் மாதாமாதம், அல்லது ஆண்டுக்கு 6 சத வீதம் கழிக்கப்பட்டு பாவனை வரியாக சேமிப்புக் கணக்குக்கு மாற்றப் பட்டுவிடும்.
பாவனை வரி தான் பணம் வீணாகப் பெருகாமல் இருக்க உதவப் போகிறது.
வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்குக்கு வந்திருக்கும் இந்தத் தொகையை வங்கிகளும் சேர்த்து வைக்க முடியாது. அவர்களும் பாவனை வரிக்குள் வருகிறார்கள்.
ஆகவே வங்கிகள் இந்தப் பணத்தை தேவைப் படுபவர்களுக்குக் கடனாய்க் கொடுக்கலாம். அதற்கு ஓர் சிறு கட்டணம் அறவிடலாம். (வட்டி அல்ல.) வங்கிகள் தமது செலவுகளை ஈடு செய்து கொள்ள இது ஒரு வழி.
வங்கி, மற்ற பாவனையாளருக்குக் கொடுத்த அந்தக் கடன் திரும்பி வர, அது மீண்டும் சேமிப்புக் கணக்கில் சேர்க்கப் பட்டுவிடும் (வட்டி இல்லாமல்). சேமிப்புக் கணக்கில் எந்த மாற்றமும் வராது. நாளாந்தக் கணக்கில் இருந்து சேமிப்புக்கு வந்த தொகை அப்படியே இருக்கும்.
ஆகவே யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. பணத்தின் மதிப்பு அப்படியே இயற்கையாக இருக்கும்.
இது ஒட்டானியின் யோசனை.
இந்தப் புதிய பணம் வங்கிகளுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும். இனி அவர்களின் நாட்டாமை வேலைக்கு அவசியம் இருக்காது. கொள்ளைக்காரனுக்குத் தூக்கம் வருவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் நிம்மதியாக உறங்கலாம்.
மார்கரீட் கென்னடியின் யோசைனைகள்:
வங்கிகளில் இருக்கும் பாவனையாளர்களின் (மேலே சொன்ன) இரண்டு கணக்குகளையும் ஒரு நொடியில் சரிசெய்து விடலாம். பாவனையில் இருக்கும் பண நோட்டுகளின் மதிப்பை எப்படிக் குறைப்பது?
இன்று அழுக்காய்ப் போன, கிழிந்துபோன நோட்டுகளுக்குப் பதிலாக, மத்திய வங்கி புது நோட்டுகள் அடிக்கிற செலவை விட இந்த நோட்டுகளுக்கு ஆகும் செலவு குறைவு.
இன்று பண நோட்டுகளில் முத்திரை ஓட்டுகிற வேலை ஒத்து வராது. புதுப் புது வண்ணங்களில் பண நோட்டுகளை ஆண்டுக்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ பாவனைக்கு விடலாம். எப்போது, எந்த நாளில் என்பதை ரகசியமாய் வைத்துக் கொள்ளலாம்.
பணத்தைப் பதுக்க முடியாது என்பதால் அதைக் காணி நிலங்கள், கட்டிடங்கள், சொத்துக்கள், உடைமைகள் மீது முதலீடு செய்து சேர்த்து வைக்கலாமே என்னும் சிந்தனைகள் சீக்கிரமே வந்துவிடும்.
காணி நில சீர்திருத்தங்கள் வேண்டும். இல்லாவிட்டால் மோசமான சூழல் சீர்கேட்டுக்கு அது வழி வகுத்துவிடும். காணி நிலங்களின் மதிப்புக்குப் பந்தயம் கட்டி அந்த மாதிரிப் பணம் சேர்க்க யோசிப்பார்கள். காணி நிலங்களை அரசு தன் கைக்குள் கொண்டுவர வேண்டும்.
சீட்டிழுப்பு முறையில் அல்லது ஏலம் போட்டு, வீடுகள் வேண்டுவோர்க்குக் கொடுக்கலாம். எல்லாரும் வாடகை கட்டுவார்கள். எங்கு கூடிய காலம் வசித்தார்களோ, அங்கு அவர்களால் தொடர்ந்து வாழ முடியும் அல்லது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
உடைமைகள் என்றாலே தங்கம், வெள்ளி முதலில் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது. பெண்களுக்கு அதில் மோகம் அதிகம். இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் மார்கரீட் கென்னடி. அவரும் பெண்.
வருமான வரி என்பதற்குப் பதிலாய் உற்பத்தி வரி, சுற்றுச்சூழல் வரி என்று அறிமுகப்படுத்தலாம்.
இன்றைய சொகுசு வாழ்க்கையில் எந்தப் பொருளையும் கொஞ்சநாள் தான் உபயோகிக்கிறோம். பிறகு தூக்கி எறிந்து விடுகிறோம். அதைப் பழுது பார்க்க நேரமில்லை. வீணாக, நாம் இன்னும் இயற்கை வளங்களை சுரண்டுகிறோம். எதிர்கால சந்ததிகளைப் பற்றி யோசிப்பதே இல்லை. காரணம்: இன்றைய பணம். வளர்ச்சி தான் அதன் ஒரே நோக்கம்.
புதிய பணம் பாவனைக்கு வரும்போது இவை கவனத்துக்கு வரும். உதாரணமாய், இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறீர்களா? அதற்கான புதுத் தொழில் நுட்பங்களைப் புகுத்துகிறீர்களா? உங்களுக்கு உற்பத்தி வரி குறைவு.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் கவனமாக நடந்து கொள்கிறீர்களா? உங்களுக்கு சுற்றுச் சூழல் வரி குறைவு … இப்படி ஆரம்பிக்கலாம்.
ஆண்களிடம் சந்தேகப் பார்வை அதிகம். மற்ற ஆண்களிடம் எச்சரிக்கையாய் இருக்கும் குணம், போட்டி போடுவதில் தான் கூடுதல் ஆர்வம் என்று அவர் பொதுவாகப் பட்டியல் போட்டாலும் எல்லாரையும் அவர் சொல்லவில்லை.
பெண்களிடமோ, குழு மனப்பான்மை இயற்கையிலேயே இருக்கிறது. அவர்களுக்கிடையில் நட்பு தோன்ற அதிக நேரம் போகாது. எதையும் குழுவாய் சேர்ந்து செய்ய ஆர்வம் அதிகம். ஆகவே பெண்கள், ஆண்களை விட, புதிய பணத்தை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறார் அவர்.