வங்கியாளர் என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்?
வெய்யில் அடிக்கும் போது அவர் குடையை கடனாகத் தருவார். மழை அடிக்கும் போது திருப்பி வாங்கிக் கொள்வார்.
-மார்க் ட்வையின்
தொடர் – 5
வட்டியின் மூன்று சித்து விளையாடல்கள்
1) அது போட்டியை ஊக்குவிக்கிறது.
வட்டி தான் பணத்தின் மூலம் போட்டியை உருவாக்கி, அதை வேகத்தோடு ஊக்குவிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியாளரிடம் போய், உங்கள் காணியை ஈடு வைத்துக் கடனாக (mortgage loan ) ஒரு லட்சம் ரூபா கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒத்துக் கொள்கிறார். ஒரு லட்சம் ரூபா தந்தாலும் அவர் ஒரு நிபந்தனை போடுகிறார். கடனை இரண்டு லட்சம் ரூபாவாக, 20 ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என்கிறார்.
ஒரு லட்சம் மட்டுமே இப்போது உருவாக்கித் தந்திருக்கிறது வங்கி. கேட்ட மிகுதி ஒரு லட்சம் ரூபாவுக்கு நீங்கள் எங்கே போவீர்கள்? ஞாபகம் இருக்கட்டும். உங்களால் பணத்தை உருவாக்க முடியாது. அது வங்கியால் மட்டுமே முடியும்.
என்ன செய்யப் போகிறீர்கள்?
ஆகவே அதை இப்படி எளிமையாக சொல்லலாம். நீங்கள் வெளியே போய், மற்றவர்களிடம் இருந்து பிடுங்கியோ அல்லது ஏமாற்றியோ அல்லது ஏதோ ஒன்று .. அது உங்கள் பிரச்னை. கொண்டு வரவேண்டும். அவ்வளவு தான்.
நீங்கள் கொடுக்க வேண்டிய அந்த மேலதிக பணம், அதாவது வட்டி என்பது ஏற்கெனவே யாராவது வைத்திருக்கும் மூலதனத்தில் இருந்து தான் வரவேண்டும்.
ஆகவே வட்டி என்ன சொல்கிறது? இன்னும் உருவாகாத பணத்தை எடுத்துக் கொண்டு வா. மற்றவர்களுடன் போட்டி போடு. கொண்டுவராவிட்டால் நீ திவால் ஆகிவிடுவாய். உன் காணி பறிபோய் விடும் என்று பயமுறுத்துகிறது.
இது போல ஒரு பயத்தை மக்கள் எப்போதும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது மத்திய வங்கி.
பணம் தருவதற்கு முன், திருப்பி உங்களால் கடனைத் தீர்க்க முடியுமா என்று என்று ஆராய்ந்த (creditworthiness) பிறகே கடன் தரப்படுகிறது.
இல்லாத ஒரு பணத்தை, எப்படி மற்றவர்களில் இருந்து உங்களால் கைப்பற்ற முடியும், எந்த அளவு கெட்டிக்காரர் நீங்கள் என்று மத்திய வங்கி கூர்மையாக எடை போடுகிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது? இன்றைய பண அமைப்பு எல்லா மக்களையும் மொத்தமாகக் கடன் சுமையில் தள்ளி, வாழ்நாள் பூரா ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுகொண்டே இருங்கள். பகைமையோடு வாழுங்கள். சுயநலம் தான் ஒரே வழி என்கிறது.
இயற்கை சொல்லித் தரும் பாடம்
டார்வினின் படிநிலை மாற்றக் கொள்கையின்படி, வாழ்க்கையில் எது போராடி நின்று பிடிக்குமோ அது தான் உயிர் வாழும். சுய நலம் முக்கியம் என்கிறது. அதற்கு இந்தப் பண அமைப்பு, நானும் அதற்கு சாட்சி என்கிறது.
ஆனால் அப்படி உலகம் ஒன்றும் பயங்கரமானது அல்ல.
கூட்டுறவு தான் எல்லா உயிர் இனங்களையும் வாழ வைக்கிறது என்கிற உண்மைக்கு இன்று வந்துவிட்டோம். ஆராய்ச்சிகள் அந்தக் கருத்துக்கு இன்னும் திண்மை சேர்க்கின்றன.
கியோட்டோ பல்கலைக் கழகத்தின் சமூக உயிரியல் பேராசிரியர் இமானிஷி (Imanishi) சொல்கிறார்:
அனைத்து உயிர் இனங்களினதும் உடல்களில் இருக்கும் ஆகச் சின்ன உறுப்பு செல்கள். இந்த செல்கள் நுண்ணுயிர்களால் ஆனவை. நுண்ணுயிர்களோ ஒன்றோடு ஒன்று இணைந்து கூட்டுறவு மூலம் செல்களாய் உருவாகின.
நுண்ணுயிர்களில் கூட்டுறவு ஏற்பாட்டிருக்காவிட்டால், சுயநலம் தான் முக்கியம் என்று அவை நினைத்திருந்தால் எல்லாமே என்றோ அழிந்து போயிருக்கும். நாம் உட்பட, எந்த விலங்கினமும் தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை.
சிம்பயோசிஸ் (Symbiosis) என்னும் இந்தக் கொள்கை, மரபணு, நுண்ணுயிர் அறிவியலில் இன்று மிகப் பிரபலமாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர் லீன் மார்குலிஸ் (Lynn Margulis) முன்வைத்த இந்தக் கொள்கையை அன்று யாரும் ஏற்கவில்லை.
ஒரு பேருண்மையைக் கண்டுபிடித்த அந்தப் பெண்மணிக்கு நோபல் பரிசு கிடைக்கவே கூடாது என்பதில் விடாப்பிடியாய் இருந்தார்கள். அவரின் ஆதாரங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டன.
அவரும் முன்கோபக்காரர். வெட்டு ஒன்று. துண்டு ரெண்டு என்று பேசியவர். இன்று அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை தூசு தட்டியெடுத்துப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
டார்வினின் படிநிலை மாற்றக் கொள்கை சரி என்றாலும் அவரின் கருத்து தவறு என்று சொல்லி, போட்டி அல்ல. சுயநலம் அல்ல. கூட்டுறவு தான் வாழ்க்கை என்று புது விளக்கம் தந்தது சிம்பயோசிஸ் கொள்கை.
2) முடிவே இல்லாத வளர்ச்சி (Endless growth)
பேரில் என்ன இருக்கிறது?
மக்கள் ஆட்சி என்கிறார்கள். சோஷலிச நாடு என்கிறார்கள். கம்யூனிஸ்ட் நாடு என்கிறார்கள். நம் சர்வாதிகார நாடு அல்லவே என்கிறார்கள் சிலர். எப்படியோ, எல்லாரும் கண்மூடி செய்யும் ஒரே தியானம் ஓம் அல்ல. வளர்ச்சி..வளர்ச்சி..வளர்ச்சி…
உற்பத்திகளை, சேவைகளைப் பெருக்கிக் கொண்டே இருங்கள். தேவைகளையும் பெருக்கிக் கொண்டே இருங்கள். இதைத் தானே இன்று அரசுகள், விளம்பரங்கள், இணையங்கள், பத்திரிகைகள், செல்போன்கள் எல்லாமே சொல்லிக் கொண்டிருக்கின்றன?
இந்த உலகில் அள்ள அள்ளக் குறையாத வளங்கள் இருக்கின்றன. வேண்டும், இன்னும் வேண்டும் என்கிற பேராசையிலேயே வாழுங்கள். அனுபவி ராஜா அனுபவி.
அறிவுக்கோ, உண்மை நிலவரத்துக்கோ கிஞ்சித்தும் பொருந்தாத இன்றைய பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சிக்கு இன்றைய பணம் சொல்லி வைத்த மாதிரிப் பொருந்துகிறது.
குறைந்தது, கி.மு. 5000 களில் வாழ்ந்த சுமேரியர்களுக்காவது அறிவு இருந்திருக்கிறது. தொடர்ந்து கடனில் வாழ்ந்தால் கப்பலே மூழ்கிவிடும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் தான் காலத்துக்கு காலம் மக்களின் கடன்களை ரத்து செய்து கொண்டே இருந்தார்கள்.
இன்று பணத்துக்கு வட்டிக்கு மேல் வட்டி ஏறிக்கொண்டே இருக்கிறது. பணம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதுக்கென்ன? வளர்ச்சி தேவை அல்லவா? பணமும் அதற்கேற்ற மாதிரி வளராவிட்டால். கப்பல் என்னய்யா கப்பல், குடியே முழுகிப் போய்விடும் என்கிறார்கள்.
வளர்ச்சி.. வளர்ச்சி என்று அறிவாளிகள் விரிவுரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பணம்..பணம் என்று பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் வங்கியாளர்கள்.
3) ஒரு சிலரிடம் மட்டும் குவியும் செல்வம் (Concentration of wealth effect)
மூன்றாவதாக, இன்றைய பணம் சில மனிதர்களிடம் மட்டும் போய்ச் சேர்வதற்கு வசதியாக, எல்லா வாசல்களையும் திறந்து விட்டிருக்கிறது.
அதற்கு இதோ புள்ளி விவரங்கள் என்று வந்து நிற்கிறார் மார்கரீட் கென்னடி. இன்றைய பண அமைப்பில், வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ மட்டும் வட்டி வாங்கவில்லை. மக்களும் வட்டி வாங்குகிறார்கள். கொடுக்கிறார்கள்.
அவரின் தரவுகளின் படி, 1982 ம் ஆண்டை எடுத்துக் கொண்டால்:
ஜெர்மனி நாட்டின் 80 சதவீமான மக்கள் (நடுத்தர, அடிமட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ளவர்கள்) 34.2 பில்லியன் டொய்ச் மார்க்குகளை மிச்ச 20 சத வீதமான பணக்காரர்களுக்கு நிகர வட்டியாகச் (Net interest) செலுத்தி இருக்கிறார்கள்.
அமெரிக்க நாட்டின் தரவுகள் போதாது என்றாலும், 1975-1992 இடைவெளியில், 60 சத வீதமான நடுத்தர வர்க்கம், நாட்டின் 54.1 சதவீத உழைப்பை மிச்ச 40 சத வீதமான பணக்காரர்களுக்கு நிகர வட்டியாகச் (Net interest) செலுத்தி இருக்கிறார்கள்.
பணக்காரர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி வந்துவிட்டது. அது கூடிக் கொண்டே போகிறது என்று ஓயாமல் இன்று பத்திரிகைகளில், இணையங்களில் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதே சமயம், பக்கத்தில் கட்டம் போட்டு உங்கள் பணத்தை இந்த வங்கியில் போடுங்கள். கொஞ்ச நாளில் நீங்களே வியந்து போகிற மாதிரி பெருக்கிக் காட்டுகிறோம் என்றும் விளம்பரங்கள்.
நீங்கள் ஏன் இன்னும் பிச்சைக்காரர் ஆகவே இருக்கிறீர்கள்? வெட்கம், மானம், சூடு சொரணை இல்லை? என்று மட்டும் தான் சொல்லவில்லை. மற்ற அத்தனை சொற்களும் உபயோகித்து நம்மை உசுப்புகிறார்கள்.
வங்கிகளில் வைப்பு நிதிகள் பெருக, அதையும் ஊகங்களில் (speculations) ஊதி ஊதிப் பெரிதாக்கி மலை போல் குவித்து வைத்திருக்கிறார்கள்.
ஊகங்களுக்கென்றே தனி சந்தைகள் உலகம் பூரா இருக்கின்றன.
ஓடு ராஜா ஓடு !
குதிரைப் பந்தயங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். தவிர, நாய்ப் பந்தயங்கள், தீக்கோழிப் பந்தயங்கள் ஏன் ஆமைப் பந்தயங்கள் கூட நடக்கின்றன. இந்த அப்பாவிப் பிராணிகள் ஓட ஓடப் பணம் கட்டியவர்கள் மனசு திக் திக் என்று அடிக்கிறது. கேட்டால், அதில் ஒரு கிக் இருக்கிறதே, தெரியாதா என்கிறார்கள்.
மத்திய வங்கிகளுக்கு இதைப் பார்த்ததும் ஒரு சபலம். நாமும் ஏன் பந்தயம் கட்டக்கூடாது? ஒவ்வோர் நாட்டு நாணயங்களை ஓட விட்டுப் பார்த்தால் என்ன என்று அற்புதமான ஒரு யோசனை தோன்றி இருக்கிறது.
ஒவ்வோர் நாட்டு நாணயங்களின் மதிப்பையும் வைத்து வேறு பந்தயம் (Money speculation) நடந்து கொண்டிருக்கிறது. நாணயங்கள் குதிரைகள் போல் ஓடுகின்றன. மனிதர்கள், ஓடு ராஜா ஓடு! என்று கத்திக் கொண்டே இருக்க, 24 மணித்தியாலமும் ரேஸ் நடக்கிறது.
வைப்பு நிதிகளுக்கு கவர்ச்சியான பேர்கள் வைத்து மக்களை மயக்குவது ஒரு தந்திரம். வங்கிகள் கடனாய்க் கொடுத்த நிதிகளையும் இதில் சேர்த்து விட்டார்கள். கேட்டால் புது விளக்கம் தருகிறார்கள். அதே சமயம் நாம் புரிந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருக்கிறார்கள்.
இன்றைய பணம் ஏளனச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
(தொடரும்..)