பணப் பற்றாக்குறை, தீமைகளின் வேர்.
– ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
தொடர் – 4
வங்கிகளின் புது அவதாரங்கள்
18 ம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பிய நாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. விவசாயத்தை நம்பியிருந்த சமுதாயங்கள் எந்திர யுகத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கின.
புதுத் தொழில் பேட்டைகள், புதுத் தொழில்கள், வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்து சாதனங்கள், நவீன தொடர்பு வசதிகள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ராணுவம், காலனி நாடுகளை உருவாக்க வேண்டிய தேவைகள் எல்லாம் சேர்ந்ததில், அதற்கு ஏற்ற ஓர் பண அமைப்பு தேவை என்று உணரப் பட்டது.
முன்பு சிற்றரசுகள் அய்ரோப்பிய கண்டத்துள்ளேயே பொருளாதார நோக்கங்களுக்காகப் போட்டி போட்டன. இப்போ ஆசியாவில், ஆப்பிரிக்காவில், அமெரிக்க கண்டங்களில் இருந்து எல்லையில்லாத செல்வங்கள் அள்ளி வரலாம் என்று தெரிந்துவிட்டது.
வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை காணுவோம் என்றொரு புதிய சிந்தனை ஏற்பட்டது. மொழிவாரியான அல்லது மதரீதியான சிறு சிறு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து புதிய நாடுகள், எல்லைகள் தோன்றின.
தேசிய அரசுகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அரசுக்கு ஆலோசனைகள் சொல்லவும், நாட்டு நிதி விவகாரங்களைக் கையாளவும் மத்திய வங்கி என்னும் அமைப்பு தோன்றியது.
மத்திய வங்கியின் வழிகாட்டுதலில் தனியார் வங்கிகள் பணம் உருவாக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
மன்னர்கள் ஆண்ட காலம் போய்விட்டது. இன்று நாம் மக்களாட்சிக்கு வந்துவிட்டோம் என்று பெருமையாகப் பேசுவதில் ஒரு தவறும் இல்லை. நம் உழைப்புக்குப் பஞ்சமில்லை. இருந்தும் அதற்கு ஈடு கட்டும் வகையில் பணம் போதாமல் தவிக்கிறோமே. ஏன்?
பண அமைப்பையும் வங்கிகளின் செயல்பாடுகளையும் பார்க்கும்போது நாம் எந்த சுயநினைவும் இல்லாமல் செய்த முடிவுகள் போலத் தெரிகின்றன.
உண்மையில் அவை விரல்விட்டு எண்ணக்கூடிய, முழு அதிகாரம் படைத்த ஒரு சில மனிதர்களால் இன்னொரு கால கட்டத்தில், அன்று நிலவிய பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப் பட்டவை.
19 ம் நூற்றாண்டில், விக்டோரியா மகாராணியின் காலத்துக்கு முன்னால் ஏற்பட்ட தொழில் புரட்சியின் போது (Industrial Revolution) யாருக்கும் சூழல் மாசடைதல் என்றால் என்ன என்று தெரியாது.
தீவிரமாகும் தேசிய வாதம், மக்கள் தொகைப் பெருக்கம், பூமி வெப்பமடைதல் (Greenhouse effect) என்றெல்லாம் அவர்கள் எதுவும் கேள்விப்பட்டதில்லை.
பூமியில் மூல வளங்கள் வரம்பில்லாமல் நிரம்பி இருக்கின்றன. அது எடுக்க எடுக்கக் குறையாத அமுதசுரபி என்று நம்பினார்கள். யார் மற்றவர்களை முந்தி அள்ளி எடுப்பது என்பது தான் ஒரே நோக்கம். போட்டிக்கு முதலிடம் தந்தார்கள். மற்றவை எதுவுமே ஒரு பொருட்டல்ல.
ஆகவே பண அமைப்பும் வங்கிகளின் செயல்பாடுகளும் இந்த எண்ணங்களின் அடிப்படையில் தான் திட்டமிடப் பட்டன. இன்றும் அதுவே தொடர்கிறது.
இன்றைய பணத்தின் புது அவதாரங்கள்
தொழில் புரட்சியின் போது உருவாகிய இன்றைய பண அமைப்பு நான்கு அவதாரங்கள் கொண்டது.
1) பூகோள ரீதியாக ஒரு நாட்டுடன் பணம் இணைந்திருக்கிறது.
2) வெற்றிடத்தில் இருந்து பணத்தை உருவாக்கலாம் (Fiat money )
3) வங்கிக் கடன் பணமாகிறது
4) வட்டி அதன் சொத்து
1) நாட்டின் பணம்: நம் நாட்டுப் பணம் என்றாலே நம் உடம்பு கொஞ்சம் புல்லரிக்கும். (சிலருக்கு வேறு நாட்டுப் பணத்தைக் கண்டால் தான் அரிப்பு ஏற்படும் என்பது வேறு விஷயம்.) எப்படியோ, நம் நாடு.. நம் நாடு.. என்று ஒரு பாசத்தை ஏற்படுத்துவதில் பணம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
வலைப்பின்னல், ஒரு வேலியும் போட்டுக் கொள்ள உதவுகிறது. இது என் பணம். அது அவர் பணம். இது நான். அது அவர் எனும் வேற்றுமை உணர்வை எளிதாக, நமக்கே தெரியாமல் நம் மனதில் படிய வைக்கிறது.
சோவியத் கூட்டரசு வீழ்ந்தபோது, அதன் கிளை அரசுகள் தமக்கென்று சொந்த நாணயம் உருவாக்கிக் கொண்டது தான் அவர்கள் செய்த முதல் வேலை என்பதைக் கவனிக்க வேண்டும்.
சோழியன் குடுமி சும்மா ஆடாது. மேற்கு அய்ரோப்பிய நாடுகள், தம் சொந்த நாணயங்களைக் கடாசிவிட்டு யூரோ நாணயத்துக்கு மாறியதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நாம் அய்ரோப்பியர்கள். நமக்கென்று தனி அடையாளம் இருக்கிறது. என் வழி தனி வழி.
2, 3) வெற்றிடத்தில் இருந்து எதையும் உருவாக்க முடியாது என்று யார் சொன்னார்? ஏன் இன்றைய பணத்தை (Fiat money) அதில் இருந்து தானே வங்கிகள் படைக்கின்றன?
பிரிக்க முடியாதது எது? இன்றைய பணமும் வங்கிக் கடனும்.
Fiat என்பது லத்தீன் சொல். Fiat Lux என்னும் பதம் விவிலிய நூலில் மிகப் பிரசித்தமானது. ஒளி உண்டாவதாக! என்று கர்த்தர் முதலாவதாக சொன்ன சொல் அது.
வங்கியாளரும் சக்தி படைத்தவர். சூன்யத்தை நோக்கி ஒரு சொடக்குப் போடுகிறார். பணம் உண்டாவதாக என்கிறார். பணம் உருவாகிறது. அதை வங்கிக் கடனாய் உங்களுக்குத் தருகிறேன், என்ன சொல்கிறீர்கள்? என்கிறார். மறுபேச்சில்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.
உலகின் எல்லா நாடுகளிலும் (கிட்டத்தட்ட 99 விழுக்காடு?) இந்த மாயமந்திரப் பணம் தான் பாவனையில் இருக்கிறது.
Fiat money என்பதைத் தமிழில் கட்டளைப் பணம் என்று தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் குறிக்கின்றன. அது சரி தான். வங்கியாளர், இவ்வளவு பணம் உருவாகட்டும்! என்று கட்டளை இடுகிறார். பணம் எங்கிருந்தோ வந்து நிற்கிறது.
அதைக் கடன் என்று வாடிக்கையாளரின் பேரில் எழுதிக் கொள்கிறார். பணத்தை நோட்டுகளாகவோ, காசோலையாகவோ அல்லது ஏதோ ஒரு வழியில் கொடுக்கிறார்.
இருக்க, இன்னோர் முக்கிய தகவல்:
விக்டோரியா மகாராணி காலத்திற்கு முன்பேயே பணம் பெரும் இக்கட்டில் மாட்டியிருந்தது.
காரணம்: தங்கத்தில், வெள்ளியில் அது தங்கி இருந்தது. எவ்வளவு தங்கம் வங்கிகளிடம் இருக்கின்றன? அரசின் கையிருப்போ ரகசியம். எல்லாரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
தனியார் வங்கிகள் உருவாக்கிய வங்கிக்கடன் பணத்துக்கும், அரசின் மேற்பார்வையில் புழக்கத்துக்கு விடப்பட்ட பணத்துக்கும் இடையில் நிறைய உரசல்கள் இருந்தன. இரண்டு பிரிவுகளும் முரண்பட்டதால் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது.
புதிதாய் உருவாகிய கட்டளைப் பணம் மூளைசாலி. டாலர்னா டாலர்! என்று 1971 களில் அமெரிக்கர்கள் பெருமையாக அறிவித்த விஷயம் பற்றி முன்னர் சொல்லியிருந்தோம். அந்த கால கட்டத்தில் இருந்து கட்டளைப் பணத்தின் செல்வாக்கு எகிறத் துவங்கியது.
இது சில தந்திரங்கள், சட்டங்கள், ஒப்பந்தங்கள் மூலம் மாற்று வழிகள் கண்டு வங்கிகளையும் அரசையும் நண்பர்களாக்கி விட்டது.
மத்திய வங்கிகள், தனியார் வங்கிகளுடன் உடன்பாட்டுக்கு வந்தன.
தனியார் வங்கிகள் தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தின் 90 சத வீதம் வரை வாடிக்கையாளர்களுக்குக் கடன்கள் கொடுக்கலாம்.
மத்திய வங்கி (அதாவது அரசு வங்கி) பண நோட்டுக்களை அச்சடிக்கும். நாணயங்களை வார்க்கும்.
தனியார் வங்கிகள் உருவாக்கப் போகும் கடன்களை, இந்தப் பண நோட்டுக்களாக, நாணயங்களாக வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் அவர்களின் கணக்கில் வரவு வைக்கலாம்.
நாளாந்தம் எவ்வளவு பண நோட்டுகள் தேவை? நாணயங்கள் தேவை? சொல்லி அனுப்புங்கள். அல்லது டெலிபோன் பண்ணுங்கள். உங்கள் வங்கி வாசலுக்கே கொண்டு வந்து தருகிறோம்.
எல்லாருக்கும் மகிழ்ச்சி. நம்மைத் தவிர.
மத்திய வங்கி இப்போது சகல கலா வல்லவன் ஆகிவிட்டது. சகல அதிகாரங்களையும் வைத்திருக்கும் ஒருவர் எப்போதும் மற்றவர்களைத் தனக்குக் கீழ்மட்டத்தில் தான் வைத்திருக்க ஆசைப்படுவார் இல்லையா?
அதைத் தான் மத்திய வங்கியும் செய்து கொண்டே இருக்கிறது. பணப் பாவனையில் எப்போதுமே ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.
பொருளாதாரப் பேராசிரியர்கள் ஜாக்சனும் மக்டொனால்டும் சொல் கிறார்கள்: அது மட்டுமல்ல . சர்வதேச நாணய சந்தையிலும், எல்லா நாட்டு மத்திய வங்கிகளும் தம் பணத்தை ஒரு சார்பு நிலை பற்றாக்குறை நிலையில் (relatively in shortage) வைத்திருக்க விரும்புகிறார்கள்.
இந்த செயற்கையான தட்டுப்பாடு, மக்களிடையே, வங்கிகளின் இடையே போட்டியை உருவாக்குகிறது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வை உண்டாக்குகிறது. கூட்டுறவை அல்ல.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம். மத்திய வங்கி இப்படி ஆட்டம் போட்டால், நாம் ஒட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்தினோமே. அந்த அரசியல்வாதிகளுக்கு இது தெரியாதா?
தெரியும். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவது நாலோ அல்லது ஐந்து ஆண்டுகள். எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ, எப்போது இவர்கள் காலை வாரிவிடலாம் என்கிற சிந்தனையில் இருப்பவர்கள்.
நான் தான் இந்த நாட்டை ஆளத் தகுதியான ஆள் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். எல்லாரும் என்ன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியா?
அடுத்து, அநேகமாய் பெருவாரியான அரசியல்வாதிகளுக்குப் பணம் பற்றி எதுவுமே தெரியாது. மத்திய வங்கி ஆட்கள் ரொம்பப் படித்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். நாம் ஏன் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்?
அரசியல்வாதிகளில் சட்டம் படித்தவர்கள் அல்லது வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இருக்கலாம். சிலருக்கு பொருளியல், பண அமைப்பு போன்ற துறைகளில் அறிவு இருந்தாலும், பழைய பொருளியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்கள் அவர்கள்.
சிலருக்கு இருக்கும் அமைப்பை சீரமைப்பு செய்தால் போதும் என்கிற நினைப்பு.
சிலருக்கு திட்டமிட்ட பொருளாதாரத்துக்குள் (கம்யூனிச நாடுகளின் பண அமைப்பு) போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நினைப்பு.
சிலருக்கு இந்த அமைப்பை மாற்றவேண்டும் என்று தோன்றினாலும், எப்படி என்பதில் ஒரே குழப்பம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களுக்கே பணம் பற்றிய புரிதல் இல்லை.
வட்டி
வட்டி, இன்றைய பணத்தின் அடித்தளம்.
புகழ்பெற்ற இயற்பியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், பிரபஞ்சத்தின் மிகவும் சக்தி வாய்ந்த விசை எது? என்று ஒரு செய்தியாளர் கேட்டாராம்.
பூமியின் ஈர்ப்பு விசை அல்லது அணுவைப் பிளக்கும் போது பீறிட்டு வெளிவரும் சக்தி.. இப்படி ஏதோ ஒன்றை சொல்லப் போகிறார் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க, ஐன்ஸ்டீன் ஒரே வார்த்தையில் சொன்னாராம்: கூட்டு வட்டி.
அந்த செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது. இருந்தாலும் வட்டியின் சக்தியை, அதன் வலுவை சாதாரணம் என்று நினைத்துக் கடந்து போய்விட முடியாது என்பதை இது காட்டுகிறது.
பணத்துக்கு வட்டியே வாங்கக் கூடாது என்று எல்லா மதங்களுமே போதனை செய்திருக்கின்றன. 15 நூற்றாண்டுகளாக அய்ரோப்பிய நாடுகளில் வட்டிக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.
அதை 1545 களில் முடிவுக்குக் கொண்டுவந்தவர் இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் ஹென்ரி. வட்டியை சட்டமூலம் உறுதி செய்தவர் இவர்.
கத்தோலிக்க திருச்சபை, வட்டி என்பதை 19 ம் நூற்றாண்டு வரை கடுமையாக எதிர்த்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக பல தகவல்கள் உண்டு. வட்டி வாங்குபவர்களை திருச்சபையின் சமூகத்தில் இருந்தே தள்ளி வைத்துவிடுவது (Excommunication) வழக்கமாக இருந்தது.
ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு நகர்கிறோம்.
1822 ம் ஆண்டளவில், பிரான்சின் லியோன் நகரத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணி, அந்தத் தண்டனையில் இருந்து விதிவிலக்கு தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் பணத்துக்கு வட்டி வாங்கியவர் என்று ஆதாரங்கள் இருந்தன. ஆகவே முடியாது என்கிற பதிலோடு…
இன்னொரு வரியும் திருச்சபை சேர்த்திருந்தது: அவர் இதுவரை வாங்கியிருந்த வட்டித்தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டால் அவருடைய மனுவை மீளாய்வு செய்யத் தயாராய் இருக்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில், வட்டி என்பதில் உங்களின் கொள்கை என்ன என்று கேட்டால் திருச்சபை பதிலே சொல்லாமல் அமைதியாக இருக்கிறது.
இன்றைய பணத்தின் உள்ளே இருந்தபடி, வட்டி செய்யும் தில்லுமுல்லுகள் வெளியே தெரிவதில்லை. அது மிக நுண்ணிய முறையில், அப்பாவி போல் வேடம் போட்டு ஆட்டம் போடுகிறது. ஆகவே மக்கள் அதன் சுயரூபத்தைப் புரிந்து கொள்வது அபூர்வம்.
(தொடரும்..)