காசு பேசும் என்பதை நீங்கள் நம்புவீர்களா இல்லையோ நான் நம்புகிறேன். ஒருநாள் அது சொன்னதை என் ரெண்டு காதாலும் கேட்டேனே: Goodbye.
-ரிச்சர்ட் ஆர்மர்
தொடர் -3
பணத்தின் வரைவிலக்கணம்
பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் பணத்தின் ஐந்து தன்மைகள் பற்றி சொல்கிறார். (அதில் கொஞ்சம் தண்ணி கலந்திருக்கிறேன்):
- Money of account – மனிதர்கள் பொதுவாய் மற்றவர்களின் தரம் பற்றித்தான் பேசுவது வழக்கம். தன் தரம் பற்றி மூச்சு விடமாட்டார்கள். பணமும் அப்படியே. தன சொந்த மதிப்பைப் பற்றிக் கவலைப்படாது. அந்தப் பொருள் அப்படி .. இந்த சேவை இப்படி… என்று எடை போடுவது மட்டுமல்ல, ஒரு மதிப்பும் கொடுத்து விடுகிறது.
- Storing value – அதை சேர்த்து வைத்துக் கொள்ளலாம். பொருள்கள், சேவைகளுக்கு இந்த தைரியம் இல்லை.
- Transporting value – சேர்த்த மதிப்பை எங்கும் அனுப்பலாம். பண நோட்டாய் அல்லது கணனி மூலம், அது உங்கள் வசதி.
- Debtor-Creditor relationship – வாங்குவோர்- கொடுப்போர் என்னும் சமூக உறவை உருவாக்குகிறது.
- Political element – அதற்குப் பெரும் அரசியல் செல்வாக்கு இருக்கிறது. பேராசிரியர் ஏற்கெனவே சொல்லிவிட்டாரே.
அந்தக் காலத்தில் உலோகங்கள் தெய்வீக அம்சம் பொருந்தியவை என்று நம்பினார்கள். (நாணயங்கள் தங்கம், வெள்ளியில் வார்க்கப்பட்டன.) தங்கத்தை சூரிய பகவான் அம்சம் என்றும் வெள்ளியை சந்திர பகவான் என்றும் கொண்டாடி இருக்கிறார்கள்.
Money என்கிற பேரே Juno Monita என்னும் ரோமர்களின் தேவதையின் பேரில் இருந்து தான் வந்தது.
பணம் என்றுமே தட்டுப்பாட்டில் இருந்தது என்று சொல்ல முடியாது. 12ம் – 15ம் நூற்றாண்டுகளின் இடைவெளியில் புழக்கத்தில் இருந்த பணம் மக்களுக்குப் பெரிதும் சேவை செய்திருக்கிறது.
பிராக்டியேட்டன் பணம் (Braktieaten money)
அய்ரோப்பாவின் பல பகுதிகளும் அன்றிருந்த சிற்றரசர்கள், பிஷப்புகள் உருவாக்கிப் பாவனையில் விட்ட இந்தப் பணம் ஒவ்வோர் ஆண்டும் திருப்பி வாபஸ் வாங்கப் பட்டுவிடும். ஆகவே மக்கள் இந்தப் பணத்தை சேர்த்து வைக்கவே விரும்பவில்லை. செலவழித்துவிடத் துடித்தார்கள்.
விளைவு: வேலைகள், பணிகள், வணிக செயல்பாடுகள் எல்லாம் விறுவிறு என்று நடந்தன.
வாபஸ் வாங்கப்பட்ட இந்தத் தங்க, வெள்ளி நாணயங்கள் உருக்கப்பட்டு, அவற்றின் உலோக அளவும், மதிப்பும் குறைக்கப்பட்டு மீண்டும் பாவனைக்கு விடப்பட்டது. (சராசரி 25 விழுக்காடு)
மக்களின் யோசனை வேறு திசையில் திரும்பியது. பணத்தை எங்கே முதலீடு செய்யலாம் என்று யோசித்தார்கள். பண முதலீடு, காணி நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள், கலைப் பொருள்கள் என்று போனதில் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது.
கைவினைஞர்கள், தொழிலாளர்கள் வரம் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்தார்கள். இந்தக் காலகட்டத்தில் அய்ரோப்பாவில் புதிய சிந்தனைகள் தோன்றின, கலைகள் மேம்பட்டன என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
இருந்தும், மக்களுக்குப் பணம் அடிக்கடி மறைந்து போவது பிடிக்கவில்லை. பணத்தின் கவர்ச்சி மங்க ஆரம்பித்த சமயம், பென்னி நாணயம் அறிமுகம் ஆகியது. இனி நான் தான் ராஜா, மறையவே மாட்டேன் என்றது. கூடவே வட்டியும் வந்தது.
முடிவில், பணம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டும் குவிய ஆரம்பித்தது. மக்களோ, வாழ்க்கையே ஒரு சோதனை என்று தத்துவம் பேச ஆரம்பித்தார்கள்.
இஸ்லாம் காட்டிய பொருளியல்
பாலைவனத்தில் நெறிகள், நீதிகள் எதுவுமே இல்லாமல் மனம் போனபடி வாழ்ந்த அரேபியர்களுக்கு, அறங்கள் வகுத்து ஓர் புதிய மதத்தை மட்டும் அறிமுகம் செய்யவில்லை முகமது நபி.
வாழ்வியலின் பிரிக்கவே முடியாத பொருளியலிலும் சிறப்பான ஓர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவரே ஓர் வணிகர். மக்களின் தேவைகளை உணர்ந்தவர். பணத்தை வட்டிக்கு வாங்கி மக்கள் பட்ட துயரங்களை அவர் கண்டிருக்க வேண்டும்.
அதன் எதிரொலியாய், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று முழங்கினார். செல்வந்தர்களே, வணிகர்களுடன் பங்குதாரர்களாக சேர்ந்து கொள்ளுங்கள். நட்டமோ, லாபமோ பகிர்ந்து கொள்ளுங்கள். இறைவன் உங்களைக் கைவிட மாட்டான் என்று அறைகூவல் விடுத்தார்.
வட்டி வாங்குவதை யூத, கிறிஸ்தவ மதங்களும் எதிர்த்தன. ஆயினும் நடைமுறை சாத்தியமான ஓர் வழியைக் காட்டுவதில் தவறிவிட்டன.
இஸ்லாம் வளர வணிகமும் உதவியிருக்கிறது. இந்திய நாட்டில் பவுத்தம் வளர வணிகர்கள் உதவியதையும் இதோடு ஒப்பிட்டு நோக்கலாம்.
இந்தியாவில் வணிகர்கள் சமூகத்தின் கீழ்மட்டத்தில் வைக்கப்பட, (சூத்திர மக்களுக்கு மேலே, ஆனால் பார்ப்பன, சத்திரியர்களுக்குக் கீழே) முஸ்லீம் நாடுகளிலோ அவர்களுக்குத் தனி அந்தஸ்து தரப்பட்டது.
அய்ரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ குருமார்களின் தலையீடுகள் அரசியலில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தின.
முஸ்லிம் நாடுகளில் அரசியலும் வணிகமும் வெவ்வேறு தளங்களில் இயங்கின. வணிகர்களின் மார்க்க அறிஞர்களைப் பார்த்து, கலீஃபாக்களே (அரசர்கள்) மரியாதையுடன் நடந்து கொண்டார்கள். ஒருவர் விவகாரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்று எழுதாத ஒப்பந்தம் இருந்தது.
வணிகர்கள் புதுப்புது நாடுகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்க, அரசர்கள் புதுப்புது நாடுகளில் போர்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
தெய்வீகமும் பணமும் (வணிகம்) இஸ்லாத்தில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. மற்ற மதங்கள் பணத்திலோ, பொருளியலிலோ பெரிதாக நாட்டம் காட்டவில்லை. அவர்கள் பார்வை ஆன்மிகம், உளவியலோடு நின்றுவிட்டது. முகமது நபி ஒரு படி அல்ல, பல படிகள் மேலே போயிருக்கிறார்.
அதை யாராலும் மறுக்க முடியாது.
இன்றைய வங்கிகளின் முன்னோடிகள்
தங்கமும் வெள்ளியும் இருக்கும் இடத்தில் தானே பொற்கொல்லர்களுக்கு வேலை இருக்கும்? ஆகவே அவர்களுக்கு சமூகத்தில் தனி மவுசு இருந்தது.
தவிர, அவர்களிடம் தடிப்பான இரும்புப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் உடைக்க முடியாத பூட்டுகள் தொங்கின. கூடவே ஆயுதம் தாங்கிய காவலர்கள் இருந்தார்கள்.
தங்கமும் வெள்ளியும் வைத்திருந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போய்விட்டது. வீட்டில் பாதுகாப்பு இல்லையே. ஆகவே வைத்திருந்த செல்வத்தை பொற்கொல்லர்களிடம் கொடுத்து ஓர் பற்றுச்சீட்டு வாங்கிக் கொண்டார்கள்.
பொற்கொல்லர்களும் நேர்மையும் நாணயமும் உள்ளவர்களாக இருந்தார்கள்.
ஒரே ஒரு பிரச்னை: எல்லாரும் கொடுத்துவிட்டுப் போனார்களே தவிர வந்து மீட்டு எடுத்துக் கொண்டு போக ஆர்வம் காட்டவில்லை.
காரணம்: பற்றுச்சீட்டு வைத்திருந்தவர்களோ, யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால், பதிலாக பற்றுச்சீட்டைக் கடன்காரரிடம் கொடுத்து கணக்கை நேர் செய்யப் பழகி இருந்தார்கள்.
கடன் கொடுத்தவர்களுக்கும் அந்தப் பற்றுச்சீட்டைக் கொண்டு போய் பொற்கொல்லரிடம் நீட்டினால், அந்த மதிப்பளவு தங்கமோ வெள்ளியோ கிடைத்துவிடும் என்று தெரிந்திருந்தது.
மனிதர்கள் நல்லவர்கள். சந்தர்ப்பங்கள் தான் மோசமானவை.
சும்மா தங்கமும் வெள்ளியுமாய்ப் பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறோமே. கொஞ்சம் கூடுதலாக சில பற்றுச்சீட்டுகள் எழுதித் தேவை என்று வருகிற ஆட்களுக்குக் கொடுத்து, கொஞ்சம் கூடுதலாக வருவாய் ஈட்டினால் என்ன என்று அவர்கள் யோசிக்கவில்லை. சந்தர்ப்பங்கள் அப்படி யோசிக்க வைத்தன.
முதலில் இந்த யோசனை இத்தாலிய பொற்கொல்லர்களுக்குத் தான் வந்தது. அவர்கள் வாங்குகளில் அமர்ந்தபடி இப்படிப் பற்றுச்சீட்டுகள் எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். வாங்குகளுக்கு இத்தாலிய மொழியில் banco என்று பேர்.
banco விரைவிலேயே மற்ற அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.
வங்கிகள்
பொற்கொல்லர்கள் துவங்கிய வங்கிகள் என்னும் அமைப்பின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை.
பணமோ, தங்கமோ, எந்த உலோகமோ வைப்பில் இருக்கும் மதிப்பைவிட, அதிகமாய் பற்றுச் சீட்டுக்கள் எழுதிக் கொடுக்கும் கலைக்கு வங்கிகள் இன்னும் மெருகு ஏற்றின.
பற்றுச் சீட்டுகள் பணநோட்டுகளாக உருமாற அதிக நாள் பிடிக்கவில்லை. நாணயங்கள், உலோகங்களைக் கையாளுவதில் கஷ்டங்கள் அதிகம் என்று தெரிந்ததே.
தவிர, வங்கிகள் தாராளமாகக் கடன் கொடுக்க ஆரம்பித்தன. ஏன் அரசர்களே கடன் கேட்க ஆரம்பித்தார்கள். (அந்தப்புர செலவுகள் கூடிப்போயிருக்குமோ என்று சிலர் யோசிக்கலாம்.) அதுவும் உண்மை தான்.
அதே சமயம் நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மந்திரிகள், தந்திரிகள் வேலையாட்கள், போர்வீரர்கள் ஊதியங்கள், அது இது என்று ஒன்றா, ரெண்டா?
அரசராய் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.
அன்றைய பொருளாதாரம் பண நோட்டுகளுக்கு மாறத் துவங்கினாலும் நாணயங்களிலேயே தங்கி இருந்தது. போர்கள் மட்டுமல்ல, புது உலோக சுரங்கங்களும் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருந்தது.
அரசின் செலவுகள் இன்று போலவே அன்றும் கூடிக்கொண்டே இருந்தன.
மக்களோ நாணயங்கள்/ உலோகங்களை எங்கே பதுக்கலாம், எப்படிப் பதுக்கலாம் என்கிற யோசனையில் இருந்தார்கள். ஒரு படி மேலே போய் வெளிநாடுகளுக்கு எப்படிக் கடத்தலாம் என்றும் சிந்தித்தார்கள்.
(நாணயங்கள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? பொருளாதாரப் பிரச்னைகளை சமாளிக்க மக்கள் வேறுவழிகளும் வைத்திருந்தார்கள்.)
பொதுவாக, அரசர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. போரோ, அமைதியோ வங்கிகள் அவர்களுக்குக் கடன் கொடுத்தன. சில சமயங்களில் துயர சம்பவங்களும் நடந்தன.
தெய்வீகம் துவங்கிய வங்கி
பொருளியலில் இஸ்லாத்துக்குக் குறைந்ததல்ல கிறிஸ்தவம். காலத்துக்குக் காலம் சுடர் விட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.
நைட்ஸ் டெம்ப்ளர் (Knights Templar) என்னும் கிறிஸ்தவ அமைப்பு 12 ம் நூற்றாண்டளவில் தோன்றி மிகவும் பிரபலம் அடையத் துவங்கியது.
காரணம், முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் பெற்ற வெற்றிகள். பல கிறிஸ்தவ நாடுகள் முஸ்லிம்களின் கைக்குள் வீழ்ந்திருந்தன. 11 ம் – 13 ம் நூற்றாண்டுகளுக்கு இடையில், இரு பகுதிகளுக்கும் நடந்த யுத்தங்கள் (சிலுவை யுத்தங்கள் ) வரலாற்றில் மறக்க முடியாதவை.
கிறிஸ்தவத்தைக் காக்க உயிரையும் கொடுப்போம் என்னும் முழக்கத்துடன் எழுந்தது இந்த இயக்கம். அனைவரும் துறவிகள். வாளேந்திய துறவிகள்.
அவர்களின் பொருளியல் ஈடுபாடு ஆச்சரியமான ஒன்று. போர்களில் பங்குகொண்டது மட்டுமல்ல, அவர்கள் வங்கிகளும் நடத்தினார்கள்.
12 ம் நூற்றாண்டில் இருந்த கத்தோலிக்க பாப்பரசரே அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வங்கி நடத்த அனுமதி அளித்தார்.
அய்ரோப்பிய நாடுகள் எங்கினும் கிளைகள் துவங்கப்பட்டன. துறவிகளிடம் இருந்தவை சில நோட்டுப் புத்தகங்களும் பேனாவும் மட்டுமே. (மன்னிக்கவும்: சில இரும்புப் பெட்டிகளும்)
அங்கே வணிகர்கள் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து ஒரு பற்றுச் சீட்டு பெற்றுக் கொண்டார்கள். அதை எந்த நாட்டிலோ, ஊரிலோ டெம்ப்ளர் வங்கிக் கிளை ஒன்றில் காட்ட வேண்டியது தான் பாக்கி. இங்கே போட்ட காசு அங்கே கிடைத்துவிடும். இன்றைய வெஸ்டர்ன் யூனியன் (Western Union) ஆட்கள் இதைக் கேட்டால் பொறாமையில் வெந்து போவார்கள்.
வெந்து போகட்டுமே. நமக்கென்ன? அந்த 12 ம் நூற்றாண்டிலே மின்சாரம் இல்லை. கணனிகள் இல்லை. கேவலம் ஒரு ஒரு டெலிபோன் கூட இல்லை. டெம்ப்ளர் துறவிகள் எப்படி சாதித்திருப்பார்கள்? இன்னொரு இனிய ஆச்சரியம்:
சில சமயங்களில், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. யுத்தபூமிகளில் வெள்ளைக் கொடிகள் பறந்தன. பாலஸ்தீன் நாட்டின் ஜெருசலேம் நகர் தான் இரண்டு குழுவினருக்கும் குறிக்கோள். ஏனென்றால் மூன்று மதங்களினதும் (கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம்) புனித நகரம் அல்லவா அது!
அய்ரோப்பாவில் இருந்து திரள் திரளாக கிறிஸ்தவர்கள் புனித பூமிக்கு யாத்திரை போவது வழக்கம். (அந்த காலத்தில் விமானம், ரயில், கார்கள் எதுவும் இருக்கவில்லை.) எல்லாருமே கால்நடை தான். மிஞ்சிப் போனால் லொடக்கு லொடக்கு என்று குதிரை வண்டி.
யுத்த நிறுத்தம் என்றதும் எல்லாருக்கும் புத்துணர்ச்சி. வாங்க போகலாம் எல்லாரும் என்று யாத்திரை கிளம்பினார்கள். (அன்று யுத்த நிறுத்தம் என்றால் அதை இரண்டு பிரிவினரும் மதித்தார்கள். ஒரு எறும்புக்குக் கூட ஊறு செய்யவில்லை.)
இருந்தும் ஒரு விஷயம் உறுத்தியது : செலவுக்குப் பணம் கொண்டு போவது தான் பிரச்னையாய் இருந்தது. காரணம்: வழிப்பறி கொள்ளைக்காரர்கள்.
சும்மா இருப்பார்களா டெம்ப்ளர் துறவிகள்? விளம்பரம் போட்டார்கள்: யாத்திரிகர்களே, கவலைப்படாதீர்கள். எங்களுக்கு ஜெருசலேம் நகரிலும் கிளை இருக்கிறது. பணத்தை எங்கள் வங்கியில் கொடுத்து விடுங்கள். அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம்.
ஞாபகம் இருக்கட்டும். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிறது ஜெருசலேம் நகர். எப்படி?… எப்படி?…
இவர்களின் வங்கிகள் கிறிஸ்தவத்தின் கொள்கைப்படியே இயங்கின. வட்டியே வாங்கவில்லை. சேவைகளுக்கு ஒரு சிறு கட்டணம். அவ்வளவே.
ஒரு உதாரணம்: 1200 களில் ஆண்ட இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் ஹென்றிக்கு பிரான்சின் போர்தோ நகரின் அருகில் இருந்த ஒரு தீவை வாங்க ஆசை வந்திருக்கிறது. டெம்ப்ளர் துறவிகளுக்கு செய்தி போனது.
அரசே, அது சின்ன விஷயம் என்றார்கள். சிலநாள் கழித்து, மன்னரிடம் போனார்கள். ஆண்டுக்கு 200 பவுண்டுகள் படி 5 ஆண்டுகளுக்கு தீவின் சொந்தக்காரருக்குக் கட்டிவிடுங்கள் என்றார்கள். அப்படி ஒப்பந்தத்தைக் கச்சிதமாக முடித்துத் தந்தவர்கள் துறவிகள்.
கடன் வாங்க வாங்க சந்தோஷமாய் இருக்கும். ஆனால் திருப்பிக் கேட்டால் தான் நமக்குக் கோபம் வருகிறது இல்லையா? பிரான்சின் மன்னர் 4 ம் பிலிப்புக்கும் அது தான் வந்தது.
மன்னர் துறவிகளின் வங்கியில் எக்கச்சக்கமாய் கடன் வாங்கியிருந்தார். (போர்கள்.. போர்கள்..) கொஞ்சமாவது திருப்பிக் கட்டுங்கள் என்று சொல்லிப் பார்த்தார்கள் துறவிகள். என்ன அடிக்கடி தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்று எரிந்து விழுந்தவர், ஒருநாள் உத்தரவு போட்டார்: டாய்! எல்லாத்தையும் கொளுத்திருங்கடா!
கொளுத்திவிட்டார்கள். வங்கித் தலைவரையும் சேர்த்து உயிரோடு. கண்டத்தின் எல்லா மூலைகளிலும் வன்முறை எதிரொலித்தது. அவர்களின் எல்லா வங்கிகளும் அழிக்கப்பட்டன. துறவிகளும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப் பட்டார்கள்.
1139 ம் ஆண்டு தெய்வீகம் துவங்கிய வங்கியின் கதையை 1312 ம் ஆண்டில் இப்படி முடித்துவிட்டார்கள்.
(தொடரும்..)