கடுமையாய் உழைத்து முன்னேறி இன்று பணக்காரனாய் இருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அது யாரின் உழைப்பில் என்று திருப்பிக் கேளுங்கள்.
-ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
தொடர் -2
(மானுடவியலாளர் டேவிட் கிரேபர், பொருளியல் பேராசிரியர் பெர்னார்ட் லீட்டேர், பொறியலாளர் மார்கரீட் கென்னடி, பொருளியல் மேதை கெயின்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் இந்தத் தொடரில் அலசப்படுகின்றன.)
டேவிட் கிரேபர் தொடர்ந்து பேசுகிறார்:
அடிமை வர்த்தகம் எல்லா சமுதாயங்களிலும் இருந்திருக்கிறது. அன்றைய சந்தைகளில் போர்வீரர்களை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அடுத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்ற சந்தைகள் தயாராகவே இருந்தன.
சந்தைகள் எப்படி வந்தன? அரசுகள் தான் அவற்றை அறிமுகப் படுத்தின. அங்கே காவலர்கள் ஆயுதங்களுடன் வலம் வந்தார்கள். மேலும் அதிகாரம் உங்களைக் கண்காணிக்கிறது என்பதை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.
சிலசமயங்களில், போர்களில் எதுவுமே கிடைக்காமல் போகலாம். இந்த நிலைமையை சமாளிக்க, மன்னர்கள் அவர்கள் பேர் பொறிக்கப்பட்ட (அல்லது முகம்.. அல்லது ..) உலோகத் துண்டுகளை அவர்கள் போர்களுக்குப் போக முன்னரே கொடுத்திருந்தார்கள்.
எனவே தோற்றுப்போய்த் திரும்பி சந்தைகளுக்கு வர நேர்ந்தாலும் சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.
மன்னர்களுக்கும் அந்த உலோகத் துண்டுகள், வரி என்னும் போர்வையில் பின்னால் தம்மிடமே திரும்பி வரும் என்று தெரிந்திருந்தது. யுத்தங்கள் செய்வது லாபம் தரும் நடவடிக்கை என்பதை அனுபவத்தில் கண்டிருந்தார்கள்.
பணம் என்பது உருவாக இந்த ஆரம்ப முயற்சி உதவி இருக்கிறது. இது ஒருவிதமான கடன். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க உதவிய கடன். நாணயங்களின் (பணத்தின்) முன்னோடி.
மக்களும் அந்த உலோகத் துண்டுகளுக்கு ஒரு தனி மரியாதை கொடுத்தார்கள். கொள்ளையில் கிடைத்த பொருள்கள், அடிமைகள் என்று களை கட்டிய சந்தைகள் உலகம் பூரா இருந்ததைக் கவனிக்க வேண்டும்.
நாணயங்கள் புழக்கத்துக்கு வர முன்னரேயே, கடன் கொடுக்கும் அமைப்புகள் தோன்றி இருந்தன. ஆசிய, அய்ரோப்பிய கண்டங்களில் தோன்றிய பழைய நாகரிகங்களில் இது மிக முக்கிய அம்சம்.
உண்மையிலேயே, பணம் என்பது கடன் கொடுப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி. அது பொருள்கள், சேவைகளின் மதிப்பை அளக்க, அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அளவுகோல் என்றாலும் கடன் கொடுத்தலும் வாங்குதலும் முன்னமேயே வந்துவிட்டது என்பதையும் நாம் நோக்கவேண்டும்.
கடன் ஒரு தவிர்க்க முடியாத, அவசிய தேவையாக இருந்ததால் பணம் அந்த இடத்தை நிரப்ப வந்த ஓர் உற்ற நண்பன் என்று கொள்ளலாம்.
எழுத்தில் கிடைத்துள்ள வரலாற்று செய்திகளின்படி, கி.மு.5000 களில் பணம் ஷே-கெல் (shekel) என்கிற பெயரில் உலகின் மிகப் பழைய மெசொபொட்டாமிய நாகரிகத்தில், சுமேரியர்களின் பாவனையில் இருந்திருக்கிறது.
பணம் என்பதைக் கண்டுபிடித்தார்களோ இல்லையோ, அதை நடைமுறைப் படுத்திக் காட்டியவர்கள் வரிசையில் சுமேரியர்கள் தான் இன்று வரை முன்னணியில் நிற்கிறார்கள்.
ஷே (she) என்றால் கோதுமை. கெல் (kel ) என்பது அளவுகோல் (ஏறக்குறைய ஒரு மரக்கால்). ஒரு மரக்கால் கோதுமைப் பொதியை அவர்கள் பண அளவுகோலாக வைத்திருந்தார்கள்.
அது விவசாய சமூகம். விவசாயிகள் விளைந்த கோதுமையை அரச களஞ்சியத்துக்கு கொண்டு வந்து கொடுத்து களிமண் தட்டுகளில் எழுதப்பட்ட பற்றுச்சீட்டு பெற்றுக் கொண்டார்கள். (ஏனென்றால் அன்று காகிதம் என்றால் என்னவென்றே தெரியாது.)
விவசாயிகள் வானத்தை நம்பி இருந்தவர்கள். ஏழைகள். மும்மாரி பொழிவது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில சமயம் வெள்ளம் வரும். சில சமயம் வரட்சி வாட்டும்.
ஆகவே, கஷ்ட காலங்களில் அவர்களுக்கு மன்னர்களால் கடன் (நிவாரண நிதி) கொடுக்கப்பட்டது. இருந்தும் அநேகமான விவசாயிகளுக்கு அது போதவில்லை. சிலநேரங்களில் செல்வாக்கோடு வாழ்ந்த செல்வந்தர்களிடமும் கையேந்த நேரிட்டது.
அந்த காலத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. முழுக் குடும்பத்தையுமே பணயக் கைதிகளாக்கினார்கள். அடிமை வர்த்தகம் சர்வ சாதாரணமாய் நடந்தது.
சமூகத்தின் முதுகெலும்பான விவசாயிகள், பெருவாரியான மக்கள் தொடர்ந்து வறுமையில் வாடினால் அரசு எப்படி இயங்கமுடியும்? எனவே காலத்துக்கு காலம் மன்னர்கள் கடன்களை ரத்து செய்து கொண்டே இருந்தார்கள். மற்றவர்களையும் ரத்து செய்யச் சொல்லி ஆணை இட்டார்கள்.
இது மெசொபொட்டாமிய நாகரிகத்தின் பாணி. பின்னால் வந்த எகிப்திய நாகரிகமும் இதே முறையைக் கையாண்டாலும் அவர்கள் பிரமிட்கள் என்று பிரம்மாண்டமாய் யோசித்தவர்கள்.
ஆகவே பற்றாக்குறை என்று வரும்போது அடுத்த ஊரை, நாட்டைக் கொள்ளை அடித்தால் தான் நின்றுபிடிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டபோது, அவர்கள் தயங்கவே இல்லை.
இனி கிரேக்கர்களின் அரசுகள், ரோமர்களின் பேரரசு என்று நாகரிகங்கள் விரிவடைந்தபோது அவர்களும் தொடர்ச்சியான போர்கள் மூலம் புது நாடுகள் பிடித்து பொருளியல் பற்றாக்குறையை ஈடு செய்ய முயற்சித்தார்கள்.
பின்னைய இந்த நாகரிகங்களின் ஆளும் வர்க்கவர்க்கத்தினர் புத்திசாலித்தனமான ஒரு காரியமும் செய்தார்கள். கொண்டு வரும் கொள்ளைப் பொருள்கள், அடிமைகளை (ஓரளவு) அவர்களின் இளைஞர் பட்டாளத்திடம் (ஆண்கள்) ஒப்படைத்துவிட்டு சொன்னார்கள்:
டேய் பையன்களா, என்ன செய்வீர்களோ தெரியாது. நம் ஊர்க்காரர்கள் ஏழைகளாய், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தளவு இவை அவர்களிடம் போய்ச் சேரவேண்டும். அவ்வளவு தான்.
இந்த ஆளும் வர்க்கங்கள் கையாண்ட நிதி நடைமுறைகள் (Financial practices), கடன்களை கட்டுக்குள் வைத்திருக்க மேற்கொண்ட உத்திகள் (Debt-coping strategies), பண அமைப்பு நிர்வாகம் (Management of money system), அடிமை வர்த்தகம் (Slavery) – இவற்றுக்கிடையில் இருந்த நெருங்கிய தொடர்புகளை நாம் கவனிக்க வேண்டும்.
மத்திய காலகட்டத்துக்கு (Middle ages) முன்னைய கால கட்டத்தை (கி.மு. 8 – கி.மு.3 ம் நூற்றாண்டுகள்) வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய காலகட்டம் என்று சொல்லலாம். ஆசிய, அய்ரோப்பிய கண்டங்களில் கலாசாரங்களும் படைப்புத் திறன்களும் துளிர்விட்டுப் படர ஆரம்பித்த காலம் அது.
சீனாவிலும் இந்தியாவிலும் பேரரசுகள் எழுந்தன. இங்கும் நாணயங்கள் பாவனைக்கு வந்த காலம். சந்தைகள், பொருளீட்டல் சாதனங்கள் பிரபலம் அடையத் துவங்கின. நிதிப் பற்றாக்குறை எகிற, எகிற யுத்தம் ஒரு அவசியமான ஒரு தொழிலாக வளர்ந்தது. அடிமை வர்த்தகம் தினசரி வாடிக்கையாக மாறியது.
அந்த யுகத்தில் ஏற்பட்ட இன்னோர் சுவாரஸ்யமான அம்சம்: மக்கள் மனதில் நாணயங்களின் பாவனை அழுத்தமாய்ப் பதியத் துவங்க, எண்ணிக்கை முதலிடம் வகிக்க ஆரம்பித்தது.
எந்தப் பொருளுக்கும், சேவைக்கும் ஒரு மதிப்பு, இலக்கத்தில் தோன்ற ஆரம்பித்தது. உறவு முறைகள், கலாசாரம், நம்பிக்கைகள், அவர்கள் புனிதமாய் நினைத்திருந்த அத்தனை விஷயங்களும் மதிப்பில் அடங்கிப் போக, வாழ்க்கையே தலைகீழ் ஆகிவிட்டது.
பொருள் மதிப்புக்கு முதலிடம் கொடுக்கும் இந்தப் போக்கு தவறானது. அதை எதிர்க்கவேண்டும் என்று மாற்று மனிதநேய தத்துவங்கள் தோன்ற ஆரம்பித்தன.
சோபிஸ்ட்டுகள் (Sophists) என்றொரு பிரிவினர் கிரேக்கத்தில் அன்று சிறந்த பேச்சாளர்களாக, நட்சத்திர அந்தஸ்தோடு வலம் வந்தார்கள். (காசு மட்டும் கொடுத்துவிட்டால்) எந்த ஒரு தலைப்பு கொடுத்தாலும் வெளுத்துக் கட்டக் கூடியவர்கள். புகழ் பெற்ற கிரேக்கத்தின் தத்துவங்கள் அனைத்தும் இவர்களுக்கு எதிராக உருவாகின.
வெறும் சடங்குகளில் மட்டும் நம்பிக்கை கொண்ட வைதீக மதங்களுக்கு எதிராய் இந்தியாவில் பவுத்தம் எழுந்தது.
சீனாவில் நிலவிய பழைய லீகலிச (Legalism) தத்துவத்துக்கு ( அரசு கொடியதாய் இருந்தால் என்ன, அநீதிகள் புரிந்தால் என்ன, எல்லாருமே சட்டம், ஒழுங்குக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் எனும் சித்தாந்தம்) எதிராக, நேர்மை, நீதியை வலியுறுத்திய கன்பூசியன் தத்துவம் (Confucianism) தோன்றியது.
20 ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பொருளியலாளர், ஜான் மேனார்ட் கெயின்ஸ் சொல்லும் பணத்தின் தோற்றம் :
பணம் எப்போது தோன்றியது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் காலத்தை விட, அல்லது நமக்கு எப்போது என்று சொல்லித்தந்ததை விட, இன்னும் பழமையானது பண அமைப்பு என்று நம்புகிறேன்.
பூமியின் பனியுகம் உருகத் துவங்கிய காலகட்டத்துக்கும் பின்னர் மிதமான, இதமான காலநிலை தோன்றிய காலகட்டத்துக்கும் இடையிலே, எந்த காலகட்டத்தில் மனித வரலாறு ஆரம்பமானதோ, அதே நேரம் எந்தக் கட்டத்தில் புதுப்புது சிந்தனைகள் மனிதமனத்தில் அரும்ப ஆரம்பித்தனவோ அப்போது பணத்தின் மூலம் தோன்றி இருக்கவேண்டும்.
அது ஹெஸ்பெரிட்ஸ் தீவுகளில் தோன்றி இருக்கலாம் (Islands of Hesperides). அல்லது தத்துவஞானி பிளாட்டோ விவரித்த அட்லாண்டிஸ் (Atlantis) எனும் கற்பனைக் கண்டத்தில் தோன்றி இருக்கலாம். அல்லது எங்காவது மத்திய ஆசியாவில் இருந்த ஏதோ ஒரு ஏடன் தோட்டத்தில் தோன்றி இருக்கலாம்.
அய்யா என்ன சொல்ல வருகிறார்? உங்களுக்குப் புரிகிறதா?
அவர் ஒரு பொருளியல் மேதை. அவருக்குப் பணம் என்றால் என்ன என்று தெரியாமலா இருந்திருக்கும் என்று அடுத்த கேள்வியைக் கேட்டால்:
பணமா? நான் அறிந்தவரை, எனக்குத் தெரிந்த மூன்று பேர்கள் மட்டுமே பணம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டவர்கள்.
ஒருவர் இன்னோர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறார். அடுத்தவர் என் மாணவர்களில் ஒருவர். மற்றவர் இங்கிலாந்து மத்திய வங்கியில் வேலை செய்யும் ஒரு சாதாரண எழுத்தர்.
யார் அவர்கள் என்று அவர் சொல்லவே இல்லை.
(தொடரும்..)