ஞானிகள் பலவிதம்.
சிலரைப் பார்த்தால் பயம் வரும். சிலரைப் பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். சிலரைப் பார்த்தால் ரெண்டு விதமாகவும் தெரியும்.
சிலரின் பேச்சு விசித்திரமாக இருக்கும். ஆனால் யோசிக்க, யோசிக்கப் புதுமையாக இருக்கும். அது ஒரு அனுபவம்.
“முதலும் கடைசியும் ஆன விடுதலை ” (The First And Last Freedom) ஜிட்டுவின் முதல் புத்தகம் என்று நினைக்கிறேன். வாசிக்க ஆரம்பித்தபோதே பைத்தியம் பிடித்துவிட்டது.
அவர் கூட்டங்களில் அடிக்கடி சொல்லுவார் : பெரியோர்களே, நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். நம்பினீர்களோ, உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாது. நீங்களே யோசித்து நீங்களே முடிவெடுத்து நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
நாம் அவரிடம் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன, பிரச்னைகளில் இருந்து தப்ப ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்டால் அந்த மனுஷன் நம்மிடம் சொல்லும் பதிலில், நமது கேள்விகள் நம்மையே திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிடும்!
அது தான் ஜிட்டுவின் சிறப்பு.
தியோசோபிக்கல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான அன்னி பெசன்ட் அம்மையார் (ஐரிஷ் பெண்மணி) இந்திய நாடு கடவுளின் நாடு என்று நினைத்தவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர்.
உலகை உய்விக்க, புத்தரைப் போல் ஓர் பெரும் ஆசிரியர் தோன்றுவார் . அதுவும் இந்தியாவில் என்று நம்பியவர் அவர். துணைக்கண்டம் பூரா சல்லடை போட்டுத் தேடி, ஜோசியம் பார்த்து, ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்கள் இரண்டு இளம் பையன்கள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.
ஒருவர் ஜிட்டு . மற்றவர் நித்தியானந்தா. இவர்கள் சென்னை அடையாறில், பின்னர் கலிபோர்னியா மாநிலத்தில் என்று தங்கவைக்கப்பட்டார்கள். வாழ்க்கையின் அத்தனை வசதிகளும் கிடைத்தன. படிப்பும், யோகமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு அங்கே “குருகுல வாசம் ” செய்தவர்கள் அவர்கள். எதிர்கால ஞானிகள் அல்லவா?
அந்தப் பையன்களே, நாம் அவதாரங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, நித்தியானந்தா காச நோயால் மரணம் அடைந்தார். உடைந்து போனார் ஜிட்டு. பல ஆண்டுகள், தன்னைத் தானே மீளாய்வு செய்ய வேண்டிய கட்டங்கள் நேர்ந்தன ஜிட்டுவுக்கு. அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை அது.
தியோசோபிக்கல் சொசைட்டியை விட்டுப் பிரிந்தார் ஜிட்டு.எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார்.
(அன்னி பெசன்ட், ஜிட்டுவின் நியாயத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜிட்டுவின் நேர் எதிர் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் கடைசி நாள் வரை தவித்தார்.)
பல நாடுகளுக்குப் பயணங்கள் செய்து தன் சொந்த சிந்தனைகளை, சொற்பொழிவுகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார் ஜிட்டு.
ஆனால் தன் சிந்தனைகளைத் தன்னுடையது என்று சொல்ல மறுத்தார். சிந்தனைகள். அவ்வளவு தான். நான் குரு அல்ல. எனக்குப் பிறகு யாரும் ஏஜென்ட் வேலை பார்க்கக் கூடாது என்பதில் அழுத்தமாய் இருந்தார்.
நீங்கள் என்ன தான் அறிவியலில் முன்னேறினாலும், வசதிகளைக் குவித்தாலும், சமூகப் புரட்சிகள் நிகழ்த்தினாலும் மனம் என்பதில் இருந்து விடுதலை அடையும் வரை உங்களால் உருப்படவே முடியாது. :இது அவரின் குரல்.
ஜிட்டுவுக்கு எதிரான விமர்சனங்கள் இன்றும் தொடர்கின்றன.
அவர் காதலிலும் விழுந்திருக்கிறார். 1991 வரை அவரின் காதல் தொடர்புகள் ரகசியமாகவே இருந்திருக்கிறது. இது தெரிய முன்னரே, அவரிடம், காமம், காதல் பற்றி கேள்விகள் கேட்ட போது அவர் சொன்ன பதில்: அதை ஏன் குற்றமாகப் பார்க்கிறீர்கள் ? இயற்கை உணர்வுகளை ஏன் கொச்சைப் படுத்தவேண்டும்?
விஞ்ஞானத்தால் விளக்க முடியாதவை தத்துவத்திடம் கொடுக்கப் பட்டுவிடுகின்றன. தத்துவமோ, பலவிதமான சிந்தனைகளை முன்வைத்துவிட்டு இதில் எது பிடித்திருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்று சொல்வதோடு சரி.
இவரோ, சிந்தனைகளையே நொறுக்கித் தள்ளுங்கள் என்பார். மனம் தான் நம் முதல் எதிரி என்பார். நம் மூளை தந்திரமானது என்பார். சரி. எப்படி அதை சீர் செய்யலாம் என்றால் அது என் வேலை அல்ல என்பார். தொடர்ந்து அவரின் கேள்விகள் ஏராளமாய் வந்து விழும்.
வாழ்க்கை ஒரு காடு போன்றது. அங்கே தேனும் இருக்கும். மானும் இருக்கும் புலி சிங்கங்களும் இருக்கும். இனிமை உண்டு. துயர்கள் உண்டு. அதைக் கடந்து போகவேண்டும். காட்டைக் கடந்து போக நான் துணை வருவேன் என்று எண்ணாதீர்கள். யாரும் உங்கள் உதவிக்கு வரப் போவதில்லை. கடவுளும் வரமாட்டார். குருமார்களும் வரப் போவதில்லை. நீங்களே போய்க் கொள்ள வேண்டியது தான்.
இவரிடம், உங்கள் சிந்தனைகள் புத்தரின் உபதேசங்களோடு நெருங்கி இருப்பது போலத் தெரிகிறதே என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே, ஆம் என்றார்.
உண்மை தான். அவரின் சிந்தனைகள் பவுத்தம், ஜென் பவுத்தம், மற்றும் சீனாவின் டாவோயிஸம் போலத் தோன்றும். கிட்ட வரும். ஆனால் சேராது. டக் என்று விரிவடைந்து வேறு திசையில் போக ஆரம்பிக்கும்.
சிந்தனைகளை ஒருமுகப் படுத்துங்கள். கட்டுப் படுத்துங்கள். நிம்மதி கிடைக்கும். உங்கள் வாழ்க்கை வளம் பெறும். ஏன் பேரின்ப வாழ்வுக்கே அது கூட்டிச் செல்லும் என்பது நாம் கேள்விப்பட்ட, கேள்விப்படுகிற ஆன்மீகம்.
ஜிட்டு சொல்வார்: எதை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்களோ, அது இன்னும் அதிக மூர்க்கமுடன் எழும் அல்லது சாது போல இருந்து சந்தர்ப்பம் வரும்போது திமிறிப் பாயும் தந்திரம் நிறைந்தது இந்த மனம். சினிமா காட்டுவதில் கில்லாடி, கவனமாக அணுகவேண்டும் .
தியானம், தியானம் என்கிறார்களே என்ன அது என்றால்…
கணத்துக்கு கணம், மனம் எழுப்பும் எண்ணங்களை, அது பாட்டில் கடந்து போகவிடுங்கள். விருப்போ, வெறுப்போ இன்றி அவதானியுங்கள். அது தான் முக்கியம். அவதானிப்பு. அவதானிப்பு. உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று நோக்குங்கள். அவை பற்றி மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். எச்சரிக்கை ! எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாமல் அமைதியாக அவற்றை அவதானியுங்கள்.
எனக்கு இப்போ கோபம் வருகிறது. சரி அய்யா. எனக்கு இப்போ சந்தோஷமாய் இருக்கிறது. சரி அய்யா. எனக்குப் பசிக்கிறது. சரி அய்யா. அதோ அந்தப் பெண் அழகாய் இருக்கிறாள். சரி அய்யா. இப்போ எனக்கு ஒரு திருட்டுத்தனம் பண்ண வேண்டும் போல் இருக்கிறது. சரி அய்யா. நான் எவ்வளவு நல்லவன். தெரியுமா? சரி அய்யா… ..
இது தான் தியானம் என்பார் ஜிட்டு.
சே! இந்த மனுஷன் கிட்ட போய்க் கேட்டோமே என்று நொந்தவர்கள். புரிகிறது என்று சொன்னவர்கள். புரிகிற மாதிரி இருக்கிறது என்று சொன்னவர்கள். புரியாவிட்டாலும் புரிந்த மாதிரி நடித்தவர்கள். இப்படி ஏராளம் இருக்க..
91 வயசு வரை வாழ்ந்த மனுஷன் 1986 ல் போய்விட்டார்.
அவர் மறைந்தபோது, கல்கி பத்திரிகையில் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது:
இமயத்தில் இருக்கும் மானசரோவர் ஏரியில் எத்தனையோ அருவிகள், நீரோட்டங்கள் என்று வந்து கலந்தாலும் தழும்பாமல், சிதறாமல் அதன் நீர் மட்டம் மாறாமல் ஒரே அமைதியில் இருக்குமாமே.
அது தான் ஜிட்டு.
(இந்தக் கட்டுரையில் சிந்தனை / சிந்தனைகள் எனும் சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களில் வருகின்றன என்பதைக் கவனிக்கவும்.)