சாக்ரட்டீஸ் ஏதென்ஸில் இருந்த சந்தைக்கு தினமும் நடந்து போவது வழக்கம்.
ஒன்று விடாமல் அங்கே இருந்த எல்லாப் பண்டங்களையும் ஒரு நோட்டம் விடுவார். அட! எனக்குத் தேவையே இல்லாத அத்தனையும் இங்கே குவிஞ்சிருக்கே… என்பார். பிறகு சந்தையைக் கடந்து போய்விடுவார். தினமும் இதே கூத்து.
எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர் பெயரை உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னாள் தத்துவஞானியை அவர் கோட்பாடுகளுக்காக மட்டுமல்ல, அவரின் எளிமையான வாழ்க்கைக்காகவும் சேர்த்து மதிக்கிறது.
ஒரு சிற்பியின் மகனாய்ப் பிறந்தவர், அன்றைய புகழ்பெற்ற அக்ரோபோலிஸ் கோயிலின் சில சிற்பங்களையும் (பெண் சிற்பங்கள்) அவர் செதுக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடியாதுதான்.
ஏதென்ஸ் நகரம் நடத்திய போர்களில் அவரும் ஒரு வீரராய் இருந்தார். பிறகு ஒய்வு. எந்தப் பகட்டான ஆடையையும் உடுத்தியதில்லை. வெறும் காலோடு ஏதென்ஸின் சந்துபொந்துகளில் ரொம்ப ரொம்ப சாதாரணமாய் ஒரு தொளதொள அங்கியோடு திரிந்தார்.
வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று தன்னைத் தானே துருவியவர். மற்றவர்களிடமும் துருவியவர்.
இரண்டு தடவை (?) கல்யாணம் முடித்தவர். இரண்டு மூன்று (?) பிள்ளைகளின் அப்பா. நடனம் ஆடுவதில் கொள்ளைப் பிரியம். தண்ணீர் நன்றாய்க் குடித்தார். வைனும் அதே போல.
கிரேக்கம் அன்று ஒரு தனி நாடாய் இருக்கவில்லை. தனித்தனி ஊர்களாய் இருந்தன. ஊருக்கு ஊர் தனி அரசுகள், தனிப்படைகள் என்று அட்டகாசமாய் இருந்தன. அவர்களுக்குள் அடிதடிகள் அடிக்கடி வரும். கொலை கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கும். சும்மா சொல்லக்கூடாது. அதே சமயம் நல்ல பக்திமான்கள்.
அன்றைய கிரேக்கர்களின் நம்பிக்கைகளைப் பட்டியல் போட இங்கே இடம் போதாது. அவசியம் கருதி ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிடுகிறோம்.
அழகு என்றால் அது நன்மை, நேர்மை என்று நம்பினார்கள். அழகாய் இருப்பவர்களை கடவுள்களின் அவதாரங்கள் என்று கொண்டாடினார்கள். அவலட்சணமாய் இருப்பவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள் எல்லாரும் தீயசக்திகளின் தோற்றங்கள் என்று நினைத்தார்கள். வெறுத்தார்கள்.
அழகும் இல்லை. வயசும் போய்விட்டது. இருந்தும் அழகுப் பெண்களென்ன, வயசுப் பையன்களென்ன இந்த சாக்ரட்டீஸ் பின்னே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? எழவெடுத்த கிழவர் எதுவும் மாயமந்திரம் போட்டிருப்பாரோ? சொல்லுங்கள் கோபம் வருமா, வராதா? பார்த்த ஆண்களுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
பொறாமையில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது என்று கூட சிலர் பேசியிருக்கலாம். மேதைகளுக்கு மச்சம் தேவை இல்லை என்று அவர்களுக்குத் தெரியாது.
ஆனால் இது எல்லாம் தூசு என்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. ஏதென்ஸ் நகரத்தின் தலைவர், மாண்புமிகு பெரிக்கிள்ஸ் அவர்களின் நெருங்கிய தோழி (முன்னாள் மிஸ் ஏதென்ஸ்) அஸ்பாஸியா கூட சாக்ரட்டீஸ் வீட்டுக்கு ரகசியமாய்ப் போய்வருவதாக எந்தப் பயலோ சின்னதாய் ஒரு திரி கொளுத்திப் போட ….
நகரமே கிசுகிசு புகைமண்டலத்தில் சிக்கித் திணறியது. இது உண்மையா அல்லது வெறும் புரளியா என்று உறுதிப்படுத்த முடியாமைக்கு வருந்துகிறோம். மன்னிக்கவும்.
விஷயம் தலைக்கு மேல் போய்விட்டது. பெரிய இடத்து சமாசாரம். காவலர்கள் விசாரணையை ஆரம்பித்தார்கள். சாக்ரட்டீஸின் புகழ்பூத்த மாணவர்களான பிளாட்டோ, செனோபோன் மற்றும் பெரிய, சின்ன சிஷ்யர்கள் எல்லாருமே பெரியவரைக் காப்பாற்ற என்னென்னமோ செய்து பார்த்தார்கள். சரிப்படவில்லை.
அப்போ சாக்ரட்டீஸ் என்ன பண்ணிக் கொண்டிருந்தார் என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. அவரோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று சிந்தித்துக் கொண்டிருந்தாரே.
அவர் ஏதென்ஸ் நகர் நீதிமன்றத்துக்கு கூட்டி வரப்பட்டார். அதற்கு முன் சில தகவல்கள்:
இன்று வீட்டில் இருந்தபடி வெட்டியாய் தத்துவம் பேசிக் கொண்டிருந்தால் போதும். தத்துவப் பேராசிரியர் பட்டம் கிடைத்துவிடும் என்று நம்ப முடியாது. பதிலாய், தும்புக்கட்டையோ, விறகுக்கட்டையோ பட்டையாக சாத்திவிடக்கூடும்.
அன்றைய கிரேக்கத்திலும் இதே நிலை தான். வெளியூர்கள் போகவேண்டும். அங்குள்ள அறிஞர்களோடு விவாதங்கள் செய்து நான் பெரிய ஆள் தான் என்று நம்ப வைக்க வேண்டும். பிறகு உள்ளூர் வந்து அதே மாதிரி ஆரம்பித்து … அந்தக் சோகக் கதையை விட்டுவிடுவோமா?
ஆனால் சாக்ரட்டிஸ் அப்படியெல்லாம் வெளியூர்கள் போனதாக எந்தத் தகவலும் இல்லை. போர்கள் நிமித்தமாய் மட்டும் போனதற்கு சாட்சியங்கள் உள்ளன. போட்டிடேயோ, டேடியம் என்கிற ஊர்களில் நடந்த சண்டைகளில் இவரும் போரிட்டிருக்கிறார். போரில் இவரின் மாணவர் செனோபோனைக் காப்பாற்றி இருக்கிறார்.
சண்டை இல்லாத காலங்களில் அடிக்கடி உடற்பயிற்சிக் களம் போய் உடம்பைக் கட்டுக்கோப்பாய் வைத்திருந்திருக்கிறார். மைனர் போல் ஜாலியாய் வாழ்ந்திருக்கிறார்.
டெல்பிக் கோயில் இன்று ஓரிரு தூண்களோடு மட்டும் காட்சி அளிக்கிறது. அன்று அப்படி இல்லை. மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே பூசாரிகள் இருக்கவில்லை. பூசாரிணிகள் தான் இருந்தார்கள். அதுவும் அழகான கன்னிப் பெண்கள். இன்னோர் சிறப்பு அம்சம்: இந்தப் பூசாரிணிகளுக்கு திடீர் திடீர் என்று சாமி வரும். வந்தால் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அப்படியே புட்டுப் புட்டு வைப்பார்கள்.
வழக்கமான கோரிக்கைகளான, அடுத்த வீட்டுக்காரனை அடக்கி வைக்க, காதல் பிரச்னைகள், காணித் தகராறுகள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க, அடிதடிகளை சுமுகமாய் முடித்து வைக்க, எதிரிகளுக்கு சூனியம் வைக்க.. என்று இப்படி வந்திருந்த ஓராயிரம் பக்தர்களின் வேண்டுதல்கள் அங்கே நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இதென்ன பெரிய விஷயம். அரசியல் பூசல்கள், போருக்குப் போக நல்ல நாள், நேரம் என்பது போன்ற பெரிய பெரிய சமாசாரங்களுக்கும் தீர்வு காண பூசாரிணிகளைத் தான் தேடி வந்தார்கள். அப்படி ஒரு கெத்தோடு வாழ்ந்தவர்கள் பூசாரிணிகள்.
சாக்ரட்டிஸ் வாழ்ந்த காலத்தில் டெல்பிக் கோயில் தலைமைப் பூசாரிணியாய் கொடிகட்டிப் பறந்தவர் பித்தியா. அழகோ அழகு. அத்தோடு அறிவும் இருந்திருக்க வேண்டும். என்னமோ தெரியவில்லை. ஒருநாள் இவர், இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை ஆண்களையும் விட சாக்ரட்டீஸ் தான் பெரும் அறிவாளி என்று அறிவிக்கப் போக, அதுவும் சாமி வந்து…
இது போதாதா? ஏற்கெனவே அஸ்பாஸியா… அஸ்பாஸியா.. என்று புகைந்து கொண்டிருந்த ஆண்கள் மனசில் இப்போ பித்தியா என்றதும் பைத்தியமே பிடித்தது போல் ஆகிவிட்டார்கள். நெருப்பு எரியத் துவங்கிவிட்டது.
இந்தக் களேபரத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
கிரேக்கத்தில் தான் முதன்முதலில் மக்களாட்சி துளிர்விடத் துவங்கியது என்கிறார்கள். அதில் சாக்ரட்டீஸின் பங்கு என்ன? தெரியவில்லை என்கிறார்கள்.
சாக்ரட்டீஸ் என்ன சொன்னார்? அறியாமை தான் ஆக மோசமான தீமை. அறிவைத் தேடுதலே ஒரே வழி.
அவரின் புகழ்பெற்ற வாசகம்: உன்னையே நீ அறிந்து கொள்.
இன்னொன்றும் இருக்கிறது: எனக்கு என்ன தெரியாது என்று கூட எனக்குத் தெரியாதே.
அவர் தான் அரசியல் தத்துவத்தை முதலில் முன் வைத்தவர் என்கிறார்கள் மேற்குலகின் அறிஞர்கள். பகுப்பாய்வு செயல்முறையை (Analytical process) அறிமுகப்படுத்தியதும் அவரே.
அவரின் பேச்சுக்களில் முரண்நகைகள் இருக்கின்றன (?) என்பார்கள் சிலர். அவரின் நான்கு கொள்கைகள்:
1. யாரும் தீமை செய்ய விரும்புவதில்லை.
2. தெரிந்தோ தெரியாமலோ யாரும் தவறு செய்ய விரும்புவதில்லை.
3. அறிவு என்பதே நேர்மை.
4. மகிழ்ச்சியாய் வாழ நேர்மை போதும்.
அறத்தான் வருவதே இன்பம் என்று அன்றே நினைத்தவர் சாக்ரட்டீஸ். அறம் பாடிய மனிதர்.
கிடைத்திருக்கும் தகவல்களின் படி, அன்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் நம்பிக்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று சொன்னவர். அவை தவறாக இருந்தால் சரியான நீதி வழங்க முடியாது என்றவர். எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கு என்பது அவரின் தத்துவம்.
பெரும்பான்மை சொல்கிறது என்பதற்காக எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்ட மனிதர். அதனால் அவர் மக்களாட்சிக்கு எதிரான கருத்துள்ளவராய் இருந்தார் என்று வாதாடுதல் அபத்தம்.
ஏதென்ஸ் நகரத்தில் இருந்த அகோரா மைதானம் விவாதங்கள், கேளிக்கைகள் அனைத்துக்கும் மய்யம். சாக்ரட்டீஸ் அங்கே வரவே கூடாது என்று தடை போட்டிருந்தார்கள். மாணவர்கள், சிஷ்யர்கள் அவரை கடைவாசல்கள், சந்துபொந்துகள் மற்றும் கைவினை வேலைத் தளங்களில் தான் சந்திக்க முடிந்தது.
இப்போ நீதிமன்ற வாசலில் நிற்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் வந்துவிட்டார். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் : என்ன குற்றம் செய்தார் என்று எதை சொல்வது? இந்த மூலையில் நின்று யோசித்தார்கள். பிறகு அந்த மூலைக்குப் போய் யோசித்தார்கள்.
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்: சாக்ரட்டீஸ், எங்கள் அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட கடவுளர்களை அவமானப் படுத்தி விட்டார். புதுசாக சில கடவுள்களை உருவாக்க முயன்றார். தவிர, நம் இளைஞர் இளைஞிகளை தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சித்தார்.
இது குற்றப் பத்திரிகையின் சாராம்சம். விசாரணை துவங்கியது. ஆரம்பமே சரியில்லை. அந்த காலத்தில், யார் பெரிசாய் சத்தம் போட்டு ரகளை பண்ணுகிறாரோ அவர் பக்கம் தான் உண்மை இருக்கும் என்று நம்பினார்கள்.
குற்றம் சாட்டியவர்கள் ஓ.. வென்று கத்தினார்கள். பக்கத்தில் ஆண்கள் கைகால்களை முறுக்கியபடி நின்றார்கள். சாக்ரட்டீஸ் பக்கம் நின்றதுவோ இளையோர் கூட்டம். தானா சேர்ந்த கூட்டம். வயசும் சின்னது. சமூகமும் அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
பிளாட்டோ தன் குருவுக்காக வாதாடத் துவங்கினார். அவர் பக்க ஆட்களில் அவர் தான் இளையவர். நீதிபதிகளுக்கு இந்த சின்னப் பையன் என்னத்தப் பெரிசாக் கிழிக்கப் போகிறான் என்று ஒரே எரிச்சல். டேய்! போய் ஒரு ஓரமா உக்காருடா என்று உத்தரவு போட்டார்கள்.
வழக்குப் போட்டவர்கள் உண்மையில் சாக்ரட்டீஸ் கதையை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கவில்லை. ஒரு பெரும் தொகையை அபராதமாகப் போடுவோம். கட்ட முடியவில்லை என்றால் ஊரை விட்டே துரத்தி விடுவோம் என்று தான் திட்டம் போட்டிருந்தார்கள்.
நீதிபதிகள் எதிர்பார்த்தது போலவே அவர் குற்றவாளி என்று முடிவெடுத்தார்கள். ஆனால் எவ்வளவு அபராதம் போடுவது என்பதில் எந்த முடிவுக்கும் வராமல்.. நேரமோ போய்க் கொண்டிருந்தது.
சாக்ரட்டீஸுக்கோ ஒரே எரிச்சல். எழுந்தார். நான் வேண்டுமானால் ஒரு 25 ட்ரெச்மா அபராதமாய்க் கொடுக்கட்டுமா? என்றார். ஒருவேளை நீதிபதிகள் சரி என்று சொல்லி இருப்பார்களோ?
தொடர்ந்தார் சாக்ரட்டீஸ்: ஆனால் ஒரு நிபந்தனை. நான் செய்திருக்கும் சேவைகளுக்கு இந்த நகரமே எனக்குக் கடமைப் பட்டிருக்கிறது. ஆகவே என் வாழ்க்கைச் செலவுகளை நகர நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெரிய குண்டாகப் போட்டிருக்கிறார்.
என்னது? நீதிபதிகள் அதிர்ந்து போனார்கள். என்ன ஒரு திமிர்! வந்த கோபத்தில் வேறு பேச்சுக்கே இடம் வைக்காமல், மரண தண்டனை விதிக்கிறோம் என்று ஒரே வரியில் முடித்து விட்டார்கள்.
சாக்ரட்டீஸ் சிறையில் அடைக்கப் பட்டார். அவர் மனைவி, சாந்திபெ குழந்தைகளோடு ஓடிவந்து கத்தினார். இருக்கும்போதே குடும்பத்தைக் கவனிக்காத சோமாரிப் பயல் நீ. நாசமாப் போ. இந்தக் குழந்தைகளோடு எப்படி வாழப் போறேனோ? என்று சொல்லியபடி, மண்ணள்ளி அவர் முகத்தில் வீசினார். சாபம் போட்டபடி திரும்பிப் போனார்.
அடுத்து, மாணவர்கள், தோழர்கள், தோழிகள் கூக்குரல் போட்டபடி ஒடி வந்தார்கள். கேவினார்கள். அழுதார்கள். நஞ்சுக்கலவை நிரம்பிய கோப்பை கொண்டு வரப்பட்டது. உடனேயே குடித்துவிடாதீர்கள் என்று சிலர் கெஞ்சினார்கள். இன்னம் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன.. என்று கூட சிலர் சோகம் தாங்கமுடியாமல் பாடியிருக்கக் கூடும். யார் கண்டார்?
சாக்ரட்டீஸின் கடைசி வசனம் என்னதாய் இருந்திருக்கும்? உன்னையே நீ அறிந்து கொள்? தப்பு. தப்பு.
கிரீட்டோ! அஸ்கிலேப்பியஸ் கடவுளுக்கு ஒரு சேவல் நேர்ந்து விடவேண்டும் என்று யோசித்திருந்தேன். அதை செய்துவிடு.
அவர் தெய்வீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒருதடவை, அவர் மாணவன் செனோபோன், ஒரு போரில் கலந்து கொள்ளட்டுமா தலைவரே? என்று கேட்டிருக்கிறார். எதுக்கும் பித்தியாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவு செய் என்றாராம் தலைவர்.
இன்னொரு சம்பவம்: இந்த பெரிக்கிள்ஸ் (நகரத் தலைவர்) இருக்கானே. அவன் பெரிய ஆள் தான். ஆனால் அவன் எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன் பிள்ளைகளுக்கு ஏன் அறிவும் இல்லை? துணிச்சலும் இல்லை? எல்லாம் கடவுள்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்று பயப்படாமல் சொல்லி இருப்பாரா?
சாக்ரட்டீஸ் சுயசரிதம் ஒன்றும் எழுதி வைக்கவில்லை. எல்லாமே அவர் மாணவர்கள் எழுதி வைத்ததில் இருந்து தான் அறிந்து கொள்கிறோம். அதிலும் பிரச்னைகள். ஆளுக்கு ஒருவிதமாய் எழுதி வைத்திருக்கிறார்கள்.
உதாரணங்கள்: சாக்ரட்டீஸ் தன் வகுப்புகளுக்கு காசே வாங்கவில்லை என்று பிளாட்டோ எழுத, சில சமயங்களில் வாங்கினார் என்று செனோபோன் எழுதுகிறார்.
வழக்கு விசாரணையின் போது, அபராதம் போடப்பட்டு, அதை ஏற்றுக் கொண்டால் நான் குற்றவாளி என்று ஆகிவிடும். அதை ஒத்துக் கொள்ளக் கூடாது. என் கொள்கைகள் பற்றி இன்னும் விளக்கம் சொல்ல இருக்கிறது என்று தான் சொன்னார். இப்படி பிளாட்டோ எழுதி இருக்க …
ஆசான் அகம்பாவத்தோடு இருந்தார். யார் சொல்லியும் கேட்கவில்லை. தவறான வாதங்கள் புரிந்தார் என்று அடுக்குகிறார் செனோபோன்.(இத்தனைக்கும் செனோபோன் வழக்கின் போது அங்கிருக்கவில்லை. யாரைக் கேட்டு அப்படி எழுதி இருப்பார்?)
பிளாட்டோ கொஞ்சம் கற்பனாவாதி. தன் சொந்தக் கருத்துக்களையும் குரு சொன்னதாக கப்ஸா விட்டிருக்கலாம் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். தவிர, அவருக்கு ஆசான் மேல் தணியாத பக்தி இருந்திருக்கிறது. அநியாயமாய் என் குருவைக் கொன்றுவிட்டார்களே என்று கடைசி வரை கோபத்தில் இருந்தவர் அவர்.
செனோபோன் ஒரு போர்வீரர் மட்டுமல்ல. வரலாற்று ஆசிரியரும் கூட. இருந்தும் பிளாட்டோவின் கூற்றுகளைத் தான் இன்றைய அநேகமான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
யோசித்துப் பார்த்தால், சாக்ரட்டீஸ் ஒரு லேசான தண்டனையோடு தப்பியிருக்கலாம். அவரின் மாணவர்களால் அதை சாத்தியமாக்கி இருக்க முடியும். இன்னொன்று: அன்று ஆட்சியில் இருந்த குழுவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெரிதாக இருக்கவில்லை.
நகரத்தின் நிர்வாகத்தில் அவரும் சிலசமயங்களில் பங்கு கொண்டிருக்கிறார். ஆனால் எப்போதும் நீதி நேர்மை என்று பேசிக் கொண்டிருந்தால் யார் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?
ஒருவேளை தப்பிப் போனால் ஏதென்ஸில் இருக்கும் தன் ஆதரவாளர்களுக்கு என்ன நேரிடும் என்பதை அவர் அறிந்தே இருந்தார். அது தன் நேர்மைக்கு இழுக்கு மட்டுமல்ல, அந்தத் துயரங்களைத் தாங்கும் மனோதைரியமும் அவரிடம் இல்லாது இருந்திருக்கலாம்.
தத்துவம் என்பதே இறப்பை நோக்கித் தன்னைத் தயார் செய்து கொள்ளும் ஓர் பாதை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம் அவர். அப்படி நினைத்திருக்கலாம்.
வேறு ஊர் போனாலும், அங்கேயும் தன் கொள்கைகளுக்கு இடையூறு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று சிந்தித்திருக்கலாம்.
நீதிபதிகளின் தீர்ப்பை, அது எவ்வளவு அநீதியாய் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்பதை மறந்து, தன் உயிர் தான் முக்கியம் என்று சாக்ரட்டீஸ் நினைத்து விட்டான் என்று எதிர்கால சந்ததிகள் தூற்றுமே, தீராப் பழியை சுமக்க வேண்டி வருமே என்று யோசித்திருக்கலாம்.
ஏதென்ஸ் நகரம் செய்த அநீதிகளுக்குப் பரிகாரமாக, அஸ்கிலேப்பியஸ் கடவுளே, உனக்கு என்னையே உயிர்ப்பலி தருகிறேன் என்றும் முடிவெடுத்திருக்கலாம். (அஸ்கிலேப்பியஸ் தெய்வம், நோய்களைக் குணமாகும் தெய்வம்.)
எப்படியோ, மனிதர் தன் வாழ்க்கையின் ஒரு நுணுக்கமான கட்டத்தை சுட்டிக்காட்ட விரும்பி இருக்கிறார் என்றே தெரிகிறது.
அவர் வாழ்க்கையில் பார்க்காத நீதிபதிகளா?
அவர் அறியாத தீர்ப்புகளா?
ஏதென்ஸ் மனிதர்களின் மனோநிலையை எடைபோடத் தெரியாதவரா அவர்?
எதற்கு, என்ன தண்டனை என்று அறியாதவரா?
எப்படி, எப்போது, எவரின் உணர்ச்சிகளைத் தூண்டினால் என்ன நடக்கும்? அதுவும் நாசூக்காக… என்று அந்த மேதைக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?
அவர் எடுத்த அந்த முடிவு.. தெரிந்தே எடுத்திருக்க வேண்டும்.
சாகாவரம் பெற்றவர்கள், சாகாவரம் பெற்றவர்கள் என்கிறார்களே, இது தானோ அது?
துணுக்குற்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் ….
கண் சிமிட்டியபடி சிரிக்கிறார் சாக்ரட்டீஸ் !
நன்றி:
1) How to Mellify A Corpse (author: Vicky Leon)
2) The Story of Philosophy: From Antiquity To The Present ((Konemann Publications)
3) Wikipedia