பைதகரஸ் சாமியார்னா சாமியார் தான். என்னா அம்சம்! என்னா அம்சம்!
நீங்களோ, நானோ இத்தாலியின் கிரோட்டோன் நகரத்துக்கு சுற்றுலா போயிருந்தால் (இப்போ அல்ல. கி.மு. 600ம் ஆண்டு வாக்கில்) …
பிறகு ஊருக்குப் போய் யாரைக் கண்டாலும் இதைத்தான் சொல்லியிருப்போம். திருப்பித் திருப்பி. அவர்களும் நம்மைக் கண்டதுமே ஒடி ஒளியப் பார்த்திருப்பார்கள். (கிரீஸ் போய் வந்தது சரி. அதுக்காக இந்தக் கடி கடிக்கணுமா?)
அவர்கள் தங்கம் போல் தகதகக்கும் பைதகரஸின் தொடைகளைப் பார்த்திருக்கிறார்களா? இல்லையே. அவரின் பேரறிவு, கடவுள் கொடுத்த வரம் என்று அவர்களுக்குத் தெரியுமா? இல்லையே. பொறாமை. பொறாமை.
கிரேக்கத்தின் சாமோஸ் தீவில் பிறந்த பைதகரஸுக்கு இளமையில் இருந்தே படிப்பில் நாட்டம் இருந்தது. எகிப்து, ஈரான் நாடுகளுக்குப் போய் தன் கணித அறிவை இன்னும் வளர்த்துக் கொண்டார்.
எகிப்தியர்களின் கணித அறிவு அவரை யோசிக்க வைத்தது. எந்த ஒரு 3:4:5 விகித அளவுள்ள பக்கங்கள் உள்ள ஒரு முக்கோணமும் செங்குத்தான முக்கோணம் (ஒரு கோணம் 90 பாகை) ஆக இருக்கிறது என்பதை மட்டும் தான் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
செங்குத்து முக்கோணங்களுக்கு, அது ஒரு உதாரணமே தவிர இன்னும் பல அளவுகள் உண்டு என்று கண்டுபிடித்தார் அவர். இன்று 10ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பைதகரஸின் தேற்றம் என்கிற இந்தக் கணித சூத்திரம் சர்வ சாதாரணமாய் இருக்கலாம்.
ஆனால் கடவுள் அருள் இல்லாமல் இப்படி எல்லாம் சிந்திக்க முடியாது என்பது அன்றைய கிரேக்கர்களின் நம்பிக்கை. அது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. செய்தி பரவப் பரவ, சூப்பர் ஸ்டார் ஆகிப்போனார் பைதகரஸ்.
அன்றைய கிரேக்கத்தின் ஆர்பிஸ்ம் (Orphism ) மத நம்பிக்கைகள் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும்: உயிர் நித்தியமானது. அழியாதது. தெய்வீகம் பொருந்தியது. மீண்டும் மீண்டும் பிறக்கும் (10 தடவை). சடங்குகள் மிக முக்கியம்.
இறந்தவர்களுக்குக் கூட மறு உலகம் போனபிறகு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று அந்த மதத்தில் அறிவிப்புகள் இருந்தன.
உதாரணமாக, அங்கே போனதும் பெர்சிபோன் (Persephone) கடவுளைக் காண்பீர்கள். அவரிடம் பெச்சிக் இருக்கிறாரே, அவர் தான் இங்கே அனுப்பினார் என்று சொல்லவும்.
தவிர, அங்கே போனபிறகு பல தடைகள் வரும். தாகம் வரும். எச்சரிக்கை: ஞாபகமறதிக் குளத்தில் மட்டும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்துவிட்டால், நான் யார்? எதுக்காக இங்கே வந்தேன்? ஒரு இழவும் புரியவில்லையே? மேலும் அஸ்கா.. பிஸ்கா.. என்று நீங்கள் உளறிக் கொட்ட வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே போன உடனேயே, அங்கே உள்ளவர்களிடம், தயவு செய்து என்னை ஞாபக குளத்துக்குக் கூட்டிப்போய், ஒரு குவளை ஞாபகத் தண்ணீர் குடிக்க விடுங்கள் என்று சொல்லவும்.
விவரங்கள் இன்னும் இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பிறகு தொடர்பு கொள்ளவும்.
இது இப்படி இருக்க, பைதகரஸ் சொந்தமாகவே ஒரு சமயம் துவங்கி அதன் ஆன்மீகத் தலைவராய் இருந்திருக்கிறார். பேர்: பைதகரீனிஸம் (Pythagoreanism).
ஆர்பிஸ்ட் காரர்களின் நம்பிக்கைகளுக்கு பைதகரஸ் காரர்கள் முன்னோடிகளா அல்லது இவர்களுக்கு அவர்கள் முன்னோடிகளா என்று இன்றும் குழப்பங்கள் இருக்கின்றன. இருக்கட்டும். நாம் பைதகரீனிஸம் பக்கம் வருவோம்.
இந்த சமயம் பற்றி அவரின் மாணவர்கள், பின் வந்த பரம்பரைகள் (பிளாட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்கள் எழுதிய குறிப்புகள்) மற்றும் மனைவி தியானோ, மற்றும் அவர் மகள்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.
நாம் இன்று காண்கிற சாமியார்களுக்கும் கணக்குக்கும் சம்பந்தமே இல்லை என்று நமக்குத் தெரியும். தவிர, அறிவுக்கும் தெய்வீகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிற அளவில் வாழ்கிறோம்.
பைதகரஸ் சாமியாருக்கு அந்தப் பிரச்னையே இருக்கவில்லை. அவர் கணிதத்திலும் குரு. ஆன்மிகத்திலும் குரு.
அவரின் சித்தாந்தம் பற்றிப் பேசுவோமா?
இந்தப் பிரபஞ்சமே எண்களின் அடிப்படையிலும் அதுவும் விகித சமன்பாடுகளிலும் அமைந்தவை. கணிதத்தின் உள்ளே ஆழமாக நுழைய, நுழைய பிரபஞ்சத்தின் கட்டமைப்பு புலப்பட ஆரம்பிக்கிறது.
மறுபிறப்பில் இருந்து விடுபடுவது தான் வாழ்க்கையின் குறிக்கோள். அதை எப்படி அடையலாம்? கடுமையான வாழ்க்கை நெறிகளை கடைப் பிடிக்கவேண்டும். எதையும் பாரபட்சம் இல்லாமல் பார்க்கும் மனோநிலைக்கு மாறப் பழக வேண்டும். அதாவது அறிவியல் ரீதியில் ஆன சிந்தனை.
கணிதம், வரைகணிதம் இரண்டுமே சுயமாகவே தெளிவானவை (self – evident). இவைகள் கடவுள்களால் அருளப்பட்டவை. கணித சூத்திரங்கள், அவற்றை நிரூபணம் செய்யும் ஆதாரங்கள் என்பன தெய்வீக வெளிப்பாடுகள்.
கிட்டத்தட்ட அவரின் 40 வது வயதில் தன் ஆன்மிக அமைப்பை சுமார் 300 பேர்களுடன் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆச்சிரமத்தில் எல்லாரும் ஒரு ரகசியக் காப்பு எடுத்துக் கொண்டார்கள்.
நம் சமயக் கொள்கைகள், அறிவியல் கோட்பாடுகள் எதுவும், அமைப்பில் இல்லாத வெளியார் யாருக்கும் சொல்லவே கூடாது. என்றென்றைக்கும் பைதகரஸ் தான் அதன் தலைவர். யாருமே புலால் உண்ணக்கூடாது .
கடவுள் தான் பிரபஞ்சத்தின் ஆதாரம் என்னும் கொள்கையில் இருந்து விலகி ஒரு சடப்பொருளை (தண்ணீரை) ஆதாரமாய் முன் வைத்தவர் அவருக்கு முன்பு வாழ்ந்த தத்துவஞானி தாலெஸ் (Thales). அவர் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை.
பைதகரஸும் கடவுள் நம்பிக்கை உள்ளவர். தண்ணீருக்குப் பதிலாய், வடிவங்கள், கணித சமன்பாடுகள் தான் பிரபஞ்சத்தின் அடிநாதம் என்று முன்மொழிந்தவர் இவர். இன்றைய அறிவியலுக்கு அடித்தளம் போட்டவர்களில் ஒருவர் பைதகரஸ் என்பது அறிஞர்களின் கருத்து.
ஆசான் நடத்திய கல்லூரியில், தத்துவம், கலைகள் எல்லாம் கலந்த இளங்கலை பாடத்திட்டம் முடிய மூன்று ஆண்டுகள் செல்லும். கணித இயல் மாணவர்களுக்கோ அது ஐந்து ஆண்டுகள்.
அவரின் அறிவாற்றல், கவர்ச்சி நிறைந்த ஆண்மை அழகு, கிரேக்கத்தின் எல்லா ஊர்களிலும் பேசப்பட்டது. மாணவர்கள் (ஆண்கள்) அவர் கல்லூரியில் சேர ஆசைப்பட்டாலும் தினமும் உடற்பயிற்சி, தாவர உணவு, கண்டிப்பான ஒழுக்க விதிகள்.. என்று போனதில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் மாணவிகள் கூடுதலாய் வந்தார்களாம். (பைதகரீனிஸம் மதத்தில் அதிகமானோர் பெண்கள்.)
வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்த அந்தக் கால சமுதாயத்தின் மத்தியில், பெண்களையும் ஆண்களுக்கு நிகராய் மதித்தவர் அவர்.
என்னால் மிருகங்களுடன் பேசமுடியும். காட்டு மிருகங்களை அப்படியே மயக்கி வீட்டிலே கொண்டுவந்து கட்டிவிட முடியும் என்று அவர் பெருமை அடித்துக் கொண்டார் என்று சில தகவல்கள் உள்ளன.
காதல் செய்வது ஒழுக்கக் கேடு என்று வாழ்நாள் பூரா விரிவுரை ஆற்றியவர். அப்படி உணர்வுகள் எழுந்தால் லிரா வாத்தியத்தை எடுத்து மீட்டுங்கள். அல்லது ஜில்லிடும் தண்ணீரில் முழுக்குப் போடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஒருநாள் விழுந்தவர் விழுந்தவர் தான்.
60வது வயசிலே காதலில் விழுந்த மனிதர் அவர். மிகமிக இளமையான பெண் தியானோ. அப்படி என்ன தான் நடந்திருக்கும்? கவிச்சக்கரவர்த்தி கம்பர் ரெண்டு வரியில் சொல்லிவிட்டாரே: அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அவ்வளவு தான். இதற்கு மேல் இதை அதிகம் நோக்கக் கூடாது.
அவர் துவங்கிய மத சடங்குகளில் எண்களுக்கு முக்கிய இடம் உண்டு. உதாரணமாய், இரட்டைப்படை எண்கள் (2,4,6….) நல்லவை என்று சொல்லப் பட்டன. ஒற்றைப்படை எண்கள் (1, 3, 5…) தீமையானவை. எண் 4 நீதியானது என்று நம்பப்பட்டது. இன்னும் பல இருக்கின்றன. எல்லாம் அவரின் நம்பிக்கை.
ஆனால் அவரின் கணித மேதமை எண்களின் விகிதங்கள், இசையின் ஸ்வரங்களில் இருக்கும் கணிதப் பண்புகள், நட்சத்திரங்கள் இடையே உள்ள தூர விகிதங்கள் என்று விரிவடைந்திருக்கிறது.
பின்னாளில் தத்துவஞானி பிளாட்டோவின் திண்மங்களின் வடிவங்கள் பற்றிய நூலுக்கு (Platonic solids) இவரின் அடிக்கோள்கள் தான் உதவி இருக்கின்றன.
அதன்பிறகு வந்த கணித வல்லுநர் யூக்ளிட் (Euclid) வகுத்த பிரபலமான, துல்லியமாக, தர்க்க ரீதியாக எட்டப்படும் முடிவு (deductive reasoning) என்னும் கணித முறைக்குப் பைதகரஸ் அறிமுகப்படுத்திய அடிப்படைக் கொள்கைகள் காரணம்.
அறிவியலில் abstract thinking இன்று என்பது அதிமுக்கியம். இந்த சிந்தனையை முதலில் பயன்படுத்தியவர் பைதகரஸ்.
இத்தனை பெருமைகள் கொண்ட கணித மேதையின் கடைசி நாட்கள் பற்றி சரியாகத் தெரியவில்லை.
அவர் வாழ்ந்த கிரோட்டோன் (Croton) நகரத்து அரசியல் கொந்தளிப்பில் கொல்லப்பட்டாரா?
அங்கிருந்து அவர் மாணவர்கள் உதவியால் தப்பிப் போய் வேறு பல ஊர்களில் அரசியல் தஞ்சம் கேட்டும் கிடைக்காமல், கடைசியில் ஒரு நகரத்தில் (Metapontum) பசி, பட்டினியால் மாண்டு போனாரா?
கலகத்தின் போது உயிரோடு இருந்த மாணவர்கள், ஆசானை இறந்துபோன மாணவர்களின் உடல்கள் மேலேயே நடக்க வைத்து தப்பிப் போக உதவினாலும், அதைப் பார்த்து, சோகம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டாரா?
கடைசியாய் அந்த Metapontum ஊரிலேயே வாழ்ந்து மறைந்தாரா?
அவர் உருவாக்கிய மதத்தில் அவரைக்காய் (fava beans) உண்ணவே கூடாது என்று தடை இருந்திருக்கிறது. தவிர அவரைக்காய் பயிரிட்டிருந்த தோட்டம் வழியாக அவர் தப்ப முடிந்திருந்தாலும், அவர் அதற்குள் போகமாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்ததால், எதிரிகள் கைகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்து கொலை செய்யப் பட்டாரா?
இந்த அவரைக்காய் தடை ஏன் வந்தது?
பைதகரீனிஸ மதத்தினரைத் தேடித்தேடி அழித்த சம்பவங்கள் வரலாற்றில் குரூரம் நிறைந்தவை. நடந்தவை கண்ணீரை வரவழைக்கும். பின்னாட்களில் பைதகரீனிஸ மதத்தை சேர்ந்த ஓர் பெண் திமிச்சா (Timycha), மற்றும் அவள் கணவன் இருவரும் இந்தக் களேபரத்தில் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார்கள்.
எதற்கு இந்த அவரைக்காய் தடை உங்கள் மதத்தில்? என்று அவர்கள் கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்கள். அவள் கணவன் கடைசிவரை சொல்ல முடியாது என்று மறுக்க, திமிச்சாவை இன்னும் அதிகமாய்க் கொடுமைகள் செய்ய ஆரம்பிக்க, அந்தப் பெண் தன் நாக்கையே கடித்துத் துப்பி இருக்கிறாள்.
அத்தனை புனிதம் கொண்ட, யாரிடமும் சொல்லக்கூடாத அவரைக்காய் ரகசியம் என்னதாக இருந்திருக்கும்?
இன்றைய அறிவியல் யுகத்திலே கூட, லோக்கல் சாமியார்கள் என்ன சொன்னாலும் நம்புவதும் நிறைவேற்றுவதும் நம் கடமை என்று நினைக்கிற ஆட்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆகவே பைதகரஸ் சாமியார் எது சொன்னாலும் அது கடவுள் வாக்கு என்று அந்தக் காலத்தில் பைதகரஸின் சீடர்கள் நம்பியத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இணையத்தைத் தோண்டத் தோண்ட, இந்த அவரைக்காய் புராணம் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆளுக்கொரு விதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அய்யா எப்படி இறந்தார்? அவரைக்காய் தடை ஏன்?
அவசரப்படக்கூடாது. பெர்சிபோன் கடவுளை சந்தித்ததும் அறிவிக்கிறோம்.
நன்றி:
1) The Philosophy Book (A Dorling Kindersley Publication)
2) Wikipedia