குடியிருந்த கோயில் படத்தில், நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார், யார்? என்று எம்ஜிஆர் பாடுவார். மற்றவர்கள் பதில் சொல்ல முடியாமல் முழிப்பார்கள். நான் ரசித்த காட்சி அது. நல்ல கேள்வியும் கூட. ஆனால் படத்தில் கடைசி வரை பதிலே இல்லை.
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முனைகிறார் பேராசிரியர், ஜான் வெஸ்டர்ஹொப் (Jan Westerhoff). அவரின் கட்டுரை என் பார்வையில்:
நான் யார் என்பது கடினமான கேள்வி தான்.
நான் என்பதற்கு என்ன ஆதாரம்? நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் இருக்கிறேன். இது பிரஞ்சு கணித இயல் அறிஞரும் தத்துவப் பேராசிரியருமான ரெனே டெஸ்கார்ட் (Renė Descartes) சொன்ன விளக்கம்.
நான் குழந்தையாய் இருந்தபோது, பிறகு பள்ளிப்பருவ வயதில், இன்னும் இளைஞன்/இளைஞி… என்று இப்படியே வயது ஏறிக் கொண்டே போனாலும், நடந்த சம்பவங்கள், என் நடத்தைகள், மற்றவர்களின் நடத்தைகள், பேச்சுகள் மனதில் இன்றும் இருக்கின்றன. நாளையும் இருக்கும். அதற்கு அடுத்த நாளும் .. இருக்கத்தான் போகின்றன.
ஆகவே இந்த நினைவுகள் ஒரு தொடர்ச்சியாகவும் மாறாமலும் இருப்பதால் நான் என்னும் நினைப்பு உண்டாகிறது. (உதாரணமாக, ஐந்து வருஷம் முன்னே இருந்த நான் தான் இப்போதும் இருக்கிறேன். இன்னும் ஐந்து வருஷம் போனாலும் அதே போலத்தான் இருப்பேன்.) இது முதலாவது காரணம்.
வெளி உலகத்தில் எப்போதுமே களேபரம் தான். ஏதோ ஒன்று ஓடுகிறதா? அழுகை சத்தமா அது? சிரிக்கிறார்களா? பலர் ஓடுகிற மாதிரி இருக்கிறதே? என்று வித்தியாசமான காட்சிகள், நடப்புகள், சத்தங்கள்… புரியாமல் தத்தளிக்கிறோம்.
நம் மூளை உதவிக்கு வருகிறது. முன்பு அது பதிவு செய்து வைத்திருந்த சம்பவங்களை இப்போது நாம் பார்க்கும், கேட்கும், நடப்புகளோடு ஒப்பிடுகிறது. ஒரு ஒழுங்கை ஏற்படுத்துகிறது.
இப்போது நமக்குப் புரிகிறது. ரயில் வண்டி ஓடுகிறது. அது நம் குழந்தை அல்லது அடுத்த வீட்டு சாத்தான். (எப்ப பாத்தாலும் முரண்டு பிடிக்கும். அழும்.) அவர்கள் எனக்குத் தெரிந்த வேலைவெட்டி இல்லாத பயல்கள். ஏதோ சொல்லிச் சிரிக்கிறார்கள். அவர்கள் அம்மா, அப்பா வேலைக்கு ஓடுகிறார்கள்… புரிகிறது.
மூளையின் உதவியால் நான் சிந்திக்கிறேன். நான் என்னும் சிந்தனை உருவாகிறது. இது இரண்டாவது காரணம்.
அடுத்து, நாங்கள் எந்த நேரமும் எதிர்வினை (reaction) ஆற்றிக் கொண்டே இருக்கிறோம். பசித்தால் சாப்பிடுகிறோம். தாகம் எடுத்தால் கோக் வேண்டாம். பெப்சி என்கிறோம். செல்போனை மீட்டுகிறோம். மயங்கிப் போகிறோம்.
அதாவது, நம் உடம்பு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனசு அதைவிட லோல் படுகிறது. ஆகவே நம் இருப்பு என்பது நம்மை
யோசிக்க வைக்கிறது. ஏதாவது செய்ய வைக்கிறது. நான் எனும் நினைப்புக்கு இது மூன்றாவது காரணம்.
கோர்க்கவோ, திரிக்கவோ?
ஒரு முத்துமாலையின் சரம் போல நான் இருக்கிறது என்று ஒரு கொள்கை உளவியலில் இருக்கிறது. அனுபவங்கள், முத்துக்கள் போல நான் என்னும் சரம் ஊடாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன என்பது இதன் பொருள்.
துக்கம், கோபம், மகிழ்ச்சி என்று இப்படிப் பல உணர்வுகள் (அனுபவக் கூறுகள்) எப்போதும் நம்மைப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன. காலம் ஓடினாலும் தாக்கம் இருக்கிறது. முத்துக்களின் தன்மைகள் எப்படி இருந்தாலும் அவை கோர்க்கப்பட்டிருக்கும் சரம் அப்படியே இருக்கிறதே. அந்த சரமா நான்? இந்த எடுத்துக்காட்டில் குறை இருக்கிறதே.
கயிறு போல நான் இருக்கிறது என்பது இன்னொரு கொள்கை. அதாவது, நான் என்பது எல்லா அனுபவங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கயிற்றின் நார்கள் போல் பிணைந்திருக்கின்றன என்பது இந்த உதாரணம். நான் என்பது எண்ணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் படிந்த அடுக்குகள்.
இந்த எடுத்துக்காட்டிலும் தவறு உண்டு. நான் யோசிக்கிறேன் என்று வைத்துக் கொண்டால், எனது ஒரு பகுதியா சிந்திக்கிறது? என் முழு மனதும் ஒருமுகமாய் சிந்திக்கிறதே. ஒரு தனி நார் கயிறாகாது. ஆகவே இந்த உதாரணப்படி, மனத்தின் ஒரு பகுதி மட்டும் சிந்திக்கிறது என்று தவறான முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.
மேல் சொன்ன, முழுமை பெறாத இரண்டு உதாரணங்களோடு திருப்திப்பட வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். உளவியல் ஆய்வுகள் கயிறு உதாரணத்தை நெருங்கித் தோன்றுகின்றன. ஆயினும் எந்த முடிவுக்கும் வந்த பாடில்லை.
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ..
நம் மூளை நம்மைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கிறது என்று மேலே கண்டோம். அதிலும் ஒரு பின்னடைவு இருக்கிறது. ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்லும் என்று நமக்குத் தெரியும்.
அப்படியானால், ஒருவர் பேசுவதற்கு வாயசைத்தால் அது நமக்கு முன்னமே தெரிய வேண்டும். அவர் பேச்சு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகவேண்டுமே. அப்படி நடப்பதில்லை. அவர் வாயசைப்பதும் சொல்லுவதும் ஒரே நேரத்தில் நமக்குத் தெரிகின்றனவே. என்ன காரணம் ?
இங்கே மூளை சிறப்பாக நாடகம் ஆடுகிறது. ஒளியை முதலில் உள்வாங்கிக் கொண்டாலும் ஒலி வந்து சேரும்வரை காத்திருக்கிறது. இந்தக் கால இடைவெளி நமக்குத் தெரியவே தெரியாது. (ஏனென்றால் நாம் மூளையை முழுதாக நம்பியிருக்கிறோம்.) பின்பு இரண்டையும் கலந்து ஒன்றாய் வெளியிடுகிறது.
மேற்படி விளக்கத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும். அதிலும் கோளாறுகள் இருக்கின்றன. Beta phenomenon என்பதை எடுத்துக் கொள்வோம். இது ஒரு நூதனமான நிகழ்வு. ஆனால் மிகவும் எளிமையான ஒரு செயல்பாடு.
ஒரு பிரகாசமான புள்ளியை ஓர் கணம் திரையில் ஒரு மூலையில் மின்ன விட்டு, அடுத்த கணம் அதன் எதிர் மூலையில் அது போல இன்னோர் பிரகாசமான புள்ளியை மின்ன விட்டுப் பார்த்தால், முதல் புள்ளி இரண்டாவது புள்ளியையே நோக்கி நகர்வது போலத் தெரியும்.
இதை மேல் சொன்ன முறையில் இப்படி சொல்லலாம். நம் மூளை இரண்டு புள்ளிகளையும் பதிவு செய்து அவற்றின் இடைவெளியில் மாயப்புள்ளிகளை உருவாக்கி முதல் புள்ளி இரண்டாவது புள்ளியை நோக்கி நகர்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. சரி. ஏற்றுக் கொள்ளலாம்.
இப்போ மின்னும் புள்ளிகளின் வண்ணத்தை மாற்றினால் என்ன நடக்கும்? உதாரணமாக, முதலில் ஒரு சிவப்புப் புள்ளி மின்னுகிறது. எதிர் மூலையில் பச்சைப் புள்ளி மின்னுகிறது. பார்ப்பவர்களுக்கு இரண்டுக்கும் நடுப் புள்ளியில் சிவப்பு பச்சையாக மாறுவது போல் தெரியும்.
கேள்வி என்னவென்றால், பச்சை நிறப் புள்ளி ஒரு தடவை மின்னி மறைந்து விட்டாலும், அது மீண்டும் தோன்றும் முன்னரே, இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டின் நடுப் புள்ளியில் இருந்து பச்சை வண்ணம் ஆரம்பிக்கிறது. மூளைக்கு, இனி பச்சை வண்ணம் தான் மின்னப் போகிறது என்று எப்படித் தெரியும்?
இதை இந்த முறையில் விளக்கலாமோ? சிவப்புப் புள்ளியை முதலில் உள்வாங்கிக் கொள்கிறது. பச்சை வரும் வரை காத்திருக்கிறது. வந்தபிறகு, இரண்டுக்கும் நடுப் புள்ளியில் இருந்து சிவப்பை பச்சையாக மாற்றி விடுகிறது. இரண்டு புள்ளிகளையும் அதன் பின்னரே அந்தந்த இடத்தில் தெரிய வைக்கிறது.
ஆனால்?… ஒரு காட்சியைத் தூண்டி உருவாக்க, ஒரு குறிப்பிட்ட கால எல்லை தேவை. அதுவும் இயற்பியல் ரீதியாக சாத்தியப்படும் கால இடைவெளிக்குள் (physically possible time interval) மட்டுமே நடந்தாக வேண்டும். இங்கே மின்னும் புள்ளிகளின் ஒளி நம் மூளையை அடைந்து அங்கே பகுப்பாய்வு செய்யப்பட்டு மீண்டும் நான் என்னும் நமக்கு மாஜிக் காட்ட மூளைக்கு அதிக நேரம் எடுக்குமே.
ஆகவே இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை.
Beta phenomenon என்பதை வேறு வழியில் தான் நாம் புரிந்து கொள்ள முடியும்.
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் …
ஒருவேளை, உலகின் நிகழ்வுகளை ஒருமுகமாக்கி, நம் மூளை ஓரே ஒரு காட்சி தான் காட்டுகிறது என்று நினைப்பது தப்போ? நம் மூளையின் நியூரான்கள் (neurons) ஒரு பொது அணியாக இல்லாமல் பல்வேறு அமைப்புகளாக செயல்படுகின்றனவா? பல்வேறு உணர்வு நிலைகள் உருவாகின்றனவா? ஒரே ஒரு மனம் என்பது தப்பான கருத்தா? வித்தியாசமான மனநிலைகள் (different mental processes) தோன்றிக் கொண்டே இருக்கின்றனவா?
பொதுவான மனம் என்று ஒன்றுமே இல்லை என்கிற முடிவுக்கு நாம் வந்துவிட்டால், Beta phenomenon நிகழ்வை விளக்க, நேரம் அது இது என்று எதுவும் தேவைப்படாது.
இதை இன்னொரு உதாரணம் மூலமும் விளக்கலாம். இந்த வசனத்தைப் பாருங்கள். அந்த மனிதர் வெளியே வந்தார், அவர் சாப்பிட்ட பிறகு.
நமக்கு சொல்லப்பட்ட வரிசை குழப்பத்தை உருவாக்கினாலும் சுதாரித்துக் கொள்கிறோம். ஏனென்றால் நமக்குக் கால வரிசை முக்கியம். முதலில் அவர் சாப்பிட்டார். பிறகு வெளியே வந்தார்.
மூளை ஒவ்வொரு சொல்லையும் கணக்கில் எடுத்து பிறகு கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தி நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. என்றாலும் …
அந்த விளக்கத்தை விட , பல நியூரான் அமைப்புகள் தோன்றி ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கிய பிறகு அப்படியே படம் காட்டுகின்றன. நாம் ஒவ்வொரு சொல்லையும் நமக்குப் புரிகிற கால வரிசைப்படி எடுத்துக் கொள்கிறோம். இப்போ நமக்குப் புரிகிறது.
உளவியல் ஆய்வுகள், இந்த விளக்கத்துக்குத் தான் ஆதரவாய் நிற்கின்றன.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…
ஒரு உளவியல் ஆய்வு நடத்தினார்கள். ஒரு தன்னார்வலர் (volunteer) கணனி முன் உட்கார்ந்திருக்கிறார். கணனியின் திரையில் 50 சிறிய பொருட்கள் தெரிகின்றன. அவர் கணனி சுட்டி (mouse) மூலம் ஒவ்வொரு பொருளாய்த் தொட்டுக் கொண்டே போகலாம். 30 வினாடிகளுக்கு ஒரு தடவை, ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தொடுங்கள் என்பார். அதைத் தொடவேண்டும்.
ஆய்வாளரும் கணனி முன் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் முன்னையவரின் அதே கணனி நிரல் தான். வித்தியாசம் என்னவென்றால், இவரால் தன்னார்வலரின் கணனி சுட்டி அசைவைத் தன் கணனி சுட்டி மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த விஷயம் முன்னவருக்குத் தெரியாது.
உதாரணமாய், ரோஜாப்பூவை ஆய்வாளர் தொடப் போகும்போது (30 வினாடிகள் முடிய ஒரு சில வினாடிகள் இருக்க) ஆய்வாளர், ரோஜாபூவைத் தொடுங்கள் என்கிறார். முதலாமவரின் திரையிலும் ரோஜாப்பூ தொடப்பட்டுவிட்டது. நினைவிருக்கட்டும். முதலாமவர் தொடவில்லை. ஆய்வாளர் தான் தன் சுட்டி மூலம் தொட்டார்.
முதலாமவரிடம் கேட்டபோது, ரோஜாப்பூ என்று காதில் கேட்டதும் நான் தொட்டுவிட்டேன் என்கிறார். அவர் பொய் சொல்லவில்லை. அவர் அப்படி நினைத்திருக்கிறார். இதில் தெரிவது: நம் மூளை, தன்னுடைய நடவடிக்கைகளை மறைத்துக் கொள்கிறது. உண்மை வேறாக இருக்க, இன்னொரு காட்சியை உருவாக்குகிறது. மூளை ஏன் பொய் சொல்லவேண்டும்?
(இந்த ஆய்வு American Psychologist,, vol 54, page 480 இல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.)
இதுவரை நாம் நம்பிக்கொண்டிருக்கும் (ஒரு) மூளை, (ஒரு)மத்திய செயல்பாட்டு அமைப்பு என்னும் கொள்கையை புதிய ஆய்வுகள் கேள்விக்குள்ளாக்குகின்றன.
வாழ்வே மாயம்?..
நியூரான் அமைப்புகள் என்பது ஒவ்வொரு கணமும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பிறகு மறைந்து விடுகின்றன. இந்தத் தொடர்ச்சி நடந்து கொண்டே இருப்பதால் இந்தக் கோர்வை நான் என்னும் மயக்கத்தை உருவாக்குகிறது.
நான் மாற்றங்கள் எதுவும் இல்லாத ஒரே ஒரு ஆள் . என் அனுபவங்கள் எல்லாம் உண்மை என்று நினைப்பது …
யோசித்துப் பார்த்தால், நான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கருத்தே சந்தேகமாக இருக்கிறது.
நான் என்பதே ஒரு மாயை . அதே சமயம், நமது வாழ்க்கைக்கு இந்த மாயை அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது.
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெலாம் சொப்பனந் தானோ? மகாகவி மட்டுமா பாடுகிறான்?
…………………………………………………………………………………..
NewScientist, 23 February 2013 இதழில் வெளிவந்த Durham பல்கலைக்கழக உளவியல், தத்துவப் பேராசிரியர், Jan Westerhoff எழுதிய கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பு மேலே.