நம் உடம்பில் இருக்கும் செல்கள் வீராதி வீரர்கள் என்று ரொம்ப காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள் உயிரியல் வல்லுநர்கள். அது மட்டுமல்ல, நம்மைத் தாக்க வரும் வைரஸ்களை விரட்டி அடிக்கக் கூடிய சூராதி சூரர்கள் என்று வேறு புகழ்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் போச்!…
அறிவியல் எழுத்தாளர், ஜெனிபர் ஆக்கர்மன் (Jennifer Ackerman) (ஆ – ச்சூ! என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி சிறந்த அறிவியல் புத்தகம் என்று பரிசு வாங்கியவர் இவர். நீர்க்கோப்பு (ஜல தோஷம்) பற்றி ஆராய்கிறது அந்தப் புத்தகம்.) தொடர்ந்து பேசுகிறார்:
ட்ரில்லியன் கணக்கில் பாக்டீரியாக்கள், மற்றும் நுண்ணுயிரிகள் (microbes) நம் உடம்பின் மேல் படிந்திருக்கின்றன. தவிர, நம் வாய், வயிறு, குடல் உள்ளே ஒரு கணக்கு வழக்கில்லாமல் ஏராளமாய் வாழ்கின்றன.
நம் உடம்பு ஒரு தனித்தீவு அல்ல. பதிலாய், நாம் சிக்கலான சுற்றுச் சூழலின் (complex ecosystem) ஓர் அங்கம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்கிறார் அவர்.
நம் உடம்பில் நம் செல்களை விட, பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன. கணக்குப் போட்டால், ஒவ்வொரு செல் தம்பிக்கும் பக்கத்தில் கூடவே 10 பாக்டீரியா அண்ணன்கள் இருக்கிறார்கள். இந்த லெச்சணத்தில் நமது செல்கள் என்று பெருமை அடித்துக் கொள்ளமுடியாத சங்கடத்தில் இருக்கிறோம்.
பாக்டீரியா அண்ணன்களும் அவர்களின் மரபணுக்களும் சேர்ந்த குழுவுக்கு மைக்ரோபயோம் (microbiome) என்று பேர். இவர்கள் நம் உடம்பில், அவர்களின் உணவுத் தேவைக்காக இருக்கிறார்கள். அதே சமயம், நமது செல்களின் நுண்ணுயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இவர்கள் நடந்துகொள்வது சிறப்பு அம்சம்.
உணவுக்காக வாழும் நம் உடலில் இந்த அண்ணன்களுக்கு காமென்சால் (commensal) என்று பேர். இந்தக் குழுக்கள் நம் வாழ்க்கைக்கு எதிரிகள் அல்ல. பதிலாய், நம் உடம்பின் முக்கிய தொழிற்பாடுகள் எந்த கசமுசாக்களும் இல்லாமல் கிண் என்று வேலை செய்ய உதவுகிறார்கள். இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து விட்ட செய்தி.
ஆய்வாளர்கள், மைக்ரோபயோம் குழுக்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ததில், புதுசு புதுசாய் ஏற்படும் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு , அளவு மீறிய பருமன் உடல்வாகு போன்ற எதிர்மறை விஷயங்களில் இதுவரை தெரியாத தகவல்கள் இப்போ தென்பட ஆரம்பித்திருக்கின்றன.
பாக்டீரியா என்றதுமே என்னமோ பேய் பிசாசுகள் போலக் கற்பனை செய்து கொள்கிறோம். பத்தோஜென்ஸ் (pathogens) என்று பொதுவாய் சொல்லப்படும் பாக்டீரியாக்கள் தான் நமக்கு எதிரிகள். அதற்காக எல்லா பாக்டீரியாக்களுக்கும் சேர்த்து ஒரே அடைமொழியா? இது ரொம்ப அநியாயம்.
நீ பாதி நான் பாதி கண்ணே..
உண்மையில் மனிதர்களின் வாழ்வு துவங்கிய அந்தக் காலத்தில் இருந்தே நமது செல்களுக்கும் மைக்ரோபயோம் குழுக்களுக்கும் இடையில் கூட்டணி உறவு மலர்ந்திருக்கிறது.
தாயின் கருப்பைக்குள் பாக்டீரியாக்களே இல்லை. குழந்தை கருப்பையில் இருந்து பிறப்புக் குழாய் மூலம் வெளியே வரும்போது வழியில் இருக்கும் காமென்சால் குழுக்கள் குழந்தையின் மேல் படிய ஆரம்பிக்கின்றன. அத்தோடு அவைகளின் பெருக்கம் துவங்குகிறது.
பிறகு குழந்தை தாயிடம் பால் குடிக்கும்போது, தந்தை மற்றும் உடன்பிறப்புகள் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும்போது, போர்வைகள், படுக்கை விரிப்புகள் என்று .. பல தரப்பட்ட தொடர்புகள் ஏற்படும்போது இன்னும் பல காமென்சால் குழுக்கள் தொற்றிக் கொள்கின்றன. நம் வாழ்வு முழுவதும் நம்மோடு கூடவே வாழ்கின்றன.
சிறப்பாக, நமது குடலிலே இவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. துளிக் கூட ஆக்சிஜின் இல்லாத, நெருக்கடி நிறைந்த குடலின் உட்பக்கத்தில் இந்த அண்ணன்கள் உருவாகி அங்கேயே வாழ்ந்து அங்கேயே மடிந்து போகிறார்கள். யார் தப்பி வாழ்கிறார்? யார் முடிந்து போய்விட்டார் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். அத்துணை சிக்கலான வடிவமைப்பு குடல்.
ஆய்வாளர்கள் இதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார்கள். பாக்டீரியாக்களின் செல்களை எடுத்து சோதனை செய்வது கடினம். அவற்றின் மாதிரி மரபணுக் கூறுகளைப் (DNA, RNA strains) பிரித்தெடுத்து ஆய்வகத்தில் ஆக்சிஜின் செலுத்தினால் என்ன நடக்கும் என்று சோதனை செய்து பார்ப்பது இலகு என்று தெரிந்துவிட்டது.
ஒவ்வொரு காமென்சால் குழுவுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. இந்த அடையாளத்தை வரிசைப்படுத்திப் பதிவு செய்து கொண்டே (sequencing) போய் ஒரு அட்டவணை தயாரித்தார்கள்.
நம் உடம்பில் எத்தனை வித்தியாசமான மைக்ரோபயோம் குழுக்கள் இருக்கிறார்கள்? எவர் எவரோடு சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறார்கள்? என்கிற கேள்விகளுக்குப் பதில் கிடைத்து விட்டது.
ஆய்வாளர்கள் அடுத்த கேள்விகளுக்கு வந்தார்கள்: எந்த பாக்டீரியாக்கள் செயல்படுகின்றன? என்னென்ன செயல்பாடுகள்? நல்ல காலமாய் மிகவும் சக்தியும் வேகமும் வாய்ந்த கணனிகள் இருந்ததில், ஒரு குழுவினர் அமெரிக்காவிலும் அடுத்த குழுவினர் அய்ரோப்பாவிலும் ஆய்வுகள் துவங்கினார்கள்.
முடிவுகள்: நம் உணவின் செரிமானத்துக்கு 20,000 – 25,000 மனித மரபணுக்கள் உதவ, அதே செயல்பாட்டுக்கு 3,3 மில்லியன்கள் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் உதவுகின்றன என்று தெரிய வந்தது. அதுவும் 1000 க்கும் மேற்பட்ட வெவ்வேறான பாக்டீரியாக்கள்!
சாப்பாடு செரிக்கிறதோ இல்லையோ, வேறு ஆச்சரியமான முடிவுகளும் இந்த ஆய்வுகளில் தெரிந்தன. ஒவ்வொரு மனிதரும் தனிப் பிறவிகள் . எந்த மனிதரின் செரிமான பாக்டீரியாக்களும் ஒரே மாதிரியாக இல்லை. அனைவருமே வித்தியாசங்கள் உள்ளவர்கள் என்று உறுதி ஆகியது – நீங்கள் இரட்டைப்பிறவியாய் இருந்தாலும் கூட.
அபூர்வ சகோதரர்கள்
ஆய்வுகளின்படி இன்னும் சில சந்தேகங்கள் எழுகின்றன. நமது உடல் நலம், நம் சில செய்கைகள், ஏன் நம் விதி கூட (நமது சொந்த மரபணுக்களை விட) மைக்ரோபயோம்களின் மரபணு வேறுபாடுகளில் தான் தங்கியிருக்கிறதோ?
நமக்கு உதவும் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் வேறு உயிரினங்களில் இருந்து வந்திருக்கலாமோ?
1980 களிலேயே, விலங்கினங்களின் குடலில் B 12 விட்டமின் இருந்தால் தான் அவற்றின் செல்களால் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்று ஆய்வுகள் உறுதி செய்திருந்தன. அதே நேரம், பாக்டீரியாக்கள் குடலில் இருக்கின்றன. செரிமானத்துக்கு உதவுகின்றன என்று தெரிந்தாலும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் தான் ரெண்டு காமென்சால் அண்ணன்கள் பற்றித் தகவல்கள் வந்தன. ஒருவர் Bacteriods thetaiotaomicron. மற்றவர் Helicobacter pylori. சின்னவர்கள் தான். ஆனாலும் சிங்கங்கள்.
முன்னவரை (ச்செல்லமாய்.. ) தேட்டா அண்ணே என்று அழைப்போமா? தாவர உணவுகளில் இருக்கும் லேசில் செரிக்காத பெரிய, பெரிய கார்போஹைட்ரேட் துணுக்குகளை அனாயாசமாய் அவரால் உடைக்க முடியும். பிறகு சிறு குளுக்கோஸ் துகள்களாகவும் மற்றும் டக் என்று உட்கிரகிக்கக் கூடிய சர்க்கரையாகவும் மாற்ற முடியும். இந்த வலிமை அவரிடம் சிறப்பாக இருக்கிறது.
இந்த விஷயத்தில் மனித மரபணுக்கள் என்ன செய்கின்றன என்று பார்த்தால் அது அவர்களால் செய்யவே முடியாத வேலை என்று தெரிய வந்தது.
தேட்டா அண்ணன்கள், சுமார் 260 வகையான நொதிகளைக் (enzymes) கைவசம் வைத்திருப்பதால் அவர்களின் வேலை சுலபம் ஆகி விடுகிறது. (நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கும் ஒரு வேதிப் பொருள்.) நாம் உண்ணும் மாவு ப்பொருள் உணவுகள், பழவகைகளில் இருந்து வைட்டமின்களை உறிஞ்சி எடுக்க இந்த நொதிகள் அவசியம் தேவை.
நான் அவனில்லை
இனி பைலோரி அண்ணன்கள் (Helicobacter pylori) கதை.
மிதமிஞ்சி, நோய் கொல்லிகளை (antibiotics) உட்கொண்டால் வயிற்றுப் புண் வரும் என்று ஆரம்பத்தில் நம்பிக் கொண்டிருந்தார்கள். அதுவும் NSAIDS போன்ற மருந்துகளால் இன்னும் ஆபத்து உண்டாகும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கவில்லை.
1980 களில், பைலோரி அண்ணன்கள் தான் வயிற்றுப் புண்ணுக்குக் காரணம் என்று அறிவிப்பு வெளிவந்தது. ஆகவே அதற்கு ஏற்றபடி, சில குறிப்பிட்ட நோய் கொல்லிகளை, நோயாளிகளுக்குக் கொடுத்ததில் குறைந்தது 50 விழுக்காடு நோய் தணிந்தது.
அண்ணன்கள் மோசமான ஆட்கள்? பொறுமை. பொறுமை.
1998 களில் ஓர் உயிரியல் ஆய்வாளர், நான் 25 ஆண்டுகளாக இந்த பாக்டீரியாவைக் கவனித்து வந்திருக்கிறேன். இவர்கள் ஒரு வகை பத்தோஜென் (எதிரிகள்) என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் அவர்கள் ஒரு காமென்சால் (நண்பர்கள்) என்று அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் தகவல்கள்: அண்ணன்களுக்கு அமிலங்கள் நிறைந்த நீச்சல் குளம் என்றால் ரொம்பப் பிடிக்கும். குடலின் உள்ளே இருக்கும் பல வகையான அமிலங்களை அவற்றின் செறிவு அளவு மீறிப் போகாமல் கட்டுப்படுத்துவதில் இவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
உதாரணமாக, அண்ணன்களின் மரபணுவில் இருக்கும் ஒரு திரிபு (strain) தான் அமிலங்களைக் கட்டுப்படுத்தும் புரதங்களை உருவாக்குகிறது. இந்தத் திரிபு சில மனிதருக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது. அதன் விளைவால் அந்த மனிதர்களுக்கு வயிற்றுப் புண் வருவதில் ஆச்சரியம் இல்லை.
இருக்க, அண்மையில் கிடைத்த இன்னொரு தகவல்: இரண்டு ஹார்மோன்களை இவர்கள் உற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருவர் பேர் கிரேலின் (Ghrelin). பசியைத் தூண்டுபவர் இந்த கிரேலின் என்றால் சாப்பிட்டது போதும். இனி தாங்காது என்று சிக்னல் கொடுக்கிற ஹார்மோன் பேர் லெப்டின் (Leptin).
கிரேலினும் லெப்டினும் நம் குடலில் சுரக்காவிட்டால் என்ன நடக்கும்? நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.
ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் 92 பேரை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு சோதனை நடத்தினார்கள். பைலோரி அண்ணன்களை முழுதாகவே காலி பண்ணும் நோய் கொல்லி மருந்துகளை ஒரு குழுவுக்குத் தொடர்ந்து கொடுத்தார்கள். மருந்து சாப்பிட்டவர்கள் எப்போ பார்த்தாலும் பசிக்கிறது என்றார்கள். எது கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். மற்றவர்கள், என்னடா இது? என்று ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பசங்க
இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அமெரிக்காவின் 80 சத வீதமான மக்களுக்கு இந்த காமென்சால் பாக்டீரியாக்கள் (பைலோரி அண்ணன்கள்) அவர்கள் உடம்பில் இருந்திருக்கிறது. இன்று 6 சத வீதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது.
பெருவாரியான அளவில் மக்கள் நோய் கொல்லி மருந்துகளை உட்கொள்வதால் உடலில் இருக்கவேண்டிய நுண்ணுயிர்களின் அளவு குறைந்துவிட்டது.
இன்னொரு காரணம் சிசேரியன் முறையில் நடக்கும் பிரசவம். இயற்கையான முறையில் பிறப்புக் குழாய் வழியாக வரும்போது காமென்சால் பாக்டீரியாக்கள் குழந்தை மேல் படிகின்றன என்று குறிப்பிட்டோம். இந்தப் பாக்கியம் சிசேரியன் வழி குழந்தைகளுக்கு மறுக்கப்படுவது இன்னோர் காரணம். (சிசேரியன் முறைப் பிரசவங்கள் அமெரிக்காவில் 30 விழுக்காடு. ஒரு குழந்தை பெற மட்டுமே அனுமதியுள்ள சீனாவில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு.)
வைரஸ்களை அழிக்கவேண்டும் என்பது நல்ல நோக்கம். அதற்காக குழாயில் வரும் குடிநீரில் நுண்ணுயிர் கொல்லிகளை ஏகப்பட்ட அளவு கலந்து விடுகிறார்கள். விளைவு: எல்லார் உடலிலும் இருக்கவேண்டிய நுண்ணுயிர்களின் அளவு குறைகிறது அல்லது இல்லாமலேயே போய் விடுகிறது. இதுவும் ஒரு காரணம்.
15 வயதுக்கு மேற்பட்ட இளந்தலைமுறையினரில் பெருவாரியானோர் Otitis media என்கிற காதில் ஏற்படும் அழற்சித் தாக்கத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அடுத்து பருமனான உடல்வாகு. இவ்வகை உடல்நலக் கேடு, குறைபாட்டுக்கும் பாக்டீரியாக்களின் பற்றாக் குறைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிகின்றன.
புரியாத புதிர்
இந்த இரண்டு நுண்ணுயிர்களையும் ஆகா..ஓகோ என்று இதுவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறோம்.
இருந்தும் ஓரு கேள்வி. நம் சொந்த செல்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் கவனமாகவும் தீவிரமாகவும் செயல்படுத்துகின்றன என்றால் நுண்ணுயிர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று எப்படி அவை கண்டு பிடிக்கின்றன?
அல்லது நம் செல்களுக்கும் வெளியில் இருந்து வந்து குடியிருக்கப் பார்க்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையில் யுத்தம் இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கிறதா?
அதுவும் குடல் உறுப்புக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு சலுகை?
இது வரை பதில் இல்லை.
ஆறு மனமே ஆறு
நம் நோய் எதிர்ப்பு சக்தி இன்றைய நிலையை அடைய சுமார் 2 லட்சம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த இடைவெளியில் எத்தனையோ தவறுகள், சீரமைப்புகள் என்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிச்சயம் நேர்ந்திருக்கும்.
தீவிரமாகவும் செயல்பட முடியாது.(உணர்ச்சி வேகத்தில் சொந்த உறுப்புகளையே (திசுக்களை) வெட்டித் தள்ளியிருப்பார்கள்.) சாந்தமாக இருக்கவும் முடியாது. (பத்தோஜென்கள் சீவித் தள்ளியிருப்பார்கள்.)
உதாரணமாக, நம் உடம்பில் இருக்கும் T – செல்களை எடுத்துக் கொள்வோம். பத்தோஜென்கள் நம் உடம்பில் ஊடுருவிக் கொண்டே இருக்கிறார்கள். பலத்த சேதம் உண்டாக்குகிறார்கள். அதன் விளைவு: உடம்பில் வீக்கம், சிவப்பு நிறத்தில் தோல் நிற மாற்றம், உடல் வெப்பம் கூடுகிறது. காய்ச்சல் அது இது என்று பலவித உபாதைகள் ஏற்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி, T – செல்களை உருவாக்குகிறது. இவர்கள் பத்தோஜென் பயங்கரவாதிகளோடு சண்டை போட்டு ஊடுருவலை முறியடிக்கிறார்கள். வெற்றிக் கொடி நாட்டினாலும் அவர்களின் கோபம் அடங்குவதில்லை. வெறியோடு நம் சொந்த திசுக்களையே அழிக்கப் பார்க்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அடுத்த கட்டளை பறக்கிறது. உடனடியாய் T – ஒழுங்கு செல்களை (T – regulatory cells) உற்பத்தி செய்து அனுப்புங்கள். இந்தப் பயல்களை அடக்க வேண்டி இருக்கிறது. அவசரம். அவசரம். (இந்த செல்கள் மிலிட்டரி போலீஸ் மாதிரியான செல்கள்.)
இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கிற நேரத்தில், ஓர் புது அண்ணன் களத்துக்கு வருகிறார்.
சிங்கம் 3
1990 களில் நடந்த ஆய்வுகளில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு T – ஒழுங்கு செல்களை உருவாக்கம் செய்ய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊக்கம் கொடுக்கிறது என்று கண்டு பிடித்தார்கள். இந்த மூலக்கூற்றை சுமந்து வரும் பாக்டீரியாவின் பேர் B – fragilis. இந்த பிராகி அண்ணன் வித்தியாசமானவர். சுமார் 70-80 சத வீதமான மக்களின் உடலில் (குடல் பகுதியில்) இந்த அண்ணன் இருக்கிறார்.
நோய் எதிர்ப்பு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இந்த அண்ணன் பற்றித் தெரிந்தே இருக்கிறது. இவரை ஒன்றும் செய்யக்கூடாது என்று T – ஒழுங்கு செல்களுக்கு கட்டளை கொடுக்கப் பட்டிருக்கிறது. அதே நேரம் குறிப்பிட்ட மூலக்கூறு இல்லாத இந்த வகை பாக்டீரியாக்களை மிலிட்டரி T – செல்கள் அழித்துவிடுகின்றன.
இந்த அண்ணன்களும் மிகவும் குறைந்து போய்விட்டார்கள். நம் உடலில் இவர்கள் சுமந்து திரியும் மூலக்கூற்றின் பற்றாக் குறையால் multiple sclerosis, (மூளை மற்றும் முள்ளந்தண்டு பாதிப்பு) diabetes type 1 (சர்க்கரை வியாதி) இவைகள் 7 -8 மடங்குகள் அதிகமாகிவிட்டன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
மேலே குறிப்பிட்ட அதே காரணிகளால் இந்த பாக்டீரியாவும் மற்ற இரண்டு பாக்டீரியாக்கள் போல அழிந்து கொண்டிருக்கின்றன. நம் வாழ்க்கையை நாமே அழித்துக் கொள்கிறோமா?
இன்னும் விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் …
தொடர்புகள்.. தொடர்புகள்.. என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது நோய்களுக்கும் பாக்டீரியாக்களுக்கும் உள்ள தொடர்புகள் தெளிவாகவே தெரிந்தாலும் எது முதலில் வந்தது என்று அறுதியிட்டு அவர்களால் சொல்ல முடியவில்லை.
உதாரணமாக, மேலே சுட்டிக்காட்டிய பாக்டீரியாக்களின் பற்றாக் குறையால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதா?
அல்லது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விட்டதால் இந்த பாக்டீரியாக்கள் நம் உடலில் அருகிப் போய்விட்டனவா?
எது உண்மை?
முதலாவது தான் உண்மை என்கிறார் ஒரு ஆய்வாளர். இருந்தாலும் அதை நிரூபிக்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
தவிர, இப்போது மூன்று பாக்டீரியாக்களை மட்டுமே யார் அவர்கள் என்று கண்டு பிடித்திருக்கிறோம். இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ? நம் முன்னே இருக்கும் பெரும் சவால் அது என்கிறார் அவர்.
ஆயிரக்கணக்கில் வெவ்வேறான பாக்டீரியாக்கள் நம் செரிமானப் பாதையில் குடியிருக்கின்றன என்று ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.
பதில்கள் வந்து சேர எத்தனை நாள் ஆகுமோ? பேசாமல் சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாகக் கேட்டுவிடுவோமா?
அண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா?
…………………………………………………………………
Scientific American, June 2012 இதழில் Jennifer Ackermann எழுதிய கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பு இது.