நான் என்று நினைக்கும்போது அது நான் மட்டும் தான் வேறு யாரும் அல்ல என்று நினைப்பது பெரும் முட்டாள்த்தனம். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சிந்திக்கும்போது தான் நான் என்னும் சுய உணர்வு தோன்றுகிறது என்கிறார் மைக்கேல் பாண்ட் (Michael Bond ).
ஏற்கெனவே, நான் யார் என்கிற கட்டுரை ஒரு விதமாய்ப்
பயமுறுத்த, மைக்கல் இன்னொரு விதமாய் மிரள வைக்கிறார்.
நம் கடந்த கால நினைவுகள் அடுக்குகளாய் நம் மூளையில் குவிகின்றன. அந்தக் களஞ்சியத்தில் இருந்து தான் இது நான், அது மற்றவர்கள் என்னும் வித்தியாசங்கள் தோன்றி, அதன் விளைவாக நான் என்கிற சுய உணர்வு தோன்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்தோம். கவலை இருக்கவில்லை.
உளவியல் ஆய்வாளர்கள் மத்தியிலே இப்போது ஒரு புதுசாய் ஒரு சித்தாந்தம் உலாவிக் கொண்டிருக்கிறது.
அதாவது, ஓர் இரண்டு மாதக் குழந்தை முதன் முதலாக சிரிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பெற்றோருக்கு வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அட .. அட.. என்னா அழகு… அழகு என்று மாய்ந்து போவார்கள்.
ஆனால் குழந்தை சிரிக்கிறதா? அது உண்மையில் பிட் அடிக்கிற வேலையை அதன் ஆரம்ப காலத்திலேயே துவங்கி விடுகிறது. அம்மா, அப்பாவின் முகம் பார்த்து அந்தந்த முகபாவங்களை அப்படியே காப்பி அடிக்கிறது. (கவனிக்கவும்: அம்மாவோ, அப்பாவோ பொதுவாக சிரித்தபடி தான் குழந்தையைப் பார்ப்பது வழக்கம்.)
இதில் இன்னோர் நுணுக்கமும் இருக்கிறது. மற்றவர்களின் உணர்வுகளுடன் குழந்தை தன்னையும் இணைத்துக் கொள்கிறது. அன்பு, அனுதாபம் என்கிற உணர்வுகள் அதன் மனதில் பதிவது மட்டுமல்ல. அதற்கு மேலே..
Empathy என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன? (பச்சாத்தாபம் என்கிற சொல்லில் இது அடங்காது.)
அந்தச் சொல்லை இப்படி விளக்கலாம். சக மனிதர்களின் சூழ்நிலையில் தன்னை நிறுத்திப் பார்ப்பது. அந்த சூழ்நிலையில்நான் இருந்தால் எப்படி உணர்ந்திருப்பேன்? அவர்களுக்கு ஏற்படும் வலியை, துன்பத்தை எப்படி நான் அனுபவித்திருப்பேன்? அவர்களுக்கு வரும் மகிழ்ச்சி, இன்பம் எப்படி
இருந்திருக்கும்? இப்படி எல்லா உணர்வுகளையும் கற்பனை செய்து பார்க்கும் மனோநிலையை இந்தச் சொல் குறிக்கிறது.
அதே குழந்தையைப் பார்த்து அழுது பாருங்கள். அழும். சிரித்துப் பாருங்கள். சிரிக்கும். சத்தம் போட்டுப் பாருங்கள். அதுவும் சத்தம் போட முயற்சிக்கும். பிட் அடிப்பது தப்பே இல்லை. அது அவசியம். Empathy.
The Self Illusion நூலில் அதன் ஆசிரியர், Bruce Hood இப்படி சொல்கிறார்: நாம் எல்லாருமே மற்றவர்களுடன் தொடர்புடன் இருக்க விழைபவர்கள். இந்த விருப்பு அல்லது ஏக்கம் எல்லாரின் ஆழ்மனதிலும் ஊன்றியிருக்கிறது. நாம் யார் என்று அறிந்து கொள்ள இந்த மனத் தூண்டல் உதவுகிறது.
Michael Lewis என்கிற இன்னோர் உளவியலாளர், ” நான் என்கிற தன்னுணர்வு (self ) இல்லாமல் உங்களோடு தொடர்பு கொள்ள முடியாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் யார், உங்களின் தரவுகள் என்ன என்று பல தகவல்கள் தேவைப்படுகின்றன. நான் யார் என்று தெரிந்தால் தான் அந்தத் தகவல்களை என்னால் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆட்டிஸம் (Autism) குறைபாடு உள்ளவர்களை சோதனைகள் செய்தபோது இந்த அனுமானத்துக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. (ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றவர்களின் முகபாவங்களைப் புரிந்து கொள்வது இயலாத காரியம்.) இதுவே அவர்களின் நான் என்கிற தன்னுணர்வுக்குத் தடையாக இருக்கிறது.
அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருந்து வளர, வளர (சிகிச்சைகள் மூலம்) தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து ஓரளவு சில முகபாவங்களைப் புரிந்து கொள்கிறார்கள். தவிர, அவர்கள் வாழ்க்கையின் ஒரு சில சம்பவங்களையாவது நினைவில் வைத்திருக்கிறார்கள்.
சோதனைகளில், அவர்களின் மூளையின் ஒரு பகுதியின் செயல்பாடுகள் (prefrontal cortex) சாதாரண ஒருவரை விட, மிகவும் மங்கலாக இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
உளவியலாளர் (Antonio Damasio) சொல்கிறார்: நான் என்று ஒரு தனித் தீவு போல் மற்றவர்களிடம் இருந்து பிரித்துச் சொல்வது சரியாக இருக்காது. என்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன் என்று சொல்வது தான் சரி.
நானாக நான் இல்லை தாயே..
அடுத்து எவ்வகையான சமூகத்தில் வாழ்கிறேன் என்பதைப் பொறுத்தே நான் என்பது அமைகிறது என்கிறார் இன்னோர் ஆய்வாளர், Richard Nisbett (The Geography of Thought நூலாசிரியர்)
அய்ரோப்பிய, சீன மக்களிடம் இவர் நடத்திய ஆய்வுகளில் இருந்து:
கிழக்கு ஆசிய மக்கள் எந்த நிகழ்வையும் அந்தந்த சூழலின் அடிப்படையில் பார்ப்பது வழக்கம். அதாவது ஒவ்வொருவரும் அந்த சமுதாயத்தின் இன்னொருவர் இதே விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார், எதிர்வினை ஆற்றுவார் என்று ஒப்பு நோக்கி செயல்படுகிறார்கள். அந்த எதிர்வினையில் சமுதாயத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள், வரலாறு எல்லாமே கலந்திருக்கும்.
அய்ரோப்பிய மக்கள் முதல் வேலையாக அந்த நிகழ்வை அப்படியே பிரித்தெடுத்து விடுவார்கள். அது எனக்கு லாபம் தருமா, நஷ்டம் தருமா என்று கணக்குப் பார்த்து (சொந்த நலன்) செயல்படுவது அவர்கள் வழக்கம்.
ஜப்பான் நாட்டவர்கள், அந்தந்த நிகழ்வுக்கேற்றபடி தம் செயல்பாட்டை மாற்றிக் கொள்வதில் சமர்த்தர்கள். இதில் அவர்களின் நான் எனும் உணர்வு தளர்வடைந்து போவதைக் கவனிக்கலாம்.
இந்த வகை வேறுபாடுகள் குழந்தைப் பருவத்தில் இருந்தே தென்பட ஆரம்பித்து விடுகின்றன. அதாவது நான் எனும் நினைப்பு கீழை நாட்டுக் கலாசாரங்களில் சுதந்திரமாக செயல்படுவதில்லை.
ராஜா என்பார் மந்திரி என்பார்..
நான் என்று சொல்லும்போது கூடவே பல அடைமொழிகள், தகுதிகள், பெருமைகள் என்று வருகின்றன. நான் படித்தவன், கல்யாணம் முடித்தவன், இந்த ஊர் அல்லது அந்த ஊரைச் சேர்ந்தவன் என்று என்ன சொல்லிக் கொண்டாலும் அவை அந்தந்தக் கலாசாரத்தில் கட்டமைக்கப் பட்டவையே தவிர வேறல்ல.
எல்லாக் கலாசாரங்களுக்கும் உள்ள ஒற்றுமை: மனிதர்களின் குணநலன்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்தெந்தக் கலாசாரத்துக்குள் நாம் போகிறோமா, அதை அப்படியே காப்பி அடித்து அவர்களுக்குள் புகுந்து வாழ்கிறோம். நான் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது.
இந்தியர்களைக் கவனியுங்கள்: நீ எந்த ஊர்? (பேரை விட ஊர் முக்கியம்.). அந்த ஊரில் அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா? இன்னாரை எனக்குத் தெரியுமே? உனக்குத் தெரியாதா? இப்படிப் போகும். ஏதாவது ஒரு ஒற்றுமையைக் கண்டு பிடிக்கப் படாதபாடு படுவார்கள். கண்டு பிடித்தால் தான் நிம்மதி.
ஜெர்மனி நாட்டில் ஹலோ மட்டும் தான். எல்லாருக்கும் அவரவர் வேலை தான் முக்கியம். சும்மா பேசிக்கொண்டிருக்க என்ன பைத்தியமா?
இன்னும் மேலே, பின்லாந்து போனால் ஹலோவும் இருக்காது. முன்னால் ஒரு ஆள் நிற்கிறாரே என்கிற நினைவும் இருக்காது. தனிமை தான் இனிமை.
இந்த சமூக நான் (social me) என்பதற்கு ஆதாரங்கள் பெருகினாலும் அது நமக்கு நன்மைகள் தருகின்றன என்று சொல்வதற்கில்லை.
ஆய்வாளர், Susan Blackmore சொல்வது இன்னும் பயத்தை உண்டாக்குகிறது:
நான் எனும் தன்னுணர்வு, நம் தொடர்புகளின் நேரடி விளைவாக இல்லாமல் ஒரு துணை விளைவாகக்கூட (by-product) இருக்கலாம் என்கிறார் அவர். துரதிர்ஷ்ட வசமாக, அதனோடு சில தேவையில்லாத தொந்தரவுகளும் நம்மோடு தொற்றிக் கொள்கின்றன என்று அடுத்த குண்டையும் போடுகிறார் அவர்.
உதாரணமாக, நான் என்பது தோன்றும்போது நம் மூளை நரம்புகள் அளவு மீறி நம்மை நொந்து போகச் செய்து அல்லது துக்கத்தில் ஆழ்த்தி நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணங்களை அழித்துவிடுகின்றன.
நான் என்பது மூளை உருவாக்கும் ஒரு பொய் என்று ஒரு பகுதி சொல்கிறது.
அது தொடர்ந்து மின்னும் நரம்புகளின் மின்தூண்டல்களில் உண்டாகும் ஓர் மாயவலை என்று இன்னோர் பகுதி சொல்கிறது.
நான் என்பது உருவாக சுற்றி இருக்கும் சமூகம், நிகழ்வுகள் தேவை. இல்லாவிட்டால் நான் என்பதே இல்லை என்று இன்னோர் பகுதி சாதிக்கிறது.
நான் என்பது ஓர் நேரடி விளைவு அல்ல. அது ஓர் துணை விளைவாகக் கூட இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்புகிறது இன்னொரு குழு.
நான் என்பதே ஓர் மயக்கமோ?
மெல்ல மெல்ல மாறினேனா… வாணி ஜெயராம் பாடலில் மயங்குவதைத் தவிர வேறு வழி ?
………………………………………………………………………………………………..
New Scientist, 23 February 2013 இதழில் Michael Bond எழுதிய கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பு மேலே.