முதலாளித்துவம் எல்லாவற்றையும் விழுங்கிய பின் தன்னைத்தானே விழுங்க ஆரம்பிக்கும். அதன் முடிவு நரகம் தான். அப்போது கூட, அதன் பசி தீராமல் , மயக்கத்தில் தள்ளாடித் தள்ளாடி…
– பேராசிரியர் ஸ்ட்ரேக்
தொடர் 3
(நூலின் கடைசி அத்தியாயத்துக்கு வந்திருக்கிறோம். பேராசிரியர் இத்தாலி, கிரேக்கம், ஒன்றிய நாடுகள் என்று விலாவாரியாய் அந்தந்த நாடுகளின் பொருளாதார சிக்கல்களையும் தவறுகளையும் விவரித்துக் கொண்டு போகிறார். இங்கே அவை தவிர்க்கப் பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் நூலை வாங்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அவரின் கருத்துக்கள் மட்டுமே இந்தத் தொடர்களில் சொல்லப்படுகின்றன.)
பொருளியல் என்று வரும்போது மேற்கு நாடுகளில் முதலாளித்துவமும் ஜனநாயகமும் கணவன் மனைவி போல் நடந்து கொள்கின்றனவே. இது பெரிய விஷயம் இல்லையா?
இது ஒரு கட்டப் பஞ்சாயத்து திருமணம் என்கிறார் பேராசிரியர். வெளி அழுத்தங்களினால் ஏற்பட்ட ஒருவித சமரசம்.
வலிமை மிக்க உழைக்கும் வர்க்கமும் பலவீனமான முதலாளி வர்க்கமும் தற்காலிகமாக செய்து கொண்ட ஒரு உடன்பாடு. இதில் ஓர் மறைமுக நோக்கமும் உண்டு. ஒன்றை ஒன்று தாங்கிப் பிடித்து ஆதாரமாய் இருக்கும் அதே சமயம் வீழ்த்திவிடவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
கடந்துபோன வரலாற்று நோக்கில் பார்த்தால்: வாழ்க்கைத் தரத்தில் படிப்படியாய் முன்னேறிவிடத் துடிக்கும் சிந்தனைப் போக்குக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் அவசர அவசரமாய் ஏற்பட்ட காதல்.
இன்றைய நோக்கில், தொழில்நுட்ப அறிவு மூலம் இயற்கையை வளைத்து அதன் வளங்களைக் கையகப்படுத்தும் ஆசைக்கும் அதே சமயம் தனிமனித சுதந்திரம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் ஆசைக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கும் நடுவில் நடக்கும் ஒரு கிச்சு கிச்சு.
முதலாளித்துவ சமூகத்துக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கும் உள்ள எல்லைக்கோடு எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. (ஒரே மாதிரி தான் என்று நாம் நினைக்கிறோம். அப்படி அல்ல.)
உறவுகள் ஒரு தொடர்கதை
சமூகம் எப்போதுமே உற்பத்தி, பொருள், சேவைகள் பரிமாற்றத்தில் ஒரு சிறப்பான ஒரு தொடர்பைக் (உறவுகள்) கொண்டிருக்கும். அது மட்டுமல்ல, பொருளியல் அல்லாத செயல்பாடுகளிலும் எதிர்வினை ஆற்றும்.
ஆகவே முதலாளித்துவமும் மாறாத, அசைவற்ற ஒரே சமநிலையைக் கொண்டிருக்காது. அதை வரலாற்றின் சமூக மாற்றங்கள் ஊடாகப் பார்க்க வேண்டும்.
முதலாளித்துவத்தின் நான்கு தன்மைகள்:
- முதலாளித்துவம் எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் ஒரு நிலையற்ற அமைப்பு.
- பொருள்கள், சேவைகளுக்கு எங்கெங்கே கிராக்கி உருவாகிறதோ அங்கே தோன்றும் கற்பனைகள், செய்திகள், கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்க ரீதியான, ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில் தந்து அங்கேயே ஒரு அரசியல் அமைப்பாக, தன் ஆளுமையை அமைத்துக் கொள்கிறது.
- அது ஒருவித பதற்ற நிலையில் வாழ்கிறது. அறநெறிகள் சார்ந்த பொருளியலா அல்லது பொருளீட்டலுக்கான பொருளியலா என்கிற (மக்களின் நலமா? முதலாளிகளின் லாபமா?) குழப்ப நிலை.
- பெண்களின் வாழ்வியலில் ஊடுருவி அது தான் வாழ்க்கை (முதலாளித்துவம்) என்று நம்பவைக்கிறது. அவர்களையும் வேலைக்கு வாங்களேன் என்று அழைக்கிறது (குறைந்த சம்பளம்). வேலைக்காகப் போட்டி போட வைக்கிறது. குழந்தைப் பேறு, வளர்ப்பு எல்லாவற்றிலும் தன் விருப்பங்களைத் தந்திரமாகப் புகுத்துகிறது. குடும்பத்தையே சந்தைக்கு ஏதுவாக மாற்றுகிறது.
வளர்ச்சி எனும் கிளர்ச்சி
வளர்ச்சி தான் முதலாளித்துவத்தின் ஒரே மந்திரம். மனிதர்களை எப்போதும் போட்டி மனப்பான்மையில் வைத்திருக்கிறது. பயம், பொறாமை, பேராசை இவை இருந்தே ஆகவேண்டும். இவை நிலைக்கும் வரை அது வாழும்.
நிம்மதியே இல்லாத வாழ்க்கை, எதிலும் நிச்சயமற்ற நிலை இவை தான் முதலாளித்துவம் நமக்குத் தரும் பரிசு.
இன்னொன்று: கடன். நாளைக்குக் கிடைக்கப் போகும் பொருள்கள், சேவைகளுக்காய் இன்று ஏன் நீங்கள் கடனாளியாகக் கூடாது? விதம் விதமான கடன் அட்டைகள் தந்து உங்களை மகிழ்விக்க நாம் நினைக்கிறோமே. அது தப்பா?
வங்கியாளர்கள் இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார்கள். நாளைக்குக் கிடைக்கப் போகும் பெரும் ரொக்கப் பணத்துக்காக ஏன் இன்று பணம் தரக்கூடாது?
சமூகவியல் விஞ்ஞானிகள்
ஏன் இவர்களை சமூக விவாதங்களில் காணமுடியவில்லை? பொருளியல் சமூக அறிவியல் அல்லவா? மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள் என்பதால் தயங்குகிறார்களா? பேராசிரியர் ஒரே போடாகப் போடுகிறார்.
இயற்பியல் மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள சாதகமான, கவரும் அம்சங்கள் பொருளியலில் இல்லை தான்.
மற்ற துறைகள் போல் ஒரு நேர்கோடாகவோ அல்லது படர்ந்து விரியும் அறிவுச் சேர்க்கை போலவோ ஓர் கோர்வை போல பொருளியல் துறை வரலாற்றில் வந்ததே இல்லை. இனியும் வரப் போவதில்லை.
தற்செயலாகத் தோன்றிய ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணிகள் மூலம் சில கோட்பாடுகள் பெரும் உருவமாய்ப் பெருக்கெடுத்து அதுவே சிலகாலம் ஆளுமை பெற்று, பின்னர் திடீரென்று வீழ்ந்து இன்னொன்றில் தாவி எதுவும் தீர்க்கமாய் சொல்லமுடியாத ஒரு குழப்ப நிலையில் தான் பொருளியல் வரலாற்றில் நகர்ந்திருக்கிறது. எந்தப் பொருளியல் கோட்பாடும் வரலாற்றில் நின்று பிடிப்பதில்லை. பொருளியல் கவர்ச்சிகரமாய் இல்லாமல் போனதற்கு இது காரணமோ?
இன்னொன்றும் உண்டு: சமூக விஞ்ஞானிகள் எப்போதும் விளிம்புநிலை மனிதர்களை ஆய்வு செய்வதில் (புலம் பெயர்ந்தோர், அகதிகள், போதைப் பொருள்களுக்கு அடிமையானோர், குற்றவாளிகள், சட்டவிரோதிகள், வேலையற்றோர்) அதிக ஆர்வம் காட்டுவதால் பெருவாரியான மக்கள் போரடித்துப் போனார்களோ?
தவிர, மேற்படி ஆட்களிடம் ரொம்ப அனுதாபம் காட்டுவதால் பொது மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்களா?
மென்மையான ஒரு துறை (soft science) என்பதால் வரவேற்பு இல்லையா? மற்றதுகளில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதால் ஈர்ப்பு அதிகமோ?
உண்மை தான். பொதுமக்களுக்கு இதில் சுவாரஸ்யம் குறைந்து விட்டது. இணையங்கள், வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் பரபரப்பான, ஜிகுஜிகு செய்திகளுக்கு மட்டும் முன்னிடம் தருகின்றன. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை மட்டும் வடிகட்டித் தருகின்றன.
சமூக விஞ்ஞானிகள் பொருளியலை அனாதை ஆக்கி விட்டார்கள். பொருளியலை வரலாற்றின் மூலம் கொண்டு செல்வத்தைத் தவிர்த்து விட்டார்கள். அனைத்துக் கோட்பாடுகளும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகின்றன.
பொருளியல் ஒரு தொழில்நுட்ப பகுப்பாய்வு முறையாய் மாறிவிட்டது (tech – analysis) பெரும் சோகம். பொருளியலாளர்கள் அவர்களின் புள்ளி விவரங்களுக்கு ஏற்ற மாதிரி நிஜ வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது பொருளியல் சந்தைச் சரக்காய் மாறிவிட்டது. அவனோட கணக்கை விட, என் கணக்கு எப்படி வந்திருக்கு பாத்தியா? லெவலுக்கு வந்துவிட்டது.
நாம் மக்களுக்கு உண்மை சொல்ல வேண்டிய நேரம் இது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் காரணமல்ல. அமெரிக்காவின் காணி அடமான சந்தைகள் (mortgage market) இதன் பின்னணியில் இருக்கின்றன. இது தற்செயலாய் நடந்தது அல்ல.
அவர்களின் சந்தைகளோடும் பணத்தோடும் நாம் பொருளியல் ரீதியாய்த் தொடர்புகள் வைத்திருக்க, அவர்களின் பேராசை நம் தலையில் வந்து விடிந்திருக்கிறது.
பணத்தை மீண்டும் எப்படி வலுவானதாக ஆக்கலாம் என்று சொல்வதல்ல சமூக விஞ்ஞானிகள் வேலை. ஆனால் மக்களின் தேவைகளுக்கும் முதலீடுகளுக்கும் இடையில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒரு இணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும்.
முதலாளித்துவத்துக்கு ஜால்ரா போடும் சமூக விஞ்ஞானிகள், அவர்களோடு ஒத்து ஊதும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகள் பற்றி நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.
சாதாரண மக்கள் எப்படி பணக்காரப் புள்ளிகளின் சொல் கேட்டு அழிந்து போக நினைக்கலாம்?
இன்றைய “படித்த” பொருளியல் மேதாவிகள் அவர்களின் மாணவர்களுக்கு அதிகபட்ச பயன்பாடு (maximum utilisation), பகுத்தறிவு மூலம் செய்யும் தேர்வுகள் (rational choices) என்று பாடங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தக் காலத்தில் அய்யா மனிதர்கள் பகுத்தறிவோடு தேர்வுகள் செய்து பொருள்கள், சேவைகள் வாங்கிக் கொண்டார்கள்? அதிக பட்ச பயன்பாடு என்று எந்த மளிகைக் கடையில் அல்லது புடவைக் கடையில் அல்லது எந்தக் கடையில் யோசித்துக் கணக்குப் போட்டு வாங்கினார்கள்?
மாணவர்கள் மனதில் சந்தேகங்களைத் தூவ வேண்டிய அவசியம் இப்போது வந்திருக்கிறது. கண்மூடித்தனமான கோட்பாடுகளை மனப்பாடம் செய்கிற கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கிற நேரம் வந்திருக்கிறது. எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் நேரம் வந்திருக்கிறது.
நமக்கு வித்தியாசமான பொருளியல் கோட்பாடுகள் தேவை. இல்லாவிட்டால் எப்படி நாம் மக்களைப் பொருளியலிலும் ஜனநாயகத்திலும் ஆர்வம் காட்டத் தூண்ட முடியும்?