நானே கடனை உருவாக்குகிறேன். நானே அதை அழிக்கிறேன். நீ வெறும் கருவி மட்டுமே. என்னிடம் சரணடைந்து விடு. கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. என்னிடம் வாங்கிய கடனை ஒழுங்காய்க் கட்டு.
தொடர் 2
மேலே சொல்லப்பட்டது நவீன சந்தைப் பொருளாதாரம் சொல்லும் கீதையின் சாரம். அர்ஜுனனிடம் திறமை இருந்திருக்கலாம். ஆனாலும் அவர் கீனா பானாவை முழுமையாய் நம்பியதால் தானே வெற்றி பெற முடிந்தது?
அதே போல, நீங்கள் என்ன தான் கில்லியாய் இருந்தாலும் சானா போனாவை முழுமையாய் நம்பினால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.
(பேராசிரியர் ஸ்ட்ரேக் தொடர்கிறார். மொழிபெயர்ப்பாளரும் பின்னால் தொடர்கிறார்.)
சானா போனா (சந்தைப் பொருளாதாரம்) தான் சரியான பாதை. அதற்கு மாற்றே இல்லை. TINA (There Is No Alternative). இன்றைய பொருளியல் பாட புத்தகங்களில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இந்த வேத மந்திரம் தான் ஒலிக்கிறது.
கீதையின் இன்னோர் இடத்தில் : அவனவன் நல்ல நடப்புகள் தான் அவனைக் கடைத்தேற வைக்கும். என் கையில் எதுவும் இல்லை. அது வேண்டும். இது வேண்டும் என்று தொல்லை பண்ணாதே. சொன்னாக் கேளு. கிருஷ்ண பரமாத்மா அழுத்தம் திருத்தமாய் சொல்கிறார்.
சானா போனா என்ன சொல்கிறது? அவரவர் திறமைக்கு ஏற்றபடி தான் படி அளக்க முடியும் (ஊதியம்). எனக்கு அந்த உரிமை வேண்டும். இந்த உரிமை வேண்டும் என்று அடாவடி பண்ணாதே. சொன்னாக் கேளு. அழுத்தம் திருத்தமாய் சொல்கிறது.
ஜோசியர்களும் பழைய பஞ்சாங்கமும்
இன்று நடைமுறையில் இருக்கும் பொருளியல் சித்தாந்தத்துக்கு (mainstream economy) அரசின் பொதுக் கடன்கள் (public debt) பற்றித் தெரிவதில்லை. பணவீக்கம் பற்றிய அறிவு அரையும் குறையுமாய் இருக்கிறது. தவிர, அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கு/அதிகாரப்பசி எதிலும் கவனம் இல்லை.
பொருளியல் என்பது அறநெறிகளுடன் தொடர்புள்ள துறை என்பதை சாமர்த்தியமாக மறைத்து விடுகிறார்கள் இந்த வல்லுநர்கள். சமுதாய அமைப்பு எப்படி அமைந்திருக்கிறது, யார் நலன்கள் முன்னிலைப் படுத்தப் பட்டிருக்கின்றன, யாரிடம் அதிகாரங்கள் இருக்கின்றன என்கிற முக்கிய காரணிகளைத் தவிர்த்து விட்டார்கள்.
இன்னோர் பெரும் தவறு : இவைகள் என்றும் மாறாது. என்றும் ஒரே மாதிரி இருக்கும் என்று ஊகித்து, அவர்களின் விஞ்ஞானப் பார்வைக்கு ஏற்றது போல் பொருளியலை மாற்றிவிட்டார்கள்.
அடுத்து, சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்தலாம், சட்டங்களை எப்படி வளைக்கலாம் என்று கேனத்தனமாய் அறிவுரைகள் சொல்கிறார்கள்.
அவர்களின் விஞ்ஞானப் பொருளியல் கையுறைகள் அணிந்தபடி காட்சி அளிக்கிறது. அதில் அரசியல், சமுதாயப் பிரச்னைகள் போன்ற அசிங்கங்கள் எதுவும் இல்லை. அத்தனை சுத்தம்.
நிதிப் பெருக்கம், நிதி சேவைகள் (Finanacial services) தான் இன்றைய பொருளியலில் “தல”. தொழில் பேட்டைகள் , மற்றும் வணிகங்கள் கூட அவர்களின் சொந்த வேலைகளை ஒத்திப் போட்டுவிட்டு நிதிச் சந்தைகளில் (Money markets) வந்து மொய்க்கிறார்கள்.
காசைப் பெருக்கிவிட்டால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று மக்களுக்குக் கீதோபதேசம் நடக்கிறது.
அரசின் பொதுக் கடன்கள் ஒரு பக்கம் பெருகிப் போயிருக்க, மக்கள் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிக் குவித்த கடன்கள் இன்னோர் பக்கம் குவிந்திருக்கிறது.
இன்றைய வங்கிகள் நிதிச் சந்தைகளில் காசு போட்டு காசு பார்ப்பதில் கில்லாடிகள் தான். ஒத்துக் கொள்வோம். ஆனால், அதே சமயம் கண்ட கண்ட களவாணிகளுக்கும் கடன் கொடுத்திருந்தார்களே. அதுவும் கோடிகள் கணக்கில்! வாங்கினவர்களும் ஓடிப்போனது ஓடிப்போனது தான். என்ன செய்வது? கிரகங்கள் சரியில்லை.
ஒரு காலகட்டத்தின் பின் நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது. அய்யோ! காப்பாத்துங்க! காப்பாத்துங்க!.. என்று பிலாக்கணம் வைத்தார்கள். 2008 களில் உலகை உலுக்கிய நிதி நெருக்கடியின் அடிப்படைக் காரணம் இது. அரசுகள் உதவிக்கு ஒடி வந்தன.
(நிதி நெருக்கடிகள் பல காலகட்டங்களில் பல வடிவங்களில் கடந்த 40 ஆண்டுகளாக வந்திருக்கின்றன. 1980 களில் ஏற்பட்ட சேமிப்பு – கடன் நெருக்கடி, 1987 இன் பங்கு சந்தை நெருக்கடி …. இன்னும் பட்டியல் போடலாம். என்ன இருந்தாலும் 2008 மாதிரி வராது.)
இன்னொரு செய்தி: 1970 களில் அமெரிக்க அரசு வரிகள் மூலம் வரும் வருவாயை விட இன்னொரு வழியில் அள்ளலாமே என்று யோசித்தது. தனது பொதுக் கடன்களைப் பொட்டலங்களாய்க் கட்டி, வந்து வாங்குங்கய்யா! வாங்குங்கய்யா!.. என்று கூவியது.
நீங்களோ, நானோ மற்றவர்கள் பட்ட கடன்களை வாங்கினால் அது பைத்தியக்காரத்தனம். அரசுகள் செய்தால் செய்தால் அது புத்திசாலித்தனம். நம்மூர் அரசுகளை விடுங்கள். கிஜிலி பிஜிலி. அமெரிக்காவோடு ஒப்பிட முடியுமா?
எளிமையாக சொன்னால், எந்த நாணயம் கவிழ்ந்து மூழ்கினாலும் டாலர் மூழ்காது. உலகின் ஒரே பெரும் வல்லரசு, அதுவும் ஒண்ணாம் நம்பர் சண்டியன் தோற்கிறதாவது! அவர்களுக்கு அது கடன் என்றால் நமக்கு சொத்து. உலகின் எந்த மூலையிலும் காட்டலாம். எவனும் பல்லிளிப்பான்.
அவர்களின் டாலர்களை அல்லது உத்தரவாதத்தை பத்திரங்களாய் வாங்கி வைத்துக் கொள்வதில் என்ன நஷ்டம்?
இதில் லாபமடைந்தவர்கள் யார் என்றால் அமெரிக்காவின் ஆயூத வியாபாரிகளும் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழில் பேட்டைகளும் தான். வாங்கியவர்கள் அரபு நாட்டு ஷேக்குகள். அவர்கள் எண்ணெயால் வந்த பணத்தை வேறு எந்த முதலீடுகளில் முடக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள்.
விஷயம் மகிழ்ச்சியாய் முடிந்தது. அவர்களுக்கு ஆயுதங்கள். அமெரிக்கர்களுக்குப் பணம்.
பொதுக் கடன்களை இப்படிக் கூறு போட்டு விற்கும் அமெரிக்காவின் திறமையை வியந்த அதன் நேச நாடுகளும் (மேற்குலகு) அதைப் பின்பற்ற ஆரம்பித்தன.
அன்று துவக்கம் இன்று வரை வாங்குவதற்குப் பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன.
வரிப்பணம் வந்தாலென்ன? வராவிட்டால் என்ன? கடன்பட்டு அரசுப் பணிகளை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள். சில பணிகள் தனியார் வசம். சில அரசு வசம். பொருளியலாளர்கள், சபாஷ்! சரியான போட்டி! என்று வில்லன் வீரப்பா மாதிரி கை தட்டினார்கள்.
விளைவு: மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய சேவைகளில் வெட்டு விழுந்தது.
இன்னொரு அதிசயமும் நடக்க ஆரம்பித்தது. முன்பு பொருட்கள் உற்பத்தி பெருவாரியான நடுத்தர வர்க்கத்தைக் குறிவைத்து நடந்தது. இப்போது பணக்கார வர்க்கத்து ருசிக்கேற்ற மாதிரி ஒவ்வொரு செழிப்பான மனிதரின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் உற்பத்தி முறைக்கு மாறினார்கள்.
ஆடம்பர கார்கள், உல்லாசப் படகுகள் இன்னும் விதவிதமான பாணிகளில் சொகுசு நிறைந்த நவீனப் பொருட்கள் என்று புதியதோர் உலகம் படைக்கப் போட்டி போட்டன நிறுவனங்கள். மீண்டும் குரல்கள்: சபாஷ்! போட்டி நடக்கட்டும். நடக்கட்டும். பொருளாதாரம் வளர வேண்டுமானால் போட்டி தேவை.
அப்போ அரசுகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் கைப்பாவைகளாய் மாறிவிட்டனவா, என்ன ?
நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம். நீ துடிக்கிற மாதிரி நடிப்பியாம்.
ஒரு நிமிடம். அரசுகள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்கிற முடிவுக்கு டக்பக் என்று வந்துவிடக் கூடாது.
நீங்களும் நானும் கடன் வாங்கினால் கட்டியே ஆகவேண்டும். அழுது புரண்டாலும் விடமாட்டார்கள். ஆனால் அரசுகள் கடன் வாங்கும் போது புன்னகை செய்தபடி வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதில் ஒரு கண்சிமிட்டல் இருக்கும். கொடுப்பவர்களும் பதிலுக்கு ஓர் நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
தனி மனிதர்கள், நிறுவனங்கள் திவால் ஆகிப் போகலாம். அது நடக்கக் கூடியது. ஆனால் அரசுகள் நொடித்துப் போனதாக… அதாங்க சூட்சுமம்!
அரசுகள் நினைத்தால் கடன்களை ஒரேயடியாய்க் கட்டலாம். (அப்படி நடப்பதில்லை.) அல்லது பகுதி பகுதியாகக் கட்டலாம். அல்லது வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு சிவனே என்று நாள் போக்கலாம்.
ஆகவே இப்போது அரசுகள் கடன்கார அரசுகள் அல்ல. கடன் தரும் பன்னாட்டு முதலாளிகளுக்கு நம்பிக்கையையும் அதே சமயம் மக்களுக்கு பெப்பே காட்டி சமாளிக்கும் திறமையையும் வளர்த்துக் கொள்கின்றன.
அதாவது மக்களையும் கடன்காரர்களையும் தொடர்பு படுத்தும் ஒருங்கிணைப்பு அரசுகள் ஆக மாறுகின்றன.
இருந்தாலும் ஒரு கணக்கு வழக்கில்லாமல் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது எத்தனை நாளைக்கு சாத்தியம்? அரசுகளுக்கு ஆலோசனைகள் சொல்லும் வல்லுநர்கள் இதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள்.
அரசுகளே, பழைய கடன்களுக்குப் பதிலாக புதிய கடன்களை உருவாக்கலாமே. அவசியமில்லாமல் அரசுப்பணிகள், மக்களுக்கான சேவைகள் என்று ஏன் நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டும்? (முன்பு சொன்னது போல் தனியார் துறை அதைப் பார்த்துக் கொள்ளட்டுமே.)
அரசு உத்தரவாதப் பத்திரங்களை (government bonds) இன்னும் மேலதிகமாக அடித்து விடலாமே. அதை வாங்கச் சொல்லி நிர்ப்பந்தப் படுத்தலாமே. அதன் மூலம் காசு பார்க்கலாமே.
மேல்படி பத்திரங்கள் பற்றித் தெரியாதவர்களுக்காக ஒரு சில வரிகள்: அரசுகள் காசுப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய அடித்துவிடும் பத்திரங்கள் இவை.
உதாரணமாக, இதோ இந்தப் பத்திரத்தை இன்று வாங்கினால் எட்டு ரூபா மட்டுமே. அடுத்த மாசம் கொண்டு வந்தால் பத்து ரூபா தருவேன். அடுத்த வருஷம் என்றால் மதிப்பு பதினெட்டு ரூபா ஆகிவிடும். ஓடி வா! ஓடி வா!.. என்று அரசு சந்தையில் கூவி விற்றால் அது தான் அரசு உத்தரவாதப் பத்திரங்கள்.
கேட்கிறவர்கள் சும்மா இருப்பார்களா? அடித்துப் பிடித்து காசு கொடுத்து வாங்கப் பார்ப்பார்கள். (இதற்கென்று சில விதிகள், ஒழுங்கு முறைகள் உண்டு. இதில் வருவாய் குறைவு. இதை விடக் கூடுதலாய் வட்டி தர வங்கிகள் தயார். பெரும் புள்ளிகள், வங்கிகள், நிறுவனங்கள், வணிகர்களுக்காக உருவாக்கப்படும் சிறப்புத் தயாரிப்புகள் இவை.)
பணக்காரப் புள்ளிகளே, நீங்கள் எக்கச்சக்கமாய் வரிப் பாக்கி வைத்திருக்கிறீர்கள். வரியைக் குறைக்க சொல்லிப் போராடிக் கொண்டே இருக்கிறீர்கள். சிலசமயம் கட்டாவிட்டால் உங்கள் சொத்து பத்துக்களை அரசுகள் பறித்துவிட்டால் (இடதுசாரி அரசுகள்) என்ன செய்வது? உங்கள் சந்ததிகளை நடுரோட்டில் நின்று தவிக்க விடுவதா?
பயப்படாதீர்கள். நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை அரசுகளின் உத்தரவாதப் பத்திரங்களில் முதலீடுகள் செய்யுங்கள். அரசுகளுக்குத் தாராளமாய்க் கடன் கொடுங்கள். வட்டி தருவார்கள். வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை குட்டிகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரி. இத்தனை செய்தும் ஒளிமயமான எதிர்காலம் தோன்றி விட்டதா என்றால் இல்லை. அரசுகள் என்ன தான் வேஷங்கள் போட்டு நைசாய்க் கேட்டாலும் பண வரத்து போதவில்லை. நிதிநிறுவனங்களைப் பயமுறுத்தியும் நடக்கவில்லை.
நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் கடன்காரர்களை மகிழ்விக்க, அரசியலமைப்பு விதிமுறைகளையே மாற்றிப் புதிய சட்டங்கள் கொண்டு வந்தார்கள்.
உலகின் பொருளியல் விதிகளும் மாற்றம் அடைந்தன.
நாட்டுநலன்கள் என்பதற்குப் பதிலாக, பன்னாட்டு சந்தைகள் முக்கியம். குடிமக்களை விட, முதலீட்டாளர்கள் முக்கியம். சமுக உரிமைகளை விட, கடன்காரர்களின் உரிமை முக்கியம். தேர்தல்களை விட, ஏலம் போடுவது முக்கியம். மக்கள் கருத்தை விட, வட்டி வீதங்கள் முக்கியம். விசுவாசத்தை விட, நம்பிக்கை முக்கியம். பொதுப் பணிகளை விட, கடனைக் கட்டுவது முக்கியம். வாக்காளர்களை விட, கடன்காரர்கள் முக்கியம்.
ஆர்ஜென்டினா நாடு பட்ட பாடு ஓர் உதாரணம். கடன் சுமை, செலவுகள் தாங்க முடியாத இக்கட்டான நிலை நிலவியது. கட்ட வேண்டிய பன்னாட்டு முதலாளிகளின் கடன்களைக் (நியூ யோர்க் நகர வங்கிகள், பன்னாட்டு முதலாளிகள் கடன்) கொஞ்சம் தள்ளிப் போட்டது . அவ்வளவு தான். பொங்கி எழுந்தார்கள். வழக்குப் போட்டார்கள்.
அதெப்படி கடன் பாக்கியைக் கட்டாமல் இருக்கலாம்? உள்ளூர் பொதுப் பணி செலவுகளை, மக்கள் நல சேவைகளைத் தூக்கிக் கிடப்பில் போடு. நாம் சொல்கிறது போல் திட்டங்களைப் போடு என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள் (அமெரிக்க எஜமானர்கள்). நடந்தது 2002 ம் ஆண்டில்.
புதிய ஒருங்கிணைப்பு தத்துவத்தை முக்கிய சில அய்ரோப்பிய நாடுகள் எதிர்க்கின்றன. மிகவும் சக்தி வாய்ந்த அய்ரோப்பிய மத்திய வங்கியே (European Central Bank – ECB) குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. இந்த வங்கி ஏற்கெனவே தனக்குத் தானே பல சூடுகள் போட்டுக் கொண்டு அஸ்.. புஸ்.. என்று ஆடிப்போய் இருக்கிறது.
அய்ரோப்பிய மத்திய வங்கி தர்பார் + ஜெர்மனி தர்பார்
அய்ரோப்பிய மத்திய வங்கியின் கீழே வருகிறது அய்ரோப்பிய நாடுகளின் நாணய கூட்டுறவுக் கழகம் (European Monitary Union – EMU). ஆனால் இந்த நாவன்னா கூவன்னா யார் ஜாடையில் அமைந்திருக்கிறது? கனகச்சிதமாய் ஜெர்மனி அய்யா ஜாடை.
இன்றைய நாளில், அய்ரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மனி தான் பிக் பாஸ் என்று ஒரு சின்னக் குழந்தைக்கும் தெரியும். பிரான்ஸ் அண்ணாவும் பாஸ் தான். இந்த ரெண்டு பேரும் சேர்ந்து தான் அய்ரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் என்பதைப் பால் குடிக்கும் பாப்பா கூட சொல்லி விடும்.
இருந்தாலும் காசு விஷயத்தில் ரெண்டு பேர் வீட்டிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஜெர்மனி அய்யா வீட்டில் காசு என்றால் ரொம்பவும் கறார். தினமும் என்ன செலவு? என்ன வருமதி? எவ்வளவு மிச்சம்? ஏன் அப்படி செலவு? இன்னும் சிக்கனமாய் இருந்திருக்கலாமே என்று ஏகப்பட்ட கேள்விகள் எழும். சேமிப்பு முக்கியம். என்னமோ, இப்படியே சிந்தித்து அங்கே எல்லாருக்கும் பழகிவிட்டது (hard money).
பிரான்ஸ் அண்ணா வீட்டிலே சேமிப்பு பற்றி பெரிதாய்க் கவலைப் படுவதில்லை. உழைக்கிறோம். அதுக்கு ஏற்ற மாதிரி சாப்பிடவும் வேண்டும். செலவு பண்ணவும் வேண்டும்.. ம்ம்.. கடன் பட்டால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?.. இப்படிப் பதில்கள் வரும். இத்தாலி, கிரேக்கம், அயர்லாந்து என்று பல நாட்டு ஆட்களும் இப்படிப் பழகி விட்டார்கள் (soft money).
ஆனால், எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து வரவு செலவு கணக்கு பார்க்கும் போது சங்கடங்கள் வருகின்றன.
வரவு செலவுத் திட்டத்தில் மொத்த நாட்டு உற்பத்தியின் மூணு சத வீதத்துக்கு மேல் பற்றாக்குறை வரக்கூடாது. கடன்கள் 60 சத வீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று ஏற்கெனவே ஜெர்மனி நாட்டு ஆட்கள் சொல்லச் சொல்ல, செக்கு மாடுகள் போல் மற்றவர்கள் தலையாட்டிவிட்டு இப்போ பேயைக் கண்ட மாதிரி முழிக்கிறார்கள்.
போதாதற்கு இன்னும் முரண்கள் இருக்கின்றன.
நாவன்னா கூவன்னா ஆட்கள் எப்போதும் சந்தைப் பொருளாதாரம் தலை நிமிர்ந்து நின்றால் தான் நமக்கெல்லாம் விமோசனம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கு என்ன வழிகள் என்று யோசித்து யோசித்து … இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அது அப்படி இருக்க, ஆனா மானா ஆட்கள் (அய்ரோப்பிய மத்திய வங்கி ஆட்கள்) எப்படி? இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. பொருளியல் வல்லுநர்கள். யாருக்கும் பதில் சொல்லத் தேவை இல்லாதவர்கள். கோட் சூட் போட்ட கொய்யாலே. ஆனால் பன்னாட்டு முதலாளிகள் என்றால் அடங்கி ஒடுங்கி எழுந்து பவ்யமாய் நிற்பார்கள்.
(உண்மையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தான் இந்த முதலாளிகளுக்குக் கூஜா தூக்கும் வேலையை அறிமுகப்படுத்தியவர். பிறகு மற்றவர்களும் தூக்க ஆரம்பித்தார்கள் என்பது வரலாறு.)
நாம் அய்ரோப்பியர்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்தாலும் ஒன்றிய நாடுகளுக்குள்ளே வேற்றுமைகளும் நிரம்பி இருக்கின்றன.
ஒரு நாட்டின் பணப் பாவனை அந்த நாட்டுக்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும்.
அய்ரோப்பிய ஒன்றியத்துள் வர முன்பு, தெற்கு நாடுகளின் முதலாளித்துவ பொருளாதாரம் உள்ளூர் கிராக்கிக்கு முதலிடம் தந்தது. பண வீக்கம் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. முதலாளிகளைக் கட்டுப்படுத்த தொழிலாளர் சங்கங்கள் அவசியமாக இருந்தன.
ஏற்றுமதியில் அதிக முன்னேற்றம் இல்லை தான். இருந்தும் அடிக்கடி அவர்களின் நாணய மதிப்பைக் குறைத்ததால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. நாணய மதிப்பிழப்பு உள்ளூரில் பணவீக்கத்தை ஏற்படுத்தினாலும் அதன் தாக்கம் பெரிதாக இருக்கவில்லை.
நாட்டு வங்கிகளின் செயல்பாடுகள் வடக்கைப் போல் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப் படவில்லை. சில வங்கிகள் முழுமையாக அரசு வசம் இருந்தன. சில தனியார் வசமிருந்தாலும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கின. ஆகவே பொருளாதாரத்தை ஓரளவு கட்டிக் காக்க முடிந்தது.
அய்ரோப்பாவின் வடக்கு நாடுகள் ஏற்றுமதிகளில் தான் கூடிய கவனம் செலுத்தின. எங்கெல்லாம் மலிவாக உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் தொழில் பேட்டைகள் ஆரம்பித்தார்கள். பண வீக்கம் பற்றிக் கவலையே படவில்லை. ஏற்றுமதி. ஏற்றுமதி.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
அய்ரோப்பிய ஒன்றியத்தில் யூரோ நாணயம் அறிமுகம் ஆகியது. அதன் வார்ப்பு அப்படியே வடக்கின் செல்வந்த நாடான ஜெர்மன் மார்க் நாணயத்தோடு ஒன்றிப் போனது. ஜெர்மானியர்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படி தெற்கு நாடுகளும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆரம்பகால யூரோவின் வட்டி வீதம் ஜெர்மனியின் பண வீக்கத்தை விட அதிகமாய் இருந்தது. ஆகவே ஜெர்மனி ஆட்கள் யூரோ நாணயத்தில் கடன் வாங்க ஆர்வம் காட்டவில்லை. (தவிர, கடன் வாங்குவதென்றால் அவர்கள் ஆயிரத்தெட்டு முறை யோசிப்பார்கள் என்பது தெரிந்ததே.)
அதே சமயம், தெற்கு நாடுகளின் வங்கிகளை விட, யூரோ நாணயக் கடன்கள் ரொம்ப மலிவாகக் கிடைத்தன. ஆத்துல போற தண்ணி நீ குடி. நான் குடி.
கண்மண் தெரியாமல் கடன் வாங்கினார்கள். கண்ணுக்கெட்டியவரை காணிகள், கட்டிடங்கள் என்று வாங்கித் தள்ளினார்கள். சிலர் வாங்கியபின் ஓடிப் போனார்கள். எல்லாரும் பணக்காரர் ஆக ஆசைப்படுவது இயல்பு தான். ஆனால் யதார்த்தத்தில் எல்லாருமே பணக்காரர் ஆவதில்லை என்பதை மட்டும் எல்லாரும் மறந்து போனார்கள்.
2008 ம் ஆண்டில் சுனாமியாய் அடித்த நிதி நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது.
(தொடரும்)