பிறப்பதற்கு ஒரு நேரம். இறப்பதற்கு ஒரு நேரம். விதைப்பதற்கு ஒரு நேரம். அறுப்பதற்கு ஒரு நேரம் .
– எக்லஸியாஸ்டஸ் 3:2
வானத்தில் இருந்து விழுந்த பரிசு
பூமியில் இருந்து சுமார் 1500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஓர் இரட்டை நட்சத்திரக் கூட்டங்களை வானவியல் ஆய்வாளர்கள் 1967 களில் இருந்து கவனிக்கத் துவங்கினார்கள். அதன் பேர்: PSR 1913 + 16.
இவை நியூட்ரான்களால் ஆன நட்சத்திரங்கள். (நியூட்ரான், அணுவின் கருவுக்குள் இருக்கும் பல்வேறு துகள்களில் ஒன்று). குறிப்பிட்ட இந்த நட்சத்திரம் மற்றதை பயங்கர வேகத்தில் சுற்றிச் சுழல்கிறது. அந்த ஊழி வேகத்தில் நியூட்ரான்கள் விண்வெளியில் சிதறுகின்றன.
இவைகளில் இருந்து கிளம்பும் ஒளிக் கதிர்களும் ரேடியோ அலைகளும் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிகின்றன. அவை பூமியில் மேல் படியும்போது நம் ரேடியோ தொலை நோக்கிகள் (radio telescopes ) பதிவு செய்கின்றன.
நம்மால் பார்க்கக்கூடிய நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட 5000 இருக்கும் என்றால் காண முடியாதவை 100 மில்லியன்கள் இருக்கும் என்கிறார்கள். யாருக்கும் சரியாகத் தெரியாது. எல்லாமே ஒரு ஊகம் தான்.
ஆகவே எப்படி கண்டு பிடிக்கிறார்கள்? நம்மூர் திரை நட்சத்திரங்களுக்கு வருவோம். ஆளுக்கு ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார்கள் இல்லையா? அது மாதிரியே ஒவ்வோர் நட்சத்திரமும் அவர்களுக்கென்று தனித்தனி அலை வரிசைகள் வைத்திருப்பதால் அவர் யார், இவர் யார் என்று என்று கண்டு பிடித்துக் கொள்ள முடிகிறது.
மீண்டும் நம்ம ஸ்டார்கள் உதாரணம்: நம் மனசுக்குப் பிடித்த ஸ்டார்களை நாம் நினைத்த நேரம் பார்க்க முடியாது. இருந்தாலும் வண்ணத் திரையில் பார்த்தாலே பரவசமாய் விசிலடித்து மகிழ்ந்து போகிறோம். மறுக்க முடியுமா?
அது போலவே இந்த PSR மாதிரி விண்வெளியில் இருக்கும் மல்ட்டி, மெகா நட்சத்திரங்களை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் கடவுள்/ இயற்கை, அவர்களின் இருப்பை அறிந்து கொள்ள வசதிகள் செய்து தந்திருக்கிறார்களே. மகிழ்ச்சி.
பிரபஞ்சமே அசைகிறது. அத்தோடு சேர்ந்து இந்த நட்சத்திரங்களும் அசைகின்றன. அவர்களின் பாதை சில நேரங்களில் பூமிக்கு அண்மையில் வருகிறது. சில நேரங்களில் சொல்லவே முடியாத தூரத்தில்.
இருந்தும், அவர்களின் சிக்னல்கள் (அலைவரிசை அளவுகள்) மாறாமல் துல்லியமான நேர இடைவெளியில் வந்து கொண்டே இருக்கின்றன.
நினைத்துப் பார்க்கவே முடியாத அத்தனை தூரத்தில் இருக்கும் (1500 ஒளி ஆண்டுகள்) இருக்கும் ஓர் நட்சத்திரத்தில் இருந்து ஒளியின் வேகத்தில் வரும் ரேடியோ அலைகள் எப்படி சீராக ஒரே நேரத்தில் வந்து கொண்டிருக்க முடியும்?
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒளிக்கு என்ன தடைகள் இருந்தாலும் (அதன் வழியில் பிரபஞ்சங்கள், நட்சத்திரங்கள், கோளங்கள், அவற்றின் ஈர்ப்பு விசைகள் எது இருந்தாலும்) அதன் வேகம் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்குவதில்லை. மாறாதது.
இயற்பியலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒளியின் வேகம் மாறாத வேகம் என்று நிரூபணம் ஆயிற்று. தவிர, பூமியின் சீலியம் கடிகாரம் போல் விண்வெளியிலும் ஒன்று கிடைத்திருக்கிறதே.
ஒரு விஷயம். ஐன்ஸ்டைன் 1907 ம் ஆண்டிலேயே ஒளியின் வேகம் மாறாதது என்று கணித சமன்பாடுகள் மூலம் முடிவுக்கு வந்திருந்தார் என்று அறிந்திருக்கிறோம்.
அவரின் ஆய்வுகளை வாசிக்காமல் இருந்திருந்தால் PSR 1913 + 16 இரட்டை நட்சத்திரங்களின் அசைவுகளை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். அந்த நட்சத்திரங்களின் இருப்பே தெரியாமல் போயிருக்கும்.
1993ம் ஆண்டு. இந்த நட்சத்திரங்களின் அசைவுகளை நுணுக்கமாய் ஆய்வு செய்த இயற்பியலாளர்கள் Hulse, Taylor இருவருக்கும் அந்த ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது.
இது ஐன்ஸ்டைன் அய்யாவுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. ஏனென்றால் 1955ம் ஆண்டிலேயே அவர் மேலுலகம் போய்விட்டார். ஒருவேளை.. ஒருவேளை.. இந்த மனிதரின் நச்சரிப்பு தாங்க முடியாமல் …
சில நேரங்களில் சில மனிதர்கள்
இனி வரும் தொடர்களில், ஐன்ஸ்டைன் உட்பட, எல்லா இயற்பியலாளர்களின் கருத்து மோதல்களையும் கவனிக்கப் போகிறோம்.
பிரபஞ்சத்தின் காலம் என்ன? இது முதலாவது விவகாரம்.
இயற்பியலில் Thermodynamics கோட்பாட்டை அடிச்சிக்க ஆளே இல்லை. 17ம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு இயற்பியலாளர்களால் முன்மொழியப்பட்டு சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கப் பட்டவை இதன் நான்கு கோட்பாடுகள்.
இங்கே இரண்டாவது கோட்பாட்டை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். எதுவுமே வெளியேற முடியாமல் மூடிய படி இருக்கும் ஓர் அமைப்பில் (closed system) அதன் வெப்பநிலை மாறாமல் ஒரே நிலையில் இருக்கவே முடியாது.
சண்டியர்கள் அமைதியாக இருப்பது அபூர்வம். மற்றவர்களிடம் அவர்களின் பலத்தைக் காட்டுவதிலேயே குறியாய் இருப்பது வழக்கம். அதுவும் ஓர் அறைக்குள் எல்லாரையும் பூட்டி வைத்தால்? களேபரம். களேபரம்.
அது போல, மூடிய அமைப்பில் இருக்கும் வெப்பம் அதிகம் உள்ள மூலக்கூறுகளிடம், வெப்பம் குறைந்த மூலக்கூறுகளை விட சக்தி அதிகம் இருக்கிறது. சும்மா இருக்க முடியுமா? திமிறுகின்றன. முட்டி மோதுகின்றன. கடைசியில் எல்லா மூலக்கூறுகளும் கிட்டத்தட்ட ஒரே நிலைக்கு வரும் வரை களேபரம் தொடர்கிறது. இது ஒரு முடிவில்லாத தொடர்கதை.
மூலக்கூறுகள் என்பவை அணுக்களின் கூட்டு. அணுக்கள் எப்போதும் அசைந்து கொண்டிருப்பவை. (நாமும் மூலக்கூறுகளின் மொத்த உருவங்கள். நாமும் சும்மா இருப்பதில்லையே. அமைதியாய் இருப்பது போல் காட்டிக் கொள்வோம் – அதாவது அடுத்த சண்டையைத் துவங்கும் வரை.)
நம் குணத்தை விட்டுவிடுவோம். இயற்கையில் களேபரம் எங்குமே தொடர்கிறது. மலர்கள் என்றும் மலர்ந்து கொண்டே இருப்பதில்லை. அழகான மேனி அப்படியே இருப்பதில்லை. புதிது புதிதாக என்ன தான் தோன்றினாலும் அவையும் நிலைப்பதில்லை. சூரியனும் எந்த நாளும் எரியப் போவதில்லை. பிரபஞ்சமும் விலக்கல்ல.
இந்தக் களேபரத்தை இயற்பியலில் entropy என்பார்கள். ஒழுங்கு என்பது உடைந்து ஒழுங்கற்ற நிலையை நோக்கி நகரும் நிலை இது. Chaotic.
ஒழுங்கு என்பது உடைந்து ஒழுங்கற்ற நிலையை நோக்கி நகரும் நிலை என்பது நிரூபணம் ஆயிற்று என்றால் அந்த நகர்வுக்குள்ளே நேரம் என்பது இருக்கிறது என்று அனுமானிக்கிறோம்.
அதே சமயம், நேரம் என்பது பின்னால் போகாமல், ஏன் முன்னால் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது என்கிற கேள்விக்குப் பதிலாக, entropy என்று ஒரே வார்த்தையில் முடித்து விடலாம் என்கிறீர்களா? அறிவியலாளர்களிடம் இருக்கும் கெட்ட குணம்: எதையும் எப்போதும் சந்தேகப் பட்டுக் கொண்டே இருப்பது.
நியூட்டனின் கோட்பாட்டுகளின் படி, எந்த ஒரு பொருளின் மீதும் வெளியில் இருந்து ஓர் விசை அதன் மேல் தாக்கம் செலுத்தும் வரை, அது தன் பாட்டில் அசையாமல் அப்படியே இருக்கும் அல்லது ஓர் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் என்பதைப் பள்ளியில் இயற்பியல் படிக்கும் மாணவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
Entropy களேபரத்தை மூலக்கூறுகளின் ஆட்டத்தோடு ஒப்பிடலாம். மூலக்கூறுகளின் சக்தி குறையக் குறைய, (விசை) பழைய நிலைக்கு அவை வர வாய்ப்பு உண்டு. எனவே நியூட்டனின் கோட்பாட்டுக்கும் , பிரபஞ்சத்தின் “தீர்ப்பு” நாளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று சொன்னார் ஆஸ்திரிய இயற்பியலாளர், Boltzmann.
இதை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றார் Poincaré. இவர் பிரான்ஸ் இயற்பியலாளர். சாதாரண ஒரு லீட்டர் தண்ணீரிலே இருக்கும் மூலக்கூறுகளே “பழைய” நிலையை அடைய ஏகப்பட்ட காலம் எடுக்கும் என்றால் (இது அவரின் கணக்கு), அப்போ பிரபஞ்சத்தின் வயசே துவக்கமும் முடிவும் இல்லாத முடிவிலியில் (infinity) போய் நிற்குமே. அதென்ன பிரபஞ்சம் என்றுமே நிரந்தரமானதா?
அது தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று பெருவாரி இயற்பியலாளர்கள் ஒத்துக் கொள்கிறார்களே. Boltzmann எப்படி தப்புத் தப்பாக சொல்லலாம்?
Boltzmann விடுவாரா? Enthropy கூடிக் கொண்டே போகிறது. மறுக்கவில்லை. ஆனால் அதை ஏன் காலத்தோடு சம்பந்தப் படுத்த வேண்டும்? ஒரு சீட்டுக் கட்டை எடுத்துப் புரட்டிப் போடுங்கள். முதல் சீட்டு எப்படி வரப்போகிறது? அது ராஜா, அல்லது ஜோக்கர், அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். யாரும் முன் கூட்டியே சொல்ல முடியுமா? அது போலத் தான் பிரபஞ்சத்தின் இன்றைய நிலையும்.
இப்போ நடந்திருக்கும் சீட்டிழுப்பில் இன்றைய, “இந்த நிலை”யில் வாழ்கிறோம். பிரபஞ்சத்தின் அடுத்த சீட்டிழுப்பில் “தீர்ப்பு நாள்” வரலாம் அல்லது “மீண்டும் உயிர்த்தெழும் நாள்” வரலாம் அல்லது எதுவோ ஒன்று தோன்றலாம். நாள், நேரம் என்பது இதற்குள் வராதே?
எல்லாம் ஒரே ஒழுங்கு முறையில் தொடர்ந்து வரும் எனும் கருத்தாக்கத்தை நாம் மறந்து விடலாமே. வெளி உருவாக்கும் நிலைகளில் (change of states) மாறி மாறி சஞ்சரிக்கிறோம். அதை ஏன் நேரம், காலம் என்று சொல்லிக் குழப்பத்தை உருவாக்க வேண்டும்?
ஐன்ஸ்டைனும் இந்த விவாதங்களைக் கவனித்தபடியே இருந்தார். அவர் கூட, தன் பிரபஞ்சக் கொள்கைக் கோட்பாட்டை, துவக்கத்தில் பிரபஞ்சம் அசையாமல் இருந்தது என்கிற வரிகளோடு தான் ஆரம்பித்திருந்தார். அவரின் முன்னைய இயற்பியலாளர்கள் (நியூட்டன் உட்பட) சொன்னது போலவே துவங்கி இருந்தார்.
பிரபஞ்சம், அதன் ஒவ்வோர் நிலைகளில் மாறும்போது அது தடுமாறி நொறுங்கி விடும் எனும் நிலைக்கு வந்தாலும் (காலம் எனும் சொல்லைத் தவிர்த்திருப்பதைக் கவனிக்கவும்.) சராசரியாக அது தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது என்பது அவரின் அனுமானம்.
பிரபஞ்சக் கொள்கையில் நான்கு குழுக்களாக இருக்கிறார்கள் இயற்பியலாளர்கள்.
- பிரபஞ்சத்துக்கு ஒரு துவக்கமும் ஒரு முடிவும் உண்டு. அதன் அளவு வரையறுக்கப் பட்டது. Enthropy கூடிக்கொண்டே போக, அதன் வெப்பமும் கூடிப்போய், கடைசியில் அந்தத் தகிப்பில் பொசுங்கி விடலாம்.
- பிரபஞ்சத்துக்கு ஒரு துவக்கம் இருக்கிறது. Enthropy யின் தாக்கம் இருந்தாலும் அது முடிவில்லாமல் விரிந்து கொண்டே இருக்கிறது.
- பிரபஞ்சத்துக்குத் துவக்கமும் இல்லை. முடிவும் இல்லை. சீட்டிழுப்பு போல் ஒவ்வோர் நிலையிலும் மாறிக் கொண்டிருக்கிறது அல்லது ஒரு புள்ளி விவர நிரல் போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருக்கிறது.
- பிரபஞ்சத்துக்குத் துவக்கமும் இல்லை. முடிவும் இல்லை. ஒரே சமச்சீராய் விரிந்து கொண்டிருக்கிறது. அதன் அடர்த்தி எங்கும் ஒரே அளவாய் இருக்கிறது. (Steady-state theory)
என் பிரபஞ்சம், உன் பிரபஞ்சம் என்று போர் இன்னும் தொடர்கிறது. இது இப்படி இருக்க, அடுத்த கேள்விக்கு வருகிறோம்.
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ?..
காலத்தை நீட்ட முடியுமா? எல்லாருக்குமே இந்த ஆசை இருக்கிறது. வயசு ஏறக்கூடாது. ஆனால் நீண்ட காலம் வாழ யாருக்குத் தான் ஆசை இல்லை?
ஐன்ஸ்டைன், அவரின் பொது சார்புக் கொள்கை சமன்பாடுகளின் அடிப்படையில், கால நீடிப்பு (Time dilation – stretching time) சாத்தியமே என்று 1905 களிலேயே சொல்லிவிட்டார். ஆனால் இயற்பியலாளர்கள் நம்பத் தயாராய் இல்லை.
இருந்தும் 1941 வரை, இந்த முடிவை சோதனை செய்து பார்க்க யாருக்கும் நேரம் வரவில்லை.
அண்டத்தில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் (சக்தி கொண்ட அணுத் துகள்கள்) ஒவ்வொரு வினாடியும் நம் பூமியின் மேல் பரப்பில் இருக்கும் வளி மண்டலத்தில் (atmosphere) மோதிக் கொண்டே இருக்கின்றன. இவை எங்கிருந்து வருகின்றன? எவருக்கும் தெரியாது.
வளி மண்டலம் ஓர் பெரும் கவசம் போல் பூமியைக் காக்கிறது. கதிர்வீச்சு பெரும் அளவில் ஊடுருவினால்? எல்லா உயிர்களும் கூண்டோடு எப்போதோ அழிந்து போயிருக்கும்.
வளி மண்டலத்தோடு மோதும்போது இந்த அணுக்களின் கருக்கள் உடைந்து அவற்றின் உள்ளிருந்து பல்வேறு அணுத் துகள்கள் வெளிவருகின்றன. அதில் ஒரு சில துகள்கள் மட்டுமே சில வினாடிகள் வாழ்கின்றன. மற்றவை அந்தக் கணமே அநேகமாய் அழிந்து விடுகின்றன.
myons என்கிற அணுத் துகள்களின் வாழ்க்கை கொஞ்சமாவது பரவாயில்லை. அவை சராசரி 2 மைக்ரோ வினாடிகள் வாழ்வது பெரிய விஷயம். ( 1 மைக்ரோ வினாடி என்பது ஒரு வினாடியை ஒரு மில்லியனால் வகுத்தால் என்ன நேரம் வருமோ அது.)
வளி மண்டலத்தை ஊடுருவிய பின்னே சில myons சுமார் 20 கிலோமீட்டர்கள் கீழே இருக்கும் மண்ணை நோக்கி வீழ்கின்றன. சில மண்ணில் புதைந்தாலும் “உயிர் ” வாழ்கின்றன. எப்படி?
ஐன்ஸ்டைன், அவரின் சமன்பாடுகளின் படி, எதுவும் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது அவற்றின் வாழ்நாள் ஜவ்வு மாதிரி விரிந்து கொண்டே போகும் என்கிற முடிவுக்கு ஏற்கெனவே வந்திருந்தார். (இயற்பியலில் Time warp எனும் இந்தக் கொள்கை மிகவும் முக்கியமானது.)
மேல் சொன்ன கண்டு பிடிப்பைத் தவிர, இன்னும் கடினமான, நுட்பமான சோதனைகள் மேற்கொண்டார்கள். myons களின் வாழ்நாளை விட மூன்று மடங்கு குறைவான வாழ்நாள் கொண்ட இன்னோர் வகை துகள்களும் (mesotrans) இதே போல் “இருப்பது” தெரிய வந்தது.
அய்யாவின் கணிப்புகளுக்கு சாட்சி கிடைத்தாலும் சில இயற்பியலாளர்களுக்கு அது போதவில்லை. இன்னும் நிரூபிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். தவிர, நேரம் என்பது விரியும் அல்லது சுருங்கும் என்று நிச்சயமாய் முடிவு செய்ய 1971 ம் ஆண்டு வரை நாம் காத்திருக்க நேரிட்டது.
அந்த ஆண்டு ஓக்டோபர் மாதம், Hafele, Keating எனும் இரண்டு ஆய்வாளர்கள் ஆளுக்கொரு சீலியம் அணுக் கடிகாரத்துடன் ஒருவர் கிழக்கு நோக்கி விமானத்தில் பறக்க, மற்றவர் மேற்கு நோக்கிப் பறந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்தப் பரிசோதனை, படங்களுடன், பரபரப்பு செய்தியாக பத்திரிகைகளில் அடிபட்டது.
ஒளியின் ஒரு வினாடியின் வேகத்தை மில்லியன்கள் என்ன ஆயிரம் மில்லியன் கணக்கில் வகுத்தாலும் அதன் ஒரு பகுதியைக் கூட, விமானங்களால் எட்ட முடியாது. ஆனால், சீலியம் கடிகாரங்கள் வித்தியாசங்களைக் கண்டு பிடித்து விடும்.
கிழக்கு நோக்கிப் பறந்த கடிகாரத்தின் நேர அளவு, அசைவின்றி நிலத்தில் இருந்த சோதனைக்கூட சீலியம் கடிகாரத்தை விட, 59 நானோ செக்கன்டுகள் குறைந்த வேகத்தில் ஓடியது.
மேற்கு நோக்கிப் பறந்த கடிகாரமோ , நிலத்தில் இருந்த கடிகாரத்தை விட, 273 நானோ செக்கன்டுகள் வேகமாக ஒடியது.
ஒரு நானோ செக்கன் (nanosecond) என்பது ஒரு வினாடியை ஒரு பில்லியன் பிரிவுகளாய்ப் பிரித்தால் வரும் நேரம் (1/1000,000,000).
ஏன், கிழக்கும் மேற்குக்கும் அந்த வித்தியாசம்? ஐன்ஸ்டைன், தன் ஆய்வுக் கட்டுரையில் பூமியும் தன் அசைவால் நேரத்தை விரிவடையச் செய்கிறது என்று மேற்கோள் காட்டி இருந்தார். ஆகவே, பூமியின் நேரத்தை இதில் இருந்து நீக்கியபோது கிடைத்த தரவுகள், நேரம் சுருங்குகிறது அல்லது விரிகிறது என்பதை நிரூபித்தன.
இன்னோர் ஆய்வில் (1978), ஜெனீவாவில் இருக்கும் CERN அணு ஆய்வுக் கூடத்தில், muon களை செயற்கையாய் “உற்பத்தி” செய்து, ஒளியின் வேகத்தின் 99.7 மடங்கு வேகத்தில் ஓடச் செய்த போது, அவற்றின் “காலம்” 29 மடங்கு கூடியதைக் கண்டார்கள்.
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
பேராசிரியர் டேவிஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அங்கே 1974 களில் Clay என்னும் இயற்பியலாளர், ஒளியை விட வேகமாகச் செல்லும் துகள் ஒன்றைக் கண்டுபிடித்ததாக வந்த செய்தியை விவரிக்கிறார். அதெப்படி? எல்லாரும் சோதனைகள் மூலமும் கணித சமன்பாடுகள் மூலமும் ஏற்றுக் கொண்ட ஓர் கொள்கைக்கு எதிராய் ஒரு நிகழ்வு நடக்கலாம்?
அதாவது, அப்படி நிகழும் என்றால், அந்தத் துகள்கள் காலத்தின் பின் நோக்கிப் போவதாக இருக்க வேண்டும். அப்படி ஓர் துகள் இருக்க முடியுமானால் அதன் பேர் techyon என்று ஏற்கெனவே இயற்பியலாளர்கள், கணிதம் மூலம் ஒரு அனுமானம் செய்திருந்தார்கள். Hypothetic name.
அந்தக் கற்பனை உண்மையாகிவிட்டதா? இயற்பியல் உலகே பரபரப்பாகி விட்டது. நினைவிருக்கட்டும்: கணிதம், விரிந்து கொண்டே போகும் அறிவியல். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், இயற்பியல் அப்படி அல்ல. இது நிஜ உலகத்தில் நடக்கக் கூடிய அல்லது நடக்கலாம் என்று அறுதியிட்டு நம்பக் கூடிய விஷயங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளும். மற்றவைகள் சும்மா கப்ஸா.
துகள்கள், இறந்த காலத்துள் போகின்றன என்று எப்படி சொல்ல முடியும்?
அண்டத்தில் இருந்து வரும் கதிர்கள், அதிகமாக புரோட்டான்களாக இருக்கின்றன. (புரோட்டான்கள் அணுக் கருவின் உள்ளே இருக்கும் ஓர் துகள்.) இயற்பியலின் ஓர் அங்கமான மின் இயலில், சக்தியை, electron volts அளவுகள் என்று மதிப்பிடுவது வழக்கம்.
அண்டத்தில் இருந்து வரும் புரோட்டான்கள், டிரில்லியன்கள் கணக்கில் electron volts சக்தி கொண்டவையாய் இருக்கின்றன.
ஒரு டிரில்லியன் சக்தி கொண்ட புரோட்டான்கள் 99.999 விழுக்காடு ஒளியின் வேகத்தில் செல்லக் கூடியவை. 10 டிரில்லியன் சக்தி கொண்ட புரோட்டான்களோ 99.999999 விழுக்காடு ஒளி வேகத்தில் செல்லக் கூடியவை.
புரோட்டான்கள், ஒளியின் வேகத்தை நெருங்க, நெருங்க, ஒளித் துகள்களுக்கும் (photons) புரோட்டான்களுக்கும் உள்ள இடைவெளி குறைகிறது. உதாரணமாய், 10 டிரில்லியன் சக்தி கொண்ட புரோட்டான்கள், ஒளித் துகள்களின் இடைவெளி வெறும் 3 மீட்டர்கள் தான். 100 டிரில்லியன் சக்தி என்றால் 3 சென்டிமீட்டர் அளவு தான். 1000 டிரில்லியன் ஆகிவிட்டால் 0.3 மில்லி மீட்டர்கள்.
ஒளியின் வேகத்தைக் கடக்க முடியாது. சரி. அதே சமயம் பல்லாயிரம் டிரில்லியன் சக்தி கொண்ட புரோட்டான்கள் என்ன செய்யும்? திரும்பிப் போக வேண்டியது தான். அதாவது காலத்தின் பின்னே.
ஆகவே, ஒளியின் வேகத்தை அடைந்த பின் அதை மீறாமல் அதே வேகத்தில் பயணித்தால், நாம் நித்திய ஜீவன்களாய், மில்லியன் ஆண்டுகளோ பில்லியன் ஆண்டுகளோ வாழலாம்? அல்லது வேகத்தை இன்னும் முடுக்கி விட்டால் நம் முன்னோர்களைப் பார்த்து நலம் விசாரிக்கலாம்?
Youtube, Facebook களில் நிறைய பைத்தியங்கள் இப்படி உலாவுகின்றன. கவனமாக இருப்பது நல்லது. கற்பனையில் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் பேராசிரியர். ஏனென்றால், நாம் ஒளியின் வேகத்தின் பாதியை அடைய முன்பே பீஸ் பீஸ் ஆகி… சாம்பல் கூட மிஞ்சாது. காலத்தின் பின் நோக்கிப் போகிறோமோ இல்லையோ, கடவுளிடம் போய்ச் சேர்வது சர்வ நிச்சயம்.
எதிர்காலத்துள் போய்ப் பார்க்க ஆசைப்படுபவர்கள் ரொம்பக் குறைவு. ஏன் ? எந்த நாளில், நேரத்தில் , எப்படியான மரணம் நேரும் என்று தெரிந்து விட்டால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். சஸ்பென்ஸ் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும். இருந்தாலும் ஐன்ஸ்டைன் சமன்பாடுகளில் அதற்கும் இடம் இருக்கிறது.
பிரபஞ்சத்தில், கோளங்களில் இடையே இருக்கும் ஈர்ப்பு விசைகளும் காலத்தை சுருங்க அல்லது விரியச் செய்வதில் பங்களிப்பு செய்கின்றன. ஈர்ப்பு விசை கூடிக் கொண்டே போனால் என்ன நடக்கும்? கோள்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி அனைத்துமே நொறுங்கி நினைத்துப் பார்க்கவே முடியாத பயங்கர சக்தி கொண்டதாய் ஈர்ப்பு சக்தி பெருகும். கோள்களின் பருமன் சுருங்கும்.
உதாரணமாக, சூரியனே ஒரு பந்தின் அளவு வந்துவிட்டால் அது இழுக்கும் அத்தனை பொருள்களிலும் ஏற்படும் ஈர்ப்பு மெகா பில்லியன்கள் தொன்கள் அளவில் வந்துவிடும். நாம் அதன் மேல் நின்றால் , நம் நிறை அதே மெகா பில்லியன் கணக்கில் இருக்கும் (கற்பனை தான். ஆனால் கணித ரீதியாய் இது உண்மை).
அங்கே, எந்த இயற்பியல் விதிகளும் வேலை செய்யாது. அது ஒரு தனி “நிலை”. ஐன்ஸ்டைனுக்கு அது தெரிந்தே இருந்தது. அவருடைய சமன்பாடுகளே அந்த நிலையை சுட்டிக் காட்டியது.
தவிர, Schwarzschild என்னும் இயற்பியலாளர். 1916 களிலேயே இந்த “தர்ம சங்கடமான நிலை” பற்றி எச்சரித்திருந்தார். சூரியனில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஒரு இப்படியான நட்சத்திரம் கருப்பு நிறத்தில் இருப்பது தெரிய வந்தது.
கருப்பு நிறத்தில் எப்படி நட்சத்திரம் இருக்கலாம்? அந்த காலகட்டத்தில் இருந்த அறிவியல், கருந்துளைகள் (Black Holes) பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.
ஆனைக்கும் கூட அடி சறுக்கும்..
ஐன்ஸ்டைன் அப்படி நடக்க முடியாது என்று நம்பினார். அவரின் முதல் சறுக்கல் அது.
தொடர் – 3 ல் சந்திப்போமா?