உயிர் வாழ்தல் நிலையை விளையாட்டு, குவாண்டம் தன்மைகளோடு ஒப்பிடுகிறார் பேராசிரியர்.
விளையாடு மங்காத்தா
எந்த விளையாட்டுக்கும் அடிப்படை விதிகள். விதிகளை மீற முடியாது. விளையாடும்போது அதில் வருகிற சிலிர்ப்பு, கிடைக்கிற கிக் எல்லாம் தாண்டி உணர்ச்சி வசப்படாமல் கவனித்தால் அதில் கூட மாறிக் கொண்டே இருக்கும் கணித வடிவங்கள் (mathematical patterns) தென்படுகின்றன.
சிக்கல் என்பது கூடிக் கொண்டே இருக்கிறது. அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது? தெரியாது. கீழ் உள்ள Game of Life விளையாட்டில் ஐந்து கருப்பு சதுரங்கள் அக்கம்பக்கமாய் இருக்கின்றன. கருப்பாய் உள்ளவை “வாழும்” சதுரங்கள். வெள்ளை சதுரங்கள் வெறுமை.
இந்த விளையாட்டில் கருப்பு சதுரங்கள் பக்கத்தில் உள்ள வெள்ளை சதுரங்களுக்கு நகர வேண்டும். விளையாட்டின் ஒரு விதி: போனபிறகு அதன் சுற்றியுள்ள சதுரங்களில் “உயிருள்ளவை” (கருப்பு சதுரங்கள்) இரண்டுக்கும் குறைவாய் இருந்தால் போனவர் “செத்துப் போய்விடுவார்”.
“தப்பிவிட்டால்” தொடர்ந்து கருப்பு சதுரங்கள் வெள்ளையான வெள்ளை சதுரங்கள் நோக்கி நகரலாம். விளையாட்டின் நோக்கம்: மரணத்தை நெருங்காமல் போய்க்கொண்டே இரு.
இப்படி இன்னும் மூன்று விதிகளோடு ஐந்து கருப்பு சதுரங்களையும் ஓடவிட்டால் என்ன நடக்கும்?
இதில் ஒரு குறிப்பிட்ட நகர்வுகளின் பின் அவை ஒரு சீரான அமைப்போடு மாறாது நகர ஆரம்பிக்கின்றன. இவை உயிர் இல்லாதவை. விதிகள் மனிதர்கள் அமைத்தவை. (இது போல் இன்னும் காணொலிகளை Youtube இல் பார்க்கலாம்.)
கேள்வி: சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே போகும் இயற்கை போன்ற ஓர் அமைப்பில் இப்படி சில விதிகள், நகர்வுகள் தற்செயலாகத் தோன்ற முடியாதா?
பேராசிரியர், அவரின் சக ஆய்வாளர்களின் (Alyssa Adams, Sara Walker) முடிவுகள், இன்னும் பல செய்திகள், குறிப்பாக, ஆய்வாளர் Dave Greene கணனியில் உருவாக்கிய, தன்னைத்தானே நகல் எடுக்கும் நகர்வுகள் என்று தகவல்கள் சொல்லிக்கொண்டே போகிறார்.
இணைந்த கைகள்
மரபணுக்கள் மின் சுற்றுகள் (electrical circuits) போல் இணைந்திருக்கின்றன. உடலின் இயக்கத்துக்குப் புரதங்கள் தேவை. புரதங்கள் தயாரிக்கும் போது அந்தந்த உயிரியல் சுற்றுக்களின் ஸ்விட்ச் மட்டும் போடப்பட்டிருக்கிறது. மற்றவை அணைக்கப் பட்டிருக்கின்றன. புரதங்கள் தயாரித்தது போதும் என்றால் மீண்டும் ஸ்விட்ச் அணைக்கப்பட்டு விடுகிறது.
கரு முட்டையில் இருந்து குழந்தை உருவாகும்போது இப்படி நடந்து கொண்டே இருக்கிறது. முழுதாகக் குழந்தை வளர்ச்சி அடைந்ததும் எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்து விடுகின்றன.
எப்படி இந்த உயிரியல் சுற்றுகள் (bio circuits) அமைந்திருக்கின்றன? (இந்த சுற்றுகளை நாம் கண்ணால் பார்க்க முடியாது. இன்னும் முன்னேறவில்லை.) யார் விளக்கை எரிய விடுகிறார் அல்லது அணைக்கிறார்? யார் மேற்பார்வையில் இந்த செயல்பாடுகள் நடக்கின்றன?
மரபணுக்களை விட்டுவிடுங்கள். எறும்புகள், தேனீக்கள் கூட்டம் ஒரு தனி உயிர் போல் வாழும் வாழ்க்கையைப் பாருங்கள். எறும்புகளின் கண் பார்வை குறுகியது. உணவு தேடல், சேமித்தல், புற்று கட்டுதல் இவை தான் அவைகளின் தினசரி வாழ்க்கை.
தேடல் நடக்கும்போது எல்லாம் ஆளுக்கொரு பக்கம் ஊர்கின்றன. ஒரே குழப்பம். ஆனால் விரைவிலேயே ஒரே திசையில் போக ஆரம்பிக்கின்றன.
என்ன நடக்கிறது? எங்கோ ஓர் தகவல் கிடைத்துவிட்டது. ஒவ்வொன்றும் தலையால் தொட்டுக் கொள்கின்றன. தகவல் பகிரப் படுகிறது. பிறகு, அந்தத் திசை நோக்கி எல்லா எறும்புகளும் பயணிக்க ஆரம்பிக்கின்றன. தகவல் என்பது வழி நடத்துகிறது. இணைக்கிறது. வாழ வைக்கிறது.
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யம்
பேராசிரியர் ஓர் இயற்பியலாளர். ஆகவே குவாண்டம் உலகும் உயிர் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கலாம் எனும் கோட்பாட்டை (இன்னும் கூடிய எச்சரிக்கையோடு) பேராசிரியர் முன் வைக்கிறார்.
குவாண்டம் உயிரியல் புதியதோர் துறை. இதில் இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று அவரும் இன்னும் இதில் ஆர்வம் கொண்ட வேறு இயற்பியலாளர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.
அணுக்களையும் அவற்றின் சக கூறுகளையும் ஆராயும் துறை குவாண்டம் இயற்பியல். அது ஆழம் நிறைந்த கடல். கடலுக்குள் என்ன இருக்கிறது? யாருக்கும் தெரியாது.
இயற்பியல் துறையில் உள்ளவர்களிடம் குவாண்டம் பற்றிக் கேட்டால் அனைவரும் நெளிவார்கள். வளைவார்கள். (நேரே பார்த்து சொல்வது கஷ்டம்.)
ஏன்? குவாண்டம் கூறுகள் எதுவும் புரிவதே இல்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத அத்தனையும் அந்த உலகில் அரங்கேறுகின்றன.
அணுவோ அதன் கூறுகளோ, சக்தி கொஞ்சமாய் இருந்தால் எந்தத் தடைகளையும் அனாயாசமாய்க் கடந்து போகின்றன. சக்தி கூடியிருந்தால் அசைய மாட்டாமல் தடுமாறுகின்றன.
அடுத்த வீட்டுக்குப் போக சுவரேறிப் பாய்ந்தால் எடுக்கும் நேரமும் இங்கிருந்து அடுத்த பிரபஞ்சம் போய் அதையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு அதே வீட்டுக்குள் போய் நிற்க எடுக்கும் நேரமும் அவர்களுக்கு ஒன்றாகவே இருக்கிறது.
அவர்கள் உலகில் நேரம் என்பதே இல்லையா?
நம் உலகில் காலம் முன்னோக்கியே செல்கிறது. பின்னே போவதில்லை. அவைகள் முன்னும் பின்னும் போகின்றனவா? எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
அணுக்களையும் அவற்றின் சக கூறுகளையும் துகள்கள் என்று சொல்வதா? அலைகள் என்பதா? இரண்டின் தன்மைகளும் ஒரு சேரக் கொண்டிருக்கின்றன.
குவாண்டம் உலகு சிக்கல்கள் நிறைந்தது. குழப்பங்கள் நிறைந்தது. அடுத்து என்ன நடக்கலாம் என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில் அசையும் உலகம்.
(பேராசிரியர், சிக்கலையும் நிச்சயமற்ற தன்மையையும் உயிர் வாழ்வின் அடிநாதமாக முன் வைத்ததைக் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். இதுக்குள் குவாண்டம் உலகம் எதுக்கு? அதை ஏன் உயிரியலில் புகுத்த வேண்டும்? பல உயிரியலாளர்கள் மல்லுக்கு நிற்கிறார்கள்.)
இருந்தாலும் அய்யாவின் வாதத்தையும் கேட்டு விடுவோமே.
இன்றைய கணனிகள் 0, 1 என்கிற இரண்டு எண்களை மட்டுமே உபயோகிக்கின்றன. (ஸ்விட்ச் போடப் பட்டிருக்கிறது. அல்லது அணைக்கப் பட்டிருக்கிறது.) இந்த இரண்டு நிலைகள் மட்டும் இருப்பதால் அவை தடுமாறிக் கொண்டிருக்கின்றன. விரிந்த எல்லைகள் இருந்தால் தான் எந்த ஓர் கணனியும் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
நம் மரபணுக்களின் ஆற்றலின் ஓர் பகுதியைக் கூட இந்த ரெண்டு டிஜிட்டல் கணனிகளால் எட்ட முடியாது.
இன்று குவாண்டம் கணனிகள் பற்றிய ஆய்வுகள் நடக்கின்றன. இவை புழக்கத்துக்கு வருமானால் அந்தக் கணனிகள் 2^270 நிலைகளில் இருந்து (அதாவது 2 ஐ 271 தடவை பெருக்கினால் என்ன எண் வருமோ அத்தனை நிலைகளிலும்) ஒரே நேரத்தில் செயலாற்ற முடியும்.
உயிரினங்கள் ஓர் அற்புதமான, வேகமாக செயல்படும் கணனிகள் என்று ஏற்றுக் கொண்டால், குவாண்டம் கணனிகளின் செயல்பாடுகளையும் அவற்றோடு ஒப்பு நோக்கலாம்.
மனம் அலை பாயுதே கண்ணா
சுய உணர்வு எப்படி உருவாகிறது? எந்த உடல் கூற்று விதிகள் மனம் என்பதற்கு அடிப்படையாய் இருக்கின்றன? எந்த அறிவியல் கோணத்திலும் இன்னும் சரியாகச் சொல்ல முடியவில்லை.
தகவல்கள், ஒரு முகவர் (agent) போல் பின்னால் இருந்து மனம் என்பதை உருவாக்குகின்றனவா? பேராசிரியர் கேட்கிறார்.
மனம் வாழ்கிறது என்றால் தகவல்களும் வாழ்வு கொண்டவை. மனதை உடலில் இருந்து பிரிக்க முடியாது என்றால் தகவல்களும் அப்படியே. (உயிர் வேறு மனம் வேறு என்போருக்கு இந்தப் பதில் திருப்தி அளிக்காது. தெரிந்ததே. இது மற்றவர்களுக்காக.)
கடிகார முள் தான் ஓடுகிறது. நேரம் அல்ல.
காலத்துக்குத் திசையும் இல்லை. அது ஓடுவதும் இல்லை. (இயற்பியலில் இது முக்கிய கொள்கை. – எனது கால தேவன் கதை கட்டுரை பார்க்கவும்.)
நேற்று இருந்த நானும் இன்று இருக்கும் நானும் வெவ்வேறு. அதிகம் ஏன்? போய்விட்ட கணத்தில் இருந்த நான் வேறு. இந்தக் கணத்தில் இருக்கும் நான் வேறு. உளவியலாளர்கள் மத்தியில் இருக்கும் பல கருத்துக்களில் இதுவும் ஒன்று.
தகவல்களுக்கு சக்தி மற்றும் ஓர் வரம்பு இருக்கிறது என்று முன்னைய தொடரில் Rolf Landauer சொன்னதை நினைவில் கொள்ளவும். அதன்படி சேமிக்கப் பட்டிருக்கும் தகவல்கள் மிகவும் மெதுவாக, ஒரு சிக்கலான வடிவத்தில் வெளிப்படுகின்றன. இந்தத் தகவல்களின் தொடர்ச்சி தான் “நான்” எனும் பிரமையை உண்டாக்குகிறதோ?
தவிர, புதிய தகவல்கள் கிடைக்கும் போது, அவை பழைய தகவல்களோடு ஒப்பு நோக்கிப் பார்க்கப் படுகின்றன. இந்தச் சிறு சிறு வேறுபாடுகளை ஒவ்வோர் நிலையாக தொடர்ச்சியாகக் காணும் போது ஓடுவது போல ஒரு மாயை உருவாகிறது. இதைத்தான் காலம் ஓடுகிறது என்று சொல்கிறோமா?
உயிரியல் தகவல்கள் மரபணுக்களில் உள்ளார்ந்து இருப்பவை அல்ல. அவை தனியான ஓர் அமைப்பு என்பதைப் பேராசிரியர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். இதற்கென்று புதிய இயற்பியல் விதிகள் தேவை என்பது அவர் வாதம்.
இரண்டு ராஜ்யங்களின் மேலே ஓர் சாம்ராஜ்யம்
நாம் பார்க்காவிட்டால், குவாண்டம் உலகத்தில் அணுக்கள் எல்லா “நிலைகளிலும்” இருக்கின்றன. இங்கே என் அருகில், உங்கள் அருகில் அல்லது இந்த உலகின் எந்தப் பகுதியிலும் அது இருக்கிறது. ஏன், மற்ற பிரபஞ்சங்களிலும் கூட எங்கும் ஒரே சமயத்தில் இருக்கிறது.
ஒரு அணுவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அத்தனை நிலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு நிலையில் வந்து குவிகின்றன. இந்த உலகில் வந்து நிற்கின்றன. இங்கே குறிப்பிட்ட அணு “தற்போது” இருக்கிறது என்று குறித்துக் கொள்ளலாம். அவ்வளவே.
பார்ப்பதால் அணுவின் செயல்பாடுகள் பாதிக்கப் படுகின்றன.
இந்தக் கோட்பாடு தான் வேறு எந்த விளக்கங்களை விட, இதுவரை பெருவாரியான இயற்பியலாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்தக் கொள்கை கடந்த 20 ஆண்டுகளில் காலாவதி ஆகிவிட்டாலும் நமக்கு வேறு வழி தெரியவில்லை. (பேராசிரியர் கவலைப் படுகிறார்.)
இதன்படி இரண்டு நிலைகள் உள்ளன. 1) எங்கும் இருக்கக் கூடிய குவாண்டம் நிலை. 2) பார்த்தபிறகு இருக்கும் ஒரே இடத்தில் குவியும் ஒரு நிலை (இந்த உலக நிலை). ஆகவே இரண்டும் வேறு வேறு தளங்களில் வேறு வேறு விதிகளில் இயங்குவதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.
இந்த இரண்டு உலகையும் (அமைப்புகளையும்) இணைப்பது எது? அது தகவல் ஆகத் தான் இருக்க முடியும் என்கிறார் பேராசிரியர்.
தகவல்கள் இரண்டு உலகங்களிலும் சஞ்சரிப்பதால் அதற்கென்று தனி இயற்பியல் விதிகள் வேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
இரண்டு உலகங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை. விதிகளும் வேறானவை. ஆகவே இணைப்பு நடக்கும்போது விதிகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இது தகவல்களின் மிக முக்கிய தன்மை.
இன்றைய சதுரங்க விளையாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஆளுக்கு 16 கட்டைகளுடன் மாறாத விதிகளுடன் ஆட்டம் துவங்குகிறது. வேறு எவரையும் விட, அதி கூடிய புள்ளிகள் பெற்றால் அவர் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிடுகிறார்.
ஆட, ஆட விதிகளும் மாறுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். கிராண்ட் மாஸ்டரை ஒரு கத்துக்குட்டிப் பையனே கவிழ்த்து விடுவான். யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.
உயிர் வாழ்க்கையும் கிராண்ட் மாஸ்டர் போலவே சுற்றுச் சூழலை எதிர்த்து, அதைப் பயன்படுத்தி எதிர் நீச்சல் போட்டபடியே இருக்கிறது. உயிர் வாழ்வில் விதிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதாவது தகவல் உலகத்து விதிகள்.
பெருவாரியான உயிரியலாளர்கள் இன்னும் வேதி இயலையும் மரபணு இயலையும் மட்டுமே உயிர் வாழ்வின் மய்யமாக வைத்து அதன் மூலம் வாழ்வை விளக்க முயல்கிறார்கள்.
இயற்பியலாளர்கள் கூட, தகவல் அவசியம் என்று ஒத்துக் கொண்டாலும் அது நம் மனதின் கற்பனையே தவிர, நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை என்று கொள்கை வைத்திருக்கிறார்கள். (எல்லாரும் அல்ல).
இயற்பியல் அமைப்புகள் மட்டுமே உண்மை. இவை தான் உயிர் வாழ்வின் அடித்தளம். நம் மனதில் எழும் எல்லாக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அவை மேல் சுமத்தி வைத்திருக்கிறோம். இரண்டு நிலைகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவர்கள் நினைப்பது முற்றிலும் தவறு. இது பேராசிரியரின் கருத்து.
பேராசிரியர் தனது சிந்தனைகளைக் கோட்பாட்டு அடிப்படையில் வைத்தாலும் முடிந்தளவு மற்ற அறிவியலாளர்களின் ஆய்வுக்குக் கட்டுரைகளையும் மேற்கோள் காட்டுகிறார்.
கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டேன்:
தனது முடிவுகளுக்கு ஆதாரங்கள் போதாது என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார். அடுத்து, பெருவாரியான அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ளும் (mainstream scientists) பாதையில் இருந்து விலகுவதால், இவரின் சிந்தனைகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பது வருத்தம் தரும் செய்தி.
புரட்சிகரமான ஓர் சிந்தனையை ஆராயாமல் அலட்சியப் படுத்துகிறோமா?
எப்படியோ, பேராசிரியர் சொல்லாமல் விட்ட ஒரு தகவல் இது. பரிசுத்த வேதாகமத்தின் முதல் வரி (ஜான் 1:1) இப்படி ஆரம்பிக்கிறது:
ஆதியில் வசனம் இருந்தது .