வங்கிகள் அவசியம் தான். ஆனால், அவர்களைக் கண்மூடித்தனமாக ஆட்டம் போடவிட்டால் ஆபத்து. ஏற்கெனவே பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறோமே. இன்னுமா நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? பொருளியல் பேராசிரியர் ஆன் பெட்டிஃபோர் (Ann Pettifor) கேட்கிறார்.
அவர் எழுதிய The Production of Money – how to break the power of banks என்கிற சிறு நூலில் இருந்து சில கருத்துக்கள் – என் பார்வையில்.
இவை செல்வந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொருந்தும். அதே கொள்கைகளைத் தானே வளர்முக நாடுகளும் பின்பற்றுகின்றன?
எங்கேயும் எப்போதும்
இந்தக் கட்டுரை எழுதத் துவங்கும் நாளில் (07.03.2020) இந்தியாவின் Yes வங்கி, நான் திவால் ஆகிவிட்டேன் என்று அறிவித்துவிட்டது. அதில் காசு போட்டிருந்தவர்கள் அய்யோ! அய்யோ! என்று அழ ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்குக் காரணமான அந்த வங்கியின் மேலாளர்கள், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா? கடந்த காலங்களில் இப்படிப் பல வங்கிகள் கவிழ்ந்திருக்கின்றன. ஆனால் அத்தனை களவாணிகளும் இன்றும் நன்றாகவே இருக்கிறார்கள். உலகம் பூரா.
வேண்டுமானால், இன்றைய நிர்மலா அம்மா அல்லது அன்றைய சிதம்பரம் மற்றும் மன்மோகன்சிங் அய்யாக்களைக் கேட்டுப் பாருங்கள்.
இப்படி நடந்துகொண்டே இருப்பது இன்று நேற்றல்ல. இன்றைய டிவி சீரியல்கள்கூட ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும். இவை முடியாத தொடர்கள்.
2008 களில் அமெரிக்காவில் லேமான் பிரதர்ஸ் (Lehman Brothers Holdings Inc.) என்கிற பெரும் பன்னாட்டு முதலீட்டு வங்கி 158 ஆண்டுகள் ஒடி ஒடிக் கடைசியில் 2008 களில் ஒரேயடியாய் மூழ்கி விட்டது.
பொருளாதார நிபுணர்கள் அந்த ஆண்டை இன்றும் கலவரத்தோடு நினைவு கூர்வார்கள். ஏன்? எல்லா வங்கியாளர்களும் ஒருவரோடு ஒருவர் கொடுக்கல் வாங்கல்கள் என்று ஏகப்பட்ட மில்லியன்கள் டாலர்கள் கணக்கில் “பிசினஸ்” செய்பவர்கள் என்று எவருக்கும் தெரியும்.
ஒருத்தருக்கு சளி பிடித்தால் மற்றவர்களுக்கும் பிடிக்க நேரம் போகாது. அப்போ வைரஸ் காய்ச்சலுக்கும் மட்டும் என்ன விதிவிலக்கு? அந்த வங்கி திவாலாக, மற்ற “பெரிய்ய ” வங்கிகளுக்கும் நடுக்கம் வந்துவிட்டது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க நாட்டில், ஏன் முதலாளித்துவ – ஜனநாயகம் நிலவும் அத்தனை நாடுகளிலும் உள்ள வங்கிகளுக்கு தில் அதிகம். நாம் என்ன கூத்தடித்தாலும் பிரச்னை என்று வந்தால் அந்தந்த அரசுகள் உதவிக்கு ஓடி வரும் என்று அவர்களுக்குத் தெரியும்.
2008 ல் ஏற்பட்ட நெருக்கடி, வழக்கத்தை விட அதிக அளவில் இருந்ததால் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அவ்வளவே. அது சரி. இதுக்கெல்லாம் யார் காசு கொடுத்து இந்த வங்கிகளைக் கைதூக்கி விடுவார் என்று நீங்கள் யோசிக்கலாம்.
மத்திய வங்கி என்று ஒன்று ஒவ்வொரு நாட்டிலும் இருப்பது தெரிந்த விஷயம். இதன் கீழ் தான் உள்நாட்டு வங்கிகள் இயங்குகின்றன என்பதும் தெரிந்த விஷயம்.
ஆகவே, அரசின் நிதி அமைச்சர் மற்ற அதிகாரிகளோடு அவசர அவசரமாய் ஆலோசனை நடத்துவார். பிறகு மத்திய வங்கி ஆட்களுக்கு போன் பண்ணுவார். “நீங்க ஏதாவது செய்யப்பிடாதா, தலைவா? ” என்று பிலாக்கணம் வைப்பார்.
மத்திய வங்கி ஆட்கள் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய மொக்கைகள் அல்லவே. அதை அரசியல்வாதிகள் அல்லவா பார்த்துக் கொள்ள வேண்டும்?
நீங்க யோசிக்காதீங்க. அரசு காசு தரும். எல்லாரின் காசுக்கும் அது உத்தரவாதம் என்று அறிவித்து விடுங்கள் என்பார்கள்.
அரசுக்கு எங்கிருந்து காசு வரும்? அது ஒன்றும் செய்யாது. மத்திய வங்கி, திவால் வங்கியின் பேரில் இவ்வளவு கடன் என்று அதன் கணக்கில் பற்று எழுதுவார்கள். திவால் வங்கியின் கணக்கில் அதை வரவு வைத்து விடுவார்கள்.
இது மின் யுகம். அடுத்த செக்கன்ட்டில் திவால் வங்கியின் கணனியில் அது மின்னும். நிம்மதி? தப்பு. நாட்டு மக்களுக்கு அது இரட்டை சுமை.
புதிதாக உருவாக்கிய பணம் ஒரு பக்கம் இருக்க, திவால் வங்கியின் கடன்களை யார் பொறுப்பேற்பது? அது மக்கள் தலையில் தான் வந்து விடியும். புதிய வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் அந்தக் கடன்களை அரசு சரி செய்யப் பார்க்கும்.
அமெரிக்க நாட்டின் 60 Minutes என்கிற நேர்காணல் நிகழ்ச்சி உலகப் பிரசித்தம். அரசியல்வாதிகள், பிரபலங்கள் எல்லாரையும் பேட்டி கண்டு கேள்விகளால் துளைத்து மடக்கக் கூடியவர்கள்.
அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநர், Bernanke (Governor, FED) யாருக்கும் லேசில் பேட்டி கொடுப்பதில்லை. ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம். நேர்காணல் செய்த நிருபர் Scott Pelly யும் லேசுப்பட்ட ஆளில்லை.
நேர் காணலில் நிருபர் கேட்கிறார்:
லேமான் வங்கி ஆட்டம் காணப் போகிறது என்று செய்திகள் வந்து கொண்டிருந்த சமயத்திலேயே நீங்கள் அவர்களுக்கு 62 டிரில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தீர்களாமே? எப்படிக் கொடுத்தீர்கள்? அது மக்களின் வரிப்பணமா?
ஆளுநர் : அவர்கள், எங்கள் நிதிநிலைமை சரியில்லை. எக்கச் சக்கமாய் பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திட்டோம். கடனைத் திருப்பிக்கட்ட கஷ்டமாக இருக்கிறது. உதவி பண்ணுங்க என்றார்கள்.
நிருபர்: சரி. பணம் எங்கிருந்து வந்தது?
ஆளுநர்: கணனியில் அந்தத் தொகையை எழுதி பட்டனை அழுத்தினோம்.
நிருபர்: அவ்வளவு தானா ?
ஆளுநர்: அவ்வளவு தான். இதைத்தான் நாம் இத்தனை காலமாய் செய்து கொண்டிருக்கிறோம்.
(இது Fake news அல்ல. கீழ் உள்ள இந்த இணைப்பை அழுத்தி Youtube இல் அந்த நேர்காணலைக் காணவும். )
ஆகவே , மத்திய வங்கி ஆளுநர் சர்வசாதாரணமாய் ஒரு கணனி பட்டனை அழுத்துவதன் மூலம் பணத்தை உருவாக்க முடியும் என்றால்..
இது ஒரு புறம் இருக்கட்டும். புகழ் பெற்ற அன்றைய பொருளியல் மேதை , கெயின்ஸ் ஒருமுறை குறிப்பிட்டதை நோக்குவோம்:
கடன் என்பதை வங்கிகளால் மிக மிக சாதாரணமாய் உருவாக்க முடியும் என்றால் ஏன் வங்கிகள் கடன் கொடுக்க மாட்டோம் என்று அடாவடித்தனம் பண்ணுகின்றன? ஒரு பைசா கூட செலவழிக்காமல் உருவாக்கும் பணத்துக்கு எதற்காக அவர்கள் வட்டி வாங்க வேண்டும்?
மீண்டும் நேர்காணல். ஓரிடத்தில் நிருபர் கேட்கிறார்: அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ மீண்டும் தவறு செய்யலாம் இல்லையா? அப்படி நேராமல் தடுக்க என்னென்ன வழிவகைகள் வைத்திருக்கிறீர்கள் ?
ஆளுநர் : ஒன்றும் இல்லை. அவர்கள் பெரும் வங்கியாளர்களாய் வளர்ந்து பிரம்மாண்டமாய் நிற்கிறார்கள். நாடுகளின் பொருளாதாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. நாம் கட்டுப் படுத்த முடியாது. வேண்டுமானால் நாம் யோசனைகள் சொல்லலாம்.
இதை வாசிப்பவர்களில் சிலர் இந்தப் புள்ளியை அனாயாசமாகக் கடந்து போகலாம். கேட்டால், அது தான் உண்மை நிலவரம் என்பார்கள். இன்றைய பொருளாதாரம் தெரிந்தவர்கள் இவர்கள் . அதில் என்ன தப்பு? என்றும் திருப்பிக் கேட்கக் கூடும். விட்ருங்க.
அதெப்படி? அநியாயமா இருக்கே, பெருசா வந்திட்டா எல்லாமே சரியாயிருமா? என்று மற்றவர்கள் கேட்கக் கூடும். அப்படி நேர்மை, நியாயம் என்று பேசுபவர்களுக்காக, வங்கிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்காக அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், எளிய நடையில் எழுதி இருக்கிறார் பேராசிரியர்.
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
வங்கிகள் என்றதும் பணம் தான் ஞாபகம் வரும். ஆனால் பணத்தை யார் உருவாக்குகிறார்கள்?
வங்கிகளா? இல்லை. வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தான் பணத்தை உருவாக்குகிறார்கள் என்கிறார் பேராசிரியர்.
பணம் உருவாக முன்பு அதற்கான “கிராக்கி” உருவாகி இருக்க வேண்டும். கிராக்கி இல்லாமல் எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை. மதிப்பு என்பதை மனிதர்கள் தான் உருவாக்குகிறார்கள். அந்த மதிப்பை அளக்க, பங்கிட பணம் தேவைப்படுகிறது.
இங்கே “பணத் தேவை” என்பது கிராக்கி . அதை உருவாக்குவோர் வாடிக்கையாளர்கள். அவர்கள் இல்லை என்றால் வங்கி ஏது ?
பணம் ஒரு பொருள் என்பது போல இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கை தப்பும் தவறுமாய் விளக்கம் கொடுக்கிறது. பல்கலைக் கழகங்களில், வங்கித் துறையில் இப்படித் தான் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று சாடுகிறார் அவர்.
பணம் என்றால் சேமிப்பு என்றும் வங்கிகள் கொடுக்கும் கடன் என்றும் வரைவிலக்கணம் தருகிறார்கள். அதுவும் பணத்தின் விலை என்பதை சந்தை தான் தீர்மானிக்கிறது என்கிறார்கள்.
பொருளியல் வரலாற்று ஆசிரியர் Karl Polanyi சொல்வதைக் கவனிக்க வேண்டும்: பணம், வட்டி எல்லாவற்றையும் சமூகம் தான் கட்டமைக்கிறது. பணம் ஒரு நம்பிக்கை. அது சந்தையில் வாங்கும் சரக்கல்ல.
உங்கள் கிரெடிட் கார்டை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை உபயோகிக்கும் வரை அதும் வெறும் அட்டை. எந்த மதிப்பும் இல்லாத வெறும் அட்டை. ஒரு பொருளை/ சேவையை வாங்கும் போதோ அல்லது பணமாய் எடுக்கும் போது மட்டும் தான் அந்த மதிப்பளவு பணத்தை மட்டும் உருவாக்குகிறோம். மிகுதியாய் என்று எதுவும் இல்லை.
பணம் என்பது கடன் என்பதற்கு இன்னோர் எடுத்துக் காட்டு : நம் நிலத்தில் விளைந்த நெல்லை நம் பாவனைக்கே வைத்துக் கொண்டால் அதில் பொருளாதாரமோ எதுவுமோ குறுக்கே வராது. இன்னொருவருக்கு அதை விற்கும்போது தான் பொருளாதாரம் வந்து நிற்கிறது.
வாங்குகிற ஆள் பணம் கொடுக்கிறார் என்றால் அரசு பணம் என்கிற பேரில் என்னிடம் கடன்பட்டு விட்டது என்று அர்த்தம். அந்தக் கடனை, நான் உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் காட்டி, “எனக்கு அந்தப் பொருள் வேண்டும். இந்த சேவை வேண்டும்” என்று கேட்டு வாங்கிக் கொள்ள முடியும். அரசு, கடனுக்கு (பணத்துக்கு) உத்தரவாதம் தருகிறது.
கடனுக்கு நீங்கள் நெல் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அது உங்களுக்கும் வாங்குபவருக்கும் உள்ள நம்பிக்கை. வாங்கினவர் கணக்கை சரி செய்யும் போது (பணம் கொடுக்கும் போது) மீண்டும் மேலே சொன்னபடி, அரசு கடன்பட்டு விடுகிறது.
ஆகவே, (அந்தந்த நாட்டுக்குள்) பொருள்கள், சேவைகளின் மேலே உரிமை கொண்டாடக் கூடிய ஓர் ஊடகம் பணம். அது வங்கி தரும் பண நோட்டுகள், சில்லறை, சொத்துக்கள் என்று எதுவாகவும் இருக்கலாம்.
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் : ஒரு நாட்டின் மத்திய வங்கி, ஒரு ரூபாயை அதன் கீழ் இயங்கும் ஒரு வர்த்தக வங்கிக்குக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கிக்கு அந்த ஒரு ரூபா அதன் சொத்து. அதே சமயம் மத்திய வங்கிக்கு ஒரு ரூபா கடன் பாக்கி.
ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியிடம் ஒரு லட்சம் ரூபா கடன் வாங்கி இருந்தால் அது அவரின் ஒரு லட்சம் ரூபா சொத்தாக இருக்கும். அதே சமயம், அவர் வங்கிக்கு ஒரு லட்சம் ரூபா கடன் பாக்கி வைத்திருக்கிறார்.
பண அமைப்பில் இப்படி எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.
முதலீடுகளுக்கு சேமிப்பு அவசியமா? இல்லை என்கிறார் பேராசிரியர். மேல் சொன்ன அடிப்படையில் பார்த்தால், சேமிப்பு என்பதுவும் அரசின் கடன் என்று தெளிவாகத் தெரிகிறது. நமக்கு அது சேமிப்பு. அரசு என்பது நாம் கேட்கும் போது கொடுத்துவிட வேண்டும்.
அரசு என்பது யார்? நாம் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. அப்போ கடன்காரர் யார்? எல்லாமே தொடர்புகள். தொடர்புகள்.
கடன் என்பதை (பணம்) ஒரு படி மேலே போய் இப்படியும் குறிப்பிடலாம். எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதே. அதை மறந்துவிட்டு, இப்போ சாப்பிடு. அனுபவி. அதாவது எதிர்காலத்தை அடகு வைத்து இன்று நாம் திருப்திப் படுகிறோம். பணம் என்கிற அமைப்பில் தவிர்க்கவே முடியாதது இது.
எனது ராஜ சபையினிலே ஒரே கொண்டாட்டம்
ஆனால் பணத்தை இன்று நாமா உருவாக்குகிறோம்? அந்த வேலையை ஒரு சிறு எண்ணிக்கையில் ஆன புள்ளிகளிடம் கொடுத்துவிட்டு அவர்கள் முன்னால் கைகட்டி, வாய் பொத்தி நிற்கிறோம்.
வங்கிகள் போடும் குத்தாட்டங்களை வரிசைப் படுத்துகிறார் பேராசிரியர்.
ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கு மட்டுமே பணம் அச்சடிக்க உரிமை உண்டு என்பது தெரிந்ததே. இன்றைய கணனி யுகத்தில் சுமார் 5% மட்டுமே நோட்டுகளாகவும் சில்லறையாகவும் புழக்கத்தில் இருக்கின்றன.
மிகுதி 95% கணனியில் இருக்கும் வெறும் இலக்கங்கள். தவிர, பண நோட்டுகளுக்கு கிராக்கி குறைந்து கொண்டே வருகிறது. வங்கிகளுக்குக் கடன் கொடுக்க ஏற்படுத்தப் பட்டிருக்கும் “சுழற்சி” முறை (Fractional Reserves) அவர்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டது.
உதாரணமாய், ஒரு 10 ரூபா கைவசம் இருந்தால் போதும். அவர்கள் 90 ரூபாவைக் கடனாய்க் கொடுக்கமுடியும். எல்லாம் கணனியில் அழகாகவும் கச்சிதமாகவும் குறிப்பு வைத்துவிட்டு எந்த ஒரு திருடனுக்கும் கொடுத்துவிட்டுக் கடன் என்று எழுதிக் கொள்ளலாம்.
யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு எத்தனை மில்லியன்கள் அவர்கள் கையில் புழங்குகிறது? எத்தனை மில்லியன்கள் கடன் கொடுக்கலாம்?
அடுத்து, நிதிச் சந்தைகள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கின்றன. இப்போ போட்டு அடுத்த ஐந்து நிமிஷத்திலோ, ஐந்து மணித்தியாலத்திலோ போட்டதை எடுத்து விடலாம். யாரும் கேட்கப் போவதில்லை. மேலாளர் தான் ராஜா. அரசு எதுவும் சொல்லாது. சட்டங்கள் அப்படி. பொருளியல் நிபுணர்களும் அப்படி.
வங்கிகளின் கடன்களை யாரும் மேற்பார்வை செய்வதில்லை. அனைத்தும் ரகசியமாக செயல்படுத்தப் படுகின்றன. கேட்டால், ஸ்ஸ்.. அவர்களை தொந்தரவு பண்ணாதீர்கள். அவர்களை அவர்கள் பாட்டில் வேலை செய்ய விடுங்கள் என்று வங்கிகளுக்கு செக்கூரிட்டி வேலை பார்க்கிறார்கள் இதே பொருளியல் நிபுணர்கள்.
வங்கிகளால் வானத்தில் இருந்து பணம் உற்பத்தி பண்ண முடியும் என்றால் ஏன் அவர்கள் திவால் ஆக வேண்டும்? பதில்: வரவுகளை உற்று உற்றுப் பார்க்கிற அவர்கள் பற்றுகள் என்ன ஆகின்றன என்று பார்ப்பதில்லை.
கடன் வாங்கியவர்கள் ஒழுங்காய்க் கட்டுகிறார்களா? கட்டாமல் போனதன் காரணம் என்ன? என்ன செய்ய வேண்டும்? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? நம்மிடம் வாங்கிய கடனை வேறு வங்கிகளில் முடக்குகிறார்களா? என்ன தான் நடக்கிறது?இதெல்லாம் யோசிப்பதில்லை.
“நிழல்” வங்கிகள் வேறு (நிதி நிறுவனங்கள், கந்து வட்டிக் காரர்கள்…) நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காணி நிலம், கட்டிடங்கள் பணப் புழக்கத்துக்கு ஆதாரமாய் இருந்த காலம் அந்தக் காலம்.
இன்று கலைப் படைப்புகள், ஓவியங்கள், புரோ நோட்டுகள் (pay bills) என்று ஏகப்பட்ட கடதாசிப் பத்திரங்கள், டிஜிட்டல் பத்திரங்கள் எல்லாம் “செல்வங்கள் ” என்று ஒப்புக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் வாழ்கிறோம்.
இன்னும் பல படிகள் மேலே போய், தனிப்பட்ட மனிதர்களின் கடன்களைக் கூட “எதிர்கால சொத்துக்கள்” என்று அச்சடித்து சம்பந்தமே இல்லாமல் பேர் வைத்து (Special Investment Vehicles) சந்தையில் உலவ விட்டிருக்கிறார்கள் இந்த வங்கி ஆட்கள்.
கேட்டால், இன்று அவை கடன்கள் தான். ஒத்துக் கொள்ளுகிறோம். ஆனால் எதிர்காலத்தில் திருப்பிக் கட்டும் நிலை வருமே. அப்போ அவை செல்வங்கள் அல்லாமல் வேறென்ன என்கிறார்கள். எதிர்த்துப் பேச முடியவில்லை.
நிதிச் சந்தைகள் நமக்கெல்லாம் கிடைத்த வரம் என்று போற்றிப் பாடுவது இந்தப் பொருளியல் நிபுணர்களின் வழக்கம். அதில் கிடைக்கும் மேலதிக பணம் மீண்டும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படுமே என்று அடித்து விடுகிறார்கள் இவர்கள்.
நிதர்சனத்தில் என்ன நடக்கிறது? எடுக்கிற பணத்தை பனாமா, லண்டன், லக்ஸம்பேர்க், முன்னாள் பிரிட்டிஷ் காலனித் தீவுகள்.. என்று கொண்டு போய்ப் பதுக்கி விடுகிறார்கள். (இந்த நாடுகளில் எங்கிருந்து பணம் வந்தது என்று கேள்விகள் கேட்க மாட்டார்கள். வரிகள் போட மாட்டார்கள்.)
தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சேர்ந்து மத்திய வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். பிறகு கன்னா பின்னா என்று கடன் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை அரசின் தலையில் கட்டுகிறார்கள்.
விளைவு? மக்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றுப் போகிறது. தீவிர வலதுசாரி கட்சிகள் அல்லது சர்வாதிகார தலைமைகள் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது.
இந்தப் புள்ளிகளின் கொள்ளையை பொருளியல் நிபுணர்கள் கண்டுகொள்வதில்லை. பதிலாக, மக்களை சிக்கனமாக வாழுங்கள். மக்களின் உதவித் திட்டங்களை நிறுத்துங்கள் என்று அரசுக்கு ஆலோசனை சொல்கிறார்கள்.
இனி பேராசிரியர் 2007-2009 க்குப்பின் நடந்த விவரங்களை அட்டவணை போடுகிறார்.
வங்கிகள் கடன் தரலாம். அல்லது மறுக்கலாம். அது ஜனநாயக மரபு. மறுக்க முடியாது. இந்த நிதி நெருக்கடி தோன்றிய 2007-2009 கால இடைவெளியை எடுத்துக் கொண்டால், பிரச்னை முற்றிலும் தீராத நிலையில், கணக்குப் பார்த்து அரசுகள் “காசு” போடவே, வங்கிகள் மிகவும் எச்சரிக்கையோடு தான் கடன்கள் கொடுத்தன.
இது வாடிக்கையாளர்களை மிகவும் பாதித்தது. வட்டிவீதம் அதிகம். கெடுபிடிகள் அதிகம். ஆகவே வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனங்களை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். விளைவு? பணப் புழக்கம் குறைந்தது. முதலீடுகள் குறைந்தன. வேலை வாய்ப்புகள் அருகிப் போக ஆரம்பித்தன.
தொழிலாளர்களும் மிகுந்த கவனத்தோடு, சிக்கனமாக வாழப் பழகினார்கள். பெரும் ஆரவாரங்கள், விளம்பரங்கள் போட்டு சந்தையில் குவிந்த பொருள்கள் வாங்க ஆளில்லாமல் கவலையோடு மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்தன.
தொழில் பேட்டைகள் எப்போதும் வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித்தான் உற்பத்தி செய்கின்றன. பொருள்கள் விற்கவில்லை என்றால் கடன் கட்ட முடியாது. வட்டியும் ஏறும்.
சந்தையில் பொருள்களை அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டி வரும். இதைப் பொருளியலில் Deflation என்பார்கள். அதாவது பொருள்கள்/சேவைகளின் மதிப்பு உற்பத்தி செலவை விட கீழிறங்க ஆரம்பிக்கும் நிலை.
மேற்குலகப் பொருளியல் நிபுணர்கள் இந்தப் பொருளாதார ஆபத்தை உணர்வதே இல்லை. பணவீக்கம் (Inflation) வந்துவிடக் கூடாது. பொருள்கள்/ சேவைகள் விலைகள் உயர்ந்து விடக் கூடாது என்பதில் தான் கவனமாய் இருக்கிறார்கள்.
பேராசிரியர் deflation என்பதை மிக சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார். அவரின் முன்னைய நூல், The Coming First World Debt Crisis அதற்கு சான்று. (அந்த நூலின் அம்சங்கள் இன்னோர் கட்டுரையில் வரும்.) தவிர, பேராசிரியர் ஸ்ட்ரேக் அவர்களின் கருத்துக்களும் இந்தப் பேராசிரியரின் கருத்துக்களும் ஒத்துப் போவதைக் காண்க.
அடுத்து, இதே நிபுணர்கள் இன்றைய நிதித் துறையை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறார் பேராசிரியர்.
காசு கிடைத்துவிட்டது என்பதற்காக, வங்கிகளும் அதை எதிர்கால முன்னேற்றத்துக்காக, முதலீடுகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கக் கூடாது. மேலாளர்கள், போனஸ், அவர்கள் எடுத்துக் கொண்ட துணிச்சலுக்கான வெகுமதி என்று ஏகப்பட்ட பணத்தை சுருட்டிக் கொண்டார்கள்.
எது துணிச்சலான முடிவுகள் ? முட்டாள்த்தனமாய் பெரும் நிறுவனங்களுக்குக் கடன்கள் கொடுத்ததா? அல்லது எந்தக் கட்டுப் பாடும் இல்லாமல் நிதிச் சந்தைகளில் காசு போட்டு சூதாட்டம் ஆடி இருக்கும் வைப்புப் பணத்தையும் கோட்டை விட்டதா ? அது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
பொருளியல் நிபுணர்கள், எல்லாம் சரியாய் வந்திரும் என்கிறார்கள். அரசுகளும் சரியாய் வந்திரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நிதித் துறை (Finance sector) மற்ற எந்தத் துறையையும் விட அதி உச்சத்தில் இருக்கிறது. பணத்தின் அளவைக் கூட்டிவிட்டால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
உற்பத்தி, பொருளாதார திட்டங்கள், கட்டுமானங்கள் (வீதிகள், வீடுகள், சிகிச்சை மனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள்..) எல்லாம் கீழே போய்விட்டன.
தவிர , குறுகிய கால லாபம் தான் இன்றைய பொருளியல் நிபுணர்கள் முன் வைக்கும் ஒரே கொள்கை. ஆகவே வங்கிகளும் என்ன தில்லுமுல்லுகளும் செய்யலாம் என்கிற நிலைக்குப் போய்விட்டன.
விடியலுக்கில்லை தூரம்
வங்கிகளின் நாட்டாமைத் தனத்தை எப்படி ஒடுக்கலாம்? பேராசிரியர் முன் வைக்கும் யோசனைகள்:
முதலாவதாய், மக்களுக்குப் பணம் என்றால் என்ன என்று புரியவைக்க முயற்சிகள் எடுத்தாக வேண்டும் என்கிறார்.
வங்கிகளின் இன்றைய போக்கைக் கண்டித்து, மக்களின் கோபம் அவர்களின் மீது திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அரசியல்வாதிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் இதில் இணைந்து மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.
பணப் பட்டுவாடா (money supply ) என்பது அரசின் கையில் இருக்க வேண்டும். மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் அல்ல.
இன்று நடைமுறையில் இருக்கும் “சுழற்சி” முறையில் கடன் கொடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டு, தரக்கட்டுப்பாட்டுக்கு (quality) முன்னுரிமை தரவேண்டும். வெறும் எண்ணிக்கைக்கு (quantity)அல்ல.
மத்திய வங்கி, வங்கிகள் அனைத்தும் மத்திய அரசின் கைகளுக்கு மாறவேண்டும்.
பொருளியல் மேதை கெயின்சின் கொள்கைகளை அமுல் படுத்த வேண்டும். (அரசு, பொருளியல் நடவடிக்கைகளின் ஊக்கியாக செயல்பட வேண்டும். தனியார் துறையின் கையில் தூக்கிக் கொடுத்துவிட்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்பது அரசுகளுக்கு அழகல்ல.)
ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழாமல் (பற்றாக்குறை- செலவுகள் கூடிவிடாமல் ) பார்த்துக் கொள்வது எப்படி என்று யோசிப்பது அடி முட்டாள்த்தனம்.
வேலை இன்மையை ஒழிப்பதற்கு முதலிடம் தரவேண்டும்.
நிதித் துறை இன்று பொருளியலை நாட்டாமை செய்கிறது. தவறு. மாற்ற வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் நாட்டாமை செய்ய, நிதியை அதன் வேலைக்காரனாக வைத்திருக்க வேண்டும்.
இத்தாலியின் பிளோரன்ஸ் நகரில், 1694 களில் ஆரம்பித்த வங்கி சேவை தான் இன்றைய மேம்பாட்டுக்கு அடித்தளம். வியாபாரிகள் கந்து வட்டிக்காரர்களை நம்பவில்லை. வங்கிகள் “நம்பிக்கையை ” அடிப்படையாக வைத்துக் கடன் கொடுத்தார்கள். அந்த நம்பிக்கையை வணிகர்களும் காப்பாற்றினார்கள்.
1944 களில் அமெரிக்காவின் Bretton Wood என்கிற ஊரில் 44 மேற்குநாடுகள் சேர்ந்து பொருளாதார மாநாடு ஒன்றை நடத்தின. பிரிட்டனின் சார்பாய், பொருளியல் மேதை கெயின்ஸ் அதில் பங்கு கொண்டார். அதன் முடிவுகள் எப்படி இருந்தாலும் கெயின்சின் யோசனைகளை நாம் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை இது.
கனவு மெய்ப்பட வேண்டும்
நாம் தினமும் எவ்வளவு கையிருப்பில் இருக்கிறது. எவ்வளவு செலவு செய்தோம் என்று பொதுவாக ஒரு கணக்குப் புத்தகம் வைத்து எழுதிக் கொள்வதில்லையா? அது போல எல்லா நாடுகளும் சேர்ந்து ஒரு கழகம் அமைத்து தினமும் அனைத்துலக நாளாந்த வரவு – செலவு கணக்குகளை ஒப்பீடு செய்து கொண்டால் என்ன? இப்படிப் போயிற்று கெயின்சின் சிந்தனை.
அதற்கு International Clearing Union (ICU) என்று பேர் வைக்கலாம். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மத்திய வங்கிகளின் தலைமை அலுவலகமாக அது இருக்கும். அது தனக்கென்று ஒரு நாணயம் உருவாக்கி வைத்திருக்கும். அதன் பேர் Bancor.
ICU கழகம், ஒவ்வொரு நாள் இரவும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா நாடுகளும் செய்துகொண்ட வணிக கொடுக்கல் – வாங்கல் கணக்குகளை கூட்டிக் கழித்து ஒவ்வொரு நாட்டுக்கும் அன்றைய வரவு – செலவுப் பட்டியல் தயாரிக்கும். (எல்லா நாட்டுப் பண மதிப்புகளும் Bancor நாணய மதிப்பில் இருக்கும்.)
யாரிடம் அன்று பற்று கூடி இருக்கிறது? அதாவது, வரவுக்கு மேல் செலவு போயிருக்கிறது? அவர்களுக்கு மிகைப்பற்று பணம் (overdraft) கொடுக்கப்படும். தண்டனையாக, ஒரு குறிப்பிட்ட வட்டியை (தொகையை) அவர்கள் ICU கழகத்துக்கு செலுத்த வேண்டும்.
யாரிடம் வரவு கூடி இருக்கிறது? கெட்டிக்காரன் என்று பரிசு கொடுப்பார்களா? இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரவுகள் கூடிப் போகக் கூடாது. தவறினால் அவர்களும் தண்டம் செலுத்த வேண்டும்.
எல்லாரும் கண்டிப்பாக, சட்டங்களை மதிக்க வேண்டும். ஏன் இப்படி விதிகள் அமைக்க வேண்டும்? இங்கே தான் கெயின்ஸ் உயர்ந்து நிற்கிறார்.
எல்லா நாடுகளும் பணக்கார நாடுகள் அல்லவே. சில செல்வம் கொழிப்பவை. பெருவாரி நாடுகள் ஏழைகள். வறுமை மிகுந்தவை என்பதற்காகத் தான் மிகைப் பற்று பணம் கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் முன்னேறப் பார்க்க வேண்டும்.
உற்பத்தியைப் பெருக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதிகளை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். எந்த நாளும் அய்யா! சாமி ! என்று பிச்சை வாங்கியே காலங் கழித்துக் கொண்டிருந்தால் எப்படி?
அது போல, வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதியை மட்டுமே பெருக்கிக் கொண்டிருந்தால் உள்நாட்டை யார் கவனிப்பது? உள்நாட்டின் கட்டுமானம் மற்றும் மக்களின் தேவைகளில் அவர்கள் கவனம் போவது நல்ல விஷயம் இல்லையா?
இன்னொன்று : இன்று ஒவ்வொரு நாடுகளின் பணமும் நாணய சந்தைகளில் ஓட விடப்பட்டு செக்கன்டுக்கு செக்கன் அவைகளின் மதிப்பு, கேவலம் ரேஸ் குதிரைகள் மதிப்பு போல் ஆகிவிட்டது பெரிய சோகம். இது கெயின்ஸ் காலத்திலேயே துவங்கிவிட்டது. ஆகவே பொது உலக நாணயம் ஒன்றை உருவாக்கினால் இந்த சூதாட்டத்தை சரி செய்துவிடலாம் என்பது அவர் கணிப்பு.
அடுத்து வெளிநாடுகளில் இருக்கும் முதலீடுகளை உள்நாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் உள்நாட்டின் பொருளாதாரம் பெருகும்.
ஆனால், அவரின் சிந்தனைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள். பெரிய நாடுகளுக்கு அது பிடிக்கவில்லை. அமெரிக்காவின் திட்டம் வேறு. சோவியத் ரஷ்யாவின் நோக்கம் வேறு. மற்றவர்களும் ஆளுக்கு ஒரு ஐடியா வைத்திருந்தார்கள்.
கடைசியாக, எல்லாரின் யோசனைகளையும் அங்கே வெட்டி, இங்கே ஒட்டி ஏதோ ஒரு கிராபிக் அனிமேஷன் படம் போல் தயாரித்து, எல்லாரும் கையொப்பம் வைத்து ஒரு மாதிரி ஓய்ந்தார்கள் என்று சொல்லலாம்.
மை காயும் முன்னரே ரஷ்யா விலகிவிட்டது. அமெரிக்காவின் பக்கம் தான் கடைசியாய் வென்றது என்று இங்கே சொல்லத் தேவை இல்லை. இந்த ஒப்பந்தத்தின் நீட்சியாக இன்று வளர்ந்து நிற்பவர்கள் இன்றைய அனைத்துலக நாணய கழகம் (IMF) மற்றும் உலக வங்கி (World Bank).
இந்த IMF, WB களின் மேற்பார்வையில் நடக்கும் இன்றைய பொருளாதார சண்டைக்கு ஒரு உதாரணம்: ஜெர்மனியும் கிரேக்கமும்.
இரண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். ஜெர்மனி வளர்ந்து கெட்டியான பொருளாதார தளத்தில் நிற்கிறது. அது எவ்வளவும் வரவுகளைக் கூட்டிக் கொண்டே போகலாம். எல்லையே இல்லை.
கிரேக்கம் அப்படி அல்ல. கடன் வாங்கியே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. அதிக வட்டிக்கு EU மத்திய வங்கியிடம் கடன் வாங்கி அவர்கள் சொல்கிற சட்ட திட்டங்களுக்கெல்லாம் தலையாட்டி, உள்நாட்டு பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறது. கடன் ஏற எற, கெடுபிடிகளும் கூடுகின்றன.
அதாவது, ஜெர்மனிக்கு ஒரு சட்டம். கிரேக்கத்துக்கு ஒரு சட்டம் என்பது தான் IMF + WB கூட்டாளிகளின் கொள்கை. இப்படி இருந்தால் எப்படி ஐரோப்பிய ஒன்றியம் உருப்படும்?
மேல் சொன்ன கூட்டாளிகள், சொல்லப்பட்ட இன்றைய பொருளியல் நிபுணர்களின் கொள்கைகளை அப்படியே உள் வாங்கிக் கொண்டவர்கள்.
இவை எல்லாம் சரி செய்யப் பட வேண்டும். முக்கியமாய், பெண்கள் அரசியலில், பொருளியல் துறைகளில் காலூன்ற வேண்டும் என்று விழைகிறார். தொழிலாளர் கழகங்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எல்லாரும் இணைய வேண்டும் என்கிறார் அவர்.
காசு இல்லை. சிக்கனமாய் இருங்கள் என்று இந்தப் பொருளியல் நிபுணர்கள் அரசுகளுக்கு சொல்வதெல்லாம் பொய். பெரும் பொய்கள்.
வங்கியாளர்களை முதலில் அடக்குங்கள். காசு வருகிறதா, இல்லையா என்பதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்.
பேராசிரியரின் புத்தகம் ஒரு சுவாரஸ்யமான கதை போல் நீள்கிறது. ஆனால் உண்மைக் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை.
கதையின் சில கட்டங்களை மட்டும் இந்தக் கட்டுரை தொட்டுக் காட்டுகிறது. முழுக் கதையையும் பேராசிரியரே சொல்லி விடட்டுமே.