நல்லவன் எனக்கு நானே நல்லவன்

மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அன்பானவர்கள், பண்பானவர்கள், பாச மலர்கள், பன்னாடைகள், படா கிரிமினல்கள், பைத்தியங்கள், எதிலும் சேர்த்தி இல்லாத காமா சோமாக்கள் என்று எத்தனையோ ரேஞ்சுகளில் பார்க்கிறோம். மனிதர்களின் குணாதிசயங்கள் ஏன் இப்படி ஒரே கராபுராவாய் இருக்கின்றன?

விடை ஒன்றல்ல. பல விடைகள் இருக்கின்றன என்கிறார் மூளை நரம்பியல் பேராசிரியர் சப்போல்ஸ்கி (Robert Sapolsky). அவர் எழுதிய Behave என்கிற நூல் நூலே அல்ல – அது ஓர் பெரும் அறிவுக் களஞ்சியம். 2017 களில் வெளிவந்த புத்தகம். 773 பக்கங்கள். 17 அத்தியாயங்கள்.

நான் இரண்டு அத்தியாயங்களில் மட்டும் (அத்தியாயம் 10, 14) கை வைத்திருக்கிறேன். அத்தோடு கூடுதலாக சில தகவல்கள்.

அந்தப் படுபாவி ஹிட்லர் இருக்கானே. அவன் மட்டும் என் கையில் சிக்கியிருந்தால் ?.. என்று நூலை ஆரம்பிக்கிறார் பேராசிரியர். பிறகு என்னென்ன சித்ரவதைகள் செய்வேன் என்று வேறு பட்டியல் போடத் துவங்குகிறார்.

என்னது? பேர் பெற்ற அறிவியலாளர் ஒருவர் இப்படி எழுதலாமா? பிறகு விஷயம் புரிந்தது. தன் பள்ளிப்பருவ வயதில் இப்படி எல்லாம் கற்பனை செய்வதில் கிடைத்த ஒரு சந்தோஷம் அது என்று தொடர்கிறார். (பேராசிரியர் ஒரு யூதர்.)

அநீதிகள், அநியாயங்கள் என்று வரும்போது தடுக்க முடியவில்லை என்றால் வேறென்ன செய்வது? அதற்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. இப்படிக் கற்பனை செய்து கோபங்களை ஆற்றிக் கொள்கிறோம் என்கிறார் அவர்.

வன்முறைக்கு எதிரானவர்கள் நாம் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். சமூக நீதிக்காக, கையில் தராசு வைத்திருக்கும் தேவதைக்காக, நாட்டுக்காக, மொழிக்காக, இன்னும் பல …. க்காக, வன்முறை உபயோகப்படும் என்றால் ம்ம்.. பண்ணலாமே என்கிறோம். இல்லையா? – கேட்பது அவர்.

அதாவது, நாம் வன்முறையை வெறுப்பவர்கள் அல்ல. சரியான திசையில் அது நகருமானால் அதற்கு ஜே! போட ரெடியாக இருக்கிறோம்.

அன்பு என்றால் உருகிப் போகிறோம். அதில் கரைந்து போய் கண்ணீர் விடுகிறோம். பேராசிரியரின் பார்வையிலோ அன்பு வேறொரு பரிமாணம் எடுக்கிறது. அன்புக்குள் ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது என்கிறார். அதே சமயம், மனித மனத்தின் ஒரு முக்கிய பங்காளியாய் அது இருக்கிறது என்பதை அவர் மறுக்கவில்லை. இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தத்துவம்: மனித மனம் ஒரு புதிர். இரண்டு நிகழ்வுகளை விவரிக்கிறார் பேராசிரியர்.

இந்தோனிஷிய முன்னாள் சர்வாதிகாரி சுஹார்ட்டோவின் குண்டர் படையில் இருந்து ஒய்வு பெற்ற ஒரு முன்னாள் குண்டரை பேட்டி எடுத்திருக்கிறார் புகழ் பெற்ற நோபல் பரிசு எழுத்தாளர், நைப்பால் (V.S.Neipal).

(சுஹார்ட்டோ ஆட்சிக்கு வந்ததும் சுமார் அரை மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவரின் எதிரிகள், கம்யூனிஸ்டுகள், சீனர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் கூடக் கொன்று குவிக்கப் பட்டார்கள்.)

குண்டர்கள் குழு ஒவ்வொரு கிராமமாய் வந்திறங்குமாம். அங்கிருக்கும் அத்தனை பேரையும் கொலை செய்யாமல் அடுத்த கிராமம் போவதில்லை. ஒரு வித்தியாசம்: கூடவே ஒரு இசைக்குழுவும் அவர்களுடன் வரும்.

இன்னிசை முழங்க, முழங்கக் கொலைகள் விழும். நைப்பால் கேட்டாராம்: கொலை செய்யப் போகிறீர்கள். அதற்கு இசை எதற்கு? குற்ற உணர்ச்சி துளிக் கூட இல்லாமல் அந்தக் கொலையாளி சொன்னாராம்: கொலை செய்தாலும் அது அழகாக இருக்க வேண்டுமே. அது தான்.

இரண்டாவது, பேராசிரியரின் சொந்த அனுபவம் : ஒரு தடவை பேராசிரியர் குடும்பத்துடன் காரில் ஓர் பயணம் போயிருக்கிறார். அவர் மனைவி ஓட்டுநர். திடீர் என்று இன்னோர் வண்டி இவர்கள் வண்டி முன்னால் வேகமாய்ப் புகுந்து இடைவெட்டுவதும், போகவிடாமல் தடுப்பதுமாய் ஒரே பயங்கரம். எந்த நேரமும் விபத்து நடக்கலாம். அந்தக் காரோட்டி வேண்டுமென்றே செய்கிறான் என்று புரிந்துவிட்டது.

நல்ல வேளை. ஓரிடத்தில் சிகப்பு விளக்கு மின்னுகிறது. இவர் வண்டி நிற்கிறது. அந்தப் பைத்தியக்காரனின் வண்டியும் வந்து நிற்கிறது. பேராசிரியரின் மனைவி கோபத்தோடு எதையோ ஒரு பொருளை எடுக்கிறார். அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறேன்! கோபத்தோடு வண்டியை விட்டு இறங்குகிறார்.

பேராசிரியர் கூடவே இறங்க முடியாத சூழ்நிலை. பயந்திருந்த குழந்தைகளைத் தேற்றிக் கொண்டிருக்கிறார்.

அவன் வந்த வண்டியின் ஜன்னலில் கையால் அறைகிறார் பேராசிரியரின் மனைவி. அவன் மெதுவாகத் திறக்கிறான். நீ எனக்கு செய்த அதே முட்டாள்தனத்தை இன்னொருவருக்கு செய்யாதே. அதற்கு இது ஒருவேளை உதவி செய்யலாம். இந்தா பிடி! அந்தப் பொருளை அவன் வண்டிக்குள் வீசுகிறார்.

பிறகு மீண்டும் தன் வண்டிக்குள் ஏறி வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார்.

இனி அவன் தொந்தரவு செய்யமாட்டான். பாருங்களேன்! மனைவி சொல்கிறார். அவர் சொன்னது போலவே, அந்த வண்டி மெதுவாக இவர்கள் பின்னால் சாதுவாக வந்து இன்னொரு சாலைக்குள் திரும்பி மறைந்து விடுகிறது.

ஒரே ஆச்சரியம். அப்படி என்ன தான் மனைவி வீசியிருப்பார்? கேட்கிறார். மனைவியிடம் இருந்து பதில் வருகிறது : லாலி பாப்.

முகவுரை முடிந்து விட்டது. நூலுக்குள் நுழைவோமா?

மன்னிக்க வேண்டுகிறேன் உங்கள் ஆவலைத் தூண்டுகிறேன்

ஓர் மனிதரின் நடப்பை நின்று ஓர் கணம் கவனிக்கிறோம். அவரால் ஒரு செயல்பாடு நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அவர் மூளையில் அதற்கான ஒரு உந்துதல் ஏற்படாமல் அந்த நிகழ்வு நடந்திருக்கவே முடியாது. இல்லையா?

அந்த நிகழ்வுக்கு ஓர் அரை வினாடிக்கு முன்னே அந்த மனிதரின் மூளையில் என்ன நடந்திருக்கும்? அவரின் நடத்தையை எப்படி நியூரான்கள் தூண்டியிருக்கும்? மூளையின் எந்தெந்தப் பகுதிகளில் இருந்து அவை தோன்றி இருக்கும் ?

அந்த நிகழ்வுக்குப் பின்னே சத்தம் (ஒலி) , பார்வை (ஒளி), மணம், அல்லது உடல் தொடுகை எதிர்வினை (ஸ்பரிசம்) என்று ஏகப்பட்ட பாதிப்புகள் இருக்கின்றன. (அப்போதைய சூழ்நிலை)

அரை செக்கனுக்கு முன்னே, அந்த நடத்தையை முடிவு செய்தது யார்? கிட்டத்தட்ட இந்தக் கால இடைவெளியில் என்ன நடந்திருக்கும்? இங்கே மூளை நரம்பியல் துறை (Neurology) துவங்குகிறது.

நிகழ்வு நடக்க, ஒரு மணித்தியாலம் முன்னே என்ன நடந்திருக்கும்? அதன் தாக்கமும் அந்த நிகழ்வுக்கு ஓர் உந்துதல். உடலியல் துறை (Physiology) இங்கே வருகிறது.

இன்னும் பின்னால் போய், நாட்கள், ஆண்டுகள் முன்னே? அந்த மனிதரின் அம்மா, அப்பா, அப்புறம் தாத்தா, பாட்டி , அவர்களின் மரபணுக்கள் கூட அந்த நிகழ்வுக்கு உடந்தை என்று பல படிகள் இன்னும் கீழிறங்க, மரபணு இயல் (Genetics) வந்து நிற்கிறது.

இன்னும் ஆயிரம், பல்லாயிரம், மில்லியன் ஆண்டுகளின் முன்னேயும் போய்ப் பார்த்தால்? அவர் முன்னோர்களின் வாழ்க்கை முறை, தவிர, நாம் மனிதர்களாகத் தோற்றம் அடையும் காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், சுற்றுச் சூழல், பழக்க வழக்கங்கள், பண்பாட்டு மாற்றங்கள் என்று எத்தனையோ காரணங்கள் அந்த மனிதரின் நடத்தைக்குப் பின்னே செயல்பட்டிருக்கின்றன.

பேராசிரியர், மில்லி செக்கன்களில் துவங்கி மில்லியன் ஆண்டுகள் வரை அழைத்துச் செல்கிறார். நகைச்சுவை, வரலாற்றுத் துணுக்குகள், சிந்திக்க வைக்கும் அறிவியல் கருத்துக்கள், ஆய்வு முடிவுகள் என்று பின்னி எடுத்திருக்கிறார் பேராசிரியர்.

நூலின் முக்கிய அம்சம் : அய்யா, ஒவ்வொரு ஆய்வு முடிவையும் ரொம்ப அழகாய் விவரித்துக் கொண்டே போவார். ஆனால் திடீர் என்று ரூட் மாறிவிடும். சொல்லாமல் கொள்ளாமல் விஷயம் எதிர்த்திசையில் போக ஆரம்பித்துவிடும்.

(குழப்பம் வருகிறதா? ஒரு சின்ன இடைவேளை விட்டு — ஒரு டீ, காபி அல்லது குளிர்பானம் — மனசுக்கும் உடம்புக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்றிவிட்டுத் துவங்கினால் புரிய ஆரம்பிக்கும்.)

நான் என்ன கதையா சொல்கிறேன்? நாம் விழிப்போடு வாசிக்கிறோமா? பேராசிரியர் நமக்கு வைக்கும் தேர்வு அது. (அடிக்கடி வைக்கிறார்.)

இனி, அந்த அரை வினாடிக்குள் நடந்தவை, நம் மூளைக்குள் நடந்தவை. நுழைகிறோம். அங்கே எக்கச்சக்கமான வேலைகள் நடக்கின்றன.

Frontal Cortex, (FC) : இவர் நம் மூளையின் கட்டுப்பாட்டு அதிகாரி. இவருக்கு எப்போதும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கிறார்.

Prefrontal Cortex (PFC) : மூளையின் எல்லாத் துறைகளிலும் இருந்து வரும் தகவல்களை வடிகட்டி, ஆதாரங்களையும் சேர்த்து தருணத்துக்கு ஏற்ற முடிவுகளை எடுத்து FC க்குக் கொடுப்பவர் இவர். அதாவது, தலைமை ஆலோசகர். இவரின் குழுவில் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் : vmPFC. மற்றவர் : dlPFC.

vmPFC : அழுவதா? சிரிப்பதா? எரிந்து விழுவதா? — முடிவெடுப்பவர் இவர். உணர்ச்சி பூர்வமானவர்.

dlPFC : கடுமையான கணக்குகள் போட்டு, தர்க்க ரீதியான முடிவுகளை எடுப்பவர் இவர். பெப்சியா, கொக்கா கோலாவா? பிட்ஸாவா, நூடுல்ஸா?

Amygdala : என் வழி தனி வழி என்று எப்போதும் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருப்பார் இவர். தடுமாற்றமா? பயமா? வலி வரும் போல இருக்குதே? – அப்பப்போ தவிக்கிறோமே. காரணம் இவர் தான்.

இன்னும் எத்தனையோ நிபுணர்கள் இருக்கிறார்கள். எல்லார் பேரையும் போட்டுக் குழப்புவது தப்பு. எப்படியோ, எல்லாரும் நம் மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வேலை செய்கிறார்கள். நாம் இயங்குவது அவர்கள் கையில் இருக்கிறது.

அப்போ பிரச்னைகளும் கூடவே இருக்குமே. நிச்சயமாக. நான் தான் பெரியவன், நான் தான் பெரியவன் என்று சண்டை போடுவதிலும் கெட்டிக்காரர்கள் இவர்கள். சில அல்லது பல சமயங்களில் கட்டுப்பாட்டு அதிகாரிக்கே (FC) தெரியாமல் விஷயத்தை நடத்திவிட்டு கமுக்கமாய் இருந்து விடுவார்கள்.

பொதுவாய், ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் FC அதிகாரி மூளையின் நியூரான்களுக்கு கட்டளை கொடுக்கிறார்: ஓடுங்கடா! ஒரு செயல்பாட்டை முடிவு செய்ய, கிட்டத்தட்ட 700 மில்லி செக்கன்கள் எடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தக் கால இடைவெளியில், 80 வீதம் உறுதி செய்துவிட்டால், நாம் நம் நடப்பை செயல்படுத்த ஆரம்பிக்கிறோம்.

(மன்னிக்க வேண்டும். ஒரு பெரும் சிக்கலான அமைப்பு கொண்ட மூளையின் இன்னும் சிக்கலான செயல்பாடுகளை மிக, மிக எளிமையாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் புத்தகத்தை வாசியுங்கள். துப்பறியும் கதைகளை விட கிக் அதிகம்.)

Amygdala வின் செயல்பாடுகள் பற்றி முக்கியமான குறிப்புகள் : வலுக்கட்டாயமாக சண்டைக்குப் போகும் குணம், மூர்க்கத்தனம், எந்த நேரமும் தற்காப்பு பற்றிய நினைவுகள், கடந்த காலங்களில் ஏற்பட்ட பய அனுபவங்கள் மீண்டும் மீண்டும் எழுந்து மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதால் ஏற்படும் பதற்ற நிலை…

1968 களில் ஜெர்மனியில் செம்படை (Red Army Faction) என்றோர் தீவிரவாத அமைப்பு தோன்றி குண்டு வெடிப்புகள், வங்கிக் கொள்ளைகள் என்று நடத்தியதில் அரசுக்கோ அதிர்ச்சி. பத்திரிகைக் காரர்களுக்கோ பெரும் லாபம்.

அதன் அமைப்பாளர்களில் ஒருவரான Ulrike Meinhof தேடுதலில் பிடிபட்டார். ஆனால், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் சிறையில் தூக்கு மாட்டி இறந்து போனார். (அது கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்று வரை மர்மம் தான்.)

அவர் உடலைப் பரிசோதனை செய்தார்கள். அவருக்கு மூளையில் புற்று நோய் வந்து அறுவை சிகிச்சை நடந்திருப்பது தெரிய வந்தது. சிகிச்சையின் போது amygdala வின் மேல் காயம் ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

அடுத்த உதாரணம் : Charles Whitman. ஒரு பொறியாளர். மண வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. பள்ளிப் பருவத்தில் கோயிலில் ஆராதனைப் பாடல்கள் பாடும் குழுவில் (choir boy) இருந்தவர்.

1966 களில் ஒருநாள். அவர் தாயையும் மனைவியையும் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர் உடல் அருகில் ஒரு கடிதம் : நான் ஏன் இப்படி செய்தேன்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லையே. எனக்கு ஏன் அடிக்கடி மூர்க்கத்தனம் வந்தது? தாங்கமுடியாத தலைவலி வேறு ஆட்டி வைத்ததே. ஏன் இப்படி நடந்து கொண்டேன்?

உடல் பரிசோதனையில் அவர் மூளையின் amygdala வில் சிதைவு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. தவிர, அவர் இளவயதில் தந்தை மூலம் மோசமான வன்முறைக்கு ஆளாகி இருக்கிறார். பிறகு அவர் கடற்படையில் பணியாற்றியபோது சக வீரர்களோடு பல தடவைகள் அவசியமே இல்லாமல் சண்டைக்குப் போயிருக்கிறார்.

ஆகவே, Amygdala தான் கொலையாளி? அப்படி எந்த முடிவுக்கும் வர முடியாது. ஏன் என்றால் வேறு காரணங்களும் அதன் பின்னே மறைந்திருக்கின்றன என்கிறார் பேராசிரியர்.

போர்க்கால பயங்கரங்கள், அந்தத் தாக்கங்களை மறக்க முடியாமல் தவிப்பவர்கள் ஒரு வித மன அழற்சியால் பாதிக்கப் படுகிறார்கள் – Post Traumatic Stress Disorder. சுருக்கமாக, PTSD என்பார்கள். இவர்களின் Amygdala விரிவடைந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

விலங்குகளில் செய்த பரிசோதனைகளில் Amygdala வில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாகத் தெரிகின்றன. உதாரணமாய் : ஒரு ஆண் குரங்கை ஒரு கூட்டிலும் அதன் ஜோடி பெண் குரங்கை இன்னோர் கூட்டிலும் வைத்திருக்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, பெண் குரங்கின் கூட்டில் இன்னோர் ஆண் குரங்கு விடப்படுகிறது.

எதிர்பார்த்தது போலவே, ஜோடி ஆண் குரங்கு பல்லை நறநற என்று கடிக்கிறது. உடம்பில் அங்கும் இங்கும் சொறிகிறது. Amygdala தூண்டப்படுகிறது. ஆனால், வன்முறை உணர்வுகள் மூளையில் எழும்போது ஏற்படும் தீவிர மாற்றம் அல்ல. கவனிக்கவும். மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அதிகப்படி அல்ல.

ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், குரங்கு நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இது ஓர் சமூக விளைவு. சமூகத்தால் கற்றுக் கொடுக்கப்பட்ட சிந்தனை இங்கே செயல்படுகிறது. (உன் பெண்டாட்டி பக்கத்தில் இன்னொருத்தன் இருக்கானே. உன் யோக்கியதை அவ்வளவு தான் போலருக்கு.) சமூகத்துக்கு என்ன பதில் சொல்வது?

சமூக உறவுகள் மட்டுமல்ல. இன்னொருத்தர் கையில் ஊசி போட்டால் நம் கையிலும் குத்துகிறது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. அடுத்தவர் இருமினால் எனக்கும் தொண்டையில் கரகரப்பு உண்டாகிறது. — Amygdala.

நாம் வேறு, அவர்கள் வேறு, என்கிற வேற்றுமை உணர்வையும் கொண்டு வருவது Amygdala. (நம்ம குலம் என்ன? அறிவென்ன? அந்தஸ்து என்ன? நீ என்னடான்னா அந்தக் கழிசடையோட சுத்திட்டிருக்கியாமே.)

யாரோ ஒருவர், அவர் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து உங்களை நோக்கிக் குறி பார்க்கிற மாதிரி தெரிகிறது . அய்யோ! அது துப்பாக்கி. உங்களை சுடப் போகிறான். ஓடுங்கள்! ஓடுங்கள்! உங்கள் மூளையில் ஒரு குரல் கேட்கிறது. அவ்வளவு தான். நீங்கள் தலை தெறிக்க ஓடுகிறீர்கள். அல்லாவே. ஆண்டவரே. அம்மையப்பா. காப்பாத்துங்களேன்.

ஒருவர் முதுகில் தட்டி சொல்கிறார். யோவ்! அந்த மனுஷன் செல்போன் எடுத்துப் பேசிட்டிருக்கான். நீ என்ன பைத்தியமா? — உங்களைப் பைத்தியம் ஆக்கியது Amygdala.

(ஒரு சின்ன தகவல் : Amygdala முதலில் FC கட்டுப்பாட்டு அதிகாரியுடன் பேசுகிறார். மறுக்க முடியாது. அவரோ யோசிக்கணும். தகவல்கள் போதாது. அது இது என்று இழுக்கிறார். இந்த ஆளை நம்பினால் அதோ கதி தான். காரியம் கெட்டுவிடும். ஆகவே அவருக்குத் தெரியாமலே, ரகசியமாய்த் தன் சொந்த நியூரான் படைக்குக் கட்டளைகள் கொடுக்கிறார் Amygdala.)

நிகழ்ச்சிக்கு வருவோம். நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு வேகமாக ஓடுகிறீர்கள் என்பதையும் கண்காணிக்கிறது Amygdala. துப்பாக்கி நெருங்குகிறது என்று அது நினைத்தால் உங்களை அது இன்னும் வேகமாக ஓட சொல்லி விரட்டும்.

துப்பாக்கி ஆள் அப்படி வேகமாகத் துரத்தவில்லையே? இப்படி நினைத்தால், அடே மக்கு, மெதுவா ஓடு என்று சொல்வதும் அது தான். இல்லாவிட்டால் போதும், நில் என்று சொல்வதும் அது தான்.

Amygdala வின் தூண்டுதல்கள் கம்மியாய் இருந்தால் நீங்கள் சோர்வாய் இருப்பீர்கள். தூக்கம் வருவது போல் இருக்கும்.

தூண்டுதல் மிதமாக இருந்தால், அக்கம் பக்கம் என்ன நடக்கிறது? எவன் என்ன செய்கிறான்? எச்சரிக்கையோடு இருப்பீர்கள்.

லாட்டரி சீட்டில் உங்களுக்கு முதல் பரிசு என்று கேள்விப்பட்டு பயங்கரமாய் டான்ஸ் ஆடுகிறீர்களா? யாரையோ கொலை செய்ய வேண்டும் என்று ஆவேசத்தோடு கிளம்பிப் போகிறீர்களா? ஒரு அழகான பெண் திடீர் என்று முன்னால் வந்து நின்று கழுத்தை சாய்த்து ஒரு பார்வை பார்க்கிறாளா?… என்ன கண்ராவியாய் இருந்தாலும் அந்த சமயத்தில் Amygdala அதி உச்சத்தில் இருக்கிறது என்பது அதன் அர்த்தம் – அதுவும் ஒரே மாதிரி.

பயப்படாமல், அதிர்ச்சி அடையாமல் ஒரு மரத்தடியின் கீழ் ஒரு கட்டில் போட்டு மாலை வெயிலில், மெல்லிய தென்றல் வீச, அந்த சுகத்தில் ஒரு சின்னத் தூக்கம் போடுகிறார் இந்த Amygdala என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து உலகமே அமைதிப் பூங்காவாக மாறிவிடும் என்று சொல்லிக் கண்ணடிக்கிறார் பேராசிரியர்.

FC இருக்கிறாரே, இவர் எப்போதும் சீரியஸ் சிங்காரம். தகவல்கள் திரட்டி, (PFC யின் ஆலோசனை முக்கியம்) நீண்ட கால அடிப்படையில், திட்டம் போட்டு ஒழுங்கோடு செயல்படும் சிறந்த நிர்வாகி இவர். கஷ்டமான முடிவுகள் – ஆனால் சரியான முடிவுகள் என்கிறோமே. அது இவரால் தான் முடியும்.

FC, 20 வயதைத் தாண்டும் வரை முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை. அதன் பிறகு அதன் ஆட்சியில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தனிப் பிறவி என்று சொல்ல வைப்பது FC.

FC நியூரான்கள் எல்லா விலங்குகளிலும் ஒரே மாதிரியே இருக்கின்றன. எண்ணிக்கையில் மட்டும் தான் வித்தியாசம். உதாரணமாய் : பறக்கும் பூச்சிகளில் அவை ஒரு சிறு எண்ணிக்கை மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது பில்லியன் பில்லியன்கள் பில்லியன்கள் பில்லியன்கள் எண்ணிக்கையில் மனிதர்களில் இருக்கின்றன.

முன் எச்சரிக்கை செய்வதில் FC யை மிஞ்ச முடியாது. ஒரு உதாரணம் : டெலிபோன் செய்ய எண்ணை அழுத்த முன்பு city code (நகர குறியீட்டு எண்) அழுத்தி விட்டாயா? நல்ல சமயத்தில் ஞாபகம் வந்தது என்று சர்வ சாதாரணமாய் நினைக்கிறோம். நினைவு வைத்திருந்து நம்மிடம் கேட்டவர் அவர்.

அவரிடம் குறைகளும் உண்டு. கண் முன்னால் ஒரு குழந்தை நீருக்குள் விழுந்து விடுகிறது. பாய்வதா, இல்லையா? யார் குழந்தை அது? எனக்கும் அந்தக் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஆபத்து வருமா? இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளுடன் குழம்பி ஒவ்வொன்றாக சிந்திக்க ஆரம்பித்து விடுவார்.

அவரின் பெருமைப்பட வேண்டிய குணாதிசயம் : சுய கட்டுப்பாடு. சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? (நண்பர்களோடு அன்போடு நட . சக தொழிலாளரை அடிப்பது அசிங்கம். டாய்லெட் போனபிறகு கால்சட்டை ஸிப்பை இழுத்து மூடு… )

எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கும் மனிதர்களின் FC யை சோதித்துப் பார்த்தால் நிச்சயம் அதில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பது தெரிய வரும்.

நம்மை சங்கடப்பட வைப்பதும் FC. எடுத்துக் காட்டாய் ஒரு தேர்வு : கட்டுப்படுத்த முடியாமல், ஒரு வண்டி பயங்கர வேகத்தில் பறக்கிறது. அதில் 5 பேர் உயிரைக் கையில் பிடித்தபடி காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள்.

பயப்பட வேண்டாம். ஒரு தீர்வு இருக்கிறது. வண்டி ஓடும் தடத்தை மாற்றினால் அவர்கள் பிழைக்க முடியும். ஆனால், அந்தத் தடத்தில் இன்னொரு அப்பாவி மனிதர் நிற்கிறார். அவர் அந்த வண்டி மோதி இறந்து விடுவார். என்ன செய்வீர்கள்?

என்ன செய்வது? அந்த ஐந்து பேருக்காக ஒருவரைத் தியாகம் செய்வது தப்பில்லை. தடத்தை மாற்றுங்கள். சொல்வது : 70 – 90 வீதமான மனிதர்கள் (புள்ளி விவரங்கள்).

அதே சமயம், அதே ஆட்களிடம், அந்தத் தடத்தை மாற்றும் சுவிட்ச் உங்கள் கையில் இருந்தால் என்ன செய்வீர்கள்? கேட்டால் முடியாது. சுவிட்ச் போடமுடியாது! கறாராக, ஒரே தொனியில் பதில் வருகிறது. மனிதர்கள் விசித்திரமானவர்கள்.

இன்னும் சில விசித்திரங்கள் : உங்கள் கையாலையே ஒருவரை சாகடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த செயல்பாட்டுக்கு Amygdala, vmPFC (உணர்ச்சி), dlPFC (கணக்கு) என்று மூன்று பேருமே உதவி செய்கிறார்கள்.

அந்த செயல்பாட்டில் Amygdala வின் பங்களிப்பு கூடுதலாக இருந்தால், ராகு காலத்தில் ஆரம்பிச்சிட்டமோ? கத்தி வளைஞ்சிருக்கோ? யோசிப்பீர்கள்.

ஒருவர் கொலை செய்யப் படுகிறார். நீங்கள் நேரிலேயே பார்க்கிறீர்கள். நீங்கள் காபரே ஆக ஆக, dlPFC (கணக்கு) அங்கே ஆஜர் ஆகி நாட்டாமை செய்கிறார். உங்களுக்கு இங்கே என்ன வேலை? ஏன் அதுக்குள் போய் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும்? எச்சரிக்கிறார். சத்தம் கித்தம் போடாமல் இடத்தைக் காலி பண்ணுகிறீர்கள்.

ஒருவரை Brain Scanner (மூளையை சோதனை செய்யும் கருவி) ஒன்றில் வைத்து அவதானிக்கிறோம். ஒரு படத்தை அவரிடம் காட்டிவிட்டு பட்டென்று மறைத்து விடுகிறோம். Amygdala வுக்குத் தெரிந்து விட்டது. உஷார் ஆகி விடுகிறது.

படத்தைத் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தால் Amygdala வை நெட்டித் தள்ளிவிடுகிறது dlPFC (கணக்கு). படம் என்னதாய் இருக்கும்? ஆராய்ச்சியைத் துவங்குகிறது.

பொய் சொல்கிற வேலைக்கும் dlPFC (கணக்கு) சாட்சி.

இரண்டாம் உலக யுத்த சமயத்தில், நாஜிகள் யூதர்களைத் தேடி வருகிறார்கள். அந்த ஜெர்மானிய பாட்டி, அடைக்கலம் கேட்டு வந்த யூதர்களைக் காப்பாற்றித் தன் வீட்டில் மறைத்து வைத்திருக்கிறார். நாஜிப் பேய்கள் கேட்கிறார்கள். மாட்டிக் கொண்டால், அவருக்கும் மரணம். இருந்தும் பாட்டி சொல்கிறார் : இங்கே ஒருவரும் இல்லையே.

இன்னொரு பாட்டி, தன் பேத்திக்குப் பிறந்த நாள் பரிசு கொடுக்கிறார். போன ஆண்டும் அதே பரிசைத் தான் பாட்டி கொடுத்தார். பாட்டிக்கு ஞாபக மறதி அதிகம் என்று குழந்தைக்குத் தெரிந்தாலும் பாட்டியின் மனசு நோகக் கூடாதே. குழந்தை பொய் சொல்கிறது – இது புதுசா இருக்கே!

PFC, தலைமை ஆலோசகர் பற்றி இரண்டு தகவல்கள் : உணர்ச்சி பொங்கி அளவு மீறி வழிகிறதா? போதும் என்று தடுத்து நிறுத்துவார் இவர். ஆனால், சில சமயங்களில், போனால் போகிறது என்று விட்டு விடுவார் – எல்லாம் இடம், காலம்.

ஏன் என்றால் இப்போ நீங்கள் சினிமா அரங்கில், இருட்டில் இருக்கிறீர்கள். கதாநாயகிக்கு நேர்ந்த கொடுமை கண்டு கண்ணீர் பொத்துக் கொண்டு வருகிறது. பக்கத்து சீட்காரர்களே கலன் கணக்கில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்போது… நடக்கட்டும். நடக்கட்டும்.

PFC எப்போதும் சரியான, கஷ்டமான முடிவுகள் எடுப்பது உண்மை. ஆனால், முடிவுகள் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற, சரியான முடிவுகள் என்பதே சரி.

எடுத்துக் காட்டாய் : ஒரு பெண் மற்றவர்களுடன் சேர்ந்து கணனியில் கேம் ஆடிக் கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் அவளை ஏமாற்றி வென்று விடுகிறார்கள். கோபம், வெறுப்பு, பதற்றம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவளைத் தாக்குகிறது. காரணம் : Amygdala “பத்த” வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயம் பார்த்து, PFC அந்தப் பக்கம் வருகிறார். அந்தப் பொண்ணு பாவம். ஏன்யா இப்டி அநியாயம் பண்றே? (Amygdala நைசாய் நழுவி விடுகிறார்.).

அந்தப் பெண்ணுக்கு நாலு வார்த்தை ஆறுதல் சொல்கிறார். இது முட்டாள்த்தனமான விளையாட்டு. இதுக்குப் போய் கவலைப் படணுமா? டாய்! உங்களை அப்ரம் கவனிச்சுக்கிறேன். எனக்கு வேறு நல்ல நண்பர்கள் இருக்கும்போது எதுக்கு .. அவள் உற்சாகமாய் எழுந்து போகிறாள்.

(ஒரு சின்ன தகவல் : பொதுவாக, விடலைகளிடம் FC யின் அறிவுரை எடுபடாது. 18 -20 வயது வரும் வரை எதுவுமே காதில் ஏறாது.)

கடைசியாக, மூளையின் ஒரு வினோத பண்பு : Dopamine. அது வேண்டும் இது வேண்டும் என்று துடிக்கும் மனிதர்களுக்கு இது எக்கச்சக்கமாய் சுரக்கும்.

பசிக்கும் நேரத்தில், மட்டன் பிரியாணி அல்லது கோழி பிரியாணியை நினைத்தால் அது சுரக்கிறது. (வெஜ் ஆட்கள் வெங்காய தோசை அல்லது அவரவர் இஷ்ட அயிட்டத்தை நினைத்தாலும் சுரக்கும்.)

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் நிகழ்ச்சியில் இருவர், இருவராய் சேர்ந்து போட்டியில் கலந்து வெல்லலாம் என்று அறிவிக்கும் போதும் சுரக்கிறது. ஒரு போட்டியில் ஒருவர் மற்றவரை அடித்துக் கொல்லலாம். வென்றவருக்குப் பரிசு என்று வரும் போதும் சுரக்கிறது. (ஆனால், முதலாவதற்கு அதிகம்.)

கிடைத்த போது அனுபவித்த சந்தோஷத்தை விட, கிடைக்கப் போகிறது! கிடைக்கப் போகிறது! என்று நினைத்து நினைத்துக் கற்பனை செய்து அனுபவிக்கும் மகிழ்ச்சி இன்னும் மயக்கம், இனிமை தருகிறது. பொங்கி வழிகிறது Dopamine.

Dopamine அளவு கூடுதலா? குறைவா? எல்லாம் எதிர்பார்ப்பில் தங்கி இருக்கிறது. முதல் தடவை கிடைத்த சந்தோஷத்தை விட இரண்டாம் தடவை குறைவா? அதுக்கென்ன- பரவாயில்லை. மூளை, தன்னை அதற்கேற்றபடி தகவமைத்துக் கொள்கிறது. கிக் தான் முக்கியம் – அளவு அல்ல.

ஒரு நடத்தையின் மூலக் கருவுக்கு மூளை மட்டுமே காரணம் அல்ல . எல்லாக் காரணிகளும் மூளையில் குவிகின்றன. நல்லதோ, கெட்டதோ, சந்தர்ப்பதைப் பொறுத்து ஏதோ ஒரு முடிவு எடுக்கப் படுகிறது. அவ்வளவே.

அத்தியாயம் 10 ல் வந்து நிற்கிறேன்.

நடந்து வந்த பாதையை மறந்து போகலாமா

படிநிலை மாற்றம் என்பது வெறும் கோட்பாடு. அது தான் அடிப்படை உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக, பேராசிரியர் சில ஆதாரங்கள் தருகிறார்.

சில உயிரினக் கூட்டங்களில் (species population) குறுகிய ஓர் கால இடைவெளியிலேயே அவற்றின் மரபணுக்கள் வேகமாக மாற்றம் அடைந்து விடுகின்றன.

உதாரணம் : நம்மைப் பாதிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் கண்டுபிடிக்கும் எதிர்ப்பு மருந்துகள் (anti bacterial resistants) விரைவிலேயே பயன் அற்றுப் போகின்றன. காரணம், மருந்து கண்டுபிடிக்க, அவற்றின் மரபணு வடிவம் தேவை. ஆனால், பாக்டீரியாக்கள் அடிக்கடி மரபணு வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன.

சில பூச்சிகள் கூட, ஒரு சந்ததியிலேயே இரண்டு வகையான பூச்சிகளாக மாறி விடுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஒரு உயிரினம் எப்படி படிப்படியாக மாற்றம் அடைந்திருக்கிறது என்பதை அந்த இனத்தின் எச்சங்கள் (fossils) உறுதி செய்திருக்கின்றன.

மூலக்கூற்று ஆதாரங்கள் (molecular evidence) : நாமும் கொரில்லா இனமும் 98 சதவீதமான ஒரே மூலக்கூற்று அமைப்பைக் கொண்டிருக்கிறோம். (மற்றக் குரங்குகளோடு 96%. நாய்களோடு 75%. பூச்சிகளோடு 20%)

இதில் இருந்து நமக்கும் கொரில்லாக்களுக்கும் ஒரு பொதுவான தாய் தந்தையர் ஒப்பீட்டளவில், அண்மையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மனிதர்கள் + கொரில்லாக்கள் + மற்றக் குரங்குகள் சேர்ந்த இனத்தின் பொதுத் தாய் தந்தையர் ஒப்பீட்டளவில், அதற்கு முன்னே வாழ்ந்திருக்கிறார்கள்.

(இப்படிப் போய்க் கொண்டே இருந்தால், கடைசியில் அனைத்துக்கும் அம்மையப்பன், ஒரே ஒரு செல் கொண்ட பாக்டீரியா என்று தெரிய வரும்.)

உயிரினங்களின் உடலமைப்பில் இருக்கும் விசித்திர ஒற்றுமைகள் படிநிலை மாற்றத்துக்கு இன்னொரு சான்று. கேள்வி : ஆழ்கடலில் வாழும் திமிங்கிலத்துக்கும் டால்பின்களுக்கும் ஏன் கால் எலும்புகள் இருக்கின்றன?

அடுத்து, மரபணு இயலுக்கு வருகிறார் பேராசிரியர்.

மரபணுக்கள் ஒரு குறிப்பிட்ட பண்புகளை (traits) சந்ததி சந்ததியாகக் கொண்டு செல்கின்றன. இந்தப் பண்புகள் மரபணு மூலக்கூற்றில் ஏற்படும் மாற்றங்கள். மாற்றங்களோ, சில சமயங்களில், இயற்கையோடு ஒன்றி வரலாம். சில சமயங்களில், ஒத்துவராமல் மறைந்தே போய்விடலாம்.

இருந்தும், தவறாகப் புரிந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

1 : எது இயற்கைக்கு ஒத்து வருமோ, அது மட்டுமே வாழும். (Survival of the fittest) இது தவறான கொள்கை. ஓர் உயிரினத்துக்குத் தன் சந்ததியைப் பெருக்க வேண்டும் என்பதே அதன் முதல் நோக்கம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆட்டம் போடுவது முடியாத காரியம். நீண்ட காலம் வாழப் போனால் புற்று நோய்கள் வரலாம். நாளும் பொழுதும் இனப்பெருக்கத்திலேயே கவனம் போனால் ஆயுசு கம்மி. முடிவு செய் என்கிறது இயற்கை.

ஆகவே, முடிந்தளவு இனப்பெருக்கம் செய்து சொந்த மரபணுக்களை நாலா பக்கத்திலும் பரவச் செய்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதில் மும்முரமாய் இருக்கின்றன எல்லா உயிரினங்களும்.

(சால்மன் மீன்கள் விறுவிறு என்று வளர்கின்றன. ஆற்றில் எதிர்நீச்சல் போடுகின்றன. வாழ்வில் ஒரே ஒரு தடவை இனப்பெருக்கம் நடக்கிறது. முடிந்ததும் அவைகளின் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது.)

2 : இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் மறைந்து போன உயிரினங்களை விட, இயற்கைக்குப் பொருத்தமானவை. அதனால் தான் நின்று பிடிக்கின்றன – இன்னொரு தப்பான கொள்கை.

மறைந்து போன டைனோசர் விலங்குகளும் மற்றும் வேறு இனங்களும் மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன. விண்கல் வீழ்ந்தது. காலநிலை மாறியது. மடிந்து போயின. (நினைவிருக்கட்டும் : நமக்கும் அந்த நிலை வரும்.)

3 : சிக்கலான செயல்பாடுகள் கொண்ட உயிரிங்களைத் தான் இயற்கை தேர்ந்தெடுக்கிறது. இந்த நினைப்பும் தப்பு.

ஒரே ஒரு செல் கொண்ட பாக்டீரியாக்கள் சிக்கலான செயல்பாடுகள் கொண்ட மனித இனத்தையே சாய்த்து விடுகின்றன. மில்லியன் கணக்கில் காவு வாங்குகின்றன.

இயற்கையின் தேர்வு இரண்டு வழிகளில் நடக்கிறது.

1 : பாலுறவுத் தேர்வு (sexual selection) : பாலுணர்வு உந்துதல் மூலம் இனப்பெருக்கம் நடந்தபின் மரபணுக்களைத் தேர்கிறது இயற்கை. அடுத்த சந்ததிக்கு அனுப்புகிறது.

உதாரணம் : மலைச்சாரல்களில் வாழும் ஆடுகளை எடுத்துக் கொள்வோம். சில ஆண் ஆடுகளுக்குக் கொம்புகள் பெரிதாக இருக்கின்றன. சில ஆடுகளுக்கு சின்னக் கொம்புகள். பெண் ஆடுகள் கண்ணில் பெரிய கொம்புகள் படு கவர்ச்சியாகத் தெரிகின்றன என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் ஒரு சிக்கல் : பெரிய கொம்புகள் வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும். சின்னக் கொம்புகள் ரொம்ப நாள் இருக்கும் என்றால் எந்த மரபணுக்களை இயற்கை தேர்வு செய்யும்? — அதாவது, பெண் ஆடுகள் எந்த ஆடுகளோடு டூயட் பாட ஆசைப்படும்?

இரண்டுக்கும் இடைப்பட் .. பட்டென்று பதில் சொல்லி விடலாம். ஆனால் அப்படி நடப்பதில்லை. diploid, haploid என்கிற இரண்டு குரோமோசோம்களும் சந்தர்ப்பம், சூழ்நிலை, முன்னைய மரபணுக்களின் பாதிப்புகள் அது இது (பேராசிரியர் சொல்லச் சொல்ல தலை சுற்றுகிறது.) என்று ஏகப்பட்ட காரணிகள் நான், நான் என்று மோதிக் கொள்கின்றன.

விளைவு? லாட்டரியில் பரிசு விழுவது போல் முடிவு எடுக்கப் படுகிறது. சில சமயம் கொம்பு பெரிசுகளுக்கு அனுமதி. சில சமயம் சின்னக் கொம்புகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

2 : இயற்கைத் தேர்வு (natural selection) : இது நீட் தேர்வு போல ரொம்பக் கஷ்டமானது. (முன்னையது பரவாயில்லை). நல்ல உடல்நலம் இருக்கிறதா? இரை தேடுதலில் கெட்டித்தனம் இருக்கிறதா? நீயே இரையாகப் போய்விடாமல் தப்பும் சாமர்த்தியம் இருக்கிறதா? வேட்டையாடும் திறன்கள் எப்படி? என்று இன்னும் பல விஷயங்களையும் எடை போடுகிறது. தேர்கிறது.

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது

இந்தியாவின் மவுண்ட் அபு பகுதியில் வாழும் லாங்கூர் குரங்குகளின் வாழ்க்கையை ஆய்வு செய்த ஓர் பெண் ஆய்வாளருக்குப் பெரும் அதிர்ச்சி.

குரங்குகள் கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு சண்டியர் (தலைமைக் குரங்கு) இருப்பார். அந்தக் கூட்டத்தில் இருக்கும் அத்தனை பெண் குரங்குகளுக்கும் அவர் தான் புருஷன். அந்தக் கூட்டத்துக்கு வேறு யாராவது பாஸ் ஆக நினைத்தால் அவர் அந்த சண்டியரோடு சண்டை போட்டு விரட்டினால் தான் அது முடியும். (சில சமயங்களில் கொலையே நடக்கும்.)

பழையவரோ, புதியவரோ வென்றவர் பாஸ். ஆனால் அந்த ஆய்வாளர் கண்டதோ ஒரு திகில் காட்சி. புதிதாய் வந்த பாஸ் குரங்கு பழைய பாஸின் குட்டிகளைக் கொலை செய்ய ஆரம்பித்தது. பெண் குரங்குகள் எத்தனை முயன்றும் முடியவில்லை. ஒரே பயங்கரம்.

1977 களில் வந்த இந்த ஆய்வாளரின் கட்டுரை மற்ற ஆய்வாளர்களை உசுப்பி விட்டது. மற்ற மிருகங்களும் அப்படித் தானோ? இதுவரை, 119 வகையான மிருகங்கள் இப்படி நடந்து கொள்கின்றன என்று தெரிய வந்திருக்கிறது – சிங்கங்கள், நீர்யானைகள், சிம்பான்ஸி குரங்குகள், கொரில்லாக்கள்…

மற்ற ஆய்வாளர்களை விட, இதே ஆய்வாளரின் விளக்கம் தெளிவாக இருக்கிறது. ஆண் குரங்குகள் என்ன தான் கூட்டமாக இருந்தாலும் பெண் குரங்குகளின் கூட்டத் தலைவனாக வரத் தான் ஆசை. ஆகவே, எந்த பாஸுக்கும் தன் அந்தப்புரத்தைக் காக்க படாதபாடு பட வேண்டிய சூழ்நிலை.

ஆண் குரங்கின் மரபணுக்களை எதிர்காலத்துக்கு அனுப்ப அதன் குட்டிகள் இருக்கின்றன. பெண் குரங்குகளின் மரபணுக்களும் அதே குட்டிகளில் இருக்கின்றன. புதுசாய் வந்தவரால் தான் பிரச்னை.

பொதுவாய், ஒரு குரங்குக்குட்டி முழு வளர்ச்சி அடைய சுமார் 27 மாதங்கள் தேவை. அதுவரை உணவு, பாதுகாப்பு அனைத்து தேவைகளுக்கும் தாயையே நம்பி இருக்கிறது. இந்தக் காலம் முடியும் வரை பெண் குரங்குகளால் சூல் கொள்ள முடியாது.

புது பாஸ் குரங்குக்கு இது பொறுக்க முடியாமல் இருக்கிறது. என் மரபணுக்களைக் கொண்டு செல்ல நெடுங்காலம் காத்திருக்க வேண்டுமா? (பதவி இன்னிக்கு இருக்குமோ. நாளைக்கு இருக்குமோ.)

ஒரே வழி : பழைய குரங்கின் குட்டிகளைக் கொல்வது தான். (பெண் குரங்குகள் எதிர்த்தாலும் பிறகு சமாதானம் அடைந்து விடுகின்றன – அவைகளின் மரபணுக்கள் புதுக் குட்டிகள் வழியாக எதிர்காலம் செல்லுமே.)

மனிதர்கள் இந்த அளவுக்குப் போவதில்லை. ஆனாலும், அன்னியர்களை விட, உறவுக்காரர்களிடம் நெருக்கம் காட்டுகிறோம். பழகுகிறோம். நமக்குப் பிறகு நம் சொத்துக்களை பிள்ளைகளுக்கு, இல்லாவிட்டால் உடன்பிறப்புகளுக்கு அதுவும் இல்லாவிட்டால் அவர்களின் பிள்ளைகளுக்கு … என்று நம் படிநிலை வளர்ச்சி ஒரு பகுத்தறிவு நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

ஒரு பிரபல மரபணு இயலாளரிடம் கேட்டார்கள் : ஒரு சகோதாரருக்காக உங்கள் உயிரைத் தியாகம் சேய்வீர்களா? அவர், நான் இரண்டு உடன்பிறப்புக்களுக்காக அல்லது எட்டு அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகள் பிள்ளைகளுக்காக, சந்தோஷமாய் உயிரை விடுவேன் என்றாராம். எல்லாம் ஒரு கணக்கு.

நாம், நம் மரபணுக்கள் மட்டுமல்ல நம் சொந்த பந்தங்களின் மரபணுக்களையும் சேர்த்து எதிர்காலத்துக்கு அனுப்புவதில் மும்முரமாய் இருக்கிறோம். கவனிக்கவும் : நாம் பகுத்தறிவை எப்போதும் உபயோகிப்பதில்லை. பல தருணங்களில் அதற்கு எதிரான முடிவுகள் எடுக்கிறோம். நடந்து கொள்கிறோம். நாம் சிக்கலான விலங்குகள்.

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

ஆபிரிக்காவின் ஒரு பகுதியில், ஒரு காட்டெருமைக் கூட்டம், நதி ஒன்றைக் கடக்க வந்து நிற்கிறது. இறங்க முடியவில்லை – முதலைகள் காத்திருக்கின்றன. திடீர் என்று ஒரு முதிர்வடைந்த எருமை நீரில் பாய்கிறது. முதலைகள் அதை இழுக்க, மற்றவை பாய்ந்து கடக்கின்றன.

அதிசயம், துணிச்சல், தியாகம் என்று உணர்ச்சிக் கலவையில் நாம் மிதக்க, பேராசிரியர் இடை வெட்டுகிறார். கவனமாக, அதைப் பாருங்கள். மற்ற எருமைகள் அந்த எருமையை ஆற்றில் தள்ளிவிட்டது தெரியவில்லை? (கிழம். அது இருந்தென்ன. வாழ்ந்தென்ன. நாம இன்னம் வாழவே ஆரம்பிக்கலையே.)

குழுத் தேர்வு – group selection : தன் சொந்த இனத்துக்காக (குழுவுக்காக) பாய்ந்து உயிர் விடும் மரபணுக்களை இயற்கை தேர்வு செய்யுமா?

தனி ஒன்றின் தேர்வு – individual selection : இந்தக் கிழட்டு எருமையைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டால், நான் தப்பி நீந்திப் போய்விடலாம் என்று நினைக்கும் மரபணுக்களை இயற்கை தேர்வு செய்யுமா?

அறிவியலாளர்கள் ரெண்டு பிரிவாய் நிற்கிறார்கள். சுயநலம் தான் வெல்லும். அடுத்த சந்ததிக்கு அந்தப் பண்புகள் தான் உதவும் என்பது ஒரு பகுதி. பைத்தியமா? மற்றவர் நலம் கருதும் மரபணுக்கள் தான் எந்த சந்ததிக்கும் உதவும் என்பது மற்றப் பகுதியின் கொள்கை.

இன்னொரு நிகழ்ச்சி : ஒரு ஒநாய்க் கூட்டம் வரிக்குதிரை ஒன்றை வேட்டையாடத் திட்டம் போடுகிறது. வரிக்குதிரைக்குத் தெரிந்து விடுகிறது. அது ஓநாய்களிடம் வந்து, என்னை சாப்பிடுங்கள். என் இனத்தை விட்டு விடுங்கள் என்று சொல்லுமா? அல்லது தலை தெறிக்க ஓடுமா? (வரிக்குதிரைகள் வேகமாக ஓடக் கூடியவை.)

முடியவில்லை. மாட்டிக் கொள்கிறது. அந்த வரிக்குதிரையின் தியாகத்தால் ஓநாய்களின் பசி தீர்ந்தது. மற்ற வரிக்குதிரைகள் தப்பின. அடுத்ததாக, அது மற்ற குதிரைகளை விட வேகமாக ஓடியதைக் கவனித்தீர்களா? இந்த மரபணுக்கள் தான் எதிர்கால ஹீரோக்கள் என்று ஆல் ரவுண்டாய் அடிப்பது மற்றவர் நலம் ஆட்கள்.

ஓநாய்களும் வேகமாக ஓடுமே. எந்த ஓநாய் வேகமாய் ஒடி முதலில் பாய்கிறதோ, அதுக்குத்தான் நல்ல கறிப் பாகம் கிடைக்கும். தவிர, அவரவர் முறை வரும் வரை வரிசை கட்டியா மற்ற ஓநாய்கள் நிற்கின்றன? மற்றவரைக் கடித்துத் தள்ளி, அட்டகாசம் பண்ணும்போது பொதுநலம் எங்கே போயிற்று? – இது சுயநலம் கோஷ்டி.

(பேராசிரியர் சுயநல கோஷ்டி.) The Selfish Gene என்று புத்தகம் எழுதி, 1976 களில், ஓகோ என்று பிரபலம் ஆனவர் Richard Dawkins. இயற்கை, சுயநலத்தைத் தான் தேர்வு செய்கிறது என்று நிறுவுகிறார் இவர். பேராசிரியரும் சுயநலக் குழு ஆய்வுகளைத் தாராளமாக உபயோகிக்கிறார்.

முட்டையா, கோழியா? எது முதல் வந்திருக்கும்? மரபணு இயல் பதில் சொல்கிறது. முட்டை தன் மரபணுக்களை எதிர்காலத்துக்கு நகர்த்த ஒரு சாதனம் தேவைப் படுகிறது. அதான் கோழி.

தியாகம் இரண்டு வகைப்படும். எதையும் எதிர்பார்க்காமல் உதவுவது altruism. அபூர்வ பிறவி. மரபணுக்களைப் பற்றிக் கவலைப்படாது. (இயற்கை அபூர்வமாக இதையும் தேர்ந்தெடுக்கிறது.)

நான் இதைத் தருகிறேன். நீ அதைத் தா என்று பண்டமாற்று முறையில் கூட்டுறவில் ஈடுபடுவது reciprocal altruism. இதற்கும் சுயநல குழுவுக்கும் மரபணு இயலில் போட்டி அதிகம். உன்னத தியாகம் – altruism கூட ஒருவகை சுயநலமே என்று சுயநல குழு வாதிப்பதை நாம் பார்க்கலாம்.

Escherichia Coli, (சுருக்கமாக E.Coli) பாக்டீரியாவை மூன்று விதமான பண்புகள் கொண்டவையாக ஆய்வுகூடத்தில் உருவாக்கினார்கள் (Synthezised).

முதல் வகை : தன் போட்டியாளர்களைக் கொல்லும் ஒரு நச்சுப் பொருளைத் (toxin) தயாரித்துக் கொள்கிறது. அதே சமயம், தயாரிப்புக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது.

இரண்டாவது வகை : அந்த நஞ்சு இந்த வகைக்கு ஆபத்து. ஆனால், உணவை (ஊட்ட சக்தி) எளிதாகப் பெற்றுக் கொள்கிறது.

மூன்றாவது வகை : இதனால் நஞ்சைத் தயாரிக்க முடியாது. சக்தி போதாது. அதே சமயம், நஞ்சினால் ஆபத்தும் இல்லை.

மூன்றையும் ஒன்றாய்க் கலந்து சோதித்துப் பார்த்தார்கள். மூன்றுமே ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் சமநிலையில் இருந்தன. ஏன் அப்படி?

பொதுநலம் பேசும் ஆய்வாளர்கள் கூட்டுறவு வாழ்க்கைக்கு இது உதாரணம் என்றார்கள். உன் சோலிக்கு நான் வரமாட்டேன். என் சோலிக்கு நீ வராதே. (reciprocal altruism)

ஒன்றாய் இருக்க வேண்டிய கட்டாயம். என்ன செய்வது? ஆனா ஞாபகம் வச்சிக்கோ. ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணினே. மவனே… இந்த ரீதியில் ஒவ்வொரு பாக்டீரியாவும் தற்காப்பு எச்சரிக்கையோடு மற்றதை விட்டு வைத்திருக்கின்றன – இது சுயநலம் பேசும் ஆய்வாளர்கள். (selfishness)

அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள், மற்றவர்கள் மீது இந்த குண்டுகளை ஏவி, ஏன் பரீட்சித்துப் பார்ப்பதில்லை? அதே சுயநலம் தான் இதுவும் – இது பேராசிரியர். இன்னும் ஏராளமான உதாரணங்களை அத்தியாயம் முழுதும் தூவி இருக்கிறார் அவர்.

Prisoners’ dilemma என்பது கணித, தர்க்கவியலில் மிகவும் ஆர்வமூட்டும் ஒரு கணனி விளையாட்டு. (உலகம் பிறந்தது எனக்காக? கட்டுரையில் இது பற்றி எழுதி இருக்கிறேன்.) பேராசிரியர் இந்த விளையாட்டை இன்னும் ஆழமாக விவரிக்கிறார்.

உயிரினங்கள், எந்த சமயத்தில் சுயநலத்தோடு நடந்து கொள்கின்றன? எப்போது கூட்டுறவு முறையைக் கையாள்கின்றன? எடுத்துக் காட்டுகள் மூலம் விளக்குகிறார். இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்த நடப்புகள் பயன் தருமா? சந்தேகப் படுகிறார்.

தன் குட்டிகளை எட்டிக் கூடப் பார்க்காத ஆண் விலங்குகள், முட்டைகள் போட்டபிறகு ஆண் துணையிடம் குஞ்சுகளை விட்டுப் பறக்கும் பெண் பறவைகள் என்று வினோதமான பண்புகள் ஏன் சந்ததிகளில் தொடர்ந்து செல்கின்றன?

சுயநலம் கொண்ட ஒற்றை மரபணு (selfish gene) தான் அசைக்க முடியாத வீரனா? இல்லை சுயநலத்தோடு இயங்கும் குழு மரபணுக்கள் (selfish genome) பெரிய பிஸ்தாக்களா?

பேராசிரியர் பிரமிக்க வைக்கிறார்.

நம் நடத்தைகளுக்குப் பின்னால் ஹார்மோன்கள், மரபணுக்கள், பண்பாட்டு விழுமியங்கள் என்று பல்வகைப்பட்ட காரணிகள் இருப்பதால் இன்றைய உயிரியல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுவதில்லை.

பதிலாக, இயற்கை குணங்கள், சாத்தியங்கள், நிகழ்தகவுகள், செயல் எதிர்வினைகள் என்று பல கூறுகளை நம் முன் வைக்கிறது.

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்வேன்

அத்தியாயம் 14 க்கு வந்திருக்கிறேன்.

மற்றவர்களின் துன்பம் நம்மையும் பற்றிக் கொள்கிறது. ஒருவர் கையில் ஊசி போடுவதைப் பார்த்தால் நமக்கும் வலிக்கப் போகிறது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. நம்மை அறியாமலேயே கையை உதறி அந்தத் துன்பத்தில் இருந்து தப்ப மனசு நினைக்கிறது.

நம் மூளையில் இருக்கும் Sensory Cortex இந்த மாயையை உருவாக்குகிறது. ஒருவேளை அது தான் Motor Cortex பகுதியைத் தூண்டி, நம் கையை உதற வைக்கிறதோ?

ஒருவரின் துன்பத்தைப் பார்த்ததும் மனசு உதவி செய்ய நினைக்கிறது. ஆனால், முடியாத சூழ்நிலை. மன்னிச்சிக்கோ! உச் கொட்டிவிட்டு நகரப் பார்க்கிறோம். இது அனுதாபம் (sympathy).

அதே மனிதரின் நிலையைக் கண்டு, எனக்கும் அப்படி நேர்ந்தால்? என்னை அந்த இடத்தில் வைத்து அந்தத் துன்பத்தை மனசால் கற்பனை பண்ணும் போது வருவது பச்சாத்தாபம் (empathy).

எதுவுமே யோசிக்காமல் உடனடியாகவே, அந்த மனிதரின் துன்பத்தைப் போக்க செயலில் இறங்குகிறீர்களா? அது கருணை (compassion).

ஒருவர் இருமுகிறார். அக்கம் பக்கத்துக்கு ஆட்களுக்கும் தொண்டைக்குள் ஒரு கரகரப்பு. அவர்களும் இரும ஆரம்பிக்க, அந்த உணர்வு ஒரு சங்கிலித் தொடர் போல் தொடர்கிறதா? இதை உணர்ச்சிகளின் தொற்று (emotional contagion) என்பார்கள்.

கேள்வி : மற்ற விலங்குகளுக்கும் இதே உணர்வுகள் உண்டா? இரண்டு எலிகளை வெவ்வேறு கூடுகளில் வைத்திருக்கிறார்கள். ஒரு எலியின் காலில் சின்னதாய் ஒரு மின் அதிர்ச்சி கொடுக்கப் படுகிறது. மற்ற எலியை அதன் கூட்டிற்குள் விட்டபோது, அது ஓடிப்போய் வலியுற்ற எலியின் காலை நக்க ஆரம்பித்தது.

(அன்பு, காதல் உணர்வுகள் தோன்றும்போது மூளையின் Anterior Cingulate Cortex (ACC) பகுதி தூண்டப் படுகிறது. Oxytocin சுரக்கிறது.)

இன்னொரு சோதனை : ஒரு எலிக்கு கூட்டில் இருந்து எப்படித் தப்புவது என்று பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கிறது. (ஒவ்வொரு தடவையும், அது ஒரு குறிப்பிட்ட கம்பியைத் தட்டினால் வெளியே வரலாம். ஒரு சாக்லேட் கிடைக்கும். ஆனால் அதை மற்ற எலிகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.)

இப்போது, இன்னும் சில எலிகளை அதே கூட்டில் விடுகிறார்கள். கூட்டின் வெளியிலே ஒரு சாக்லேட் வைக்கிறார்கள். அந்த எலி கூட்டைத் திறந்து சாக்லேட்டைக் கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. (சாக்லேட் முழுவதையும் அதுவே சாப்பிட்டிருக்கலாம்.) ஏன் அப்படி?

அன்பு? கருணை? அல்லது இந்த உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட வேறு ஏதோ ஒரு உணர்வு அந்த எலிக்கு ஏற்பட்டதா? அல்லது அது சுயநலமோ?

நான் தனியே அந்த சாக்லட்டை சாப்பிட்டிருக்கலாம். ஆனாலும் மற்றவர்கள் நாக்கை சப்புக் கொட்டியபடி என்னையே பார்க்கிறார்கள். அந்தப் பார்வையே எனக்குப் பிடிக்கவில்லை. ஒரே எரிச்சலாய் இருக்கிறது. நாசமாப் போவீங்கடா. இதோ வரேன்.

கூட்டுக்குள் வந்து சாக்லட்டைப் பகிர்ந்து கொள்கிறது. இப்படியும் அந்த எலி யோசித்திருக்கலாமே – பேராசிரியர்.

(உங்களுக்கு நல்ல யோசனையே வராதா சார்? நீங்கள் வேதனையோடு கேட்பது எனக்குப் புரிகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள் – இதுவும் அவர்.)

சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு குழந்தை குய்யோ குய்யோ என்று விடாமல் அழுது கொண்டிருக்கிறது. இன்னொரு குழந்தை, அதன் அருகில் வந்து தன்னிடம் இருந்த விளையாட்டு பொம்மையை அழும் குழந்தைக்குக் கொடுக்கிறது.

அட, என்னா அன்பு. என்னா அன்பு. உங்களுக்கும் எனக்கும் கண்ணில் நீர் வழியாதது மட்டும் தான் பாக்கி.

குழந்தை என்ன நினைத்திருக்கும்? அந்த சனியன் ஏன் இந்தக் கத்து கத்துது? சந்தோஷமா விளையாட விட மாட்டேங்குதே. இந்த பொம்மையைக் குடுத்தா, ஒருவேளை?..

அழும் குழந்தை : அடே பொம்மை. வாவ்! அட்டகாசத்தை நிறுத்தி விடுகிறது. பொம்மை கொடுத்த குழந்தை : அப்பாடா. பெரிய நிம்மதி. பிசாசு இனி உயிரை வாங்காது.

அன்பு என்பதே சுயநலத்தின் ஒரு வெளிப்பாடு. மற்றவர்களின் துன்பம், துயரத்தை நாம் உணர்வது இயற்கையிலேயே வருவதல்ல. இள வயதில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரு நடத்தை அது.

பச்சாத்தாபம் (empathy) என்று நாம் பேர் வைத்திருக்கும் அந்த உணர்வை ஒரு குழந்தை வளர வளர, கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. துன்பங்கள், வலி எதற்காக ஏற்பட வேண்டும்? யார் அதற்குக் காரணம்? கேள்விகள் எழுகின்றன. கோபம், வெறுப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து அந்தக் குழந்தையின் மனதை நோகடிக்கிறது.

மற்றவர்களின் வேதனை நமக்கு எரிச்சலைத் தருகிறது. இந்தத் தொல்லையில் இருந்து விடுபடவே முடியாதா? ஏதாவது செய்யவேண்டுமே. துடிக்கிறோம்.

சமூக பொருளாதார நடப்புகளும் பச்சாத்தாப உணர்வைப் பாதிக்கின்றன. பணக்காரர்களுக்கு இந்த உணர்வு அருகிப் போயிருக்கும். சோதனைகள் தெரிவிக்கின்றன.

ஒரு மண்டபத்தின் வழியாகப் போகும்போது, ஒரு தட்டில் இனிப்பு வகைகள் வைக்கப் பட்டிருக்கின்றன. சுவரில் ஒரு வாசகம் : இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். இலவசம்.

சாதாரண காமா சோமாக்கள் ஒரு இனிப்பை மட்டும் எடுத்தபடி நகர்கிறார்கள். பணக்கார சொம்புகள் அள்ளி எடுத்து பாக்கெட்டில் போட்டபடி போகின்றன. மற்றவர்களுக்கும் மிச்சம் இருக்கட்டுமே. ஹூம். மற்றவர்களுக்கு எதுக்கு?

அடுத்து, வாசகத்தில் ஒரு மாற்றம் செய்தார்கள் : மிச்சம் இருக்கும் இனிப்புகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும். அப்போதாவது பணக்கார கருமாந்திரங்கள் திருந்தி இருக்கும்? இல்லை. எந்த சலனமும் இல்லாமல் அதே போல அள்ளினார்கள்.

துவக்கத்தில் ஏழையாய் இருந்து வாழ்க்கையில் முன்னேறி செல்வந்தவர்களாய் மாறியவர்களிடமும் அதே நடத்தை இருந்தது.

அதே சமயம், பிறர் என்றால் ஒரே அலட்சியம். சொந்தக் குடும்பத்தில் மிகவும் பற்று கொண்டவர்கள் இதே வர்க்கம்.

ஒரு தனி மனிதரின் துன்பம் கண்டால் மனம் கஷ்டப்படுகிறது. ஒரே சமயத்தில் பல நூறு பேர் துன்பத்தில் வாடுவது கண்டால் சோர்வு உண்டாகிறது. அத்தனை பேருக்கும் எப்படி உதவுவேன்? முடியவில்லையே.

அன்னை தெரெசாவே ஒத்துக் கொண்டிருக்கிறார் : ஒரு பத்துப் பனிரெண்டு நோயாளிகள் என்றால் உயிரையும் மதிக்காமல் உதவுவேன். ஆயிரம் பேர் என்றால் எங்கே போவேன்?

ஒருவர் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் எதையும் யோசிக்காமல், அந்தக் கணமே பாய்ந்து உதவும் மாந்தர்களைக் கண்டிருக்கிறோம். கேட்டால், நான் யோசிக்கவில்லை. உதவ வேண்டும். அதுவும் உடனடியாக என்று தோன்றியது. அவ்வளவு தான் என்று சொல்வார்கள்.

Automicity என்கிற பண்பின் உந்துதல் இது என்கிறார் பேராசிரியர். அதாவது, இளமையில் இருந்து கற்றுக் கொண்டே வந்த ஒரு தானியங்கி நடத்தை (automatic behaviour) என்று விளக்குகிறார்.

சைக்கிள் ஓடும்போது விழுந்து விடாமல் சமநிலை செய்தபடி ஓடுகிறோம். சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்ளும் போது மட்டும் கஷ்டமாக இருக்கிறது. பழகிவிட்டால் லேசாகி விடுகிறது. யோசிக்கிறோமா? இல்லையே.

பழக்கம் வந்துவிட்டால் யோசிக்க வேண்டிய அவசியம் வராது, தானாக நடக்கும். Automicity பண்பும் அதே. இந்தப் பண்பு ஒரு கணத்தில் தோன்றி செயல்பாட்டை முன்னெடுக்கிறது. அடுத்த கணம் மறைந்து விடுகிறது. இடையில் என்று எதுவும் இல்லை.

(உயிரியல் ரீதியில் ACC, Amygdala மற்றும் Insular Cortex மூன்றும் இந்த நடத்தையின் போது விரிவடைகின்றன. FC வேலை செய்யாது – தெரிந்ததே.)

அடுத்த கட்டம் வருகிறார் பேராசிரியர்.

ஒருவரின் துன்பத்தை நாம் களைந்த பின் நம் மனத்தில் ஒரு அமைதி தோன்றுகிறது. அபூர்வமான ஒரு உணர்வு அது. இதை தலாய் லாமாவின் ஒரு சிஷ்யர் (பிரெஞ்சுக்காரர், மூலக்கூற்று உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர், துறவி) சொல்கிறார்:

சக மனிதர்களின் துன்பம் கண்டு என்னால் தாங்கிக் கொள்ள முடியாத போது தியானம் கை கொடுக்கிறது. மனதில் எழுந்த படபடப்புகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கி அமைதி அடைகிறேன்.

தியானம் செய்வதால் உங்கள் மனம் நிம்மதி அடைகிறது. நன்மையோ, தீமையோ எதிலுமே பற்றில்லாத நிலையை இன்னும் ஊக்குவிக்கிறது. ஆகவே, யாருக்கு முதலில் உதவி தேவை? உதவி செய்ய நினைப்பவர் சுமுகமான, தெளிவான நிலையில் இருந்தால் தான் மற்றவரின் துன்பம் போக்க, ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியும். (சுயநலம் வந்து நிற்கிறது – கவனியுங்கள்.)

ஒரு நிமிஷம் : நான் புத்தரின் போதனைகளைப் பின்பற்றுங்கள் அல்லது பின்பற்றுவதால் பயனில்லை என்று எதுவுமே சொல்லவில்லை. (புத்த மதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.) சில உதாரணங்களை என் கருத்துக்கு ஏதுவாய் முன் வைத்திருக்கிறேன். அவ்வளவே என்கிறார் பேராசிரியர்.

கேள்விகள் : மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நினைப்புக்கு உள்நோக்கம் ஏதாவது இருக்கிறதா? சுயநலமே இல்லாத செயல்கள் ஒன்று கூட இல்லையா? எது செய்தாலும் உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடக் கூடாது என்பதில் தான் கவனமாய் இருக்கிறீர்களா?

எதுவுமே எதிர்பார்க்காமல் செய்யும் உன்னத தியாகத்தின் (altruism) பின்னால் கூட, சுயநலத்தின் சாயல் இருக்கிறதா? (என் பேர் பரவப் போகிறது. என் புகழ் ஒங்கப் போகிறது.)

ஒரு ஆய்வு நடந்தது. சில மாணவர்களை இரண்டு குழுக்களாய்ப் பிரிக்கிறார்கள். முதலாவது குழுவில், ஒவ்வொருவருக்கும் 5 டாலர்களோ அல்லது 20 டாலர்களோ கொடுக்கப் படுகிறது. அதில் அரைவாசிப் பணத்தை அவர்களே சொந்தத் தேவைக்கு செலவழிக்கலாம். மிகுதியை யாருக்காவது உதவி தேவைப்படும் என்றால் அவர்களுக்காக செலவு செய்யலாம். வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

அவர்கள் திரும்பி வந்ததும் கேட்கப்பட்ட கேள்வி : எதிலே உங்களுக்கு மகிழ்வு அல்லது திருப்தி கிடைத்தது? உங்களுக்கு செலவு செய்தபோது? அல்லது மற்றவர்களுக்கு?

மற்றவர்களுக்காக செலவு செய்தபோது, கூடிய மகிழ்ச்சி/ திருப்தி இருந்ததாக சொன்னார்கள்.

மற்ற குழுவுக்கும் அதே போல் பணம் கொடுக்கப் பட்டது. ஆனால், ஆய்வின் நோக்கம், அதன் பொறிமுறை எல்லாம் அவர்கள் வெளியே போக முன்பே சொல்லப்பட்டு விட்டது.

திரும்பி வந்ததும் இவர்கள் என்ன சொன்னார்கள்? எங்கள் சொந்த செலவுக்குத் தான் ரொம்ப சந்தோஷம் அனுபவித்தோம். நீங்கள் கொடுத்த 5 டாலரை விட 20 டாலர் கொடுத்திருந்தால் இன்னும் ஜாலியாய் இருந்திருக்கும்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதிகமான உளவியல், உயிரியல் ஆய்வுகள் இந்த முடிவைத் தான் சுட்டிக் காட்டுகின்றன.

உன்னத தியாகம் என்பதை விட்டுவிட்டு reciprocal altruism என்கிற கொடுக்கல் – வாங்கல் வாழ்க்கையின் (கூட்டுறவு) பின்னணியை எட்டிப் பார்த்தால் அதிலும் சுயநலம் இல்லாமலா இருக்கிறது?

மதங்களிலும் ஒரு வித சுயநலப் பண்பு இழையோடுகிறது. நாம் காடுகளில் வாழ்ந்த காலத்தில் ஒரு சிறு குழுவாய் மட்டும் அலைந்திருப்போம். வெளி மனிதர்கள் நம்முடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழல் தோன்றியபோது ஒரு வித அச்சம் வந்திருக்கும்.

இவர்கள் யார்? நம் சிந்தனையோடு ஒத்துப் போவார்களா? அடிதடிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமா? என்ன செய்யலாம்? ஆகவே, இதுவரை ஆசீர்வாதங்கள், ஆறுதல்கள் தந்த கடவுள்கள் இனிமேல் தண்டனைகள் தரும் கடவுள்களாக அவதாரம் எடுக்கிறார்கள். சுவர்க்கமும் நரகமும் தோன்றுகின்றன.

குற்றங்கள் செய்தால் கடவுள் தண்டிப்பார். மனசில் பயம் ஏற்படுகிறது. குற்றங்கள் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. ஆகவே நாலு நல்ல நடத்தைகள் மூலம் நம் குற்ற உணர்ச்சியைக் குறைத்துக் கொள்கிறோம். அதே நல்ல நடத்தைகள் மூலம் நமக்கு நிம்மதியும் கிடைக்கிறது.

எல்லாமே சுயநலம் என்றால் வாழ்க்கையே வெறுத்து விடும். (வாசிக்கும் போது எனக்கும் தான்.) அதற்காக, நீங்கள் தளர்ந்து விடாதீர்கள். பேராசிரியர் சில அறிவுரைகளும் சொல்கிறார் :

உலகின் நாலா பக்கங்களிலும் நடக்கும் அநியாயங்கள், போர்கள், வறுமை, நோய்கள், கருணையே இல்லாத ஆட்சியாளர்கள் என்று தினமும் செய்திகள் பார்க்கிறோம். நம் மனம் துடிக்கிறது. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று அளவு மீறிக் குற்ற உணர்ச்சியில் வெந்து போவது தேவையே இல்லாத ஒன்று – ரொம்ப அலட்டிக்காதீங்க.

உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கவனியுங்கள். உங்களால் முடிந்ததை, உதவிகளை செய்யப் பாருங்கள். (அது சுயநலம் தான் என்பதையும் மனசில் நினைத்துக் கொள்ளுங்கள்.). வெளி உலகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு நீங்கள் காரணம் அல்ல. குற்ற உணர்ச்சிகளைத் தவிருங்கள் – இது முக்கியம்.

உங்கள் குழந்தைகளுக்கு லெக்ஸர் அடிக்கிற வேலையை முதலில் நிறுத்துங்கள். எதுவும் பேசாமல், உங்கள் நடத்தைகள் மூலம் அன்பு, கருணை என்பதை சொல்லிக் கொடுங்கள். சைக்கிள் கற்றுக் கொள்ளும் உதாரணம் போல அது தானாக வரும்.

சுயநலம் நல்லது.

முடிவுரை : நாம், வேறு அவர்கள் வேறு என்கிற சிந்தனை ஏன் வருகிறது? ஒழுக்கம், நேர்மை என்றால் என்ன? எப்படி இந்த நடத்தைகள் உருவாகி இருக்கும் ? கொலைகள், யுத்தங்கள், சமாதானம் ஏன் ஏற்படுகின்றன? என்ன காரணிகள்? இன்றைய குற்றவியல் சட்டங்கள் என்று ஏகப்பட்ட தலைப்புகளில் பேராசிரியர் விளாசித் தள்ளுகிறார் – அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.

புத்தகத்தை ஒரு தடவை வாசித்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது. அதற்கு முன்னால் ஒரு டீ அல்லது காபி?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.