இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் போது, முதலில் கார்ல் மார்க்சுக்கு முன்னாடி என்று தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன். ஒருவேளை என் இடதுசாரித் தோழர்கள் முகம் சுளிப்பார்களோ? தயக்கம் . கடைசியில் ஆவன்னா ஓனா.
15 -16 ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி அல்லது மறுமலர்ச்சி என்பது அய்ரோப்பாவில் கிடுகிடுவென்று வளர்ந்து விடவில்லை.
500 ஆண்டுகளாக, எழுந்து, விழுந்து, ஒடி, நடந்து, தேங்கி நின்று என்று பல கட்டங்கள் தாண்டி 21 ம் நூற்றாண்டில் வந்து நிற்கிறது.
இந்த 21ம் நூற்றாண்டில், நாம் பெருமைப்படும் சாதனைகள், வியப்புகள் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு அதன் கீழே எட்டிப் பார்த்தால் :
அழுகுரல்கள், வேதனைகள், நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அதிர்ச்சிகள் என்று எத்தனையோ துயரங்கள் நம்மை ஏக்கத்தோடு பார்ப்பது தெரியும்.
அந்த காலகட்டங்களில் மக்களின் வாழ்வு எப்படி இருந்திருக்கிறது?உதாரணத்துக்கு, 1828 ம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளிவந்த The Lion பத்திரிகையில் வந்த ஒரு செய்தி :
Lowdham நகரில் ஒரு ஆலையில் பத்து வயது கூட நிறைவு செய்யாத சுமார் 80 ஏழைக் குழந்தைகள் தினமும் 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு சிறு குற்றம் செய்தாலும் அந்தக் குழந்தைகளை நிர்வாணமாக்கி கசையடிகள் கொடுத்திருக்கிறார்கள். கடுங்குளிரில் போதிய ஆடைகள் இல்லாமல், பன்றிகளோடு வாழ்ந்திருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள். இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அத்தனை கோரங்கள்.
விவசாயம் பெருந் தொழிலாய் இருந்த காலத்தில் அதில் கூலிகளாய் வாழ்ந்த பெருவாரி மக்களுக்கு ஒரு நேரக் கஞ்சியாவது கிடைத்தது. மறுமலர்ச்சி மலர மலர, விவசாய நிலங்கள் தொழில் பேட்டைகளாக ஒளிர ஆரம்பித்தன. சாதாரண மக்கள் தொழில் பேட்டைகளை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
முதலாளிகளின் கவனம் எப்போதும் கல்லாப் பெட்டிகளிலேயே இருப்பது தெரிந்ததே. விளைவு : முன்னை விட வறுமை. நாள் கணக்கில் பட்டினி. குழந்தைகளையும் வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை. வேறு வழி?
தவிர, இன்று போலவே அன்றும் முதலாளிகள் தொழிலாளர்களை விட, எந்திரங்களில் கூடுதல் பாசம் காட்டினார்கள். இதுவும் அனைவரும் அறிந்த ரகசியம்.
வாழ்வா சாவா என்கிற நிலையில் தொழிலாளர் வாழ்க்கை இருந்தது. எந்திரங்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பின் விளைவாய் நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன.
வேலை இன்மை ஒரு பக்கம். வேலை கிடைத்தாலும் அதில் கிடைத்ததோ ஊதியமல்ல – பிச்சைக் காசு. ஒரு செய்தி : 1779 ல் நடந்த ஒரு தொழிலாளர் போராட்டத்தில், சுமார் 8000 பேர் திரண்டு ஒரு பெரும் இரும்பு ஆலையையே கொளுத்தித் தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள்.
தொழில் நுட்பத்துக்கு எதிரான போராட்டங்கள் 1811 ஆண்டளவில் இங்கிலாந்து முழுவதுமே தீவிரம் அடைந்தன.
(அன்றைய பிரபல நட்சத்திர பொருளியலாளர், ரிக்கார்டோ (David Riccardo) இப்படி வேலை இன்மையால் நடந்த கொந்தளிப்புகள் பற்றி ஓரிரு இடங்களில் மட்டும் போனால் போகிறது என்பது போல் குறிப்பிட்டிருக்கிறார். அன்றைய படித்த வர்க்கம், மேல்தட்டு வர்க்கம் எதுவுமே இந்த மனித அவலங்களைக் கண்டு கொள்ளவில்லை.)
அன்றும் எத்தனையோ புரட்சி சிந்தனையாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதில் சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் மற்றைய பொருளியல் நட்சத்திரங்களோடு சேர்த்து அறிமுகம் செய்திருக்கிறார் ராபர்ட் ஹெய்ல்ப்ரோனர் (Robert Heilbroner).
அவரின் The Wordly Philosophers நூலில் என்னை ஆச்சரியப்பட வைத்தவர்கள் ரெண்டு பேர்.
நான் ஏன் பிறந்தேன்
1771 ல் பிரிட்டனின் வேல்ஸ் மாநிலத்தில் பிறந்தவர் இந்த மக்கள் திலகம். பின்னாளில், அவர் பெரும் பணக்காரராய் வந்தாலும் வந்தார். புகழ் அவர் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்தது.
மக்கள் அவரை எங்கே பார்த்தாலும், எங்க வாத்தியார்டா என்று டா போடவில்லை. பதிலாக, மாண்புமிகு வள்ளல் நியூ லானார்க் நகரத்தை சேர்ந்த ஓவன் அவர்கள் என்று (நீளமாய்) மரியாதையோடு அழைத்தார்களாம்.
அன்றாடங் காய்ச்சிக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஓவன், தன் 18 வயசில் அண்ணன் தந்த 100 பவுண்ட் காசுடன் மான்செஸ்டர் நகரம் வந்து ஒரு சின்னதாய் ஒரு ஜவுளி உற்பத்தி ஆலை துவங்கி இருக்கிறார்.
அது எப்படி இயங்கியது என்பதை எழுதப் போனால் போரடிக்கும். ஏன் என்றால் ஓவனுக்கு சின்ன மீன்களில் ஆர்வம் இருக்கவில்லை. பெரிய மீன் எப்போ சிக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தார் அவர்.
வந்தது ஒரு விளம்பரம் – ஒரு பெரிய ஜவுளி ஆலைக்கு மானேஜர் தேவை. மானேஜர் ஆக பணியாற்றிய அனுபவம் ஏதும் ஓவனுக்கு இருக்கவில்லை. துணிவே துணை. நேரே போய் அந்த முதலாளி முன்னால் நின்றார் – உங்களுக்கு மானேஜர் தேவையாமே?
முதலாளி வயசு கேட்டார். பிறகு குடிப்பாயா என்று கேட்டார். இல்லை என்றார் ஓவன். என்ன சம்பளம் எதிர்பார்க்கிறாய்? 300 பவுண்டுகள் என்றார் ஓவன். என்னது? முதலாளி அதிர்ந்து போனார். (ஏன் என்றால் அந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய சம்பளம் யாரும் வாங்கியதே இல்லை.)
ஓவன் : இதுக்குக் குறைவாய் என்னால் வேலை செய்ய முடியாது. உங்களுக்குக் கட்டுப்படி ஆகாது என்றால் நான் என்ன செய்வது? நன்றி. வரட்டுமா?
முதலாளிக்குப் பேச்சே வரவில்லை. இப்படி ஒரு துணிச்சல் நிறைந்த இளைஞனை அவர் வாழ்க்கையிலேயே கண்டதில்லை. இவனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. என்னதாயிருக்கும்? புரியவே இல்லை. இருந்தும் ஆளை விட மனம் வரவில்லை. அவர் சொன்னார் : நீ தான்யா மானேஜர்.
முதலாளியின் உள்ளுணர்வு சரியாகவே இருந்தது. ஓவனின் திறமை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அசந்து போனார் அந்த முதலாளி. ஆறு மாதங்களிலேயே முதலாளி சொன்னார் : என் நாலில் ஒரு பங்கு பிசினஸை நீயே எடுத்து நடத்து ராஜா.
இருந்தும் அது போதவில்லை. இதை விடப் பெரிய மீன் கிடைக்காதா? சில ஆண்டுகளில் அது தானாய் வந்து விழுந்தது. அவர் காதலித்த பெண்ணின் தகப்பனார் நியூ லானார்க் நகரில் பெரும் பிரம்மாண்ட ஆலைகளின் சொந்தக்காரர், அதை அப்படியே விற்கப் போகிறேன் என்று ஒருநாள் விளம்பரம் போட்டார்.
ஓவன் இங்கேயும் அவர் ஸ்டைலில் எதிர்கால மாமனாரை வீழ்த்தினார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அத்தனை ஆலைகளும் அவர் சொந்தம். திருமணம் நடந்தது.
இந்த மக்கள் திலகமும் ரெண்டு விரல் காட்டினாரோ என்னமோ? அதாவது, நான் எப்படியாவது பெரும் முதலாளியாக வந்துவிட வேண்டும் என்பது தான் முதல் விரலின் அர்த்தம். அது தான் நடந்து விட்டதே. ரெண்டாவது விரல்?
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்
அடுத்து, இது வரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருந்த திட்டங்களை அமுல் படுத்துவேன் என்று வேலைகளில் இறங்கினார் அவர்.
குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் அநியாயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அப்படி வேலை கொடுத்தாலும் வளர்ந்த பிள்ளைகளுத் தான் வேலை. அதுவும் ஒரு நாளைக்கு மூணே முக்கால் மணித்தியாலங்கள் மட்டுமே.
ஆலை அருகிலேயே தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீடுகள். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள ஆயாக்கள். குழந்தைகளுக்குப் பள்ளி. அனாதைகளாய் வீதிகளில் அலைந்த குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லங்கள்.
தொழிலாளர்கள் எல்லாரும் பேட்ஜ் அணிந்திருந்தார்கள் – நாலு வண்ணங்களில். திறமைக்கும் ஒழுக்கத்துக்கும் பச்சை நிறம். அதில் கொஞ்சம் குறைவானவர்களுக்கு ஆரஞ்சுக் கலர். பரவாயில்லை என்று சிலருக்கு நீல நிறம். இவனுகளத் திருத்தவே முடியாது என்று நினைத்தால் அவர்களுக்குக் கருப்பு.
ஏன் அப்படி? ஒவ்வொரு மானேஜருக்கும் ஆளைப் பார்த்ததுமே இன்றைக்கு எவருக்கு எந்த வேலை கொடுக்கலாம் என்று லேசாய் முடிவெடுக்கலாமே. (தொழிலாளர்கள் பேட்ஜ் கலருக்கு எதிராய் மனு செய்யும் உரிமையும் இருந்தது.)
அப்போ ஆலைகளின் லாபம் பெரிசாய் இருந்திருக்காதே என்று சில ஆட்கள் வாதிடலாம். ஏன் அவ்வளவு தூரம்? பாருங்க. இந்த ஆட்டம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்று அந்த நாளிலேயே மற்ற முதலாளிகள் கிண்டலடித்தார்கள்.
லாபம் காட்டி எல்லார் வாயையும் அடைத்தார் ஓவன். அவரின் கொள்கை : தொழிலாளர்களை நாம் நன்றாய்க் கவனித்துக் கொண்டால் அவர்கள் முழு மனதோடு வேலை செய்வார்கள். லாபம் நிச்சயம். அது எல்லாருக்கும் நல்லது.
அந்த காலத்துப் பத்திரிகைகளில் ஓவன் பேர் பெரிசாக வரத் துவங்கியது. வெளிநாட்டுப் பத்திரிகைகளும் ஏட்டிக்குப் போட்டியாக எழுதித் தள்ள, மன்னர்கள், மந்திரிகள், பிரபுக்கள், எழுத்தாளர்கள், சீர்திருத்தவாதிகள், பணக்காரப் பெண்கள் என்று எல்லார் மனசிலும் அந்த ஆலைகளைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று மனசில் ஒரு குறுகுறுப்பு.
1815 – 1825 கால இடைவெளியில் சுமார் 25 000 பேர் அவரின் நியூ லானார்க் ஆலைகளுக்கு வந்து பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள்.
அடுத்து, தன்னுடைய இன்னும் சில கொள்கைகளை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் அவர் : தனியார் நிலங்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும். பணம் என்பதை இல்லாமல் ஒழித்து விட வேண்டும்.
(அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று ஏற்கெனவே தெரிந்திருந்தது. சாத்தான் சும்மா இருக்கமாட்டான். அவன் தான் இப்படி ஆட்களை அனுப்பி கலாட்டா பண்ணுகிறானோ? பேசிக் கொண்டார்கள்.)
புகழ் வந்தால் பொறாமையும் சேர்ந்து வரும். தெரிந்ததே. ஆகவே எதிரிகள் பொய், புனைக் கதைகளை நாலா பக்கமும் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
நியூ லானார்க் நகரம் பத்தாது. நாடு முழுக்க என் கொள்கைகளை செயல்படுத்தினால் என்ன? யோசித்தார் ஓவன். அன்றைய பிரபுக்கள், அரசியல்வாதிகள் எல்லாரையும் சந்தித்தார்.
அவர் கனவு கண்ட ஊர்கள் எப்படி இருக்கும்? (பேர் : கூட்டுறவுக் கிராமங்கள்) ஒவ்வொரு ஊரிலும் 800 இல் இருந்து 1200 பேர் வரை வாழ்வார்கள். ஆலைகள், பள்ளிக் கூடங்கள், பூங்காக்கள், மருத்துவ மனைகள் கொண்ட தன்னிறைவு ஊர்களாக அவை இருக்கும். சுருக்கமாக சொன்னால், ஒரு சுவர்க்கத்தையே பூமியில் உருவாக்கி விடலாம் என்று நம்பினார் அந்த மனிதர்.
அவரின் தளராத முயற்சியால் (அல்லது நச்சரிப்பு தாங்க முடியாமல்?) அவரின் சிபாரிசுகளை அமுல் படுத்த அன்றைய நாடாளுமன்றம் ஒரு குழு அமைத்தது. (இதெல்லாம் சரிப்படாது என்று முணுமுணுத்துக் கொண்டு அன்றைய பொருளியலாளர் ரிக்கார்டோவும் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராய் இருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)
ஆனால் பணம் திரட்ட முடியவில்லை. வெறுத்துப் போய், அமெரிக்கா போய் என் திட்டங்களை செயல்படுத்துவேன் என்று முடிவெடுத்தார் அவர்.
புதிய வானம் புதிய பூமி
இன்டியானா மாநிலத்தில் இயங்கிய ஒரு தீவிரவாத கிறிஸ்தவ அமைப்பின் நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கினார்.
தன் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஊராக, புதிய அமைதி (New Harmony) என்று பேர் வைத்தார். விளம்பரம் போட்டார். 1826 ம் ஆண்டு ஜூலை 4 ந் தேதி பெரும் ஆரவாரத்தோடு அந்த ஊர் திறப்பு விழா நடந்தது.
இங்கே தனியார் நிலம் என்று எதுவும் இருக்காது. எல்லாம் ஊருக்கே சொந்தம். எல்லாரும் இங்கே பங்குதாரர்கள். மதத்துக்கோ அல்லது திருமணங்களுக்கோ இங்கே இடமில்லை. புது உலகம் படைப்போம். வாருங்கள்!
கூட்டம் தாங்க முடியவில்லை. 800 அல்ல. அதைவிடப் பன்மடங்கு. ஆனால் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. ஆளுக்கொரு யோசனைகள். குழப்பங்கள்.
மோசடிகள், ஏமாற்று வேலைகள் தாராளமாகவே நடக்க ஆரம்பித்தன. அதில் சேர்ந்திருந்த ஒரு ஆள் நிதி மோசடி செய்து பக்கத்து ஊரில் ஒரு மது தயாரிக்கும் ஆலை துவங்கியது இன்னொரு சோகம். இன்னும் வேறு வேறு கவர்ச்சியான பேர்களோடு அக்கம்பக்க ஊர்களில் எட்டிக்குப் போட்டியாக புதிய கிராமங்கள் தோன்றின.
துவங்கி இரண்டு ஆண்டுகளிலேயே புதிய அமைதியை இழுத்து மூடினார் ஓவன். நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றார்.
இருந்தும் அந்த காலகட்டத்தில், அன்றைய அமெரிக்க அதிபர், ஜாக்சன் மற்றும் மெக்ஸிகோ தலைவர்களையும் சந்தித்துத் தன் திட்டங்களையும், கொள்கைகளையும் விளக்கி உதவி கேட்கத் தவறவில்லை.
ஆனால் பலன் இல்லை. மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். கிராக்கு என்று கிண்டல்கள், கேலிகள். அவரோ மனந் தளராத விக்ரமாதித்தன் போல் இயங்கினார். காரணம் : அன்றைய தொழிலாளர் இயக்கங்கள், நெசவாளர்கள், மட்பாண்டத் தொழிலாளர்கள் எல்லார் கண்ணிலும் அவர் ஒரு மீட்பராகத் தெரிந்தார்.
தொழிலார்களைத் திரட்டி அவர்களே நடத்தும் ஆலைகளை அறிமுகம் செய்வதில் முனைப்போடு செயல்பட்டார். இருந்தும் நிர்வாகத்தில் பூசல்கள். எல்லாமே திவால் ஆகின. (இதில் Rochdale Pioneers என்கிற ஒரு கூட்டமைப்பு குறிப்பிடப் படவேண்டிய ஓர் தொழிலாளர் கழகம்.)
1833 ல் அவர் துவங்கிய The Grand National Union தொழிலாளர் கழகம் இன்றைய பிரிட்டனின் தொழில் கட்சிக்கு அடித்தளம் என்றால் மிகையல்ல. நல்ல ஊதியம், வேலைத்தளங்களில் தொழிலாளருக்குப் பாதுகாப்பு மற்றும் வசதிகள் வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த கழகம் அது.
ஆனால் இரண்டு ஆண்டுகளில் அதுவும் உடைந்தது. நிர்வாகிகள் ஆளுக்காள் அடித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர், அந்த ஆள் கடவுளை நம்பாத ஆளய்யா என்று வேறு கோஷம் போட்டார்கள். பாவம் கடவுள்.
அவரின் 64 வயதில், அவரின் சாதனைகள் ஒவ்வொன்றாய் வீழ்ச்சி கண்டதை அவர் கண்ணாலேயே பார்க்க வேண்டிய துரதிர்ஷ்டம். இருந்தும் இன்னும் 23 ஆண்டுகள் வாழ்ந்தார் அந்த மனிதர்.
அவரின் முதுமைக் காலத்தில் ஆவிகளோடு பேசுவது, யோசனைகள் கேட்பது என்று போயிருக்கிறார். மனிதர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை ஆவிகள்? எதுவானாலும் அது அவர் சொந்த விஷயம்.
ஓவனின் விமர்சகர்கள் பல கருத்துக்களை முன் வைக்கிறார்கள் :
அவருடைய அனைத்து செயல்பாடுகளும் சோதனைக் களங்களாகவே இருந்தன. அதுவும் நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தி வராத கற்பனைகள் அவரைத் தோல்வி அடையச் செய்தன. காலத்துக்கேற்ப அவர் வளைந்து கொடுத்திருக்க வேண்டும். தவறிவிட்டார்.
அவரின் சீர்திருத்தங்களின் படி, தொழிலாளர்கள் ஆலையையே நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப் பட்டிருந்தது.
மதம் இன்னொரு முக்கிய காரணி. அதை அவர் அலட்சியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
கார்ல் மார்க்ஸும் எங்கெல்சும் ஓவனின் நடப்புகளை ஆதரிக்கவில்லை. என்ன சொன்னார்கள்?
ஓவனின் செயல்பாடுகளால் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவே முடியாது. ஏன் என்றால் அதற்கான காரணிகள் அன்று உருவாகி இருக்கவில்லை.
அடுத்து, ஓவன் கனவு கண்ட சமுதாயம் அன்றிருந்த சூழ்நிலையோடு ஒத்துப் போகவே முடியாது. வன்முறை இல்லாமல் சமுதாயத்தை மாற்றிவிட முடியும் என்று நினைத்தது அவரின் பெரும் தவறு. முதலாளிகள் இலகுவாக அவரின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். இது எதிர்காலத்துக்கும் பொருந்தும்.
தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த புரட்சி (வன்முறையில்) மட்டுமே வெற்றி காண முடியும்.
தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டால் வேறு எதுவும் யோசிக்க மாட்டார்கள். அத்தோடு திருப்தி அடைந்து விடுவார்கள் என்று நினைத்தது அடுத்த தவறு. மனிதர்களின் ஆசைகள் அளவில்லாதவை. அவரின் சிந்தனை உண்மை நிலவரத்துக்குப் புறம்பானது.
ஆகவே பொருளாதார வளர்ச்சி முக்கியம். புதிய சமுதாயம் அப்போது தான் நின்று பிடிக்கும்.
நூலாசிரியர் ஹெய்ல்ப்ரோனர் ஓவன் பற்றி என்ன சொல்கிறார்?
நடைமுறை சாத்தியங்கள், யோசிக்காமல் துணிச்சலான முடிவுகள் எடுக்கும் தைரியம், தடாலடி செயல்பாடுகள், பகுத்தறிவு, பைத்தியக்காரத்தனம் எல்லாம் கலந்த ஒரு வினோத கலவை அவர்.
எது எப்படி இருந்தாலும், 20 ம் நூற்றாண்டின் கடைசியில் அமுலுக்கு வந்த அத்தனை முற்போக்கு செயல்பாடுகளையும் 19 ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே செய்து காட்டிய மாமனிதர் ஓவன்.
அவர் பொருளியல் நிபுணர் அல்ல. மற்றவர்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்க, அவர் செயல்வீரராய் நடை போட்டார்.
நேரம், காலம் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உலகம் நல்லதோ கெட்டதோ, சூழ்நிலைகள் சரியில்லையோ என்னமோ எனக்குத் தெரியாது. என் சித்தாந்தம் சரியா தவறா அதுவும் தெரியாது. ஆனால் மாற்றியே ஆக வேண்டும். என்னால் அது முடியும்.
நம்பிக்கை என்று ரெண்டாவது விரலையும் காட்டியபடி விடை பெற்றிருக்கிறார் அந்த மக்கள் திலகம்.