உன் பார்வை போலே என் பார்வை இல்லை

கார்ல் மார்க்ஸ் சொன்ன தொழிலாளர்களின் புரட்சி ஏன் இன்னும் ஏற்படவில்லை? முதலாளித்துவத்தைக் கவிழ்க்கப் போவது யார்? புத்தகங்கள் இருக்கும் போது நண்பர்கள் எதுக்கு?

ஆயிரத்தில் ஒருவன் கட்டுரையில் என்னை ஆச்சரியப்பட வைத்தவர்கள் இரண்டு பேர் என்று குறிப்பிட்டிருந்தேன். இதோ இரண்டாமவர்.

The Wordly Philosophers நூலில் அதன் ஆசிரியர் கார்ல் மார்க்ஸுக்கும் இதில் வரும் மனிதருக்கும் ஒரே எண்ணிக்கையில் பக்கங்கள் ஒதுக்கி இருக்கிறார்.

மூளை நரம்பு பாதிக்கப் பட்டவர் போல் நடந்து கொண்டவர், எதிலும் பற்றில்லாத துறவி போல் வாழ்ந்தவர் என்று ஒவ்வொரு பக்கமும் அவருக்கு எத்தனையோ அடைமொழிகள் கொடுத்து எழுதித் தள்ளி இருக்கிறார் நூலாசிரியர். ஆனால் இவரின் மேதைமையை மட்டும் தள்ளவே முடியவில்லை.

முழுப் பேர்: தோர்ஸ்டைன் வெப்லென் (Thorstein Veblen). அந்த காலகட்டங்களில் அமெரிக்காவுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு நார்வீஜிய குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த ஆண்டு : 1857.

குடும்பத்தில் எல்லாரும் விவசாய நிலத்தில் வேலை செய்ய, இவரோ புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தார். எது கிடைத்தாலும் வாசித்தார்.

பின்னாளில், அவரின் ஒரு தம்பி இப்படிக் குறிப்பிட்டார்: எப்போ பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருப்பான். ரொம்ப அதிர்ஷ்டசாலி. பொய் சொன்னால் கூட, நம்பக் கூடிய மாதிரி சொல்லுவான்.

வெப்லென் ஒரு தினுசான ஆள். எப்போதும் தனிமையை விரும்பிய மனிதர். இருந்தும், அவர் கண்கள் மற்றவர்களை எடை போட்டபடி இருந்திருக்கின்றன. அன்றைய சூழ்நிலையையும் மனிதர்களின் நடத்தைகளையும் கூர்மையுடன் அவதானித்திருக்கிறார்.

அன்றைய பொருளாதார சூழ்நிலை எப்படி இருந்தது? சாதாரண மக்களை விட்டுவிடுவோம். ஒப்பீட்டளவில், செல்வந்தர்கள் அய்ரோப்பாவில் ஒரு விதமாகவும் அமெரிக்காவில் இன்னொரு விதமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

அய்ரோப்பாவில், பணக்கார ஆட்கள் சமூக அந்தஸ்தில் அப்படி ஒன்றும் பெரிய இடத்தில் இருக்கவில்லை. சட்டங்களை சொந்த சுயநலத்துக்காக வளைத்து, கோல்மால்கள் செய்து தான் அவர்கள் உயர்நிலைக்கு வந்தார்கள் என்று அதிகமாய் எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

அமெரிக்காவில் அப்படி அல்ல. காசு சேர்க்க எந்த வழியையும் உபயோகிக்கலாம் என்று எழுதப்படாத விதிகள் இருந்தன. பணக்காரர் ஆகவேண்டும் என்றால் நீதி, நியாயம், வெட்கம், சூடு சொரணை எதுவும் தேவை இல்லை. அங்கிருந்த மக்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. எல்லாருக்கும் காசு ஒன்றே குறிக்கோள். காசு பெருகப் பெருக, சமூகத்தில் மதிப்பும் கூடியது.

இதை அன்றைய பொருளியலாளர்கள் எப்படிப் பார்த்தார்கள்?

அமெரிக்க பொருளியலாளர்கள், இந்தப் போக்குக்குப் புதிய பேர்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். சூழ்ச்சிகள் செய்து எதிராளியை வீழ்த்துவதைத் துணிச்சல், விவேகம் நிறைந்த செயல்பாடு என்று வர்ணித்தார்கள். மோசடிகள் செய்வதை சாணக்கியத்தனம் என்றார்கள். செல்வந்தர்களின் ஆடம்பர செலவுகளுக்குத் தவிர்க்கவே முடியாத செலவுகள் என்று விளக்கம் சொன்னார்கள்.

அய்ரோப்பிய பொருளியலாளர்களோ, கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆடம் ஸ்மித் துவங்கி கார்ல் மார்க்ஸ் வரை முதலாளித்துவத்தின் போக்குகளை ஒன்று ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள். இருந்தும், இந்த நடப்புக்குத் தர்க்க ரீதியான விளக்கம் சொல்ல முடியவில்லை. காரணம், இவர்கள் அதே சமுதாயத்துக்குள் இருந்து யோசித்தவர்கள்.

இதைப் புரிந்து கொள்ள, அதன் சார்புநிலையிலோ அல்லது எதிர்நிலையிலோ, எதிலுமே ஒட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி வாழும் – உள்ளதை உள்ளபடியே பார்க்கும் சுதந்திரமான ஒருவரின் பார்வை அவசியம் என்கிற தேவை இருந்தது.

வெப்லெனைத் தவிர, வேறு யார் இதற்குப் பொருத்தமாக இருக்க முடியும்? – நூலாசிரியர் கேட்கிறார்.

வெப்லென் இந்தக் களத்தில் (பொருளியலில்) என்றுமே ஒரு அந்நியனாக வாழ்ந்தார். எந்த சித்தாந்தத்திலும் சிக்கிக் கொள்ளவில்லை. தனிமையில் தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவர்.

ஒரு சமயம், கார்ல் மார்க்ஸை ஆகா, ஓகோ என்பார். அடுத்த கணம், தயவு தாட்சண்யம் பார்க்காமல் விமர்சனம் பண்ணுவார். முரண்பாடுகளின் மொத்த உருவம். ஆனால் அவர் உதிர்க்கும் கருத்துக்கள் யோசிக்க வைக்கும்.

அதனாலேயே, அவருக்குப் புத்திஜீவிகள் மத்தியில் ஒரு தனி மதிப்பும், எதிர்ப்பும் கூடவே இருந்தன. அவர் விரிவுரையின் போது, என்ன சொல்கிறார்? சொல்ல வருகிறார்? எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. மீண்டும் விளக்க முடியுமா என்று கேட்டால், அது தேவை இல்லை என்பார்.

அவரின் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போயிற்று. ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் விரிவுரை நடத்திய காலங்கள் உண்டு. ஒரு சமயம், பல்கலைக்கழக வாசலில், என் விரிவுரை திங்கள் காலை மட்டும் நடக்கும். 10 மணிக்குத் துவங்கும். 10.05 க்கு முடிந்துவிடும் என்று வாசகம் எழுதித் தொங்கவிட்டார்.

மாணவர்கள் இல்லை. நண்பர்கள் என்று யாருமே இல்லை. இருந்தும், அவருக்கு ஒரு பெண் தோழிகள் பட்டாளமே இருந்தது. அவரின் மணவாழ்க்கை ஒரே அக்கப்போர். தவிர்த்து விட்டேன்.

1899 ம் ஆண்டு. அவரின் முதல் நூல் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.

உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளிலே

நூலின் பேர் : The Theory of Leisure Class. தமிழில் : வெட்டியாய்ப் பொழுது போக்கும் வர்க்கம் பற்றிய கோட்பாடு எனலாமா?

வழக்கமாக, முதலாளித்துவம் பேசும் பொருளியலாளர்கள் மனிதர்களில் ஏன் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன என்று கேட்டால், ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த ஒரு விளக்கத்தைப் பிச்சி வாங்குவார்கள்.

ஓர் சமூகம் என்பது பொய்யான தோற்றம். தனி மனிதர்கள் சேர்ந்த ஒரு கூட்டம் என்பது தான் சரியாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் அந்தக் கூட்டத்தில் சுயநலத்தோடு இயங்குகிறான். வேலை வேலை என்று ஆலாய்ப் பறக்கும் மனிதர்கள் தொகை கூடிக்கொண்டே போனால் என்ன நடக்கும்?

அங்கே பயங்கரமான போட்டி உருவாகிறது. இதுவரை மனிதனின் மனிதனின் உள்மனதில் தூங்கிக் கொண்டிருந்த முரட்டுத்தனம் விழித்துக் கொள்கிறது. எந்த விதத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள விழைகிறது.

பொதுவாய், மனிதர்கள் நிதானமாய் சிந்தித்து, பகுத்தறிவோடு செயல்படுபவர்கள். ஆகவே சிலர் அந்த நிலைமையை, களேபரத்தை தமக்கு வசதியாக வளைத்துக் கொள்கிறார்கள்.

ஆகவே, போட்டி என்று வரும்போது பொருளாதாரத்தில் சிலர் மேலே போக, மற்றவர்கள் கீழேயே மாட்டிக் கொண்டு லோல் படுகிறார்கள். சமூகத்தில் முன்னேறிய மனிதர்களுக்கு வேலை செய்ய வேண்டிய தேவை குறைந்து கொண்டே போகிறது. (அதற்கு மற்றவர்கள் இருக்கிறார்களே.)

ரொம்ப சிம்பிளான விளக்கம். நியாயமானது. ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் வெப்லென் மசியவில்லை. அதென்ன, உள்மனம்? நிதானமாக, பகுத்தறிவோடு செயல்படும் மனிதர்கள்? எந்த ஒரு மனிதனுக்கும் ஒய்வாக இருப்பது தான் பிடித்தமான தொழில் என்று துவங்குகிறார்.

பழங்குடி மக்களின் வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார். (1) சில செவ்விந்தியர் குழுக்கள், (2) ஜப்பானின் அய்னுஸ் (Ainus) பழங்குடிகள் (3) ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் (Aborigines).

இந்த மக்களுக்கு ஓய்வாக இருப்பது என்றால் எதுவும் புரியாது. இந்த எளிமையான சமுதாயங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் ஒதுக்கப் பட்டிருக்கிறது. அதை செய்து கொண்டே இருப்பதில் ஒரு பெருமை உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. செய்யும் தொழிலை மேலும் திறனோடு செய்யவேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறது. சும்மா வெட்டியாய்ப் பொழுது போக்குவதற்கு மதிப்பே இல்லை.

அடுத்து, பொலினீசியர்கள், ஐஸ்லாந்தின் பழங்குடிகள், ஜப்பானின் shogunates (பிரபுத்துவ பிரிவு) மக்களின் வாழ்க்கைக்கு வருகிறார்.

இந்த மக்கள் சமுதாயங்களில், ஓய்வெடுக்கும் ஒரு வர்க்கம் இருக்கிறது. இங்கே மற்றவர்கள் இவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்று அனுமதி கொடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்று. ஆனால் இந்த வர்க்கம் நாம் நினைப்பது போல் சும்மா படுத்திருப்பதில்லை.

எப்போது அடுத்த ஊர் போய்க் கொள்ளை அடிப்பது? வியூகங்கள், போர்த் தந்திரங்கள் என்று விலாவாரியாய்க் கலந்து பேசி திட்டங்கள் போடுவது என்று ரொம்ப பிஸியாய் இருக்கும் இந்த வர்க்கம். அப்படி மற்ற ஊர்களை அடித்து எடுத்து வரும் பொருள்களால் அவர்களின் பொருளாதாரம் உயர்கிறதே. ஆகவே, இந்த வர்க்கத்துக்கு மதிப்பு, மரியாதை எல்லாம் தானாக வருகிறது.

அதே சமயம், சாதாரணமாக, வழக்கம் போல் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அந்த சமுதாயங்களில் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. இதெல்லாம் வேலையா? கேவலம் இப்படி எல்லாம் வாழவேண்டி இருக்கே என்று கவலைப்படுபவர்கள் அங்கே அதிகம்.

இதில் இருந்து என்ன முடிவுக்கு வருகிறோம்? மாறிக்கொண்டிருக்கும் சமுதாயங்களில் சிந்தனைகள் இப்படி உருவாகின்றன. சமூகம் தன்னைத் தானே கட்டமைத்துக் கொள்கிறது. உள்மனது, மனிதன் பகுத்தறிவோடு செயல்படுபவன், அது இது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்றைய நவீன வாழ்க்கையைப் பார்ப்போம். முதலாளித்துவ வர்க்கம், ஓய்வெடுக்க வேண்டும் என்கிற சிந்தனையில் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் தன் வழிமுறைகளை மாற்றிக் கொள்கிறது. மற்றவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பாமல் இருக்க, சாமர்த்தியமாக செயல்படுகிறது.

மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி அனுபவிக்கும் குணாம்சம் மாறுவதில்லை. போர்கள், கொள்ளைகள், அடிமைகள் என்கிற காலம் போய்விட்டது. அதெல்லாம் அசிங்கம். அநாகரீகம். நவீனமாக, எப்படி இன்னும் இன்னும் பணம் புரட்டலாம் என்று சிந்திக்கிறது.

அது மட்டுமா? சேர்கிற பணத்தை ஆடம்பரமாய் அல்லது ஊதாரித்தனமாய் செலவழிப்பது அடுத்த கட்டம். இது பணக்கார வர்க்கத்தின் ஒரு முக்கிய மனோநிலை என்று சுட்டிக் காட்டுகிறார் வெப்லென்.

என்னைப் பார். நான் விட்டெறியும் காசைப் பார். டாலர் நோட்டைக் கிழித்து வீசுவேன். அல்லது கொளுத்தி வேடிக்கை பார்ப்பேன். உன்னாலே அது முடியுமா? (இதெல்லாம் வீட்டுக்குள் இருந்து செய்தால் எந்தப் பயனும் இல்லை. நாலு பேர் பார்த்தால் தானே மதிப்பு?)

காசு சேர்க்கிற வித்தை ஒரு பக்கம். அதை எப்படியும் செலவழிப்பேன் என்று காட்டுவது இன்னொரு வித்தை.

இந்த செயல்பாடுகள் மற்ற சாதாரண காமா சோமாக்களைப் பொறாமைப்பட வைக்கிறது. பிறந்தால் இவர்கள் போலப் பிறக்க வேண்டும். வாழ்ந்தால் இவர்கள் போல வாழ வேண்டும். சொந்த வேலையில் ஒரு வெறுப்பு உண்டாகிறது. நான் செய்யும் தொழில் எல்லாம் தொழிலா? எழவெடுத்த கருமாதி.

அடுத்து, கார்ல் மார்க்ஸை ஒரு பிடி பிடிக்கிறார் வெப்லென். புரட்சி நிச்சயம் வரும். முதலாளித்துவம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஒன்றிணையத் தான் போகிறார்கள் என்றாரே. ஏன் நடக்கவில்லை?

அவனவன் எப்படா பணக்காரன் ஆகப் போகிறோம்? எப்போ அவன் மாதிரி வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஜாலியாய் இருக்கப் போகிறோம் என்று நாளும் பொழுதும் கனவு கண்டு கொண்டிருக்கும் போது எப்படி புரட்சி வரும்?

உழைக்கும் வர்க்கம் பணக்கார வர்க்கத்தோடு மோத நினைப்பதில்லை. பதிலாய், பணக்கார வர்க்கத்தைக் காப்பி அடிக்க நினைக்கிறது. சொந்த வேலைகளை உதறித் தள்ளிவிட்டு பணக்கார வர்க்கம் போல ஓய்வாக இருக்க ஆசைப்படுகிறது.

வெப்லெனின் இந்த வாதத்தை கடுமையாக ஆட்சேபிக்கிறார் நூலாசிரியர்.

பழைய பொருளியலாளர்கள் (classical economists) சொன்ன பகுத்தறிவு (rationality) வாதம், கணக்குப் போட்டு காய் நகர்த்தும் நிதானம் எல்லாம் மனிதர்களின் நடப்புகளை சரியாக சொல்லவில்லை என்பது சரி தான். பதிலாக, மனிதர்களின் இயற்கை குணமான முரண்பாடுகளை (irrationalities) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மனிதர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை முன் கூட்டியே அனுமானிப்பது கஷ்டமான விஷயம். இந்த முரண்பாடுகளால் மனித மனங்களில் தோன்றும் ஒரு வித பயம் அல்லது தாக்கமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கும் பண்பை உருவாக்குகிறது என்கிறார் நூலாசிரியர்.

இன்னொன்று : அமெரிக்காவின் Middletown நகரில் 1937 களில் நடந்த ஓர் ஆய்வில் (Robert and Helen Lyng) புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன? அந்த காலகட்டத்தில் பொருளாதாரம் பெரு வீழ்ச்சி கண்டு மக்கள் அவர்களின் அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியாத கஷ்டமான சூழ்நிலை நிலவிற்று.

மிகவும் கீழ் மட்டத்தில் இருந்த ஏழைகள், அவர்களின் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவில்லை. பதிலாக, உணவுத் தேவைகளைக் குறைத்துக் கொண்டார்கள்.

ஆடம்பரப் பொருள்கள் வாங்குங்கள் என்று வந்த விளம்பரங்களும் குறைந்ததா? இல்லையே. நடுத்தர, பணக்கார குடும்பங்களைக் குறி வைத்த விளம்பரங்கள் இவை. மனிதர்களின் நடத்தைகள் முரண்பாடுள்ளவை. வெப்லெனின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்கிறார் நூலாசிரியர்.

தனிமனிதப் பண்புகளை நூலாசிரியர் தூக்கிப் பிடிக்கிறார். வெப்லெனோ மொத்த சமூகத்தின் பண்புகளை சுட்டிக் காட்டுகிறார். யார் சொல்வது சரி?

எப்படியோ, வெப்லெனின் நூல் புத்திஜீவிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களையும் கவர்ந்தது. உதாரணங்கள், பணக்காரர்கள் பற்றிய கடுமையான விமர்சனங்கள், அவரின் சொல் நடை எல்லாம் சேர்ந்ததில் பிரபலமானார் அவர்.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

1904 ல் இன்னொரு நூல் வெளியிட்டார். “The Theory Of Business Enterprise” (வணிக நிறுவனங்கள் பற்றிய கோட்பாடு).

ஆடம் ஸ்மித் துவங்கி அன்றைய பொருளியலாளர்கள் கொண்டிருந்த கருத்துக்கு எதிரான அதிர்ச்சி தரும் முடிவை இந்த நூலில் குறிப்பிட்டார் அவர்.

முதலாளிகளால் தான் பொருளாதாரம் வளர்கிறது என்று அவர்கள் சொல்ல, இல்லை முதலாளிகளே முதலாளித்துவத்துக்கு வேட்டு வைப்பார்கள் என்கிற முடிவுக்கு வருகிறார்.

அவர் ரிக்கார்டோ மற்றும் கார்ல் மார்க்ஸ் கொண்டிருந்த கோட்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கவில்லை. அதற்கும் கீழே : எந்திரங்களில் இருந்து ஆரம்பிக்கிறார்.

பொருளியலே எந்திரங்களை நம்பித் தான் இருக்கிறது. எந்திரங்கள் உருவாக்கித் தரும் பொருள்களில் நம் வாழ்க்கை தங்கி இருக்கிறது. எந்திரங்களை உருவாக்குவது, இயக்குவது யார் கையில் இருக்கிறது? பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது.

எல்லாரும் நேரம் தவறாமல் வேலைக்குப் போகிறார்கள். நேரம் பார்த்தபடி வாழ்க்கையே ஒடிக் கொண்டிருக்கிறது – நேரம் காட்டும் கடிகாரம் போல சமுதாயத்தைக் கூட ஒரு எந்திரமாக நினைத்துப் பார்க்கலாம்.

லாப நோக்கம் பற்றி எந்திரத்துக்கு ஒன்றும் தெரியாது. இந்த நிலைமை முதலாளிகளுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்குகிறது. ஆகவே, அவர்கள் எந்திரங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்து, நாசவேலைகள் மூலம் குழப்பங்களை உருவாக்கி, அதன் மூலம் ஆதாயம் தேடப் பார்ப்பார்கள்.

சமுதாய அடுக்கு ஒரு பிரமிட் போல இருக்க, அதன் உச்சியில் முதலாளிகள் உட்கார்ந்திருப்பார்கள். அந்தக் கட்டமைப்பின் கீழே, கடன்கள், தொழில் பேட்டைகளுக்கு முதலீடுகள், நம்மால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று சமூகத்தை நம்ப வைக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனை அமைப்பு முறைகளையும் செயற்கை முறையில் உருவாக்கி அவர்களின் கீழே அடுத்த படியில் வைத்திருப்பார்கள்.

அதற்கு அடுத்த படியில், எந்திரங்களின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். முதலாளிகளின் கைகளில் சுவிட்ச்கள் இருக்கின்றன. எப்போது களேபரங்கள் உருவாக்க வேண்டும்? எந்த அளவு? அவர்கள் நினைத்தபடி எதுவும் நடக்கும். லாபம் உண்டாகும். மறையும். உண்டாகும். மறையும்.

இது திகைப்பூட்டும் கோட்பாடு. ஆனால் உதாரணங்கள் எக்கச்சக்கமாக வந்து விழுகின்றன. அமெரிக்க ஏகபோக முதலாளிகள் Morgans, Harrimans, Fricks , Rockfellars… என்று பட்டியல் நீள்கிறது. பணம் சேர்க்க, எப்படி எல்லாம் இவர்கள் ஆட்டம் போட்டார்கள் என்று விலாவாரியாய் சொல்லிக் கொண்டே போகிறார்.

எந்த அமைப்பு (முதலாளித்துவம்) முதலாளிகளை வாழ வைக்கிறதோ அந்த அமைப்புக்கே எதிராய் செயல்பட்டு அதை அழிக்கப் போகிறார்கள் அவர்கள் என்று அவர் சொன்னதை புத்திஜீவிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகவே பொருளியலாளர்கள் சிலரைத் தாண்டி அந்த நூலின் அடிப்படை செய்தி வேறு யாருக்கும் போய்ச் சேரவில்லை. எதுவோ தெரியவில்லை. முன்னைய நூல் போல இது பிரபலம் ஆகவில்லை. சாதாரண மக்களுக்குப் புரியாத பொருளியல் வார்த்தைகள் அதிகமாக இருந்ததும் ஒரு காரணமோ?

அவர் எதிர்காலம் பற்றி மூன்று கணிப்புகள் சொல்லி இருந்தார் : (1) முதலாளித்துவம் உடைந்து போனபிறகு எந்திரங்கள் சமுதாயத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடும். எந்திரங்களின் வழிகாட்டுதலில் சமுதாயம் இயங்கும்.

(2) சமூகம் பல பிளவுகளாகப் பிரியலாம். ஆனால் ஏழைகள் – பணக்காரர்கள் மோதல்கள் அல்ல. எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கலாம். அல்லது பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியலாளர்கள் என்று அந்த எந்திரங்களின் பின்னால் இருக்கும் வர்க்கங்களுக்கு எதிரான பிரச்னைகள் வெடிக்கலாம்.

(3) அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்கள் கைகளுக்குள் அதிகாரம் போகாவிட்டால் என்ன நடக்கும்? முதலாளிகளின் கொட்டம் இன்னும் அதிகமாகும். அவர்களே ஆளுக்காள் அடித்துக் கொள்வார்கள். அல்லது ராணுவங்களோடு கைகோர்த்துக் கொள்வார்கள்.

இந்த வகை ஆட்சியை இன்று நாம் பாசிசம் என்று சொல்கிறோம். கார்ல் மார்க்ஸின் சொன்ன தொழிலாளர் புரட்சிக்குப் பதிலாய் சமுதாயங்கள் இதில் தான் போய் நிற்குமோ?

தொடர்ந்து, அவர் வேறு சில புத்தகங்களும் கட்டுரைகளும் வெளியிட்டார். எல்லா வெளியீடுகளிலும் அவரின் கணிப்புகளை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இது இப்படி இருக்க, அவரின் புகழும் மற்றும் தோழிகள் விவகாரமும் சேர்ந்து அவரை மெகா ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தின. நார்வே நாட்டின் அரசரே கூப்பிட்டு விருந்து கொடுத்தார்.

பின்னாளில், அவரின் பார்வை அய்ரோப்பா பக்கம் திரும்பியது. Imperial Germany (ஏகாதிபத்திய ஜெர்மனி) என்றொரு புத்தகம் (1911) வெளியிட்டார்.

இங்கிலாந்து அரசு, புத்தகத்தை ஜெர்மனிக்கு எதிரான அதன் பிரசாரத்துக்குத் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் புத்தகம் இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ யாரின் கைகளுக்கும் போய்ச் சேராமல் பார்த்துக் கொண்டது. (அஞ்சல் அலுவலகங்களுக்கு ரகசிய உத்தரவு போடப் பட்டிருந்தது.)

முதலாம் உலக யுத்தம் துவங்கியது. போர்களை வெறுத்த வெப்லென், என்னால் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவ முடியும் என்று அறிவித்தார். ஆனால் அவரை யாருமே சீண்டவில்லை. போனால் போகிறது என்று (உப்பு சப்பில்லாத) ஒரு பதவியை உணவு விநியோகத் துறையில் கொடுத்தார்கள்.

அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தானிய கொள்வனவில் எப்படி கிராமங்களையும் வணிகங்களையும் சீரமைப்பு செய்யலாம் என்று மேலிடத்துக்கு யோசனைகள் எழுதினார். அவர்களோ, அருமையான பரிந்துரைகள் என்று பதில் போட்டுவிட்டு அப்படியே குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டார்கள்.

1918 ல் அமெரிக்கா திரும்பினார். Dial பத்திரிகையில் பணியாற்றத் துவங்கினார். அவர் எழுத எழுத, பத்திரிகையின் விற்பனை பயங்கரமாக சரியத் துவங்கியது. அதை விட்டு விலகி ஒரு சமூக ஆய்வியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. (வழக்கம் போல் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை.)

அவரின் வாழ்க்கையில் புகழ் ஒரு பக்கமாகவும் துரதிர்ஷ்டங்கள் இன்னொரு பக்கமாகவும் எதிரெதிராய் மோதிக் கொண்டன.

விரக்தியின் எல்லைக்கு வந்தபோது, அமெரிக்க பொருளியலாளர் கழகத்தின் தலைமைப் பதவி தேடி வந்தது. நான் விரும்பும்போது தரவில்லை. இப்போ எதற்காகத் தூக்கிக் கொண்டு வருகிறீர்கள்? வேண்டாம். மறுத்து விட்டார்.

அவரின் நூல்களை பொருளியலாளர்கள் அலட்சியப் படுத்தினார்கள். பொறியியலாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு விவரங்கள் தெரியாமலேயே போயிற்று.

அவர் பற்றி நூலாசிரியர் என்ன சொல்கிறார்? The Theory of Leisure Class நூல் அவரின் சிறந்த நூல் என்று சொல்லலாம். அது மனிதர்களின் பாசாங்குத் தனங்களை வெளிப்படையாய்க் காட்டுகிறது. நாம் பகட்டு காட்டுகிற பேர்வழிகள். ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் அசிங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். இருந்தாலும், கார்ல் மார்க்ஸ் போல ஓர் திடமான கோட்பாட்டை அவர் முன்வைக்கவில்லை. சில சமயங்களில் அதி தீவிர எல்லைக்கே போயிருக்கிறார்.

முதலாளிகள் சாமர்த்தியமாக, காலத்துக்கு ஏற்றபடி வழிமுறைகளை மாற்றிக் கொண்டது அவருக்குத் தெரிந்திருக்காது. முதலாளிகளை எந்திரங்களின் மானேஜர்களாக முதலாளித்துவம் மாற்றிவிட்டதை அவர் அறிந்திருக்க முடியாது.

எந்திரங்கள் மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துமோ என்னமோ, தொழில் நுட்பம் நிச்சயம் மனிதர்களை மாற்றப் போகிறது என்பதை அன்றே சுட்டிக் காட்டியவர் அவர்.

என் பார்வையில் : அவர் சரியாகவே எதிர்காலம் பற்றிக் கணித்திருக்கிறார். எந்திரங்கள் என்பதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு என்று போட்டுப் பார்த்தால் :

எதிர்காலத்தில் Google, Facebook, Amazon, Microsoft, Apple … என்று பல பன்னாட்டுக் கம்பெனிகளின் கைப்பாவைகளாய் நாம் இருக்கப் போகிறோமா?

அல்லது செயற்கை நுண்ணறிவு நம்மை ஆளுமை செய்யுமா?

அல்லது செயற்கை நுண்ணறிவை இயக்கும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களோடு போராட வேண்டி வருமா?

வெறும் அனுமானங்களில் மூழ்கிப் போய் நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத கோட்பாடுகளைப் பொருளியலாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று அவர்களைக் கடுமையாக சாடிய மனிதர் அவர்.

பொருளியலை விட, மானுடவியல், உளவியல் இரண்டிலும் அதிகம் ஆழ்ந்து போனவர் அவர் என்கிறார் நூலாசிரியர்.

உங்கள் கற்பனைக் கோட்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மனிதர்கள் எப்படி ஒவ்வொரு சூழ்நிலையிலும் நடந்து கொள்கிறார்கள், ஏன் அவர்களின் நடப்புகள் அப்படி இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள் என்று பொருளியலாளர்களைப் பார்த்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அந்த மனிதர்.

1929 ம் ஆண்டு. அவரின் இறுதி நாட்களில், நண்பர்கள் யாரும் இல்லாத அதே தனிமையில், எப்போதும் வெளியே பார்த்தபடி, அதே அமைதியோடு வாழ்ந்திருக்கிறார். அவர் கால்களுக்கிடையில் எலிகள், பூச்சிகள், பிராணிகள் ஊர்ந்து சென்றிருக்கின்றன. ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அசையாமல் இருந்து அவதானித்தபடியே இருந்திருக்கிறார் – கடைசியாகக் கண் மூடும் வரை.

ஆச்சரியங்கள் நிறைந்த மனிதர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.