என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

மனிதன் நிலவில் இறங்கியது உண்மை அல்ல. அரிசோனா மாநிலத்தின் ஒரு வனாந்தரத்தில் கச்சிதமாய் நடிக்கப்பட்ட ஒரு நாடகம் அது. அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், அன்றைய துணை அதிபரின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார். அதிபர் ஒபாமா கென்யாவில் இருந்து வந்த ஒரு பக்கா கம்யூனிஸ்ட். தேர்தல்கள் எல்லாமே ஏமாற்று வேலைகள் ...

முக்கிய நிகழ்வுகளின் பின் உள்ள காரணங்களைத் தோண்ட ஆரம்பித்தால் நிச்சயம் அவற்றின் அடியில் சதி வலைகள் இருப்பது தெரியும். சூழ்ச்சிக்காரர்கள் இயங்குவது உண்மை. முழு உலகையும் ஆட்டிப் படைக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுத்தப் பினாத்தல்? அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். கேள்வி: 2001 செப்டெம்பர் 9ந் தேதி விமானங்கள் மூலம் நியூ யார்க் நகரின் பிரம்மாண்ட உலக வர்த்தக மய்யம் (World Trade Center) அழிக்கப்பட்டதே. யார் செய்திருப்பார்கள்?

எப்படி சொல்ல முடியும்? அரசாங்கமே கமுக்கமாய் இருக்கிறது. விளக்கமோ நம்பக்கூடிய மாதிரி இல்லை. இது ஒரு உள்ளடி வேலையாகக் கூட இருக்கலாம் . இப்படி பதில் சொன்னவர்கள் அதே அமெரிக்கர்கள். அதுவும் 50 விழுக்காடு.

இன்னொரு கேள்வி : பருவநிலை மாற்றம் (climate change ) என்கிறார்களே. உண்மையா? அதெல்லாம் கப்ஸா. நாங்க நம்பமாட்டோம் என்று சொன்ன அமெரிக்கர்கள் 25 சத விகிதம்.

இதெல்லாம் ஒரு கேள்வி பதிலா? 2013 ல் ஒரு க.கணிப்பு நடந்தது. தன் உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒரு பாம்பு இனம் இருக்கிறது. அது மனித உருவில் இந்த உலகில் நடமாடுவதாக நிச்சயமாய் நம்புகிறோம் என்று அடித்து சொன்னவர்கள் சுமார் 12 மில்லியன் மக்கள். (கிட்டத்தட்ட அந்த நாட்டு மக்கள் தொகையின் 4 விழுக்காடு.)

இருக்கும். இருக்கும். எங்களுக்கும் சந்தேகம் இருக்கு. ஆனால் நிச்சயமா சொல்ல முடியலியே என்று கவலைப்பட்டவர்கள் 7 விழுக்காடு.

ராப் பிரதர்டான் (Rob Brotherton) அவரின் Suspicious Minds, Why We Believe Conspiracy Theories என்கிற நூலில் இப்படி நிறைய கசாமுசாக்களுடன் துவங்குகிறார். துவங்கி நாம் அல்லது நம்மில் பலர் ஏன் நம்புகிறோம் என்று உளவியல் ஆய்வில் இறங்குகிறார்.

நினைவிருக்கட்டும். மேலே சொன்ன இந்த மதிப்பீடுகள் எல்லாம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. கேள்விகளை யார் கேட்கிறார்கள்? எந்த சூழ்நிலையில்? எப்போது கேட்கிறார்கள்? – இப்படிப் பல பரிமாணங்களில் இவை தங்கி இருக்கின்றன.

இது போல சுவாரஸ்யமான தகவல்கள், நம்பிக்கைகள் சில உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்குமே. அவ்வளவு தூரம் ஏன்? இதை வாசிக்கும் நீங்களே அவர்களில் ஒருவராய் இருக்கக்கூடும் அல்லது ரெண்டும் கெட்டானாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்? – தொடர்கிறார் அவர்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் ஒரு சோதனை நடத்தினார்கள். ரகசியமாய் இயங்கும் அதிகாரம் மிக்க குழு ஒன்று (பேர் : New World Order) உலகம் முழுவதையும் தன் கைக்குள் கொண்டு வர திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது என்று ஒரு பாரா (ச்சும்மா!) எழுதப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

ஒரு வித்தியாசம் : ஒரு குழுவுக்கு பிரகாசமான எழுத்துரு ஒன்றில் (font : Arial) பாரா எழுதப் பட்டிருந்தது. மற்ற குழுவுக்கு சாய்வான, வளைவான, மங்கலான எழுத்துரு ஒன்றில் இருந்தது. இரண்டு குழுக்களும் வாசித்தபின் இதை நம்பலாமா என்று கேள்வி கேட்கப்பட்டது. Arial எழுத்துரு குழு நம்பலாம் என்றார்கள். மற்ற குழுவினர் சந்தேகமா இருக்கு என்றார்கள்.

ஒரே செய்தியை ஏன் நம் மனசு மாற்றி மாற்றிக் குழப்புகிறது? நூலாசிரியர் நம்மை ஈகில்மெண்ட் (David Eaglement) என்கிற மூளை நரம்பியல் நிபுணரிடம் இழுத்துக் கொண்டு போகிறார். (புத்தகம் முழுக்க பல நிபுணர்களிடம் நாம் போகிறோம்.)

ஈகில்மெண்ட் சொல்கிறார் : நம் மூளையின் செயல்பாடுகள் பற்றி எதுவுமே சரியாகச் சொல்ல முடியவில்லை. மற்ற உறுப்புகளுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. தானே இயங்குகின்றன. அப்டி செய். இப்டி செய் என்று யாரும் அட்டகாசம் பண்ணுவதில்லை.

ஆனால் மூளை அப்படி அல்ல. அதாவது “நான்” என்கிற தன்னுணர்வு மில்லியன் கணக்கான நியூரான்களின் தொடர்பில் முதலில் உருவாகிறது. அடே! நான் இருக்கிறேன். அமைதி அடைகிறோம். அந்த உணர்வை உண்மை என்று நம்புகிறோம்.

அடுத்த கட்டம் : எல்லாரும் (மற்ற எல்லா உறுப்புகளும்) என் மேற்பார்வையில் தான் இயங்குகிறார்கள். தெரிஞ்சிக்கோ! – என்கிறது அந்த உணர்வு. நம்புகிறோம்.

இதே கருத்தை கானேமன் (Daniel Kahnemann) என்கிற புகழ் பெற்ற உளவியலாளரும் ஆமோதிக்கிறார். அவர் சொல்கிறார்: ஒரு திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் சில நிமிடங்களே வந்து போகும் ஒரு துணை நடிகர், நான் தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதே. அதே.

சூழ்ச்சிக்காரர்கள் இருக்கிறார்கள். நம்மைக் கவிழ்த்துவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சதிகள் நடக்கின்றன என்கிற சிந்தனைகள், பயம் அத்தனைக்கும் பின்னே இருப்பது இந்த “நான்”.

இந்த சதிக் கோட்பாடுகள் (conspiracy theories) ஏன் மிகவும் பிரபலமாக இருக்கின்றன? அவை உண்மையாய் இருக்கலாமா இல்லையா என்று ஆராய்வது என் வேலையல்ல என்று முதலிலேயே எச்சரித்து விடுகிறார் நூலாசிரியர். ஏன் அவை உருவாகின்றன? ஏன் நம்புகிறோம்? இது தான் கேள்விகள் என்கிறார்.

சகோ (சதிக் கோட்பாடு) உற்பத்தி அநேகமாய் எல்லார் வீட்டிலும் குடிசைக் கைத்தொழில் ரேஞ்சுக்கு நடக்கிறது. மற்ற வீடுகளில் இருந்து வரும் உற்பத்தியையும் நம்மோடு சேர்த்து இன்னும் புதுவித லேட்டஸ்ட் சகோக்கள் சுடச்சுட உருவாகின்றன. சகோக்கள் நம் உடன்பிறப்புகள். சந்தேகம் என்பது நம்மோடு கூடப் பிறந்தது. தவிர்க்கவே முடியாதது.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

சமூக வலைத்தளங்களில் தான் சகோக்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன என்று நம்பிவிடக்கூடாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னேயே வெற்றிநடை போட்டு மனித வரலாற்றையே புரட்டிப் போட்டதில் அவைகளுக்குப் பெரும் பங்குண்டு.

ரோமர்களின் ஆட்சிக்காலம் சகோக்களின் பொற்காலம் என்று சொல்லலாம். ஒரு உதாரணம் : கி.மு. 64 ம் ஆண்டு ஜூலை 14ந் தேதி நடந்த சம்பவம் இது. அன்றைய ரோம சக்கரவர்த்தி நீரோ ரோமிலிருந்து 36 மைல்கள் தள்ளியிருந்த ஒரு ஊரில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று தலைநகரத்தில் பெருந்தீ!

நகரத்தின் அரைவாசி மக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. இறந்தோர், காயம் பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காமலேயே போய்விட்டது. அன்றைய ரோம வரலாற்று ஆசிரியர் டசீட்டஸ் (Tacitus) இப்படி எழுதுகிறார் : சக்கரவர்த்தி வேகவேகமாய் ஓடிவந்தார். வந்ததும் முதல்வேலையாய் நிவாரண உதவிகள், மற்றும் அவசர பணிகளை உடனடியாய் ஆரம்பித்தார்.

இது நடந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னோர் வரலாற்றாசிரியர், சக்கரவர்த்தி நீரோவின் ஆணையின் பேரில் தான் தீ வைக்கப்பட்டது என்கிறார். 165 ஆண்டுகளின் பின் இன்னொருவர் எழுதுகிறார் : சக்கரவர்த்தி நீரோ தன் கையாலேயே தீ வைத்து ஆட்டத்தை ஆரம்பித்தார்!

அடுத்து இலுமினாட்டி விவகாரம். இது இன்றும் சமூக வலைத்தளங்களில் இளமை குன்றாமல் வலம் வருகிறது. 1772 களில் இந்த இயக்கம் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது. துவங்கியவர் : ஆடம் வைஷாப்ட் (Adam Weishaupt) என்கிற ஜெர்மானியர்.

நாட்டில் நடக்கிற விஷயங்கள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை. சிஸ்டம் சரியில்ல. எல்லாத்தயும் மாத்தணும் மாத்தணும் என்று யோசித்தவர் ரகசியமாகவே தன் இயக்கத்தை ஆரம்பித்தார். (அந்தக் காலத்தில் அரசுகளுக்கு எதிராய்ப் பேசுவது, மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட, பேசாமல் தற்கொலை செய்து கொள்வது நல்ல உத்தி என்று எல்லாரும் நம்பினார்கள்.)

இயக்கத்தில் சேர்பவர்கள் எதுவுமே வெளியே சொல்லக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட 300 பேர் சேர்ந்தாலும் யாரோ ஒரு கிறுக்குப் பயல் விஷயத்தை வெளியில் கக்கிவிடவே, தலைவர் பார்த்தார். இனியும் மவுனமாய் இருந்தால் ஆபத்து என்று தெரிந்தது. தானே போய் அதிகாரிகளிடம் சரணடைந்தார். தப்பிவிட்டார். ஆனால் பெருவாரி மக்களுக்கு இது பிடிக்கவில்லை. அதெப்டி? புகை என்று இருந்தால் நெருப்பு இல்லாமலா இருக்கும்?

இது நடந்து கொஞ்சநாளில் பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற பிரஞ்சுப் புரட்சி துவங்கியது. அந்த சமயத்தில் அந்நாட்டின் இரண்டு பிரபலங்கள், புரட்சிக்குப் பின்னால் இலுமினாட்டி இருக்கிறது என்று (தெரிந்தோ தெரியாமலோ) எழுதப்போக, விஷயம் கைமீறிப் போய்விட்டது. காரணம் : அந்த இயக்கத்தின் நோக்கமே அரசு, சமயங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு புது யுகம் படைக்க வேண்டும் என்று தெளிவாக இருக்கும்போது வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்றைய பாப் யுகத்தில் பாடகர்கள் எப்போதும் பரபரப்பாக இயங்காவிட்டால் வீட்டுக்குப் போய் ஒப்பாரி வைக்க வேண்டிய அவலம் நேரலாம். அவர்களின் உடலமைப்பில் மட்டுமே கவர்ச்சி இருந்தால் போதாது. பாடல்களிலும் கிக் இருக்க வேண்டும். மடோனா, லேடி ககா, ஜே இசட், கான்யே வெஸ்ட் ..என்று இன்று ஒளிவிடும் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் நாங்களும் இலுமினாட்டி தாங்க என்று அப்பப்போ (பாடல்களில்) குறிப்பிடும்போது நம்பாமல் இருக்க முடியுமா என்ன?

இதய சுரங்கத்தில் எத்தனை கேள்வி

பதில் தெரியாத கேள்விகள் எத்தனையோ இருக்கின்றன. கேட்டுப் பதில் வராதவையும் அத்தனை இருக்கின்றன.

எங்கெல்லாம் அரசு வெளிப்படைத்தன்மை இன்றி செயல்படுகிறதோ அங்கெல்லாம் சகோக்கள் தானாகவே உருவாகின்றன. நாட்டின் முக்கிய நிகழ்வுகளை அரசு கையாளும் விதத்தை மக்கள் கூர்மையாகக் கவனிக்கிறார்கள்.

சில சமயங்களில் அரசு நேர்மையாக நடந்தாலும் நிர்வாக எந்திரம் (அதிகாரிகளின் செயல்பாடுகள்) நோக்கத்தை மழுங்கடித்து விடுகிறது.

அமெரிக்காவின் அன்றைய அதிபர் நிக்சன் பதவி இழந்ததன் காரணம் அறிந்திருப்பீர்கள். (வாட்டர்கேட் ஊழல்). நிக்சன் அந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் என்பது சரி தான். இருந்தாலும் நிக்சனின் அன்றைய ஆலோசகரும் அமெரிக்காவின் பெரும் பணக்காரரான நெல்சன் ராக்பெல்லர் வேண்டுமென்றே அதிபரைப் பதவியில் இருந்து இறக்கிவிட செய்த சூழ்ச்சியாக அது ஏன் இருக்கக்கூடாது?

நிக்சனின் வெளிவிவகார அமைச்சர் கிஸ்ஸிங்கர். நிக்சன் என்ன பெரிய அறிவாளியா இல்லை திறமை உள்ளவரா? நம்ம கிஸ்ஸிங்கர் மாதிரி வருமா? என்னா சாணக்கியத்தனம்! என்னா அறிவு! மக்களும் பத்திரிகைகளும் கொண்டாடிக் கொண்டிருந்தார்களே. ஏன் அந்த சாணக்கியர் கிஸ்ஸிங்கரே நிக்சனை மாட்டி விட்டிருக்கலாமே.

அல்கைதா தலைவர் ஒசாமா பின் லாடனை அமெரிக்கர்கள் தேடிப்பிடித்துக் கொலை செய்ததாக பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி நம்புவது? ஏன் அந்த இயக்கத்தில் ஏற்பட்ட உள்குத்துக்களால் அவர்களே தலைவரைத் தீர்த்துக் கட்டியிருக்கலாமே?

அதிபர் ஜான் கென்னடி கொலை வழக்கில் என்ன தான் அமெரிக்க அரசு ஒரே ஒருவர் தான் (லீ ஓஸ்வால்ட் ) கொலையாளி என்று கமிஷன்கள் நியமித்து பைல்களை மூடிவிட்டாலும் கேள்விகள் இருக்கின்றனவே.

கென்னடியின் துணை அதிபர் லின்டன் ஜான்சன் திட்டம் தீட்டி இருக்கலாம். அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ செய்திருக்கலாம். அவர் இருந்த வண்டியின் டிரைவர் சுட்டிருக்கலாம். ஏன் அவர் மனைவி ஜாக்குலினே முடித்திருக்கலாமா இல்லையா?

பதில் இல்லாத கேள்விகள். ஆச்சரியம் என்னவென்றால் இதில் குற்றம் சுமத்தப் பட்டவர்கள் யாருமே முன் வந்து நல்லா கேட்டுக்கங்க. நாங்க செய்யல செய்யல என்று சொல்லவே இல்லை.

உண்மையோ பொய்யோ எதுவும் திட்டவட்டமான கருப்பு அல்லது வெள்ளை போலத் தெரிவதில்லை. சகோக்கள் ஒரு விஷயத்தில் தவறு செய்கின்றன. இல்லாத எதிரிகளை உருவாக்குவதனால் அந்த நோக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றன. இல்லாத எதிரியை எப்படி வீழ்த்துவது? சகோக்களைத் தோற்கடிக்க நினைப்பவர்கள் சிந்திக்க வேண்டியது இது என்கிறார் நூலாசிரியர்.

நீதிக்குத் தலைவணங்கு

சமுதாயம் குளறுபடிகள், அநியாயங்கள் நிறைந்தது. குற்றங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? அவர்களைப் பிடித்துத் தண்டனை கொடுக்காமல் வேறென்ன வேண்டிக் கிடக்கிறது?

எவ்வளவு பெரும் குற்றங்கள் இழைத்தாலும் தப்பி விடுகிறார்களே சில சாத்தான்கள்? சில சமயங்களில் வேறு யாராவது ஒருவர் மேலோ அல்லது ஒரு குழுவின் மேலோ பழி போடப்படுகிறதே. அது மட்டுமா? விசாரணை செய்கிற ஆட்களுக்கு அறிவே இல்லையா? தாங்க முடியலியே. நமக்குத் தெரிகிற கோணம் அந்த எருமைகளுக்கு ஏன் தெரியவில்லை?

நீதி, ஒழுக்கம் நமக்கு மிக முக்கியம். இல்லாவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்று நாம் நினைக்கும்போது நம் மூளை நுணுக்கமாக சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சகோ உருவாகிறது.

கென்னடியைக் கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட வாரன் கமிஷன் (Warren Commission) முன் சாட்சியம் சொன்னவர்களில் 81 சத வீத ஆட்கள் மூன்று வேட்டு சத்தங்கள் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். மிகுதிப்பேர் 4 அல்லது 5 வேட்டுக்கள் கேட்டதாக சொன்னார்களே? யார் சொன்னது சரி? கமிஷன் எல்லாரையும் விசாரித்தார்களா அல்லது பெரும்பான்மை சொன்னதை உண்மை என்று நம்பினார்களா?

விசாரணை முடிவுகள் எப்படி இருந்தாலும் அதில் குற்றம் குறைகள் இருப்பதாகவே நம் மூளை நினைக்கிறது. தவறுகளைத் தேட ஆரம்பிக்கிறது. சகோக்கள் உருவாகின்றன. அவை உண்மையாக இருக்கலாம் அல்லது வெறும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சாத்தியக்கூறுகளை மறுக்க முடிமா?

அறிவியலாளர்களில் ஒரு குறிப்பிட்ட என்ணிக்கையில் இருப்பவர்கள் கூட சில சகோக்களை நம்புகிறார்கள் என்கிறார் நூலாசிரியர். சிலர் அவரின் நண்பர்கள். பறக்கும் தட்டுகள், வெளியுலக மனிதர்கள் பற்றிய விவரங்களை நாசா நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கிறது என்று நம்பும் ஒரு சில அறிவியலாளர்களை மேலும் சுட்டிக் காட்டுகிறார்.

நீங்களும் நானும் கூட அனாயாசமாக சகோக்களை உருவாக்கி உலாவ விடலாம். ஆனால் நேர்த்தியான, தர்க்க ரீதியான, அறிவியல் ரீதியில் சகோக்களை உருவாக்கிட கொஞ்சமாவது சித்தப்பிரமை பிடித்திருக்க வேண்டும்.

கிறுக்குத்தனம் நிறைந்தவர்களால் தான் அந்தத் துறையில் கொடி கட்டிப் பறக்க முடியும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் தருகிறார் நூலாசிரியர். அறிவு ஜீவிகளின் மேதைமை எவ்வளவுக்கு எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல இவர்களின் திறமை. ஆனால் அறிவியலாளர்களே தயங்கும் களத்தில் துணிச்சலோடு இறங்கி சோதனைகள் செய்து பார்க்கக் கூடியவர்கள் இந்தக் கில்லாடிகள்.

இது ஒரு பக்கம் இருக்க, நம்புகிற பேர்வழிகள் யார் என்றால் அநேகமாய் பேய் பிசாசுகள், சாமியாட்டம், ஜோசியம், கர்மவினை, அடுத்த பிறப்பு போன்ற விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் யோசிக்கவே மாட்டார்கள். உடனடியாகவே ஆமா. எனக்கு எல்லாந் தெரியும் என்கிற நினைப்பு உள்ளவர்களையும் இதில் சேர்க்கலாம்.

ஏன் நாம் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஜேம்ஸ் பாண்ட், வொன்டர் உமன் என்றால் விழுந்தடித்துப் பார்க்கிறோம்? தனி மனிதர்களாக இவர்கள் பேராசை பிடித்த பெரு நிறுவனங்களுக்கு எதிராகப் போரிட்டு வெல்கிறார்கள். மேலும் உலகத்தையே காலடியில் போட நினைக்கிற New World Order மாதிரி வில்லன்களை போட்டுத் தள்ளும்போது நமக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை.

சகோக்களில் பெருவாரி இந்த ரகத்தை சேர்ந்தவை. இந்த நாசமாப்போன பயலுகளை நம்மால் அடிக்க முடியலியே. நீ அடிரா ராஜா. நீயும் பறந்து பறந்து அடி ராணிம்மா!

நாம் ஹீரோக்களைப் பார்த்து விசிலடிப்பது மட்டுமல்ல பயங்கர மனிதர்களையும் ரசிக்கிறோம் என்று மிரள வைக்கிறார் போமிஸ்டர் (Baumister) என்கிற உளவியலாளர்.

உதாரணத்துக்கு, ஜெர்மனியின் ஹிட்லர், கம்பூச்சியாவின் பொல் பொட் போன்ற பயங்கர கொலைகாரர்களின் வரலாறு சொல்லும் புத்தகங்களை இன்றும் மக்கள் ரசித்து வாசிக்கிறார்கள். அவர்கள் பற்றிய படங்கள் செமையாய் ஓடுகின்றன. ஏன்?

தப்புகள் செய்கிறவன் எங்கே எங்கே என்று மனம் தேடிக்கொண்டே இருக்கிறது. அவனைப் பிடித்துத் தண்டனை கொடு கொடு என்கிற தாளாத அரிப்பு நம் மனதில் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த வக்கிரங்களை இரை மீட்டி கடைசியில் அவனுகளப் போட்டுத் தள்ளிட்டமா இல்லியா? நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். ஒரு ஆறுதல். தற்காலிக ஆறுதல்.

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

செடிகள் ஆடுகின்றன. அவை சும்மா ஆடாதே? காற்றடிக்கிறது. எதையும் நிலத்தில் தூக்கிப் போட்டால் விழுகிறது. சும்மா விழாதே? புவி ஈர்ப்பு.

ஒன்று நடந்தால் அடுத்து இப்படி நடக்கும். குழந்தைப் பருவத்தில் இருந்து நம் மூளை இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துப் பதிந்து வைத்துக் கொள்கிறது. வயது ஏற ஏற இன்னும் இன்னும் ஏராளமான தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறது.

தானாகவே நம் மூளை எல்லாவற்றையும் ஆராய்வதில்லை. வீட்டிலே, பள்ளியிலே பல்கலைக்கழகத்தில், வாழ்க்கையில் கிடைக்கும் தகவல்களை ஒவ்வொன்றையும் உண்மை என்று நாம் சோதித்துப் பார்த்தா ஏற்றுக் கொள்கிறோம்?

மூளை வேலை செய்யவேண்டும் என்றால் சக்தி தேவை. வேலை மெனக்கெட்டு எல்லாவற்றையும் பரிசோதனை செய்யப் போனால் அளவிட முடியாத சக்தி தேவைப்படும். மூளைக்கே அத்தனை சக்தியும் போய்விட்டால் மற்ற உறுப்புகள் எப்படி வேலை செய்வது? சுருக்கமாய் சொன்னால் உயிர் வாழ்வதே கேள்விக் குறி ஆகிவிடும்.

இயற்கை சாமர்த்தியமாய் இதை சமாளிக்கிறது. ஏற்கெனவே சேகரித்த தகவல்களில் இருந்து (இந்த நிமிஷம் உட்பட) நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கிறது. முடிவுக்கு வருகிறது. சக்தியும் அதிகம் விரயமாவதில்லை.

ஒரு நிகழ்வைப் பல கோணங்களில் இருந்து பார்த்ததனால் கிடைத்த தகவல்களையும் மூளை சேமித்து வைத்திருக்கிறது. ஆகவே எந்த வினைக்கும் மேல் சொல்லப்பட்ட களஞ்சியத்தில் இருந்து ஒன்றை எடுத்து எதிர்வினை ஆற்றுகிறோம்.

அது சரியாக இருக்கலாம் அல்லது அடிமுட்டாள்த்தனமாய் இருக்கலாம். மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, மூளை இந்த உத்தியைக் கையாண்டு வருகிறது. அதே அந்தக் காலத்துக்குப் போவோம். ஒரு மனிதனுக்குப் பசிக்கிறது. உணவு தேடுகிறான். ஒரு புதர் அசைகிறது. அது மானாக இருந்தால் அவன் பசி தீர்ந்திருக்கும். புலியாய் இருந்தால் அதன் பசி தீர்ந்திருக்கும். ஆகவே எடுக்கும் முடிவுகளும் முக்கியமானவை.

தகவல்கள் தேடுதல் வாழ்வு முழுக்க நடந்து கொண்டே இருக்கிறது. தகவல்களில் தவறுகள் என்று தெரிந்தால் திருத்தங்கள் நடக்கின்றன. முழுக்கத் தவறு என்றால் அழிக்கப் படுகின்றன. அதிகமாக உபயோகிக்கப் படவில்லை என்றாலும் அழிக்கப் படுகின்றன.

ஒரு நிகழ்வுக்குப் பல காரணிகள் இருக்கலாம். சகோக்கள் உருவாகிறார்கள். எது சரி, தவறு என்பதை விட, அவை நமக்கு எப்படி உதவுகின்றன என்கிற புள்ளிக்கு வருகிறார் நூலாசிரியர்.

ஒரு நிகழ்வு மட்டுமல்ல பல நிகழ்வுகளை ஒன்று சேர்ப்பதிலோ அல்லது அவற்றில் இடையில் உள்ள தொடர்புகளையும் கோடிட்டுக் காட்டும் சூட்சுமத்திலும் சகோ முன்னிற்கிறது.

அறிவியலுக்கும் அது தான் அடிப்படை. இந்த சிந்தனை நுணுக்கங்கள் இல்லாவிட்டால் நாம் இன்னும் குகைகளில் வாழ்ந்திருப்போம். நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் இருந்திருக்காது.

அதுக்காக, அநியாயத்துக்கும் எல்லாரும் சகோக்கள் உருவாக்க முனையுங்கள் என்று நூலாசிரியர் சொல்லவில்லை. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

உள்ளத்தில் நூறு நினைத்தேன்

அது பெண்டாட்டி புருஷனாக இருக்கட்டுமே. காதலி அல்லது காதலனாக இருக்கட்டுமே. அதுக்கும் மேலே பஸ்ஸிலே, ரயிலிலே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற ஆளாக இருக்கட்டுமே. இந்த நிமிஷம் மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது நம் ஒவ்வொருவர் மனசிலும் குறுகுறுக்கும் கேள்வி.

மனிதர்களின் அத்தனை நடப்புகளுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று நம் மனம் நம்புகிறது. அதற்கென்று ஒரு கருவியை நம் மனசு வைத்திருக்கிறது. இது நோக்கம் கண்டுபிடிக்கும் கருவி. சிலருக்கு சூப்பராய் வேலை செய்யும். சிலருக்குத் தப்புத் தப்பாய் வேலை செய்யும். ஆபத்திலும் மாட்டிவிடும்.

அதோ அவர் ரொம்ப சோகமாய் இருக்கிறார். காரணங்கள் : அவர் பெண்டாட்டி ஏசியிருக்கலாம். அவர் காதலி பைபை சொல்லியிருக்கலாம். பண நெருக்கடியாக இருக்கலாம். இன்னும் எத்தனையோ இருக்கலாம்.

இதெல்லாம் நம் மனசுக்கு எப்படித் தெரியும்? நம் வாழ்க்கையில் நடந்த, பார்த்த, கேட்ட நிகழ்வுகளை காணொலிக் காட்சியாகப் பதிவு செய்து படத்தை ஓடவிட்டுப் பார்க்கிறது. அதுவும் கடைசிக் காட்சியில் இருந்து முதல் காட்சிக்கு ஓட விடுகிறது.

உதாரணமாய், பெண்டாட்டி மேட்டரை எடுப்போமா? கடைசி வினாடியில் அவர் முகம் படு பரிதாபமாக இருக்கிறது. மனைவி விளாசித் தள்ளுகிறார். அவர் குரல் உச்சகட்டத்தில் முழங்குகிறது. நடுப்பகுதியில் மனைவியின் சத்தம் குறைந்திருக்கிறது. கணவர் முகத்தில் ஓரளவே சோகம் தெரிகிறது. முதல் வினாடிக்கு வந்துவிட்டோம். கணவர் முகத்தில் சிரிப்பு. மனைவி சிரிக்காவிட்டாலும், உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று ஆரம்பிக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர் டல்லாய் இருப்பதன் காரணம் : மனைவி கொடுத்த டோஸ். இப்படிப் பல கட்டங்களை நம் மனசு பதிந்து கொள்கிறது. பின்னால் எந்த சோக மூஞ்சிகளைப் பார்த்தாலும் இப்படி நடந்திருக்கலாம் அல்லது அப்படி என்று பதிந்த எல்லாப் படங்களையும் போடுகிறது. இதுவாக இருக்கலாம் என்று ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்கிறோம். (அது சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.)

நோக்கம் கண்டுபிடிக்கும் கருவி இல்லாவிட்டால் நம்மால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாய் உங்கள் கருவி அணைக்கப் பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அறுவை சிகிச்சை அறையில் இருக்கிறீர்கள். அங்கே நடக்கும் விஷயங்களைப் பார்த்ததும் அய்யோ கொலை! – நீங்கள் கத்தியிருப்பீர்கள்.

அறுவை சிகிச்சை நோயாளியைக் காப்பாற்றுவதற்காக அது என்று உங்களுக்குத் தெரியாது. அது பற்றி அறிந்ததில்லை. வயிற்றில் இருக்கும் கட்டியை அகற்றத் தான் வயிற்றைக் கீறினார்கள். ரத்தம் வரத்தான் செய்யும். சிகிச்சை முடிந்தபின் தைத்துவிடுவார்கள். நோயாளி சுகமாகி விடுவார்.

இந்த ஒழுங்கு அல்லது வரிசைக் கிரமத்தை உங்கள் மூளை ஏற்கெனவே அறிந்திருந்தால் உங்களைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போயிருக்க மாட்டார்கள். முடிவில் இருந்து துவக்கத்தை நோக்கி ஓடும் படங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல மிக மிக அவசியமானவை.

குழந்தைப் பருவத்தில் இந்தக் கருவி பொதுவாக வேலை செய்யாது. வயது ஏற ஏறத்தான் காரணங்களை எடை போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறது அது. வண்டிகள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் சாலையைக் கடக்க குழந்தைகள் பயப்படுவதில்லை. நாம் தான் பதறிப் போகிறோம். காரணம் : குழந்தைகளுக்கு வண்டி மோதலாம் என்று தெரியாது. மோதினால் உயிராபத்து நேரும் என்று தெரியாது. (ஒழுங்கு, வரிசை).

தற்செயலாக நடக்கும் சம்பவங்களுக்குக் கூட ஏதாவது காரணம் கற்பிக்கிறது அதே மனசு. யாரோ ஒருத்தர் அல்லது ஒரு குழு அதை நடத்தி இருக்கலாமோ? பிறகு கப்சிப் என்று இருக்கிறார்களோ?

ஐபோனோ அல்லது ஸ்மார்ட்போனோ உபயோகிக்கும் போது மக்கர் பண்ணினால் நமக்கு எப்படியெல்லாம் கோபம் வருகிறது! போட்டு உடைத்துவிடும் அளவுக்கு ரத்தம் சூடேறுகிறது. கேவலம் அது ஒரு சாதாரண கருவி. அதற்கு உயிர் இல்லை என்று ஏன் அந்த சமயத்தில் நம் மனசு சொல்வதில்லை?

சில சமயங்களில் அறிவாளிகள் கூட இதே பொறிக்குள் சிக்கி விடுகிறார்கள். முதலாம் உலகப்போர் துவங்கக் காரணமாக இருந்த ஒரு சின்ன சம்பவத்தை உதாரணம் காட்டுகிறார் நூலாசிரியர்.

அன்றைய ஆஸ்திரியாவின் ஆளுநர் பெர்டினாண்டைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியது ஒரு குழு. மனைவியுடன் போஸ்னியாவின் சரயீவோ நகரத்துக்கு விஜயம் செய்கிறார் அவர். அவர் இருந்த வண்டியின் மீது முதலாவது கொலையாளி குண்டுகளை வீசுகிறார். ஆனால் குறி தப்பிவிடுகிறது. அடுத்தவர் வீசிய குண்டோ பின்னால் வந்த வண்டியில் விழுந்து வெடிக்கிறது. குறி தவறிவிட்டதே என்கிற விரக்தியில் அவர் சயனைட் குப்பியை விழுங்குகிறார். அதுவும் வேலை செய்யாவிட்டால் என்று நினைத்து பக்கத்தில் இருந்த ஆற்றில் குதிக்கிறார். மக்களோ அவரை மீட்டெடுத்துக் காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

ஆளுநர் வண்டியை ஒட்டிய சாரதியின் மூளை வேகமாக முடிவெடுக்கிறது. வேறு பாதையால் போக வேண்டும். ஒரு குறுக்கு வழிச்சாலையில் வண்டியை வேகமாக ஒட்டிப் போய்க் கடைசியில் ஒரு ஓட்டல் அருகில் மெதுவாக நிறுத்துகிறார் அவர்.

அந்த ஓட்டலில் நான்காவது கொலையாளி தங்கி இருந்திருக்கிறார். திட்டம் எல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டதே என்கிற மனச் சோர்வில் ஓட்டலுக்கு வெளியே வந்தவர், அதே ஆளுநரும் மனைவியும் வண்டியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். உடனேயே தன் துப்பாக்கியை எடுத்து சுட்டு இருவரையும் சாய்க்கிறார். தப்ப வைத்துவிட்டேன் என்று நினைத்த சாரதி விக்கித்துப் போய் நிற்கிறார்.

அந்தக் கொலையின் எதிரொலியாய் முதலாம் உலகப்போர் துவங்கிற்று. அது இருக்கட்டும். எப்படி இந்தக் கொலை சாத்தியமாயிற்று? வரலாற்று ஆசிரியர்களே பல சகோக்களை நம்பி அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.

பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

சகோக்களில் பல ரகங்கள் உண்டு. ஒரு உயிரியல் பூங்காவில் வைரஸ் கிருமி ஒன்று பரவிற்று. மிருகங்கள் இறக்க ஆரம்பித்தன. இருந்தும் அதை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து சில மிருகங்களைக் காப்பாற்றி விட்டார்கள். ஒரு முயல் குட்டி அல்லது ஒரு கரடி தான் அந்த வைரஸுக்குக் காரணம் என்று கதையை சுருக்கிவிட்டு கேள்வி கேட்டார்கள்.

கொஞ்ச மிருகங்களே இறந்தன என்று கதை விட்டபோது அதற்குக் காரணம் முயல் குட்டி என்று பதில் வந்தது. நிறைய மிருகங்கள் பலியாகி விட்டன என்று சொன்னபோது, ஆ! அப்போ அது கரடியாகத் தான் இருக்கும் என்று பதில் கிடைத்தது.

லேமான், சின்னிரெல்லா (Leman, Cinnirella) என்கிற இரு உளவியலாளர்கள் இரண்டு கதைகள் இட்டுக்கட்டி ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். 1) ஒரு நாட்டின் அதிபர் சுடப்பட்டார். உடனடியாகவே மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். காயம் சின்னது. உயிர் தப்பிவிட்டார். 2) சின்னக் காயம் தான். ஆனால் மறுநாள் இறந்து போனார். காரணம் : மாரடைப்பு.

கேள்வி கேட்கப்பட்டது. (1) தப்பிட்டாரா? அப்போ யாரோ ஒரு தனி ஆள் இந்த வேலை செஞ்சிருக்கான். (2) என்னது செத்துப் போய்ட்டாரா? மாரடைப்பு எல்லாம் பம்மாத்து சார். இதுக்குப் பின்னால ஒரு பெரிய குழு இருக்கு. திட்டம் போட்டு நடத்திருக்காங்க. ம்ம்.

சகோக்கள் பெரிய புள்ளிகளுக்கு அல்லது முக்கிய சம்பவங்களுக்கு பெரிய கோலங்கள் போட்டுக் கவர்வது வழக்கம். சின்ன விஷயங்களுக்கு சின்னதாய் ரெண்டு மூன்று புள்ளிகளோடு முடித்துவிட்டு விர்ரென்று அடுத்த விஷயத்துக்குத் தாவுவது சாதாரணம்.

சகோக்களால் பெரும் பிரச்னைகள் உருவாகின்றன என்று கோபப்படுபவர்களை சுட்டிக் காட்டி அவர்களின் நியாயத்தையும் பதிவு செய்கிறார் நூலாசிரியர். அதே சமயம், சகோக்கள் மனிதர்களின் கற்பனைத் திறனையும் தர்க்க ரீதியான முடிவுகளை எட்டும் நேர்த்தியான நுணுக்கங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்கிற உளவியலாளர்களின் ஆய்வுகளையும் எழுதுகிறார்.

ஒரு முக்கிய புள்ளி : சில சகோக்களால் பெரும் அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்பாவி மனிதர்கள் பலியாக்கப் பட்டிருக்கிறார்கள். துயரங்களுக்கு எல்லையே இல்லாமல் போயிருக்கிறது. சகோக்களை எப்போதும் மீளாய்வு செய்து கொண்டே இருக்கவேண்டும். எத்தனை நேர்த்தியாக, லாவகமாக சகோக்கள் பின்னப் பட்டிருந்தாலும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முற்படுவதும் மிக அவசியம்.

மூன்று பேர் பேசிக் கொண்டே நடக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் மனமும் மற்றவர் என்ன நினைக்கிறார் என்று துருவிக் கொண்டே இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். அவர்கள் மட்டுமா? இந்த உலகின் 6 பில்லியன் மக்களின் மனங்களும் அது போலவே ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ளத் துடிக்கின்றன. ஆனால் அது சாத்தியமில்லையே.

அங்கே தோன்றுகின்றன சதிக் கோட்பாடுகள். தவிர்க்கவே முடியாத கோலங்கள் அவை. இல்லாவிட்டால் நாம் மனிதர்களாகவே இருக்க முடியாது என்கிறார் நூலாசிரியர்.

நான் மிகவும் ரசித்து ரசித்து வாசித்த புத்தகங்களில் ஒன்று இது.

அது சரி. அமெரிக்காவில் ஒருத்தன் கடைக்குப் போனானாம். ஒரு துப்பாக்கி வாங்கினானாம். அதுவும் கேவலம் 13 டாலராம். ஒரு கட்டட மாடிக்குப் போனானாம். அங்கே இருந்து ஆனானப்பட்ட அமெரிக்க அதிபரையே சுட்டுத் தள்ளிட்டானாம். நாங்க நம்பணுமாம். யார் காதுல பூ சுத்துரானுக?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.