எதுவும் நிரந்தரமல்ல. மாற்றம் மட்டுமே உண்மை. பிறப்பு பெரும் துக்கம். பிறப்பில்லாத நிலையை அடைய கர்மவினைகள் முடிவுக்கு வரவேண்டும். தேவர்களென்ன கடவுளே வந்தாலும் அவரும் கர்மவினைக்கு உட்பட்டவராகிறார்.
என் போதனைகள் அல்ல அவை. தம்ம போதனைகள் என்று சொல்லுங்கள். தம்மம் எனக்குப் பிறகு ஒரு 500 ஆண்டுகளாவது நின்று பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார் அவர். 500 என்ன 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது பவுத்தம்.
அதை விட வியப்பு : அந்தக் காலமோ, இந்தக் காலமோ கடவுள் என்கிற அம்சம் இல்லாமல் எந்த மதமும் இருந்ததில்லை. அனைத்துக்குமே கடவுள் நம்பிக்கை அடிப்படை.
கடவுளா? அது பற்றி எதுவும் எனக்குத் தெரியாதே என்று பதில் சொன்னவர் புத்தர். அப்படி ஓர் மதத்தை – தவறு, ஒர் வாழ்வியலை உருவாக்கிய மனிதர் எத்துணை ஆற்றல் படைத்தவராய் இருந்திருக்க வேண்டும்?
எதுவுமே இல்லை. அவர் அரச குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனாலும் நம்மைப் போல் ஒரு மனிதர். காலப்போக்கில், அவரை ஒரு அவதார புருஷராக அல்லது பிரம்மாண்ட மனிதராக மாற்றி விட்டார்கள் என்கிறார் இந்திய வரலாற்று அறிஞர் ஷூமன் (H.W. Schumann).
(ஜெர்மன் நாட்டுக்காரரான இவர் எழுதிய The Historical Buddha ஏட்டில் இருந்து சில தகவல்கள் இங்கே வருகின்றன. புத்த தத்துவம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஷூமன் சிலகாலம் வாரணாசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்திருக்கிறார்.)
பொதுவாக, இந்திய சமுதாயம் தனி மனித வரலாற்றுக் குறிப்புகளை விட, அவர்களின் கொள்கைகளுக்கே முக்கிய இடம் கொடுப்பது வழக்கம். முன்னோர்கள் வாழ்ந்த காலம், வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் மிகமிகக் குறைவாகவே கிடைக்கின்றன. கற்பனைகளும் இடைச்செருகல்களும் செய்திகளில் இலகுவாகவே கலந்து விடுகின்றன.
நல்ல காலமாக, பவுத்த பிக்குகள் சந்ததி சந்ததியாய், மனனப் பயிற்சி மூலம் செய்திகளை நேர்மையுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். மேலும், அன்றைய வெளிநாட்டுப் பயணிகள் (சீனா, கொரியா போன்ற) எழுதிய பயணக் குறிப்புகளில் இருந்தும் புத்தர் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று எழுதிச் செல்கிறார் ஆசிரியர்.
அவரின் ஆய்வு, அசோக மன்னனின் கல்வெட்டுகள், பட்டயங்கள், இலங்கையில் கி.மு. முதலாம் நூற்றாண்டில் முதன் முதலாய் எழுத்தில் வார்க்கப்பட்ட ஓலைச் சுவடிகள் (பாளி மொழியில்) மற்றும் இலங்கையின் காடுகளில் வாழும் பிக்குகளின் நேர்காணல்கள்.. என்று பயணிக்கிறது.
ராணி, மாயாவை அவசர அவசரமாக, மாட்டு வண்டியில் ஏற்றுகிறார்கள். கற்களும் மணலும் நிறைந்த கரடு முரடான பாதையில் விழுந்து, எழுந்து போகிறது வண்டி. (தயவு செய்து, வானிலிருந்து தெய்வங்கள், தேவர்கள் பூமாரி பொழியும் அபத்தங்களை மறந்து விடுங்கள்.) அந்த மாட்டு வண்டியின் குலுக்கலில் வீல் என்று கத்துகிறாள் மாயா. வழியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை. பாதையின் ஓரமாய், ஒரு காட்டு மர நிழலில் சித்தார்த்தன் பிறக்கிறான்.
வாரிசு பிறந்துவிட்டதே! அரசன் சுத்தோதனனுக்கு செய்தி பறக்கிறது. மகிழ்ச்சியில் நாள் கணக்கில் கொண்டாட்டம் போட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கிடையில் மாயாவின் உடல்நிலை மோசமடைகிறது. விழாக்கோலத்தைப் பார்த்தபடி, ஏழாம் நாள் நிரந்தரமாகக் கண்ணை மூடுகிறாள்.
உடன் பிறந்த அக்கா போய்விட்டாலும் சித்தார்த்தனை என் மகன் போல் வளர்ப்பேன் என்று பாசத்தோடு வளர்க்க ஆரம்பிக்கிறாள் பஜாபதி – மன்னனின் இரண்டாம் மனைவி.
சித்தார்த்தன், அப்பாவோடு அவரின் வயலில் உழுதிருக்கிறான். (அன்று மன்னர்களும் அவர்களின் பங்கு நிலத்தில் உழுதிருக்கிறார்கள்.) தவிர, சுத்தோதனன் ஒரு சிற்றரசன். கோசல நாட்டின் ராஜா. அவ்வளவு தான். மகத நாட்டின் கீழ் கோசலா இருந்தது.
அவன் ஒரு காலத்தில் ஞானியாகப் போய்விடுவான். ஆகவே அரண்மைக்கு உள்ளேயே .. என்று நாம் கேள்விப்பட்டது எல்லாம் சும்மா. சித்தார்த்தனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன என்பது தான் உண்மை – அதாவது, மற்றவர்களை விட. காரணம் தெரிந்ததே.
நிச்சயம் அவனுக்கு மூப்பு, மரணம், நோய்நொடிகள் பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கும். வேட்டைக்குப் போ என்று அப்பா சொன்னதற்காகப் போயிருக்கிறான். அநியாயமாக மிருகங்களைக் கொல்ல வேண்டுமா என்று கேட்டிருக்கிறான். இளமையிலேயே துறவு நிலையை விரும்பியிருக்கிறான்.
நண்பர்களை விட, தனிமை பிடித்திருந்தது. அவனை வளர்த்த சிற்றன்னைக்கு அவன் குணாதிசயங்கள் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஒருநாள் அவன் நம்மை வீட்டுப் போய்விடுவான் என்று நினைத்து நினைத்துப் பல தடவைகள் அழுதிருக்கிறாள் .
சித்தார்த்தனுக்கு எழுத, வாசிக்கத் தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே. எதையும் கூர்ந்து நோக்கும் பண்பு, சிந்திக்கும் திறன் மட்டும் குறையாமல் இருந்தது. (பிக்குகளுக்கு எழுத, வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறப்பில் இருந்து விடுவித்துக் கொள்வதே அவர்களுக்கு முக்கியம் என்கிறார் புத்தர் தம்ம போதனையின் ஓரிடத்தில்.)
அவனுக்கு வில்வித்தை, வாள்வித்தை பயிற்சிகள் நடந்தன. ஆனால் வீர விளையாட்டுகளில் பெரிதாய் எதுவும் அவன் சாதிக்கவில்லை. அதே சமயம், அரண்மனையில் நடந்த பல்வேறு சாதுக்கள், யோகிகளின் சமய விவாதங்களில் ஆர்வம் காட்டியிருக்கிறான்.
எதிர்காலத்தில் ராஜாவா வரவேண்டிய நம்ம பையன் இப்டி இருக்கானே என்று ரொம்பவும் கவலைப்படுகிறார் பெரிய ராஜா. திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு தானாக வந்துவிடும் என்று நினைக்கிறார். ஆனால் வரப்போகும் சம்பந்திக்கு ஏற்கெனவே விஷயம் தெரிந்திருந்தது. ஆளை சமாளிக்க, ராஜா, தன் பையன் சூராதி சூரன் என்பதாக திட்டம் போட்டு ஒரு “ஷோ” காட்டி, சம்மதிக்க வைக்கிறார்.
அழகு மங்கை யசோதராவுக்கும் 16 வயசு. சித்தார்த்தனுக்கும் 16 வயசு. இருந்தும் அவர்கள் குழந்தை ராகுல் பிறக்க, ஏன் 13 ஆண்டுகளாயிற்று? கொக்கி போடுகிறார் ஆசிரியர். சித்தார்த்தனின் துறவு மனோநிலை ஒரு காரணம்?
புத்தர் வாழ்ந்த அன்றைய சமுதாயம் எப்படி இருந்தது? பக்கம் பக்கமாக விவரிக்கிறார் ஆசிரியர். எதிர்பார்த்தது போல், வைதீக மதத்தின் பிராமணர்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தார்கள். நான்கு வர்ணங்கள் இருந்தன. ஜாதிகள் இருந்தன. யாரும் அந்தந்த சமூகங்களின் கட்டுப்பாடுகளை மீறத் துணியவில்லை.
ஆனால் தீண்டத்தகாதவர்கள் என்கிற பிரிவு இன்னும் உருவாகாத காலம் அது. பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள். சிவன் தெய்வம் மற்றும் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை ஏதும் தோன்றாத காலம். பசுக்களுக்குப் பூஜை செய்வது பற்றியும் எதுவும் அறியாத காலம்.
நான்கு வேதங்கள் இருந்தன. உபநிடதங்களும் வந்திருந்தன. வேத விற்பன்னர்கள் யாகங்கள் செய்து (காசு கொடுத்தால்) தெய்வங்களிடம் வரங்கள் வேண்டி மக்களுக்கு உதவினார்கள்.
ஆனால் யாகங்களில் பலி கொடுக்க என்னென்ன தேவை என்கிற பட்டியல் மட்டும் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போனதில் சாதாரண மக்கள் மட்டுமல்ல, வணிகர்கள் கவலையும் கூடிக் கொண்டே போயிற்று.
இது போக, இன்று போலவே மக்கள் அன்றும் சாதுக்கள், யோகிகளுக்கு உணவளிப்பது, அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவை அவர்களின் கர்மவினைகள் தீர உதவும் என்று அழுத்தமாக நம்பினார்கள்.
சித்தார்த்தன் துறவுக்கு வருகிறோம். கர்மவினைகளை எப்படி அகற்றுவது, துக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று காட்டுக்குள் வந்துவிட்டான். ஆனால் துன்பமோ துன்பம். இருந்தும் அவன் தனியாக இல்லை. கடும் யோகங்கள் செய்தவர்களையும் சந்திக்கிறான். ஆலோசனைகள் கேட்கிறான். பல வழிமுறைகளையும் முயற்சி செய்து பார்க்கிறான்.
சிலர் நாள் கணக்கில் பட்டினி கிடந்தார்கள். சிலர் உடல் அவயவங்களையே வெட்டிக்கொண்டார்கள். சிலர் உடலைத் தீயில் சுட்டுக் கொண்டார்கள் – எல்லாம் பரம்பொருளுக்காக. நல்ல நேரம் – சித்தார்த்தன் அவ்வளவு தூரம் போகவில்லை. இருந்தும் உடலை வருத்திக் கொண்டான் என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.
அலரா கலமா என்கிற துறவியை சந்திக்கிறான். சிந்தனை மாறுகிறது. அவரின் தியான முறையைக் கற்றுக் கொள்கிறான். ஆனால் அதுவும் அவனைக் கவரவில்லை.
அந்த நாளில், காடுகளில் சிங்கம், புலி மற்றும் கொடிய விலங்குகள் தாராளமாகவே திரிந்தன. கொஞ்சம் அசட்டையாய் இருந்தாலே கதை முடிந்துவிடும். ஆகவே சித்தார்த்தன் ஊர்களுக்கு அண்டிய பூங்காக்கள் போன்ற இடங்களில் இருந்து தியானத்தைத் தொடர்ந்திருக்கிறான்.
அரசமர நிழல் ஒரு தற்செயலான நிகழ்வு. எந்த மரத்தின் கீழிருந்தாலும் அவனுக்கு ஞானம் ஏற்பட்டிருக்கும். என்னமோ அரசமரம் அந்தப் புகழைத் தட்டிக் கொண்டு போய்விட்டது என்கிறார் ஆசிரியர்.
புத்தர் மேல் பிரமிப்பு கொண்டவர்கள் அவரை தெய்வீக அம்சம் உள்ளவராக சித்தரித்திருக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டு : ஒரு தடவை, காட்டின் அருகில் ஓர் குடிலில் (உருவெல) புத்தர் தங்கி இருந்தபோது மூன்று இரவுகள் அந்தக் காடே இரவில் ஒளிர்ந்ததாம்.
அது இரவில் குளிர் தாங்கமுடியாமல் அல்லது காட்டு விலங்குகளை விரட்ட, புத்தர் மூட்டிய நெருப்பாக இருக்கவேண்டும். (இது போல் இன்னும் ஏராளமான புனைகதைகள் பின்னால் உருவாகின.)
ஒரு இரவிலேயே (விசாக பவுர்ணமி) அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டதா? இல்லை. இல்லை. அவருக்கு ஏற்பட்டது முதலில் ஒரு பொறி! பளிச் என்கிற உண்மை. ஆனால் அதை நெறிமுறைப்படுத்தி மற்றவர்களுக்குப் புரிய வைக்க இன்னும் மூன்று இரவுகள் அவருக்குத் தேவைப்பட்டிருக்கின்றன.
உணவுக்காக, வாசலில் கையேந்தி நின்ற சாதுக்களை சிலசமயங்களில் மக்கள் அவமதித்திருக்கிறார்கள். சும்மா இருந்து தின்று கொழுக்கும் பன்றிகளே என்று கூடத் திட்டியிருக்கிறார்கள். புத்தரும் அதற்கு விலக்கல்ல. பேசாது, அமைதியாக அகன்றிருக்கிறார்.
அவரிடம் உபதேசம் கேட்டவர்கள் அவர் உருவாக்கிய பிக்குகளின் சங்கத்தில் சேர்ந்தார்கள். அதுவும் சிலர் குறுகிய காலத்தில் மனம் மாறினார்கள். அவரிடம் அப்படி என்ன தான் கவர்ச்சி இருந்திருக்கும்?
பவுத்த நூல்களை விடுங்கள். அவருக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட மாற்று மதத்தினர் (ஜைன மத துறவிகள்) எழுதிய சில குறிப்புகள் : அவரின் அழகான உடலமைப்பு.. முகத்தில் தெரியும் அமைதி.. எதையும், நுண்ணறிவோடு பேசும் ஆற்றல் அனைவரையும் ஈர்க்கிறது …
ஆகவே புத்தர் அழகாகவே இருந்திருக்கிறார். ஊர் ஊராய் நடந்திருக்கிறார். வாழ்நாள் முழுக்க, முழுக்க – காலணிகள் ஏதுமில்லாமலே. பிச்சை வாங்கியே சாப்பிட்டிருக்கிறார். அதே சமயம் முடிந்தளவு உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி இருக்கிறார்.
வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அங்கே கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலைந்துவிடும். நேரே மோட்சம் போய்விடலாம் என்று இன்றும் இந்து பக்தர்கள் நம்புகிறார்கள். வைதீகர்களுக்கும் நல்ல வருமானம். இவரோ, அதெல்லாம் புண்ணாக்குத்தனம். வெறும் சடங்குகள் எவரையும் புனிதராக்குவதில்லை. யாகங்கள், உயிர்ப் பலிகள் எல்லாம் மூடத்தனங்கள் என்று போதிக்கவே, அடித்து விரட்டி இருக்கிறார்கள்.
அவரின் சொந்த ஊரான கபிலவஸ்துவுக்குப் போயிருக்கிறார். அங்கே உணவுக்காக பிச்சைப் பாத்திரத்தோடு ஒவ்வொரு வீட்டு வாசலின் முன்னாலும் நின்றபோது, தலைநகர் மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? என்ன நடந்திருக்கும்?
யசோதராவையும் அப்போது பிறந்திருந்த குழந்தை ராகுலையும் கைவிட்டுப் பிரிந்தது தப்பில்லையா? கேள்வி எழத்தான் செய்யும். (ஆசிரியர் இதற்கான பதிலை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்கிறார்.) இளவயதில் இருந்தே துறவறத்தில் நாட்டம் கொண்ட ஒருவனை இல்லறத்தில் தள்ளியது சரியா?தவிர, அன்றைய காலகட்டம், நம்பிக்கைகள், வாழ்வுமுறை எல்லாவற்றையுமே நாம் கணக்கில் எடுத்தால் …
எதையும் அந்தந்த கால கட்டத்தோடு பொருத்திப் பார்ப்போர் அறிவார்ந்தோர்.
புத்தர் யார், விவரங்கள் அநேகமாக, அவர் சென்றிருந்த பகுதிகளில் முன்னமேயே தெரிந்திருந்தது. மேலும், அவர் சங்கத்தில் சேர்ந்தவர்கள் எல்லாரும் குடும்பத் தலைவர்கள். அவர்கள் இல்லாத நிலையில், அவர்கள் குடும்பங்கள் எப்படி எல்லாம் கஷ்டப் பட்டிருக்கும்?
ஆசிரியர் இந்தக் கேள்வியையும் கேட்கிறார். பதிலும் சொல்கிறார். புத்தர் சமூகத்தை சீர்திருத்த வந்தவரல்ல. அவர் ஆன்மீகவாதி. தனக்கு கிடைத்த ஞானத்தை முழுமையாக நம்பியவர். தன்னைப் போல் மற்றவர்களும் பிறப்பு என்னும் துக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று மட்டும் சிந்தித்தவர். வேறு எதுவுமே அவர் சிந்தனையில் இருக்கவில்லை.
அவர் எல்லாரையும் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ பேரை மறுத்திருக்கிறார்.
உபநிடதங்களின் கர்மவினை, மறுபிறப்பு போன்ற கருத்துப் படிவங்களை ஏற்றுக் கொண்டவர் கடவுள், ஆன்மா என்று எதுவும் இல்லை என்கிற முடிவுக்கு வருகிறார்.
அனாத்ம வாதம் அவரின் தனிச் சிறப்பு. ஆசை தான் அனைத்துக்கும் அடிப்படை. நான் என்பது ஓர் மாயை. இந்தத் தன்னுணர்வை எப்போது விட்டுத் தள்ளுகிறோமோ அப்போது விடுதலை கிடைக்கிறது. அதன் பின் பிறப்பில்லை. துன்பமில்லை. இன்பமும் இல்லை. அந்த ஒன்றுமே இல்லை என்கிற நிலைக்கு வழி காட்டுகிறேன் என்கிறார் புத்தர்.
தேவர்கள், தெய்வங்கள் ஒருவேளை நம்மை விட அதிக ஆனந்தத்தில் மூழ்கி இருக்கலாம். நம்மை விட அதிக காலம் இன்பம் துய்க்கலாம். ஆனால் அவர்களுக்கும் கால எல்லை இருக்கிறது. அது வந்ததும் துயரமும் வந்தே தீரும். அவர்கள் மீண்டும் மனிதப் பிறவி எடுத்து தம்மத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே அவர்களுக்கும் விடிவு.
தேவர்களோ, தெய்வங்களோ நாமோ எதுவோ எல்லாரையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துகிறார் புத்தர்!
அடுத்து, அவர் நடைமுறை சாத்தியமான வழிகளையே பரிந்துரை செய்திருக்கிறார். அவர் மாமிசம் சாப்பிடவேண்டாம் என்று சொல்லவில்லை. தேவைக்கன்றி எந்த உயிரையும் கொல்லாதீர்கள். பிக்குகளுக்கு ஊனுணவு கொடுப்பதைத் தவிருங்கள்.
மாற்றுக் கொள்கையாளர்களையும் மதித்தவர் அவர். உணவுக்காக அவர் வீடுகளின் முன் கையேந்தி நின்றபோது, வேறு சாதுக்கள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சொல்லி விலகி நின்றவர்.
யாராவது துறவிகளுக்குத் தானம் செய்ய விரும்பினால், என் சங்கத்தினரைப் போலவே எதிர்க் கொள்கை கொண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று கோரிக்கை வைத்தவர் புத்தர்.
மகத நாட்டின் பிம்பிசார மன்னன், அவன் வாழும் வரை புத்தரிடம் மதிப்பு வைத்திருந்தான். ஆலோசனைகள் கேட்டிருக்கிறான். அவன் பின்னால் ஆட்சிக்கு வந்த அவன் மகன் அஜாதசத்ரு, அப்பாவைக் கொன்று தான் ஆட்சிக்கு வந்தேன் என்று புத்தரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது அவரின் மேன்மைக்கு ஒரு சாட்சி.
அனைத்து உயிர்களிடமும் அன்பு, கருணை காட்டுதல் அவர் போதனையின் சாரம்.
யாகங்களில் உயிர்ப்பலி தருவதை அவர் எதிர்த்ததை அவரின் பிக்குகள் சங்கம் அதன் வரலாற்றுக் கடமையாகவே செய்து வந்திருக்கிறது. அதன் தாக்கம் : இன்று பிராமணர்கள், நெருப்பில் தானியங்களைப் போட்டு அவர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுக்கிறார்கள்.
நல்ல பிராமணன் என்கிற வாசகம் அவர் போதனைகளில் வரும். அது பிராமணீயத்தை ஏற்றுக் கொண்டேன் என்கிற பொருளில் வருவதல்ல. வேதங்கள் அறிந்த அந்தணர்கள் காலப்போக்கில் சுயநலமிகளாக, ஏமாற்றுப் பேர்வழிகளாக மாறிவிட்டார்களே என்கிற ஆதங்கத்தில் உதிர்த்த வார்த்தைகள் அவை.
பிராமணர்கள், பிரம்மன் வாயில் இருந்து தோன்றியவர்கள் என்பதை மறுத்தார். பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல என்று போதித்தார். சமுதாயத்தின் அடிமட்ட மக்கள், அவர்களின் முன்பிறப்பில் செய்த கர்மவினைகளால் அவதிப்படுகிறார்கள் என்றார்.
அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நடப்புகளை அவர் மதித்தார். அரசனுக்கு செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டிவிடுங்கள் என்றார். அரசர்கள் தவறான வழிகளில் செல்லும்போது தானே சென்று அறிவுரை சொல்லித் திருத்தி இருக்கிறார். முடிந்தளவு அரசர்களின் யுத்தங்களைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
அவரின் உபதேசங்கள் நிச்சயம் அடித்தட்டு மக்களைக் கவர்ந்திருக்கும். யாகங்கள் செய்து தெய்வங்களிடம் வரங்கள் கேட்பது தேவை தானா என்று வணிகர்கள் ஒரு தடவைக்குப் பல தடவைகள் யோசித்திருப்பார்கள். அவர்கள் நாடு கடந்து பொருளீட்டுவதால், அவர்கள் மூலம் பவுத்தம் புதிய நிலப்பரப்புகளில் கால் பதிக்க வசதியாகப் போயிற்று.
அவரின் போதனைகளில் கடுமையான விதிகள் இருப்பது போல் தோன்றினால், அது பிக்குகளுக்காக என்று பொருள்.
சாதாரண மக்களை நோக்கி அவர் சொன்னார் : சரியான சிந்தனை, சரியான செயல்பாடுகள் தான் உங்களைக் கைதூக்கிவிடும். அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று எதையும் நம்பிவிடாதீர்கள். அறிவை உபயோகியுங்கள். (மீண்டும் மீண்டும் பிறப்பதை எப்படி வெல்லலாம் என்கிற பார்வையில் தான் அவர் அறிவு என்கிற சொல்லை உபயோகித்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் நல்லது.)
அவர் காலத்திலேயே, பிக்குகள் இடையில் பிணக்குகள், சித்தாந்த மோதல்கள் உருவாகிற்று. சமரசம் செய்து வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. ஆனால் தம்ம போதனைக்கு எதிரான கருத்துக்கள் தோன்றிய போது அந்தப் பிக்குகளை உடனடியாகவே சங்கத்தில் இருந்து நீக்கினார். அவர் கோபமும் பிரபலம் வாய்ந்தது.
பெண்களை முதலில் அவர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்கியது உண்மை தான். அவர்களும் வந்துவிட்டால், குடும்பங்கள் சின்னாபின்னம் ஆகிவிடுமே என்று சிந்தித்தவர் அவர். ஆனால் அவர் சிற்றன்னையே என்னையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளேன் என்று விடாப்பிடியாய் நின்றிருக்கிறார்.
மறுக்கமுடியுமா? விளைவு : முதல் பிக்குணியாய் உபதேசம் பெற்றுக் கொள்கிறார் அவர். தொடர்ந்து, யசோதராவும் பிக்குணிகள் சங்கத்தில் சேர்கிறார்.
புத்தர் மட்டுமே கடவுள் மறுப்புக் கொள்கையை முன் வைக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் பலவித சித்தாந்தக் கோட்பாடுகள் இருந்தன (சிரமணர்கள்). இவர்களில் சில பிரிவினர், உடலை வருத்துவதன் மூலம் பிறவியை வெல்லலாம் என்று சொன்னார்கள். சிலர் ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. மறுபிறப்பு தானாகவே மறைந்துவிடும். ஏன் என்றால் ஏற்கெனவே எல்லாம் தீர்மானிக்கப் பட்டுவிட்டது என்றார்கள்.
புத்தர் இந்த அதி தீவிர எதிரெதிர் கொள்கைகளை மறுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தது ஓர் நடுநிலையான கொள்கை.
ஏட்டின் ஆசிரியர் ஷூமன், ஆசிரியர், ஆசிரியர் என்று வாஞ்சையோடு புத்தரை விளிக்கிறார். ஆய்வுக் கண்ணோடு சம்பவங்களைக் கோர்த்திருக்கிறார்.
அதே சமயம், புத்தரை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் மனிதராக – அதுவும் உயர்ந்த மனிதராகக் காட்டுவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஷூமன் சொன்னபடியே அன்றைய நடப்புகள் நூற்றுக்கு நூறு நடந்திருக்கும் என்று நினைப்பது தப்பு. இருந்தும் அவரின் விவரிப்பில் நம்பகத் தன்மை நிறையவே இருக்கிறது.
இயற்கையை அடிமைப்படுத்தி என் வசதிக்காக மாற்றிட வேண்டும். என் ஆசைகளுக்குத் தீனி போடவேண்டும். சுயநலத்துக்குப் பயன்பட மட்டுமே அறிவு தேவை எனும் கருதுகோள், முக்கியமாக, மேற்குலக வாழ்வின் அடிப்படையாய் மாறிவிட்டது. நாமும் அதை அப்படியே காப்பியடிக்க முயல்கிறோம்.
இயற்கையை அடிமைப்படுத்த முடியாது. ஆசைக்கு அளவே இல்லை. ஆசையை வெல்லமுடியுமா என்று யோசியுங்கள். அதற்காக, அமைதி, அன்பு, அகிம்சையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இன்னோர் பாதையைக் காட்டுகிறார் புத்தர்.