என்ன விலை அழகே

நம்ப முடியாது தான். இருந்தும், ஏமாற்று வேலை, பகல் கொள்ளை, தில்லுமுல்லு என்று பலவிதமான தொழில்களுக்கு இன்று சட்ட ரீதியான அனுமதி உண்டு. ஆனால் அதை நீங்களோ நானோ செய்தால் நிச்சயம் மாட்டிக் கொள்வோம். அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.

இன்றைய உலகின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு மதிப்பு அல்லது விலை உண்டு என்பதை மறுக்க முடியாது. அன்பு-பாசம்-நேசத்துடன் பகிர்ந்து கொள்ளும் எதையும் தவிர, மற்ற எதுவுமே சும்மா கிடைக்காது.

மதிப்பு என்றால் என்ன? எப்படி உருவாகிறது? மதிப்பின் இன்றைய நிலை என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பொருளியல் பேராசிரியர், மரியானா மஸ்சுகேட்டோ (Mariana Mazzucato) எழுதிய The Value of Everything ஏடு விரிவான பதில் அளிக்கிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில், 18ம் நூற்றாண்டில் இருந்து, மதிப்பு பற்றி யாருமே புரிந்து கொள்ளக்கூடிய எழுத்தில் வடித்திருக்கிறார் பேராசிரியர்.

உடல் அல்லது மூளை உழைப்பால் மதிப்பை உருவாக்கும் ஒரு பிரிவினர் (value creationers), எந்தப் பங்களிப்புமே செய்யாமல் அதை லவட்டிக் கொள்ளும் அடுத்த பிரிவினர் (value extractors) என்று துவங்குகிறது ஏடு.

நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ சமூகத்தில், பொருளியல் இரண்டு பிரிவாகப் பிரிந்து நிற்கிறது.

என்ன வேறுபாடு?

நாடோடி மன்னன் படத்தில் பானுமதி, சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி .. என்று ஆரம்பித்து நம்ம கையுங் காலுந் தானே மிச்சம் என்று சலித்துக் கொள்வார். நாளை போடப் போறேன் சட்டம் பொதுவில் .. என்று பட்டுக் கோட்டையார் வரிகளில் எம்ஜிஆர் பதில் சொல்வார்.

பராசக்தி படத்தில், ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் .. என்று காமாட்சிசுந்தரம் வரிகளில் எம். எஸ். ராஜேஸ்வரி பாட, கமலா ஆடுவார்.

முதலாவது பாடலை பொருளியலாளர் கெயின்ஸ் கேட்டிருந்தால் நிச்சயம் ரசித்திருப்பார். இரண்டாவது பாடலை பொருளியலாளர் மில்டன் பிரெய்ட்மன் கேட்டிருந்தால் ஆகா ஓகோ என்றிருப்பார்.

முதலாவது பாடல் என்ன சொல்கிறது? அரசே பெரிய முதலாளியாக இருக்க வேண்டும். தனியார் முதலாளிகள், அரசின் சொல் கேட்டு ஆட்டம் போட்டால் வாழ்க்கை இனிக்கும் (கெயின்ஸ்).

இரண்டாவது பாடல் : தனியார் முதலாளிகளை, அவர்கள் பாட்டுக்கு ஜாலியாக ஆட்டம் போட விடுங்கள். அது போதும். அவர்கள் மக்கள் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அரசு தலையிடக் கூடாது (மில்டன் பிரெய்ட்மன்).

80 களுக்கு முன்னே கெயின்ஸ் ஜொலித்துக் கொண்டிருந்தார். 80 களுக்குப் பின்னே இன்று வரை மில்டன் பிரெய்ட்மன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு தாங்க.

(இந்தக் கட்டுரையில், ஏட்டின் நான்கு இயல்களில் மட்டும் கை வைத்திருக்கிறேன்.)

மதிப்புக்கு வருகிறோம். ஒரு பொருள் அல்லது சேவையின் உற்பத்தி மற்றவர்களுக்குப் பயன் தருவதாய் இருந்தால் மட்டுமே அது மதிப்புள்ளதாக இருக்கும். எடுத்துக் காட்டாய், ஒரு ஆலை துவங்கினால் அதில் உருவாகும் பொருள்களுக்கு மதிப்பு உண்டு. அதே சமயம். ஆலையினால் சூழலுக்கு மாசு ஏற்படும் என்றால் அதற்கு மதிப்பில்லை. இன்றைய பொதுக் கொள்கை இது.

இருக்க, 17ம் நூற்றாண்டின் பொருளியலாளர்கள் இருவர் (பெட்டி மற்றும் கிங்) தனிமனித பயன்பாடு (individual utility) என்கிற கருத்தியலை முதன்முதலாக முன் வைக்கிறார்கள். (உற்பத்தியால் நன்மை விளைந்தால் என்ன, கேடு விளைந்தால் என்ன, அது முக்கியம் அல்ல.)

இவர்களின் பின் வந்த, ஆடம் ஸ்மித், மற்றும் ஷான் பாப்டிஸ்ட் ஷே, மதிப்பு என்பது உற்பத்தி செய்வோர், நுகர்வோர் என்கிற இரு பிரிவினர்களிலும் தங்கி இருக்கிறது என்றார்கள்.

எங்கெங்கு நோக்கினும் கிராக்கியடா

மதிப்பின் வரைவிலக்கணம் பக்க சார்பின்றி அமைந்திருந்த வேளையில், பற்றாக்குறை (scarcity) என்கிற ஒரு புது அம்சத்தை மதிப்பில் சேர்த்துக் கொண்டார்கள்.

எந்தப் பொருள் அல்லது சேவைக்கு கிராக்கி இருக்கிறதோ அது பற்றாக்குறை உள்ளது என்று சொல்லப்பட்டது. யாரும் சீண்டாத பொருளோ, சேவையோ இருந்தால் அதற்குப் பற்றாக்குறை இல்லை.

அந்தக் கணத்தில் இருந்து மதிப்பு என்பது நுகர்வோர் பக்கம் தாவி விட்டது. உற்பத்தியாளர்கள் அல்ல. நுகர்வோர் தான் மன்னர்கள். அவர்கள் சொன்னால் மறு பேச்சில்லை. பொருளியலாளர் ஆல்பிரெட் மார்ஷல் காலத்தில் இருந்து இந்தக் கொள்கை வேர் பிடித்துவிட்டது.

இனி, மதிப்பை அளவிட அடுத்த கட்டம் போகிறோம். பொதுவாக, ஒரு உற்பத்தியோ, சேவையோ உருவாக, மனித உழைப்பு உட்பட முழு செலவு என்ன ஆகும் என்பதைக் கணித்தால் அதன் மதிப்பை அளவிடலாம்.

ஆனால் செலவு என்று வரும்போது அது ஆக்கபூர்வமான செலவா இல்லை தண்டச் செலவா என்று சந்தேகம் வரவே, செலவுகளை இன்னும் ஆழமாகக் கிண்ட ஆரம்பித்தார்கள்.

சேவைகள் எதையும் ஆக்கபூர்வமானது என்று சொல்ல மாட்டேன் என்றார் ஆடம் ஸ்மித். விவசாயிகள் மட்டுமே ஆக்கபூர்வமானவர்கள் என்றார் கெஸ்னீ. தொழிலாளர்கள் மட்டுமே ஆக்கபூர்வமானவர்கள் என்றார் கார்ல் மார்க்ஸ்.

நில சொந்தக்காரர்களோ அல்லது ஆலை சொந்தக்காரர்களோ, எல்லாருமே வெட்டியாய்த் தின்று வாழும் கூட்டம் தானே. இவர்களின் பங்கையும் தண்டச் செலவுகளில் சேர்க்கவேண்டும் என்று ஒரு பகுதி சொல்ல, அதெல்லாம் அரசுகள் பார்க்க வேண்டிய வேலை. நீங்கள் அனாவசியமாக அவர்களை இதில் இழுக்கக் கூடாது என்று மற்றொரு பகுதி சொல்ல ஆரம்பித்தது.

இந்த நிலையில் இன்னோர் அம்சம் வரவாயிற்று. பேர் : விளிம்புநிலை பயன்பாட்டுக் கொள்கை (marginal utility theory).

இந்த வீனா பானா கொள்கையின் படி, ஒவ்வொரு பொருளின்/சேவையின் பற்றாக்குறையையும் மற்றவைகளுடன் ஒப்பு நோக்கி முடிவு செய்து மதிப்பு கொடுக்கிறார்கள்.

ஏன் நீங்களோ, நானோ கூட பற்றாக்குறை உள்ளவர்களே. இல்லாவிட்டால் நமக்கு மதிப்பில்லை. முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டுவதில்லை. ஒவ்வொருவரையும் திறமையின் அடிப்படையில் ஒப்பு நோக்குகிறார்கள். யார் கூடுதலான பற்றாக்குறை கொண்டிருக்கிறாரே அவருக்கு வேலை கிடைக்கும்.

தொழிலாளர்கள் எப்படி? வேலை இல்லாமல் சும்மா இருந்தால் கிடைக்கும் அரசு தரும் உதவிப் பணத்தின் தொகையை வேலைக்குப் போனால் ஒரு முதலாளி தரும் ஊதியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். பின்னது கூடுதலாய் இருந்தால் வேலைக்குப் போவார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள். மற்றும்படி, வேலை இன்மை பெருகிவிட்டது என்பதெல்லாம் வெறும் பினாத்தல் என்கிறது இதே வீனா பானா.

(மேற்கு நாடுகளில் வேலை இல்லாவிட்டால் உதவிப்பணம் கிடைப்பது மிகவும் சாதாரணம். நம் நாட்டில் காசு இல்லாவிட்டால் பிச்சை எடு என்று சொல்லி விரட்டுவது மிகவும் சாதாரணம். பேராசிரியர் மேற்கு நாடுகளின் பொருளாதாரப் பின்னணியில் எழுதி இருப்பதைக் கவனிக்க வேண்டும்.)

எது எப்படியோ, வீனா பானா தான் இன்று பல்கலைக்கழகங்களில், அரசு ஆலோசனைகளில் முதலிடம் வகிக்கிறது. ஏன் என்றால் இன்று பொருளியலில் மிகவும் பிரபலமாக இருக்கும் நவீன தாராளமய கொள்கையில் இது ஓர் முக்கிய அங்கம்.

லாப நட்டக்கணக்கு எழுதும் கணக்காளர்கள், அதை மேற்பார்வை செய்யும் தணிக்கையாளர்களின் ஊதியங்கள், போக்குவரத்து செலவுகள், விளம்பர செலவுகள்… இப்படி விதவிதமான செலவுகளை எதில் சேர்ப்பது? விவாதங்கள் அன்றே துவங்கிவிட்டன.

அடுத்து, அரசுகளின் செலவுகள் கூடத் தேவை தானா என்கிற அளவுக்கு – அதாவது அரசே தண்டச் சோறு என்று கூச்சல்கள் கேட்கும் காலத்தில் வந்து நிற்கிறோம்.

என்னை விட்டால் யாருமில்லை

வங்கிகளுக்கு மதிப்பு கொடுப்பதா இல்லையா? அன்று வங்கிகளில் பயனாளர்கள் சேமிக்கும் பணத்தை வட்டிக்கு விட்டோ அல்லது முதலீடுகளில் போட்டோ ஒரு மாதிரி ஒப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். ஆகவே அன்று வங்கிகள் என்றாலே எல்லாருக்கும் ஒரு இளக்காரம்.

இது கண்டு கண்ணீர் விட்டவர்கள் மில்டன் பிரெய்ட்மன் கட்சி ஆதரவாளர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் அவசியம் என்று சிந்தித்தவர்கள், 90 களிலிருந்து முதலீட்டு வங்கிகள் (investment banks) என்று ஆரம்பியுங்கள் என்று அரசுகளுக்கு யோசனை சொன்னார்கள்.

இவர்கள் இஷ்டம் போல் கடன் கொடுக்கலாம். அதிக வட்டிக்கு ஆசைப்படலாம். நாம் எதுவும் கண்டுக்க மாட்டோம் என்று சொன்னது தான் தாமதம், வானளாவ உயர்ந்தார்கள் மு. வங்கியினர்.

அப்ப நாங்க? போர்க்கொடி தூக்கினார்கள் மற்ற சாதா வங்கிகள். சரி சரி. உங்களுக்கும் அந்த சலுகைகள் உண்டு என்று சட்டங்கள் வந்தன. வங்கிகளின் மதிப்பு, ஒரே நாளில், வானத்தை விட ஒரு படி மேலே போயிற்று.

வழக்கமான வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, கண்டவன் கிண்டவனுக்கெல்லாம் கடன் கொடுக்கப்பட்டது. மூளைசாலிகள் முடிந்தளவு சுருட்டினார்கள். பிறகு தலைமறைவானார்கள். வாராக் கடன்கள் பெருகின.

லேமன் பிரதர்ஸ் (Lehman Brothers) எனும் பெரும் பன்னாட்டு முதலீட்டு வங்கி முதலில் சரிந்தது. 2008 ல் நடந்த அந்தப் பூகம்பம் மற்ற வங்கிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. காரணம் : வங்கிகள் எப்போதுமே ஒருவரில் ஒருவர் தங்கி இருப்பது வழக்கம். அடுத்து, வங்கிகளின் செயல்பாடுகளை யாருமே கண்காணிக்கவில்லை.

மதிப்பை உருவாக்கும் சாதாரண மக்கள், வங்கிகளின் மேல் நம்பிக்கை வைத்து பணத்தைப் போட்டால் அதையும் சேர்த்து லவட்டிக் கொள்கிற இந்தக் கூட்டத்தை, மதிப்பை உறிஞ்சும் கூட்டம் (value extractors) என்று தானே சொல்ல முடியும்?

இன்னும் எடுத்துக்காட்டுகள் தருகிறார் பேராசிரியர்.

பொருளியலாளர் கெயின்ஸ், வங்கிகளைக் கண்காணிக்காவிட்டால் நிதி நெருக்கடி வரும் என்று ஏற்கெனவே எச்சரித்திருந்தார். ஆனால் இப்போது பிரபலமாக இருப்பவர்கள் மில்டன் பிரெய்ட்மன் கட்சி ஆட்களாயிற்றே.

பேராசிரியர் கெயின்ஸ் கட்சி ஆதரவாளர். எதிரணியைப் பந்தாடுகிறார். 2008 ல் நிதி நெருக்கடி வந்தபோது வங்கிகளைக் காப்பாற்றியது யார்? அரசுகள். அதாவது மக்கள். அவர்கள் அல்லவா உங்கள் கடன் சுமைகளை அவர்கள் தலையில் தூக்கிக் கொண்டார்கள்? (மக்களுக்கே தெரியாமல் அவர்கள் தலையில் சுமத்தியது அன்று ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள்.)

எதிர்காலத்திலும் நிதி நெருக்கடிகள் வரலாம். (ஏன், நாளையே வந்துவிடலாம். அதுவும் பொருளாதாரப் பிரச்னைகள், 2008 ஐ விடப் பயங்கரமாக இருக்கும். மக்கள் கடும் துன்பத்தில் மூழ்கக்கூடும் என்று இரண்டு அணிகளுமே ஒப்புக் கொள்கின்றன.)

தனியார் துறை எப்படி காப்பாற்றும்? கூப்பிட்டதும் ஓடிவர, இவர்கள் என்ன கிருஷ்ண பரமாத்மாவா? 2008 லேயே இவர்கள் சாயம் வெளுத்துவிட்டதே. பேராசிரியர் சாடுகிறார்.

அதெல்லாம் வந்தப்ரம் பாத்துக்கலாம் என்று ஒரு மாதிரி சமாளித்துக் கொடிருக்கிறார்கள் பிரெய்ட்மன் அணியினர். பிரச்னைகள் இப்போதே மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதுக்கென்ன, தனியார் துறைக்கு இன்னும் சுதந்திரம் கொடுத்தால் அவர்கள் வென்றுவிடுவார்கள் என்று புதிது புதிதாக, பல பல நிதித் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது இந்த அணி.

Derivatives, Securitizations, Shorting, Special Purpose Vehicles, Private Equities, Agency Theory .. என்று தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் பைசா பெறாத, வெறும் கவரிங் நகைகள் என்கிறார் பேராசிரியர். ஒவ்வொன்றாகத் தோலுரித்துக் காட்டுகிறார்.

(நிதித் துறையை (பணம்) மட்டுமே பெருக்கிக் கொண்டே போனால் பொருளாதார செயல்பாடுகள் தானாகவே முன்னேறிவிடும் என்பது பிரெய்ட்மன் அணியின் கொள்கை.)

மக்களின் ஓய்வூதிய சேமிப்பையும் (|Pension Fund) தனியார் கையில் கொடுத்துவிடுங்கள். அரசுகளை விட, அவர்கள் நன்றாக மேலாண்மை செய்வார்கள் என்று ஆரம்பித்திருக்கிறது இந்த அணி. வங்கிகள் பிரச்னையில் என்ன பெரிசாப் பண்ணிக் கிழிச்சீங்க? இப்போ இது வேறயா? கேட்கிறார் பேராசிரியர்.

போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம்

காப்புரிமை என்பது அறிவுத் திறனுக்கும் செயல் மேம்பாட்டுக்கும் சமூகம் தரும் பரிசு என்பதை நாம் அறிவோம். கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு அது.

இன்று தனியார் நிறுவனங்கள் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களைப் பணியில் அமர்த்தி ஆய்வுகளை மேற்கொள்கின்றன. முடிவுகளை வெற்றிகரமாக செயல்படுத்தி லாபம் பார்க்கின்றன. தெரிந்ததே.

ஆய்வு முடிவுகளை சுருட்டிக் கொண்டு போய், நோகாமல் நொங்கு தின்ன, பல பேரென்ன, கோடிக்கணக்கில் ஆசாமிகள் காத்திருக்கிறார்கள். இந்த ஆசாமிகளிடம் இருந்து காக்க, காப்புரிமை அரணாக இருக்கிறது. நல்ல விஷயம்.

ஆனால் அதையே தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, இது எங்க சொத்து, எங்க ஆத்தா சொத்து, எங்க பாட்டன் சொத்து என்று அதே தனியார் நிறுவனங்கள் காலங்காலமாக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தால் அறிவியல் வளருமா, இல்லை தேங்கிப் போய்விடுமா?

காப்புரிமையை கோல்மால் பண்ணி பில்லியன் கணக்கில் பணத்தை வாரிச்சுருட்டும் பிரபல பன்னாட்டு நிறுவனங்களைப் பட்டியல் போடுகிறார் பேராசிரியர். அசந்து போகிறோம்! – இப்படியும் நடக்கிறதா?

மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு வருகிறார் அவர். பொதுவாக, தரவாரியாக, 10 அல்லது 20 ஆண்டுகள் மட்டுமே காப்புரிமைக்குக் கால எல்லை வகுத்திருப்பார்கள். அதன்பின் யாரும் அந்த அறிவையோ அல்லது தொழில்நுட்ப நுணுக்கத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்போது தானே புதிய வரவுகள், புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்? எப்ப பாத்தாலும் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிருந்தால் எப்போது நாம் அடுத்த கட்டத்துக்குப் போவது?

ஒரே ஒரு பழைய ஃபார்முலாவை வைத்துக்கொண்டு அதன் உட்பொருள்களைக் கொஞ்சம் அங்கே மாற்றி, கொஞ்சம் இங்கே மாற்றி, இது புதுசு, நாங்க இப்போ, இப்போ, அதுவும் நேத்து ராத்திரி கண்டு புடிச்சதாக்கும் என்று ரீல் விட்டு அதே மருந்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிற கலை இருக்கே.. அதுக்கெல்லாம் அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுப்பினை இருக்கிறது.

மதிப்பை உறிஞ்சும் கலை எப்படி எல்லாம் புதுப்புது வடிவங்கள் எடுக்கிறது!

(ஏட்டில் வியப்பான செய்திகள் ஏராளம்.. ஏராளம்.. இங்கே தந்திருப்பது வெறும் சாம்பிள் மட்டுமே.)

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க

கூகுள், முகநூல், அமேசான், பிங், வாட்சப் .. என்று சமூக வலைத்தளங்களுக்கு வருகிறார் பேராசிரியர்.

இந்த உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன? எப்படி சூழலுக்கு ஏற்றபடி அனுசரித்து நடந்து கொள்கின்றன? மிக அண்மையில் தோன்றிய இந்த இனங்களின் படிநிலை வளர்ச்சியை, நுட்பமாக நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அவர்.

செல்லப் பிராணிகளை அருகிலேயே வைத்து அழகு பார்ப்பது, கொஞ்சுவது எல்லாம் சரி தான். ஆனால் அவைகள் என்ன செய்கின்றன? செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை அலட்சியம் செய்வது ஆபத்து என்கிறார்.

சிறு வணிக நிறுவனங்களை, சேவை மய்யங்களை அவை முளை விட முன்பே, வன்மத்தோடு நசிப்பது மட்டுமல்ல, எத்தனையோ மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் அமேசான் … வலைத்தள பரிமாற்றங்களைத் திருடி விற்கும் கூகுள், முகநூல் ..

கேட்டால், அய்யோ! நாங்க தப்பே பண்றதில்லீங்க. எதுவும் கேக்காம செய்றதில்லீங்க .. என்று (அவங்க ஆத்தா தலையில் அல்ல நம்ம ஆத்தா தலையில்) சத்தியம் பண்ணும் இவர்களை இப்படியே விட்டு விட்டால் என்ன நடக்கும்?

இவர்களுக்குக் கடிவாளம் போடாவிட்டால், நாம் கட்டிக் காக்கும் மக்களாட்சிக்கே வேட்டு வைத்து விடுவார்கள் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர்.

அரசு நிறுவனங்களை நாம் நன்றாகக் கவனிப்பதில்லை. நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதா? கோடிக்கணக்கான பணம் கொட்டி, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கி சமூகத்துக்குத் தேவையான படித்தவர்களை உருவாக்குவது அரசு.

அதுவரை காத்திருந்து ஓடிவந்து, அவர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து, வேலை கொடுத்து, லாபம் பார்க்கிற தனியார் துறை, எங்களால் தான் சமூகத்துக்குப் பயன் என்று எப்படி அவர்களால் சொல்ல முடிகிறது?

பொருளாதார செயல்பாடுகள் தான் முக்கியம். நிதிப் பெருக்கம் அல்ல. அரசுகள் பக்கம் நாம் நிற்க வேண்டும் என்பது பேராசிரியரின் கருத்து.

நிதித் துறையை எப்படி சீர்திருத்தம் செய்யலாம்?

வங்கிகளா பணத்தை உருவாக்குகின்றன?

பிரெய்ட்மன் அணியினர் தூக்கிப் பிடிக்கும் (காஸினோ சூதாட்ட) முதலாளித்துவம் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறது?

இதே அணியினர் சிக்கனமாய் வாழுங்கள், சிக்கனமாய் வாழுங்கள் அடிக்கடி சொல்கிறார்களே. அந்த சுலோகத்தின் பின்னால் இருக்கும் சூட்சுமம்

பங்குதாரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா? நுகர்வோருக்கு முன்னுரிமை கொடுப்பதா?

பொருளாதார வளர்ச்சி முக்கியமா இல்லை பொருளாதாரத்தைக் கொண்டு செல்லும் கொள்கைகள் முக்கியமா?

இப்படி பல்வேறு களங்களில் தடம் பதிக்கிறார் அவர்.

பொருளாதாரத்தை அரசு தன் கைப்பிடியில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று பேராசிரியர் அடிக்கடி சொல்கிறாரே. அவர் ஒருவேளை சோஷலிசவாதியோ?

தவறு. அவர் இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை சீர்திருத்திட வேண்டும் என்று தான் குரல் கொடுக்கிறாரே தவிர, சோஷலிசம் பற்றி எதுவுமே பேசவில்லை.

ஏட்டை வாசித்து முடித்ததும், திகில் ஒரு பக்கம். ஆறுதல் இன்னொரு பக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.