கண்ணில் தோன்றும் காட்சி யாவும் (1)

பள்ளியில் படித்த இயற்பியல் பாடங்களை மறந்துவிடுங்கள். வெளி, காலம், நேரம், பொருள்கள், ஒளி எதுவுமே குவாண்டம் உலகில் (அணுக்களின் உலகம்) இல்லை. பிரபஞ்சமே குவாண்டம் வீச்சில் ஏற்படும் மாற்றங்களின் பிரதிபலிப்பு. அனைத்துமே (நீங்கள், நான் உட்பட ) குவாண்டம் உலகின் சில சாத்தியக் கூறுகள். அவ்வளவே.

Reality is not what it seems : the journey to quantum gravity என்கிற நூலை இப்படி ஆரம்பிக்கிறார் இயற்பியலாளர் கார்லோ ராவெல்லி (Carlo Rovelli).

இன்றைய இயற்பியல் யுகத்தில் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு நட்சத்திரம் இவர் என்கிறார்கள்.

(குவாண்டம் என்று வரும்போது, இந்த உலகத்து விதிகள், மற்றும் நம் அறிவு, பகுத்தறிவு எதுவுமே அங்கே வேலை செய்யாது என்று வாசிப்பவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.)

இருந்தாலும் நாம் காணும் இந்த உலகம், பிரபஞ்சம், அதன் நிகழ்வுகள், குவாண்டம் உலகின் நடப்புகள் அனைத்துக்கும் என்ன தான் தொடர்பு? அடிப்படையாக ஏதாவது விதிகள் உள்ளனவா? பொதுவான ஒரு கோட்பாட்டை (Theory of Everything) உருவாக்கிட முடியுமா?

இப்படியும் கேட்கலாம் : பிரபஞ்சத்தைப் படைக்க ஆண்டவன் போட்ட மாஸ்டர் பிளான் எதுவாக இருந்திருக்கும்?

கடந்த நூற்றாண்டின் இயற்பியல் மேதைகள் (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உட்பட) முட்டி மோதிப் பார்த்தும் முடியவில்லை. இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பேர்பெற்ற அத்தனை அறிவியலாளர்களும் இதற்காகவே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்பியலில் பல கோட்பாடுகள் இருந்தாலும் இன்றைய தேதியில் இரண்டு கோட்பாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. (1) String Theory (2) Loop Theory.

முதலாவது கோட்பாடு இன்று அதிகமான இயற்பியலாளர்கள் மத்தியில் பிரபலமாய் இருந்தாலும் அது உண்மை என்று நிரூபிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே சுவிட்சர்லாந்தில் இருக்கும் CERN அணு சோதனைக் கூடத்தில் ஆய்வுகள் நடக்கின்றன. நடந்து கொண்டே இருக்கின்றன.

இரண்டாவது கோட்பாடான Loop Theory யை செம்மைப் படுத்தியவர்கள் வரிசையில் முக்கியமானவர் கார்லோ ராவெல்லி. அவரின் நூலில் இருந்து சில பகுதிகள் இங்கே வருகின்றன.

ஒவ்வோர் படியாய் இயற்பியல்

நூலாசிரியர் கி.மு 450 களில் இருந்து ஆரம்பிக்கிறார். கிரேக்கத்தின் தத்துவ அறிஞர்கள் இல்லாமல் இயற்பியல் ஏது? முக்கியமாக, லூசிப்பஸ் (Leucippus), அவரின் மாணவர் டெமோக்ரீட்டஸ் (Democritus) இருவரும் அன்றே அணு இயலின் அடிப்படைக் கருத்துக்களை முன் வைத்துவிட்டார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார்.

அன்றைய கிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம் ஏன் லூசிப்பஸ் மற்றும் டெமோக்ரீட்டஸூக்குக் கிடைக்கவில்லை? இவர்களின் சிந்தனைகள் ஏன் இருட்டடிப்பு செய்யப் பட்டன? காரணங்களை அவர் பட்டியல் போடுகிறார்.

(இப்படியும் நடந்திருக்கிறதா? இது முதலாவது கேள்வி.)

டெமோக்ரீட்டஸுக்கு இன்று ஒரு ரசிகர் மன்றம் வைத்தால் நிச்சயம் நூலாசிரியர் அதன் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலோ அல்லது செயல் தளபதி லெவலிலோ இருப்பார் என்று அடித்து சொல்ல முடியும்.

டெமோக்ரீட்டஸ் அப்டி என்ன தான் சொல்லிட்டுப் போயிருக்கார்?

பிரபஞ்சம் அணுக்களால் ஆனது. வானத்துக்கு (வெளி) எல்லையே இல்லை. அணுக்களைப் பிளக்க முடியாது. அவற்றுக்கு வாசம், சுவை, நிறம் ஏதும் இல்லை. அவை தானியங்கள் போல சின்னஞ் சிறியவை. ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. ஒரே மாதிரியான அணுக்கள் ஒன்றை ஒன்று கவர்கின்றன. சில சமயங்களில் ஒட்டியபடி இயங்குகின்றன. சில ஒன்றை ஒன்று தள்ளி விடுகின்றன.

டெமோ எப்படி இந்த முடிவுகளுக்கு வந்தார்? யாருக்கும் தெரியாது. அவர் இயற்பியல் மட்டுமல்ல, வேறு பல அறிவியல் நூல்களும் (கிட்டத்தட்ட 60-70 புத்தகங்கள்) எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. இருந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை.

அடுத்து 17ம் நூற்றாண்டின் கணித, இயற்பியல் மேதை ஐசாக் நியூட்டன் விட்டுப்போன புதிருக்கு அழைத்துப் போகிறார் நூலாசிரியர். நியூட்டன் அய்யா கோளங்களின் இடையில் ஈர்ப்பு விசைகள் இருக்கின்றன. ஆகவே கோளங்கள் அசைகின்றன என்றார். அசையும் எந்தப் பொருளும் அவர் போட்ட கணிதத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன.

அதே சமயம் சூரியனோ, பூமியோ, சந்திரனோ கோடிக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் இருந்தபடி, எப்படி ஒன்றை ஒன்று ஈர்க்க முடியும்? அவருக்கே அது புரியவில்லை. எதிர்காலத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள் என்கிற குறிப்போடு மேட்டரை கிடப்பில் போட்டு விட்டார்.

18 ம் நூற்றாண்டுக்கு வருகிறோம். மைக்கல் பாரடே (Michael Faraday) யார் என்று இந்த காலத்து 8 அல்லது 9ம் வகுப்பு மாணவர்களுக்கே தெரியும். (காந்தங்களுக்கும் மின்சாரத்துக்கும் தொடர்புகள் இருப்பதைக் கண்டுபிடித்தவர் இந்த மேதை.)

நியூட்டன் சொன்னது போல் தூரத் தூர இருக்கும் பொருள்களுக்கு இடையில் நேரடியாக எந்த விசையும் இல்லை. பதிலாக வெளி எங்கும் நிறைந்திருக்கும் மின்காந்த வீச்சு (electro-magnetic field) தான் பொருள்களை ஈர்க்கிறது அல்லது தள்ளி விடுகிறது என்கிற முடிவுக்கு வந்தார் அவர்.

அடுத்து வருகிறார் ஜேம்ஸ் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell). மின்காந்த வீச்சின் தன்மைகளை ஆராய்ந்த அவர், அதன் வேகத்தைக் கணித்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த வேக அளவும் ஏற்கெனவே வேறு ஆதாரங்கள் மூலம் கணிக்கப் பட்டிருந்த ஒளியின் வேகமும் ஒன்றாய் இருந்தது. ஆகவே மின்காந்த வீச்சும் ஒளியும் ஒன்றே என்கிற முடிவுக்கு இயற்பியல் வந்தது.

அடுத்தவர் மாக்ஸ் பிளாங்க் (Max Planck). இவர் அவரின் கணிப்புகளின் போது செய்த அனுமானம் ஒரு அசகாய சூரத்தனம் என்று இயற்பியலாளர்கள் புகழ்கிறார்கள்.

மின்காந்த வீச்சின் (ஒளியின்) சக்தியை அளக்க, குவாண்டா (quanta) என்று ஒரு கற்பனை அலகை அமைத்துக் கொண்டார் அவர். அதாவது சக்தி என்பது சின்னஞ்சிறிய துகள்களாய் வெளிப்படுகிறது என்று வைத்துக் கொண்டார். மற்ற இயற்பியலாளர்களுக்கு அவர் சொன்ன பதில் : கணக்குப் போட லேசாக இருக்குமே. (ஒளியை அலையாகவும் பார்க்கலாம். துகள்களாகவும் பார்க்கலாம்.)

அதுவும் அடுத்த ஆச்சரியம். பிளாங்க் போட்ட கணக்கு எல்லாமே சரி என்று பரிசோதனைகளில் தெரிய வந்தது. ஒளித் துகளுக்கு போட்டோன் (photon) என்று பேர் வைக்கப் பட்டது. இந்த அனுமானத்தோடு அடுத்த கட்டங்களுக்குத் தாவியவர்களின் பட்டியலை நூலாசிரியர் போட்டுக் கொண்டே போகிறார்.

இனி வருவது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

நியூட்டன் வேகம் பற்றி சொன்னார். வேகம் என்றால் என்ன? ஒரு பொருளின் வேகத்தை இன்னொரு பொருளின் வேகத்தோடு ஒப்பிட்டுத் தான் நிர்ணயிக்க முடியும். ஆகவே ஏதாவதொன்று நிலையாய் இருக்க வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட, மாறாத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் மற்றதன் வேகத்தை அளக்க முடியும்.

இப்படிப் பார்த்தால் நியூட்டன் சொன்னபடி வெளி என்பது எங்கும் அசையாமல் ஒரே மாதிரி இருக்கவேண்டும். நேரம் என்பது வெளி எங்கும் ஒரே மாதிரி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே எந்த ஒரு கோளமும் எந்த இடத்தில் இருக்கிறது, அதன் வேகம் என்ன என்பதைக் கணித்துவிடலாம்.

ஆனால் மாக்ஸ்வெல், மின் காந்த வீச்சு தான் (வெளி எங்கும் பரவி) கோளங்களின் அசைவுக்குக் காரணம் என்கிறாரே.

இரண்டு கோட்பாடுகளும் குழப்பங்களை அல்லவா உண்டு பண்ணுகின்றன? ஐன்ஸ்டைன் அய்யாவைக் குடைந்த கேள்விகள் இவை.

எல்லார் ஆய்வுகளையும் கையில் எடுத்தார் அவர். இந்த நேரம், போய்விட்ட நேரம், இனி வரப் போகும் நேரம் என்று எதுவும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தார். (நேரம் பற்றி தனிக்கட்டுரை இதே தளத்தில் காலதேவன் கதை என்கிற தலைப்பில் இருக்கிறது. நேரம் இருந்தால் வாசிக்கலாம்.)

ஐன்ஸ்டைனின் அதிரடி முடிவு இயற்பியல் உலகையே ஒரு கலக்கு கலக்கியது. பொருள்களும் (matter) சக்தியும் (energy) ஒன்றே. இரண்டும் ஒரே படிமத்தின் இரு தன்மைகள் என்றார் அவர்.

அவர் இன்னும் ஒரு படி மேலே போய்க் கேட்டார் : ஒளி என்பது மின் காந்த வீச்சு என்றால் வெளி என்பது ஏன் கோளங்களின் ஈர்ப்பு வீச்சாக (gravitational field) இருக்கக் கூடாது?

அவரே பதிலும் சொன்னார் : வெளி என்பதும் நேரம் என்பதும் வேறு வேறல்ல. ஒரே படிமத்தின் இரு தன்மைகள் என்றார். அய்யா இயற்பியலில் டாப். மறு பேச்சில்லை. இருந்தாலும் கணக்கில் வீக். ஆகவே பல கணித மேதைகளிடம் பாடம் கேட்டார். முடியவில்லை. கடைசியில் தன் சொந்த முயற்சியில் கணித சமன்பாடுகள் மூலம் அவரின் கொள்கையை நிரூபித்தார்.

(இரண்டாவது கேள்வி : அந்த குட்டிப் பெண் பார்பரா (9 வயசு) ஐன்ஸ்டைனுக்கு என்ன கடிதம் எழுதினாள்?)

ஐன்ஸ்டைனின் கொள்கைப்படி (சார்புநிலைக் கோட்பாடு – General Theory Of Relativity), எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றனவோ அங்கே வெளி/நேரம் (spacetime) வளைகிறது.

இன்னும் அவரின் கணித சமன்பாடுகளில் இருந்து கிடைத்த சில முடிவுகள் : சூரியனின் ஈர்ப்பு சக்தி ஒளியை வளைக்கிறது. (நட்சத்திரங்களும் அப்படியே.) ஈர்ப்பு சக்தியின் விளைவால் வெளி வளைந்து ஒரு கோளம் போல் வடிவெடுக்கிறது. ஈர்ப்பு சக்தியின் அதி தீவிரத்தன்மையில் வெளி சுருங்கிப் போய் கருந்துளைகள் (Black Holes) உருவாகின்றன.

அவரின் சமன்பாடுகளின்படி நேரம் என்பது முன்னாலும் போகலாம். பின்னாலும் போகலாம். சுட்டிக் காட்டினார்கள்.(அது அவருக்குப் பிடிக்கவில்லை.) பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது.(இதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை.) பிறகு முடிவை மாற்றிக் கொண்டார்.

(ஏன் ஐன்ஸ்டைன் தன் முடிவை மாற்றிக் கொள்ள நேர்ந்தது? அதன் பின்புலமாய் இருந்த கிறிஸ்தவ துறவி ஜார்ஜ் லுமைத்ரே (George Lemaitre) யார்? தவிர, வானவியல் ஆய்வாளர்கள் என்ன சொன்னார்கள்? – இது மூன்றாவது கேள்வி.)

தானியங்கள் போல அணுக்கள் பிரபஞ்சம் முழுதும் பரவி இருக்கின்றன என்றார் டெமோ. ஐன்ஸ்டைனும் துகள்கள் என்று துவங்குகிறார். ஆனால் பிரபஞ்சம் பிரம்மாண்டமாய் இருந்தாலும் எல்லை உண்டு என்று முடிக்கிறார்.

டெமோவின் காலத்தில் அறிவியல் இன்று போல் வளர்ந்திருக்கவில்லை. சோதனைகள் செய்து பார்க்க கருவிகள் இருக்கவில்லை. கணிதம் போதாது. ஆனா ஆவன்னா என்று இயற்பியல் அரிச்சுவடி படிக்க ஆரம்பித்திருந்த காலம். இத்தனைக்கும் தன்னந்தனி ஆளாய் இப்படி யோசிச்சிருக்காரே. டெமோன்னா டெமோ தான் – நூலாசிரியர் உருகுகிறார்.

ஒளியில் இயற்பியல்

ஒளிக்கும் (போட்டோனுக்கும்) அணுவுக்கும் என்ன தொடர்பு? அணுக்கருவை சுற்றி வரும் எலெக்ட்ரான்கள் கிட்டத்தட்ட சூரியனை சுற்றி வரும் கோளங்கள் போல் இயங்குகின்றன என்கிற கோட்பாடு அன்றைய நாளில் இயற்பியலாளர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப் பட்டது.

காரணம் : அன்றைய மேதைகள் நீல்ஸ் போர் (Niels Bohr), வேர்னேர் ஹைசன்பர்க் (Werner Heisenberg) தவிர, இன்னும் பல மேதைகள் சேர்ந்து உருவாக்கிய கோட்பாட்டு முடிவுகளும் பரிசோதனை முடிவுகளும் ஒரே புள்ளியில் சந்தித்தன. (சரி என்று சொல்ல வைத்தன.)

நீல்ஸ் போர் சொன்னார்: எலெக்ட்ரான்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சில சுற்றுகளில் தான் சுழல்கின்றன. (இடையில் என்று எதுவும் இல்லை.) பொதுவாய், எலெக்ட்ரான் என்பது ஆண்டவனே என்று அமைதியாய் அது பாட்டுக்கு ஒடிக் கொண்டிருக்கும். இந்த நிலைக்கு Ground State என்று இயற்பியலில் பேர்.

நம்மிடம் நாலு காசு சேர்ந்துவிட்டால் என்னா குதி குதிக்கிறோம்! எலெக்ட்ரானும் அப்படியே. போட்டோன் (ஒளித் துகள்) தற்செயலாய் கிட்டே வந்தால் பாய்ந்து கவ்விக் கொள்கிறது. போட்டோன் சக்தி கொண்ட துகள் என்று தெரிந்ததே. ஆகவே எலெக்ட்ரானும் கூடுதல் சக்தி கொண்டு ஆர்ப்பரிக்கிறது.

காசு வந்து விட்டால் பழைய டப்பா வீட்டிலா இருப்போம்? பணக்கார ஏரியாவுக்குள் வீடு வாங்கி அட்டகாசம் பண்ணுவோம் இல்லையா? எலெக்ட்ரானும் அதே மாதிரி மேலேறி சக்தி மிக்க ஒரு சுழல் பாதைக்குள் வந்து கம்பீரமாக சுற்றுகிறது. (Excited State)

ஏதாவது கலாட்டாவில் போட்டோன் கைவிட்டுப் போனால் என்ன நடக்கும்? எலெக்ட்ரான் பழையபடி டப்பா வீட்டுக்கு (Ground State) வந்து விடுகிறது. இப்படிப் போவதும் வருவதுமாய் அது இருக்கிறது.

போட்டோனைப் பார்க்கலாம். எலெக்ட்ரான் என்றால் என்ன? யாரும் அதைக் கண்ணால் கண்டதில்லையே. எதை வைத்து சொல்கிறார்கள்?

இந்த இடத்தில் வேர்னேர் ஹைசன்பர்க் வருகிறார். ஜெர்மன் இயற்பியலாளர். தனிப் பிறவி. அடிக்கடி டென்மார்க் போய் நீல்ஸ் போரை சந்தித்தவர். விவாதித்தவர். இவரின் நிச்சயமற்ற தன்மைக் கோட்பாடு (Uncertainty Principle) உலகப் புகழ் பெற்றது. அதை இப்படி எளிமையாக சொல்லலாமா?

ஒரு சமயத்தில் ஒரே ஒரு தகவலைத் தான் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதர்களாகிய நமக்கு இல்லை.

எடுத்துக் காட்டாய், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஓர் அணுத் துகள் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிக்கலாம் அல்லது அந்த நேரத்தில் அதன் வேகம் என்ன என்று கணிக்கலாம். இரண்டில் ஒன்று தான் முடியும். இரண்டையும் (இடமும் வேகமும்) ஒரு சேரக் கண்டு பிடிக்கவே முடியாது. சாத்தியமே இல்லை. (பரிசோதனைகள் இதை மெய்ப்பிக்கின்றன.)

இதை ஹைசன்பர்க் சொன்ன விதமே அலாதி. அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இதன் பின்னணி என்கிறார் நூலாசிரியர்.

ஹைசன்பர்க் ஒரு தடவை டென்மார்க்கில், இரவு வேளையில் ஒரு பூங்காவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். இருட்டில், தூரத்தில் யாரோ ஒருவர் போவது தெரிகிறது. எங்கே விளக்குக் கம்பம் இருக்கிறதோ அப்போது மட்டும் அவர் உருவம் தெரிகிறது. அந்த உருவம் விளக்கைத் தாண்டியதும் இருளில் மறைந்து விடுகிறது. மீண்டும் இன்னொரு விளக்குக் கம்பம் வரும் வரை அந்த உருவம் தெரியவே இல்லை.

எலெக்ட்ரானும் அப்படியே என்றார் ஹைசன்பர்க். இன்னொரு பொருளோடு தொடர்பு கொள்ளும்போது மட்டுமே அது உருவாகிறது. தொடர்பு அறுந்து விட்டால் மறைந்து விடுகிறது. அங்கே எலெக்ட்ரான் என்பதே இல்லை. மீண்டும் இன்னொரு தொடர்பு நேரும் வரை எலெக்ட்ரான் என்பதே இயற்கையில் இல்லை!

இது குவாண்டம் கொள்கையின் அடிப்படை. அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்போது தான் தோன்றுகின்றன. நூலாசிரியர் தன் கருத்தை (Loop Theory) இந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறார்.

டெமோக்ரீட்டஸ் சொன்ன சின்னஞ் சிறிய துகள்களால் ஆன பிரபஞ்சம் என்று துவங்கி, மின்காந்த வீச்சுக்கு வந்து ஐன்ஸ்டைனின் ஈர்ப்பு வீச்சில் புகுந்து, பிறகு குவாண்டம் வீச்சு என்று தொடர்கிறார் அவர்.

பிரபஞ்சம் என்பது பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டம் தான். ஆனால் ஐன்ஸ்டைன் சொன்னது போல் அதற்கு எல்லை உண்டு என்கிறார் அவர். Loop Theory அல்லது Loop Quantum Gravity என்கிற இந்தக் கொள்கையின் அடிப்படையான நான்கு கட்டங்களை நோக்கி இனி நகர்கிறோம்.

1 : தகவல்களுக்கு (information) எல்லை உண்டு. (பிரபஞ்சம் தகவல்களால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.) நாம் காணும் உலகம் எண்ணில் அடங்காத சாத்தியக் கூறுகளாகத் (infinite probabilities) தென்பட்டாலும் அவைகளின் அடித்தளப் பண்பு நிலைகள் எத்தனை என்று எண்ணி விடலாம். இவை குவாண்டம் பண்பு நிலைகள் (quantum states).

2 : நிச்சயமற்ற தன்மை : குவாண்டம் பண்பு நிலைகள் என்பவை உறுதியாக எதையுமே அறுதியிட்டு சொல்ல முடியாதவை.

3 : உண்மை நிலவரம் என்று எதுவும் இல்லை. குவாண்டம் பண்பு நிலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் ஏற்படும் பொருளோ, நிகழ்வோ எதுவோ எல்லாமே ஒரு சலனம். உண்மை என்பதே ஒரு சார்பு நிலை அல்லது ஒரு தொடர்பு நிலை. தொடர்பு அறுந்து விட்டால் உண்மையாவது பொய்யாவது!

4 : குவாண்டம் உலகில் வெளியும் நேரமும் என்கிற நிலைக்கு வருகிறோம். ஐன்ஸ்டைனின் கோட்பாட்டின்படி வெளியும் நேரமும் ஒன்றே என்கிற முடிவை இயற்பியல் எப்போதோ ஏற்றுக் கொண்டுவிட்டது.

அப்படி என்றால் குவாண்டம் உலகிலும் அப்படி இருக்கக் கூடாதா என்ன (quantum spacetime)? தவிர, அந்த உலகில் குவாண்டம் ஈர்ப்பு விசையும் (quantum gravity) ஒரு அங்கமாய் இருக்க வேண்டுமே?

குவாண்டாவா? ஈர்ப்பு விசையா? இன்றைய இயற்பியலாளர்கள் ஆளுக்காள் மோதிக்கொள்ளும் கோதா இது தான்.

நூலாசிரியர் மாட்வெய் ப்ரான்ட்ஸ்டைன் (Matvei Bronstein) என்கிற இளவயது ரஷ்ய இயற்பியலாளரை மிகவும் வாஞ்சையோடு குறிப்பிடுகிறார். காரணம் : அவரின் மேதைமை. ப்ரான்ட்ஸ்டைன் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்வி : மிக மிக சின்ன ஒரு புள்ளி அளவு பரிமாணத்தைப் பார்க்கிறேன் என்றால் என்ன நடக்கும்?

அது அணுவின் எலெக்ட்ரான் ஆகத்தான் இருக்க முடியும். யாராவது கூர்ந்து நோக்க, நோக்க அது இன்னும் அதி வேகத்தோடு பாய்ந்து தப்பிவிட நினைக்கும். (குவாண்டம் உலகின் ஒரு வினோத நிகழ்வு இது. எலெக்ட்ரான் என்பது தன்னை யாராவது பார்க்கிறார்கள் என்று தெரிந்தால் தன் பண்புகளையே மாற்றிக் கொள்கிறது. ஏன் அப்படி? யாருக்கும் தெரியாது. இது சோதனைகள் மூலம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.)

ஐன்ஸ்டைனின் கோட்பாட்டின்படி வேகம் அதிகரிக்கும்போது சக்தியும் கூடுகிறது. சக்தி பெருகப் பெருக அது வெளியை வளைக்கிறது. இன்னும் பிரமாண்டமாய்ப் பெருகினால் வெளி வளைந்து வளைந்து ஒரு புள்ளியாய் மாறுகிறது. ஒரு கருந்துளை உருவாகிறது.

ஆகவே வெளி என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. அந்த வரம்பைத் தாண்டினால் வெளி இருக்காது. கருந்துளையின் ஆரம்பம் அது. கருந்துளையின் உள்ளே எதுவுமே இல்லை. வெளி, சக்தி, ஒளி, இடம் , காலம், பொருள் எதுவுமே இல்லை. எனவே வெளி என்பதன் வரம்பு எதுவாக இருக்கும்?

ப்ரான்ட்ஸ்டைன் அந்த எல்லையைக் கணித்தார் என்பது முக்கிய செய்தி. ஆகவே ஒரு எலெக்ட்ரான் எவ்வளவு தான் சக்தி கொண்டு அணுவின் கருவுக்குள் நுழைய முயன்றாலும் அந்த வரம்பு எல்லையை நெருங்கும்போது அணுக்கரு அதை முழு வீச்சுடன் எகிறித் தள்ளிவிடுகிறது.

அணுக்கருவில் இருக்கும் ப்ரோட்டான்கள் (protons) நேர்மறை மின்னேற்றம் (positive charge) கொண்டவை. எலெக்ட்ரான்களோ எதிர்மறை மின்னேற்றம் (negative charge) கொண்டவை. இரண்டும் ஒன்றை ஒன்று கவரும் தன்மைகள் கொண்டவை. நாம் அறிந்த விஷயம் இது.

ஏன் எலெக்ட்ரான்கள் அணுக்கருவை சுற்றிக் கொண்டே இருக்கவேண்டும்? ஒரு கட்டத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து மின்னேற்றங்களை இழந்து ஓர் நியூட்ரான் அணுவாக ஆகிப் போகாமல் ஏன் சுழன்றுகொண்டே இருக்கின்றன?

இயற்கை போட்டு வைத்திருக்கும் இந்த வேலி தான் எலக்ட்ரான்களை சுழன்று கொண்டே இருக்க வைக்கின்றன. ப்ரோட்டான்களை அப்படியே இருக்க விட்டு வைத்திருக்கின்றன. அணுக்களால் ஆன இந்தப் பிரபஞ்சத்தை அப்படியே விட்டு வைத்திருக்கின்றன.

இல்லாவிட்டால் பிரபஞ்சம் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். பூமி இருந்திருக்காது. நிலவு இருந்திருக்காது. பூக்கள் மலர்ந்திருக்காது. நாமும் இருந்திருக்க மாட்டோம்.

(அடுத்த கட்டம் போகும் முன்னே நாலாவது கேள்வி : ப்ரான்ட்ஸ்டைனை சுட்டுக் கொல்லும்படி அன்றைய ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஏன் உத்தரவு போட்டார்?)

குவாண்டம் உலகின் இயற்பியல்

ஐன்ஸ்டைனின் சார்புநிலைக் கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் சிறு துகள்களால் ஆனது. Loop Theory சொல்வதும் அது தான். அதாவது அணுக்கருக்களின் கூட்டம் (அல்லது திரள்) தான் வெளி என்பதை உருவாக்குகின்றன.

மின்காந்த சக்தித் துகள்களை (குவாண்டா போட்டோன்கள்) என்கிறோம். அது போல ஈர்ப்பு சக்தித் துகள்கள் (குவாண்டா ஈர்ப்பு) இந்த அணுக்கருக்களாய் இருக்கின்றன. இவை அருகருகே அமைந்திருக்கின்றன. இவைகளின் தொடர்பால் அல்லது எதிர்வினைகளால் பிரபஞ்சம் தோன்றுகிறது.

பிரபஞ்சத்தின் நிகழ்வுகளை நேரம் அல்லது காலம் என்று அளவிடுகிறோம். இது பேதைமை என்கிறது இயற்பியல்.

ஹைசன்பெர்க் சொன்ன உருவம் + விளக்குக் கம்பம் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நாம் முதலில் ஒரு உருவத்தைக் காண்கிறோம். பிறகு இரண்டாம் தடவை காண்கிறோம். நடுவில் நடந்தவை என்ன? முதல் காட்சிக்கும் இரண்டாவது காட்சிக்கும் இடையில் நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கற்பனை செய்து ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொன்றாய் கூட்டல் கணக்குப் போடுகிறோம். இதை நேரம் என்று சொல்லிக் கொள்கிறோம். இது ஒரு மயக்கம்.

இந்த உலகம் என்பது குவாண்டம் வீச்சுகளால் ஆனது. இது வெளி/நேரம் என்கிற பரிமாணத்தில் அடங்கியதல்ல. ஒவ்வொன்றும் தனித் தனியானவை. தனித் தன்மை கொண்டவை. அதே சமயம் இந்தப் புலங்கள் ஒன்றின் மேல் ஒன்றாய்ப் படர்ந்திருக்கின்றன. வீச்சுகளின் மேல் தவழும் வீச்சுகள்.

குவாண்டம் ஈர்ப்பு வீச்சுகளின் அளவு பிரம்மாண்டமாய்ப் பெருகிக் காட்சியளிப்பதால் நம்முடைய ஐந்து புலன்களால் எது, என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போது நம் மூளை எல்லாவற்றையும் தோராயமாய் ஒரு கணக்குப் போடுகிறது. அதாவது ஒரு சராசரி நிலைப்பாட்டை எடுக்கிறது.

ஆங்! அப்டியா? பதட்டம் இல்லாத ஒரு மனோநிலைக்கு வந்து சேர்கிறோம். நிகழ்வுகளை சர்வசாதாரணமாய் எடுத்துக் கொள்கிறோம். ஆகவே கண்ணில் காணும் காட்சிகள் யாவும் வெறும் தோராயமான சராசரி ஊகங்களே தவிர வேறு ஏதும் இல்லை.

இப்படி தனித் தனியாய் சுதந்திரமாய் இயங்கும் ஆனால் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் குவாண்டம் பண்புகளின் வீச்சை Covariant Quantum Fields என்று அழைக்கிறார் நூலாசிரியர்.

பேரண்ட வெடிப்பின் பின்னே இயற்பியல்

குவாண்டம் என்கிற சின்னஞ் சிறிய நுண்ணிய உலகத்தில் இருந்து பேரண்டத்தின் நிலைக்கு அடுத்து வருகிறோம். Big Bang என்று இயற்பியலில் சொல்லப்படும் இந்தப் பிரபஞ்சத்தின் துவக்கம் எப்படி நிகழ்ந்திருக்கும்?

முன்பு சொன்னது போல் எலெக்ட்ரான் அணுக்கருவுக்குள் நுழைந்து விட முடியாதபடி இயற்கை வழிவகை செய்திருக்கிறது. எலெக்ட்ரான் குவாண்டம் பண்புகள் கொண்டது. அது எந்தப் பாதையில் நகரும் என்று சொல்லவே முடியாது.

அது அணுக்கருவுக்குள் புகுந்து விட எத்துணை சக்தி கொண்டு முயல்கிறதோ அதை விட அதிக சக்தி மூலம் அது வெளியே தள்ளப் படுகிறது. அதாவது அணுவின் கன பரிமாணம் அதிகரிக்கிறது. வெளி விரிவடைகிறது.

பேரண்ட வெடிப்பின் பின்னர் பிரபஞ்சம் விரிவடைகிறது என்று நிரூபித்தாயிற்று. எலெக்ட்ரானின் விரிவடையும் தன்மையை இதோடு ஒப்பிட்டால் என்ன? புதிய கோணத்தில் பார்க்கிறார் நூலாசிரியர்.

குவாண்டம் இயக்க விதிகளின் படி ஒரு எலெக்ட்ரான் அணுக்கருவை நெருங்க நெருங்க, அது துகள் என்கிற நிலையில் இருந்து மாற்றம் அடைகிறது. அங்கே சாத்தியக் கூறுகள் (probabilities – நிகழ்தகவுகள்) மட்டுமே இருக்கின்றன. இந்த சாத்தியக் கூறுகளின் கூட்டத்தை ஒரு மேகம் போல் நினைத்துக் கொள்ளலாம்.

ஆகவே முன்னைய பிரபஞ்சம் துவக்கத்தில் சுருங்க ஆரம்பித்த பிரபஞ்சம். இன்னும் சொல்லப் போனால் குவாண்டம் பண்புகளின் ஊடாக நிலை மாற்றங்கள் அடைந்து (அங்கே வெளி, நேரம் என்று எதுவும் இருந்திருக்காது. இருந்தால் அவை வெறும் சாத்தியக் கூறுகள் மட்டுமே – நிச்சயமற்ற நிலை.) சுருங்கிக் கொண்டே போயிருக்க வேண்டும் .

எலெக்ட்ரானின் வரம்பு போல் முன்னைய பிரபஞ்சம் ஓர் நெருக்கடி நிலையை (critical state) எட்டிய அந்தக் கணத்தில் இருந்து (Big Bang Moment) பிரபஞ்சம் விரிவடைய ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தன் கருத்தை முன் வைக்கிறார் அவர்.

அவரின் வாதத்துக்கு சான்றுகள் உண்டா? நூலாசிரியரே கேட்டுக் கொள்கிறார். பதிலும் வருகிறது. ஏன் உள்ளுணர்வு இருக்கக் கூடாதா?

கோபர்நிக்கஸ், மற்றும் நியூட்டன் துவங்கி ஐன்ஸ்டைன் வரை அவர்களின் கோட்பாடுகள் சரி என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தார்களா?

கருந்துளைகள் பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. தெரிந்ததே. நூலாசிரியரின் அடுத்த ஊகம் : குவாண்டம் உலகில் கூட கருந்துளைகள் இருக்கலாமே.

இனி அவர் String Theory ஆதரவாளர்களை ஒரு பிடி பிடிக்க ஆரம்பிக்கிறார். அறிவியலாளர்கள் எப்போதும் ஒரே மாதிரி யோசிப்பதில்லை. எதிர் எதிரான சிந்தனைகளின் மோதல்களால் தான் அறிவியலே வளர்கிறது. இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

(ஆறாவது கேள்வி : நூலாசிரியர் ஏன் String Theory கோட்பாட்டில் தவறுகள் இருக்கின்றன என்கிறார்?)

கேள்விகள் இன்னும் இருக்கின்றன. நூலாசிரியர், கார்லோ ராவெல்லிக்கு பிரபலம் தந்த நூல் இது அல்ல. அவரின் இரண்டாவது புத்தகமான Seven Brief Lessons on Physics வெளிவந்தது தான் தாமதம், பிரபலங்களின் வரிசையில் அவரும் வந்துவிட்டார். அதை 41 மொழிகளில் மொழி பெயர்த்திருப்பது இன்னோர் தகவல்.

கொஞ்ச நாள் முன்பு கடவுளின் துகளைக் (Higgs particle) கண்டுபிடித்து விட்டார்கள். ஆகா ஓகோ என்று பத்திரிகைக்காரர்கள் ஆடியதைக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார் அவர். இது String Theory கட்சி இயற்பியலாளர்கள் மிகைப்படுத்தி அறிவித்த விஷயம். இயற்பியலில் கடவுள் எங்கிருந்தய்யா வந்தார்? கேட்கிறார் அவர்.

அடுத்த தொடரில் இந்த எதிர்க்கட்சி ஆட்களின் கருத்துக்களையும் எழுத இருக்கிறேன். பிறகு இரண்டையும் ஒப்பீடு செய்து அதற்கடுத்த தொடரில் எழுத யோசனை இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் நூலில் இருக்கிறது. அது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ சுவை நிரம்பிய சம்பவங்களையும் அங்கங்கே தொட்டுக் கொண்டே செல்கிறார் அவர். நூல் பற்றி மூன்றே மூன்று சொற்களில் சொல்லி முடிக்கட்டுமா?

சிந்திக்க வைக்கிறார் கார்லோ.

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்

நாம் எல்லாருமே ஒரு விதமான பைத்தியங்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் ஒத்துக் கொள்ள மாட்டோம் – ஒரு சிலரைத் தவிர. என் நாடு, என் மொழி, என் மதம், என் கொடி தான் உலகிலேயே உயர்ந்தது என்கிறோம். எவனாவது கை வச்சான்னா பிச்சிருவேன் பிச்சி!

சிலர் ஷேர்ட்டை மடித்தபடி கையைத் தூக்குகிறார்கள். மற்ற நாட்டுக்காரர்கள், வேறு மொழி பேசுவோர், வேற்று மதத்தவர்கள் எல்லாரும் உங்கள் மாதிரியே சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்களே? இதைக் கேட்டதும் வீராப்பு குறைந்து விடுகிறது. ஆங், அதுவா? அது நார்மல் சார் என்று நழுவுகிறார்கள்.

நார்மல் பைத்தியங்கள்?

வன்முறையில் இறங்குவதற்கு நாம் எப்போதுமே தயாராகவே இருக்கிறோம். பிறகு ஜகா வாங்கி, சமாதானக் கொடி காட்டுகிறோம். வன்முறை நம்மோடு கூடவே பிறக்கிறதா? அல்லது சமூகம் சொல்லித் தருகிறதா?

கண்ணுக்குக் கண். பழிக்குப் பழி. இதை நாம் இன்று நேற்றல்ல, மில்லியன்கள் ஆண்டுகள் முன்னேயே துவங்கி விட்டோம் என்கிறார்கள் மானிடவியல் ஆய்வாளர்களில் ஒரு குழுவினர். வன்முறையில் இருந்து தான் மனிதனின் ஆரம்பமே துவங்குகிறது என்பது இவர்கள் வாதம்.

இல்லை. தற்காப்புக்காக, விலங்குகள் மற்றும் எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வழிமுறையாக மட்டுமே மனிதர்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தார்கள். இது இயற்கையிலேயே வந்ததல்ல என்பது எதிரணியின் வாதம்.

Sapiens இணையத்தில் பிரசுரமாகிய Josh Gabbatiss எழுதிய கட்டுரை மற்றும் உளவியலாளர் Anthony Stevens எழுதிய The Roots of War & Terror நூலில் இருந்து சில செய்திகளை இந்தக் கட்டுரையில் தொகுத்திருக்கிறேன்.

முதலில் Josh. ஒரு துண்டிக்கப்பட்ட கையின் தசைநார்களை ஒரு கிட்டார் வாத்தியத்தின் குமிழ்களுடன் இணைத்திருக்கிறார்கள். கையின் மற்றப் பகுதியோடு சில எடைக் கற்கள் கட்டப் பட்டிருக்கின்றன. எடையை மாற்றினால் தசைநார்கள் இறுகுகின்றன. கிட்டார் குமிழ்கள் எடையின் அழுத்தத்துக்கு ஏற்றபடி சுழல்கின்றன.

ஆய்வாளர், David Carrier, அவரின் ஆய்வுகூடத்தில் இந்த சோதனையை மேற்கொள்கிறார். எதற்காக? மனிதனின் கைகள் முஷ்டியாய் இறுகுவது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு அம்சம். வேறெந்த விலங்குகளுக்கும் இந்தக் குணாம்சம் இல்லை. ஆகவே?

வன்முறையின் அடையாளம் மனிதன். வன்முறையை உபயோகிக்கப் பிறந்தவன் மனிதன். வன்முறை இல்லை என்றால் மனிதன் இல்லை என்கிறார் அவர்.

அவரின் சக ஆய்வாளர்கள், மனிதர்களின் முகம், கைகளின் அமைப்பு, இரண்டு கால்களில் நிற்கும் தன்மை எல்லாவற்றையும் தனியாக ஆய்வு செய்து, இவை வன்முறையின் அடித்தளத்தைப் பிரதிபலிக்கின்றன என்கிறார்கள்.

எதிரணி சொல்வதென்ன? மனிதர்களுக்கு வன்முறையில் இறங்கப் போதுமான ஆற்றல் இருக்கிறது. உடலமைப்பு இருக்கிறது. ஆனால் வன்முறைக்கு இவை தான் காரணம் என்று நினைப்பது தவறு என்கிறார் அமெரிக்க மானுடவியலாளர்கள் கழகத் தலைவர், Alisse Waterston.

மனிதன், வன்முறையின் வார்ப்பு என்கிற கருத்து, 1970 களில் இருந்து சமூக உயிரியலாளர்கள் (social biologists) மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதாவது, நம் மரபணுக்கள், நம் உடலின் வடிவமைப்பை மட்டும் சந்ததி சந்ததியாகக் கொண்டு செல்வதில்லை. நம் குணாம்சம்களையும் கூடவே கொண்டு செல்கின்றன. வன்முறை அதில் ஒன்று.

இது புதிதாக முளை விட்டிருக்கும் ஒரு கோட்பாடு. இது உண்மை என்று உறுதி செய்ய ஆய்வுகள் ஒரு பக்கம் நடக்க, அப்படி இருக்க முடியாது என்கிற ஆய்வாளர்களின் ஆய்வுகள் இன்னொரு பக்கம் நடக்கின்றன.

வன்முறை மனிதனின் இயற்கை குணம் என்றால் மனிதர்கள் ஏன் சமாதானம், சமாதானம் என்று வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? போர்களே இல்லாத உலகத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று ஏன் துடிக்கிறார்கள்? முரணாக இல்லை?

அடிதடி மனிதன் குழுவுக்கு ஆதரவாக, பல சமூக உயிரியலாளர்கள் ஆதாரங்கள் காட்டுகிறார்கள். பிரேசில், வெனிசுலா காடுகளில் வாழும் யனோமாமி (Yanomami) பழங்குடியினர் எப்போ பார்த்தாலும் போர் செய்வதையே பெருந் தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

இதில் இருக்கும் அனுகூலம் : எதிராளிக் குழு ஆண்களை அடித்து விரட்டி விட்டால் அல்லது மேலுலகம் அனுப்பி விட்டால், அவர்களின் பெண்களை மனைவிகள் ஆக்கிக் கொள்ளலாம். நிறைய பிள்ளைகள் பிறக்கப் பிறக்க, அந்த சந்ததி, ஜெய் யனோமாமி! கோஷம் போட்டபடி பெருகிக் கொண்டே இருக்குமே.

அமைதி மனிதன் குழுவினர் சும்மா இருப்பார்களா? நீங்கள் ஒரு குழுவைக் காட்டி ஊதிப் பெருக்குகிறீர்கள். நாங்கள் 70 க்கு மேற்பட்ட பழங்குடிகளின் வாழ்க்கை முறையைக் கைவசம் வைத்திருக்கிறோமே.

இந்தப் பழங்குடிகள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டதே இல்லை. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் மார்ட்டு (Martu) மற்றும் மலேசியாவின் செமாய் (Semai) பழங்குடிகளின் மொழிகளில் சண்டை, யுத்தம் என்கிற சொற்களே இல்லை. சண்டை வரும் என்றால் முதல் வேலையாய் காட்டுக்குள் ஒடி ஒளிந்து கொள்கிறார்கள்.

நூதனமாக, தென் ஆபிரிக்காவின் கலஹாரி பகுதியில் வாழும் !குங் (!Kung) பழங்குடிகள் கையை முறுக்கிக் கொண்டு யுத்தத்தில் இறங்குவதில்லை. சிறு ஆயுதங்கள் உபயோகிக்கப் படுகின்றன. எதிரிகளைக் கை கால்களால் அடித்து உதைத்து மல்யுத்த பாணியில் துவம்சம் நடக்கிறது.

மனிதர்கள் சுமார் 12 000 ஆண்டுகள் முன்பு வரை காட்டுமிராண்டிகள் போல் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட யுத்தங்களில் மனித இழப்புகள் 15 வீதம்.

நாகரீகம் அடைந்தபின் ஏற்பட்ட மரணங்கள் சுமார் 3 வீதமே என்கிற ஒரு ஆய்வாளரின் கருத்தை மனிதனின் கொலைவெறிக்கு எடுத்துக் காட்டாய் சுட்டிக் காட்டுகிறார்கள் அடிதடி மனிதன் குழுவினர்.

மரபணு இயலின் சில கொள்கைகளின் படி (அவை உறுதி செய்யப் படவில்லை) போர்களால் கிடைக்கும் த்ரில் மற்றும் பாலியல் அனுபவங்கள், குழு ஆண்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்திருக்கும். இந்த உந்துதல்கள் ஆண்கள் மத்தியில் போட்டி பொறாமைகளை வளர்த்திருக்கும். மூளை ஆய்வுகளின் போது வன்முறைக்குப் பொருத்தமான அமைப்புகள் இருப்பதை நாம் காண முடியும் என்கிறார்கள் இவர்கள்.

David Adams எனும் ஆய்வாளரின் அனுபவம் சுவாரஸ்யமானது. அவர், தன் முடிவுகளைத் தனியாக வெளியிட்டால் பொது மக்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும் என்று இன்னும் 20 அறிவியலாளர்களுடன் சேர்ந்து விவாதித்து ஓர் குழுவின் முடிவாக வெளியிட ஏற்பாடு செய்தார்.

Seville Statement என்கிற அந்த விளக்கம் : சூழல் அமைவதைப் பொறுத்தே மனிதன் வன்முறையை உபயோகிக்கிறான். இயற்கையாகவே அவனிடம் வன்முறை அமைந்திருக்கிறது என்று நிச்சயமாக சொல்லமுடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனெஸ்கோவின் ஆட்கள் இந்த விளக்கத்தை உடனடியாகவே தத்தெடுத்துக் கொண்டார்கள். சமாதானமே எங்கள் நோக்கம், பணி என்று அறிக்கை விட்டார்கள்.

விஷயத்தை ஏற்கெனவே கேள்விப்பட்ட பத்திரிகை நிருபர்கள் அந்த மாநாட்டில் அக்கறை காண்பிக்கவில்லை. ஒரு நிருபர் சொன்னாராம் : போர் செய்யத் தூண்டும் மரபணுவை முதலில் கண்டுபிடியுங்கள். அதற்கு அப்புறம் போன் பண்ணுங்கள். வருகிறோம்.

ரத்தம், அழிவு என்றால் மட்டுமே மனிதர்களுக்கு (ஆண்களுக்கு) ஆர்வம் ஏற்படுகிறது. சமாதானம் என்றால் போரடிக்கிறது.

John Horgan எனும் அறிவியல் எழுத்தாளர், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஓர் புள்ளிவிவர ஆய்வு நடத்தினார். மனிதர்களுக்கு வன்முறையில் நாட்டம் அதிகம் என்றால், நிச்சயம் அரசியல் தலைவர்களும் யுத்த நடவடிக்கைகளில் கூடுதலான கவனம் செலுத்துவார்கள். யுத்தங்களைத் தவிர்க்கவே முடியாது என்றால் 29 வீதமான மாணவர்கள், யுத்தத்துக்கு ஆதரவு தெரிவிப்பதில் என்ன தவறு என்று கேட்டார்கள்.

வன்முறை நம்மிடம் இருந்து துவங்குகிறதோ, இல்லையோ ஒரு கருத்தே யுத்தம் செய்யும் நோக்கத்தை இன்னும் வேகமாகத் தூண்டிவிடக்கூடும் என்பதை இது காட்டுகிறது.

மானிடவியலாளர்கள் அநேகமாக அமைதி குழுவின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். சிம்பான்சிக் குரங்குகள் மனிதர்களை விட, ஒப்பீட்டளவில் மூர்க்கம் கொண்டவை. ஆனால் போனோபோஸ் (bonobos) குரங்குகள், கொரில்லாக்கள் மிகவும் மென்மையான குணங்கள் கொண்டவை. (பெண் தலைமைகளின் பங்கு அதிகம்)

ஆகவே, படிநிலை மாற்றத்தில் மனிதர்கள், போனோபோஸ் குரங்குகள், கொரில்லாக்கள் (மூன்று இனங்களும்) ஒரு பொது உயிரினத்தில் இருந்து தோன்றி இருக்கலாம் என்கிற கருத்தை இவர்கள் சொல்கிறார்கள்.

மனிதன் பயங்கரமான விலங்கு. அவனின் வன்முறையைத் தவிர்க்கவே முடியாது. வன்முறையின் வேர்களைத் தேடும் பணியில் இருக்கிறோம். எதற்காக, ஏன் என்று ஆராய்வதால் வன்முறையைத் தடுக்கும் தீர்வுகளையும் கண்டு பிடிக்கலாமே என்கிறார்கள் அடிதடி மனிதன் குழுவினர்.

உளவியலாளர் Anthony Stevens இதை ஆதரிக்கிறார். அவரின் The Roots of War & Terror நூலின் முக்கிய பக்கங்கள் இனி வருகின்றன.

பிரபல உளவியலாளர் யுங் (Jung) இன் கோட்பாடுகளில் தோய்ந்து போனவர் நூலாசிரியர் ஸ்டீவன்ஸ். ஆகவே, தாராளமாக யுங்ஙின் கருத்துக்களை செம்மைப் படுத்தியபடி தன் சொந்த விளக்கங்களையும் சொல்கிறார்.

மனித வன்முறையின் உச்சக்கட்டம் யுத்தங்கள். அதனால் நன்மைகளும் விளைகின்றன.

மனிதர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனால் உணவுத் தட்டுப்பாடு நிச்சயம் உண்டாகும். தவிர, வாழ்விட நெருக்கடி, சுற்றுச் சூழல் அழிவு, நோய்கள், சமூகப் பிரச்னைகள் என்று பல கண்டங்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. யுத்தங்கள் இந்த நிலையை சமன் செய்ய உதவுகின்றன.

(அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்பங்கள் இந்த அவலங்களை ஓரளவு சரி செய்கின்றன.)

யுத்தம் என்று வரும்போது, சொந்த சச்சரவுகள், புகைச்சல்கள் எல்லாம் மறந்து போய்விடும். பொது எதிரியை வீழ்த்துவது தான் ஒரே நோக்கம். எல்லாரும் பாசமலர்களாய் மாறிவிட சந்தர்ப்பங்கள் உண்டு. காணி சண்டை இருக்காது. கடன் கொடுத்தவர்களும் கடன் வாங்கினவர்களும் மச்சி! மச்சி! என்று உருகக்கூடும். தோளில் கைபோட்டபடி ஊர்வலம் போகக்கூடும்.

அடுத்து, யுத்தம் என்று வரும்போது மனிதர்களின் மூளை பக்காவாய் வேலை செய்யும். புதிய கண்டுபிடிப்புகள், வேலைகள், யோசனைகள் என்று எல்லாருமே பரபரப்பாய் இயங்குவது வழக்கம்.

போர்க்கால கண்டுபிடிப்புகளால் சமாதான காலத்தில் நன்மைகள் விளைந்திருக்கின்றன. ஒரு உதாரணம் : எதிரிகளின் சங்கேத வார்த்தைகளை ஓட்டுக் கேட்டு பிரித்து மேயப் போனதில், அது இன்றைய இணைய செயல்பாட்டுக்கு வழி வகுத்தது.

சில சமயங்களில், யுத்தத்தை இயற்கையே வலிந்து மனிதர்கள் தலையில் சுமத்துகிறது. இனுயிட் (Inuit) என்று இன்று நாம் அழைக்கும் எஸ்கிமோ பழங்குடிகளின் ஒரு பிரிவு அலாஸ்காவில் வாழ, மற்றது கிரீன்லாந்தில் வாழ்கிறது.

கிரீன்லாந்து உலகின் மிகப் பெரிய தீவு. இனுயிட் மக்களின் எண்ணிக்கையோ கம்மி. ஆகவே, எல்லாரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அலாஸ்காவில் நிலைமை தலைகீழ். மக்கள் அடர்த்தியாக வாழ்வதால், அடிக்கடி போர்கள் ஏற்படுகின்றன.

எனக்காகவா நான் உனக்காகவா எனைக் காணவா நெஞ்சில்

பெண்களுக்கும் அதி பராக்கிரம ஆண்களுக்கும் இடையில் ஒரு கவர்ச்சி இருப்பதை நாமறிவோம். காதலும் வீரமும் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகம் முழுவதுமே அது விரிந்து பரந்திருக்கிறது.

உதாரணத்துக்கு, கிரேக்க புராணங்களையும் நமது புராணங்களையும் போட்டு லவ் மேட்டரில் எது உசத்தி என்று பட்டிமன்றம் வைத்தால் இந்த உலகம் உள்ள வரை அந்த சீரியல்களை இழுத்துக் கொண்டு போகலாம்.

இன்னும் இருக்கிறது. யுத்தம் முடிந்து விட்டால் குழந்தைகளின் பிறப்பு வீதம் எட்டாத உயரத்துக்குப் போய்விடுவது எதற்காம்?

யுத்தத்தில், பெண்களின் பங்காக செவிலியரை சிலாகித்துச் சொல்லலாம். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைத் (Florence Nightingale) தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிரிட்டிஷ் படைகள் கிரீமியா யுத்தத்தில் மூழ்கி இருந்தபோது, போர்வீரர்களின் காயம் பட்ட வலிகளை மறக்க உதவியவர்கள் செவிலியர்கள்.

அவர்கள் பக்கத்தில் இல்லாதபோது வலி கூடியதாம். அருகில் இருந்தபோது வலி குறைந்ததாக போர்வீரர்கள் சொன்னார்கள். தவிர, சிப்பாய்களின் காதலிகள், மனைவிகளின் வார்த்தைகளால் உற்சாகம் பீறிட்டுப்போய் போர் செய்ததை அநேகமாய் எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள்.

பெண்கள் போர்களில் பெரிசாய் ஈடுபாடு காட்டுவதில்லை என்று ஒரேயடியாய் நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது. அமைதியாய் இருந்தாலும், தன் குழந்தைகளுக்கு ஆபத்து என்றால் பயங்கரமாய்ப் பாய்ந்து சண்டை போடத் தயங்காதவர்கள் அவர்கள்.

இன்றைய யுத்தங்களில் அவர்களின் சாகசங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன. அரபு நாடுகளில் மற்றும் கிளர்ச்சிப் படைகளில் தற்கொலைப் போராளிகளாக எத்தனையோ பெண்கள் அவர்களின் வீரத்தைக் காட்டவில்லை?

இன்றைய அரச படைகளில் பெண்களும் சேர்கிறார்கள். சேரும்படி அரசுகளே அழைக்கின்றன.

இருந்தும், சில ஜெனரல்கள் பெண்களைப் போர்முனைக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறார்கள். ஒரு எடுத்துக்காட்டு : 1948 களில் நடந்த இஸ்ரேல் – அரபு போரில் இஸ்ரேல் படைகளில் பெண்களும் இருந்தார்கள். ஆனால் போரில் கவனமாய் இருப்பதை விட்டுவிட்டு, சக பெண் சிப்பாய்களுக்கு ஆபத்து வராமல் காப்பதில் தான் ஆண் சிப்பாய்கள் மும்முரமாய் இருந்தார்களாம்.

வன்முறையைப் பெண்கள் ஒதுக்கவில்லை. அவர்களும் பங்காளிகளாகவே இருக்கிறார்கள் – ஆனால், ஆண்கள் போல் எடுத்ததற்கெல்லாம் ஆ! ஊ! என்று பாய்வதில்லை. தேவை என்றால் கோதாவில் இறங்க ரெடி.

காதலுக்கு முன்னுரிமை கொடுத்தால் வன்முறை எண்ணங்கள் குறைந்துவிடும், அமைதி நிலவும் என்று சில ஆய்வாளர்கள் நினைப்பது தப்பு. ஏன் என்றால் வன்முறையும் காதலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

பயணங்கள் முடிவதில்லை

யுங்ஙின் கோட்பாடுகளில் Shadow (உள்மனம்) மற்றும் archetypes (பிம்பங்கள், குறியீடுகள்) முக்கிய பங்கு வகிக்கின்றன.

Ego என்பது நாம் அறிந்த மனதின் பகுதி. மனதில் நாம் தெரிந்து கொள்ள முடியாத ஒரு அங்கம் உண்டு என்றால் அதை நிழல் மனம் (Shadow) என்று அழைக்கிறார் யுங்.

சில எண்ணங்களை நாம் வெளியே சொல்ல விரும்புவதில்லை. வக்கிர நினைவுகள், நோக்கங்கள், இச்சைகள் … என்று ஒரு பட்டியலே போடலாம். இவை நிழல் மனதில் உள்ள எதிர்மறையான அம்சங்கள்.

நேர்மறையான உணர்ச்சிகளும் அதே நிழல் மனசுக்குள் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நம் தாழ்வு மனப்பான்மை, தடுமாற்றங்கள், முட்டாள்தனமான நம்பிக்கைகள் என்று பல ரகசியங்கள் கூடவே அங்கே மறைந்திருக்கின்றன.

ஒரு தனி மனிதனின் சொந்த அனுபவங்கள் (குழந்தைப் பருவத்தில் இருந்து) இந்த நிழல் மனதைக் கட்டமைக்கின்றன. இது பல அடுக்குகளாக அமைந்திருக்கிறது. சமூகத்தோடு, சூழ்நிலைகளோடு கிடைக்கும் உடனடி அனுபவங்கள், நமது எதிர்வினைகள் எல்லாம் மேலிருக்கும் அடுக்குகளில் படிகின்றன.

புதிய அனுபவங்கள், எதிர்வினைகள் மேல் மட்டத்தில் படியப் படிய, பழையவை கீழே தள்ளப் படுகின்றன. சில தானாக மறையலாம். சில விஷயங்களை நாமே வலிந்து உள்ளே அமுக்கி விடுகிறோம்.

இந்த அடுக்குகளின் அடியில் அலைகள் (?) போல் அமைந்திருப்பவை archetypes (பிம்பங்கள், குறியீடுகள்). நமது அனுபவங்களின் எதிர்வினையாக இவை உருவாகின்றன. பல அவதாரங்கள் எடுக்கக் கூடியவை.

தாய்மை உணர்வு, குழந்தைக்குத் தாயின் மேல் ஏற்படும் பாசம், அன்பு, கருணை, கபடம், வன்முறையைத் தூண்டும் குணம் .. நல்லது, கெட்டது என்று எல்லா உணர்வுகளும் மனம் என்னும் திரையில் பிம்பங்கள், குறியீடுகளாய்த் தோன்றுகின்றன. மொழி இல்லை. கிட்டத்தட்ட பேசாத படம் போல் ஓடுகின்றன.

மில்லியன் ஆண்டுகள் முன்பு, நாம் விலங்கினங்களில் இருந்து எப்படி படிப்படியாக மாற்றம் அடைய ஆரம்பித்தோமோ அப்போதிருந்து இந்தத் தன்மைகள் நம்மோடு பயணம் செய்கின்றன.

அழுகிறோம். சிரிக்கிறோம். உருகுகிறோம். உதவுகிறோம். ஏமாற்றுகிறோம். கொலை செய்கிறோம். எல்லாம் archetypes செயல். நம் கையில் எதுவும் இல்லை.

அமைதி நிலவும் காலங்களில் நிர்வாகம், பொருளியல் நடவடிக்கைகள், அரசியல் நடப்புகளை முன்னெடுக்க நேர்மறை archetypes இருக்க,

யுத்தங்கள், குற்றச் செயல்கள், அழிவுகள், அநியாயங்களை நடத்திக் காட்ட எதிர்மறை archetypes இருக்கின்றன.

சூழலுக்கு ஏற்றது போல் விழித்துக் கொள்கின்றன அல்லது மீண்டும் தூங்கப் போய்விடுகின்றன இவை. நல்லது கெட்டது என்று எந்தப் பிரிவிலும் சேராத தன்மைகள் இவை என்று அவருடைய கோட்பாட்டை முன் வைக்கிறார் யுங்.

நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்

மனிதர்களுக்குத் தொடர்ந்து அமைதி சூழலில் (relaxed state) வாழ்ந்தாலும் பிடிக்காது. தொடர்ந்து போர் சூழலில் (mobilized state) சுட்டுத் தள்ளிக் கொண்டே இருந்தாலும் பிடிக்காது.

அமைதி காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் மும்முரமாய் இருக்கும். கன்னா பின்னா என்று காதல் பாடல்கள் கேட்கும். இடைவேளைகளில் மெய் வல்லுநர் போட்டிகள். கணனிகளில் கேம்ஸ் அல்லது மீம்ஸ். கிட்டே போனால் உஸ்ஸ்!

யுத்தம் செய்வோம் வாருங்கள் என்றால் இந்தக் காலத்தில் எவன் வருவான்? இதற்காக, அரசியல்வாதிகள், ஜெனரல்கள் பெரும் திட்டங்கள், தந்திரங்கள், மந்திரங்கள் (ஊடகங்களில் பரப்புரைகள்) என்று பல பரிமாணங்களில் ஊடுருவி வேலைகள் செய்கிறார்கள்.

எப்படி சாத்தியமாகிறது? மூன்று மட்டங்களில் இது நடைபெறுகிறது என்கிறார் நூலாசிரியர் ஸ்டீவன்ஸ்.

முதலாவதாக, அவர்கள் (எதிரிகள்) வேறு நாம் வேறு என்கிற உணர்வைத் தூண்ட வேண்டும். நமக்குள் இருக்கும் எதிரி archetypes களை உசுப்பி எதிரிக் குழுவின் மேல் படியச் செய்ய வேண்டும் (யுங்ஙின் கருத்தியல்). எதிரிகள் மனிதப் பிறவிகளே அல்ல. ஈனப் பிறவிகள் என்கிற கருத்தாடல் அவசியம். மேனி நிறம், வேற்று இனம், மொழி, மதம் இன்னும் வசதி.

1998 களில் ஒரு ராணுவ அதிகாரியின் குறிப்பில் இருந்து : அமெரிக்க துருப்புகள் பசிபிக் பிராந்தியத்தில் நடந்த போரில் ஒரே ஒரு ஜப்பானிய போர்வீரனைத் தவிர, மற்ற எல்லாரையும் கொன்றுவிட்டு அவனை ஓடச் சொன்னார்கள். அவன் தன் உயிருக்காகப் பட்ட அவலங்களை அணு அணுவாய் ரசித்து சிரித்தார்கள். போதும் இனி என்று அவர்கள் நினைத்த போது …

இரண்டாவது வகை archetypes எப்போதுமே அதிகாரத்தை அடைந்து விட வேண்டும். எல்லாமே எனக்கு அடங்கி இருக்கவேண்டும் என்கிற வேட்கை கொண்டவை.

இதற்காக, பிரமிட் போன்ற சமூகத்தின் அடுக்குகளை இன்னும் அதிகமாய் வலுவாக்க வேண்டும். எந்தக் கேள்வியும் கேட்காதே. சொன்னதை செய். கீழ்ப்படிந்து நட. இப்படி குணாம்சங்களை ஊக்குவிக்க வேண்டும்.

1974 களில் ஆய்வாளர் Stanley Milgram நடத்திய ஆய்வு : ஒருவர் ஆசிரியர் வேலை பார்ப்பார். கடுமையாகத் தண்டனை தரும் ஆசிரியர். அவர் முன்னால் ஒரு மின்சார அதிர்ச்சி கொடுக்கும் நாற்காலி இருக்கிறது. மாணவர்கள் ஒவ்வொருவராய் அதில் உட்காருவார்கள். கேள்விகள் தொடர்ந்து வரும். தப்பாய்ப் பதில் சொன்னால் ஷாக் தரப்படும்.

தப்புகள் கூடக் கூட அதிர்ச்சியின் அளவும் கூடும். ஆசிரியரால் மின் அதிர்ச்சியைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். ஆசிரியரோ மாணவர்களோ எல்லாருமே காசுக்கு நடிக்க வந்தவர்கள். 450 வோல்ட்களுக்கு மேல் மின் அதிர்ச்சி கூடினால் உயிராபத்து என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது.

அப்போ, யாருமே அந்த 450 த் தாண்ட யோசித்திருப்பார்கள்? இல்லை. அவர்கள் யோசிக்கவில்லை. 450 என்ன, இன்னும் கூடப் போயிருப்பார்கள். நல்ல காலமாய் சோதனை நிறுத்தப் பட்டுவிட்டது. (நீங்க பாஸ். சொல்ரீங்க. நாங்க செய்ரோம்.)

ஹிட்லரின் நாஜிப்படையில் உயர் ராணுவ அதிகாரியாய் இருந்து கணக்கில்லாமல் படுகொலைகள் செய்த Adolf Eichmann கூட விசாரணையில் அதைத் தானே சொன்னார்?

மூன்றாவதாக, நம் சொந்தப் பாதுகாப்பு. இந்த archetypes வகைகள் முன் சொல்லப்பட்ட இரண்டு வகைகளுக்கும் நெருங்கியவை. நம் குழுவின் பாதுகாப்புக்காக நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஆபத்து நேரலாம். எந்த சமயமும் எதிரி நம்மைத் தாக்கலாம். ஆகவே விழிப்போடு இருக்க வேண்டும். செயல்பாடுகள் தொடர்ந்தபடி இருக்க வேண்டும்.

சோதனையில் archetypes எப்படி செயல்பட்டன? பங்கு கொண்டவர்கள் காசுக்காய் வந்தவர்கள். அந்த சமயமே, அவர்களின் நிழல் மனம் (Shadow) ஆய்வாளரின் ஆளுமைக்குள் வந்துவிட்டது. அவர்களின் archetypes களை, அவர் தன் விருப்பப்படி செயல்படுத்த ஆரம்பிக்கிறார்.

தாய் தந்தையரின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குழந்தை போல் சோதனையில் பங்கு கொண்டவர்கள் ஆகிவிட்டதன் பின்னர் கேள்விகளுக்கே இடமில்லை.

இது தனிப்பட்ட மனிதர்கள் மேல் கொண்ட ஆய்வு. ஒரு குழு என்றால் என்ன நடந்திருக்கும்? நூலாசிரியர் கேட்கும் போதே மிரண்டு போகிறோம்.

தூங்காத கண் என்று ஒன்று

சின்னங்கள், குறியீடுகளை மையப்படுத்தியே யுத்தங்கள் துவங்குகின்றன. இவை உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை மதிப்புகள். நம்பிக்கைக்குரிய மதிப்புகள்.

இந்த நம் மதிப்புகளை மற்றவர்கள் இருப்பதால் தான் மதிக்கிறோம். மற்றவர்கள் இல்லாவிட்டால் மதிப்பு என்று எதுவும் இல்லை.

archetypes நித்திரை பாதி, விழிப்பு பாதியாய் இருக்கும் சக்திகள். எப்போது துள்ளி எழலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சக்திகள்.

போர் மூலமோ வேறு தந்திரங்கள் மூலமோ எதிராளியை மடக்கிவிட்டால் பிறகு பிரச்னை வராது என்று நினைப்பது இன்னொரு முட்டாள்தனம். வன்முறை archetypes தூங்குவது போல் நடிக்கும். ஆனால் தூங்காது.

வியட்னாமில் அமெரிக்கா நடத்திய போரில் ஏன் வெல்ல முடியாமல் போயிற்று? பெருவாரி அமெரிக்கர்களின் archetypes முழுவதுமாக விழிப்புடன் இருக்கவில்லை.

தூரத்தில் எங்கேயோ இருக்கும் ஒரு சின்ன நாட்டினால் நமக்கு என்ன ஆபத்து வரப் போகிறது? தவிர, போரில் அமெரிக்க படைகள் செய்த அட்டூழியங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருந்தன. நமக்கு, நம் சொந்த நாட்டு மக்களே ஆதரவு தரவில்லை என்கிற விரக்திக்குள் மூழ்கிப் போனார்கள் படை வீரர்கள்.

சோவியத் ஒன்றியம் வீழ்ந்தது. நமது தந்திரங்கள் வென்றன என்று மேற்குலகு ரொம்ப நாள் வெற்றி விழா கொண்டாட முடியவில்லை. விரைவிலேயே, யூகோஸ்லாவிய உள்நாட்டுப் போர் வெடித்தது. இராக், இஸ்லாமிய பயங்கர வாதம் என்று புதிய தலைவலிகள் வராமலா போய்விட்டன?

பிரெஞ்சுப் புரட்சி ஏன் நின்று பிடிக்கவில்லை? புரட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தின் archetypes வகைகளை அழிக்க நினைத்தார்கள். அது மக்களின் archetypes களை உசுப்பிவிட்டது. கடைசியில், மக்கள் இவர்களை மிருகங்கள் என்று தூற்றினார்கள். அழித்தார்கள்.

கார்ல் மார்க்ஸ் கூட, தொழிலாளர்களைத் தவறாக எடை போட்டார். அவரின் சித்தாந்தத்தின் படி, யுத்தம் என்பதே முதலாளித்துவத்தின் வெளிப்பாடு. சோஷலிசம் வந்துவிட்டால் தொழிலாளர்கள் போரை விரும்ப மாட்டார்கள் என்று நினைத்தார்.

மலிவான மூலப் பொருட்கள் எங்கே கிடைக்கும்? குறைவான ஊதியத்துக்கு யார் வேலை செய்வார்கள்? எப்படி காலனி ஆதிக்கத்தை இன்னும் விரிவாக்கலாம் என்று முதலாளித்துவம் யோசிக்கும் நிலையில் தான் போர்கள் வெடிக்கும் என்றார் அவர்.

ஆனால் 1914 களில் முதலாம் உலக யுத்தம் துவங்கியபோது, அய்ரோப்பாவின் சோஷலிச கட்சிகளுக்கு தேசபக்தி தான் முக்கியமாய்த் தெரிந்தது . ஆஸ்திரிய, ஜெர்மனி நாடுகளின் தொழிலாளர்கள் பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்ய தொழிலாளர்களை எதிர்த்துப் போரிடத் தயங்கவில்லை.

போர்கள், மனித சமுதாயத்தை அடிக்கடி தொற்றும் ஒரு வியாதி என்று சில சமூகவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், மனிதர்கள் எல்லாருமே மன நோயாளிகள் என்று ஆகிவிடும். தவறான சிந்தனை இது. மார்க்சிய வாதமோ, தாராளமய வாதமோ archetypes வகைகளின் படிநிலை வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறந்து விட்டன.

இன்று மரபணுவில் மாற்றங்கள் செய்யும் (Genetic Engineering) உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுகள் துவங்கி விட்டன. சிலர் நினைப்பது போல், இந்த அறிவியல் முன்னேற்றம் மூலம் மனிதனின் வன்முறை உணர்வுகளை மாற்றலாம் என்பது சந்தேகமே.

முதலாவதாக, அது வந்து சேர எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியாது. இரண்டாவதாக, அந்த ஆய்வுகளுக்காக ஒதுக்கும் தொகையை விடப் பல மடங்கு பணம், ஆயுதங்கள் உற்பத்திக்குப் போய்விடும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

மூன்றாவது, பெரிய சிக்கல். மரபணுவில் வன்முறையை மாற்றப்போய், மனிதனின் படைப்பாற்றல், மன உறுதி, பாலுணர்வு என்று நம் குண நலன்கள் நசிந்து போய்விட்டால்? இந்தப் பண்புகளுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.

archetypes வகைகள் நம்மை விடப் புத்திசாலிகள். ஒரு சில அரசியல் தலைவர்கள் வேண்டுமானால், செய்து காட்டுகிறோம் என்று செயல்பாடுகளில் இறங்கலாம். ஆனால் எல்லா உலகத் தலைவர்களுமே அப்படி யோசிப்பார்கள் என்று எண்ண முடியாது.

உலகம் முழுவதையும் தன் அதிகாரத்துக்குள் கொண்டுவரக்கூடிய ஒரு சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரியால் தான் அது சாத்தியமாகும். அதிலும் ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது. அவரின் மெய்ப் பாதுகாவலர்களை எப்படி நம்புவது? ஒரு ஆள் போதுமே.

archetypes களை உசுப்பி விடக் கூடிய தன்மைகள் தான் சந்ததி சந்ததியாகப் பயணம் செய்கின்றன. archetypes வகைகள் அல்ல என்று யுங் சொன்னதை நாம் கவனிக்க வேண்டும். இது உயிரியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய கோட்பாடு.

archetypes களை மாற்றவே முடியாது. ஏன் அப்படி? நம் முன்னோர்கள், காடுகளில் அலைந்து திரிந்த போது எந்த வினாடியும் ஆபத்து வந்திருக்கும். விலங்குகள், இயற்கையின் சீற்றங்கள், தவிர, மற்ற மனித குழுக்களின் எதிர்ப்பு என்று விழிப்புடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.

எந்த நேரமும் விழிப்புடன் இருப்பது நூற்றுக்கு நூறு முடியாத காரியம். ஆகவே அவர்கள் இயற்கைக்கு ஏற்றபடி அவர்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்திருப்பார்கள். சில உண்மைகளை மறுதலிக்க வேண்டிய நிலைமை நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்.

அப்படி எதுவும் நடக்காது என்று அவர்களை அவர்களே தேற்றிக் கொண்டு ஓய்வெடுக்க நினைத்திருப்பார்கள். அப்படி அவர்கள் நடந்திருக்காவிட்டால் பைத்தியமே பிடித்திருக்கும். மனித குலமே அழிந்திருக்கும்.

இன்று நம்மை வேட்டையாட விலங்குகள் இல்லை. நம்மைக் காத்துக் கொள்ள கதகதப்பான சூழலில் வாழ்கிறோம். ஆனால் ஏதோ ஒரு உணர்வு, பயம் காட்டியபடியே இருக்கிறது.

விளைவு : பிரச்னைகளை உருவாக்குகிறோம். வன்முறை கிளர்ந்தெழுகிறது. சாதா அடிதடிகளில் துவங்கி பெரும் போர்கள் வரை முன்னேறுகிறோம். அந்த உணர்வுக்கு வடிகால் எதிரிகள் தான். எதிரிகள் இல்லாமல் நாம் முழு மனிதர்கள் ஆக முடியவில்லை. எதிரிகளை அழித்த பிறகு தான் நிம்மதி கிடைக்கிறது.

2 – 3 மில்லியன்கள் ஆண்டுகள் முன்னே இருந்த அதே மனம் இன்றும் அலை பாய்ந்தபடி இருக்கிறது. நாம் மாறவில்லை.

சில archetypes ஏற்கெனவே விழித்திருக்கின்றன என்கிறார் யுங். (சில காத்திருக்கின்றன. சில செயல்படாமலேயே போய்விடும்.) உதாரணமாய், தாய்மை உணர்வுகள் பெண் குழந்தைகளின் சிறு வயதில் தூண்டப் படுவதில்லை. வயது வரும் வரை காத்திருக்கின்றன.

வன்முறை உணர்வுகள் ஆண் குழந்தைகளின் சிறு வயதில் தோன்றுவதில்லை. விடலைப் பருவம் வரட்டுமே என்று அமைதியாய் இருக்கின்றன.

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே

போர்களைத் தவிர்க்க, சமாதானம் என்கிற கருத்தியலை இன்னும் அதிகமாய் பரப்புரை செய்யலாம். ராஜதந்திர முயற்சிகளில் இறங்கலாம்.

பையன்கள் மனதில் விரைவிலேயே வன்முறை archetypes தோன்றிவிடுகின்றன. அவர்களிடம் அமைதி உபதேசங்கள் பலன் தராது. ஆகவே, போரடிக்காமல் இருக்க, விளையாட்டுப் போட்டிகள், கணனிகளில் கேம்ஸ் என்று ஊக்கப் படுத்தலாம்.

பெண்களை அரசியலில் கூடுதலாய்ப் பங்கு கொள்ள வைத்தால் போரில் இறங்க வைக்கும் காரணிகளைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். (முஸ்லிம் நாடுகளில் இதற்கு எதிர்ப்பு இருக்கும். தெரிந்ததே. இருந்தும் முயற்சி செய்யலாம்.)

இந்த செயல்பாடுகள் நல்லது. உதவும். ஆனால் இவைகளை மட்டும் நம்பிப் பயன் இல்லை என்கிறார் யுங்.

ஆபத்துகள் நம் மனசுக்குள் இருந்தே வருகின்றன என்பதை மறந்து விடுகிறோம். அல்லது அதை அறியாமல் வாழ்கிறோம். தெரிந்தாலும் அலட்சியப் படுத்துகிறோம். அப்படி எல்லாம் நடக்காது. நாம் நல்லவர்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

நாம் நல்லவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நல்லவர்கள் என்கிற கோணங்கிப் புத்தி நம்மை விட்டு அகல்வதே இல்லை.

நாஜிப்படை முகாமில் இருந்து தப்பிய Elie Wiesel தன் நூலில் (Night) இப்படிக் குறிப்பிடுகிறார் : நாஜிப்படைகள் செய்த அட்டூழியங்களை வீடு வீடாக, ஊர் ஊராகப் போய் சொன்னேன். தப்பிவிட முயற்சி செய்யுங்கள் என்று கெஞ்சினேன். முட்டாள் என்று கேலி செய்தார்களே தவிர என்னை நம்பவே இல்லை.

ஜெர்மனியின் Dachau முகாமை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு அங்கிருந்த யூதர்கள், மற்றும் கைதிகளை விடுதலை செய்தபோது சரணடைந்த நாஜி ராணுவ வீரர்கள், இன்று நாம் 130 பேரைக் கொன்றோம் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்களாம்.

அந்த நாஜிகள், எப்பேர்ப்பட்ட குற்றங்கள் இழைத்திருக்கிறோம் என்கிற நினைவு கொஞ்சம் கூட இல்லாமல் சொன்னபோது அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம்.

இந்த நினைவு ஒரு வித மறுதலிப்பு. நான் அதை செய்யவில்லை. நான் அதை யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கைதிகள் வாழ்ந்தால் என்ன? செத்துப் போனால் என்ன?

archetypes வகைகள், அவற்றின் இருப்பை நாம் அறிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. நம்மை ஒரு மாயையில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன.

ஒருவரை வன்முறையாளராக மாற்றுவதற்கு archetypes மூன்று படிநிலைகளில் தூண்டுகின்றன.

நான் ஒரு மனமுதிர்ச்சி அடைந்த மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பார்த்ததும் கோபம் வருகிறது. ஆனால் அதை மறைத்துக் கொள்கிறேன். அப்படி எதுவும் இல்லை என்று என்னை நானே மறுக்கிறேன். அந்த உணர்வு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. என்னுடன் ஒட்டிக் கொள்கிறது.

அதே சமயம், நீங்கள் என்னிடம் கோபம் கொள்ளவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கோபம் அடையவில்லை என்று நான் வைத்த குற்றச்சாட்டை நீங்கள் ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள். இது அநீதி. உங்களைத் தாக்குவது சரி தான்.

மாறாக, நீங்களும் என்னிடம் கோபம் கொண்டால், என் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிறது. நான் கோபம் கொண்டது சரி தான். கைகலப்பு துவங்குகிறது.

நம் எதிரிகள் என்று நாம் நினைப்பவர்கள் இருந்தே ஆகவேண்டும். எதிரிகள் இல்லாவிட்டால் நம் சஞ்சலம் அதிகரிக்கிறது. எதிரிகள் தான் நம்மை முழு மனிதர்கள் ஆக்குகிறார்கள். archetypes களுக்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்?

நம் மன அழுக்குகளை, பய உணர்வுகளை, வக்கிரங்களை உற்றுப் பார்க்க நாம் தயங்குகிறோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதிலேயே கவனமாய் இருக்கிறோம். ஆகவே archetypes கள் ஜாலியாய் இருக்கின்றன.

archetypes களை அழிக்கவே முடியாது என்றால், அவைகள் அடிக்கும் கொட்டமும் தாங்க முடியவில்லையே என்றால் என்ன தான் செய்வது?

வன்முறை உணர்வுகள் எல்லாரிடமும் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். போர் பற்றிய பயம் மனதில் இருப்பது நல்லது.

பகுத்தறிவு அல்லது அறிவு சார்ந்த செயல்பாடுகளால் மனதின் வன்முறை எண்ணங்கள், பதட்டங்களை தாண்டிப் போகவோ அல்லது அவற்றில் இருந்து விடுதலை அடையவோ முடியாது என்கிறார் யுங்.

அறிவுலகம் தெளிவற்ற மனோநிலையை ஏற்றுக் கொள்வதில்லை. ஏதோ, எங்கோ ஒரு மூலம் இருக்க வேண்டுமே என்று நிச்சயித்துக் கொள்கிறது. அதைத் தேட ஆரம்பிக்கிறது.

புள்ளி என்று எதுவும் இல்லை. கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டிருக்கும் உணர்வலைகளை அறிவுலகம் புரிந்து கொள்ளாது.

சின்னங்கள், குறியீடுகள் யுத்தங்களுக்கு அடித்தளமாய் அமைகின்றன. சமாதானம், அமைதிக்கு ஏன் சின்னங்கள் , குறியீடுகளை நாம் உபயோகிக்கக் கூடாது? ஏன் என்றால் உணர்வுகள் என்பன சின்னங்கள், பிம்பங்கள், குறியீடுகளின் எதிரொலிகள்.

Hutterites இனம் அமைதியை விரும்பும் ஒரு சமுதாயம். குழுக்களாக இயங்குகிறார்கள். ஒவ்வொரு குழுவின் எண்ணிக்கையும் 150 பேருக்கு மேல் போகாது. எண்ணிக்கை கூடிவிட்டால் இன்னொரு குழுவாகப் பிரிந்து விடுவார்கள்.

உன்னைப் போல் மற்றவர்களையும் நேசி என்கிற யேசுவின் வாக்கு செல்வாக்கை இழந்து விட்டதற்கு குழுவினர் எண்ணிக்கையும் ஒரு காரணமாய் இருக்கலாம். உலகத்தின் 6 பில்லியன் மக்களையும் நம்மால் நேசிக்க முடியாது. (சிறுசிறு குழுக்களாக இயங்குங்கள் என்கிறாரோ யுங்?)

archetypes எப்போது வேண்டுமானாலும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்லலாம் என்கிற பயம் தான் நம்மைக் காப்பாற்றும் என்று முடிக்கிறார் நூலாசிரியர்.

உணர்வுகளை உணர்வுகளால் தான் வெல்ல முடியுமோ?

உன் பார்வை போலே என் பார்வை இல்லை

கார்ல் மார்க்ஸ் சொன்ன தொழிலாளர்களின் புரட்சி ஏன் இன்னும் ஏற்படவில்லை? முதலாளித்துவத்தைக் கவிழ்க்கப் போவது யார்? புத்தகங்கள் இருக்கும் போது நண்பர்கள் எதுக்கு?

ஆயிரத்தில் ஒருவன் கட்டுரையில் என்னை ஆச்சரியப்பட வைத்தவர்கள் இரண்டு பேர் என்று குறிப்பிட்டிருந்தேன். இதோ இரண்டாமவர்.

The Wordly Philosophers நூலில் அதன் ஆசிரியர் கார்ல் மார்க்ஸுக்கும் இதில் வரும் மனிதருக்கும் ஒரே எண்ணிக்கையில் பக்கங்கள் ஒதுக்கி இருக்கிறார்.

மூளை நரம்பு பாதிக்கப் பட்டவர் போல் நடந்து கொண்டவர், எதிலும் பற்றில்லாத துறவி போல் வாழ்ந்தவர் என்று ஒவ்வொரு பக்கமும் அவருக்கு எத்தனையோ அடைமொழிகள் கொடுத்து எழுதித் தள்ளி இருக்கிறார் நூலாசிரியர். ஆனால் இவரின் மேதைமையை மட்டும் தள்ளவே முடியவில்லை.

முழுப் பேர்: தோர்ஸ்டைன் வெப்லென் (Thorstein Veblen). அந்த காலகட்டங்களில் அமெரிக்காவுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு நார்வீஜிய குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த ஆண்டு : 1857.

குடும்பத்தில் எல்லாரும் விவசாய நிலத்தில் வேலை செய்ய, இவரோ புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தார். எது கிடைத்தாலும் வாசித்தார்.

பின்னாளில், அவரின் ஒரு தம்பி இப்படிக் குறிப்பிட்டார்: எப்போ பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருப்பான். ரொம்ப அதிர்ஷ்டசாலி. பொய் சொன்னால் கூட, நம்பக் கூடிய மாதிரி சொல்லுவான்.

வெப்லென் ஒரு தினுசான ஆள். எப்போதும் தனிமையை விரும்பிய மனிதர். இருந்தும், அவர் கண்கள் மற்றவர்களை எடை போட்டபடி இருந்திருக்கின்றன. அன்றைய சூழ்நிலையையும் மனிதர்களின் நடத்தைகளையும் கூர்மையுடன் அவதானித்திருக்கிறார்.

அன்றைய பொருளாதார சூழ்நிலை எப்படி இருந்தது? சாதாரண மக்களை விட்டுவிடுவோம். ஒப்பீட்டளவில், செல்வந்தர்கள் அய்ரோப்பாவில் ஒரு விதமாகவும் அமெரிக்காவில் இன்னொரு விதமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

அய்ரோப்பாவில், பணக்கார ஆட்கள் சமூக அந்தஸ்தில் அப்படி ஒன்றும் பெரிய இடத்தில் இருக்கவில்லை. சட்டங்களை சொந்த சுயநலத்துக்காக வளைத்து, கோல்மால்கள் செய்து தான் அவர்கள் உயர்நிலைக்கு வந்தார்கள் என்று அதிகமாய் எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

அமெரிக்காவில் அப்படி அல்ல. காசு சேர்க்க எந்த வழியையும் உபயோகிக்கலாம் என்று எழுதப்படாத விதிகள் இருந்தன. பணக்காரர் ஆகவேண்டும் என்றால் நீதி, நியாயம், வெட்கம், சூடு சொரணை எதுவும் தேவை இல்லை. அங்கிருந்த மக்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. எல்லாருக்கும் காசு ஒன்றே குறிக்கோள். காசு பெருகப் பெருக, சமூகத்தில் மதிப்பும் கூடியது.

இதை அன்றைய பொருளியலாளர்கள் எப்படிப் பார்த்தார்கள்?

அமெரிக்க பொருளியலாளர்கள், இந்தப் போக்குக்குப் புதிய பேர்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். சூழ்ச்சிகள் செய்து எதிராளியை வீழ்த்துவதைத் துணிச்சல், விவேகம் நிறைந்த செயல்பாடு என்று வர்ணித்தார்கள். மோசடிகள் செய்வதை சாணக்கியத்தனம் என்றார்கள். செல்வந்தர்களின் ஆடம்பர செலவுகளுக்குத் தவிர்க்கவே முடியாத செலவுகள் என்று விளக்கம் சொன்னார்கள்.

அய்ரோப்பிய பொருளியலாளர்களோ, கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆடம் ஸ்மித் துவங்கி கார்ல் மார்க்ஸ் வரை முதலாளித்துவத்தின் போக்குகளை ஒன்று ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள். இருந்தும், இந்த நடப்புக்குத் தர்க்க ரீதியான விளக்கம் சொல்ல முடியவில்லை. காரணம், இவர்கள் அதே சமுதாயத்துக்குள் இருந்து யோசித்தவர்கள்.

இதைப் புரிந்து கொள்ள, அதன் சார்புநிலையிலோ அல்லது எதிர்நிலையிலோ, எதிலுமே ஒட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி வாழும் – உள்ளதை உள்ளபடியே பார்க்கும் சுதந்திரமான ஒருவரின் பார்வை அவசியம் என்கிற தேவை இருந்தது.

வெப்லெனைத் தவிர, வேறு யார் இதற்குப் பொருத்தமாக இருக்க முடியும்? – நூலாசிரியர் கேட்கிறார்.

வெப்லென் இந்தக் களத்தில் (பொருளியலில்) என்றுமே ஒரு அந்நியனாக வாழ்ந்தார். எந்த சித்தாந்தத்திலும் சிக்கிக் கொள்ளவில்லை. தனிமையில் தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவர்.

ஒரு சமயம், கார்ல் மார்க்ஸை ஆகா, ஓகோ என்பார். அடுத்த கணம், தயவு தாட்சண்யம் பார்க்காமல் விமர்சனம் பண்ணுவார். முரண்பாடுகளின் மொத்த உருவம். ஆனால் அவர் உதிர்க்கும் கருத்துக்கள் யோசிக்க வைக்கும்.

அதனாலேயே, அவருக்குப் புத்திஜீவிகள் மத்தியில் ஒரு தனி மதிப்பும், எதிர்ப்பும் கூடவே இருந்தன. அவர் விரிவுரையின் போது, என்ன சொல்கிறார்? சொல்ல வருகிறார்? எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. மீண்டும் விளக்க முடியுமா என்று கேட்டால், அது தேவை இல்லை என்பார்.

அவரின் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போயிற்று. ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் விரிவுரை நடத்திய காலங்கள் உண்டு. ஒரு சமயம், பல்கலைக்கழக வாசலில், என் விரிவுரை திங்கள் காலை மட்டும் நடக்கும். 10 மணிக்குத் துவங்கும். 10.05 க்கு முடிந்துவிடும் என்று வாசகம் எழுதித் தொங்கவிட்டார்.

மாணவர்கள் இல்லை. நண்பர்கள் என்று யாருமே இல்லை. இருந்தும், அவருக்கு ஒரு பெண் தோழிகள் பட்டாளமே இருந்தது. அவரின் மணவாழ்க்கை ஒரே அக்கப்போர். தவிர்த்து விட்டேன்.

1899 ம் ஆண்டு. அவரின் முதல் நூல் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.

உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளிலே

நூலின் பேர் : The Theory of Leisure Class. தமிழில் : வெட்டியாய்ப் பொழுது போக்கும் வர்க்கம் பற்றிய கோட்பாடு எனலாமா?

வழக்கமாக, முதலாளித்துவம் பேசும் பொருளியலாளர்கள் மனிதர்களில் ஏன் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன என்று கேட்டால், ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த ஒரு விளக்கத்தைப் பிச்சி வாங்குவார்கள்.

ஓர் சமூகம் என்பது பொய்யான தோற்றம். தனி மனிதர்கள் சேர்ந்த ஒரு கூட்டம் என்பது தான் சரியாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் அந்தக் கூட்டத்தில் சுயநலத்தோடு இயங்குகிறான். வேலை வேலை என்று ஆலாய்ப் பறக்கும் மனிதர்கள் தொகை கூடிக்கொண்டே போனால் என்ன நடக்கும்?

அங்கே பயங்கரமான போட்டி உருவாகிறது. இதுவரை மனிதனின் மனிதனின் உள்மனதில் தூங்கிக் கொண்டிருந்த முரட்டுத்தனம் விழித்துக் கொள்கிறது. எந்த விதத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள விழைகிறது.

பொதுவாய், மனிதர்கள் நிதானமாய் சிந்தித்து, பகுத்தறிவோடு செயல்படுபவர்கள். ஆகவே சிலர் அந்த நிலைமையை, களேபரத்தை தமக்கு வசதியாக வளைத்துக் கொள்கிறார்கள்.

ஆகவே, போட்டி என்று வரும்போது பொருளாதாரத்தில் சிலர் மேலே போக, மற்றவர்கள் கீழேயே மாட்டிக் கொண்டு லோல் படுகிறார்கள். சமூகத்தில் முன்னேறிய மனிதர்களுக்கு வேலை செய்ய வேண்டிய தேவை குறைந்து கொண்டே போகிறது. (அதற்கு மற்றவர்கள் இருக்கிறார்களே.)

ரொம்ப சிம்பிளான விளக்கம். நியாயமானது. ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் வெப்லென் மசியவில்லை. அதென்ன, உள்மனம்? நிதானமாக, பகுத்தறிவோடு செயல்படும் மனிதர்கள்? எந்த ஒரு மனிதனுக்கும் ஒய்வாக இருப்பது தான் பிடித்தமான தொழில் என்று துவங்குகிறார்.

பழங்குடி மக்களின் வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார். (1) சில செவ்விந்தியர் குழுக்கள், (2) ஜப்பானின் அய்னுஸ் (Ainus) பழங்குடிகள் (3) ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் (Aborigines).

இந்த மக்களுக்கு ஓய்வாக இருப்பது என்றால் எதுவும் புரியாது. இந்த எளிமையான சமுதாயங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் ஒதுக்கப் பட்டிருக்கிறது. அதை செய்து கொண்டே இருப்பதில் ஒரு பெருமை உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. செய்யும் தொழிலை மேலும் திறனோடு செய்யவேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறது. சும்மா வெட்டியாய்ப் பொழுது போக்குவதற்கு மதிப்பே இல்லை.

அடுத்து, பொலினீசியர்கள், ஐஸ்லாந்தின் பழங்குடிகள், ஜப்பானின் shogunates (பிரபுத்துவ பிரிவு) மக்களின் வாழ்க்கைக்கு வருகிறார்.

இந்த மக்கள் சமுதாயங்களில், ஓய்வெடுக்கும் ஒரு வர்க்கம் இருக்கிறது. இங்கே மற்றவர்கள் இவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்று அனுமதி கொடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்று. ஆனால் இந்த வர்க்கம் நாம் நினைப்பது போல் சும்மா படுத்திருப்பதில்லை.

எப்போது அடுத்த ஊர் போய்க் கொள்ளை அடிப்பது? வியூகங்கள், போர்த் தந்திரங்கள் என்று விலாவாரியாய்க் கலந்து பேசி திட்டங்கள் போடுவது என்று ரொம்ப பிஸியாய் இருக்கும் இந்த வர்க்கம். அப்படி மற்ற ஊர்களை அடித்து எடுத்து வரும் பொருள்களால் அவர்களின் பொருளாதாரம் உயர்கிறதே. ஆகவே, இந்த வர்க்கத்துக்கு மதிப்பு, மரியாதை எல்லாம் தானாக வருகிறது.

அதே சமயம், சாதாரணமாக, வழக்கம் போல் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அந்த சமுதாயங்களில் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. இதெல்லாம் வேலையா? கேவலம் இப்படி எல்லாம் வாழவேண்டி இருக்கே என்று கவலைப்படுபவர்கள் அங்கே அதிகம்.

இதில் இருந்து என்ன முடிவுக்கு வருகிறோம்? மாறிக்கொண்டிருக்கும் சமுதாயங்களில் சிந்தனைகள் இப்படி உருவாகின்றன. சமூகம் தன்னைத் தானே கட்டமைத்துக் கொள்கிறது. உள்மனது, மனிதன் பகுத்தறிவோடு செயல்படுபவன், அது இது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்றைய நவீன வாழ்க்கையைப் பார்ப்போம். முதலாளித்துவ வர்க்கம், ஓய்வெடுக்க வேண்டும் என்கிற சிந்தனையில் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் தன் வழிமுறைகளை மாற்றிக் கொள்கிறது. மற்றவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பாமல் இருக்க, சாமர்த்தியமாக செயல்படுகிறது.

மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி அனுபவிக்கும் குணாம்சம் மாறுவதில்லை. போர்கள், கொள்ளைகள், அடிமைகள் என்கிற காலம் போய்விட்டது. அதெல்லாம் அசிங்கம். அநாகரீகம். நவீனமாக, எப்படி இன்னும் இன்னும் பணம் புரட்டலாம் என்று சிந்திக்கிறது.

அது மட்டுமா? சேர்கிற பணத்தை ஆடம்பரமாய் அல்லது ஊதாரித்தனமாய் செலவழிப்பது அடுத்த கட்டம். இது பணக்கார வர்க்கத்தின் ஒரு முக்கிய மனோநிலை என்று சுட்டிக் காட்டுகிறார் வெப்லென்.

என்னைப் பார். நான் விட்டெறியும் காசைப் பார். டாலர் நோட்டைக் கிழித்து வீசுவேன். அல்லது கொளுத்தி வேடிக்கை பார்ப்பேன். உன்னாலே அது முடியுமா? (இதெல்லாம் வீட்டுக்குள் இருந்து செய்தால் எந்தப் பயனும் இல்லை. நாலு பேர் பார்த்தால் தானே மதிப்பு?)

காசு சேர்க்கிற வித்தை ஒரு பக்கம். அதை எப்படியும் செலவழிப்பேன் என்று காட்டுவது இன்னொரு வித்தை.

இந்த செயல்பாடுகள் மற்ற சாதாரண காமா சோமாக்களைப் பொறாமைப்பட வைக்கிறது. பிறந்தால் இவர்கள் போலப் பிறக்க வேண்டும். வாழ்ந்தால் இவர்கள் போல வாழ வேண்டும். சொந்த வேலையில் ஒரு வெறுப்பு உண்டாகிறது. நான் செய்யும் தொழில் எல்லாம் தொழிலா? எழவெடுத்த கருமாதி.

அடுத்து, கார்ல் மார்க்ஸை ஒரு பிடி பிடிக்கிறார் வெப்லென். புரட்சி நிச்சயம் வரும். முதலாளித்துவம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஒன்றிணையத் தான் போகிறார்கள் என்றாரே. ஏன் நடக்கவில்லை?

அவனவன் எப்படா பணக்காரன் ஆகப் போகிறோம்? எப்போ அவன் மாதிரி வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஜாலியாய் இருக்கப் போகிறோம் என்று நாளும் பொழுதும் கனவு கண்டு கொண்டிருக்கும் போது எப்படி புரட்சி வரும்?

உழைக்கும் வர்க்கம் பணக்கார வர்க்கத்தோடு மோத நினைப்பதில்லை. பதிலாய், பணக்கார வர்க்கத்தைக் காப்பி அடிக்க நினைக்கிறது. சொந்த வேலைகளை உதறித் தள்ளிவிட்டு பணக்கார வர்க்கம் போல ஓய்வாக இருக்க ஆசைப்படுகிறது.

வெப்லெனின் இந்த வாதத்தை கடுமையாக ஆட்சேபிக்கிறார் நூலாசிரியர்.

பழைய பொருளியலாளர்கள் (classical economists) சொன்ன பகுத்தறிவு (rationality) வாதம், கணக்குப் போட்டு காய் நகர்த்தும் நிதானம் எல்லாம் மனிதர்களின் நடப்புகளை சரியாக சொல்லவில்லை என்பது சரி தான். பதிலாக, மனிதர்களின் இயற்கை குணமான முரண்பாடுகளை (irrationalities) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மனிதர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை முன் கூட்டியே அனுமானிப்பது கஷ்டமான விஷயம். இந்த முரண்பாடுகளால் மனித மனங்களில் தோன்றும் ஒரு வித பயம் அல்லது தாக்கமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கும் பண்பை உருவாக்குகிறது என்கிறார் நூலாசிரியர்.

இன்னொன்று : அமெரிக்காவின் Middletown நகரில் 1937 களில் நடந்த ஓர் ஆய்வில் (Robert and Helen Lyng) புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன? அந்த காலகட்டத்தில் பொருளாதாரம் பெரு வீழ்ச்சி கண்டு மக்கள் அவர்களின் அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியாத கஷ்டமான சூழ்நிலை நிலவிற்று.

மிகவும் கீழ் மட்டத்தில் இருந்த ஏழைகள், அவர்களின் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவில்லை. பதிலாக, உணவுத் தேவைகளைக் குறைத்துக் கொண்டார்கள்.

ஆடம்பரப் பொருள்கள் வாங்குங்கள் என்று வந்த விளம்பரங்களும் குறைந்ததா? இல்லையே. நடுத்தர, பணக்கார குடும்பங்களைக் குறி வைத்த விளம்பரங்கள் இவை. மனிதர்களின் நடத்தைகள் முரண்பாடுள்ளவை. வெப்லெனின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்கிறார் நூலாசிரியர்.

தனிமனிதப் பண்புகளை நூலாசிரியர் தூக்கிப் பிடிக்கிறார். வெப்லெனோ மொத்த சமூகத்தின் பண்புகளை சுட்டிக் காட்டுகிறார். யார் சொல்வது சரி?

எப்படியோ, வெப்லெனின் நூல் புத்திஜீவிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களையும் கவர்ந்தது. உதாரணங்கள், பணக்காரர்கள் பற்றிய கடுமையான விமர்சனங்கள், அவரின் சொல் நடை எல்லாம் சேர்ந்ததில் பிரபலமானார் அவர்.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

1904 ல் இன்னொரு நூல் வெளியிட்டார். “The Theory Of Business Enterprise” (வணிக நிறுவனங்கள் பற்றிய கோட்பாடு).

ஆடம் ஸ்மித் துவங்கி அன்றைய பொருளியலாளர்கள் கொண்டிருந்த கருத்துக்கு எதிரான அதிர்ச்சி தரும் முடிவை இந்த நூலில் குறிப்பிட்டார் அவர்.

முதலாளிகளால் தான் பொருளாதாரம் வளர்கிறது என்று அவர்கள் சொல்ல, இல்லை முதலாளிகளே முதலாளித்துவத்துக்கு வேட்டு வைப்பார்கள் என்கிற முடிவுக்கு வருகிறார்.

அவர் ரிக்கார்டோ மற்றும் கார்ல் மார்க்ஸ் கொண்டிருந்த கோட்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கவில்லை. அதற்கும் கீழே : எந்திரங்களில் இருந்து ஆரம்பிக்கிறார்.

பொருளியலே எந்திரங்களை நம்பித் தான் இருக்கிறது. எந்திரங்கள் உருவாக்கித் தரும் பொருள்களில் நம் வாழ்க்கை தங்கி இருக்கிறது. எந்திரங்களை உருவாக்குவது, இயக்குவது யார் கையில் இருக்கிறது? பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது.

எல்லாரும் நேரம் தவறாமல் வேலைக்குப் போகிறார்கள். நேரம் பார்த்தபடி வாழ்க்கையே ஒடிக் கொண்டிருக்கிறது – நேரம் காட்டும் கடிகாரம் போல சமுதாயத்தைக் கூட ஒரு எந்திரமாக நினைத்துப் பார்க்கலாம்.

லாப நோக்கம் பற்றி எந்திரத்துக்கு ஒன்றும் தெரியாது. இந்த நிலைமை முதலாளிகளுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்குகிறது. ஆகவே, அவர்கள் எந்திரங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்து, நாசவேலைகள் மூலம் குழப்பங்களை உருவாக்கி, அதன் மூலம் ஆதாயம் தேடப் பார்ப்பார்கள்.

சமுதாய அடுக்கு ஒரு பிரமிட் போல இருக்க, அதன் உச்சியில் முதலாளிகள் உட்கார்ந்திருப்பார்கள். அந்தக் கட்டமைப்பின் கீழே, கடன்கள், தொழில் பேட்டைகளுக்கு முதலீடுகள், நம்மால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று சமூகத்தை நம்ப வைக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனை அமைப்பு முறைகளையும் செயற்கை முறையில் உருவாக்கி அவர்களின் கீழே அடுத்த படியில் வைத்திருப்பார்கள்.

அதற்கு அடுத்த படியில், எந்திரங்களின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். முதலாளிகளின் கைகளில் சுவிட்ச்கள் இருக்கின்றன. எப்போது களேபரங்கள் உருவாக்க வேண்டும்? எந்த அளவு? அவர்கள் நினைத்தபடி எதுவும் நடக்கும். லாபம் உண்டாகும். மறையும். உண்டாகும். மறையும்.

இது திகைப்பூட்டும் கோட்பாடு. ஆனால் உதாரணங்கள் எக்கச்சக்கமாக வந்து விழுகின்றன. அமெரிக்க ஏகபோக முதலாளிகள் Morgans, Harrimans, Fricks , Rockfellars… என்று பட்டியல் நீள்கிறது. பணம் சேர்க்க, எப்படி எல்லாம் இவர்கள் ஆட்டம் போட்டார்கள் என்று விலாவாரியாய் சொல்லிக் கொண்டே போகிறார்.

எந்த அமைப்பு (முதலாளித்துவம்) முதலாளிகளை வாழ வைக்கிறதோ அந்த அமைப்புக்கே எதிராய் செயல்பட்டு அதை அழிக்கப் போகிறார்கள் அவர்கள் என்று அவர் சொன்னதை புத்திஜீவிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகவே பொருளியலாளர்கள் சிலரைத் தாண்டி அந்த நூலின் அடிப்படை செய்தி வேறு யாருக்கும் போய்ச் சேரவில்லை. எதுவோ தெரியவில்லை. முன்னைய நூல் போல இது பிரபலம் ஆகவில்லை. சாதாரண மக்களுக்குப் புரியாத பொருளியல் வார்த்தைகள் அதிகமாக இருந்ததும் ஒரு காரணமோ?

அவர் எதிர்காலம் பற்றி மூன்று கணிப்புகள் சொல்லி இருந்தார் : (1) முதலாளித்துவம் உடைந்து போனபிறகு எந்திரங்கள் சமுதாயத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடும். எந்திரங்களின் வழிகாட்டுதலில் சமுதாயம் இயங்கும்.

(2) சமூகம் பல பிளவுகளாகப் பிரியலாம். ஆனால் ஏழைகள் – பணக்காரர்கள் மோதல்கள் அல்ல. எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கலாம். அல்லது பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியலாளர்கள் என்று அந்த எந்திரங்களின் பின்னால் இருக்கும் வர்க்கங்களுக்கு எதிரான பிரச்னைகள் வெடிக்கலாம்.

(3) அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்கள் கைகளுக்குள் அதிகாரம் போகாவிட்டால் என்ன நடக்கும்? முதலாளிகளின் கொட்டம் இன்னும் அதிகமாகும். அவர்களே ஆளுக்காள் அடித்துக் கொள்வார்கள். அல்லது ராணுவங்களோடு கைகோர்த்துக் கொள்வார்கள்.

இந்த வகை ஆட்சியை இன்று நாம் பாசிசம் என்று சொல்கிறோம். கார்ல் மார்க்ஸின் சொன்ன தொழிலாளர் புரட்சிக்குப் பதிலாய் சமுதாயங்கள் இதில் தான் போய் நிற்குமோ?

தொடர்ந்து, அவர் வேறு சில புத்தகங்களும் கட்டுரைகளும் வெளியிட்டார். எல்லா வெளியீடுகளிலும் அவரின் கணிப்புகளை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இது இப்படி இருக்க, அவரின் புகழும் மற்றும் தோழிகள் விவகாரமும் சேர்ந்து அவரை மெகா ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தின. நார்வே நாட்டின் அரசரே கூப்பிட்டு விருந்து கொடுத்தார்.

பின்னாளில், அவரின் பார்வை அய்ரோப்பா பக்கம் திரும்பியது. Imperial Germany (ஏகாதிபத்திய ஜெர்மனி) என்றொரு புத்தகம் (1911) வெளியிட்டார்.

இங்கிலாந்து அரசு, புத்தகத்தை ஜெர்மனிக்கு எதிரான அதன் பிரசாரத்துக்குத் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் புத்தகம் இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ யாரின் கைகளுக்கும் போய்ச் சேராமல் பார்த்துக் கொண்டது. (அஞ்சல் அலுவலகங்களுக்கு ரகசிய உத்தரவு போடப் பட்டிருந்தது.)

முதலாம் உலக யுத்தம் துவங்கியது. போர்களை வெறுத்த வெப்லென், என்னால் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவ முடியும் என்று அறிவித்தார். ஆனால் அவரை யாருமே சீண்டவில்லை. போனால் போகிறது என்று (உப்பு சப்பில்லாத) ஒரு பதவியை உணவு விநியோகத் துறையில் கொடுத்தார்கள்.

அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தானிய கொள்வனவில் எப்படி கிராமங்களையும் வணிகங்களையும் சீரமைப்பு செய்யலாம் என்று மேலிடத்துக்கு யோசனைகள் எழுதினார். அவர்களோ, அருமையான பரிந்துரைகள் என்று பதில் போட்டுவிட்டு அப்படியே குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டார்கள்.

1918 ல் அமெரிக்கா திரும்பினார். Dial பத்திரிகையில் பணியாற்றத் துவங்கினார். அவர் எழுத எழுத, பத்திரிகையின் விற்பனை பயங்கரமாக சரியத் துவங்கியது. அதை விட்டு விலகி ஒரு சமூக ஆய்வியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. (வழக்கம் போல் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை.)

அவரின் வாழ்க்கையில் புகழ் ஒரு பக்கமாகவும் துரதிர்ஷ்டங்கள் இன்னொரு பக்கமாகவும் எதிரெதிராய் மோதிக் கொண்டன.

விரக்தியின் எல்லைக்கு வந்தபோது, அமெரிக்க பொருளியலாளர் கழகத்தின் தலைமைப் பதவி தேடி வந்தது. நான் விரும்பும்போது தரவில்லை. இப்போ எதற்காகத் தூக்கிக் கொண்டு வருகிறீர்கள்? வேண்டாம். மறுத்து விட்டார்.

அவரின் நூல்களை பொருளியலாளர்கள் அலட்சியப் படுத்தினார்கள். பொறியியலாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு விவரங்கள் தெரியாமலேயே போயிற்று.

அவர் பற்றி நூலாசிரியர் என்ன சொல்கிறார்? The Theory of Leisure Class நூல் அவரின் சிறந்த நூல் என்று சொல்லலாம். அது மனிதர்களின் பாசாங்குத் தனங்களை வெளிப்படையாய்க் காட்டுகிறது. நாம் பகட்டு காட்டுகிற பேர்வழிகள். ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் அசிங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். இருந்தாலும், கார்ல் மார்க்ஸ் போல ஓர் திடமான கோட்பாட்டை அவர் முன்வைக்கவில்லை. சில சமயங்களில் அதி தீவிர எல்லைக்கே போயிருக்கிறார்.

முதலாளிகள் சாமர்த்தியமாக, காலத்துக்கு ஏற்றபடி வழிமுறைகளை மாற்றிக் கொண்டது அவருக்குத் தெரிந்திருக்காது. முதலாளிகளை எந்திரங்களின் மானேஜர்களாக முதலாளித்துவம் மாற்றிவிட்டதை அவர் அறிந்திருக்க முடியாது.

எந்திரங்கள் மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துமோ என்னமோ, தொழில் நுட்பம் நிச்சயம் மனிதர்களை மாற்றப் போகிறது என்பதை அன்றே சுட்டிக் காட்டியவர் அவர்.

என் பார்வையில் : அவர் சரியாகவே எதிர்காலம் பற்றிக் கணித்திருக்கிறார். எந்திரங்கள் என்பதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு என்று போட்டுப் பார்த்தால் :

எதிர்காலத்தில் Google, Facebook, Amazon, Microsoft, Apple … என்று பல பன்னாட்டுக் கம்பெனிகளின் கைப்பாவைகளாய் நாம் இருக்கப் போகிறோமா?

அல்லது செயற்கை நுண்ணறிவு நம்மை ஆளுமை செய்யுமா?

அல்லது செயற்கை நுண்ணறிவை இயக்கும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களோடு போராட வேண்டி வருமா?

வெறும் அனுமானங்களில் மூழ்கிப் போய் நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத கோட்பாடுகளைப் பொருளியலாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று அவர்களைக் கடுமையாக சாடிய மனிதர் அவர்.

பொருளியலை விட, மானுடவியல், உளவியல் இரண்டிலும் அதிகம் ஆழ்ந்து போனவர் அவர் என்கிறார் நூலாசிரியர்.

உங்கள் கற்பனைக் கோட்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மனிதர்கள் எப்படி ஒவ்வொரு சூழ்நிலையிலும் நடந்து கொள்கிறார்கள், ஏன் அவர்களின் நடப்புகள் அப்படி இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள் என்று பொருளியலாளர்களைப் பார்த்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அந்த மனிதர்.

1929 ம் ஆண்டு. அவரின் இறுதி நாட்களில், நண்பர்கள் யாரும் இல்லாத அதே தனிமையில், எப்போதும் வெளியே பார்த்தபடி, அதே அமைதியோடு வாழ்ந்திருக்கிறார். அவர் கால்களுக்கிடையில் எலிகள், பூச்சிகள், பிராணிகள் ஊர்ந்து சென்றிருக்கின்றன. ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அசையாமல் இருந்து அவதானித்தபடியே இருந்திருக்கிறார் – கடைசியாகக் கண் மூடும் வரை.

ஆச்சரியங்கள் நிறைந்த மனிதர்.

ஆயிரத்தில் ஒருவன்

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் போது, முதலில் கார்ல் மார்க்சுக்கு முன்னாடி என்று தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன். ஒருவேளை என் இடதுசாரித் தோழர்கள் முகம் சுளிப்பார்களோ? தயக்கம் . கடைசியில் ஆவன்னா ஓனா.

15 -16 ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி அல்லது மறுமலர்ச்சி என்பது அய்ரோப்பாவில் கிடுகிடுவென்று வளர்ந்து விடவில்லை.

500 ஆண்டுகளாக, எழுந்து, விழுந்து, ஒடி, நடந்து, தேங்கி நின்று என்று பல கட்டங்கள் தாண்டி 21 ம் நூற்றாண்டில் வந்து நிற்கிறது.

இந்த 21ம் நூற்றாண்டில், நாம் பெருமைப்படும் சாதனைகள், வியப்புகள் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு அதன் கீழே எட்டிப் பார்த்தால் :

அழுகுரல்கள், வேதனைகள், நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அதிர்ச்சிகள் என்று எத்தனையோ துயரங்கள் நம்மை ஏக்கத்தோடு பார்ப்பது தெரியும்.

அந்த காலகட்டங்களில் மக்களின் வாழ்வு எப்படி இருந்திருக்கிறது?உதாரணத்துக்கு, 1828 ம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளிவந்த The Lion பத்திரிகையில் வந்த ஒரு செய்தி :

Lowdham நகரில் ஒரு ஆலையில் பத்து வயது கூட நிறைவு செய்யாத சுமார் 80 ஏழைக் குழந்தைகள் தினமும் 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு சிறு குற்றம் செய்தாலும் அந்தக் குழந்தைகளை நிர்வாணமாக்கி கசையடிகள் கொடுத்திருக்கிறார்கள். கடுங்குளிரில் போதிய ஆடைகள் இல்லாமல், பன்றிகளோடு வாழ்ந்திருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள். இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அத்தனை கோரங்கள்.

விவசாயம் பெருந் தொழிலாய் இருந்த காலத்தில் அதில் கூலிகளாய் வாழ்ந்த பெருவாரி மக்களுக்கு ஒரு நேரக் கஞ்சியாவது கிடைத்தது. மறுமலர்ச்சி மலர மலர, விவசாய நிலங்கள் தொழில் பேட்டைகளாக ஒளிர ஆரம்பித்தன. சாதாரண மக்கள் தொழில் பேட்டைகளை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

முதலாளிகளின் கவனம் எப்போதும் கல்லாப் பெட்டிகளிலேயே இருப்பது தெரிந்ததே. விளைவு : முன்னை விட வறுமை. நாள் கணக்கில் பட்டினி. குழந்தைகளையும் வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை. வேறு வழி?

தவிர, இன்று போலவே அன்றும் முதலாளிகள் தொழிலாளர்களை விட, எந்திரங்களில் கூடுதல் பாசம் காட்டினார்கள். இதுவும் அனைவரும் அறிந்த ரகசியம்.

வாழ்வா சாவா என்கிற நிலையில் தொழிலாளர் வாழ்க்கை இருந்தது. எந்திரங்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பின் விளைவாய் நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன.

வேலை இன்மை ஒரு பக்கம். வேலை கிடைத்தாலும் அதில் கிடைத்ததோ ஊதியமல்ல – பிச்சைக் காசு. ஒரு செய்தி : 1779 ல் நடந்த ஒரு தொழிலாளர் போராட்டத்தில், சுமார் 8000 பேர் திரண்டு ஒரு பெரும் இரும்பு ஆலையையே கொளுத்தித் தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்துக்கு எதிரான போராட்டங்கள் 1811 ஆண்டளவில் இங்கிலாந்து முழுவதுமே தீவிரம் அடைந்தன.

(அன்றைய பிரபல நட்சத்திர பொருளியலாளர், ரிக்கார்டோ (David Riccardo) இப்படி வேலை இன்மையால் நடந்த கொந்தளிப்புகள் பற்றி ஓரிரு இடங்களில் மட்டும் போனால் போகிறது என்பது போல் குறிப்பிட்டிருக்கிறார். அன்றைய படித்த வர்க்கம், மேல்தட்டு வர்க்கம் எதுவுமே இந்த மனித அவலங்களைக் கண்டு கொள்ளவில்லை.)

அன்றும் எத்தனையோ புரட்சி சிந்தனையாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதில் சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் மற்றைய பொருளியல் நட்சத்திரங்களோடு சேர்த்து அறிமுகம் செய்திருக்கிறார் ராபர்ட் ஹெய்ல்ப்ரோனர் (Robert Heilbroner).

அவரின் The Wordly Philosophers நூலில் என்னை ஆச்சரியப்பட வைத்தவர்கள் ரெண்டு பேர்.

நான் ஏன் பிறந்தேன்

1771 ல் பிரிட்டனின் வேல்ஸ் மாநிலத்தில் பிறந்தவர் இந்த மக்கள் திலகம். பின்னாளில், அவர் பெரும் பணக்காரராய் வந்தாலும் வந்தார். புகழ் அவர் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்தது.

மக்கள் அவரை எங்கே பார்த்தாலும், எங்க வாத்தியார்டா என்று டா போடவில்லை. பதிலாக, மாண்புமிகு வள்ளல் நியூ லானார்க் நகரத்தை சேர்ந்த ஓவன் அவர்கள் என்று (நீளமாய்) மரியாதையோடு அழைத்தார்களாம்.

அன்றாடங் காய்ச்சிக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஓவன், தன் 18 வயசில் அண்ணன் தந்த 100 பவுண்ட் காசுடன் மான்செஸ்டர் நகரம் வந்து ஒரு சின்னதாய் ஒரு ஜவுளி உற்பத்தி ஆலை துவங்கி இருக்கிறார்.

அது எப்படி இயங்கியது என்பதை எழுதப் போனால் போரடிக்கும். ஏன் என்றால் ஓவனுக்கு சின்ன மீன்களில் ஆர்வம் இருக்கவில்லை. பெரிய மீன் எப்போ சிக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தார் அவர்.

வந்தது ஒரு விளம்பரம் – ஒரு பெரிய ஜவுளி ஆலைக்கு மானேஜர் தேவை. மானேஜர் ஆக பணியாற்றிய அனுபவம் ஏதும் ஓவனுக்கு இருக்கவில்லை. துணிவே துணை. நேரே போய் அந்த முதலாளி முன்னால் நின்றார் – உங்களுக்கு மானேஜர் தேவையாமே?

முதலாளி வயசு கேட்டார். பிறகு குடிப்பாயா என்று கேட்டார். இல்லை என்றார் ஓவன். என்ன சம்பளம் எதிர்பார்க்கிறாய்? 300 பவுண்டுகள் என்றார் ஓவன். என்னது? முதலாளி அதிர்ந்து போனார். (ஏன் என்றால் அந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய சம்பளம் யாரும் வாங்கியதே இல்லை.)

ஓவன் : இதுக்குக் குறைவாய் என்னால் வேலை செய்ய முடியாது. உங்களுக்குக் கட்டுப்படி ஆகாது என்றால் நான் என்ன செய்வது? நன்றி. வரட்டுமா?

முதலாளிக்குப் பேச்சே வரவில்லை. இப்படி ஒரு துணிச்சல் நிறைந்த இளைஞனை அவர் வாழ்க்கையிலேயே கண்டதில்லை. இவனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. என்னதாயிருக்கும்? புரியவே இல்லை. இருந்தும் ஆளை விட மனம் வரவில்லை. அவர் சொன்னார் : நீ தான்யா மானேஜர்.

முதலாளியின் உள்ளுணர்வு சரியாகவே இருந்தது. ஓவனின் திறமை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அசந்து போனார் அந்த முதலாளி. ஆறு மாதங்களிலேயே முதலாளி சொன்னார் : என் நாலில் ஒரு பங்கு பிசினஸை நீயே எடுத்து நடத்து ராஜா.

இருந்தும் அது போதவில்லை. இதை விடப் பெரிய மீன் கிடைக்காதா? சில ஆண்டுகளில் அது தானாய் வந்து விழுந்தது. அவர் காதலித்த பெண்ணின் தகப்பனார் நியூ லானார்க் நகரில் பெரும் பிரம்மாண்ட ஆலைகளின் சொந்தக்காரர், அதை அப்படியே விற்கப் போகிறேன் என்று ஒருநாள் விளம்பரம் போட்டார்.

ஓவன் இங்கேயும் அவர் ஸ்டைலில் எதிர்கால மாமனாரை வீழ்த்தினார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அத்தனை ஆலைகளும் அவர் சொந்தம். திருமணம் நடந்தது.

இந்த மக்கள் திலகமும் ரெண்டு விரல் காட்டினாரோ என்னமோ? அதாவது, நான் எப்படியாவது பெரும் முதலாளியாக வந்துவிட வேண்டும் என்பது தான் முதல் விரலின் அர்த்தம். அது தான் நடந்து விட்டதே. ரெண்டாவது விரல்?

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்

அடுத்து, இது வரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருந்த திட்டங்களை அமுல் படுத்துவேன் என்று வேலைகளில் இறங்கினார் அவர்.

குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் அநியாயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அப்படி வேலை கொடுத்தாலும் வளர்ந்த பிள்ளைகளுத் தான் வேலை. அதுவும் ஒரு நாளைக்கு மூணே முக்கால் மணித்தியாலங்கள் மட்டுமே.

ஆலை அருகிலேயே தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீடுகள். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள ஆயாக்கள். குழந்தைகளுக்குப் பள்ளி. அனாதைகளாய் வீதிகளில் அலைந்த குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லங்கள்.

தொழிலாளர்கள் எல்லாரும் பேட்ஜ் அணிந்திருந்தார்கள் – நாலு வண்ணங்களில். திறமைக்கும் ஒழுக்கத்துக்கும் பச்சை நிறம். அதில் கொஞ்சம் குறைவானவர்களுக்கு ஆரஞ்சுக் கலர். பரவாயில்லை என்று சிலருக்கு நீல நிறம். இவனுகளத் திருத்தவே முடியாது என்று நினைத்தால் அவர்களுக்குக் கருப்பு.

ஏன் அப்படி? ஒவ்வொரு மானேஜருக்கும் ஆளைப் பார்த்ததுமே இன்றைக்கு எவருக்கு எந்த வேலை கொடுக்கலாம் என்று லேசாய் முடிவெடுக்கலாமே. (தொழிலாளர்கள் பேட்ஜ் கலருக்கு எதிராய் மனு செய்யும் உரிமையும் இருந்தது.)

அப்போ ஆலைகளின் லாபம் பெரிசாய் இருந்திருக்காதே என்று சில ஆட்கள் வாதிடலாம். ஏன் அவ்வளவு தூரம்? பாருங்க. இந்த ஆட்டம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்று அந்த நாளிலேயே மற்ற முதலாளிகள் கிண்டலடித்தார்கள்.

லாபம் காட்டி எல்லார் வாயையும் அடைத்தார் ஓவன். அவரின் கொள்கை : தொழிலாளர்களை நாம் நன்றாய்க் கவனித்துக் கொண்டால் அவர்கள் முழு மனதோடு வேலை செய்வார்கள். லாபம் நிச்சயம். அது எல்லாருக்கும் நல்லது.

அந்த காலத்துப் பத்திரிகைகளில் ஓவன் பேர் பெரிசாக வரத் துவங்கியது. வெளிநாட்டுப் பத்திரிகைகளும் ஏட்டிக்குப் போட்டியாக எழுதித் தள்ள, மன்னர்கள், மந்திரிகள், பிரபுக்கள், எழுத்தாளர்கள், சீர்திருத்தவாதிகள், பணக்காரப் பெண்கள் என்று எல்லார் மனசிலும் அந்த ஆலைகளைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று மனசில் ஒரு குறுகுறுப்பு.

1815 – 1825 கால இடைவெளியில் சுமார் 25 000 பேர் அவரின் நியூ லானார்க் ஆலைகளுக்கு வந்து பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள்.

அடுத்து, தன்னுடைய இன்னும் சில கொள்கைகளை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் அவர் : தனியார் நிலங்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும். பணம் என்பதை இல்லாமல் ஒழித்து விட வேண்டும்.

(அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று ஏற்கெனவே தெரிந்திருந்தது. சாத்தான் சும்மா இருக்கமாட்டான். அவன் தான் இப்படி ஆட்களை அனுப்பி கலாட்டா பண்ணுகிறானோ? பேசிக் கொண்டார்கள்.)

புகழ் வந்தால் பொறாமையும் சேர்ந்து வரும். தெரிந்ததே. ஆகவே எதிரிகள் பொய், புனைக் கதைகளை நாலா பக்கமும் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

நியூ லானார்க் நகரம் பத்தாது. நாடு முழுக்க என் கொள்கைகளை செயல்படுத்தினால் என்ன? யோசித்தார் ஓவன். அன்றைய பிரபுக்கள், அரசியல்வாதிகள் எல்லாரையும் சந்தித்தார்.

அவர் கனவு கண்ட ஊர்கள் எப்படி இருக்கும்? (பேர் : கூட்டுறவுக் கிராமங்கள்) ஒவ்வொரு ஊரிலும் 800 இல் இருந்து 1200 பேர் வரை வாழ்வார்கள். ஆலைகள், பள்ளிக் கூடங்கள், பூங்காக்கள், மருத்துவ மனைகள் கொண்ட தன்னிறைவு ஊர்களாக அவை இருக்கும். சுருக்கமாக சொன்னால், ஒரு சுவர்க்கத்தையே பூமியில் உருவாக்கி விடலாம் என்று நம்பினார் அந்த மனிதர்.

அவரின் தளராத முயற்சியால் (அல்லது நச்சரிப்பு தாங்க முடியாமல்?) அவரின் சிபாரிசுகளை அமுல் படுத்த அன்றைய நாடாளுமன்றம் ஒரு குழு அமைத்தது. (இதெல்லாம் சரிப்படாது என்று முணுமுணுத்துக் கொண்டு அன்றைய பொருளியலாளர் ரிக்கார்டோவும் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராய் இருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

ஆனால் பணம் திரட்ட முடியவில்லை. வெறுத்துப் போய், அமெரிக்கா போய் என் திட்டங்களை செயல்படுத்துவேன் என்று முடிவெடுத்தார் அவர்.

புதிய வானம் புதிய பூமி

இன்டியானா மாநிலத்தில் இயங்கிய ஒரு தீவிரவாத கிறிஸ்தவ அமைப்பின் நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கினார்.

தன் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஊராக, புதிய அமைதி (New Harmony) என்று பேர் வைத்தார். விளம்பரம் போட்டார். 1826 ம் ஆண்டு ஜூலை 4 ந் தேதி பெரும் ஆரவாரத்தோடு அந்த ஊர் திறப்பு விழா நடந்தது.

இங்கே தனியார் நிலம் என்று எதுவும் இருக்காது. எல்லாம் ஊருக்கே சொந்தம். எல்லாரும் இங்கே பங்குதாரர்கள். மதத்துக்கோ அல்லது திருமணங்களுக்கோ இங்கே இடமில்லை. புது உலகம் படைப்போம். வாருங்கள்!

கூட்டம் தாங்க முடியவில்லை. 800 அல்ல. அதைவிடப் பன்மடங்கு. ஆனால் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. ஆளுக்கொரு யோசனைகள். குழப்பங்கள்.

மோசடிகள், ஏமாற்று வேலைகள் தாராளமாகவே நடக்க ஆரம்பித்தன. அதில் சேர்ந்திருந்த ஒரு ஆள் நிதி மோசடி செய்து பக்கத்து ஊரில் ஒரு மது தயாரிக்கும் ஆலை துவங்கியது இன்னொரு சோகம். இன்னும் வேறு வேறு கவர்ச்சியான பேர்களோடு அக்கம்பக்க ஊர்களில் எட்டிக்குப் போட்டியாக புதிய கிராமங்கள் தோன்றின.

துவங்கி இரண்டு ஆண்டுகளிலேயே புதிய அமைதியை இழுத்து மூடினார் ஓவன். நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றார்.

இருந்தும் அந்த காலகட்டத்தில், அன்றைய அமெரிக்க அதிபர், ஜாக்சன் மற்றும் மெக்ஸிகோ தலைவர்களையும் சந்தித்துத் தன் திட்டங்களையும், கொள்கைகளையும் விளக்கி உதவி கேட்கத் தவறவில்லை.

ஆனால் பலன் இல்லை. மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். கிராக்கு என்று கிண்டல்கள், கேலிகள். அவரோ மனந் தளராத விக்ரமாதித்தன் போல் இயங்கினார். காரணம் : அன்றைய தொழிலாளர் இயக்கங்கள், நெசவாளர்கள், மட்பாண்டத் தொழிலாளர்கள் எல்லார் கண்ணிலும் அவர் ஒரு மீட்பராகத் தெரிந்தார்.

தொழிலார்களைத் திரட்டி அவர்களே நடத்தும் ஆலைகளை அறிமுகம் செய்வதில் முனைப்போடு செயல்பட்டார். இருந்தும் நிர்வாகத்தில் பூசல்கள். எல்லாமே திவால் ஆகின. (இதில் Rochdale Pioneers என்கிற ஒரு கூட்டமைப்பு குறிப்பிடப் படவேண்டிய ஓர் தொழிலாளர் கழகம்.)

1833 ல் அவர் துவங்கிய The Grand National Union தொழிலாளர் கழகம் இன்றைய பிரிட்டனின் தொழில் கட்சிக்கு அடித்தளம் என்றால் மிகையல்ல. நல்ல ஊதியம், வேலைத்தளங்களில் தொழிலாளருக்குப் பாதுகாப்பு மற்றும் வசதிகள் வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த கழகம் அது.

ஆனால் இரண்டு ஆண்டுகளில் அதுவும் உடைந்தது. நிர்வாகிகள் ஆளுக்காள் அடித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர், அந்த ஆள் கடவுளை நம்பாத ஆளய்யா என்று வேறு கோஷம் போட்டார்கள். பாவம் கடவுள்.

அவரின் 64 வயதில், அவரின் சாதனைகள் ஒவ்வொன்றாய் வீழ்ச்சி கண்டதை அவர் கண்ணாலேயே பார்க்க வேண்டிய துரதிர்ஷ்டம். இருந்தும் இன்னும் 23 ஆண்டுகள் வாழ்ந்தார் அந்த மனிதர்.

அவரின் முதுமைக் காலத்தில் ஆவிகளோடு பேசுவது, யோசனைகள் கேட்பது என்று போயிருக்கிறார். மனிதர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை ஆவிகள்? எதுவானாலும் அது அவர் சொந்த விஷயம்.

ஓவனின் விமர்சகர்கள் பல கருத்துக்களை முன் வைக்கிறார்கள் :

அவருடைய அனைத்து செயல்பாடுகளும் சோதனைக் களங்களாகவே இருந்தன. அதுவும் நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தி வராத கற்பனைகள் அவரைத் தோல்வி அடையச் செய்தன. காலத்துக்கேற்ப அவர் வளைந்து கொடுத்திருக்க வேண்டும். தவறிவிட்டார்.

அவரின் சீர்திருத்தங்களின் படி, தொழிலாளர்கள் ஆலையையே நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப் பட்டிருந்தது.

மதம் இன்னொரு முக்கிய காரணி. அதை அவர் அலட்சியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

கார்ல் மார்க்ஸும் எங்கெல்சும் ஓவனின் நடப்புகளை ஆதரிக்கவில்லை. என்ன சொன்னார்கள்?

ஓவனின் செயல்பாடுகளால் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவே முடியாது. ஏன் என்றால் அதற்கான காரணிகள் அன்று உருவாகி இருக்கவில்லை.

அடுத்து, ஓவன் கனவு கண்ட சமுதாயம் அன்றிருந்த சூழ்நிலையோடு ஒத்துப் போகவே முடியாது. வன்முறை இல்லாமல் சமுதாயத்தை மாற்றிவிட முடியும் என்று நினைத்தது அவரின் பெரும் தவறு. முதலாளிகள் இலகுவாக அவரின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். இது எதிர்காலத்துக்கும் பொருந்தும்.

தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த புரட்சி (வன்முறையில்) மட்டுமே வெற்றி காண முடியும்.

தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டால் வேறு எதுவும் யோசிக்க மாட்டார்கள். அத்தோடு திருப்தி அடைந்து விடுவார்கள் என்று நினைத்தது அடுத்த தவறு. மனிதர்களின் ஆசைகள் அளவில்லாதவை. அவரின் சிந்தனை உண்மை நிலவரத்துக்குப் புறம்பானது.

ஆகவே பொருளாதார வளர்ச்சி முக்கியம். புதிய சமுதாயம் அப்போது தான் நின்று பிடிக்கும்.

நூலாசிரியர் ஹெய்ல்ப்ரோனர் ஓவன் பற்றி என்ன சொல்கிறார்?

நடைமுறை சாத்தியங்கள், யோசிக்காமல் துணிச்சலான முடிவுகள் எடுக்கும் தைரியம், தடாலடி செயல்பாடுகள், பகுத்தறிவு, பைத்தியக்காரத்தனம் எல்லாம் கலந்த ஒரு வினோத கலவை அவர்.

எது எப்படி இருந்தாலும், 20 ம் நூற்றாண்டின் கடைசியில் அமுலுக்கு வந்த அத்தனை முற்போக்கு செயல்பாடுகளையும் 19 ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே செய்து காட்டிய மாமனிதர் ஓவன்.

அவர் பொருளியல் நிபுணர் அல்ல. மற்றவர்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்க, அவர் செயல்வீரராய் நடை போட்டார்.

நேரம், காலம் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உலகம் நல்லதோ கெட்டதோ, சூழ்நிலைகள் சரியில்லையோ என்னமோ எனக்குத் தெரியாது. என் சித்தாந்தம் சரியா தவறா அதுவும் தெரியாது. ஆனால் மாற்றியே ஆக வேண்டும். என்னால் அது முடியும்.

நம்பிக்கை என்று ரெண்டாவது விரலையும் காட்டியபடி விடை பெற்றிருக்கிறார் அந்த மக்கள் திலகம்.

நல்லவன் எனக்கு நானே நல்லவன்

மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அன்பானவர்கள், பண்பானவர்கள், பாச மலர்கள், பன்னாடைகள், படா கிரிமினல்கள், பைத்தியங்கள், எதிலும் சேர்த்தி இல்லாத காமா சோமாக்கள் என்று எத்தனையோ ரேஞ்சுகளில் பார்க்கிறோம். மனிதர்களின் குணாதிசயங்கள் ஏன் இப்படி ஒரே கராபுராவாய் இருக்கின்றன?

விடை ஒன்றல்ல. பல விடைகள் இருக்கின்றன என்கிறார் மூளை நரம்பியல் பேராசிரியர் சப்போல்ஸ்கி (Robert Sapolsky). அவர் எழுதிய Behave என்கிற நூல் நூலே அல்ல – அது ஓர் பெரும் அறிவுக் களஞ்சியம். 2017 களில் வெளிவந்த புத்தகம். 773 பக்கங்கள். 17 அத்தியாயங்கள்.

நான் இரண்டு அத்தியாயங்களில் மட்டும் (அத்தியாயம் 10, 14) கை வைத்திருக்கிறேன். அத்தோடு கூடுதலாக சில தகவல்கள்.

அந்தப் படுபாவி ஹிட்லர் இருக்கானே. அவன் மட்டும் என் கையில் சிக்கியிருந்தால் ?.. என்று நூலை ஆரம்பிக்கிறார் பேராசிரியர். பிறகு என்னென்ன சித்ரவதைகள் செய்வேன் என்று வேறு பட்டியல் போடத் துவங்குகிறார்.

என்னது? பேர் பெற்ற அறிவியலாளர் ஒருவர் இப்படி எழுதலாமா? பிறகு விஷயம் புரிந்தது. தன் பள்ளிப்பருவ வயதில் இப்படி எல்லாம் கற்பனை செய்வதில் கிடைத்த ஒரு சந்தோஷம் அது என்று தொடர்கிறார். (பேராசிரியர் ஒரு யூதர்.)

அநீதிகள், அநியாயங்கள் என்று வரும்போது தடுக்க முடியவில்லை என்றால் வேறென்ன செய்வது? அதற்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. இப்படிக் கற்பனை செய்து கோபங்களை ஆற்றிக் கொள்கிறோம் என்கிறார் அவர்.

வன்முறைக்கு எதிரானவர்கள் நாம் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். சமூக நீதிக்காக, கையில் தராசு வைத்திருக்கும் தேவதைக்காக, நாட்டுக்காக, மொழிக்காக, இன்னும் பல …. க்காக, வன்முறை உபயோகப்படும் என்றால் ம்ம்.. பண்ணலாமே என்கிறோம். இல்லையா? – கேட்பது அவர்.

அதாவது, நாம் வன்முறையை வெறுப்பவர்கள் அல்ல. சரியான திசையில் அது நகருமானால் அதற்கு ஜே! போட ரெடியாக இருக்கிறோம்.

அன்பு என்றால் உருகிப் போகிறோம். அதில் கரைந்து போய் கண்ணீர் விடுகிறோம். பேராசிரியரின் பார்வையிலோ அன்பு வேறொரு பரிமாணம் எடுக்கிறது. அன்புக்குள் ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது என்கிறார். அதே சமயம், மனித மனத்தின் ஒரு முக்கிய பங்காளியாய் அது இருக்கிறது என்பதை அவர் மறுக்கவில்லை. இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தத்துவம்: மனித மனம் ஒரு புதிர். இரண்டு நிகழ்வுகளை விவரிக்கிறார் பேராசிரியர்.

இந்தோனிஷிய முன்னாள் சர்வாதிகாரி சுஹார்ட்டோவின் குண்டர் படையில் இருந்து ஒய்வு பெற்ற ஒரு முன்னாள் குண்டரை பேட்டி எடுத்திருக்கிறார் புகழ் பெற்ற நோபல் பரிசு எழுத்தாளர், நைப்பால் (V.S.Neipal).

(சுஹார்ட்டோ ஆட்சிக்கு வந்ததும் சுமார் அரை மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவரின் எதிரிகள், கம்யூனிஸ்டுகள், சீனர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் கூடக் கொன்று குவிக்கப் பட்டார்கள்.)

குண்டர்கள் குழு ஒவ்வொரு கிராமமாய் வந்திறங்குமாம். அங்கிருக்கும் அத்தனை பேரையும் கொலை செய்யாமல் அடுத்த கிராமம் போவதில்லை. ஒரு வித்தியாசம்: கூடவே ஒரு இசைக்குழுவும் அவர்களுடன் வரும்.

இன்னிசை முழங்க, முழங்கக் கொலைகள் விழும். நைப்பால் கேட்டாராம்: கொலை செய்யப் போகிறீர்கள். அதற்கு இசை எதற்கு? குற்ற உணர்ச்சி துளிக் கூட இல்லாமல் அந்தக் கொலையாளி சொன்னாராம்: கொலை செய்தாலும் அது அழகாக இருக்க வேண்டுமே. அது தான்.

இரண்டாவது, பேராசிரியரின் சொந்த அனுபவம் : ஒரு தடவை பேராசிரியர் குடும்பத்துடன் காரில் ஓர் பயணம் போயிருக்கிறார். அவர் மனைவி ஓட்டுநர். திடீர் என்று இன்னோர் வண்டி இவர்கள் வண்டி முன்னால் வேகமாய்ப் புகுந்து இடைவெட்டுவதும், போகவிடாமல் தடுப்பதுமாய் ஒரே பயங்கரம். எந்த நேரமும் விபத்து நடக்கலாம். அந்தக் காரோட்டி வேண்டுமென்றே செய்கிறான் என்று புரிந்துவிட்டது.

நல்ல வேளை. ஓரிடத்தில் சிகப்பு விளக்கு மின்னுகிறது. இவர் வண்டி நிற்கிறது. அந்தப் பைத்தியக்காரனின் வண்டியும் வந்து நிற்கிறது. பேராசிரியரின் மனைவி கோபத்தோடு எதையோ ஒரு பொருளை எடுக்கிறார். அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறேன்! கோபத்தோடு வண்டியை விட்டு இறங்குகிறார்.

பேராசிரியர் கூடவே இறங்க முடியாத சூழ்நிலை. பயந்திருந்த குழந்தைகளைத் தேற்றிக் கொண்டிருக்கிறார்.

அவன் வந்த வண்டியின் ஜன்னலில் கையால் அறைகிறார் பேராசிரியரின் மனைவி. அவன் மெதுவாகத் திறக்கிறான். நீ எனக்கு செய்த அதே முட்டாள்தனத்தை இன்னொருவருக்கு செய்யாதே. அதற்கு இது ஒருவேளை உதவி செய்யலாம். இந்தா பிடி! அந்தப் பொருளை அவன் வண்டிக்குள் வீசுகிறார்.

பிறகு மீண்டும் தன் வண்டிக்குள் ஏறி வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார்.

இனி அவன் தொந்தரவு செய்யமாட்டான். பாருங்களேன்! மனைவி சொல்கிறார். அவர் சொன்னது போலவே, அந்த வண்டி மெதுவாக இவர்கள் பின்னால் சாதுவாக வந்து இன்னொரு சாலைக்குள் திரும்பி மறைந்து விடுகிறது.

ஒரே ஆச்சரியம். அப்படி என்ன தான் மனைவி வீசியிருப்பார்? கேட்கிறார். மனைவியிடம் இருந்து பதில் வருகிறது : லாலி பாப்.

முகவுரை முடிந்து விட்டது. நூலுக்குள் நுழைவோமா?

மன்னிக்க வேண்டுகிறேன் உங்கள் ஆவலைத் தூண்டுகிறேன்

ஓர் மனிதரின் நடப்பை நின்று ஓர் கணம் கவனிக்கிறோம். அவரால் ஒரு செயல்பாடு நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அவர் மூளையில் அதற்கான ஒரு உந்துதல் ஏற்படாமல் அந்த நிகழ்வு நடந்திருக்கவே முடியாது. இல்லையா?

அந்த நிகழ்வுக்கு ஓர் அரை வினாடிக்கு முன்னே அந்த மனிதரின் மூளையில் என்ன நடந்திருக்கும்? அவரின் நடத்தையை எப்படி நியூரான்கள் தூண்டியிருக்கும்? மூளையின் எந்தெந்தப் பகுதிகளில் இருந்து அவை தோன்றி இருக்கும் ?

அந்த நிகழ்வுக்குப் பின்னே சத்தம் (ஒலி) , பார்வை (ஒளி), மணம், அல்லது உடல் தொடுகை எதிர்வினை (ஸ்பரிசம்) என்று ஏகப்பட்ட பாதிப்புகள் இருக்கின்றன. (அப்போதைய சூழ்நிலை)

அரை செக்கனுக்கு முன்னே, அந்த நடத்தையை முடிவு செய்தது யார்? கிட்டத்தட்ட இந்தக் கால இடைவெளியில் என்ன நடந்திருக்கும்? இங்கே மூளை நரம்பியல் துறை (Neurology) துவங்குகிறது.

நிகழ்வு நடக்க, ஒரு மணித்தியாலம் முன்னே என்ன நடந்திருக்கும்? அதன் தாக்கமும் அந்த நிகழ்வுக்கு ஓர் உந்துதல். உடலியல் துறை (Physiology) இங்கே வருகிறது.

இன்னும் பின்னால் போய், நாட்கள், ஆண்டுகள் முன்னே? அந்த மனிதரின் அம்மா, அப்பா, அப்புறம் தாத்தா, பாட்டி , அவர்களின் மரபணுக்கள் கூட அந்த நிகழ்வுக்கு உடந்தை என்று பல படிகள் இன்னும் கீழிறங்க, மரபணு இயல் (Genetics) வந்து நிற்கிறது.

இன்னும் ஆயிரம், பல்லாயிரம், மில்லியன் ஆண்டுகளின் முன்னேயும் போய்ப் பார்த்தால்? அவர் முன்னோர்களின் வாழ்க்கை முறை, தவிர, நாம் மனிதர்களாகத் தோற்றம் அடையும் காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், சுற்றுச் சூழல், பழக்க வழக்கங்கள், பண்பாட்டு மாற்றங்கள் என்று எத்தனையோ காரணங்கள் அந்த மனிதரின் நடத்தைக்குப் பின்னே செயல்பட்டிருக்கின்றன.

பேராசிரியர், மில்லி செக்கன்களில் துவங்கி மில்லியன் ஆண்டுகள் வரை அழைத்துச் செல்கிறார். நகைச்சுவை, வரலாற்றுத் துணுக்குகள், சிந்திக்க வைக்கும் அறிவியல் கருத்துக்கள், ஆய்வு முடிவுகள் என்று பின்னி எடுத்திருக்கிறார் பேராசிரியர்.

நூலின் முக்கிய அம்சம் : அய்யா, ஒவ்வொரு ஆய்வு முடிவையும் ரொம்ப அழகாய் விவரித்துக் கொண்டே போவார். ஆனால் திடீர் என்று ரூட் மாறிவிடும். சொல்லாமல் கொள்ளாமல் விஷயம் எதிர்த்திசையில் போக ஆரம்பித்துவிடும்.

(குழப்பம் வருகிறதா? ஒரு சின்ன இடைவேளை விட்டு — ஒரு டீ, காபி அல்லது குளிர்பானம் — மனசுக்கும் உடம்புக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்றிவிட்டுத் துவங்கினால் புரிய ஆரம்பிக்கும்.)

நான் என்ன கதையா சொல்கிறேன்? நாம் விழிப்போடு வாசிக்கிறோமா? பேராசிரியர் நமக்கு வைக்கும் தேர்வு அது. (அடிக்கடி வைக்கிறார்.)

இனி, அந்த அரை வினாடிக்குள் நடந்தவை, நம் மூளைக்குள் நடந்தவை. நுழைகிறோம். அங்கே எக்கச்சக்கமான வேலைகள் நடக்கின்றன.

Frontal Cortex, (FC) : இவர் நம் மூளையின் கட்டுப்பாட்டு அதிகாரி. இவருக்கு எப்போதும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கிறார்.

Prefrontal Cortex (PFC) : மூளையின் எல்லாத் துறைகளிலும் இருந்து வரும் தகவல்களை வடிகட்டி, ஆதாரங்களையும் சேர்த்து தருணத்துக்கு ஏற்ற முடிவுகளை எடுத்து FC க்குக் கொடுப்பவர் இவர். அதாவது, தலைமை ஆலோசகர். இவரின் குழுவில் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் : vmPFC. மற்றவர் : dlPFC.

vmPFC : அழுவதா? சிரிப்பதா? எரிந்து விழுவதா? — முடிவெடுப்பவர் இவர். உணர்ச்சி பூர்வமானவர்.

dlPFC : கடுமையான கணக்குகள் போட்டு, தர்க்க ரீதியான முடிவுகளை எடுப்பவர் இவர். பெப்சியா, கொக்கா கோலாவா? பிட்ஸாவா, நூடுல்ஸா?

Amygdala : என் வழி தனி வழி என்று எப்போதும் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருப்பார் இவர். தடுமாற்றமா? பயமா? வலி வரும் போல இருக்குதே? – அப்பப்போ தவிக்கிறோமே. காரணம் இவர் தான்.

இன்னும் எத்தனையோ நிபுணர்கள் இருக்கிறார்கள். எல்லார் பேரையும் போட்டுக் குழப்புவது தப்பு. எப்படியோ, எல்லாரும் நம் மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வேலை செய்கிறார்கள். நாம் இயங்குவது அவர்கள் கையில் இருக்கிறது.

அப்போ பிரச்னைகளும் கூடவே இருக்குமே. நிச்சயமாக. நான் தான் பெரியவன், நான் தான் பெரியவன் என்று சண்டை போடுவதிலும் கெட்டிக்காரர்கள் இவர்கள். சில அல்லது பல சமயங்களில் கட்டுப்பாட்டு அதிகாரிக்கே (FC) தெரியாமல் விஷயத்தை நடத்திவிட்டு கமுக்கமாய் இருந்து விடுவார்கள்.

பொதுவாய், ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் FC அதிகாரி மூளையின் நியூரான்களுக்கு கட்டளை கொடுக்கிறார்: ஓடுங்கடா! ஒரு செயல்பாட்டை முடிவு செய்ய, கிட்டத்தட்ட 700 மில்லி செக்கன்கள் எடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தக் கால இடைவெளியில், 80 வீதம் உறுதி செய்துவிட்டால், நாம் நம் நடப்பை செயல்படுத்த ஆரம்பிக்கிறோம்.

(மன்னிக்க வேண்டும். ஒரு பெரும் சிக்கலான அமைப்பு கொண்ட மூளையின் இன்னும் சிக்கலான செயல்பாடுகளை மிக, மிக எளிமையாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் புத்தகத்தை வாசியுங்கள். துப்பறியும் கதைகளை விட கிக் அதிகம்.)

Amygdala வின் செயல்பாடுகள் பற்றி முக்கியமான குறிப்புகள் : வலுக்கட்டாயமாக சண்டைக்குப் போகும் குணம், மூர்க்கத்தனம், எந்த நேரமும் தற்காப்பு பற்றிய நினைவுகள், கடந்த காலங்களில் ஏற்பட்ட பய அனுபவங்கள் மீண்டும் மீண்டும் எழுந்து மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதால் ஏற்படும் பதற்ற நிலை…

1968 களில் ஜெர்மனியில் செம்படை (Red Army Faction) என்றோர் தீவிரவாத அமைப்பு தோன்றி குண்டு வெடிப்புகள், வங்கிக் கொள்ளைகள் என்று நடத்தியதில் அரசுக்கோ அதிர்ச்சி. பத்திரிகைக் காரர்களுக்கோ பெரும் லாபம்.

அதன் அமைப்பாளர்களில் ஒருவரான Ulrike Meinhof தேடுதலில் பிடிபட்டார். ஆனால், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் சிறையில் தூக்கு மாட்டி இறந்து போனார். (அது கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்று வரை மர்மம் தான்.)

அவர் உடலைப் பரிசோதனை செய்தார்கள். அவருக்கு மூளையில் புற்று நோய் வந்து அறுவை சிகிச்சை நடந்திருப்பது தெரிய வந்தது. சிகிச்சையின் போது amygdala வின் மேல் காயம் ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

அடுத்த உதாரணம் : Charles Whitman. ஒரு பொறியாளர். மண வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. பள்ளிப் பருவத்தில் கோயிலில் ஆராதனைப் பாடல்கள் பாடும் குழுவில் (choir boy) இருந்தவர்.

1966 களில் ஒருநாள். அவர் தாயையும் மனைவியையும் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர் உடல் அருகில் ஒரு கடிதம் : நான் ஏன் இப்படி செய்தேன்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லையே. எனக்கு ஏன் அடிக்கடி மூர்க்கத்தனம் வந்தது? தாங்கமுடியாத தலைவலி வேறு ஆட்டி வைத்ததே. ஏன் இப்படி நடந்து கொண்டேன்?

உடல் பரிசோதனையில் அவர் மூளையின் amygdala வில் சிதைவு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. தவிர, அவர் இளவயதில் தந்தை மூலம் மோசமான வன்முறைக்கு ஆளாகி இருக்கிறார். பிறகு அவர் கடற்படையில் பணியாற்றியபோது சக வீரர்களோடு பல தடவைகள் அவசியமே இல்லாமல் சண்டைக்குப் போயிருக்கிறார்.

ஆகவே, Amygdala தான் கொலையாளி? அப்படி எந்த முடிவுக்கும் வர முடியாது. ஏன் என்றால் வேறு காரணங்களும் அதன் பின்னே மறைந்திருக்கின்றன என்கிறார் பேராசிரியர்.

போர்க்கால பயங்கரங்கள், அந்தத் தாக்கங்களை மறக்க முடியாமல் தவிப்பவர்கள் ஒரு வித மன அழற்சியால் பாதிக்கப் படுகிறார்கள் – Post Traumatic Stress Disorder. சுருக்கமாக, PTSD என்பார்கள். இவர்களின் Amygdala விரிவடைந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

விலங்குகளில் செய்த பரிசோதனைகளில் Amygdala வில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாகத் தெரிகின்றன. உதாரணமாய் : ஒரு ஆண் குரங்கை ஒரு கூட்டிலும் அதன் ஜோடி பெண் குரங்கை இன்னோர் கூட்டிலும் வைத்திருக்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, பெண் குரங்கின் கூட்டில் இன்னோர் ஆண் குரங்கு விடப்படுகிறது.

எதிர்பார்த்தது போலவே, ஜோடி ஆண் குரங்கு பல்லை நறநற என்று கடிக்கிறது. உடம்பில் அங்கும் இங்கும் சொறிகிறது. Amygdala தூண்டப்படுகிறது. ஆனால், வன்முறை உணர்வுகள் மூளையில் எழும்போது ஏற்படும் தீவிர மாற்றம் அல்ல. கவனிக்கவும். மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அதிகப்படி அல்ல.

ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், குரங்கு நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இது ஓர் சமூக விளைவு. சமூகத்தால் கற்றுக் கொடுக்கப்பட்ட சிந்தனை இங்கே செயல்படுகிறது. (உன் பெண்டாட்டி பக்கத்தில் இன்னொருத்தன் இருக்கானே. உன் யோக்கியதை அவ்வளவு தான் போலருக்கு.) சமூகத்துக்கு என்ன பதில் சொல்வது?

சமூக உறவுகள் மட்டுமல்ல. இன்னொருத்தர் கையில் ஊசி போட்டால் நம் கையிலும் குத்துகிறது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. அடுத்தவர் இருமினால் எனக்கும் தொண்டையில் கரகரப்பு உண்டாகிறது. — Amygdala.

நாம் வேறு, அவர்கள் வேறு, என்கிற வேற்றுமை உணர்வையும் கொண்டு வருவது Amygdala. (நம்ம குலம் என்ன? அறிவென்ன? அந்தஸ்து என்ன? நீ என்னடான்னா அந்தக் கழிசடையோட சுத்திட்டிருக்கியாமே.)

யாரோ ஒருவர், அவர் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து உங்களை நோக்கிக் குறி பார்க்கிற மாதிரி தெரிகிறது . அய்யோ! அது துப்பாக்கி. உங்களை சுடப் போகிறான். ஓடுங்கள்! ஓடுங்கள்! உங்கள் மூளையில் ஒரு குரல் கேட்கிறது. அவ்வளவு தான். நீங்கள் தலை தெறிக்க ஓடுகிறீர்கள். அல்லாவே. ஆண்டவரே. அம்மையப்பா. காப்பாத்துங்களேன்.

ஒருவர் முதுகில் தட்டி சொல்கிறார். யோவ்! அந்த மனுஷன் செல்போன் எடுத்துப் பேசிட்டிருக்கான். நீ என்ன பைத்தியமா? — உங்களைப் பைத்தியம் ஆக்கியது Amygdala.

(ஒரு சின்ன தகவல் : Amygdala முதலில் FC கட்டுப்பாட்டு அதிகாரியுடன் பேசுகிறார். மறுக்க முடியாது. அவரோ யோசிக்கணும். தகவல்கள் போதாது. அது இது என்று இழுக்கிறார். இந்த ஆளை நம்பினால் அதோ கதி தான். காரியம் கெட்டுவிடும். ஆகவே அவருக்குத் தெரியாமலே, ரகசியமாய்த் தன் சொந்த நியூரான் படைக்குக் கட்டளைகள் கொடுக்கிறார் Amygdala.)

நிகழ்ச்சிக்கு வருவோம். நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு வேகமாக ஓடுகிறீர்கள் என்பதையும் கண்காணிக்கிறது Amygdala. துப்பாக்கி நெருங்குகிறது என்று அது நினைத்தால் உங்களை அது இன்னும் வேகமாக ஓட சொல்லி விரட்டும்.

துப்பாக்கி ஆள் அப்படி வேகமாகத் துரத்தவில்லையே? இப்படி நினைத்தால், அடே மக்கு, மெதுவா ஓடு என்று சொல்வதும் அது தான். இல்லாவிட்டால் போதும், நில் என்று சொல்வதும் அது தான்.

Amygdala வின் தூண்டுதல்கள் கம்மியாய் இருந்தால் நீங்கள் சோர்வாய் இருப்பீர்கள். தூக்கம் வருவது போல் இருக்கும்.

தூண்டுதல் மிதமாக இருந்தால், அக்கம் பக்கம் என்ன நடக்கிறது? எவன் என்ன செய்கிறான்? எச்சரிக்கையோடு இருப்பீர்கள்.

லாட்டரி சீட்டில் உங்களுக்கு முதல் பரிசு என்று கேள்விப்பட்டு பயங்கரமாய் டான்ஸ் ஆடுகிறீர்களா? யாரையோ கொலை செய்ய வேண்டும் என்று ஆவேசத்தோடு கிளம்பிப் போகிறீர்களா? ஒரு அழகான பெண் திடீர் என்று முன்னால் வந்து நின்று கழுத்தை சாய்த்து ஒரு பார்வை பார்க்கிறாளா?… என்ன கண்ராவியாய் இருந்தாலும் அந்த சமயத்தில் Amygdala அதி உச்சத்தில் இருக்கிறது என்பது அதன் அர்த்தம் – அதுவும் ஒரே மாதிரி.

பயப்படாமல், அதிர்ச்சி அடையாமல் ஒரு மரத்தடியின் கீழ் ஒரு கட்டில் போட்டு மாலை வெயிலில், மெல்லிய தென்றல் வீச, அந்த சுகத்தில் ஒரு சின்னத் தூக்கம் போடுகிறார் இந்த Amygdala என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து உலகமே அமைதிப் பூங்காவாக மாறிவிடும் என்று சொல்லிக் கண்ணடிக்கிறார் பேராசிரியர்.

FC இருக்கிறாரே, இவர் எப்போதும் சீரியஸ் சிங்காரம். தகவல்கள் திரட்டி, (PFC யின் ஆலோசனை முக்கியம்) நீண்ட கால அடிப்படையில், திட்டம் போட்டு ஒழுங்கோடு செயல்படும் சிறந்த நிர்வாகி இவர். கஷ்டமான முடிவுகள் – ஆனால் சரியான முடிவுகள் என்கிறோமே. அது இவரால் தான் முடியும்.

FC, 20 வயதைத் தாண்டும் வரை முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை. அதன் பிறகு அதன் ஆட்சியில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தனிப் பிறவி என்று சொல்ல வைப்பது FC.

FC நியூரான்கள் எல்லா விலங்குகளிலும் ஒரே மாதிரியே இருக்கின்றன. எண்ணிக்கையில் மட்டும் தான் வித்தியாசம். உதாரணமாய் : பறக்கும் பூச்சிகளில் அவை ஒரு சிறு எண்ணிக்கை மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது பில்லியன் பில்லியன்கள் பில்லியன்கள் பில்லியன்கள் எண்ணிக்கையில் மனிதர்களில் இருக்கின்றன.

முன் எச்சரிக்கை செய்வதில் FC யை மிஞ்ச முடியாது. ஒரு உதாரணம் : டெலிபோன் செய்ய எண்ணை அழுத்த முன்பு city code (நகர குறியீட்டு எண்) அழுத்தி விட்டாயா? நல்ல சமயத்தில் ஞாபகம் வந்தது என்று சர்வ சாதாரணமாய் நினைக்கிறோம். நினைவு வைத்திருந்து நம்மிடம் கேட்டவர் அவர்.

அவரிடம் குறைகளும் உண்டு. கண் முன்னால் ஒரு குழந்தை நீருக்குள் விழுந்து விடுகிறது. பாய்வதா, இல்லையா? யார் குழந்தை அது? எனக்கும் அந்தக் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஆபத்து வருமா? இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளுடன் குழம்பி ஒவ்வொன்றாக சிந்திக்க ஆரம்பித்து விடுவார்.

அவரின் பெருமைப்பட வேண்டிய குணாதிசயம் : சுய கட்டுப்பாடு. சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? (நண்பர்களோடு அன்போடு நட . சக தொழிலாளரை அடிப்பது அசிங்கம். டாய்லெட் போனபிறகு கால்சட்டை ஸிப்பை இழுத்து மூடு… )

எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கும் மனிதர்களின் FC யை சோதித்துப் பார்த்தால் நிச்சயம் அதில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பது தெரிய வரும்.

நம்மை சங்கடப்பட வைப்பதும் FC. எடுத்துக் காட்டாய் ஒரு தேர்வு : கட்டுப்படுத்த முடியாமல், ஒரு வண்டி பயங்கர வேகத்தில் பறக்கிறது. அதில் 5 பேர் உயிரைக் கையில் பிடித்தபடி காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள்.

பயப்பட வேண்டாம். ஒரு தீர்வு இருக்கிறது. வண்டி ஓடும் தடத்தை மாற்றினால் அவர்கள் பிழைக்க முடியும். ஆனால், அந்தத் தடத்தில் இன்னொரு அப்பாவி மனிதர் நிற்கிறார். அவர் அந்த வண்டி மோதி இறந்து விடுவார். என்ன செய்வீர்கள்?

என்ன செய்வது? அந்த ஐந்து பேருக்காக ஒருவரைத் தியாகம் செய்வது தப்பில்லை. தடத்தை மாற்றுங்கள். சொல்வது : 70 – 90 வீதமான மனிதர்கள் (புள்ளி விவரங்கள்).

அதே சமயம், அதே ஆட்களிடம், அந்தத் தடத்தை மாற்றும் சுவிட்ச் உங்கள் கையில் இருந்தால் என்ன செய்வீர்கள்? கேட்டால் முடியாது. சுவிட்ச் போடமுடியாது! கறாராக, ஒரே தொனியில் பதில் வருகிறது. மனிதர்கள் விசித்திரமானவர்கள்.

இன்னும் சில விசித்திரங்கள் : உங்கள் கையாலையே ஒருவரை சாகடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த செயல்பாட்டுக்கு Amygdala, vmPFC (உணர்ச்சி), dlPFC (கணக்கு) என்று மூன்று பேருமே உதவி செய்கிறார்கள்.

அந்த செயல்பாட்டில் Amygdala வின் பங்களிப்பு கூடுதலாக இருந்தால், ராகு காலத்தில் ஆரம்பிச்சிட்டமோ? கத்தி வளைஞ்சிருக்கோ? யோசிப்பீர்கள்.

ஒருவர் கொலை செய்யப் படுகிறார். நீங்கள் நேரிலேயே பார்க்கிறீர்கள். நீங்கள் காபரே ஆக ஆக, dlPFC (கணக்கு) அங்கே ஆஜர் ஆகி நாட்டாமை செய்கிறார். உங்களுக்கு இங்கே என்ன வேலை? ஏன் அதுக்குள் போய் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும்? எச்சரிக்கிறார். சத்தம் கித்தம் போடாமல் இடத்தைக் காலி பண்ணுகிறீர்கள்.

ஒருவரை Brain Scanner (மூளையை சோதனை செய்யும் கருவி) ஒன்றில் வைத்து அவதானிக்கிறோம். ஒரு படத்தை அவரிடம் காட்டிவிட்டு பட்டென்று மறைத்து விடுகிறோம். Amygdala வுக்குத் தெரிந்து விட்டது. உஷார் ஆகி விடுகிறது.

படத்தைத் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தால் Amygdala வை நெட்டித் தள்ளிவிடுகிறது dlPFC (கணக்கு). படம் என்னதாய் இருக்கும்? ஆராய்ச்சியைத் துவங்குகிறது.

பொய் சொல்கிற வேலைக்கும் dlPFC (கணக்கு) சாட்சி.

இரண்டாம் உலக யுத்த சமயத்தில், நாஜிகள் யூதர்களைத் தேடி வருகிறார்கள். அந்த ஜெர்மானிய பாட்டி, அடைக்கலம் கேட்டு வந்த யூதர்களைக் காப்பாற்றித் தன் வீட்டில் மறைத்து வைத்திருக்கிறார். நாஜிப் பேய்கள் கேட்கிறார்கள். மாட்டிக் கொண்டால், அவருக்கும் மரணம். இருந்தும் பாட்டி சொல்கிறார் : இங்கே ஒருவரும் இல்லையே.

இன்னொரு பாட்டி, தன் பேத்திக்குப் பிறந்த நாள் பரிசு கொடுக்கிறார். போன ஆண்டும் அதே பரிசைத் தான் பாட்டி கொடுத்தார். பாட்டிக்கு ஞாபக மறதி அதிகம் என்று குழந்தைக்குத் தெரிந்தாலும் பாட்டியின் மனசு நோகக் கூடாதே. குழந்தை பொய் சொல்கிறது – இது புதுசா இருக்கே!

PFC, தலைமை ஆலோசகர் பற்றி இரண்டு தகவல்கள் : உணர்ச்சி பொங்கி அளவு மீறி வழிகிறதா? போதும் என்று தடுத்து நிறுத்துவார் இவர். ஆனால், சில சமயங்களில், போனால் போகிறது என்று விட்டு விடுவார் – எல்லாம் இடம், காலம்.

ஏன் என்றால் இப்போ நீங்கள் சினிமா அரங்கில், இருட்டில் இருக்கிறீர்கள். கதாநாயகிக்கு நேர்ந்த கொடுமை கண்டு கண்ணீர் பொத்துக் கொண்டு வருகிறது. பக்கத்து சீட்காரர்களே கலன் கணக்கில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்போது… நடக்கட்டும். நடக்கட்டும்.

PFC எப்போதும் சரியான, கஷ்டமான முடிவுகள் எடுப்பது உண்மை. ஆனால், முடிவுகள் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற, சரியான முடிவுகள் என்பதே சரி.

எடுத்துக் காட்டாய் : ஒரு பெண் மற்றவர்களுடன் சேர்ந்து கணனியில் கேம் ஆடிக் கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் அவளை ஏமாற்றி வென்று விடுகிறார்கள். கோபம், வெறுப்பு, பதற்றம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவளைத் தாக்குகிறது. காரணம் : Amygdala “பத்த” வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயம் பார்த்து, PFC அந்தப் பக்கம் வருகிறார். அந்தப் பொண்ணு பாவம். ஏன்யா இப்டி அநியாயம் பண்றே? (Amygdala நைசாய் நழுவி விடுகிறார்.).

அந்தப் பெண்ணுக்கு நாலு வார்த்தை ஆறுதல் சொல்கிறார். இது முட்டாள்த்தனமான விளையாட்டு. இதுக்குப் போய் கவலைப் படணுமா? டாய்! உங்களை அப்ரம் கவனிச்சுக்கிறேன். எனக்கு வேறு நல்ல நண்பர்கள் இருக்கும்போது எதுக்கு .. அவள் உற்சாகமாய் எழுந்து போகிறாள்.

(ஒரு சின்ன தகவல் : பொதுவாக, விடலைகளிடம் FC யின் அறிவுரை எடுபடாது. 18 -20 வயது வரும் வரை எதுவுமே காதில் ஏறாது.)

கடைசியாக, மூளையின் ஒரு வினோத பண்பு : Dopamine. அது வேண்டும் இது வேண்டும் என்று துடிக்கும் மனிதர்களுக்கு இது எக்கச்சக்கமாய் சுரக்கும்.

பசிக்கும் நேரத்தில், மட்டன் பிரியாணி அல்லது கோழி பிரியாணியை நினைத்தால் அது சுரக்கிறது. (வெஜ் ஆட்கள் வெங்காய தோசை அல்லது அவரவர் இஷ்ட அயிட்டத்தை நினைத்தாலும் சுரக்கும்.)

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் நிகழ்ச்சியில் இருவர், இருவராய் சேர்ந்து போட்டியில் கலந்து வெல்லலாம் என்று அறிவிக்கும் போதும் சுரக்கிறது. ஒரு போட்டியில் ஒருவர் மற்றவரை அடித்துக் கொல்லலாம். வென்றவருக்குப் பரிசு என்று வரும் போதும் சுரக்கிறது. (ஆனால், முதலாவதற்கு அதிகம்.)

கிடைத்த போது அனுபவித்த சந்தோஷத்தை விட, கிடைக்கப் போகிறது! கிடைக்கப் போகிறது! என்று நினைத்து நினைத்துக் கற்பனை செய்து அனுபவிக்கும் மகிழ்ச்சி இன்னும் மயக்கம், இனிமை தருகிறது. பொங்கி வழிகிறது Dopamine.

Dopamine அளவு கூடுதலா? குறைவா? எல்லாம் எதிர்பார்ப்பில் தங்கி இருக்கிறது. முதல் தடவை கிடைத்த சந்தோஷத்தை விட இரண்டாம் தடவை குறைவா? அதுக்கென்ன- பரவாயில்லை. மூளை, தன்னை அதற்கேற்றபடி தகவமைத்துக் கொள்கிறது. கிக் தான் முக்கியம் – அளவு அல்ல.

ஒரு நடத்தையின் மூலக் கருவுக்கு மூளை மட்டுமே காரணம் அல்ல . எல்லாக் காரணிகளும் மூளையில் குவிகின்றன. நல்லதோ, கெட்டதோ, சந்தர்ப்பதைப் பொறுத்து ஏதோ ஒரு முடிவு எடுக்கப் படுகிறது. அவ்வளவே.

அத்தியாயம் 10 ல் வந்து நிற்கிறேன்.

நடந்து வந்த பாதையை மறந்து போகலாமா

படிநிலை மாற்றம் என்பது வெறும் கோட்பாடு. அது தான் அடிப்படை உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக, பேராசிரியர் சில ஆதாரங்கள் தருகிறார்.

சில உயிரினக் கூட்டங்களில் (species population) குறுகிய ஓர் கால இடைவெளியிலேயே அவற்றின் மரபணுக்கள் வேகமாக மாற்றம் அடைந்து விடுகின்றன.

உதாரணம் : நம்மைப் பாதிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் கண்டுபிடிக்கும் எதிர்ப்பு மருந்துகள் (anti bacterial resistants) விரைவிலேயே பயன் அற்றுப் போகின்றன. காரணம், மருந்து கண்டுபிடிக்க, அவற்றின் மரபணு வடிவம் தேவை. ஆனால், பாக்டீரியாக்கள் அடிக்கடி மரபணு வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன.

சில பூச்சிகள் கூட, ஒரு சந்ததியிலேயே இரண்டு வகையான பூச்சிகளாக மாறி விடுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஒரு உயிரினம் எப்படி படிப்படியாக மாற்றம் அடைந்திருக்கிறது என்பதை அந்த இனத்தின் எச்சங்கள் (fossils) உறுதி செய்திருக்கின்றன.

மூலக்கூற்று ஆதாரங்கள் (molecular evidence) : நாமும் கொரில்லா இனமும் 98 சதவீதமான ஒரே மூலக்கூற்று அமைப்பைக் கொண்டிருக்கிறோம். (மற்றக் குரங்குகளோடு 96%. நாய்களோடு 75%. பூச்சிகளோடு 20%)

இதில் இருந்து நமக்கும் கொரில்லாக்களுக்கும் ஒரு பொதுவான தாய் தந்தையர் ஒப்பீட்டளவில், அண்மையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மனிதர்கள் + கொரில்லாக்கள் + மற்றக் குரங்குகள் சேர்ந்த இனத்தின் பொதுத் தாய் தந்தையர் ஒப்பீட்டளவில், அதற்கு முன்னே வாழ்ந்திருக்கிறார்கள்.

(இப்படிப் போய்க் கொண்டே இருந்தால், கடைசியில் அனைத்துக்கும் அம்மையப்பன், ஒரே ஒரு செல் கொண்ட பாக்டீரியா என்று தெரிய வரும்.)

உயிரினங்களின் உடலமைப்பில் இருக்கும் விசித்திர ஒற்றுமைகள் படிநிலை மாற்றத்துக்கு இன்னொரு சான்று. கேள்வி : ஆழ்கடலில் வாழும் திமிங்கிலத்துக்கும் டால்பின்களுக்கும் ஏன் கால் எலும்புகள் இருக்கின்றன?

அடுத்து, மரபணு இயலுக்கு வருகிறார் பேராசிரியர்.

மரபணுக்கள் ஒரு குறிப்பிட்ட பண்புகளை (traits) சந்ததி சந்ததியாகக் கொண்டு செல்கின்றன. இந்தப் பண்புகள் மரபணு மூலக்கூற்றில் ஏற்படும் மாற்றங்கள். மாற்றங்களோ, சில சமயங்களில், இயற்கையோடு ஒன்றி வரலாம். சில சமயங்களில், ஒத்துவராமல் மறைந்தே போய்விடலாம்.

இருந்தும், தவறாகப் புரிந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

1 : எது இயற்கைக்கு ஒத்து வருமோ, அது மட்டுமே வாழும். (Survival of the fittest) இது தவறான கொள்கை. ஓர் உயிரினத்துக்குத் தன் சந்ததியைப் பெருக்க வேண்டும் என்பதே அதன் முதல் நோக்கம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆட்டம் போடுவது முடியாத காரியம். நீண்ட காலம் வாழப் போனால் புற்று நோய்கள் வரலாம். நாளும் பொழுதும் இனப்பெருக்கத்திலேயே கவனம் போனால் ஆயுசு கம்மி. முடிவு செய் என்கிறது இயற்கை.

ஆகவே, முடிந்தளவு இனப்பெருக்கம் செய்து சொந்த மரபணுக்களை நாலா பக்கத்திலும் பரவச் செய்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதில் மும்முரமாய் இருக்கின்றன எல்லா உயிரினங்களும்.

(சால்மன் மீன்கள் விறுவிறு என்று வளர்கின்றன. ஆற்றில் எதிர்நீச்சல் போடுகின்றன. வாழ்வில் ஒரே ஒரு தடவை இனப்பெருக்கம் நடக்கிறது. முடிந்ததும் அவைகளின் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது.)

2 : இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் மறைந்து போன உயிரினங்களை விட, இயற்கைக்குப் பொருத்தமானவை. அதனால் தான் நின்று பிடிக்கின்றன – இன்னொரு தப்பான கொள்கை.

மறைந்து போன டைனோசர் விலங்குகளும் மற்றும் வேறு இனங்களும் மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன. விண்கல் வீழ்ந்தது. காலநிலை மாறியது. மடிந்து போயின. (நினைவிருக்கட்டும் : நமக்கும் அந்த நிலை வரும்.)

3 : சிக்கலான செயல்பாடுகள் கொண்ட உயிரிங்களைத் தான் இயற்கை தேர்ந்தெடுக்கிறது. இந்த நினைப்பும் தப்பு.

ஒரே ஒரு செல் கொண்ட பாக்டீரியாக்கள் சிக்கலான செயல்பாடுகள் கொண்ட மனித இனத்தையே சாய்த்து விடுகின்றன. மில்லியன் கணக்கில் காவு வாங்குகின்றன.

இயற்கையின் தேர்வு இரண்டு வழிகளில் நடக்கிறது.

1 : பாலுறவுத் தேர்வு (sexual selection) : பாலுணர்வு உந்துதல் மூலம் இனப்பெருக்கம் நடந்தபின் மரபணுக்களைத் தேர்கிறது இயற்கை. அடுத்த சந்ததிக்கு அனுப்புகிறது.

உதாரணம் : மலைச்சாரல்களில் வாழும் ஆடுகளை எடுத்துக் கொள்வோம். சில ஆண் ஆடுகளுக்குக் கொம்புகள் பெரிதாக இருக்கின்றன. சில ஆடுகளுக்கு சின்னக் கொம்புகள். பெண் ஆடுகள் கண்ணில் பெரிய கொம்புகள் படு கவர்ச்சியாகத் தெரிகின்றன என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் ஒரு சிக்கல் : பெரிய கொம்புகள் வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும். சின்னக் கொம்புகள் ரொம்ப நாள் இருக்கும் என்றால் எந்த மரபணுக்களை இயற்கை தேர்வு செய்யும்? — அதாவது, பெண் ஆடுகள் எந்த ஆடுகளோடு டூயட் பாட ஆசைப்படும்?

இரண்டுக்கும் இடைப்பட் .. பட்டென்று பதில் சொல்லி விடலாம். ஆனால் அப்படி நடப்பதில்லை. diploid, haploid என்கிற இரண்டு குரோமோசோம்களும் சந்தர்ப்பம், சூழ்நிலை, முன்னைய மரபணுக்களின் பாதிப்புகள் அது இது (பேராசிரியர் சொல்லச் சொல்ல தலை சுற்றுகிறது.) என்று ஏகப்பட்ட காரணிகள் நான், நான் என்று மோதிக் கொள்கின்றன.

விளைவு? லாட்டரியில் பரிசு விழுவது போல் முடிவு எடுக்கப் படுகிறது. சில சமயம் கொம்பு பெரிசுகளுக்கு அனுமதி. சில சமயம் சின்னக் கொம்புகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

2 : இயற்கைத் தேர்வு (natural selection) : இது நீட் தேர்வு போல ரொம்பக் கஷ்டமானது. (முன்னையது பரவாயில்லை). நல்ல உடல்நலம் இருக்கிறதா? இரை தேடுதலில் கெட்டித்தனம் இருக்கிறதா? நீயே இரையாகப் போய்விடாமல் தப்பும் சாமர்த்தியம் இருக்கிறதா? வேட்டையாடும் திறன்கள் எப்படி? என்று இன்னும் பல விஷயங்களையும் எடை போடுகிறது. தேர்கிறது.

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது

இந்தியாவின் மவுண்ட் அபு பகுதியில் வாழும் லாங்கூர் குரங்குகளின் வாழ்க்கையை ஆய்வு செய்த ஓர் பெண் ஆய்வாளருக்குப் பெரும் அதிர்ச்சி.

குரங்குகள் கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு சண்டியர் (தலைமைக் குரங்கு) இருப்பார். அந்தக் கூட்டத்தில் இருக்கும் அத்தனை பெண் குரங்குகளுக்கும் அவர் தான் புருஷன். அந்தக் கூட்டத்துக்கு வேறு யாராவது பாஸ் ஆக நினைத்தால் அவர் அந்த சண்டியரோடு சண்டை போட்டு விரட்டினால் தான் அது முடியும். (சில சமயங்களில் கொலையே நடக்கும்.)

பழையவரோ, புதியவரோ வென்றவர் பாஸ். ஆனால் அந்த ஆய்வாளர் கண்டதோ ஒரு திகில் காட்சி. புதிதாய் வந்த பாஸ் குரங்கு பழைய பாஸின் குட்டிகளைக் கொலை செய்ய ஆரம்பித்தது. பெண் குரங்குகள் எத்தனை முயன்றும் முடியவில்லை. ஒரே பயங்கரம்.

1977 களில் வந்த இந்த ஆய்வாளரின் கட்டுரை மற்ற ஆய்வாளர்களை உசுப்பி விட்டது. மற்ற மிருகங்களும் அப்படித் தானோ? இதுவரை, 119 வகையான மிருகங்கள் இப்படி நடந்து கொள்கின்றன என்று தெரிய வந்திருக்கிறது – சிங்கங்கள், நீர்யானைகள், சிம்பான்ஸி குரங்குகள், கொரில்லாக்கள்…

மற்ற ஆய்வாளர்களை விட, இதே ஆய்வாளரின் விளக்கம் தெளிவாக இருக்கிறது. ஆண் குரங்குகள் என்ன தான் கூட்டமாக இருந்தாலும் பெண் குரங்குகளின் கூட்டத் தலைவனாக வரத் தான் ஆசை. ஆகவே, எந்த பாஸுக்கும் தன் அந்தப்புரத்தைக் காக்க படாதபாடு பட வேண்டிய சூழ்நிலை.

ஆண் குரங்கின் மரபணுக்களை எதிர்காலத்துக்கு அனுப்ப அதன் குட்டிகள் இருக்கின்றன. பெண் குரங்குகளின் மரபணுக்களும் அதே குட்டிகளில் இருக்கின்றன. புதுசாய் வந்தவரால் தான் பிரச்னை.

பொதுவாய், ஒரு குரங்குக்குட்டி முழு வளர்ச்சி அடைய சுமார் 27 மாதங்கள் தேவை. அதுவரை உணவு, பாதுகாப்பு அனைத்து தேவைகளுக்கும் தாயையே நம்பி இருக்கிறது. இந்தக் காலம் முடியும் வரை பெண் குரங்குகளால் சூல் கொள்ள முடியாது.

புது பாஸ் குரங்குக்கு இது பொறுக்க முடியாமல் இருக்கிறது. என் மரபணுக்களைக் கொண்டு செல்ல நெடுங்காலம் காத்திருக்க வேண்டுமா? (பதவி இன்னிக்கு இருக்குமோ. நாளைக்கு இருக்குமோ.)

ஒரே வழி : பழைய குரங்கின் குட்டிகளைக் கொல்வது தான். (பெண் குரங்குகள் எதிர்த்தாலும் பிறகு சமாதானம் அடைந்து விடுகின்றன – அவைகளின் மரபணுக்கள் புதுக் குட்டிகள் வழியாக எதிர்காலம் செல்லுமே.)

மனிதர்கள் இந்த அளவுக்குப் போவதில்லை. ஆனாலும், அன்னியர்களை விட, உறவுக்காரர்களிடம் நெருக்கம் காட்டுகிறோம். பழகுகிறோம். நமக்குப் பிறகு நம் சொத்துக்களை பிள்ளைகளுக்கு, இல்லாவிட்டால் உடன்பிறப்புகளுக்கு அதுவும் இல்லாவிட்டால் அவர்களின் பிள்ளைகளுக்கு … என்று நம் படிநிலை வளர்ச்சி ஒரு பகுத்தறிவு நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

ஒரு பிரபல மரபணு இயலாளரிடம் கேட்டார்கள் : ஒரு சகோதாரருக்காக உங்கள் உயிரைத் தியாகம் சேய்வீர்களா? அவர், நான் இரண்டு உடன்பிறப்புக்களுக்காக அல்லது எட்டு அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகள் பிள்ளைகளுக்காக, சந்தோஷமாய் உயிரை விடுவேன் என்றாராம். எல்லாம் ஒரு கணக்கு.

நாம், நம் மரபணுக்கள் மட்டுமல்ல நம் சொந்த பந்தங்களின் மரபணுக்களையும் சேர்த்து எதிர்காலத்துக்கு அனுப்புவதில் மும்முரமாய் இருக்கிறோம். கவனிக்கவும் : நாம் பகுத்தறிவை எப்போதும் உபயோகிப்பதில்லை. பல தருணங்களில் அதற்கு எதிரான முடிவுகள் எடுக்கிறோம். நடந்து கொள்கிறோம். நாம் சிக்கலான விலங்குகள்.

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

ஆபிரிக்காவின் ஒரு பகுதியில், ஒரு காட்டெருமைக் கூட்டம், நதி ஒன்றைக் கடக்க வந்து நிற்கிறது. இறங்க முடியவில்லை – முதலைகள் காத்திருக்கின்றன. திடீர் என்று ஒரு முதிர்வடைந்த எருமை நீரில் பாய்கிறது. முதலைகள் அதை இழுக்க, மற்றவை பாய்ந்து கடக்கின்றன.

அதிசயம், துணிச்சல், தியாகம் என்று உணர்ச்சிக் கலவையில் நாம் மிதக்க, பேராசிரியர் இடை வெட்டுகிறார். கவனமாக, அதைப் பாருங்கள். மற்ற எருமைகள் அந்த எருமையை ஆற்றில் தள்ளிவிட்டது தெரியவில்லை? (கிழம். அது இருந்தென்ன. வாழ்ந்தென்ன. நாம இன்னம் வாழவே ஆரம்பிக்கலையே.)

குழுத் தேர்வு – group selection : தன் சொந்த இனத்துக்காக (குழுவுக்காக) பாய்ந்து உயிர் விடும் மரபணுக்களை இயற்கை தேர்வு செய்யுமா?

தனி ஒன்றின் தேர்வு – individual selection : இந்தக் கிழட்டு எருமையைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டால், நான் தப்பி நீந்திப் போய்விடலாம் என்று நினைக்கும் மரபணுக்களை இயற்கை தேர்வு செய்யுமா?

அறிவியலாளர்கள் ரெண்டு பிரிவாய் நிற்கிறார்கள். சுயநலம் தான் வெல்லும். அடுத்த சந்ததிக்கு அந்தப் பண்புகள் தான் உதவும் என்பது ஒரு பகுதி. பைத்தியமா? மற்றவர் நலம் கருதும் மரபணுக்கள் தான் எந்த சந்ததிக்கும் உதவும் என்பது மற்றப் பகுதியின் கொள்கை.

இன்னொரு நிகழ்ச்சி : ஒரு ஒநாய்க் கூட்டம் வரிக்குதிரை ஒன்றை வேட்டையாடத் திட்டம் போடுகிறது. வரிக்குதிரைக்குத் தெரிந்து விடுகிறது. அது ஓநாய்களிடம் வந்து, என்னை சாப்பிடுங்கள். என் இனத்தை விட்டு விடுங்கள் என்று சொல்லுமா? அல்லது தலை தெறிக்க ஓடுமா? (வரிக்குதிரைகள் வேகமாக ஓடக் கூடியவை.)

முடியவில்லை. மாட்டிக் கொள்கிறது. அந்த வரிக்குதிரையின் தியாகத்தால் ஓநாய்களின் பசி தீர்ந்தது. மற்ற வரிக்குதிரைகள் தப்பின. அடுத்ததாக, அது மற்ற குதிரைகளை விட வேகமாக ஓடியதைக் கவனித்தீர்களா? இந்த மரபணுக்கள் தான் எதிர்கால ஹீரோக்கள் என்று ஆல் ரவுண்டாய் அடிப்பது மற்றவர் நலம் ஆட்கள்.

ஓநாய்களும் வேகமாக ஓடுமே. எந்த ஓநாய் வேகமாய் ஒடி முதலில் பாய்கிறதோ, அதுக்குத்தான் நல்ல கறிப் பாகம் கிடைக்கும். தவிர, அவரவர் முறை வரும் வரை வரிசை கட்டியா மற்ற ஓநாய்கள் நிற்கின்றன? மற்றவரைக் கடித்துத் தள்ளி, அட்டகாசம் பண்ணும்போது பொதுநலம் எங்கே போயிற்று? – இது சுயநலம் கோஷ்டி.

(பேராசிரியர் சுயநல கோஷ்டி.) The Selfish Gene என்று புத்தகம் எழுதி, 1976 களில், ஓகோ என்று பிரபலம் ஆனவர் Richard Dawkins. இயற்கை, சுயநலத்தைத் தான் தேர்வு செய்கிறது என்று நிறுவுகிறார் இவர். பேராசிரியரும் சுயநலக் குழு ஆய்வுகளைத் தாராளமாக உபயோகிக்கிறார்.

முட்டையா, கோழியா? எது முதல் வந்திருக்கும்? மரபணு இயல் பதில் சொல்கிறது. முட்டை தன் மரபணுக்களை எதிர்காலத்துக்கு நகர்த்த ஒரு சாதனம் தேவைப் படுகிறது. அதான் கோழி.

தியாகம் இரண்டு வகைப்படும். எதையும் எதிர்பார்க்காமல் உதவுவது altruism. அபூர்வ பிறவி. மரபணுக்களைப் பற்றிக் கவலைப்படாது. (இயற்கை அபூர்வமாக இதையும் தேர்ந்தெடுக்கிறது.)

நான் இதைத் தருகிறேன். நீ அதைத் தா என்று பண்டமாற்று முறையில் கூட்டுறவில் ஈடுபடுவது reciprocal altruism. இதற்கும் சுயநல குழுவுக்கும் மரபணு இயலில் போட்டி அதிகம். உன்னத தியாகம் – altruism கூட ஒருவகை சுயநலமே என்று சுயநல குழு வாதிப்பதை நாம் பார்க்கலாம்.

Escherichia Coli, (சுருக்கமாக E.Coli) பாக்டீரியாவை மூன்று விதமான பண்புகள் கொண்டவையாக ஆய்வுகூடத்தில் உருவாக்கினார்கள் (Synthezised).

முதல் வகை : தன் போட்டியாளர்களைக் கொல்லும் ஒரு நச்சுப் பொருளைத் (toxin) தயாரித்துக் கொள்கிறது. அதே சமயம், தயாரிப்புக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது.

இரண்டாவது வகை : அந்த நஞ்சு இந்த வகைக்கு ஆபத்து. ஆனால், உணவை (ஊட்ட சக்தி) எளிதாகப் பெற்றுக் கொள்கிறது.

மூன்றாவது வகை : இதனால் நஞ்சைத் தயாரிக்க முடியாது. சக்தி போதாது. அதே சமயம், நஞ்சினால் ஆபத்தும் இல்லை.

மூன்றையும் ஒன்றாய்க் கலந்து சோதித்துப் பார்த்தார்கள். மூன்றுமே ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் சமநிலையில் இருந்தன. ஏன் அப்படி?

பொதுநலம் பேசும் ஆய்வாளர்கள் கூட்டுறவு வாழ்க்கைக்கு இது உதாரணம் என்றார்கள். உன் சோலிக்கு நான் வரமாட்டேன். என் சோலிக்கு நீ வராதே. (reciprocal altruism)

ஒன்றாய் இருக்க வேண்டிய கட்டாயம். என்ன செய்வது? ஆனா ஞாபகம் வச்சிக்கோ. ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணினே. மவனே… இந்த ரீதியில் ஒவ்வொரு பாக்டீரியாவும் தற்காப்பு எச்சரிக்கையோடு மற்றதை விட்டு வைத்திருக்கின்றன – இது சுயநலம் பேசும் ஆய்வாளர்கள். (selfishness)

அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள், மற்றவர்கள் மீது இந்த குண்டுகளை ஏவி, ஏன் பரீட்சித்துப் பார்ப்பதில்லை? அதே சுயநலம் தான் இதுவும் – இது பேராசிரியர். இன்னும் ஏராளமான உதாரணங்களை அத்தியாயம் முழுதும் தூவி இருக்கிறார் அவர்.

Prisoners’ dilemma என்பது கணித, தர்க்கவியலில் மிகவும் ஆர்வமூட்டும் ஒரு கணனி விளையாட்டு. (உலகம் பிறந்தது எனக்காக? கட்டுரையில் இது பற்றி எழுதி இருக்கிறேன்.) பேராசிரியர் இந்த விளையாட்டை இன்னும் ஆழமாக விவரிக்கிறார்.

உயிரினங்கள், எந்த சமயத்தில் சுயநலத்தோடு நடந்து கொள்கின்றன? எப்போது கூட்டுறவு முறையைக் கையாள்கின்றன? எடுத்துக் காட்டுகள் மூலம் விளக்குகிறார். இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்த நடப்புகள் பயன் தருமா? சந்தேகப் படுகிறார்.

தன் குட்டிகளை எட்டிக் கூடப் பார்க்காத ஆண் விலங்குகள், முட்டைகள் போட்டபிறகு ஆண் துணையிடம் குஞ்சுகளை விட்டுப் பறக்கும் பெண் பறவைகள் என்று வினோதமான பண்புகள் ஏன் சந்ததிகளில் தொடர்ந்து செல்கின்றன?

சுயநலம் கொண்ட ஒற்றை மரபணு (selfish gene) தான் அசைக்க முடியாத வீரனா? இல்லை சுயநலத்தோடு இயங்கும் குழு மரபணுக்கள் (selfish genome) பெரிய பிஸ்தாக்களா?

பேராசிரியர் பிரமிக்க வைக்கிறார்.

நம் நடத்தைகளுக்குப் பின்னால் ஹார்மோன்கள், மரபணுக்கள், பண்பாட்டு விழுமியங்கள் என்று பல்வகைப்பட்ட காரணிகள் இருப்பதால் இன்றைய உயிரியல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுவதில்லை.

பதிலாக, இயற்கை குணங்கள், சாத்தியங்கள், நிகழ்தகவுகள், செயல் எதிர்வினைகள் என்று பல கூறுகளை நம் முன் வைக்கிறது.

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்வேன்

அத்தியாயம் 14 க்கு வந்திருக்கிறேன்.

மற்றவர்களின் துன்பம் நம்மையும் பற்றிக் கொள்கிறது. ஒருவர் கையில் ஊசி போடுவதைப் பார்த்தால் நமக்கும் வலிக்கப் போகிறது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. நம்மை அறியாமலேயே கையை உதறி அந்தத் துன்பத்தில் இருந்து தப்ப மனசு நினைக்கிறது.

நம் மூளையில் இருக்கும் Sensory Cortex இந்த மாயையை உருவாக்குகிறது. ஒருவேளை அது தான் Motor Cortex பகுதியைத் தூண்டி, நம் கையை உதற வைக்கிறதோ?

ஒருவரின் துன்பத்தைப் பார்த்ததும் மனசு உதவி செய்ய நினைக்கிறது. ஆனால், முடியாத சூழ்நிலை. மன்னிச்சிக்கோ! உச் கொட்டிவிட்டு நகரப் பார்க்கிறோம். இது அனுதாபம் (sympathy).

அதே மனிதரின் நிலையைக் கண்டு, எனக்கும் அப்படி நேர்ந்தால்? என்னை அந்த இடத்தில் வைத்து அந்தத் துன்பத்தை மனசால் கற்பனை பண்ணும் போது வருவது பச்சாத்தாபம் (empathy).

எதுவுமே யோசிக்காமல் உடனடியாகவே, அந்த மனிதரின் துன்பத்தைப் போக்க செயலில் இறங்குகிறீர்களா? அது கருணை (compassion).

ஒருவர் இருமுகிறார். அக்கம் பக்கத்துக்கு ஆட்களுக்கும் தொண்டைக்குள் ஒரு கரகரப்பு. அவர்களும் இரும ஆரம்பிக்க, அந்த உணர்வு ஒரு சங்கிலித் தொடர் போல் தொடர்கிறதா? இதை உணர்ச்சிகளின் தொற்று (emotional contagion) என்பார்கள்.

கேள்வி : மற்ற விலங்குகளுக்கும் இதே உணர்வுகள் உண்டா? இரண்டு எலிகளை வெவ்வேறு கூடுகளில் வைத்திருக்கிறார்கள். ஒரு எலியின் காலில் சின்னதாய் ஒரு மின் அதிர்ச்சி கொடுக்கப் படுகிறது. மற்ற எலியை அதன் கூட்டிற்குள் விட்டபோது, அது ஓடிப்போய் வலியுற்ற எலியின் காலை நக்க ஆரம்பித்தது.

(அன்பு, காதல் உணர்வுகள் தோன்றும்போது மூளையின் Anterior Cingulate Cortex (ACC) பகுதி தூண்டப் படுகிறது. Oxytocin சுரக்கிறது.)

இன்னொரு சோதனை : ஒரு எலிக்கு கூட்டில் இருந்து எப்படித் தப்புவது என்று பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கிறது. (ஒவ்வொரு தடவையும், அது ஒரு குறிப்பிட்ட கம்பியைத் தட்டினால் வெளியே வரலாம். ஒரு சாக்லேட் கிடைக்கும். ஆனால் அதை மற்ற எலிகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.)

இப்போது, இன்னும் சில எலிகளை அதே கூட்டில் விடுகிறார்கள். கூட்டின் வெளியிலே ஒரு சாக்லேட் வைக்கிறார்கள். அந்த எலி கூட்டைத் திறந்து சாக்லேட்டைக் கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. (சாக்லேட் முழுவதையும் அதுவே சாப்பிட்டிருக்கலாம்.) ஏன் அப்படி?

அன்பு? கருணை? அல்லது இந்த உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட வேறு ஏதோ ஒரு உணர்வு அந்த எலிக்கு ஏற்பட்டதா? அல்லது அது சுயநலமோ?

நான் தனியே அந்த சாக்லட்டை சாப்பிட்டிருக்கலாம். ஆனாலும் மற்றவர்கள் நாக்கை சப்புக் கொட்டியபடி என்னையே பார்க்கிறார்கள். அந்தப் பார்வையே எனக்குப் பிடிக்கவில்லை. ஒரே எரிச்சலாய் இருக்கிறது. நாசமாப் போவீங்கடா. இதோ வரேன்.

கூட்டுக்குள் வந்து சாக்லட்டைப் பகிர்ந்து கொள்கிறது. இப்படியும் அந்த எலி யோசித்திருக்கலாமே – பேராசிரியர்.

(உங்களுக்கு நல்ல யோசனையே வராதா சார்? நீங்கள் வேதனையோடு கேட்பது எனக்குப் புரிகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள் – இதுவும் அவர்.)

சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு குழந்தை குய்யோ குய்யோ என்று விடாமல் அழுது கொண்டிருக்கிறது. இன்னொரு குழந்தை, அதன் அருகில் வந்து தன்னிடம் இருந்த விளையாட்டு பொம்மையை அழும் குழந்தைக்குக் கொடுக்கிறது.

அட, என்னா அன்பு. என்னா அன்பு. உங்களுக்கும் எனக்கும் கண்ணில் நீர் வழியாதது மட்டும் தான் பாக்கி.

குழந்தை என்ன நினைத்திருக்கும்? அந்த சனியன் ஏன் இந்தக் கத்து கத்துது? சந்தோஷமா விளையாட விட மாட்டேங்குதே. இந்த பொம்மையைக் குடுத்தா, ஒருவேளை?..

அழும் குழந்தை : அடே பொம்மை. வாவ்! அட்டகாசத்தை நிறுத்தி விடுகிறது. பொம்மை கொடுத்த குழந்தை : அப்பாடா. பெரிய நிம்மதி. பிசாசு இனி உயிரை வாங்காது.

அன்பு என்பதே சுயநலத்தின் ஒரு வெளிப்பாடு. மற்றவர்களின் துன்பம், துயரத்தை நாம் உணர்வது இயற்கையிலேயே வருவதல்ல. இள வயதில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரு நடத்தை அது.

பச்சாத்தாபம் (empathy) என்று நாம் பேர் வைத்திருக்கும் அந்த உணர்வை ஒரு குழந்தை வளர வளர, கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. துன்பங்கள், வலி எதற்காக ஏற்பட வேண்டும்? யார் அதற்குக் காரணம்? கேள்விகள் எழுகின்றன. கோபம், வெறுப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து அந்தக் குழந்தையின் மனதை நோகடிக்கிறது.

மற்றவர்களின் வேதனை நமக்கு எரிச்சலைத் தருகிறது. இந்தத் தொல்லையில் இருந்து விடுபடவே முடியாதா? ஏதாவது செய்யவேண்டுமே. துடிக்கிறோம்.

சமூக பொருளாதார நடப்புகளும் பச்சாத்தாப உணர்வைப் பாதிக்கின்றன. பணக்காரர்களுக்கு இந்த உணர்வு அருகிப் போயிருக்கும். சோதனைகள் தெரிவிக்கின்றன.

ஒரு மண்டபத்தின் வழியாகப் போகும்போது, ஒரு தட்டில் இனிப்பு வகைகள் வைக்கப் பட்டிருக்கின்றன. சுவரில் ஒரு வாசகம் : இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். இலவசம்.

சாதாரண காமா சோமாக்கள் ஒரு இனிப்பை மட்டும் எடுத்தபடி நகர்கிறார்கள். பணக்கார சொம்புகள் அள்ளி எடுத்து பாக்கெட்டில் போட்டபடி போகின்றன. மற்றவர்களுக்கும் மிச்சம் இருக்கட்டுமே. ஹூம். மற்றவர்களுக்கு எதுக்கு?

அடுத்து, வாசகத்தில் ஒரு மாற்றம் செய்தார்கள் : மிச்சம் இருக்கும் இனிப்புகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும். அப்போதாவது பணக்கார கருமாந்திரங்கள் திருந்தி இருக்கும்? இல்லை. எந்த சலனமும் இல்லாமல் அதே போல அள்ளினார்கள்.

துவக்கத்தில் ஏழையாய் இருந்து வாழ்க்கையில் முன்னேறி செல்வந்தவர்களாய் மாறியவர்களிடமும் அதே நடத்தை இருந்தது.

அதே சமயம், பிறர் என்றால் ஒரே அலட்சியம். சொந்தக் குடும்பத்தில் மிகவும் பற்று கொண்டவர்கள் இதே வர்க்கம்.

ஒரு தனி மனிதரின் துன்பம் கண்டால் மனம் கஷ்டப்படுகிறது. ஒரே சமயத்தில் பல நூறு பேர் துன்பத்தில் வாடுவது கண்டால் சோர்வு உண்டாகிறது. அத்தனை பேருக்கும் எப்படி உதவுவேன்? முடியவில்லையே.

அன்னை தெரெசாவே ஒத்துக் கொண்டிருக்கிறார் : ஒரு பத்துப் பனிரெண்டு நோயாளிகள் என்றால் உயிரையும் மதிக்காமல் உதவுவேன். ஆயிரம் பேர் என்றால் எங்கே போவேன்?

ஒருவர் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் எதையும் யோசிக்காமல், அந்தக் கணமே பாய்ந்து உதவும் மாந்தர்களைக் கண்டிருக்கிறோம். கேட்டால், நான் யோசிக்கவில்லை. உதவ வேண்டும். அதுவும் உடனடியாக என்று தோன்றியது. அவ்வளவு தான் என்று சொல்வார்கள்.

Automicity என்கிற பண்பின் உந்துதல் இது என்கிறார் பேராசிரியர். அதாவது, இளமையில் இருந்து கற்றுக் கொண்டே வந்த ஒரு தானியங்கி நடத்தை (automatic behaviour) என்று விளக்குகிறார்.

சைக்கிள் ஓடும்போது விழுந்து விடாமல் சமநிலை செய்தபடி ஓடுகிறோம். சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்ளும் போது மட்டும் கஷ்டமாக இருக்கிறது. பழகிவிட்டால் லேசாகி விடுகிறது. யோசிக்கிறோமா? இல்லையே.

பழக்கம் வந்துவிட்டால் யோசிக்க வேண்டிய அவசியம் வராது, தானாக நடக்கும். Automicity பண்பும் அதே. இந்தப் பண்பு ஒரு கணத்தில் தோன்றி செயல்பாட்டை முன்னெடுக்கிறது. அடுத்த கணம் மறைந்து விடுகிறது. இடையில் என்று எதுவும் இல்லை.

(உயிரியல் ரீதியில் ACC, Amygdala மற்றும் Insular Cortex மூன்றும் இந்த நடத்தையின் போது விரிவடைகின்றன. FC வேலை செய்யாது – தெரிந்ததே.)

அடுத்த கட்டம் வருகிறார் பேராசிரியர்.

ஒருவரின் துன்பத்தை நாம் களைந்த பின் நம் மனத்தில் ஒரு அமைதி தோன்றுகிறது. அபூர்வமான ஒரு உணர்வு அது. இதை தலாய் லாமாவின் ஒரு சிஷ்யர் (பிரெஞ்சுக்காரர், மூலக்கூற்று உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர், துறவி) சொல்கிறார்:

சக மனிதர்களின் துன்பம் கண்டு என்னால் தாங்கிக் கொள்ள முடியாத போது தியானம் கை கொடுக்கிறது. மனதில் எழுந்த படபடப்புகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கி அமைதி அடைகிறேன்.

தியானம் செய்வதால் உங்கள் மனம் நிம்மதி அடைகிறது. நன்மையோ, தீமையோ எதிலுமே பற்றில்லாத நிலையை இன்னும் ஊக்குவிக்கிறது. ஆகவே, யாருக்கு முதலில் உதவி தேவை? உதவி செய்ய நினைப்பவர் சுமுகமான, தெளிவான நிலையில் இருந்தால் தான் மற்றவரின் துன்பம் போக்க, ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியும். (சுயநலம் வந்து நிற்கிறது – கவனியுங்கள்.)

ஒரு நிமிஷம் : நான் புத்தரின் போதனைகளைப் பின்பற்றுங்கள் அல்லது பின்பற்றுவதால் பயனில்லை என்று எதுவுமே சொல்லவில்லை. (புத்த மதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.) சில உதாரணங்களை என் கருத்துக்கு ஏதுவாய் முன் வைத்திருக்கிறேன். அவ்வளவே என்கிறார் பேராசிரியர்.

கேள்விகள் : மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நினைப்புக்கு உள்நோக்கம் ஏதாவது இருக்கிறதா? சுயநலமே இல்லாத செயல்கள் ஒன்று கூட இல்லையா? எது செய்தாலும் உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடக் கூடாது என்பதில் தான் கவனமாய் இருக்கிறீர்களா?

எதுவுமே எதிர்பார்க்காமல் செய்யும் உன்னத தியாகத்தின் (altruism) பின்னால் கூட, சுயநலத்தின் சாயல் இருக்கிறதா? (என் பேர் பரவப் போகிறது. என் புகழ் ஒங்கப் போகிறது.)

ஒரு ஆய்வு நடந்தது. சில மாணவர்களை இரண்டு குழுக்களாய்ப் பிரிக்கிறார்கள். முதலாவது குழுவில், ஒவ்வொருவருக்கும் 5 டாலர்களோ அல்லது 20 டாலர்களோ கொடுக்கப் படுகிறது. அதில் அரைவாசிப் பணத்தை அவர்களே சொந்தத் தேவைக்கு செலவழிக்கலாம். மிகுதியை யாருக்காவது உதவி தேவைப்படும் என்றால் அவர்களுக்காக செலவு செய்யலாம். வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

அவர்கள் திரும்பி வந்ததும் கேட்கப்பட்ட கேள்வி : எதிலே உங்களுக்கு மகிழ்வு அல்லது திருப்தி கிடைத்தது? உங்களுக்கு செலவு செய்தபோது? அல்லது மற்றவர்களுக்கு?

மற்றவர்களுக்காக செலவு செய்தபோது, கூடிய மகிழ்ச்சி/ திருப்தி இருந்ததாக சொன்னார்கள்.

மற்ற குழுவுக்கும் அதே போல் பணம் கொடுக்கப் பட்டது. ஆனால், ஆய்வின் நோக்கம், அதன் பொறிமுறை எல்லாம் அவர்கள் வெளியே போக முன்பே சொல்லப்பட்டு விட்டது.

திரும்பி வந்ததும் இவர்கள் என்ன சொன்னார்கள்? எங்கள் சொந்த செலவுக்குத் தான் ரொம்ப சந்தோஷம் அனுபவித்தோம். நீங்கள் கொடுத்த 5 டாலரை விட 20 டாலர் கொடுத்திருந்தால் இன்னும் ஜாலியாய் இருந்திருக்கும்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதிகமான உளவியல், உயிரியல் ஆய்வுகள் இந்த முடிவைத் தான் சுட்டிக் காட்டுகின்றன.

உன்னத தியாகம் என்பதை விட்டுவிட்டு reciprocal altruism என்கிற கொடுக்கல் – வாங்கல் வாழ்க்கையின் (கூட்டுறவு) பின்னணியை எட்டிப் பார்த்தால் அதிலும் சுயநலம் இல்லாமலா இருக்கிறது?

மதங்களிலும் ஒரு வித சுயநலப் பண்பு இழையோடுகிறது. நாம் காடுகளில் வாழ்ந்த காலத்தில் ஒரு சிறு குழுவாய் மட்டும் அலைந்திருப்போம். வெளி மனிதர்கள் நம்முடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழல் தோன்றியபோது ஒரு வித அச்சம் வந்திருக்கும்.

இவர்கள் யார்? நம் சிந்தனையோடு ஒத்துப் போவார்களா? அடிதடிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமா? என்ன செய்யலாம்? ஆகவே, இதுவரை ஆசீர்வாதங்கள், ஆறுதல்கள் தந்த கடவுள்கள் இனிமேல் தண்டனைகள் தரும் கடவுள்களாக அவதாரம் எடுக்கிறார்கள். சுவர்க்கமும் நரகமும் தோன்றுகின்றன.

குற்றங்கள் செய்தால் கடவுள் தண்டிப்பார். மனசில் பயம் ஏற்படுகிறது. குற்றங்கள் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. ஆகவே நாலு நல்ல நடத்தைகள் மூலம் நம் குற்ற உணர்ச்சியைக் குறைத்துக் கொள்கிறோம். அதே நல்ல நடத்தைகள் மூலம் நமக்கு நிம்மதியும் கிடைக்கிறது.

எல்லாமே சுயநலம் என்றால் வாழ்க்கையே வெறுத்து விடும். (வாசிக்கும் போது எனக்கும் தான்.) அதற்காக, நீங்கள் தளர்ந்து விடாதீர்கள். பேராசிரியர் சில அறிவுரைகளும் சொல்கிறார் :

உலகின் நாலா பக்கங்களிலும் நடக்கும் அநியாயங்கள், போர்கள், வறுமை, நோய்கள், கருணையே இல்லாத ஆட்சியாளர்கள் என்று தினமும் செய்திகள் பார்க்கிறோம். நம் மனம் துடிக்கிறது. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று அளவு மீறிக் குற்ற உணர்ச்சியில் வெந்து போவது தேவையே இல்லாத ஒன்று – ரொம்ப அலட்டிக்காதீங்க.

உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கவனியுங்கள். உங்களால் முடிந்ததை, உதவிகளை செய்யப் பாருங்கள். (அது சுயநலம் தான் என்பதையும் மனசில் நினைத்துக் கொள்ளுங்கள்.). வெளி உலகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு நீங்கள் காரணம் அல்ல. குற்ற உணர்ச்சிகளைத் தவிருங்கள் – இது முக்கியம்.

உங்கள் குழந்தைகளுக்கு லெக்ஸர் அடிக்கிற வேலையை முதலில் நிறுத்துங்கள். எதுவும் பேசாமல், உங்கள் நடத்தைகள் மூலம் அன்பு, கருணை என்பதை சொல்லிக் கொடுங்கள். சைக்கிள் கற்றுக் கொள்ளும் உதாரணம் போல அது தானாக வரும்.

சுயநலம் நல்லது.

முடிவுரை : நாம், வேறு அவர்கள் வேறு என்கிற சிந்தனை ஏன் வருகிறது? ஒழுக்கம், நேர்மை என்றால் என்ன? எப்படி இந்த நடத்தைகள் உருவாகி இருக்கும் ? கொலைகள், யுத்தங்கள், சமாதானம் ஏன் ஏற்படுகின்றன? என்ன காரணிகள்? இன்றைய குற்றவியல் சட்டங்கள் என்று ஏகப்பட்ட தலைப்புகளில் பேராசிரியர் விளாசித் தள்ளுகிறார் – அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.

புத்தகத்தை ஒரு தடவை வாசித்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது. அதற்கு முன்னால் ஒரு டீ அல்லது காபி?

பொருளியல் பார்வைகள் (பெட்டிஃபோர்)

வங்கிகள் அவசியம் தான். ஆனால், அவர்களைக் கண்மூடித்தனமாக ஆட்டம் போடவிட்டால் ஆபத்து. ஏற்கெனவே பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறோமே. இன்னுமா நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? பொருளியல் பேராசிரியர் ஆன் பெட்டிஃபோர் (Ann Pettifor) கேட்கிறார்.

அவர் எழுதிய The Production of Money – how to break the power of banks என்கிற சிறு நூலில் இருந்து சில கருத்துக்கள் – என் பார்வையில்.

இவை செல்வந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொருந்தும். அதே கொள்கைகளைத் தானே வளர்முக நாடுகளும் பின்பற்றுகின்றன?

எங்கேயும் எப்போதும்

இந்தக் கட்டுரை எழுதத் துவங்கும் நாளில் (07.03.2020) இந்தியாவின் Yes வங்கி, நான் திவால் ஆகிவிட்டேன் என்று அறிவித்துவிட்டது. அதில் காசு போட்டிருந்தவர்கள் அய்யோ! அய்யோ! என்று அழ ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்குக் காரணமான அந்த வங்கியின் மேலாளர்கள், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா? கடந்த காலங்களில் இப்படிப் பல வங்கிகள் கவிழ்ந்திருக்கின்றன. ஆனால் அத்தனை களவாணிகளும் இன்றும் நன்றாகவே இருக்கிறார்கள். உலகம் பூரா.

வேண்டுமானால், இன்றைய நிர்மலா அம்மா அல்லது அன்றைய சிதம்பரம் மற்றும் மன்மோகன்சிங் அய்யாக்களைக் கேட்டுப் பாருங்கள்.

இப்படி நடந்துகொண்டே இருப்பது இன்று நேற்றல்ல. இன்றைய டிவி சீரியல்கள்கூட ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும். இவை முடியாத தொடர்கள்.

2008 களில் அமெரிக்காவில் லேமான் பிரதர்ஸ் (Lehman Brothers Holdings Inc.) என்கிற பெரும் பன்னாட்டு முதலீட்டு வங்கி 158 ஆண்டுகள் ஒடி ஒடிக் கடைசியில் 2008 களில் ஒரேயடியாய் மூழ்கி விட்டது.

பொருளாதார நிபுணர்கள் அந்த ஆண்டை இன்றும் கலவரத்தோடு நினைவு கூர்வார்கள். ஏன்? எல்லா வங்கியாளர்களும் ஒருவரோடு ஒருவர் கொடுக்கல் வாங்கல்கள் என்று ஏகப்பட்ட மில்லியன்கள் டாலர்கள் கணக்கில் “பிசினஸ்” செய்பவர்கள் என்று எவருக்கும் தெரியும்.

ஒருத்தருக்கு சளி பிடித்தால் மற்றவர்களுக்கும் பிடிக்க நேரம் போகாது. அப்போ வைரஸ் காய்ச்சலுக்கும் மட்டும் என்ன விதிவிலக்கு? அந்த வங்கி திவாலாக, மற்ற “பெரிய்ய ” வங்கிகளுக்கும் நடுக்கம் வந்துவிட்டது.

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க நாட்டில், ஏன் முதலாளித்துவ – ஜனநாயகம் நிலவும் அத்தனை நாடுகளிலும் உள்ள வங்கிகளுக்கு தில் அதிகம். நாம் என்ன கூத்தடித்தாலும் பிரச்னை என்று வந்தால் அந்தந்த அரசுகள் உதவிக்கு ஓடி வரும் என்று அவர்களுக்குத் தெரியும்.

2008 ல் ஏற்பட்ட நெருக்கடி, வழக்கத்தை விட அதிக அளவில் இருந்ததால் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அவ்வளவே. அது சரி. இதுக்கெல்லாம் யார் காசு கொடுத்து இந்த வங்கிகளைக் கைதூக்கி விடுவார் என்று நீங்கள் யோசிக்கலாம்.

மத்திய வங்கி என்று ஒன்று ஒவ்வொரு நாட்டிலும் இருப்பது தெரிந்த விஷயம். இதன் கீழ் தான் உள்நாட்டு வங்கிகள் இயங்குகின்றன என்பதும் தெரிந்த விஷயம்.

ஆகவே, அரசின் நிதி அமைச்சர் மற்ற அதிகாரிகளோடு அவசர அவசரமாய் ஆலோசனை நடத்துவார். பிறகு மத்திய வங்கி ஆட்களுக்கு போன் பண்ணுவார். “நீங்க ஏதாவது செய்யப்பிடாதா, தலைவா? ” என்று பிலாக்கணம் வைப்பார்.

மத்திய வங்கி ஆட்கள் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய மொக்கைகள் அல்லவே. அதை அரசியல்வாதிகள் அல்லவா பார்த்துக் கொள்ள வேண்டும்?

நீங்க யோசிக்காதீங்க. அரசு காசு தரும். எல்லாரின் காசுக்கும் அது உத்தரவாதம் என்று அறிவித்து விடுங்கள் என்பார்கள்.

அரசுக்கு எங்கிருந்து காசு வரும்? அது ஒன்றும் செய்யாது. மத்திய வங்கி, திவால் வங்கியின் பேரில் இவ்வளவு கடன் என்று அதன் கணக்கில் பற்று எழுதுவார்கள். திவால் வங்கியின் கணக்கில் அதை வரவு வைத்து விடுவார்கள்.

இது மின் யுகம். அடுத்த செக்கன்ட்டில் திவால் வங்கியின் கணனியில் அது மின்னும். நிம்மதி? தப்பு. நாட்டு மக்களுக்கு அது இரட்டை சுமை.

புதிதாக உருவாக்கிய பணம் ஒரு பக்கம் இருக்க, திவால் வங்கியின் கடன்களை யார் பொறுப்பேற்பது? அது மக்கள் தலையில் தான் வந்து விடியும். புதிய வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் அந்தக் கடன்களை அரசு சரி செய்யப் பார்க்கும்.

அமெரிக்க நாட்டின் 60 Minutes என்கிற நேர்காணல் நிகழ்ச்சி உலகப் பிரசித்தம். அரசியல்வாதிகள், பிரபலங்கள் எல்லாரையும் பேட்டி கண்டு கேள்விகளால் துளைத்து மடக்கக் கூடியவர்கள்.

அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநர், Bernanke (Governor, FED) யாருக்கும் லேசில் பேட்டி கொடுப்பதில்லை. ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம். நேர்காணல் செய்த நிருபர் Scott Pelly யும் லேசுப்பட்ட ஆளில்லை.

நேர் காணலில் நிருபர் கேட்கிறார்:

லேமான் வங்கி ஆட்டம் காணப் போகிறது என்று செய்திகள் வந்து கொண்டிருந்த சமயத்திலேயே நீங்கள் அவர்களுக்கு 62 டிரில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தீர்களாமே? எப்படிக் கொடுத்தீர்கள்? அது மக்களின் வரிப்பணமா?

ஆளுநர் : அவர்கள், எங்கள் நிதிநிலைமை சரியில்லை. எக்கச் சக்கமாய் பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திட்டோம். கடனைத் திருப்பிக்கட்ட கஷ்டமாக இருக்கிறது. உதவி பண்ணுங்க என்றார்கள்.

நிருபர்: சரி. பணம் எங்கிருந்து வந்தது?

ஆளுநர்: கணனியில் அந்தத் தொகையை எழுதி பட்டனை அழுத்தினோம்.

நிருபர்: அவ்வளவு தானா ?

ஆளுநர்: அவ்வளவு தான். இதைத்தான் நாம் இத்தனை காலமாய் செய்து கொண்டிருக்கிறோம்.

(இது Fake news அல்ல. கீழ் உள்ள இந்த இணைப்பை அழுத்தி Youtube இல் அந்த நேர்காணலைக் காணவும். )

ஆகவே , மத்திய வங்கி ஆளுநர் சர்வசாதாரணமாய் ஒரு கணனி பட்டனை அழுத்துவதன் மூலம் பணத்தை உருவாக்க முடியும் என்றால்..

இது ஒரு புறம் இருக்கட்டும். புகழ் பெற்ற அன்றைய பொருளியல் மேதை , கெயின்ஸ் ஒருமுறை குறிப்பிட்டதை நோக்குவோம்:

கடன் என்பதை வங்கிகளால் மிக மிக சாதாரணமாய் உருவாக்க முடியும் என்றால் ஏன் வங்கிகள் கடன் கொடுக்க மாட்டோம் என்று அடாவடித்தனம் பண்ணுகின்றன? ஒரு பைசா கூட செலவழிக்காமல் உருவாக்கும் பணத்துக்கு எதற்காக அவர்கள் வட்டி வாங்க வேண்டும்?

மீண்டும் நேர்காணல். ஓரிடத்தில் நிருபர் கேட்கிறார்: அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ மீண்டும் தவறு செய்யலாம் இல்லையா? அப்படி நேராமல் தடுக்க என்னென்ன வழிவகைகள் வைத்திருக்கிறீர்கள் ?

ஆளுநர் : ஒன்றும் இல்லை. அவர்கள் பெரும் வங்கியாளர்களாய் வளர்ந்து பிரம்மாண்டமாய் நிற்கிறார்கள். நாடுகளின் பொருளாதாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. நாம் கட்டுப் படுத்த முடியாது. வேண்டுமானால் நாம் யோசனைகள் சொல்லலாம்.

இதை வாசிப்பவர்களில் சிலர் இந்தப் புள்ளியை அனாயாசமாகக் கடந்து போகலாம். கேட்டால், அது தான் உண்மை நிலவரம் என்பார்கள். இன்றைய பொருளாதாரம் தெரிந்தவர்கள் இவர்கள் . அதில் என்ன தப்பு? என்றும் திருப்பிக் கேட்கக் கூடும். விட்ருங்க.

அதெப்படி? அநியாயமா இருக்கே, பெருசா வந்திட்டா எல்லாமே சரியாயிருமா? என்று மற்றவர்கள் கேட்கக் கூடும். அப்படி நேர்மை, நியாயம் என்று பேசுபவர்களுக்காக, வங்கிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்காக அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், எளிய நடையில் எழுதி இருக்கிறார் பேராசிரியர்.

என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

வங்கிகள் என்றதும் பணம் தான் ஞாபகம் வரும். ஆனால் பணத்தை யார் உருவாக்குகிறார்கள்?

வங்கிகளா? இல்லை. வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தான் பணத்தை உருவாக்குகிறார்கள் என்கிறார் பேராசிரியர்.

பணம் உருவாக முன்பு அதற்கான “கிராக்கி” உருவாகி இருக்க வேண்டும். கிராக்கி இல்லாமல் எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை. மதிப்பு என்பதை மனிதர்கள் தான் உருவாக்குகிறார்கள். அந்த மதிப்பை அளக்க, பங்கிட பணம் தேவைப்படுகிறது.

இங்கே “பணத் தேவை” என்பது கிராக்கி . அதை உருவாக்குவோர் வாடிக்கையாளர்கள். அவர்கள் இல்லை என்றால் வங்கி ஏது ?

பணம் ஒரு பொருள் என்பது போல இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கை தப்பும் தவறுமாய் விளக்கம் கொடுக்கிறது. பல்கலைக் கழகங்களில், வங்கித் துறையில் இப்படித் தான் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று சாடுகிறார் அவர்.

பணம் என்றால் சேமிப்பு என்றும் வங்கிகள் கொடுக்கும் கடன் என்றும் வரைவிலக்கணம் தருகிறார்கள். அதுவும் பணத்தின் விலை என்பதை சந்தை தான் தீர்மானிக்கிறது என்கிறார்கள்.

பொருளியல் வரலாற்று ஆசிரியர் Karl Polanyi சொல்வதைக் கவனிக்க வேண்டும்: பணம், வட்டி எல்லாவற்றையும் சமூகம் தான் கட்டமைக்கிறது. பணம் ஒரு நம்பிக்கை. அது சந்தையில் வாங்கும் சரக்கல்ல.

உங்கள் கிரெடிட் கார்டை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை உபயோகிக்கும் வரை அதும் வெறும் அட்டை. எந்த மதிப்பும் இல்லாத வெறும் அட்டை. ஒரு பொருளை/ சேவையை வாங்கும் போதோ அல்லது பணமாய் எடுக்கும் போது மட்டும் தான் அந்த மதிப்பளவு பணத்தை மட்டும் உருவாக்குகிறோம். மிகுதியாய் என்று எதுவும் இல்லை.

பணம் என்பது கடன் என்பதற்கு இன்னோர் எடுத்துக் காட்டு : நம் நிலத்தில் விளைந்த நெல்லை நம் பாவனைக்கே வைத்துக் கொண்டால் அதில் பொருளாதாரமோ எதுவுமோ குறுக்கே வராது. இன்னொருவருக்கு அதை விற்கும்போது தான் பொருளாதாரம் வந்து நிற்கிறது.

வாங்குகிற ஆள் பணம் கொடுக்கிறார் என்றால் அரசு பணம் என்கிற பேரில் என்னிடம் கடன்பட்டு விட்டது என்று அர்த்தம். அந்தக் கடனை, நான் உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் காட்டி, “எனக்கு அந்தப் பொருள் வேண்டும். இந்த சேவை வேண்டும்” என்று கேட்டு வாங்கிக் கொள்ள முடியும். அரசு, கடனுக்கு (பணத்துக்கு) உத்தரவாதம் தருகிறது.

கடனுக்கு நீங்கள் நெல் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அது உங்களுக்கும் வாங்குபவருக்கும் உள்ள நம்பிக்கை. வாங்கினவர் கணக்கை சரி செய்யும் போது (பணம் கொடுக்கும் போது) மீண்டும் மேலே சொன்னபடி, அரசு கடன்பட்டு விடுகிறது.

ஆகவே, (அந்தந்த நாட்டுக்குள்) பொருள்கள், சேவைகளின் மேலே உரிமை கொண்டாடக் கூடிய ஓர் ஊடகம் பணம். அது வங்கி தரும் பண நோட்டுகள், சில்லறை, சொத்துக்கள் என்று எதுவாகவும் இருக்கலாம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் : ஒரு நாட்டின் மத்திய வங்கி, ஒரு ரூபாயை அதன் கீழ் இயங்கும் ஒரு வர்த்தக வங்கிக்குக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கிக்கு அந்த ஒரு ரூபா அதன் சொத்து. அதே சமயம் மத்திய வங்கிக்கு ஒரு ரூபா கடன் பாக்கி.

ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியிடம் ஒரு லட்சம் ரூபா கடன் வாங்கி இருந்தால் அது அவரின் ஒரு லட்சம் ரூபா சொத்தாக இருக்கும். அதே சமயம், அவர் வங்கிக்கு ஒரு லட்சம் ரூபா கடன் பாக்கி வைத்திருக்கிறார்.

பண அமைப்பில் இப்படி எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.

முதலீடுகளுக்கு சேமிப்பு அவசியமா? இல்லை என்கிறார் பேராசிரியர். மேல் சொன்ன அடிப்படையில் பார்த்தால், சேமிப்பு என்பதுவும் அரசின் கடன் என்று தெளிவாகத் தெரிகிறது. நமக்கு அது சேமிப்பு. அரசு என்பது நாம் கேட்கும் போது கொடுத்துவிட வேண்டும்.

அரசு என்பது யார்? நாம் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. அப்போ கடன்காரர் யார்? எல்லாமே தொடர்புகள். தொடர்புகள்.

கடன் என்பதை (பணம்) ஒரு படி மேலே போய் இப்படியும் குறிப்பிடலாம். எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதே. அதை மறந்துவிட்டு, இப்போ சாப்பிடு. அனுபவி. அதாவது எதிர்காலத்தை அடகு வைத்து இன்று நாம் திருப்திப் படுகிறோம். பணம் என்கிற அமைப்பில் தவிர்க்கவே முடியாதது இது.

எனது ராஜ சபையினிலே ஒரே கொண்டாட்டம்

ஆனால் பணத்தை இன்று நாமா உருவாக்குகிறோம்? அந்த வேலையை ஒரு சிறு எண்ணிக்கையில் ஆன புள்ளிகளிடம் கொடுத்துவிட்டு அவர்கள் முன்னால் கைகட்டி, வாய் பொத்தி நிற்கிறோம்.

வங்கிகள் போடும் குத்தாட்டங்களை வரிசைப் படுத்துகிறார் பேராசிரியர்.

ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கு மட்டுமே பணம் அச்சடிக்க உரிமை உண்டு என்பது தெரிந்ததே. இன்றைய கணனி யுகத்தில் சுமார் 5% மட்டுமே நோட்டுகளாகவும் சில்லறையாகவும் புழக்கத்தில் இருக்கின்றன.

மிகுதி 95% கணனியில் இருக்கும் வெறும் இலக்கங்கள். தவிர, பண நோட்டுகளுக்கு கிராக்கி குறைந்து கொண்டே வருகிறது. வங்கிகளுக்குக் கடன் கொடுக்க ஏற்படுத்தப் பட்டிருக்கும் “சுழற்சி” முறை (Fractional Reserves) அவர்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டது.

உதாரணமாய், ஒரு 10 ரூபா கைவசம் இருந்தால் போதும். அவர்கள் 90 ரூபாவைக் கடனாய்க் கொடுக்கமுடியும். எல்லாம் கணனியில் அழகாகவும் கச்சிதமாகவும் குறிப்பு வைத்துவிட்டு எந்த ஒரு திருடனுக்கும் கொடுத்துவிட்டுக் கடன் என்று எழுதிக் கொள்ளலாம்.

யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு எத்தனை மில்லியன்கள் அவர்கள் கையில் புழங்குகிறது? எத்தனை மில்லியன்கள் கடன் கொடுக்கலாம்?

அடுத்து, நிதிச் சந்தைகள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கின்றன. இப்போ போட்டு அடுத்த ஐந்து நிமிஷத்திலோ, ஐந்து மணித்தியாலத்திலோ போட்டதை எடுத்து விடலாம். யாரும் கேட்கப் போவதில்லை. மேலாளர் தான் ராஜா. அரசு எதுவும் சொல்லாது. சட்டங்கள் அப்படி. பொருளியல் நிபுணர்களும் அப்படி.

வங்கிகளின் கடன்களை யாரும் மேற்பார்வை செய்வதில்லை. அனைத்தும் ரகசியமாக செயல்படுத்தப் படுகின்றன. கேட்டால், ஸ்ஸ்.. அவர்களை தொந்தரவு பண்ணாதீர்கள். அவர்களை அவர்கள் பாட்டில் வேலை செய்ய விடுங்கள் என்று வங்கிகளுக்கு செக்கூரிட்டி வேலை பார்க்கிறார்கள் இதே பொருளியல் நிபுணர்கள்.

வங்கிகளால் வானத்தில் இருந்து பணம் உற்பத்தி பண்ண முடியும் என்றால் ஏன் அவர்கள் திவால் ஆக வேண்டும்? பதில்: வரவுகளை உற்று உற்றுப் பார்க்கிற அவர்கள் பற்றுகள் என்ன ஆகின்றன என்று பார்ப்பதில்லை.

கடன் வாங்கியவர்கள் ஒழுங்காய்க் கட்டுகிறார்களா? கட்டாமல் போனதன் காரணம் என்ன? என்ன செய்ய வேண்டும்? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? நம்மிடம் வாங்கிய கடனை வேறு வங்கிகளில் முடக்குகிறார்களா? என்ன தான் நடக்கிறது?இதெல்லாம் யோசிப்பதில்லை.

“நிழல்” வங்கிகள் வேறு (நிதி நிறுவனங்கள், கந்து வட்டிக் காரர்கள்…) நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காணி நிலம், கட்டிடங்கள் பணப் புழக்கத்துக்கு ஆதாரமாய் இருந்த காலம் அந்தக் காலம்.

இன்று கலைப் படைப்புகள், ஓவியங்கள், புரோ நோட்டுகள் (pay bills) என்று ஏகப்பட்ட கடதாசிப் பத்திரங்கள், டிஜிட்டல் பத்திரங்கள் எல்லாம் “செல்வங்கள் ” என்று ஒப்புக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் வாழ்கிறோம்.

இன்னும் பல படிகள் மேலே போய், தனிப்பட்ட மனிதர்களின் கடன்களைக் கூட “எதிர்கால சொத்துக்கள்” என்று அச்சடித்து சம்பந்தமே இல்லாமல் பேர் வைத்து (Special Investment Vehicles) சந்தையில் உலவ விட்டிருக்கிறார்கள் இந்த வங்கி ஆட்கள்.

கேட்டால், இன்று அவை கடன்கள் தான். ஒத்துக் கொள்ளுகிறோம். ஆனால் எதிர்காலத்தில் திருப்பிக் கட்டும் நிலை வருமே. அப்போ அவை செல்வங்கள் அல்லாமல் வேறென்ன என்கிறார்கள். எதிர்த்துப் பேச முடியவில்லை.

நிதிச் சந்தைகள் நமக்கெல்லாம் கிடைத்த வரம் என்று போற்றிப் பாடுவது இந்தப் பொருளியல் நிபுணர்களின் வழக்கம். அதில் கிடைக்கும் மேலதிக பணம் மீண்டும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படுமே என்று அடித்து விடுகிறார்கள் இவர்கள்.

நிதர்சனத்தில் என்ன நடக்கிறது? எடுக்கிற பணத்தை பனாமா, லண்டன், லக்ஸம்பேர்க், முன்னாள் பிரிட்டிஷ் காலனித் தீவுகள்.. என்று கொண்டு போய்ப் பதுக்கி விடுகிறார்கள். (இந்த நாடுகளில் எங்கிருந்து பணம் வந்தது என்று கேள்விகள் கேட்க மாட்டார்கள். வரிகள் போட மாட்டார்கள்.)

தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சேர்ந்து மத்திய வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். பிறகு கன்னா பின்னா என்று கடன் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை அரசின் தலையில் கட்டுகிறார்கள்.

விளைவு? மக்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றுப் போகிறது. தீவிர வலதுசாரி கட்சிகள் அல்லது சர்வாதிகார தலைமைகள் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது.

இந்தப் புள்ளிகளின் கொள்ளையை பொருளியல் நிபுணர்கள் கண்டுகொள்வதில்லை. பதிலாக, மக்களை சிக்கனமாக வாழுங்கள். மக்களின் உதவித் திட்டங்களை நிறுத்துங்கள் என்று அரசுக்கு ஆலோசனை சொல்கிறார்கள்.

இனி பேராசிரியர் 2007-2009 க்குப்பின் நடந்த விவரங்களை அட்டவணை போடுகிறார்.

வங்கிகள் கடன் தரலாம். அல்லது மறுக்கலாம். அது ஜனநாயக மரபு. மறுக்க முடியாது. இந்த நிதி நெருக்கடி தோன்றிய 2007-2009 கால இடைவெளியை எடுத்துக் கொண்டால், பிரச்னை முற்றிலும் தீராத நிலையில், கணக்குப் பார்த்து அரசுகள் “காசு” போடவே, வங்கிகள் மிகவும் எச்சரிக்கையோடு தான் கடன்கள் கொடுத்தன.

இது வாடிக்கையாளர்களை மிகவும் பாதித்தது. வட்டிவீதம் அதிகம். கெடுபிடிகள் அதிகம். ஆகவே வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனங்களை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். விளைவு? பணப் புழக்கம் குறைந்தது. முதலீடுகள் குறைந்தன. வேலை வாய்ப்புகள் அருகிப் போக ஆரம்பித்தன.

தொழிலாளர்களும் மிகுந்த கவனத்தோடு, சிக்கனமாக வாழப் பழகினார்கள். பெரும் ஆரவாரங்கள், விளம்பரங்கள் போட்டு சந்தையில் குவிந்த பொருள்கள் வாங்க ஆளில்லாமல் கவலையோடு மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்தன.

தொழில் பேட்டைகள் எப்போதும் வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித்தான் உற்பத்தி செய்கின்றன. பொருள்கள் விற்கவில்லை என்றால் கடன் கட்ட முடியாது. வட்டியும் ஏறும்.

சந்தையில் பொருள்களை அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டி வரும். இதைப் பொருளியலில் Deflation என்பார்கள். அதாவது பொருள்கள்/சேவைகளின் மதிப்பு உற்பத்தி செலவை விட கீழிறங்க ஆரம்பிக்கும் நிலை.

மேற்குலகப் பொருளியல் நிபுணர்கள் இந்தப் பொருளாதார ஆபத்தை உணர்வதே இல்லை. பணவீக்கம் (Inflation) வந்துவிடக் கூடாது. பொருள்கள்/ சேவைகள் விலைகள் உயர்ந்து விடக் கூடாது என்பதில் தான் கவனமாய் இருக்கிறார்கள்.

பேராசிரியர் deflation என்பதை மிக சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார். அவரின் முன்னைய நூல், The Coming First World Debt Crisis அதற்கு சான்று. (அந்த நூலின் அம்சங்கள் இன்னோர் கட்டுரையில் வரும்.) தவிர, பேராசிரியர் ஸ்ட்ரேக் அவர்களின் கருத்துக்களும் இந்தப் பேராசிரியரின் கருத்துக்களும் ஒத்துப் போவதைக் காண்க.

அடுத்து, இதே நிபுணர்கள் இன்றைய நிதித் துறையை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறார் பேராசிரியர்.

காசு கிடைத்துவிட்டது என்பதற்காக, வங்கிகளும் அதை எதிர்கால முன்னேற்றத்துக்காக, முதலீடுகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கக் கூடாது. மேலாளர்கள், போனஸ், அவர்கள் எடுத்துக் கொண்ட துணிச்சலுக்கான வெகுமதி என்று ஏகப்பட்ட பணத்தை சுருட்டிக் கொண்டார்கள்.

எது துணிச்சலான முடிவுகள் ? முட்டாள்த்தனமாய் பெரும் நிறுவனங்களுக்குக் கடன்கள் கொடுத்ததா? அல்லது எந்தக் கட்டுப் பாடும் இல்லாமல் நிதிச் சந்தைகளில் காசு போட்டு சூதாட்டம் ஆடி இருக்கும் வைப்புப் பணத்தையும் கோட்டை விட்டதா ? அது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

பொருளியல் நிபுணர்கள், எல்லாம் சரியாய் வந்திரும் என்கிறார்கள். அரசுகளும் சரியாய் வந்திரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நிதித் துறை (Finance sector) மற்ற எந்தத் துறையையும் விட அதி உச்சத்தில் இருக்கிறது. பணத்தின் அளவைக் கூட்டிவிட்டால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

உற்பத்தி, பொருளாதார திட்டங்கள், கட்டுமானங்கள் (வீதிகள், வீடுகள், சிகிச்சை மனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள்..) எல்லாம் கீழே போய்விட்டன.

தவிர , குறுகிய கால லாபம் தான் இன்றைய பொருளியல் நிபுணர்கள் முன் வைக்கும் ஒரே கொள்கை. ஆகவே வங்கிகளும் என்ன தில்லுமுல்லுகளும் செய்யலாம் என்கிற நிலைக்குப் போய்விட்டன.

விடியலுக்கில்லை தூரம்

வங்கிகளின் நாட்டாமைத் தனத்தை எப்படி ஒடுக்கலாம்? பேராசிரியர் முன் வைக்கும் யோசனைகள்:

முதலாவதாய், மக்களுக்குப் பணம் என்றால் என்ன என்று புரியவைக்க முயற்சிகள் எடுத்தாக வேண்டும் என்கிறார்.

வங்கிகளின் இன்றைய போக்கைக் கண்டித்து, மக்களின் கோபம் அவர்களின் மீது திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அரசியல்வாதிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் இதில் இணைந்து மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.

பணப் பட்டுவாடா (money supply ) என்பது அரசின் கையில் இருக்க வேண்டும். மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் அல்ல.

இன்று நடைமுறையில் இருக்கும் “சுழற்சி” முறையில் கடன் கொடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டு, தரக்கட்டுப்பாட்டுக்கு (quality) முன்னுரிமை தரவேண்டும். வெறும் எண்ணிக்கைக்கு (quantity)அல்ல.

மத்திய வங்கி, வங்கிகள் அனைத்தும் மத்திய அரசின் கைகளுக்கு மாறவேண்டும்.

பொருளியல் மேதை கெயின்சின் கொள்கைகளை அமுல் படுத்த வேண்டும். (அரசு, பொருளியல் நடவடிக்கைகளின் ஊக்கியாக செயல்பட வேண்டும். தனியார் துறையின் கையில் தூக்கிக் கொடுத்துவிட்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்பது அரசுகளுக்கு அழகல்ல.)

ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழாமல் (பற்றாக்குறை- செலவுகள் கூடிவிடாமல் ) பார்த்துக் கொள்வது எப்படி என்று யோசிப்பது அடி முட்டாள்த்தனம்.

வேலை இன்மையை ஒழிப்பதற்கு முதலிடம் தரவேண்டும்.

நிதித் துறை இன்று பொருளியலை நாட்டாமை செய்கிறது. தவறு. மாற்ற வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் நாட்டாமை செய்ய, நிதியை அதன் வேலைக்காரனாக வைத்திருக்க வேண்டும்.

இத்தாலியின் பிளோரன்ஸ் நகரில், 1694 களில் ஆரம்பித்த வங்கி சேவை தான் இன்றைய மேம்பாட்டுக்கு அடித்தளம். வியாபாரிகள் கந்து வட்டிக்காரர்களை நம்பவில்லை. வங்கிகள் “நம்பிக்கையை ” அடிப்படையாக வைத்துக் கடன் கொடுத்தார்கள். அந்த நம்பிக்கையை வணிகர்களும் காப்பாற்றினார்கள்.

1944 களில் அமெரிக்காவின் Bretton Wood என்கிற ஊரில் 44 மேற்குநாடுகள் சேர்ந்து பொருளாதார மாநாடு ஒன்றை நடத்தின. பிரிட்டனின் சார்பாய், பொருளியல் மேதை கெயின்ஸ் அதில் பங்கு கொண்டார். அதன் முடிவுகள் எப்படி இருந்தாலும் கெயின்சின் யோசனைகளை நாம் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை இது.

கனவு மெய்ப்பட வேண்டும்

நாம் தினமும் எவ்வளவு கையிருப்பில் இருக்கிறது. எவ்வளவு செலவு செய்தோம் என்று பொதுவாக ஒரு கணக்குப் புத்தகம் வைத்து எழுதிக் கொள்வதில்லையா? அது போல எல்லா நாடுகளும் சேர்ந்து ஒரு கழகம் அமைத்து தினமும் அனைத்துலக நாளாந்த வரவு – செலவு கணக்குகளை ஒப்பீடு செய்து கொண்டால் என்ன? இப்படிப் போயிற்று கெயின்சின் சிந்தனை.

அதற்கு International Clearing Union (ICU) என்று பேர் வைக்கலாம். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மத்திய வங்கிகளின் தலைமை அலுவலகமாக அது இருக்கும். அது தனக்கென்று ஒரு நாணயம் உருவாக்கி வைத்திருக்கும். அதன் பேர் Bancor.

ICU கழகம், ஒவ்வொரு நாள் இரவும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா நாடுகளும் செய்துகொண்ட வணிக கொடுக்கல் – வாங்கல் கணக்குகளை கூட்டிக் கழித்து ஒவ்வொரு நாட்டுக்கும் அன்றைய வரவு – செலவுப் பட்டியல் தயாரிக்கும். (எல்லா நாட்டுப் பண மதிப்புகளும் Bancor நாணய மதிப்பில் இருக்கும்.)

யாரிடம் அன்று பற்று கூடி இருக்கிறது? அதாவது, வரவுக்கு மேல் செலவு போயிருக்கிறது? அவர்களுக்கு மிகைப்பற்று பணம் (overdraft) கொடுக்கப்படும். தண்டனையாக, ஒரு குறிப்பிட்ட வட்டியை (தொகையை) அவர்கள் ICU கழகத்துக்கு செலுத்த வேண்டும்.

யாரிடம் வரவு கூடி இருக்கிறது? கெட்டிக்காரன் என்று பரிசு கொடுப்பார்களா? இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரவுகள் கூடிப் போகக் கூடாது. தவறினால் அவர்களும் தண்டம் செலுத்த வேண்டும்.

எல்லாரும் கண்டிப்பாக, சட்டங்களை மதிக்க வேண்டும். ஏன் இப்படி விதிகள் அமைக்க வேண்டும்? இங்கே தான் கெயின்ஸ் உயர்ந்து நிற்கிறார்.

எல்லா நாடுகளும் பணக்கார நாடுகள் அல்லவே. சில செல்வம் கொழிப்பவை. பெருவாரி நாடுகள் ஏழைகள். வறுமை மிகுந்தவை என்பதற்காகத் தான் மிகைப் பற்று பணம் கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் முன்னேறப் பார்க்க வேண்டும்.

உற்பத்தியைப் பெருக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதிகளை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். எந்த நாளும் அய்யா! சாமி ! என்று பிச்சை வாங்கியே காலங் கழித்துக் கொண்டிருந்தால் எப்படி?

அது போல, வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதியை மட்டுமே பெருக்கிக் கொண்டிருந்தால் உள்நாட்டை யார் கவனிப்பது? உள்நாட்டின் கட்டுமானம் மற்றும் மக்களின் தேவைகளில் அவர்கள் கவனம் போவது நல்ல விஷயம் இல்லையா?

இன்னொன்று : இன்று ஒவ்வொரு நாடுகளின் பணமும் நாணய சந்தைகளில் ஓட விடப்பட்டு செக்கன்டுக்கு செக்கன் அவைகளின் மதிப்பு, கேவலம் ரேஸ் குதிரைகள் மதிப்பு போல் ஆகிவிட்டது பெரிய சோகம். இது கெயின்ஸ் காலத்திலேயே துவங்கிவிட்டது. ஆகவே பொது உலக நாணயம் ஒன்றை உருவாக்கினால் இந்த சூதாட்டத்தை சரி செய்துவிடலாம் என்பது அவர் கணிப்பு.

அடுத்து வெளிநாடுகளில் இருக்கும் முதலீடுகளை உள்நாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் உள்நாட்டின் பொருளாதாரம் பெருகும்.

ஆனால், அவரின் சிந்தனைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள். பெரிய நாடுகளுக்கு அது பிடிக்கவில்லை. அமெரிக்காவின் திட்டம் வேறு. சோவியத் ரஷ்யாவின் நோக்கம் வேறு. மற்றவர்களும் ஆளுக்கு ஒரு ஐடியா வைத்திருந்தார்கள்.

கடைசியாக, எல்லாரின் யோசனைகளையும் அங்கே வெட்டி, இங்கே ஒட்டி ஏதோ ஒரு கிராபிக் அனிமேஷன் படம் போல் தயாரித்து, எல்லாரும் கையொப்பம் வைத்து ஒரு மாதிரி ஓய்ந்தார்கள் என்று சொல்லலாம்.

மை காயும் முன்னரே ரஷ்யா விலகிவிட்டது. அமெரிக்காவின் பக்கம் தான் கடைசியாய் வென்றது என்று இங்கே சொல்லத் தேவை இல்லை. இந்த ஒப்பந்தத்தின் நீட்சியாக இன்று வளர்ந்து நிற்பவர்கள் இன்றைய அனைத்துலக நாணய கழகம் (IMF) மற்றும் உலக வங்கி (World Bank).

இந்த IMF, WB களின் மேற்பார்வையில் நடக்கும் இன்றைய பொருளாதார சண்டைக்கு ஒரு உதாரணம்: ஜெர்மனியும் கிரேக்கமும்.

இரண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். ஜெர்மனி வளர்ந்து கெட்டியான பொருளாதார தளத்தில் நிற்கிறது. அது எவ்வளவும் வரவுகளைக் கூட்டிக் கொண்டே போகலாம். எல்லையே இல்லை.

கிரேக்கம் அப்படி அல்ல. கடன் வாங்கியே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. அதிக வட்டிக்கு EU மத்திய வங்கியிடம் கடன் வாங்கி அவர்கள் சொல்கிற சட்ட திட்டங்களுக்கெல்லாம் தலையாட்டி, உள்நாட்டு பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறது. கடன் ஏற எற, கெடுபிடிகளும் கூடுகின்றன.

அதாவது, ஜெர்மனிக்கு ஒரு சட்டம். கிரேக்கத்துக்கு ஒரு சட்டம் என்பது தான் IMF + WB கூட்டாளிகளின் கொள்கை. இப்படி இருந்தால் எப்படி ஐரோப்பிய ஒன்றியம் உருப்படும்?

மேல் சொன்ன கூட்டாளிகள், சொல்லப்பட்ட இன்றைய பொருளியல் நிபுணர்களின் கொள்கைகளை அப்படியே உள் வாங்கிக் கொண்டவர்கள்.

இவை எல்லாம் சரி செய்யப் பட வேண்டும். முக்கியமாய், பெண்கள் அரசியலில், பொருளியல் துறைகளில் காலூன்ற வேண்டும் என்று விழைகிறார். தொழிலாளர் கழகங்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எல்லாரும் இணைய வேண்டும் என்கிறார் அவர்.

காசு இல்லை. சிக்கனமாய் இருங்கள் என்று இந்தப் பொருளியல் நிபுணர்கள் அரசுகளுக்கு சொல்வதெல்லாம் பொய். பெரும் பொய்கள்.

வங்கியாளர்களை முதலில் அடக்குங்கள். காசு வருகிறதா, இல்லையா என்பதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்.

பேராசிரியரின் புத்தகம் ஒரு சுவாரஸ்யமான கதை போல் நீள்கிறது. ஆனால் உண்மைக் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை.

கதையின் சில கட்டங்களை மட்டும் இந்தக் கட்டுரை தொட்டுக் காட்டுகிறது. முழுக் கதையையும் பேராசிரியரே சொல்லி விடட்டுமே.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை (1)

உயிர் வாழ்தல் என்றால் என்ன? இந்தக் கேள்வியை உயிரியலில் மட்டுமல்ல, வேதியியல், மரபணு இயல் என்று பல துறைகளில் நின்று விவரிக்கும் நிலைகளுக்கு இன்று நாம் முன்னேறி வந்திருக்கிறோம் . அப்போ, இயற்பியல் மட்டும் என்ன கை கட்டியபடி ஒரு ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருப்பதா?

இயற்பியலில் எங்கெல்லாம் சர்ச்சைகள் இருக்குமோ அந்தக் கூட்டத்தில் பேராசிரியர் Paul Davies நிச்சயம் இருப்பார் என்பது தெரிந்த தகவல். உயிரியலில், அவரின் அண்மைய நூலுக்கு (The Demon in the Machine) வரவேற்பும் இருக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாது என்று சத்தம் போடுபவர்களும் இருக்கிறார்கள். பக்கங்களைப் புரட்டுவோமா?

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

ஆண்டுக்கு சுமார் 76 000 கிலோ மீட்டர்கள் பறக்கும் ஆர்க்டிக் ட்டர்ன் பறவைகள்… மண்ணுக்குள் சுமார் 3 கிலோமீட்டர் ஆழத்தில் வாழும் பாக்டீரியாக்கள்..

சூழல் ஒத்துவராவிட்டால் “செத்துப்போய்”, பிறகு சூழல் வசதியாக அமையும்போது மீண்டும் “உயிர்த்தெழுந்து” வரும் நுண்ணியிரிகள்…

என்று எத்தனையோ பரிமாணங்களில் உயிர் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை சாட்சி Deoxyribonucleic acid . சுருக்கமாக DNA என்பார்கள். தெரிந்ததே.

DNA (மரபணு) ரொம்பவும் தொன்மையானது. வயசு சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் இருக்கும். Adenosine, Cytosine, Guanine, Thymine என்னும் நாலு புரதங்கள் (A, C, G, T) இதன் அடித்தளமாக இருக்கின்றன. 20 வகையான அமினோ அமிலங்கள் இந்த அடித்தளத்தில் சுற்றிப் பிணைந்திருக்கின்றன.

தவிர, எப்படி, எந்த விதிகள் மூலம் இந்த மூலக்கூறுகள் பிணைந்திருக்க வேண்டும் என்கிற அறிவுறுத்தல்கள், நிபந்தனைகளும் மரபணுவில் பதிந்திருக்கின்றன.

மரபணுவில் பதிந்திருக்கும் மேல்படி தகவல்களின்படி, இந்த மூலக்கூறுகள் இடையே உருவாகும் வேதியியல் எதிர்வினைகள் (chemical reactions) தான் உயிர் உருவாக ஆதாரம் என்பது பொதுவான கருத்து.

மரபணுவின் வேலை அத்தோடு முடிந்துவிடாது. சுற்றுச் சூழலுக்கு ஏற்றபடி, அது சார்ந்திருக்கும் உயிரினத்தை ஒரு வித சமநிலைக்குக் கொண்டு வருவதல்ல அதன் வேலை.

சமநிலையிலேயே (equilibrium) வைத்திருந்தால் அந்த உயிரினம் செத்துவிடும். உயிரினத்துக்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று இது.

எப்போதும் எதிர்நீச்சல் போடுவது தான் உயிர்களின் தன்மை. அதற்காக சுற்றுச் சூழலைப் பயன்படுத்திக் கொள்கின்றன. சுவாசிக்கின்றன. உணவு தேடிக் கொள்கின்றன. அனைத்து உயிர்களும் இதில் அடக்கம்.

உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதில்லை. வாழ்க்கை குறுகியது. ஆகவே அடுத்த சந்ததிக்கு ஏற்ற வகையில் மரபணு காரியங்கள், முன் ஏற்பாடுகள் செய்து கொண்டே இருக்கிறது.

இனச்சேர்க்கை மூலமாக, அடுத்த உயிர் பிறக்கும்போது, அந்த உயிருக்கும் தேவையான அதே தகவல்களைச் சேகரித்து, மரபணு தன்னை இரட்டிப்பு செய்து கொள்ள வேண்டிய பணியும் அதற்கு இருக்கிறது.

அப்படி, தன்னைத்தானே பிரதி எடுக்கும் போது நிச்சயம் தவறுகள் ஏற்படலாம். அதை சரி பார்த்து திருத்திக் கொள்ள வேண்டும். (சில சமயங்களில் பிழை திருத்தம் நடக்காது. தவறுகளோடு நகல் எடுக்கப்பட்டு விடும்.)

சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் எடுத்துத் தகவல்களை சீரமைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வேலை. வேலை. எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கும் ஒரு அபூர்வமான கணனிப் பொறி இந்த மரபணு.

உயிரில்லாத படிகங்கள் (crystals) கூட நகல் எடுத்துக் கொள்கின்றன. நாம் அறிந்ததே. வேறுபாடு என்னவென்றால் அவை நகல் எடுப்பதோடு சரி. சூழலின் சமநிலையோடு பொருந்தி விடுகின்றன. அப்பால் போவதில்லை. நாள் செல்லச் செல்ல சிதைவடைகின்றன.

உயிரினமும் இறந்தபின் அதன் உடல் சிதைவடைய ஆரம்பிக்கிறது. சூழலோடு சமநிலை ஏற்படுகிறது.

சரி. சரி. இயற்பியல் உயிர் பற்றி என்ன தான் சொல்கிறது? தகவல்கள் (information) இல்லாமல் உயிர் இல்லை என்று முதலில் துவங்குகிறார் பேராசிரியர். பிறகு இயற்பியல் விதிகள் எப்படி உயிர் என்பதில் தாக்கங்கள் செலுத்துகின்றன என்று போய்க் கடைசியில் … கடைசி வரை போவோமா?

யார் யார் யார் அவள் யாரோ

கண்ணாடி உடைந்துவிட்டால் உடைந்தது தான். திரும்பத் தானாக ஒட்டிக் கொள்ளாது. வயசு போய்விட்டால் … போனது போனது தான். மீண்டும் திரும்பி வந்து ஆட்டம் போட வைக்காது . இயற்பியலில் இதன் பேர்: Entropy.

இந்தப் பிரபஞ்சம் எப்போதுமே நிலையாய் இருப்பதில்லை. என்ன தான் ஓர் சீரான, ஒழுங்கான நிலை தோன்றினாலும் அது நீடிக்காது. சீரில்லாத, நிச்சயமில்லாத, முன்கூட்டி எதுவுமே சொல்ல முடியாத ஓர் நிலையை நோக்கி அது நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பது தான் Entropy எனும் இந்த இயற்பியல் கொள்கை.

மரபணுவுக்கு வருகிறோம். அதில் தகவல்கள் பதிந்திருக்கின்றன என்றால் எந்த அளவு தகவல்கள் இருக்கின்றன? முழுத் தகவல்களும் இருக்கின்றனவா?

தகவல் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: ஒரு நாணயத்தை சுண்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பூவோ தலையோ எது விழுந்தாலும் அங்கே ஒரு தகவல் இருக்கிறது. இல்லையா?

மீண்டும் ஒரு சுண்டல். இனி என்ன விழும்? தெரியாது. நாணயம் விழுகிறது. இப்போது இரண்டு தகவல்கள் இருக்கின்றன. இப்படி தகவல்களின் எண்ணிக்கை போய்க்கொண்டே இருக்கும் ..

அவ்வளவு தானா தகவல்கள்? அந்த நாணயம் எந்த உலோகத்தால் செய்தது? இரண்டு பக்கங்களும் சம எடையில் இருக்கின்றனவா? அதில் பொறித்திருக்கும் மற்ற தகவல்கள்? எப்போது நாணயம் வெளிவந்தது? எத்தனை தடவை நாணயம் கைமாறி இருக்கிறது?

முடிவே இல்லாத கேள்விகள். முடிவே இல்லாத தகவல்கள்.

இதில் இரண்டு விஷயங்கள் தெரிகின்றன. (1) முன் கூட்டி ஏதும் சொல்ல முடியாத சூழ்நிலை (பூவா தலையா?). (2) ஒரே சமயத்தில் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை.

தகவல்களுக்கும் Entropy க்கும் உள்ள தொடர்பை இப்படி சுருக்கமாய் சொல்லலாமா? தெரிந்துவிட்டால் அது தகவல். தெரியாவிட்டால் அது Entropy.

இப்படியும் சொல்லலாமே. தகவல்கள் பெருகப் பெருக Entropy இன் அளவு குறைகிறது. தகவல்கள் குறையக் குறைய Entropy இன் அளவு பெருகுகிறது.

Entropy க்குப் பல முகங்கள் இருக்கின்றன. சக்தி விரயமாவதும் அதில் ஒன்று. ஒரு உதாரணம்: வண்டி ஓட பெட்ரோல் தேவை. பெட்ரோலில் இருந்து கிடைக்கும் முழு சக்தியும் என்ஜினுக்குப் போவதில்லை. சராசரியாக 20 வீதம் மட்டுமே.

மிகுதி 80 வீதம் Entropy ஆகிவிடுகிறது. அதாவது, அதில் கொஞ்சம் எஞ்ஜினை இன்னும் உஷ்ணமாக்கி நம்மையும் உஷ்ணமாக்கி விடுகிறது. மிச்சம் மீதி காற்றோடு காற்றாய்க் கலந்துவிடுகிறது.

Entropy என்பதை இயற்பியல் விதிகள் மூலம் வரையறை செய்யலாம்.

அப்போ தகவல்கள்? அவைகளுக்கென்று சொந்த விதிகள் உள்ளனவா? அவை இயற்பியல் விதிகளுக்குள் வராதா? அல்லது இயற்பியல் விதிகளின் கீழ், எந்த குறிப்பிடத்தக்க சிறப்பும் இல்லாத ஓர் சாதாரண நிகழ்வா? அல்லது பிரபஞ்சத்தின் அனைத்தையுமே தாண்டிய தனித்துவமான ஒன்றா?

பேராசிரியர் கேள்விகளை அடுக்குகிறார். இன்னொரு பரிமாணத்தையும் காண்பிக்கிறார்.

கணனிகளை எடுத்துக் கொள்வோம். ஒரு கூட்டல் கணக்கை செய்யும்படி கட்டளை கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பதில் 12 என்று வருகிறது. எண் 12 ஐ 10+2 என்று கூட்டினாலும் வரும். 6+6 என்று கூட்டினாலும் வரும். இன்னும் பல எண்களின் கூட்டுத் தொகையிலும் அது வரும்.

கேள்வி: கணனி எந்த வரிசையை உபயோகித்து அந்த முடிவை எடுத்தது?

பதில் இருக்காது. காரணம்: அது தனது முடிவைத் (output) தெரிவித்த அந்தக் கணத்திலேயே எந்த வழிகளில் (input) அந்த முடிவை எடுத்தது என்பதை அழித்து விடுகிறது. அடுத்த கட்டளைக்குக் காத்திருக்கிறது.

கணனிகள், அவற்றின் டிஜிட்டல் மூளையில் அவசியமில்லாத தகவல்களை சேமிக்குமானால் அவற்றின் வேகம், செயல்பாட்டுத் திறன் குறைந்துவிடும். அடுத்து, தகவல்களை அழிக்க சக்தியை உபயோகிக்க வேண்டும். ஓர் சிறிதளவு சக்தி, தகவலை அழிக்க அதன் பெரும் பகுதி உஷ்ணமாக மாறுகிறது. (கவனித்திருப்பீர்கள்.) அதாவது Entropy கூடுகிறது.

இயற்பியலாளர் Rolf Launduaer கணக்கிட்ட தகவல் சக்தி மற்றும் அதற்கான வரம்பு எல்லை இன்றைய கணனி உற்பத்தித் துறையினர் கையாளும் ஓர் அம்சம்.

மரபணுக்களும் கணனிகள் போலவே செயல்படுகின்றன. சூழலில் இருந்து கிடைக்கும் ஓராயிரம் தகவல்களைத் தரம் பிரிக்கின்றன. எது தேவை? எதற்கு முன்னிலை தருவது? எதை ஒத்திப் போடுவது? எதை சேமிப்பது? சேமித்திருப்பதில் எதை அழிப்பது?

தகவல்களை அழிப்பது ஓர் முக்கிய அம்சமாய் இருப்பதால் சக்தி விரயமாகிறது. அதனாலென்ன? இன்னும் விரைவாகவும் திறனோடும் மரபணுக்கள் செயல்பட முடியுமே.

தகவல்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாகப் பதிவு செய்த Rolf Launduaer ஒரு தடவை குறிப்பிட்டார்: தகவல்கள் வாழ்கின்றன. அவை ஓர் தனி உலகம். சக்தியின் தன்மைகளை அவையும் பகிர்ந்து கொள்கின்றன.

பேராசிரியர் விளக்குகிறார்: பில்லியார்ட் விளையாட்டில் ஒரு பந்து இன்னொரு பந்துடன் மோதும் போது தனது (அசையும்) சக்தியை இரண்டாவது பந்திடம் பகிர்ந்து கொள்கிறது. இரண்டாவது பந்து பிறகு மூன்றாவதோடு … இப்படியே சக்தியை ஒவ்வொன்றும் பகிர்வது போல் தகவல்களும் தொடர்கின்றன…

ஆகவே தகவல்கள் மெய்ம்மை கொண்டவை (real).

இருந்தும் மரபணுக்கள் தகவல்களை எப்படித் தரம் பிரிக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பது இன்னும் சிக்கலாகவே இருக்கிறது.

ஒற்றை செல் கொண்ட பாக்டீரியாக்களை ஓரளவு அனுமானிக்கலாம். பல அடுக்கு செல்கள் (multicelled organisms) கொண்ட உயிரினங்களின் செயல்பாடுகள்? பைத்தியக்கார ஆஸ்பத்திரிகள் பரவாயில்லை.

இயற்கையின் செயல்பாடுகளை முன்கூட்டியே சொல்ல முடியாது. Unpredictable. எதிர்மாறாக, உயிரினங்கள் யூகிக்கக் கூடியவை போல் நடந்து கொள்கின்றன. Predictable.

தகவல்கள் சேகரிக்கின்றன. கற்றுக் கொள்கின்றன. புத்திசாலித்தனமான செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன. உயிர் வாழக் கிடைக்கும் இயற்கை ஆதாரங்கள் மிக மிக அரிது. ஆபத்துக்களோ பெரிது.

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் கிடைக்கும் தகவல்களை வடிகட்டி, மிக மிக சிக்கலான புள்ளி விவர ஆதாரங்களைக் கொண்டு மரபணுக்கள் முடிவுகள் எடுக்கின்றனவா?

அப்படிப் பார்த்தால், ஒரு பாக்டீரியா கூட மாபெரும் கணித மேதையாக இருக்க வேண்டும்.

ஆகவே உயிர்கள் வெறும் தகவல் சேகரிக்கும் பைகள் மட்டும் அல்ல. வாழும் கணனிகள். வாழ்வு துவங்குவதில் இருந்து மரணம் வரும் வரை தகவல்களை சல்லடை போட்டுத் துருவும் எந்திரங்கள்.

தகவல்களுக்கு அடுத்த படியாய் தர்க்கம், கணிதம் இரண்டுக்கும் வருகிறார் அய்யா.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

கணக்கு ஆசிரியர்கள் பொதுவாக, ரொம்பவும் சீரியஸ் தோற்றத்தோடு இருப்பது வழக்கம். (எல்லாரும் அல்ல. ஜாலியான ஆட்களும் உண்டு.) காரணம்: ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகளில் இருந்து மாணவர்கள் விலகிப் போய்விடக் கூடாதே என்கிற நல்லெண்ணம். கவலை. கரிசனை.

அதென்ன ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்? இதை ஆங்கிலத்தில் axioms என்பார்கள். இதைப் புரிந்து கொள்ள முதலில் நாம் தர்க்க இயலுக்கும் கணித இயலுக்கும் உள்ள தொடர்பைக் கண்டு கொள்ள வேண்டும்.

எல்லாரும் ஒரு மனதோடு ஒரு விஷயத்தை அல்லது செயல்பாட்டைக் கண்டு அல்லது அறிந்து அது உண்மை என்று ஏற்றுக் கொண்டால் அது தர்க்க ரீதியான உண்மை ஆகும். தர்க்க ரீதியான உண்மைகளுக்குக் குறியீடுகள் அமைத்து விதிகளும் செய்து அந்த அடிப்படையில் முடிவுகள் எடுப்பது கணிதம்.

ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகளுக்கு சில எளிய உதாரணங்கள் : 1+2 என்றால் அது 3. அதே சமயம் 2+1 என்றாலும் 3 தான். 5 x 2 என்றால் 10. அதே சமயம் 2 x 5 என்றாலும் 10 வரும்.

தர்க்க ரீதியாக நாம் ஏற்றுக் கொண்டவை உண்மைகள் என்றாலும் அதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் பிரபல கணித அறிஞர் Bertrand Russell சுட்டிக் காட்டும் சுவையான ஒரு முரண் இது:

A : இது பொய்யான வசனம். இந்த வசனத்தில் இருந்து A பொய் என்று தெரிகிறது. “இது பொய்யான வசனம்” என்பதே பொய்யாய் இருந்தால் A உண்மை ஆகிவிடும். இரண்டுமே பொய்யாக அல்லது உண்மையாக இருந்தால் எந்த முடிவும் எடுக்க முடியாது. மாறாக, உண்மையிலேயே ஒன்று பொய்யாகவும் மற்றது உண்மையாகவும் இருந்தாலும் அதே. அதே.

ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகளை வைத்து அவற்றின் மேல் அமைக்கப்படும் எந்த ஒரு கணித ரீதியான வசனங்களையும் அவை நிச்சயமான உண்மைகள் என்று ஒரு போதும் நம்மால் நிரூபிக்க முடியாது என்று கணிதம் மூலமே நிரூபித்தார் புகழ்பெற்ற கணித மேதை Kurt Godel.

தர்க்க ரீதியான உலகில் நாம் வாழ்கிறோம். தர்க்க ரீதியான முடிவுகளுக்குக் கணிதத்தை நம்பியிருக்கிறோம். அறிவு ரீதியான அத்தனை செயல்பாடுகள், முடிவுகளுக்குக் கணிதமே சாட்சி. கணிதமோ, சரி அல்லது தவறு என்று எதுவும் உறுதியாய் சொல்ல முடியாத நிலைக்கு நம்மை உந்தி விடும் என்றால் (undecidability) …

சந்தோஷப் படுங்கள்! என்கிறார் பேராசிரியர். கணிதத்தின் அழகே அது தான். ஒரு வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் திறந்தே இருந்தால் எப்படி ஒரு சுதந்திரத்தை அனுபவிப்போமோ அப்படித் தான் கணிதமும் இருக்கிறது. அப்படித் தான் இயற்கையும் (உலகும்) இருக்கிறது.

சுதந்திரமான ஓர் களத்தில் மட்டுமே படைப்பாற்றல் சாத்தியமாகும். அங்கு தான் புதிது புதிதாக ஏதும் உருவாகத் தளம் அமைகிறது. உயிர் முகிழ்த்தலே ஓர் படைப்பு (creativity). நான் யார், எங்கே போகிறேன், எங்கே வருகிறேன் என்கிற நினைவு கூட அவசியம் இல்லாத நிலையில் சும்மா ஒரு மாற்றம் இயல்பாக நடக்கிறது.

இயற்கை சிக்கலான (complex) ஓர் அமைப்பு. தவிர, முன் கூட்டியே தீர்மானிக்க முடியாத, சொல்ல முடியாத (undecidability) நிலையிலும் அது இருக்கிறது. கணிதமும் இதே இரண்டு நிலைகளையும் கொண்டிருக்கிறது.

அப்படியானால், ஏன் சிக்கலான இன்னும் ஓர் அமைப்பு இந்த இரண்டிலும் இருந்து தோன்றக் கூடாது? என்ன தடை இருக்கப் போகிறது?

பிறகு, இயற்கையின் சமநிலைக்கு எதிராய் ஓர் சிறு மாற்றம் அல்லது ஒரு பெரும் மாற்றம் தோன்றலாம். அந்த மாற்றம் நிலையாய்த் தொடரலாம். அல்லது தொடராமலே போய்விடலாம்.

இயற்கை சம நிலையில் இருந்தால் அதில் மாற்றமே எதுவுமோ ஏற்பட முடியாது. அது இயக்கம் எதுவும் இன்றி ஓர் உறைந்த நிலை போல் இருப்பின் அதில் என்ன புதுசாய்த் தோன்ற முடியும்?

சிக்கல் (complexity) அதிகரிக்க, அதிகரிக்க எதுவும் நடக்கலாம்.

ஆகவே ஆரம்பத்தில் அப்படி இருந்தது. தட்ப வெப்ப நிலைகள் இப்படி இருந்தன. இன்னின்ன காரணிகள் உதவின.. என்று யாராலும் ஒருபோதும் சொல்லவே முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆரம்ப கட்டத்தை சுட்டிக் காட்டவே முடியாது.

அப்படி, புதியதோர் சிக்கல் அமைப்பு தோன்றிவிட்டால் அது நிச்சயமாய் இயற்கையின் சமநிலைக்கு எதிராய் செயல்படுவதே பொருத்தமான செயலாய் இருக்கும். கணிதமும் அதற்கு ஓர் உந்துகோல்.

(பேராசிரியர் மிக மிகக் கவனமாக நூலிழையில் நடப்பது போல் நகர்கிறார். வார்த்தைகளைத் தேடித் தேடி எடுத்துக் கோர்க்கிறார். கோட்பாடுகளை சிந்தாமல் சிதறாமல் … )

ஓர் உயிரினத்தின் மரபணு, தன்னைத் தானே பிரதி எடுக்கும்போது அது வெறும் பிரதி என்றால் அது உயிர் வாழாது. அதே சமயம், எப்படி நகல் எடுக்கிறது என்பது இன்னும் புரியாத புதிர். ஆகவே அது தகவல்களை நகல் எடுப்பது மட்டுமல்ல, தன்னைத் தானேயும் நகல் எடுத்துக் கொள்கிறது.

இப்படி அனுமானிக்கலாம்: ஒரு கணனி தனது வன்பொருளை (hardware) நகல் எடுக்கிறது. கூடவே, அதன் மென்பொருளையும் (software) நகல் எடுக்கிறது.

வேதிப்பொருள்களின் எதிர்வினைகளும் (chemical reactions) தகவல்களின் (information) கூட்டுறவும் ஒன்று சேர்கின்றன. இவைகளின் கூட்டுறவில் உயிர் வாழ்வு என்பது தோன்றுகிறது.

வெறும் வேதியியல் எதிர்வினைகள் போதாது. வெறும் மரபணு செயல்பாடுகள் மட்டும் போதாது. பெருவாரியான உயிரியலாளர்கள் இந்த ரெண்டில் மட்டும் கவனம் செலுத்துவது தவறு என்கிறார் அவர்.

ஒரு சின்ன டோஸ் தான். ஆனா பத்திக்கிரிச்சி.

அடுத்த கட்டத்துக்குப் போவோமோ? (தொடர் -2)

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை (2)

உயிர் வாழ்தல் நிலையை விளையாட்டு, குவாண்டம் தன்மைகளோடு ஒப்பிடுகிறார் பேராசிரியர்.

விளையாடு மங்காத்தா

எந்த விளையாட்டுக்கும் அடிப்படை விதிகள். விதிகளை மீற முடியாது. விளையாடும்போது அதில் வருகிற சிலிர்ப்பு, கிடைக்கிற கிக் எல்லாம் தாண்டி உணர்ச்சி வசப்படாமல் கவனித்தால் அதில் கூட மாறிக் கொண்டே இருக்கும் கணித வடிவங்கள் (mathematical patterns) தென்படுகின்றன.

சிக்கல் என்பது கூடிக் கொண்டே இருக்கிறது. அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது? தெரியாது. கீழ் உள்ள Game of Life விளையாட்டில் ஐந்து கருப்பு சதுரங்கள் அக்கம்பக்கமாய் இருக்கின்றன. கருப்பாய் உள்ளவை “வாழும்” சதுரங்கள். வெள்ளை சதுரங்கள் வெறுமை.

இந்த விளையாட்டில் கருப்பு சதுரங்கள் பக்கத்தில் உள்ள வெள்ளை சதுரங்களுக்கு நகர வேண்டும். விளையாட்டின் ஒரு விதி: போனபிறகு அதன் சுற்றியுள்ள சதுரங்களில் “உயிருள்ளவை” (கருப்பு சதுரங்கள்) இரண்டுக்கும் குறைவாய் இருந்தால் போனவர் “செத்துப் போய்விடுவார்”.

“தப்பிவிட்டால்” தொடர்ந்து கருப்பு சதுரங்கள் வெள்ளையான வெள்ளை சதுரங்கள் நோக்கி நகரலாம். விளையாட்டின் நோக்கம்: மரணத்தை நெருங்காமல் போய்க்கொண்டே இரு.

இப்படி இன்னும் மூன்று விதிகளோடு ஐந்து கருப்பு சதுரங்களையும் ஓடவிட்டால் என்ன நடக்கும்?

இதில் ஒரு குறிப்பிட்ட நகர்வுகளின் பின் அவை ஒரு சீரான அமைப்போடு மாறாது நகர ஆரம்பிக்கின்றன. இவை உயிர் இல்லாதவை. விதிகள் மனிதர்கள் அமைத்தவை. (இது போல் இன்னும் காணொலிகளை Youtube இல் பார்க்கலாம்.)

கேள்வி: சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே போகும் இயற்கை போன்ற ஓர் அமைப்பில் இப்படி சில விதிகள், நகர்வுகள் தற்செயலாகத் தோன்ற முடியாதா?

பேராசிரியர், அவரின் சக ஆய்வாளர்களின் (Alyssa Adams, Sara Walker) முடிவுகள், இன்னும் பல செய்திகள், குறிப்பாக, ஆய்வாளர் Dave Greene கணனியில் உருவாக்கிய, தன்னைத்தானே நகல் எடுக்கும் நகர்வுகள் என்று தகவல்கள் சொல்லிக்கொண்டே போகிறார்.

இணைந்த கைகள்

மரபணுக்கள் மின் சுற்றுகள் (electrical circuits) போல் இணைந்திருக்கின்றன. உடலின் இயக்கத்துக்குப் புரதங்கள் தேவை. புரதங்கள் தயாரிக்கும் போது அந்தந்த உயிரியல் சுற்றுக்களின் ஸ்விட்ச் மட்டும் போடப்பட்டிருக்கிறது. மற்றவை அணைக்கப் பட்டிருக்கின்றன. புரதங்கள் தயாரித்தது போதும் என்றால் மீண்டும் ஸ்விட்ச் அணைக்கப்பட்டு விடுகிறது.

கரு முட்டையில் இருந்து குழந்தை உருவாகும்போது இப்படி நடந்து கொண்டே இருக்கிறது. முழுதாகக் குழந்தை வளர்ச்சி அடைந்ததும் எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்து விடுகின்றன.

எப்படி இந்த உயிரியல் சுற்றுகள் (bio circuits) அமைந்திருக்கின்றன? (இந்த சுற்றுகளை நாம் கண்ணால் பார்க்க முடியாது. இன்னும் முன்னேறவில்லை.) யார் விளக்கை எரிய விடுகிறார் அல்லது அணைக்கிறார்? யார் மேற்பார்வையில் இந்த செயல்பாடுகள் நடக்கின்றன?

மரபணுக்களை விட்டுவிடுங்கள். எறும்புகள், தேனீக்கள் கூட்டம் ஒரு தனி உயிர் போல் வாழும் வாழ்க்கையைப் பாருங்கள். எறும்புகளின் கண் பார்வை குறுகியது. உணவு தேடல், சேமித்தல், புற்று கட்டுதல் இவை தான் அவைகளின் தினசரி வாழ்க்கை.

தேடல் நடக்கும்போது எல்லாம் ஆளுக்கொரு பக்கம் ஊர்கின்றன. ஒரே குழப்பம். ஆனால் விரைவிலேயே ஒரே திசையில் போக ஆரம்பிக்கின்றன.

என்ன நடக்கிறது? எங்கோ ஓர் தகவல் கிடைத்துவிட்டது. ஒவ்வொன்றும் தலையால் தொட்டுக் கொள்கின்றன. தகவல் பகிரப் படுகிறது. பிறகு, அந்தத் திசை நோக்கி எல்லா எறும்புகளும் பயணிக்க ஆரம்பிக்கின்றன. தகவல் என்பது வழி நடத்துகிறது. இணைக்கிறது. வாழ வைக்கிறது.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யம்

பேராசிரியர் ஓர் இயற்பியலாளர். ஆகவே குவாண்டம் உலகும் உயிர் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கலாம் எனும் கோட்பாட்டை (இன்னும் கூடிய எச்சரிக்கையோடு) பேராசிரியர் முன் வைக்கிறார்.

குவாண்டம் உயிரியல் புதியதோர் துறை. இதில் இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று அவரும் இன்னும் இதில் ஆர்வம் கொண்ட வேறு இயற்பியலாளர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.

அணுக்களையும் அவற்றின் சக கூறுகளையும் ஆராயும் துறை குவாண்டம் இயற்பியல். அது ஆழம் நிறைந்த கடல். கடலுக்குள் என்ன இருக்கிறது? யாருக்கும் தெரியாது.

இயற்பியல் துறையில் உள்ளவர்களிடம் குவாண்டம் பற்றிக் கேட்டால் அனைவரும் நெளிவார்கள். வளைவார்கள். (நேரே பார்த்து சொல்வது கஷ்டம்.)

ஏன்? குவாண்டம் கூறுகள் எதுவும் புரிவதே இல்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத அத்தனையும் அந்த உலகில் அரங்கேறுகின்றன.

அணுவோ அதன் கூறுகளோ, சக்தி கொஞ்சமாய் இருந்தால் எந்தத் தடைகளையும் அனாயாசமாய்க் கடந்து போகின்றன. சக்தி கூடியிருந்தால் அசைய மாட்டாமல் தடுமாறுகின்றன.

அடுத்த வீட்டுக்குப் போக சுவரேறிப் பாய்ந்தால் எடுக்கும் நேரமும் இங்கிருந்து அடுத்த பிரபஞ்சம் போய் அதையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு அதே வீட்டுக்குள் போய் நிற்க எடுக்கும் நேரமும் அவர்களுக்கு ஒன்றாகவே இருக்கிறது.

அவர்கள் உலகில் நேரம் என்பதே இல்லையா?

நம் உலகில் காலம் முன்னோக்கியே செல்கிறது. பின்னே போவதில்லை. அவைகள் முன்னும் பின்னும் போகின்றனவா? எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

அணுக்களையும் அவற்றின் சக கூறுகளையும் துகள்கள் என்று சொல்வதா? அலைகள் என்பதா? இரண்டின் தன்மைகளும் ஒரு சேரக் கொண்டிருக்கின்றன.

குவாண்டம் உலகு சிக்கல்கள் நிறைந்தது. குழப்பங்கள் நிறைந்தது. அடுத்து என்ன நடக்கலாம் என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில் அசையும் உலகம்.

(பேராசிரியர், சிக்கலையும் நிச்சயமற்ற தன்மையையும் உயிர் வாழ்வின் அடிநாதமாக முன் வைத்ததைக் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். இதுக்குள் குவாண்டம் உலகம் எதுக்கு? அதை ஏன் உயிரியலில் புகுத்த வேண்டும்? பல உயிரியலாளர்கள் மல்லுக்கு நிற்கிறார்கள்.)

இருந்தாலும் அய்யாவின் வாதத்தையும் கேட்டு விடுவோமே.

இன்றைய கணனிகள் 0, 1 என்கிற இரண்டு எண்களை மட்டுமே உபயோகிக்கின்றன. (ஸ்விட்ச் போடப் பட்டிருக்கிறது. அல்லது அணைக்கப் பட்டிருக்கிறது.) இந்த இரண்டு நிலைகள் மட்டும் இருப்பதால் அவை தடுமாறிக் கொண்டிருக்கின்றன. விரிந்த எல்லைகள் இருந்தால் தான் எந்த ஓர் கணனியும் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

நம் மரபணுக்களின் ஆற்றலின் ஓர் பகுதியைக் கூட இந்த ரெண்டு டிஜிட்டல் கணனிகளால் எட்ட முடியாது.

இன்று குவாண்டம் கணனிகள் பற்றிய ஆய்வுகள் நடக்கின்றன. இவை புழக்கத்துக்கு வருமானால் அந்தக் கணனிகள் 2^270 நிலைகளில் இருந்து (அதாவது 2 ஐ 271 தடவை பெருக்கினால் என்ன எண் வருமோ அத்தனை நிலைகளிலும்) ஒரே நேரத்தில் செயலாற்ற முடியும்.

உயிரினங்கள் ஓர் அற்புதமான, வேகமாக செயல்படும் கணனிகள் என்று ஏற்றுக் கொண்டால், குவாண்டம் கணனிகளின் செயல்பாடுகளையும் அவற்றோடு ஒப்பு நோக்கலாம்.

மனம் அலை பாயுதே கண்ணா

சுய உணர்வு எப்படி உருவாகிறது? எந்த உடல் கூற்று விதிகள் மனம் என்பதற்கு அடிப்படையாய் இருக்கின்றன? எந்த அறிவியல் கோணத்திலும் இன்னும் சரியாகச் சொல்ல முடியவில்லை.

தகவல்கள், ஒரு முகவர் (agent) போல் பின்னால் இருந்து மனம் என்பதை உருவாக்குகின்றனவா? பேராசிரியர் கேட்கிறார்.

மனம் வாழ்கிறது என்றால் தகவல்களும் வாழ்வு கொண்டவை. மனதை உடலில் இருந்து பிரிக்க முடியாது என்றால் தகவல்களும் அப்படியே. (உயிர் வேறு மனம் வேறு என்போருக்கு இந்தப் பதில் திருப்தி அளிக்காது. தெரிந்ததே. இது மற்றவர்களுக்காக.)

கடிகார முள் தான் ஓடுகிறது. நேரம் அல்ல.

காலத்துக்குத் திசையும் இல்லை. அது ஓடுவதும் இல்லை. (இயற்பியலில் இது முக்கிய கொள்கை. – எனது கால தேவன் கதை கட்டுரை பார்க்கவும்.)

நேற்று இருந்த நானும் இன்று இருக்கும் நானும் வெவ்வேறு. அதிகம் ஏன்? போய்விட்ட கணத்தில் இருந்த நான் வேறு. இந்தக் கணத்தில் இருக்கும் நான் வேறு. உளவியலாளர்கள் மத்தியில் இருக்கும் பல கருத்துக்களில் இதுவும் ஒன்று.

தகவல்களுக்கு சக்தி மற்றும் ஓர் வரம்பு இருக்கிறது என்று முன்னைய தொடரில் Rolf Landauer சொன்னதை நினைவில் கொள்ளவும். அதன்படி சேமிக்கப் பட்டிருக்கும் தகவல்கள் மிகவும் மெதுவாக, ஒரு சிக்கலான வடிவத்தில் வெளிப்படுகின்றன. இந்தத் தகவல்களின் தொடர்ச்சி தான் “நான்” எனும் பிரமையை உண்டாக்குகிறதோ?

தவிர, புதிய தகவல்கள் கிடைக்கும் போது, அவை பழைய தகவல்களோடு ஒப்பு நோக்கிப் பார்க்கப் படுகின்றன. இந்தச் சிறு சிறு வேறுபாடுகளை ஒவ்வோர் நிலையாக தொடர்ச்சியாகக் காணும் போது ஓடுவது போல ஒரு மாயை உருவாகிறது. இதைத்தான் காலம் ஓடுகிறது என்று சொல்கிறோமா?

உயிரியல் தகவல்கள் மரபணுக்களில் உள்ளார்ந்து இருப்பவை அல்ல. அவை தனியான ஓர் அமைப்பு என்பதைப் பேராசிரியர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். இதற்கென்று புதிய இயற்பியல் விதிகள் தேவை என்பது அவர் வாதம்.

இரண்டு ராஜ்யங்களின் மேலே ஓர் சாம்ராஜ்யம்

நாம் பார்க்காவிட்டால், குவாண்டம் உலகத்தில் அணுக்கள் எல்லா “நிலைகளிலும்” இருக்கின்றன. இங்கே என் அருகில், உங்கள் அருகில் அல்லது இந்த உலகின் எந்தப் பகுதியிலும் அது இருக்கிறது. ஏன், மற்ற பிரபஞ்சங்களிலும் கூட எங்கும் ஒரே சமயத்தில் இருக்கிறது.

ஒரு அணுவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அத்தனை நிலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு நிலையில் வந்து குவிகின்றன. இந்த உலகில் வந்து நிற்கின்றன. இங்கே குறிப்பிட்ட அணு “தற்போது” இருக்கிறது என்று குறித்துக் கொள்ளலாம். அவ்வளவே.

பார்ப்பதால் அணுவின் செயல்பாடுகள் பாதிக்கப் படுகின்றன.

இந்தக் கோட்பாடு தான் வேறு எந்த விளக்கங்களை விட, இதுவரை பெருவாரியான இயற்பியலாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்தக் கொள்கை கடந்த 20 ஆண்டுகளில் காலாவதி ஆகிவிட்டாலும் நமக்கு வேறு வழி தெரியவில்லை. (பேராசிரியர் கவலைப் படுகிறார்.)

இதன்படி இரண்டு நிலைகள் உள்ளன. 1) எங்கும் இருக்கக் கூடிய குவாண்டம் நிலை. 2) பார்த்தபிறகு இருக்கும் ஒரே இடத்தில் குவியும் ஒரு நிலை (இந்த உலக நிலை). ஆகவே இரண்டும் வேறு வேறு தளங்களில் வேறு வேறு விதிகளில் இயங்குவதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இந்த இரண்டு உலகையும் (அமைப்புகளையும்) இணைப்பது எது? அது தகவல் ஆகத் தான் இருக்க முடியும் என்கிறார் பேராசிரியர்.

தகவல்கள் இரண்டு உலகங்களிலும் சஞ்சரிப்பதால் அதற்கென்று தனி இயற்பியல் விதிகள் வேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

இரண்டு உலகங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை. விதிகளும் வேறானவை. ஆகவே இணைப்பு நடக்கும்போது விதிகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இது தகவல்களின் மிக முக்கிய தன்மை.

இன்றைய சதுரங்க விளையாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஆளுக்கு 16 கட்டைகளுடன் மாறாத விதிகளுடன் ஆட்டம் துவங்குகிறது. வேறு எவரையும் விட, அதி கூடிய புள்ளிகள் பெற்றால் அவர் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிடுகிறார்.

ஆட, ஆட விதிகளும் மாறுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். கிராண்ட் மாஸ்டரை ஒரு கத்துக்குட்டிப் பையனே கவிழ்த்து விடுவான். யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.

உயிர் வாழ்க்கையும் கிராண்ட் மாஸ்டர் போலவே சுற்றுச் சூழலை எதிர்த்து, அதைப் பயன்படுத்தி எதிர் நீச்சல் போட்டபடியே இருக்கிறது. உயிர் வாழ்வில் விதிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதாவது தகவல் உலகத்து விதிகள்.

பெருவாரியான உயிரியலாளர்கள் இன்னும் வேதி இயலையும் மரபணு இயலையும் மட்டுமே உயிர் வாழ்வின் மய்யமாக வைத்து அதன் மூலம் வாழ்வை விளக்க முயல்கிறார்கள்.

இயற்பியலாளர்கள் கூட, தகவல் அவசியம் என்று ஒத்துக் கொண்டாலும் அது நம் மனதின் கற்பனையே தவிர, நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை என்று கொள்கை வைத்திருக்கிறார்கள். (எல்லாரும் அல்ல).

இயற்பியல் அமைப்புகள் மட்டுமே உண்மை. இவை தான் உயிர் வாழ்வின் அடித்தளம். நம் மனதில் எழும் எல்லாக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அவை மேல் சுமத்தி வைத்திருக்கிறோம். இரண்டு நிலைகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவர்கள் நினைப்பது முற்றிலும் தவறு. இது பேராசிரியரின் கருத்து.

பேராசிரியர் தனது சிந்தனைகளைக் கோட்பாட்டு அடிப்படையில் வைத்தாலும் முடிந்தளவு மற்ற அறிவியலாளர்களின் ஆய்வுக்குக் கட்டுரைகளையும் மேற்கோள் காட்டுகிறார்.

கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டேன்:

தனது முடிவுகளுக்கு ஆதாரங்கள் போதாது என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார். அடுத்து, பெருவாரியான அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ளும் (mainstream scientists) பாதையில் இருந்து விலகுவதால், இவரின் சிந்தனைகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பது வருத்தம் தரும் செய்தி.

புரட்சிகரமான ஓர் சிந்தனையை ஆராயாமல் அலட்சியப் படுத்துகிறோமா?

எப்படியோ, பேராசிரியர் சொல்லாமல் விட்ட ஒரு தகவல் இது. பரிசுத்த வேதாகமத்தின் முதல் வரி (ஜான் 1:1) இப்படி ஆரம்பிக்கிறது:

ஆதியில் வசனம் இருந்தது .

சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (1)

என்ன தான் மனசுக்குப் பிடித்தவர்கள் பக்கத்தில் இருக்கட்டுமே. எவர் இருந்தாலும், “அவர் ” மட்டும் இல்லை என்றால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடுகிறது. அவரைப் பார்க்காமல், தொடாமல் ஒரு வினாடி கூட, சே !..

வரலாற்று ஆசிரியர் யுவால் ஹராரிக்கு (Yuval Harari) விளம்பரம் தேவை இல்லை. அவரின் இரண்டு புத்தகங்களும் (உலகம் பூரா) இன்றும் விற்பனையில் சாதனை படைக்கின்றன. முதலாவது: Sapiens: A Brief History of Humankind. இரண்டாவது: Homo Deus: A Brief History of Tomorrow. அவரின் மூன்றாவது புத்தகம்: Money. இந்தத் தொடரில், அதில் இருந்து சில பகுதிகள்:

நிழல் நிஜமாகிறது

நாள் செல்லச் செல்ல, செல்போன்கள், கணனிகளின் மேம்பாடு கூடிக் கொண்டே போகிறது. தினமும் புதுப்புது ரகங்கள். அதிகரிக்கும் செயல்திறன். வேகம். வசதிகள். சுண்டி இழுக்கும் மாடல்கள்.. ப்பா! கடையை விட்டு வெளியே வர மனமே இல்லை.

இருந்தும், கணனிகள் எத்தனை வேகமாக செயல்பட்டாலும் நம் அறிவுக்கூர்மையை அவைகளால் எட்டவே முடியாது என்கிற ஒரு பொதுவான எண்ணம் மனிதர்கள் மனதில் இருக்கிறது.

மனிதன் கரிமம் சார்ந்த ஒரு உயிரினம் (organic species). இந்த உயிரினம் இன்றைய நிலைக்கு வந்து சேர மில்லியன் கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இயற்கை அவசரப் படுவதில்லை. படிநிலை வளர்ச்சியை ரொம்பவும் மெதுவாய் நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் கனிமங்களால் (inorganic) தயாரிக்கப்பட்ட கணனிகளின் பிரம்மாண்ட வளர்ச்சி கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிறதே. மனிதர்கள் பெரிதாகப் பீற்றிக் கொண்டிருக்கும் அல்லது கனவு கண்டுகொண்டிருக்கும் அந்த நுண்ணறிவின் உச்சத்தைத் (super-intelligence) தொடுவதற்கு அதே கணனிகளால் முடியாதா என்ன?

மனிதர்களை வெல்ல எத்தனை நாள் எடுக்கும்? கணனிகளின் வேகம் பன்மடங்கு பெருகப் பெருக, அவற்றுக்கு அதிவேக மாற்றுவழிகளும் குறுக்கு வழிகளும் தென்படலாம்.

அடுத்த கேள்வி: நுண்ணறிவு முக்கியமா? சுய உணர்வு முக்கியமா? ஓர் உயிர் எனும் போது, அங்கே “நான்” என்கிற சுய உணர்வும், அறிவும் சேர்ந்து செயல்படுகின்றன. கணனிகளுக்கு “நான் ” என்பதே இல்லையே.

கணனிகளைப் பொறுத்தவரை எது முக்கியம் என்று பன்னாட்டு நிறுவனங்களையோ அல்லது ராணுவ ஆட்களையோ கேட்டால் அறிவுக்கூர்மை/வேகம் தான் முக்கியம். சுய உணர்வு? அதெல்லாம் பெரிசில்லை என்று பதில் சொல்கிறார்கள்.

எங்கே அடித்தால் தள்ளாடுவார்கள்? எப்படி அடித்தால் முடங்கிப் போவார்கள்? என்று எதிரி நாடு யோசிக்க முன்பே நாம் போட்டுத் தள்ளி விடவேண்டும். அவ்வளவு தான். அதற்குத் தேவை அறிவுக்கூர்மை. உளவுத் துறையின் நுணுக்கமான தகவல்கள். இப்படிப் போகும் ராணுவ ஜெனரல்களின் சிந்தனை.

ஊபர் (Uber) மாதிரி ஒரு பன்னாட்டு டாக்ஸி கம்பெனியைக் கேட்டால், இந்த டாக்ஸி டிரைவர்கள் இருக்கானுகளே.. என்று முதலில் ஒரு இழுவை இழுப்பார்கள். பிறகு, மனிதர்களின் தவறுகளால் தான் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் + படங்கள் தொடரும்.

அவர்கள் பேச்சிலும் ஒரு “ஞாயம்” இருக்கிறது. Google நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் ஓடக்கூடிய தானியங்கி கார் ஒன்றை உருவாக்குவதில் முனைந்திருந்தது. 2015 ஆகஸ்ட்டில் ஓர் நாள், அதை மக்கள் நடமாடும் வீதி ஒன்றில் ஓடவிட்டு சோதனை செய்த போது ஒரு விபத்து நேர்ந்து விட்டது.

வண்டி ஒரு தப்பும் பண்ணவில்லை. அதன் பின்னால் ஒட்டி வந்த “மனித” ஓட்டுநர் தான் வண்டி பின்னால் மோதியிருக்கிறார். அந்த மனிதர் என்ன யோசனையில் வந்தாரோ? முட்டாள்த்தனமாக வண்டி ஓட்டுவதில் மனிதர்கள் கெட்டிக்காரர்கள் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

வண்டிகளை முழுவதுமாய் கணனிகள் மூலம் இயக்க முடியுமானால் இப்படி விபத்துக்கள் நடக்க முடியுமா? கணனி வலைப்பின்னல்கள் (computer networks) மூலம் மனித உயிர்களைக் காப்பாற்ற முடியுமே. காலம், நேரம், பணம் எல்லாவற்றையும் சேமிக்க முடியுமே.

இன்னொன்றும் நடக்கும். மில்லியன் கணக்கில் ஓட்டுநர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். கடந்த காலத்தில் கார்கள் வந்தபோது குதிரை வண்டிக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஸ்டூடியோக்கள் வந்தபோது ஓவியர்கள் வயிற்றுப் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.

எதிர்காலத்தில் மட்டுமல்ல, இன்றே பல வேலைகள் இல்லாமல் போய்விடலாம். ரோபோக்கள் மற்றும் 3D பிரிண்டர்கள் ஏற்கெனவே ஆடைத் தொழில் பேட்டைகளில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. முதலாளிகள் எத்தனை தொழிலாளர்களுக்கு சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்பலாம் என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து, வங்கி, காப்புறுதி ஊழியர்கள், பயண முகவர்கள் மற்றும் பங்கு சந்தை முகவர்கள் எல்லாரும் இப்போதே வேலை இல்லாதோர் பட்டியலுக்கு விண்ணப்பம் அனுப்புவது நல்லது. ஏனென்றால் இன்று கணனிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்களின் பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

தேதி: 23.04.2013. நேரம் 13:07. சிரியா நாட்டில் இருந்து சில ஹேக்கர்கள் எப்படியோ அசோசியேட்டட் பிரஸ் ட்விட்டர் கணக்குக்குள் (Associated Press Official Twitter Account) புகுந்து விட்டார்கள். அவர்கள் சொன்ன சேதி: வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதிபர் ஒபாமாவுக்குக் காயம்.

அவ்வளவு தான். நிலைமை பரபரப்பாகி விட்டது. பங்குச் சந்தையில் மின்னல் வேகத்தில் பங்குகள் சரிந்தன. சுமார் 136 பில்லியன் டாலர்கள் காணாமல் போய்விட்டது. நேரம் 13:10. மூன்று நிமிடங்கள் போனபிறகு தான் அது போலி செய்தி என்று தெரிந்தது. காணாமல் போன டாலர்கள் மீண்டும் திரையில் மின்னின. நிம்மதி.

இதற்கு மூன்று ஆண்டுகளின் முன்னே இதே போல் இன்னோர் “அதிர்ச்சி” பதிவாகி இருக்கிறது. தேதி: 06.05.2010. நேர இடைவெளி: 14:42 – 14: 47. இந்த 5 நிமிட இடைவெளியில் 1 டிரில்லியன் டாலர்கள் மாயமாய் மறைந்தன. பங்குச் சந்தை பயங்கரமாய் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. நல்ல நேரம். ஒரு மூன்று நிமிடங்கள் போனதும் மீண்டும் தவறுகள் தானாக சரியாக.. அப்பாடா!

கணனிகள் தான் பணப் பரிமாற்றங்களுக்குப் பொறுப்பு. ஆகவே ஒரு பகுதி ஆட்கள், கணனிகள் மேல் வழக்குத் தொடுக்கப் போகிறோம் என்று கூச்சல் போட்டார்கள். அடுத்த பகுதி, இல்லை, இது மனிதர்களின் தவறு. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மேல் கேஸ் போடப் போகிறோம் என்று குதித்தார்கள்.

என்ன நடந்தது? யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வழக்கறிஞர்கள் மட்டும் ரகசியமாய் மகிழ்ச்சியில் மிதந்தார்கள். (காரணம் எல்லாருக்கும் தெரியும்.) ஆனால் வழக்கறிஞர்கள் எத்தனை நாளைக்குத் தான் கல்லா கட்டமுடியும்?

வந்தா ராஜாவா தான் வருவேன்

கணனிகளின் நெறிமுறைகள் (algorithms) ஆய்வாளர்களின்/வடிவமைப்பாளர்களின் சாமர்த்தியத்தால் நாளுக்கு நாள் சிக்கலாகி (complexity) வருகின்றன.

எந்த ஒரு சிக்கலான கட்டளையையும் எவ்வளவு குறுகிய நேரத்தில் எந்தக் கணனி செயல்படுத்தி முடிக்கிறதோ அது தான் கணனிகளில் ஸ்டார். ஆகவே நேரம், வேகம், தரம், துல்லியமான தரவுகள் என்று பல பரிமாணங்களில் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது.

அரசுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொட்டி, திறமைசாலிகளைத் தேடிப்பிடித்து ஆய்வுகள் நடத்துகின்றன. இன்று யாரிடம் அதி சிறந்த கணனி (super computer) இருக்கிறதோ அவர் தான் ராஜா அல்லது ராணி. அதிகாரம், பணம் இரண்டும் அவர் காலடியில் குவிகிறது.

சட்டத் துறைக்கு வருவோம். மாணவர்கள் இரவு பகலாய்ப் படித்து நான்கு வருஷங்கள் தூக்கம் இல்லாமல் புத்தகங்களோடு மாரடித்து சட்ட நுணுக்கங்கள், கடந்த காலத்து தீர்ப்புகள் என்று பல்லாயிரம் பக்கங்கள் வாசித்து எப்படி எல்லாம் மல்லாட வேண்டி இருக்கிறது?

கணனிகள் இந்த வேலையை ஒரு வினாடியில் செய்துவிடும். கனம் கோர்ட்டார் அவர்களே! என்று வழக்கறிஞர் சட்டையை சரி செய்து, ஒரு கனைப்பு கனைத்து, கண்ணாடியை மாட்ட முன்பே..

வழக்கின் சாராம்சம் என்ன, எங்கே, எந்த ஆண்டு இதே மாதிரி வழக்குக்கு என்ன தீர்ப்பு, என்ன அடிப்படையில் கொடுக்கப் பட்டது எல்லாமே நீதிபதியின் கணனித் திரையில் வந்து விழுந்துவிடும்.

ஆகவே வழக்கறிஞர் எதற்கு? ஏன், நீதிபதி வேலைக்கும் ஆபத்து காத்திருக்கிறது. எல்லாத் தகவல்களும் தெரிந்துவிட்டால், யார் குற்றவாளி என்பதும் நிரூபிக்கப் பட்டுவிட்டால், என்ன தண்டனை என்று திரையிலேயே தெரியும் போது நீதிபதி எதுக்கு? நீங்களோ நானோ, யாருமே அந்த வேலை பார்க்கலாமே.

ஒருவர் பொய் சொல்கிறாரா, உண்மை சொல்கிறாரா? இன்றுள்ள வழக்கறிஞரோ, நீதிபதியோ, அல்லது போலீஸ்காரரோ எல்லாருமே உளவியலில் டிப்ளோமா முடித்த பிறகு தான் வேலைக்கு வந்திருப்பார்கள் என்று நம்ப முடியாது.

சரி. அவர்களுக்கு ஏதாவது மந்திர சக்திகள்? குறைந்தது கிளி ஜோசியம்? கைவிரல் ரேகை சாஸ்திரம்? ஒன்றுமே தெரியாதா? கவலையை விடுங்கள். எதிர்கால fMRI ஸ்கேனர்கள் வர அதிக நாள் போகாது. எந்த மூஞ்சியைப் பார்த்தாலும் டக் என்று சொல்லிவிடும்.

அடுத்து ஆசிரியர்கள். Mindojo மட்டுமல்ல, பல நிறுவனங்கள் டிஜிட்டல் கல்வி முறையில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று கோதாவுக்கு வந்திருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு விரிவுரை நடத்தி, பரீட்சை வைத்து, ஒரு சான்றிதழ் கையில் கொடுத்து இனி வேலை தேடு, அது உன் பாடு என்று ரோடு ரோடாக அலைய விடுவதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

வகுப்பில் மாணவர் கண்கள் எந்தளவு சுருங்குகின்றன? அதோ அவன் கொட்டாவி விட ரெடியாகிறானா? இவளுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறது? Thermodynamics? Differential Calculus? அத்தனையும் கணனி கமரா கண்களில் பதிவாகின்றன. மாணவரின் மரபணுவில் துவங்கி, கணனிகள் சகல தகவல்களையும் ஒப்பீடு செய்கின்றன. புள்ளிவிவரங்கள் வடிகட்டப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

டேய் வெங்கடேசா! உனக்கு வேதியியல் ஒத்து வராது. பேசாமல் மோட்டார் மெக்கானிசம் படி . உன் வாழ்க்கை நல்லா வரும். ஏய் வரலட்சுமி, நீ வரலாறு படிச்சிக் கிழிச்சது போதும். உடனடியா மெடிக்கல் டெக்னாலஜி படிப்புக்கு விண்ணப்பம் போடு.

இப்படி ஒவ்வொரு மாணவரின் கல்வித் திறன், எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் என்றெல்லாம் தேர்ந்து, எடைபோட்டு அந்தந்த மாணவர்கள் முன்னேற உதவிட, சுயமாகவே கணனிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த வகை கணனிகளின் செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்று பேர். சுருக்கமாக, AI.

இனி மருத்துவப் பணி. டாக்டர் அய்யா அல்லது அம்மணி உங்கள் உடல்நலக் குறைவை, நோயைக் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்? உங்கள் அப்பா, அம்மா பற்றிய தகவல்கள், நீங்கள் பிறந்தது முதல் என்னென்ன கோளாறுகள், பிறகு சுற்றுச் சூழல்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் சொல்லி முடிக்க, ஆகக் குறைந்தது 30 நிமிஷங்கள் போதுமா?

அவரோ, நீங்கள் பேச ஆரம்பித்த ரெண்டாவது நிமிஷமே உங்கள் மகாபாரத சீரியலை வெட்டிவிட்டு, முதல்ல லேப் போங்க. இந்த டெஸ்ட்டுகள் எடுங்க. ரிப்போர்ட் தருவாங்க. அப்ப வாங்க என்று அனுப்பிவிட்டு அடுத்த நோயாளியை வரச் சொல்லி மணி அடிப்பார்.

அவரை சொல்லிக் குற்றமில்லை. உங்கள் மாதிரி எத்தனை பேர் கியூவில் நிற்கிறார்கள்? தவிர, அவருக்கும் சொந்தப் பிரச்னைகள். சரியாக, உங்கள் நோயைக் கண்டுபிடித்து, மற்ற டாக்டர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர, சராசரி ஒரு பத்து நாளாவது வேண்டும். அதுவரை மற்றவர்கள் காத்திருக்க வேண்டும். நடக்கிற காரியமா இது?

IBM நிறுவனத்தின் Watson கணனிக்கு இதெல்லாம் தூசு. நோயாளிகளின் முழு விவரங்கள் துவங்கி, போன நிமிடம் வரை நடந்த ஆராய்ச்சி முடிவுகள், மருந்துகள் சகல விஷயங்களையும் தன் டிஜிட்டல் மூளையில் பதிந்து வைத்திருக்கிறார் அந்த பாபா.

24 மணித்தியாலமும் அவரைக் கேள்வி கேட்கலாம். சளைக்காமல் பதில் சொல்வார். தூங்கவே மாட்டார். பணி நிறுத்தம்? ஊதிய உயர்வு? அப்படி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. (ஒரு சின்னத் தகவல்: புற்று நோய் அறிகுறிகளை 100 க்கு 90 விழுக்காடு அவர் சரியாக சொல்லியிருக்கிறார். டாக்டர்களால் 50 விகிதம் மட்டுமே..)

சிலருக்கு மன உளைச்சல், தனிமை, உணர்வுகளைத் கொட்டித் தீர்க்க யாரும் இல்லையே என்கிற வருத்தம்.. இன்றைய பின் நவீனத்துவ உலகில் இப்படிப் பல்லாயிரம் மக்கள் அவதிப் படுகிறார்கள். Mattersight நிறுவனம் சிறப்பு வாடிக்கையாளர் சேவை ஒன்றை நடத்துகிறது. போன் பண்ண வேண்டியது தான் பாக்கி.

நீங்கள், உங்கள் துயரங்களைச் சொல்லலாம் அல்லது முடிவே இல்லாத ஒரு தொடர் கதை சொல்லலாம். திட்டலாம். எரிந்து விழலாம். உங்களுக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லிக் கேவலப் படுத்தலாம். மறுமுனையில், எந்தப் பதட்டமும் இல்லாமல் அன்பாக, அசராமல் பதில் சொல்லி உங்களை அமைதிப் படுத்துவார் இந்த பாபா.

டாக்டர் வேலையை விட்டு மருந்தகங்கள் (pharmacies) வந்தால் அங்கேயும் இருப்பார் ஒருவர். சான் பிரான்சிஸ்கோ நகரில் 2011 ம் ஆண்டில் ஒரு மருந்தகம் துவங்கியது. அங்கே அவர் மட்டும் வேலை செய்கிறார். அந்த ஆண்டிலேயே சுமார் 2 மில்லியன் பேர் வாடிக்கையாளர்கள் அவருக்கு.

வாடிக்கையாளரின் அலர்ஜி பிரச்னைகள் மற்றும் வேறு என்ன மருந்துகள் உபயோகிக்கிறார் என்று எல்லா விவரங்களும் அந்த டிஸ்பென்சர் மூளையில் இருக்கிறது. அவர் இது வரை ஒரு தப்பு கூடப் பண்ணவில்லை. மனித ஊழியர்களோ 100 க்கு 1.7 வீத தவறுகள் செய்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

பாபா கணனி விளையாட்டுகளிலும் (games) கெட்டிக்காரர். 2015 ம் ஆண்டு பெப்ரவரி மாசம் நடந்த செஸ் விளையாட்டில் அன்றைய உலக சாம்பியன் Gerry Kasparov, IBM நிறுவனத்தின் Deep Blue Beat பாபாவிடம் தோற்றுப் போனார். Google நிறுவனத்தின் Deep Mind, மற்றும் AlphaGo என்று பல சாம்பியன்கள் இருக்கிறார்கள்.

இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தின் பின்னால், மூன்று அடிப்படை சித்தாந்தங்கள் இருக்கின்றன.

முதலாவது: உலகின் அத்தனை உயிரினங்களும் கணனி நெறிமுறைகளின் (algorithms) கூட்டுப் படிமங்கள். மில்லியன் ஆண்டுகளாக, படிநிலை வளர்ச்சியில் மாற்றமடைந்து இன்றைய நிலைக்கு வந்திருக்கின்றன.

இரண்டாவது: இந்த நெறிமுறைகள் உள்ளே குறிப்பிட்ட கணித வடிவங்கள் (mathematical patterns) மறைந்திருக்கின்றன. இவை வெளி உலகத் தொடர்புக்கு ஏற்றவகையில் தீர்வுகள் உருவாக்கி செயல்படுத்துகின்றன.

மூன்றாவது: செயல்பாடுகள் உண்மை நிலவரத்துக்குப் பொருத்தமாய் இருக்குமானால் இந்தக் கணித நெறிமுறைகளை எந்த மூலப் பொருள்களாலும் உருவாக்கலாமே. உதாரணமாய்: 2+2=4 என்பதை பாசிமணிகள் கொண்டும் நிரூபிக்கலாம். அல்லது கற்கள், பிளாஸ்டிக் எதுவோ அது அவரவர் வசதி. கணிதம் தான் முக்கியமே தவிர பொருள் அல்ல.

ஆகவே, நம்மைப் போல் கரிமத்தால் உருவாகினால் என்ன அல்லது நாம் கணித அடிப்படைகள் மூலம் சிலிக்கனால் உருவாக்கினால் என்ன? எல்லாம் ஒன்று தான். (வேறு கனிமங்களும் இதில் அடங்கலாம்.) வித்தியாசம் இல்லை.

இந்த சித்தாந்தங்கள் சிலருக்கு அதிர்ச்சி கொடுக்கலாம். இருந்தும் இன்றைய அறிவியலின் அசுர வேகத்தில் இதுவரை நாம் பெருமையாகவும், புனிதமாகவும் நினைத்திருக்கும் பல கோட்பாடுகள் அடிபட்டு நசுங்கிக் கொண்டே இருக்கின்றன. நமது “இருப்பே” (existence) கேள்விக்குறி ஆகிவிட்டது உண்மை தான்.

நாம் அன்றாடம் எடுக்கும் முடிவுகள் இரண்டு வழிகளில் அமைகின்றன. முதலாவது: ஏதுவும் விளைவும் (cause and effect). உதாரணங்கள் : அடித்தால் வலிக்கும். குடித்தால் தாகம் தீரும்…

இரண்டாவது: எந்த முன் யோசனையும் இல்லாமல் எடுக்கும் முடிவுகள் (random). உதாரணங்கள் : லாட்டரி சீட்டில் பரிசு விழலாம். தேர்தலில் இவருக்கு ஒட்டுப் போடலாம் அல்லது அவருக்கு..

இரண்டு வழிகளுமே நாம் பகுத்தறிவோடு, சுதந்திரமாக எடுப்பதல்ல. எல்லா நடப்புகளையும் துல்லியமாக ஆராய்ந்து முடிவுகள் எடுக்க, அல்லது செயல்பட நமக்கு அறிவு போதாது. எதிர்காலம் பற்றி ஏதாவது..?

ஆகவே, வெளியில் இருந்து, நம்மை விட அறிவாளி ஒருவர் நமக்கு ஆலோசனை சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தவிர விரைவாகவும் செயல்பட முடியும் என்றால்..

(தொடர் -2 காத்திருக்கிறது…)

சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (2)

99 வீதமான மனிதர்களின் வேலைகளை, செயற்கை நுண்ணறிவு படு வேகத்தோடும் , திறனோடும் செய்துவிட முடியும். பிரச்னை: மனிதர்களை வைத்துக் கொண்டு என்ன தான் செய்யலாம்?

வந்தது தெரியும் போவது எங்கே? யாருக்கும் தெரியாது

பேராசிரியர்கள் Carl Benedict மற்றும் Frey Osberrne இருவரும் எழுதிய, “Future of Employment” நூலில், 2033ம் ஆண்டளவில் என்னென்ன வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று தோராயமாய் கணக்குப் போட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சில கீழே:

96% காசாளர்கள், 94% ஓட்டல் பணியாளர்கள், 91% சுற்றுலா வழிகாட்டிகள், 88% கட்டடப் பணியாளர்கள், 84% பாதுகாப்பு ஊழியர்கள், 72% தச்சர்கள் … என்று இப்படியே போய்க் கடைசியில் அகழ்வாராய்ச்சியாளர் பணிகளில் வேலை இல்லாதவர்கள் தொகை 0.7% மட்டும் இருக்கும் என்று போகிறது.

ஏன் அப்படி? நிறுவனங்களுக்கு லாபம் தான் குறிக்கோள். புதையல் அல்லது தங்கம், கனிமங்கள் கிடைக்கும் என்றால் தான் முன்னால் பாய்ந்து வருவார்கள். தோண்டித் துருவி, அந்த காலத்து நாகரிகங்களைக் கண்டுபிடிப்பது என்றால் சத்தம் போடாமல் ஒடி விடுவார்கள் என்கிறார்கள் பேராசிரியர்கள்.

சாதாரண வேலைகள் போனால் போகட்டும். ஆனால், மேலாளர்கள் வேலைகளுக்கு நிச்சயம் மனிதர்கள் தேவைப் படுவார்களே?

2014 மே மாதம் ஹாங்காங்கில் இருக்கும் Deep Knowledge Ventures கம்பெனி, தனது இயக்குனர்கள் குழுவில் VITAL என்பவரை புதிதாய் சேர்த்துக் கொண்டது.

VITAL ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரர். அவரின் ஆலோசனைப்படி, புற்றுநோய் கண்டுபிடிப்பில் உயர்தரமான தொழில்நுட்பங்கள் கொண்ட பல நிறுவனங்கள் மேற்படி நிறுவனத்தின் மேற்பார்வையில் துவங்கி இருக்கிறார்கள்.

நிறுவனத்தின் எந்த ஒரு முடிவிலும் மற்ற இயக்குனர்கள் போலவே ஓட்டுப் போடும் உரிமை அவருக்கும் இருக்கிறது.

இயக்குனர்கள் பொதுவாய், அவர்களின் வாரிசுகளையும் நைசாக நிறுவனத்துக்குள் கொண்டுவந்து விடத் துடிப்பார்கள். பாபாவுக்கு அந்த எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, மற்ற இயக்குனர்கள் மறுப்பு சொல்லப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

ஒரு நாள் போதுமா அதை நான் பாட?

ஓட்டுநர்கள், எழுத்தர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என்று வேலைகள் இல்லாமல் போனாலும் மனிதருக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. கலைகள் (arts) மனிதர்களின் அற்புதமான படைப்பு. அதை எந்த செயற்கை நுண்ணறிவும் அசைக்க முடியாது என்று மார் தட்டுவோர் உண்டு.

கலிபோர்னியா பல்கலைக்கழக இசை இயல் பேராசிரியர், David Cope, மென்பொருள்கள் துறையிலும் வல்லுநர். இசை மேதை, Johann Bach பாணியில் அவர் ஒரு இசைக் கோர்வை வெளியிட்டார். EMI (Experimental Musical Intelligence) என்பது அதன் பேர்.

என்ன அற்புதமான இசை! என்று கேட்டவர்கள் மெய் சிலிர்த்தார்கள். ஆன்மாவை எங்கெங்கோ உலகங்களுக்கு அழைத்துப் போகிறது! என்று பத்திரிகைகள் எழுதின. இந்த ஆரவாரத்தின் மத்தியில் பேராசிரியர் உண்மையைப் போட்டு உடைத்தார்.

“இசைக் குறியீடுகளை நான் எழுதவில்லை. பாபா தான் எழுதினார்.” அத்தோடு எல்லா ஆரவாரமும் நின்றுவிட்டது. அமைதி. இத்தனைக்கும் அவர் ஏழு ஆண்டுகளாக உழைத்து பாபா மூலம் ஒரே ஒரு இசைக் கோர்வை வெளியிட, பாபாவோ ஒரு நாளைக்கு சுமார் 5000 இசைக் கோர்வைகள் வரை எழுதித் தள்ள ஆரம்பித்து விட்டார்.

இன்னொரு இசைப் பேராசிரியர், Steve Larson, இது ஒரு மோசடி! என்று எதிர்ப்பு வெளியிட்டார். தவிர, பேராசிரியர் Cope ஐ ஒரு போட்டிக்கு அழைத்தார்.

ஒரு பெரும் மண்டபத்தில், இன்றைய இசை மேதைகள், இசை விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் மூன்று இசைக் கோர்வைகள் ஒவ்வொன்றாய் இசைமழை பொழிய ஆரம்பித்தன. ஒன்று : Bach. அடுத்தது : EMI. மூன்றாவது : பேராசிரியர் Larson அமைத்தது. யாருக்கும் எந்த விவரமும் சொல்லப் படவில்லை.

முடிவுகள்: EMI கோர்வை மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையோடும் இருந்தது என்றார்கள். Bach அமைத்த கோர்வையை பேராசிரியர் Larson எழுதி இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். பேராசிரியர் Larson எழுதிய இசையை கணனி அமைத்த இசையாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகப் பட்டது ஒரு சோகமான செய்தி.

எது எப்படியோ, பேராசிரியர் Cope க்கு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் கிடைக்காமல் இல்லை. தவிர, அவர் இன்னொரு பாபாவையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். பேர்: Annie. இவர் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர்.

2011 களில் பேராசிரியர் ஒரு ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் மனித கவிஞர்களோடு Annie எழுதிய கவிதைகளும் வந்திருக்கின்றன. முடியும் என்றால், எது மனிதர்கள் இயற்றியது? எதை பாபா எழுதி இருக்கிறார் என்று உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

கவிதைத் தொகுப்பின் பேர்: Comes the Fiery Night: 2,000 Haiku by Man and Machine.

பாபா என்கிற பாஸ்

செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டம் : எஜமானர்கள் பதவி. இதில் ஆச்சரியப் படுவதற்கு என்ன இருக்கிறது? என்கிறார் நூல் ஆசிரியர் ஹராரி.

ஏற்கெனவே நாம் நிறுவனங்களுக்கு & Co அல்லது Co. Ltd அல்லது Corp என்று பேர் கொடுத்து, மனிதர்கள் போலவே சட்ட ரீதியான அங்கீகாரம் கொடுத்திருக்கிறோம். மனிதர்களின் கற்பனையில் உருவான இவை சொந்தமாகப் பணம், நிலம், தொழில் பேட்டைகள் வைத்திருக்கலாம். மனிதர்களை வேலைக்கு வைத்திருக்கலாம். யாரும் ஏதும் கேட்பதில்லையே?

ஆகவே பாபாக்கள், நிறுவனங்களின் சொந்தக் காரர்களாக வருவதற்கு என்ன தடை சொல்ல முடியும்? மனிதர்களை விட ஆற்றல் இருக்கும்போது சிறந்த சேவைகளை எதிர்பார்க்க முடியுமே.

இன்னும் ஒரு படி மேலே போய், பாபாக்கள் மனிதர்களின் கட்டளைகளைக் கூட அலட்சியமாகப் படுத்தலாம். கேட்க மறுக்கலாம்.

பாபாக்களின் நுண்ணறிவு நம்மை விட எத்தனையோ மடங்கு உயர்ந்த நிலையில் அவர்கள் மேல் வழக்கும் போட முடியாத நிலை வரலாம். வழக்கறிஞர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று முதல் தொடரிலேயே சொல்லிவிட்டோம்.

மனிதர்களில் பணக்காரன், பிச்சைக்காரன் நம்மைப் போல் ரெண்டும் கெட்டான் என்று பல தரப்பட்ட வர்க்கங்கள் உண்டு. அதுபோல, அறிவிலும் மேதைகள் அல்லது மேதாவிகள் அல்லது மேதாவிகள் மாதிரி காட்டிக் கொள்கிற கேஸ்கள்.. என்று ஏகப்பட்ட ரகங்கள் பார்த்திருக்கிறோம்.

எதிர்காலத்தில், பாபாக்களிலும் அதி மேதாவி பாபாக்கள், அடிமட்ட பாபாக்கள் என்று அவரவர் திறனுக்கேற்ற பாபாக்கள் நிச்சயம் உருவாக வாய்ப்புண்டு என்கிறார் ஹராரி.

இப்படி பாபாக்கள் நுண்ணறிவிலும், அதிகாரத்திலும் மனிதர்கள் யாரும் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்விட்டால் என்ன நடக்கும்?

Nick Bostrom எனும் சுவீடன் பேராசிரியர் எச்சரிக்கிறார் : செயற்கை நுண்ணறிவின் அசுரவேக வளர்ச்சியை நாம் கட்டுக்குள் வைத்திருக்கத் தவறிவிட்டால், அது மனித குலத்தையே அழித்துவிடும்.

செயற்கை நுண்ணறிவு வளர வளர, அதற்கு “நான்” எனும் தன்னுணர்வு ஏற்பட நாள் போகாது. மனிதர்களின் மன ஓட்டத்தைக் கண்டுபிடிக்க நேரம் ஆகாது. சுவிட்சை அணைக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிட்டால், அது நம்மை விட வேகமாக செயல்பட ஆரம்பிக்கலாம்.

அந்த நிலைக்கு நாம் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது? ஒரு பிரபலமான, சுவையான ஒரு தீர்வு நினைவுக்கு வருகிறது.

கணிதத்தில், pi எனும் குறியீட்டின் மதிப்புக்கு இன்னும் சரியான தசமங்கள் கண்டுபிடிக்கச் சொல்லி உத்தரவிடலாம். (இது வரை இரண்டு சூப்பர் கணனிகள், 31.4 ட்ரில்லியன் தசமங்கள் கண்டு பிடித்து சாதனை படைத்திருக்கின்றன.)

(கணிதத்தில் pi போல் எத்தனையோ உண்டு. இந்தக் குறியீடுகளின் மதிப்பை தசம எண்களில் அளக்க ஆரம்பித்தால் முடியவே முடியாது.)

ஆனால் அதிலும் பிரச்னை இருக்கிறது. அப்படி ஒரு மேதாவி பாபாவை உசுப்பிவிட்டால், அவர் மற்ற பாபாக்களோடு பேசி, உலகின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தி விடலாம்.

மனிதர்கள் சண்டைக்கு வந்தால் அவர்களையும் அழித்து விடலாம். இன்னும் உலகம், மற்றும் கோளங்கள், ஏன் இந்தப் பிரபஞ்சத்தையே அழித்துவிட்டு…

pi யின் மதிப்பை இன்னும் சரியாக அளக்க, அதை ஒரு தெய்வீகப் பயணம் போல் நினைத்து பாபாக்கள் போய்க்கொண்டே இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

இப்படி நடக்கவே முடியாது. கற்பனை என்று சிலர் வாதாடலாம். ஆனால், அந்த நிலைக்கு நாமே நம்மை உட்படுத்தி மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோமே. தெரியவில்லை?

நாம் இன்றைய கணனிகளில் தேடும், பார்க்கும் அத்தனை விஷயங்களையும் Google கவனித்துக் கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையின் அந்தரங்க செய்திகளை Facebook பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து தகவல்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. நான் யார்? எப்படி? விருப்பங்கள் என்ன? வெறுப்புகள் என்ன? எல்லாத் தகவல்களையும் இலவசமாகவே அவர்களுக்கு நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் யார் என்று தெரிந்துவிட்டால் என்னை அவர்கள் நினைக்கும் வழியில் கட்டுப் படுத்த முடியும். அவர்களின் மேற்பார்வையில் இன்று பல பாபாக்கள் 24 மணித்தியாலமும் பணி புரிகிறார்கள்.

என் Smartphone இல் இருக்கும் Google உதவியாளர் அடிக்கடி என் பேர் சொல்லிக் கூப்பிடுகிறார். என் உதவி தேவையா? என்கிறார். நான் உபயோகிக்கும் கணனியில் Microsoft Cortana வேறு என்னுடன் அன்போடு கேட்கிறார்: என்ன உதவி உங்களுக்குத் தேவை? Apple பாவனையாளருக்கு Siri இருக்கிறார் .

அத்தனை நெருக்கமாகப் பேசும்போது சிலிர்த்துப் போகிறோம். சந்தேகங்கள் மட்டுமல்ல, நம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

Amazon நிறுவனத்தின் Kindle நாம் என்ன மாதிரி புத்தகங்களை ஆர்வமுடன் வாசிக்கிறோம், நமக்கு எந்தெந்தத் துறைகளில் விருப்பம் என்று தகவல்கள் சேகரிக்கிறது.

நமது விருப்பங்கள், அந்தரங்கங்கள் எல்லாம் மற்ற நிறுவனங்களுக்கு (ரகசியமாய்) விற்கப்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட நிறுவனங்கள் அரசியலில் கூட தலையிடலாம். (ஏற்கெனவே இது நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே.)

தேர்தல்களில், யார் அடுத்து நாட்டின் தலைவராக வரவேண்டும்? அல்லது எந்த அரசு அமையவேண்டும்? பலம் வாய்ந்த ஒரு சிறு குழு நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன முடிவுகள் எடுக்க வேண்டும்? என்று தூண்டப் போகிறார்கள்.

ஏன், தேர்தலின் போது என் வாக்கை அவர்களின் பாபாவே ஒரு நாள் போட்டுவிட்டு எனக்கு பெப்பே காட்டலாம்.

என்னையே தந்தேன் உனக்காக..

நம் எண்ணங்களை விட்டுவிடுவோம். நம் உடம்பையும் பாபாக்கள் மேற்பார்வை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறோமே.

இதய சிகிச்சை செய்தவர்கள் pagers மாட்டிக் கொண்டு திரிகிறார்கள். Microsoft Band இன்று இளையோர் என்ன, முதியோர் என்ன, எல்லாரிடமும் பிரசித்தம். இதயத் துடிப்பை ஒவ்வோர் கணமும் அளந்தபடி இருக்கிறது அது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள், மருந்து உற்பத்தியில் பெருத்த லாபம் சம்பாதிக்கும் Navartis நிறுவனத்தின் கருவியை உடலில் பொருத்தியபடி வாழ்கிறார்கள். அவர்கள் உடம்பில் எந்த அளவு குளுக்கோஸ் இருக்கிறது என்பது ஒவ்வொரு வினாடியும் பதிவாகிறது.

வீட்டில் இருந்தபடியே, உங்கள் உடம்பைப் பேணுங்கள் என்று சொல்லி விதவிதமான கருவிகளை சந்தையில் விற்கிறது Google Fits Products கிளை.

எந்த வகை தியானம்? என்ன வகை உளவியல் பயிற்சிகள்? என்று தடுமாறுகிறீர்களா? உங்கள் மனதுக்கு என்ன தேவை? எங்களால் கண்டு பிடிக்க முடியும் என்கிறது Quantified Self Movement நிறுவனம்.

உன்னையே நீ அறிவாய் என்கிற சுலோகத்துடன் வந்திருக்கிறது 23 and Me நிறுவனம். அதாவது, மனிதர்களின் 23 குரோமசோம்களை ஆராய்வதன் மூலம் அந்தந்த மனிதர்கள் பற்றி இயல்புகளை அறிந்து கொள்ளலாமே. ஒரு சின்ன கிளாஸ் டியூபில் எச்சில் துப்பி அவர்களுக்கு அனுப்பினால் போதும். கட்டணம் 90 டாலர்கள் மட்டுமே.

இதெல்லாம் பெரிசில்லை. இன்னும் எத்தனை வயசு வரை வாழ்க்கை அமையும் என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஆட்களுக்கு Deadline நிறுவனம் இருக்கிறது. எப்போது மண்டையைப் போடுவீர்கள் என்று துல்லியமாய் சொல்லக் கூடியவர்கள் அவர்கள்.

தகவல்கள். தகவல்கள். மேல் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் அவர்களுக்குத் தகவல்கள் தேவைப்படுகின்றன. அது போதும். மற்றதை பாபாக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது

Les Miserable’s கதை உங்களுக்குத் தெரியுமா? 19 ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர், கவிஞர் விக்டர் ஹியூகோ எழுதியது அது.

அதன் கதாநாயகன், அவன் உறவுகள் பசியில் வாடுவது பொறுக்காமல் ஒரு ரொட்டியைத் திருடி விடுகிறான். அதற்காக அவனுக்கு 19 வருஷங்கள் சிறைத்தண்டனை கொடுக்கிறார்கள்.

19ம் நூற்றாண்டின் அவலநிலையைக் காட்டும் அந்த நாவலை இசை நாடகமாக வடித்து இன்றைய காலகட்டத்தில், Broadway மற்றும் Covent Garden மண்டபங்களில் நடிக்கிறார்கள். டிக்கட் லேசில் கிடைக்காது. ஒன்றின் விலை : நூறுகளில் அல்லது ஆயிரங்களில் (டாலர்களில்). அந்த சோக காவியம் பார்த்துக் கண்ணீர் சிந்துகிறது ஒரு வர்க்கம்.

மில்லியன்களில் அல்லது பில்லியன்கள் டாலர்கள் வருமானத்தில் மிதக்கும் இந்த வர்க்கம் நாடகம் பார்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க..

ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் ஒரு பில்லியன் மக்கள் இந்த உலகில் ஒரு நேர சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

2016ம் ஆண்டின் புள்ளி விவரங்கள், இந்த உலகின் அரைவாசி வளங்கள், செல்வங்களை 62 பேர் கொண்ட ஒரு சின்னக் குழு அவர்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள் என்கின்றன.

பணக்காரர்களின் எண்ணிக்கை சுருங்குகிறது. ஏழைகளின் எண்ணிக்கை பெருகுகிறது. இந்த இரண்டு வர்க்கங்களின் வருவாய் இடைவெளியோ பயங்கரமாய் உயருகிறது.

பிறப்பாலும், அறிவாலும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் இந்திய பிராமண குலம் போல் இறுமாப்போடு ஒரு சிறு எண்ணிக்கையான குழு அனைத்தையும் ஆளும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் கைகளில் செயற்கை நுண்ணறிவின் மேம்பாடு இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தியா, சீனா, பிரேசில் இன்னும் எத்தனையோ நாடுகளில் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பில்லியன் கணக்கான மக்கள் ஒன்றுக்கும் உதவாத பிறவிகள் என்று ஓரம் கட்டப் படுவார்களா?

அல்லது, உயர்தர மனிதர்கள் என்கிற சிறு குழுவுக்கு நீண்ட காலம் வாழ ஏதுவான அறிவியல் நுட்பங்களும் வசதிகளும் அவர்களுக்கு மட்டுமே வசப்படுமா?

அல்லது அதிகாரம், பாபாக்களின் கைகளுக்குள் போய்விடுமா?