நம்பர்.. நம்பர்..

பைதகரஸ் சாமியார்னா சாமியார் தான். என்னா அம்சம்! என்னா அம்சம்!


நீங்களோ, நானோ இத்தாலியின் கிரோட்டோன் நகரத்துக்கு சுற்றுலா போயிருந்தால் (இப்போ அல்ல. கி.மு. 600ம் ஆண்டு வாக்கில்) …

பிறகு ஊருக்குப் போய் யாரைக் கண்டாலும் இதைத்தான் சொல்லியிருப்போம். திருப்பித் திருப்பி. அவர்களும் நம்மைக் கண்டதுமே ஒடி ஒளியப் பார்த்திருப்பார்கள். (கிரீஸ் போய் வந்தது சரி. அதுக்காக இந்தக் கடி கடிக்கணுமா?)

அவர்கள் தங்கம் போல் தகதகக்கும் பைதகரஸின் தொடைகளைப் பார்த்திருக்கிறார்களா?  இல்லையே. அவரின் பேரறிவு, கடவுள் கொடுத்த வரம் என்று அவர்களுக்குத் தெரியுமா? இல்லையே. பொறாமை. பொறாமை.

கிரேக்கத்தின் சாமோஸ் தீவில் பிறந்த பைதகரஸுக்கு இளமையில் இருந்தே படிப்பில் நாட்டம் இருந்தது. எகிப்து, ஈரான் நாடுகளுக்குப் போய் தன் கணித அறிவை இன்னும் வளர்த்துக் கொண்டார்.

எகிப்தியர்களின் கணித அறிவு அவரை யோசிக்க வைத்தது. எந்த ஒரு 3:4:5 விகித அளவுள்ள பக்கங்கள் உள்ள ஒரு முக்கோணமும் செங்குத்தான முக்கோணம் (ஒரு கோணம் 90 பாகை) ஆக இருக்கிறது என்பதை மட்டும் தான் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

செங்குத்து முக்கோணங்களுக்கு, அது ஒரு உதாரணமே தவிர இன்னும் பல அளவுகள் உண்டு என்று கண்டுபிடித்தார் அவர்.  இன்று 10ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பைதகரஸின் தேற்றம் என்கிற இந்தக் கணித சூத்திரம் சர்வ சாதாரணமாய் இருக்கலாம்.

ஆனால் கடவுள் அருள் இல்லாமல் இப்படி எல்லாம் சிந்திக்க முடியாது என்பது  அன்றைய கிரேக்கர்களின் நம்பிக்கை. அது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. செய்தி பரவப் பரவ, சூப்பர் ஸ்டார் ஆகிப்போனார் பைதகரஸ்.

அன்றைய கிரேக்கத்தின் ஆர்பிஸ்ம் (Orphism ) மத நம்பிக்கைகள் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும்: உயிர் நித்தியமானது. அழியாதது. தெய்வீகம் பொருந்தியது. மீண்டும் மீண்டும் பிறக்கும் (10 தடவை). சடங்குகள் மிக முக்கியம்.

இறந்தவர்களுக்குக் கூட மறு உலகம் போனபிறகு அவர்கள் என்ன  செய்யவேண்டும் என்று அந்த மதத்தில் அறிவிப்புகள் இருந்தன.

உதாரணமாக, அங்கே போனதும் பெர்சிபோன் (Persephone) கடவுளைக் காண்பீர்கள். அவரிடம் பெச்சிக் இருக்கிறாரே, அவர் தான் இங்கே அனுப்பினார் என்று சொல்லவும்.

தவிர,  அங்கே போனபிறகு பல தடைகள் வரும். தாகம் வரும். எச்சரிக்கை: ஞாபகமறதிக் குளத்தில் மட்டும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்துவிட்டால், நான் யார்? எதுக்காக இங்கே வந்தேன்?  ஒரு இழவும் புரியவில்லையே? மேலும் அஸ்கா.. பிஸ்கா.. என்று நீங்கள் உளறிக் கொட்ட வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே போன உடனேயே, அங்கே உள்ளவர்களிடம்,  தயவு செய்து என்னை ஞாபக குளத்துக்குக் கூட்டிப்போய், ஒரு குவளை ஞாபகத் தண்ணீர் குடிக்க விடுங்கள் என்று சொல்லவும்.

விவரங்கள் இன்னும் இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பிறகு தொடர்பு கொள்ளவும்.

இது இப்படி இருக்க, பைதகரஸ் சொந்தமாகவே ஒரு சமயம் துவங்கி அதன் ஆன்மீகத் தலைவராய் இருந்திருக்கிறார். பேர்: பைதகரீனிஸம் (Pythagoreanism).

ஆர்பிஸ்ட் காரர்களின் நம்பிக்கைகளுக்கு  பைதகரஸ் காரர்கள் முன்னோடிகளா அல்லது இவர்களுக்கு அவர்கள் முன்னோடிகளா என்று இன்றும் குழப்பங்கள் இருக்கின்றன. இருக்கட்டும். நாம் பைதகரீனிஸம் பக்கம் வருவோம்.

இந்த சமயம் பற்றி அவரின் மாணவர்கள், பின் வந்த பரம்பரைகள் (பிளாட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்கள் எழுதிய குறிப்புகள்) மற்றும்  மனைவி தியானோ, மற்றும் அவர் மகள்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.

நாம் இன்று காண்கிற சாமியார்களுக்கும் கணக்குக்கும் சம்பந்தமே இல்லை என்று நமக்குத் தெரியும். தவிர, அறிவுக்கும் தெய்வீகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிற அளவில் வாழ்கிறோம்.

பைதகரஸ் சாமியாருக்கு அந்தப் பிரச்னையே இருக்கவில்லை. அவர் கணிதத்திலும் குரு. ஆன்மிகத்திலும் குரு.

அவரின் சித்தாந்தம் பற்றிப் பேசுவோமா?

இந்தப் பிரபஞ்சமே எண்களின் அடிப்படையிலும் அதுவும் விகித சமன்பாடுகளிலும் அமைந்தவை. கணிதத்தின் உள்ளே ஆழமாக நுழைய, நுழைய பிரபஞ்சத்தின் கட்டமைப்பு புலப்பட ஆரம்பிக்கிறது.

மறுபிறப்பில் இருந்து விடுபடுவது தான் வாழ்க்கையின் குறிக்கோள். அதை எப்படி அடையலாம்? கடுமையான வாழ்க்கை நெறிகளை கடைப் பிடிக்கவேண்டும். எதையும் பாரபட்சம் இல்லாமல் பார்க்கும் மனோநிலைக்கு மாறப் பழக வேண்டும். அதாவது அறிவியல் ரீதியில் ஆன சிந்தனை.

கணிதம், வரைகணிதம் இரண்டுமே சுயமாகவே தெளிவானவை (self – evident). இவைகள் கடவுள்களால் அருளப்பட்டவை. கணித சூத்திரங்கள், அவற்றை நிரூபணம் செய்யும் ஆதாரங்கள் என்பன தெய்வீக வெளிப்பாடுகள்.

கிட்டத்தட்ட அவரின் 40 வது வயதில் தன் ஆன்மிக அமைப்பை சுமார் 300 பேர்களுடன் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆச்சிரமத்தில் எல்லாரும் ஒரு ரகசியக் காப்பு எடுத்துக் கொண்டார்கள்.

நம் சமயக்  கொள்கைகள்,  அறிவியல் கோட்பாடுகள் எதுவும், அமைப்பில் இல்லாத வெளியார் யாருக்கும் சொல்லவே கூடாது. என்றென்றைக்கும் பைதகரஸ் தான் அதன் தலைவர். யாருமே புலால் உண்ணக்கூடாது .

கடவுள் தான் பிரபஞ்சத்தின் ஆதாரம் என்னும் கொள்கையில் இருந்து விலகி ஒரு சடப்பொருளை (தண்ணீரை) ஆதாரமாய் முன் வைத்தவர் அவருக்கு முன்பு வாழ்ந்த தத்துவஞானி தாலெஸ் (Thales). அவர் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை.

பைதகரஸும் கடவுள் நம்பிக்கை உள்ளவர். தண்ணீருக்குப் பதிலாய், வடிவங்கள், கணித சமன்பாடுகள் தான் பிரபஞ்சத்தின் அடிநாதம் என்று முன்மொழிந்தவர் இவர். இன்றைய அறிவியலுக்கு அடித்தளம் போட்டவர்களில் ஒருவர் பைதகரஸ் என்பது அறிஞர்களின் கருத்து.

ஆசான் நடத்திய கல்லூரியில், தத்துவம், கலைகள் எல்லாம் கலந்த இளங்கலை பாடத்திட்டம் முடிய மூன்று ஆண்டுகள் செல்லும். கணித இயல் மாணவர்களுக்கோ அது ஐந்து ஆண்டுகள்.

அவரின் அறிவாற்றல், கவர்ச்சி நிறைந்த ஆண்மை அழகு, கிரேக்கத்தின் எல்லா ஊர்களிலும் பேசப்பட்டது. மாணவர்கள் (ஆண்கள்) அவர் கல்லூரியில் சேர ஆசைப்பட்டாலும்  தினமும் உடற்பயிற்சி, தாவர உணவு, கண்டிப்பான ஒழுக்க விதிகள்.. என்று போனதில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் மாணவிகள் கூடுதலாய் வந்தார்களாம். (பைதகரீனிஸம் மதத்தில்  அதிகமானோர் பெண்கள்.)

வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்த அந்தக் கால சமுதாயத்தின் மத்தியில், பெண்களையும் ஆண்களுக்கு நிகராய் மதித்தவர் அவர்.

என்னால் மிருகங்களுடன் பேசமுடியும். காட்டு மிருகங்களை அப்படியே மயக்கி வீட்டிலே கொண்டுவந்து கட்டிவிட முடியும் என்று அவர் பெருமை அடித்துக் கொண்டார் என்று சில தகவல்கள் உள்ளன.

காதல் செய்வது ஒழுக்கக் கேடு என்று வாழ்நாள் பூரா விரிவுரை ஆற்றியவர். அப்படி உணர்வுகள் எழுந்தால் லிரா வாத்தியத்தை எடுத்து மீட்டுங்கள். அல்லது ஜில்லிடும் தண்ணீரில் முழுக்குப் போடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஒருநாள் விழுந்தவர் விழுந்தவர் தான்.

60வது வயசிலே காதலில் விழுந்த மனிதர் அவர். மிகமிக இளமையான பெண் தியானோ. அப்படி என்ன தான் நடந்திருக்கும்? கவிச்சக்கரவர்த்தி கம்பர் ரெண்டு வரியில் சொல்லிவிட்டாரே: அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அவ்வளவு தான். இதற்கு மேல் இதை அதிகம் நோக்கக் கூடாது.

அவர் துவங்கிய மத சடங்குகளில் எண்களுக்கு முக்கிய இடம் உண்டு. உதாரணமாய், இரட்டைப்படை எண்கள் (2,4,6….) நல்லவை என்று சொல்லப் பட்டன. ஒற்றைப்படை எண்கள் (1, 3, 5…) தீமையானவை. எண் 4 நீதியானது என்று நம்பப்பட்டது.  இன்னும் பல இருக்கின்றன. எல்லாம் அவரின் நம்பிக்கை.

ஆனால் அவரின் கணித மேதமை எண்களின் விகிதங்கள், இசையின் ஸ்வரங்களில் இருக்கும் கணிதப் பண்புகள், நட்சத்திரங்கள் இடையே உள்ள தூர விகிதங்கள் என்று விரிவடைந்திருக்கிறது.

பின்னாளில் தத்துவஞானி பிளாட்டோவின் திண்மங்களின் வடிவங்கள் பற்றிய நூலுக்கு (Platonic solids) இவரின் அடிக்கோள்கள் தான் உதவி இருக்கின்றன.

அதன்பிறகு வந்த கணித வல்லுநர் யூக்ளிட் (Euclid) வகுத்த பிரபலமான, துல்லியமாக, தர்க்க ரீதியாக எட்டப்படும் முடிவு (deductive  reasoning) என்னும் கணித முறைக்குப் பைதகரஸ் அறிமுகப்படுத்திய அடிப்படைக்  கொள்கைகள் காரணம்.

அறிவியலில் abstract thinking இன்று என்பது அதிமுக்கியம். இந்த சிந்தனையை  முதலில் பயன்படுத்தியவர் பைதகரஸ்.

இத்தனை பெருமைகள் கொண்ட கணித மேதையின் கடைசி நாட்கள் பற்றி சரியாகத் தெரியவில்லை.

அவர் வாழ்ந்த கிரோட்டோன் (Croton) நகரத்து அரசியல் கொந்தளிப்பில் கொல்லப்பட்டாரா?

அங்கிருந்து அவர் மாணவர்கள் உதவியால் தப்பிப் போய் வேறு பல ஊர்களில் அரசியல் தஞ்சம் கேட்டும் கிடைக்காமல், கடைசியில் ஒரு நகரத்தில் (Metapontum) பசி, பட்டினியால் மாண்டு போனாரா?

கலகத்தின் போது உயிரோடு இருந்த மாணவர்கள், ஆசானை இறந்துபோன  மாணவர்களின் உடல்கள் மேலேயே நடக்க வைத்து தப்பிப் போக உதவினாலும், அதைப் பார்த்து, சோகம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டாரா?

கடைசியாய் அந்த Metapontum ஊரிலேயே வாழ்ந்து மறைந்தாரா?

அவர் உருவாக்கிய மதத்தில் அவரைக்காய் (fava beans) உண்ணவே கூடாது என்று தடை இருந்திருக்கிறது. தவிர அவரைக்காய் பயிரிட்டிருந்த தோட்டம் வழியாக அவர் தப்ப முடிந்திருந்தாலும், அவர் அதற்குள் போகமாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்ததால், எதிரிகள் கைகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்து கொலை செய்யப் பட்டாரா?

இந்த  அவரைக்காய் தடை ஏன் வந்தது?

பைதகரீனிஸ மதத்தினரைத் தேடித்தேடி அழித்த சம்பவங்கள் வரலாற்றில் குரூரம் நிறைந்தவை. நடந்தவை கண்ணீரை வரவழைக்கும். பின்னாட்களில் பைதகரீனிஸ மதத்தை சேர்ந்த ஓர் பெண்  திமிச்சா (Timycha), மற்றும் அவள் கணவன் இருவரும்  இந்தக் களேபரத்தில் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார்கள்.

எதற்கு இந்த அவரைக்காய் தடை உங்கள் மதத்தில்? என்று அவர்கள் கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்கள். அவள் கணவன் கடைசிவரை சொல்ல முடியாது என்று மறுக்க,  திமிச்சாவை இன்னும் அதிகமாய்க் கொடுமைகள் செய்ய ஆரம்பிக்க, அந்தப் பெண் தன் நாக்கையே கடித்துத் துப்பி இருக்கிறாள்.

அத்தனை புனிதம் கொண்ட, யாரிடமும் சொல்லக்கூடாத அவரைக்காய் ரகசியம் என்னதாக இருந்திருக்கும்?

இன்றைய அறிவியல் யுகத்திலே கூட, லோக்கல் சாமியார்கள் என்ன சொன்னாலும் நம்புவதும் நிறைவேற்றுவதும் நம் கடமை என்று நினைக்கிற ஆட்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆகவே பைதகரஸ் சாமியார் எது சொன்னாலும் அது கடவுள் வாக்கு என்று அந்தக் காலத்தில் பைதகரஸின்  சீடர்கள் நம்பியத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இணையத்தைத் தோண்டத் தோண்ட, இந்த  அவரைக்காய் புராணம் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆளுக்கொரு விதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அய்யா எப்படி இறந்தார்? அவரைக்காய் தடை ஏன்?

அவசரப்படக்கூடாது. பெர்சிபோன் கடவுளை சந்தித்ததும் அறிவிக்கிறோம்.

நன்றி:

1) The Philosophy Book (A Dorling Kindersley Publication)

2) Wikipedia

3) https://en.wikipedia.org/wiki/Timycha

ஜே.கிருஷ்ணமூர்த்தி

ஞானிகள் பலவிதம்.

சிலரைப் பார்த்தால் பயம் வரும். சிலரைப் பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். சிலரைப் பார்த்தால் ரெண்டு விதமாகவும் தெரியும்.

சிலரின் பேச்சு விசித்திரமாக  இருக்கும். ஆனால் யோசிக்க, யோசிக்கப் புதுமையாக இருக்கும்.  அது ஒரு அனுபவம்.

“முதலும் கடைசியும் ஆன விடுதலை ”  (The First And Last Freedom) ஜிட்டுவின் முதல் புத்தகம்  என்று நினைக்கிறேன். வாசிக்க ஆரம்பித்தபோதே பைத்தியம் பிடித்துவிட்டது.

அவர் கூட்டங்களில் அடிக்கடி சொல்லுவார் : பெரியோர்களே, நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். நம்பினீர்களோ, உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாது. நீங்களே யோசித்து நீங்களே முடிவெடுத்து நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

நாம் அவரிடம் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன, பிரச்னைகளில் இருந்து தப்ப ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்டால் அந்த மனுஷன் நம்மிடம் சொல்லும் பதிலில், நமது கேள்விகள் நம்மையே திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிடும்!

அது தான் ஜிட்டுவின்  சிறப்பு.

தியோசோபிக்கல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான அன்னி பெசன்ட் அம்மையார் (ஐரிஷ் பெண்மணி) இந்திய நாடு கடவுளின் நாடு என்று நினைத்தவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர்.

உலகை உய்விக்க, புத்தரைப் போல் ஓர் பெரும் ஆசிரியர் தோன்றுவார் . அதுவும் இந்தியாவில் என்று நம்பியவர் அவர். துணைக்கண்டம் பூரா சல்லடை போட்டுத் தேடி, ஜோசியம் பார்த்து, ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்  இரண்டு இளம் பையன்கள். ஒரு தாய் வயிற்றுப்  பிள்ளைகள்.

ஒருவர் ஜிட்டு . மற்றவர் நித்தியானந்தா. இவர்கள் சென்னை அடையாறில், பின்னர் கலிபோர்னியா மாநிலத்தில் என்று தங்கவைக்கப்பட்டார்கள்.  வாழ்க்கையின் அத்தனை வசதிகளும் கிடைத்தன. படிப்பும், யோகமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு அங்கே  “குருகுல வாசம் ” செய்தவர்கள் அவர்கள். எதிர்கால  ஞானிகள்  அல்லவா?

அந்தப் பையன்களே, நாம் அவதாரங்கள் என்று  நினைத்துக் கொண்டிருக்க, நித்தியானந்தா காச நோயால் மரணம் அடைந்தார்.  உடைந்து போனார் ஜிட்டு. பல ஆண்டுகள், தன்னைத் தானே மீளாய்வு செய்ய  வேண்டிய கட்டங்கள் நேர்ந்தன ஜிட்டுவுக்கு. அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை அது.

தியோசோபிக்கல் சொசைட்டியை விட்டுப் பிரிந்தார் ஜிட்டு.எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார்.

(அன்னி பெசன்ட், ஜிட்டுவின் நியாயத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜிட்டுவின் நேர் எதிர் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் கடைசி நாள் வரை தவித்தார்.)

பல நாடுகளுக்குப் பயணங்கள் செய்து தன் சொந்த சிந்தனைகளை, சொற்பொழிவுகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார் ஜிட்டு.

ஆனால் தன்  சிந்தனைகளைத் தன்னுடையது என்று சொல்ல மறுத்தார். சிந்தனைகள். அவ்வளவு தான். நான் குரு அல்ல. எனக்குப் பிறகு யாரும் ஏஜென்ட் வேலை  பார்க்கக் கூடாது என்பதில் அழுத்தமாய் இருந்தார்.

நீங்கள் என்ன தான் அறிவியலில் முன்னேறினாலும், வசதிகளைக் குவித்தாலும், சமூகப் புரட்சிகள் நிகழ்த்தினாலும் மனம் என்பதில் இருந்து விடுதலை அடையும் வரை உங்களால் உருப்படவே முடியாது. :இது அவரின் குரல்.

ஜிட்டுவுக்கு எதிரான விமர்சனங்கள் இன்றும் தொடர்கின்றன.

அவர் காதலிலும் விழுந்திருக்கிறார். 1991 வரை அவரின் காதல் தொடர்புகள்  ரகசியமாகவே இருந்திருக்கிறது. இது தெரிய முன்னரே, அவரிடம், காமம், காதல் பற்றி கேள்விகள் கேட்ட போது அவர் சொன்ன பதில்: அதை ஏன் குற்றமாகப் பார்க்கிறீர்கள் ? இயற்கை  உணர்வுகளை ஏன் கொச்சைப் படுத்தவேண்டும்?

விஞ்ஞானத்தால் விளக்க முடியாதவை  தத்துவத்திடம் கொடுக்கப் பட்டுவிடுகின்றன. தத்துவமோ, பலவிதமான சிந்தனைகளை முன்வைத்துவிட்டு இதில் எது பிடித்திருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்று சொல்வதோடு சரி.

இவரோ, சிந்தனைகளையே நொறுக்கித் தள்ளுங்கள் என்பார்.  மனம் தான் நம் முதல் எதிரி என்பார். நம்  மூளை தந்திரமானது என்பார். சரி. எப்படி அதை சீர் செய்யலாம் என்றால் அது என் வேலை அல்ல என்பார். தொடர்ந்து அவரின் கேள்விகள் ஏராளமாய் வந்து விழும்.

வாழ்க்கை ஒரு காடு போன்றது. அங்கே தேனும் இருக்கும். மானும் இருக்கும் புலி சிங்கங்களும் இருக்கும். இனிமை உண்டு. துயர்கள் உண்டு. அதைக் கடந்து போகவேண்டும். காட்டைக் கடந்து போக நான் துணை வருவேன் என்று எண்ணாதீர்கள். யாரும் உங்கள் உதவிக்கு வரப் போவதில்லை. கடவுளும் வரமாட்டார். குருமார்களும் வரப்  போவதில்லை. நீங்களே போய்க் கொள்ள வேண்டியது தான்.

இவரிடம், உங்கள் சிந்தனைகள் புத்தரின் உபதேசங்களோடு நெருங்கி இருப்பது போலத்  தெரிகிறதே என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே, ஆம் என்றார்.

உண்மை தான். அவரின் சிந்தனைகள் பவுத்தம், ஜென் பவுத்தம், மற்றும் சீனாவின் டாவோயிஸம் போலத்  தோன்றும். கிட்ட வரும். ஆனால் சேராது.  டக் என்று விரிவடைந்து வேறு திசையில் போக ஆரம்பிக்கும்.

சிந்தனைகளை ஒருமுகப் படுத்துங்கள். கட்டுப் படுத்துங்கள். நிம்மதி கிடைக்கும். உங்கள் வாழ்க்கை வளம் பெறும். ஏன் பேரின்ப வாழ்வுக்கே அது கூட்டிச் செல்லும் என்பது நாம் கேள்விப்பட்ட, கேள்விப்படுகிற ஆன்மீகம்.

ஜிட்டு சொல்வார்: எதை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்களோ, அது இன்னும் அதிக மூர்க்கமுடன் எழும்  அல்லது சாது போல இருந்து சந்தர்ப்பம் வரும்போது திமிறிப் பாயும் தந்திரம் நிறைந்தது இந்த மனம். சினிமா காட்டுவதில் கில்லாடி, கவனமாக அணுகவேண்டும் .

தியானம், தியானம் என்கிறார்களே என்ன அது என்றால்…

கணத்துக்கு கணம், மனம் எழுப்பும் எண்ணங்களை, அது பாட்டில் கடந்து போகவிடுங்கள்.  விருப்போ, வெறுப்போ இன்றி அவதானியுங்கள். அது தான் முக்கியம். அவதானிப்பு. அவதானிப்பு. உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று நோக்குங்கள். அவை பற்றி மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். எச்சரிக்கை ! எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாமல் அமைதியாக அவற்றை அவதானியுங்கள்.

எனக்கு இப்போ கோபம் வருகிறது. சரி அய்யா. எனக்கு இப்போ சந்தோஷமாய் இருக்கிறது.  சரி அய்யா. எனக்குப்  பசிக்கிறது. சரி அய்யா. அதோ அந்தப் பெண் அழகாய் இருக்கிறாள். சரி அய்யா. இப்போ எனக்கு ஒரு திருட்டுத்தனம் பண்ண வேண்டும் போல் இருக்கிறது.  சரி அய்யா. நான் எவ்வளவு நல்லவன். தெரியுமா?  சரி அய்யா… ..

இது தான் தியானம் என்பார் ஜிட்டு.

சே! இந்த மனுஷன் கிட்ட போய்க் கேட்டோமே என்று நொந்தவர்கள். புரிகிறது என்று சொன்னவர்கள். புரிகிற மாதிரி இருக்கிறது என்று சொன்னவர்கள். புரியாவிட்டாலும் புரிந்த மாதிரி நடித்தவர்கள். இப்படி ஏராளம் இருக்க..

91 வயசு வரை வாழ்ந்த மனுஷன் 1986 ல் போய்விட்டார்.

அவர் மறைந்தபோது, கல்கி பத்திரிகையில் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது:

இமயத்தில் இருக்கும் மானசரோவர் ஏரியில் எத்தனையோ  அருவிகள்,  நீரோட்டங்கள் என்று வந்து கலந்தாலும் தழும்பாமல், சிதறாமல்  அதன் நீர் மட்டம் மாறாமல் ஒரே அமைதியில் இருக்குமாமே.

அது தான் ஜிட்டு.

(இந்தக் கட்டுரையில் சிந்தனை / சிந்தனைகள் எனும் சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களில் வருகின்றன என்பதைக் கவனிக்கவும்.)


நான் ரெடி.நஞ்சுக்கலவை ரெடியா?

சாக்ரட்டீஸ் ஏதென்ஸில் இருந்த சந்தைக்கு தினமும் நடந்து போவது வழக்கம்.

ஒன்று விடாமல் அங்கே இருந்த எல்லாப் பண்டங்களையும் ஒரு நோட்டம் விடுவார். அட! எனக்குத் தேவையே இல்லாத அத்தனையும் இங்கே குவிஞ்சிருக்கே… என்பார். பிறகு சந்தையைக் கடந்து போய்விடுவார். தினமும் இதே கூத்து.

எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர் பெயரை உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னாள் தத்துவஞானியை அவர் கோட்பாடுகளுக்காக மட்டுமல்ல, அவரின் எளிமையான வாழ்க்கைக்காகவும் சேர்த்து மதிக்கிறது.

ஒரு சிற்பியின் மகனாய்ப் பிறந்தவர், அன்றைய புகழ்பெற்ற அக்ரோபோலிஸ் கோயிலின் சில சிற்பங்களையும் (பெண் சிற்பங்கள்) அவர் செதுக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடியாதுதான்.

ஏதென்ஸ் நகரம் நடத்திய போர்களில் அவரும் ஒரு வீரராய் இருந்தார். பிறகு ஒய்வு. எந்தப் பகட்டான ஆடையையும் உடுத்தியதில்லை. வெறும் காலோடு ஏதென்ஸின் சந்துபொந்துகளில் ரொம்ப ரொம்ப சாதாரணமாய் ஒரு தொளதொள அங்கியோடு திரிந்தார்.

வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று தன்னைத் தானே துருவியவர். மற்றவர்களிடமும் துருவியவர்.

இரண்டு தடவை (?) கல்யாணம் முடித்தவர். இரண்டு மூன்று (?) பிள்ளைகளின் அப்பா. நடனம் ஆடுவதில் கொள்ளைப் பிரியம். தண்ணீர் நன்றாய்க் குடித்தார். வைனும் அதே போல.

கிரேக்கம் அன்று ஒரு தனி நாடாய் இருக்கவில்லை. தனித்தனி ஊர்களாய் இருந்தன. ஊருக்கு ஊர் தனி அரசுகள், தனிப்படைகள் என்று அட்டகாசமாய் இருந்தன. அவர்களுக்குள் அடிதடிகள் அடிக்கடி வரும். கொலை கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கும். சும்மா சொல்லக்கூடாது. அதே சமயம் நல்ல பக்திமான்கள்.

அன்றைய கிரேக்கர்களின் நம்பிக்கைகளைப் பட்டியல் போட இங்கே இடம் போதாது. அவசியம் கருதி ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிடுகிறோம்.

அழகு என்றால் அது நன்மை, நேர்மை என்று நம்பினார்கள். அழகாய் இருப்பவர்களை கடவுள்களின் அவதாரங்கள் என்று கொண்டாடினார்கள். அவலட்சணமாய் இருப்பவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள் எல்லாரும் தீயசக்திகளின் தோற்றங்கள் என்று நினைத்தார்கள். வெறுத்தார்கள்.

அழகும் இல்லை. வயசும் போய்விட்டது. இருந்தும் அழகுப் பெண்களென்ன, வயசுப் பையன்களென்ன இந்த சாக்ரட்டீஸ் பின்னே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? எழவெடுத்த கிழவர் எதுவும் மாயமந்திரம் போட்டிருப்பாரோ? சொல்லுங்கள் கோபம் வருமா, வராதா? பார்த்த ஆண்களுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

பொறாமையில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது என்று கூட சிலர் பேசியிருக்கலாம். மேதைகளுக்கு மச்சம் தேவை இல்லை என்று அவர்களுக்குத் தெரியாது.

ஆனால் இது எல்லாம் தூசு என்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. ஏதென்ஸ் நகரத்தின் தலைவர், மாண்புமிகு பெரிக்கிள்ஸ் அவர்களின் நெருங்கிய தோழி (முன்னாள் மிஸ் ஏதென்ஸ்) அஸ்பாஸியா கூட சாக்ரட்டீஸ் வீட்டுக்கு ரகசியமாய்ப் போய்வருவதாக எந்தப் பயலோ சின்னதாய் ஒரு திரி கொளுத்திப் போட ….

நகரமே கிசுகிசு புகைமண்டலத்தில் சிக்கித் திணறியது. இது உண்மையா அல்லது வெறும் புரளியா என்று உறுதிப்படுத்த முடியாமைக்கு வருந்துகிறோம். மன்னிக்கவும்.

விஷயம் தலைக்கு மேல் போய்விட்டது. பெரிய இடத்து சமாசாரம். காவலர்கள் விசாரணையை ஆரம்பித்தார்கள். சாக்ரட்டீஸின் புகழ்பூத்த மாணவர்களான பிளாட்டோ, செனோபோன் மற்றும் பெரிய, சின்ன சிஷ்யர்கள் எல்லாருமே பெரியவரைக் காப்பாற்ற என்னென்னமோ செய்து பார்த்தார்கள். சரிப்படவில்லை.

அப்போ சாக்ரட்டீஸ் என்ன பண்ணிக் கொண்டிருந்தார் என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. அவரோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று சிந்தித்துக் கொண்டிருந்தாரே.

அவர் ஏதென்ஸ் நகர் நீதிமன்றத்துக்கு கூட்டி வரப்பட்டார். அதற்கு முன் சில தகவல்கள்:

இன்று வீட்டில் இருந்தபடி வெட்டியாய் தத்துவம் பேசிக் கொண்டிருந்தால் போதும். தத்துவப் பேராசிரியர் பட்டம் கிடைத்துவிடும் என்று நம்ப முடியாது. பதிலாய், தும்புக்கட்டையோ, விறகுக்கட்டையோ பட்டையாக சாத்திவிடக்கூடும்.

அன்றைய கிரேக்கத்திலும் இதே நிலை தான். வெளியூர்கள் போகவேண்டும். அங்குள்ள அறிஞர்களோடு விவாதங்கள் செய்து நான் பெரிய ஆள் தான் என்று நம்ப வைக்க வேண்டும். பிறகு உள்ளூர் வந்து அதே மாதிரி ஆரம்பித்து …  அந்தக் சோகக் கதையை விட்டுவிடுவோமா?

ஆனால் சாக்ரட்டிஸ் அப்படியெல்லாம் வெளியூர்கள் போனதாக எந்தத்  தகவலும் இல்லை. போர்கள் நிமித்தமாய் மட்டும் போனதற்கு சாட்சியங்கள் உள்ளன. போட்டிடேயோ, டேடியம் என்கிற ஊர்களில் நடந்த சண்டைகளில் இவரும் போரிட்டிருக்கிறார். போரில் இவரின் மாணவர் செனோபோனைக் காப்பாற்றி இருக்கிறார்.

சண்டை இல்லாத காலங்களில் அடிக்கடி உடற்பயிற்சிக் களம் போய் உடம்பைக் கட்டுக்கோப்பாய் வைத்திருந்திருக்கிறார். மைனர் போல் ஜாலியாய் வாழ்ந்திருக்கிறார்.

டெல்பிக் கோயில் இன்று ஓரிரு தூண்களோடு மட்டும் காட்சி அளிக்கிறது. அன்று அப்படி இல்லை. மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே பூசாரிகள் இருக்கவில்லை. பூசாரிணிகள் தான் இருந்தார்கள். அதுவும் அழகான கன்னிப் பெண்கள். இன்னோர் சிறப்பு அம்சம்: இந்தப் பூசாரிணிகளுக்கு திடீர் திடீர் என்று சாமி வரும். வந்தால் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அப்படியே புட்டுப் புட்டு வைப்பார்கள்.

வழக்கமான கோரிக்கைகளான, அடுத்த வீட்டுக்காரனை அடக்கி வைக்க, காதல் பிரச்னைகள், காணித் தகராறுகள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க, அடிதடிகளை  சுமுகமாய் முடித்து வைக்க, எதிரிகளுக்கு சூனியம் வைக்க.. என்று  இப்படி வந்திருந்த ஓராயிரம் பக்தர்களின் வேண்டுதல்கள் அங்கே நிறைவேற்றி வைக்கப்பட்டன.

இதென்ன பெரிய விஷயம். அரசியல் பூசல்கள், போருக்குப் போக நல்ல நாள், நேரம் என்பது போன்ற பெரிய பெரிய சமாசாரங்களுக்கும் தீர்வு காண பூசாரிணிகளைத் தான் தேடி வந்தார்கள். அப்படி ஒரு கெத்தோடு வாழ்ந்தவர்கள் பூசாரிணிகள்.

சாக்ரட்டிஸ் வாழ்ந்த காலத்தில் டெல்பிக் கோயில் தலைமைப் பூசாரிணியாய் கொடிகட்டிப் பறந்தவர் பித்தியா. அழகோ அழகு. அத்தோடு அறிவும் இருந்திருக்க வேண்டும். என்னமோ தெரியவில்லை. ஒருநாள் இவர், இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை ஆண்களையும் விட சாக்ரட்டீஸ் தான் பெரும் அறிவாளி என்று அறிவிக்கப் போக, அதுவும் சாமி வந்து…

இது போதாதா? ஏற்கெனவே அஸ்பாஸியா… அஸ்பாஸியா.. என்று புகைந்து கொண்டிருந்த ஆண்கள் மனசில் இப்போ பித்தியா என்றதும் பைத்தியமே பிடித்தது போல் ஆகிவிட்டார்கள். நெருப்பு எரியத் துவங்கிவிட்டது.

இந்தக் களேபரத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

கிரேக்கத்தில் தான் முதன்முதலில் மக்களாட்சி துளிர்விடத் துவங்கியது என்கிறார்கள். அதில் சாக்ரட்டீஸின் பங்கு என்ன? தெரியவில்லை என்கிறார்கள்.

சாக்ரட்டீஸ் என்ன சொன்னார்? அறியாமை தான் ஆக மோசமான தீமை. அறிவைத் தேடுதலே ஒரே வழி.

அவரின் புகழ்பெற்ற வாசகம்: உன்னையே நீ அறிந்து கொள்.

இன்னொன்றும் இருக்கிறது: எனக்கு என்ன தெரியாது என்று கூட எனக்குத் தெரியாதே.

அவர் தான் அரசியல் தத்துவத்தை முதலில் முன் வைத்தவர் என்கிறார்கள் மேற்குலகின் அறிஞர்கள். பகுப்பாய்வு செயல்முறையை (Analytical process) அறிமுகப்படுத்தியதும் அவரே.

அவரின் பேச்சுக்களில் முரண்நகைகள் இருக்கின்றன  (?) என்பார்கள் சிலர். அவரின் நான்கு கொள்கைகள்:

1. யாரும் தீமை செய்ய விரும்புவதில்லை.
2. தெரிந்தோ தெரியாமலோ யாரும் தவறு செய்ய விரும்புவதில்லை.
3. அறிவு என்பதே நேர்மை.
4. மகிழ்ச்சியாய் வாழ நேர்மை போதும்.

அறத்தான் வருவதே இன்பம் என்று அன்றே நினைத்தவர் சாக்ரட்டீஸ். அறம் பாடிய மனிதர்.

கிடைத்திருக்கும் தகவல்களின் படி,  அன்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் நம்பிக்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று சொன்னவர்.  அவை தவறாக இருந்தால் சரியான நீதி வழங்க முடியாது என்றவர். எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கு என்பது அவரின் தத்துவம்.

பெரும்பான்மை சொல்கிறது என்பதற்காக எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்ட மனிதர். அதனால் அவர் மக்களாட்சிக்கு எதிரான கருத்துள்ளவராய் இருந்தார் என்று வாதாடுதல் அபத்தம்.

ஏதென்ஸ் நகரத்தில் இருந்த அகோரா மைதானம் விவாதங்கள், கேளிக்கைகள் அனைத்துக்கும் மய்யம். சாக்ரட்டீஸ் அங்கே வரவே கூடாது என்று தடை போட்டிருந்தார்கள். மாணவர்கள், சிஷ்யர்கள் அவரை கடைவாசல்கள், சந்துபொந்துகள் மற்றும் கைவினை வேலைத் தளங்களில்  தான் சந்திக்க முடிந்தது.

இப்போ நீதிமன்ற வாசலில் நிற்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் வந்துவிட்டார். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் : என்ன குற்றம் செய்தார் என்று எதை சொல்வது?  இந்த மூலையில் நின்று யோசித்தார்கள். பிறகு அந்த மூலைக்குப் போய் யோசித்தார்கள்.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்: சாக்ரட்டீஸ், எங்கள் அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட கடவுளர்களை அவமானப் படுத்தி விட்டார். புதுசாக சில கடவுள்களை உருவாக்க முயன்றார். தவிர, நம் இளைஞர் இளைஞிகளை தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சித்தார்.

இது குற்றப் பத்திரிகையின் சாராம்சம். விசாரணை துவங்கியது. ஆரம்பமே சரியில்லை. அந்த காலத்தில், யார் பெரிசாய் சத்தம் போட்டு ரகளை பண்ணுகிறாரோ அவர் பக்கம் தான் உண்மை இருக்கும் என்று நம்பினார்கள்.

குற்றம் சாட்டியவர்கள் ஓ.. வென்று கத்தினார்கள். பக்கத்தில் ஆண்கள் கைகால்களை முறுக்கியபடி நின்றார்கள். சாக்ரட்டீஸ் பக்கம் நின்றதுவோ இளையோர் கூட்டம். தானா சேர்ந்த கூட்டம். வயசும் சின்னது. சமூகமும் அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

பிளாட்டோ தன் குருவுக்காக வாதாடத் துவங்கினார். அவர் பக்க ஆட்களில் அவர் தான் இளையவர். நீதிபதிகளுக்கு இந்த சின்னப் பையன் என்னத்தப் பெரிசாக் கிழிக்கப் போகிறான் என்று ஒரே எரிச்சல். டேய்! போய் ஒரு ஓரமா உக்காருடா என்று உத்தரவு போட்டார்கள்.

வழக்குப் போட்டவர்கள் உண்மையில் சாக்ரட்டீஸ் கதையை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கவில்லை. ஒரு பெரும் தொகையை அபராதமாகப் போடுவோம். கட்ட முடியவில்லை என்றால் ஊரை விட்டே துரத்தி விடுவோம் என்று தான் திட்டம் போட்டிருந்தார்கள்.

நீதிபதிகள் எதிர்பார்த்தது போலவே அவர் குற்றவாளி என்று முடிவெடுத்தார்கள். ஆனால் எவ்வளவு அபராதம் போடுவது என்பதில் எந்த முடிவுக்கும் வராமல்..  நேரமோ போய்க் கொண்டிருந்தது.

சாக்ரட்டீஸுக்கோ ஒரே எரிச்சல். எழுந்தார். நான் வேண்டுமானால் ஒரு 25 ட்ரெச்மா அபராதமாய்க் கொடுக்கட்டுமா? என்றார். ஒருவேளை நீதிபதிகள் சரி என்று சொல்லி இருப்பார்களோ?

தொடர்ந்தார் சாக்ரட்டீஸ்: ஆனால் ஒரு நிபந்தனை. நான் செய்திருக்கும் சேவைகளுக்கு இந்த நகரமே எனக்குக் கடமைப் பட்டிருக்கிறது. ஆகவே என் வாழ்க்கைச் செலவுகளை நகர நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெரிய குண்டாகப் போட்டிருக்கிறார்.

என்னது? நீதிபதிகள் அதிர்ந்து போனார்கள். என்ன ஒரு திமிர்! வந்த கோபத்தில் வேறு பேச்சுக்கே இடம் வைக்காமல், மரண தண்டனை விதிக்கிறோம் என்று ஒரே வரியில் முடித்து விட்டார்கள்.

சாக்ரட்டீஸ் சிறையில் அடைக்கப் பட்டார். அவர் மனைவி, சாந்திபெ குழந்தைகளோடு ஓடிவந்து கத்தினார். இருக்கும்போதே குடும்பத்தைக் கவனிக்காத சோமாரிப் பயல் நீ. நாசமாப் போ. இந்தக் குழந்தைகளோடு எப்படி வாழப் போறேனோ? என்று சொல்லியபடி, மண்ணள்ளி அவர் முகத்தில் வீசினார். சாபம் போட்டபடி திரும்பிப் போனார்.

அடுத்து, மாணவர்கள், தோழர்கள், தோழிகள் கூக்குரல் போட்டபடி ஒடி வந்தார்கள். கேவினார்கள். அழுதார்கள். நஞ்சுக்கலவை நிரம்பிய கோப்பை கொண்டு வரப்பட்டது. உடனேயே குடித்துவிடாதீர்கள் என்று சிலர் கெஞ்சினார்கள். இன்னம் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன.. என்று கூட சிலர் சோகம் தாங்கமுடியாமல் பாடியிருக்கக் கூடும். யார் கண்டார்?

சாக்ரட்டீஸின் கடைசி வசனம் என்னதாய் இருந்திருக்கும்? உன்னையே நீ அறிந்து கொள்? தப்பு. தப்பு.

கிரீட்டோ! அஸ்கிலேப்பியஸ் கடவுளுக்கு ஒரு சேவல் நேர்ந்து விடவேண்டும் என்று யோசித்திருந்தேன். அதை செய்துவிடு.

அவர் தெய்வீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒருதடவை, அவர் மாணவன் செனோபோன், ஒரு போரில் கலந்து கொள்ளட்டுமா தலைவரே? என்று கேட்டிருக்கிறார். எதுக்கும் பித்தியாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு  முடிவு செய் என்றாராம் தலைவர்.

இன்னொரு சம்பவம்: இந்த பெரிக்கிள்ஸ் (நகரத் தலைவர்) இருக்கானே. அவன் பெரிய ஆள் தான். ஆனால் அவன் எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன் பிள்ளைகளுக்கு ஏன் அறிவும் இல்லை? துணிச்சலும் இல்லை? எல்லாம் கடவுள்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்று பயப்படாமல் சொல்லி இருப்பாரா?

சாக்ரட்டீஸ் சுயசரிதம் ஒன்றும் எழுதி வைக்கவில்லை. எல்லாமே அவர் மாணவர்கள் எழுதி வைத்ததில் இருந்து தான் அறிந்து கொள்கிறோம். அதிலும் பிரச்னைகள். ஆளுக்கு ஒருவிதமாய் எழுதி வைத்திருக்கிறார்கள்.

உதாரணங்கள்: சாக்ரட்டீஸ் தன் வகுப்புகளுக்கு காசே வாங்கவில்லை என்று பிளாட்டோ எழுத,  சில சமயங்களில் வாங்கினார் என்று செனோபோன் எழுதுகிறார்.

வழக்கு விசாரணையின் போது, அபராதம் போடப்பட்டு, அதை ஏற்றுக் கொண்டால் நான் குற்றவாளி என்று ஆகிவிடும். அதை ஒத்துக் கொள்ளக் கூடாது. என் கொள்கைகள் பற்றி இன்னும் விளக்கம் சொல்ல இருக்கிறது என்று தான் சொன்னார். இப்படி பிளாட்டோ எழுதி இருக்க …

ஆசான் அகம்பாவத்தோடு இருந்தார். யார் சொல்லியும் கேட்கவில்லை. தவறான வாதங்கள் புரிந்தார் என்று அடுக்குகிறார் செனோபோன்.(இத்தனைக்கும் செனோபோன் வழக்கின் போது அங்கிருக்கவில்லை. யாரைக் கேட்டு அப்படி எழுதி இருப்பார்?)

பிளாட்டோ கொஞ்சம் கற்பனாவாதி. தன் சொந்தக் கருத்துக்களையும் குரு  சொன்னதாக கப்ஸா விட்டிருக்கலாம் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். தவிர, அவருக்கு ஆசான் மேல் தணியாத பக்தி இருந்திருக்கிறது. அநியாயமாய் என் குருவைக் கொன்றுவிட்டார்களே என்று கடைசி வரை கோபத்தில் இருந்தவர் அவர்.

செனோபோன் ஒரு போர்வீரர் மட்டுமல்ல. வரலாற்று ஆசிரியரும் கூட. இருந்தும் பிளாட்டோவின் கூற்றுகளைத் தான் இன்றைய அநேகமான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், சாக்ரட்டீஸ் ஒரு லேசான தண்டனையோடு தப்பியிருக்கலாம். அவரின் மாணவர்களால் அதை சாத்தியமாக்கி இருக்க முடியும். இன்னொன்று: அன்று ஆட்சியில் இருந்த குழுவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெரிதாக இருக்கவில்லை.

நகரத்தின் நிர்வாகத்தில் அவரும் சிலசமயங்களில் பங்கு கொண்டிருக்கிறார். ஆனால் எப்போதும் நீதி நேர்மை என்று பேசிக் கொண்டிருந்தால் யார் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

ஒருவேளை தப்பிப் போனால் ஏதென்ஸில் இருக்கும் தன் ஆதரவாளர்களுக்கு என்ன நேரிடும் என்பதை அவர் அறிந்தே இருந்தார். அது தன் நேர்மைக்கு இழுக்கு மட்டுமல்ல, அந்தத் துயரங்களைத் தாங்கும் மனோதைரியமும் அவரிடம் இல்லாது இருந்திருக்கலாம்.

தத்துவம் என்பதே இறப்பை நோக்கித் தன்னைத் தயார் செய்து கொள்ளும் ஓர் பாதை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம் அவர். அப்படி நினைத்திருக்கலாம்.

வேறு ஊர் போனாலும், அங்கேயும் தன் கொள்கைகளுக்கு இடையூறு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று சிந்தித்திருக்கலாம்.

நீதிபதிகளின் தீர்ப்பை, அது எவ்வளவு அநீதியாய் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்பதை மறந்து, தன் உயிர் தான் முக்கியம் என்று சாக்ரட்டீஸ் நினைத்து விட்டான் என்று எதிர்கால சந்ததிகள் தூற்றுமே, தீராப் பழியை சுமக்க வேண்டி வருமே என்று யோசித்திருக்கலாம்.

ஏதென்ஸ் நகரம் செய்த அநீதிகளுக்குப் பரிகாரமாக, அஸ்கிலேப்பியஸ் கடவுளே, உனக்கு என்னையே உயிர்ப்பலி தருகிறேன் என்றும்  முடிவெடுத்திருக்கலாம். (அஸ்கிலேப்பியஸ் தெய்வம், நோய்களைக் குணமாகும் தெய்வம்.)

எப்படியோ, மனிதர் தன் வாழ்க்கையின் ஒரு நுணுக்கமான கட்டத்தை  சுட்டிக்காட்ட விரும்பி இருக்கிறார் என்றே தெரிகிறது.

அவர் வாழ்க்கையில் பார்க்காத நீதிபதிகளா?
அவர் அறியாத தீர்ப்புகளா?
ஏதென்ஸ் மனிதர்களின் மனோநிலையை எடைபோடத் தெரியாதவரா அவர்?
எதற்கு, என்ன தண்டனை என்று அறியாதவரா?
எப்படி, எப்போது, எவரின் உணர்ச்சிகளைத் தூண்டினால் என்ன நடக்கும்? அதுவும் நாசூக்காக… என்று அந்த மேதைக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?

அவர் எடுத்த அந்த முடிவு.. தெரிந்தே எடுத்திருக்க வேண்டும்.

சாகாவரம் பெற்றவர்கள், சாகாவரம் பெற்றவர்கள் என்கிறார்களே, இது தானோ அது?

துணுக்குற்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் ….

கண் சிமிட்டியபடி சிரிக்கிறார் சாக்ரட்டீஸ் !

நன்றி:

1) How to Mellify A Corpse (author: Vicky Leon)
2) The Story of Philosophy: From Antiquity To The Present ((Konemann Publications)
3) Wikipedia

காசு நம் அடிமை – 1

தொடர் -1

பணம் ஒரு மூக்கணாங்கயிறு போன்றது . அதுவும் இரும்பால் செய்த மூக்கணாங்கயிறு. உங்களை எங்கே வேண்டுமானாலும் இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் அதை வடிவமைத்து மூக்கில் மாட்டிக்கொண்டதே நாம் தான் என்பதை மட்டும் மறந்துவிட்டோம்.

– மார்க் கின்னி

பணம் எல்லாருக்கும் தேவை. பணம் என்பது நம் பொருளியல் தேவைகளைப்  பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல, நம் உறவுகள், தொடர்புகள், உணர்வுகள் எல்லாவற்றையுமே அது பாதிக்கிறது.

ஆனால் இன்றைய பணத்துக்கு இன்னொரு முகமும் இருக்கிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் கைகளிலும் அவர்களோடு ஒட்டியிருக்கும் பெரும் பணக்காரப் புள்ளிகளின் கைகளிலும் இருக்கும் பெரும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம் அது என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

இன்று பணம் கொடுக்கல்கள்,  வாங்கல்கள் எல்லாம் ஜோராக நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பண நோட்டுகள், நாணயங்களுக்கு முடிந்தளவு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறோம் .

டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், பிட் காயின், மின் பரிமாற்றங்கள் என்று நவீனமாய்க் கலக்குகிறோம்.

இன்னும் ஒருபடி மேலேறி, கொஞ்ச நாளில் நாம் எல்லோரும் மெய்நிகர் உலகத்தில் (virtual world) சஞ்சரிக்கலாம் என்கிறோம்.

சரி. அங்கே பணத்துக்கு  என்ன நடக்கப் போகிறது என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் கலாட்டாவுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

அது வருகிற நேரம் வரட்டும். இன்று புழங்கும் பணம் தான் பெரிய கவலை.  ஏனெனில் பணத்தின் நோக்கம், அதைக்  கையாளும் விதம் இரண்டுமே விக்டோரியா மகாராணி காலத்தைத் தாண்டாமலேயே  இருக்கின்றன.

18 ம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த மாற்றங்கள் என்ன? மக்கள், அன்றைய அதிகார வர்க்கத்தினர், பணக்காரர்களை எல்லாரையும்  தேடித்தேடிப்  போட்டுத் தள்ளினார்கள். மெட்ரிக் அளவுகோலுக்கு மாறினார்கள். சட்டங்களை மாற்றினார்கள். கலண்டரையும் மாற்ற முயற்சிகள் நடந்தன.

ஆனால் ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாமே என்று கேலி செய்த பண அமைப்பை (Monetary system) மட்டும் மாற்ற மறந்தே போய்விட்டார்கள்.

20ம் நூற்றாண்டின் ரஷ்யப் புரட்சியில் எல்லாம் பொது உடைமைகள் ஆக்கப் பட்டன. வங்கிகள் அனைத்தும் அரசின் கைகளுக்கு வந்தன. ஆனால் பண அமைப்பு மட்டும் அப்படியே இருந்தது.

என்ன, ஒரு சின்ன வித்தியாசம். பண நோட்டுகளில் பழைய ஹீரோக்கள் இல்லை. பதிலாய், புதிய கதாநாயகர்கள்  புதுக் கோஷங்களுடன் காட்சி அளித்தார்கள். அவ்வளவு தான்.

மாவோ தலைமையில் உருவாகிய சீனம் மட்டுமல்ல  மற்றும் ஏகாதிபத்தியங்களில் இருந்து விடுதலை பெற்ற புதிய நாடுகள் எல்லாமே பத்தாம் பசலித்தனமான அதே பண அமைப்பை ஏற்றுக்கொண்டன.

இன்று வரை இதுவே தொடர்கிறது. நம் வாழ்க்கையையே ஒரு சுமை ஆக்கியிருக்கும் இந்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் முதலில் பணம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பணம் ஒரு பண்டம் அல்ல !

பணம் ஒரு பண்டம் அல்ல. அது ஒரு மாயா ஜாலம் என்று சொல்ல நிறைய உதாரணங்கள் காட்டலாம்.

ஆரம்பத்தில் அமெரிக்க டாலர், அந்த நாட்டின் மத்திய வங்கி  வைத்திருந்த தங்க மதிப்பை அதன் அளவுகோலாய் வைத்திருந்தது. (கிட்டத்தட்ட, எல்லா நாடுகளுமே, தங்கம், வெள்ளி போன்ற உலோக மதிப்பைத்தான் அளவுகோலாக வைத்திருந்தன.)

1971 ல், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் இனி அப்படி இருக்காது. டாலர்னா டாலர் தான் என்றார். ஒரு சின்ன அறிவிப்பு வந்தாலும் வந்தது. பணம் (டாலர்) தன்னை டக் என்று மாற்றிக் கொண்டது.

இனி டாலருக்கு என்ன அளவுகோல் கேட்டதற்கு இன்னொரு டாலர் ! என்று பதில் வந்தது. மாயா ஜாலம் அல்லாமல் வேறென்ன அது?

எந்த ஒரு மாஜிக்காரரும் பொருட்களை மாயமாக்கிக் காட்டுவார். நாம் மலைத்துப்போய் இருக்கும்போது அந்தப் பொருள் வேறொரு வடிவில் வரும்.

பணமும் ஆரம்பத்தில் அது பலவித பொருள்களாய் இருந்தது.

பண நோட்டுகளுக்கு நாம் வந்து சேர முன்பு, உலோகங்களில் வார்க்கப்பட்ட நாணயங்களைப் பணம் என்று சொல்லிக் கொண்டோம்.

அதற்கு முன்பு உலோகத் தகடுகள்.  இன்னும் பின்னால் போனால், அம்பர், தோல் கருவிகள், யானைத் தந்தங்கள், சோழிகள், முட்டைகள், நகங்கள், பானைகள், சட்டிகள், என்று எத்தனையோ பொருட்கள் பணமாகப் பாவனையில் இருந்தன.

கிலின் டேவிஸ் ஒரு பெரும் அட்டவணையே  போட்டிருக்கிறார்.

பிறகு பிளாஸ்டிக் அட்டைகளாய் (கிரெடிட் , டெபிட் மற்றும் இன்னோரன்ன கார்ட்டுகள்) மாறியது. தவிர, கணனிகளில் 0, 1 என்கிற  இரண்டு இலக்கங்களில் (binary) இன்று காட்சி அளிக்கிறது.

மெய்நிகர் உலகில் (virtual world) எப்படித்  தோன்றுமோ தெரியாது.

பணம் என்றால் என்ன?

எனவே பணம் என்பது நம் மனித வரலாற்றிலேயே ஏதோ ஒரு உருவில்  இருந்திருக்கிறது. இருக்கிறது. அது எந்த உருவத்திலும் வரலாம். ஆகவே அது ஒரு கருத்து. நம் மனதில் இருக்கும் ஒரு சிந்தனைக் கூறு.

இறைவன் என்பது நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. இறைவன் எந்த உருவத்திலும் இருக்கக்கூடியவர் என்று நம்புகிறோம். அவர் இருப்பது நம் மனதில் என்பதையும் நம்புகிறோம்.

அது போலவே பணம் என்பதும்  நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. அது நம் மனதில் இருக்கும் நம்பிக்கை. நம் பொருளியல் தேவைகளை இலகுவாகப்  பூர்த்தி செய்துகொள்ள அது உதவுகிறது.

ஆனால் ஒரு வித்தியாசம்.

முன்னர் சொன்ன சிந்தனைக் கூறு நமக்கு வாழ்நாள் பூரா தேவைப்படும். மற்றவர்களிடம் அந்த நம்பிக்கை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எனக்குள் அது இருக்கும் வரை என் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். நிம்மதியாய் இருக்கும். யாரும் எதுவும் சொல்ல முடியாது.

பின்னதோ, என்னிடமும் இருக்கவேண்டும். மற்றவர்களிடமும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வேலை செய்யாது. இந்த நம்பிக்கை பொதுவாக எல்லாரிடமும் இருக்கவேண்டிய சூழ்நிலை. கஷ்டமான வேலை.  இருந்தும் நடைமுறை சாத்தியமாகிவிட்டதே. எப்படி?

பணம் எப்படி உருவாகியிருக்கும்?

பொருளியல் புத்தகங்களைப் புரட்டினால், ஆரம்பத்தில் மனிதர்கள் பண்டமாற்று செய்து கொண்டிருந்தார்கள். இன்ன பொருளுக்கு, இன்ன சேவைக்கு,  இதைத் தருகிறேன் என்று தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்…

ஆனால் அதில் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டன. ஆகவே பொதுவாக ஒரு அலகு ஏற்படுத்திக் கொள்ளுவோம் என்று நினைத்தார்கள். பணம் என்று ஒரு அலகை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கு அடையாளமாய் ஏதோ ஒரு பொருளை எல்லாரும் ஒரே மனதாய் ஏற்றுக்கொண்டார்கள்.

இப்படித்  தான் ஒவ்வொரு சமுதாயங்களிலும் பணம் உருவானது என்று ஒரு அம்புலிமாமா கதை சொல்லப் பட்டிருக்கும்.

இருந்தும் இந்த அழகான கற்பனைக்கு சான்றுகளோ, தடயங்களோ கிடைக்கவில்லை என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருவாரியான பொருளியல் வல்லுனர்களோ, நாங்கள் அப்படித் தான் சொல்லுவோம். வேண்டுமானால் நீங்கள் கண்டுபிடியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். (எல்லாரும் அல்ல)

மானுடவியல் (Anthropology) என்பது மனிதர்கள் எப்படி ஆதிகாலத்தில் வாழ்ந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் நாகரிகம் அடைந்திருப்பார்கள்? எப்படி படிப்படியாய் முன்னேறி இன்றைய நிலைக்கு வந்திருப்பார்கள்? என்பதை ஆய்வு செய்யும் ஓர் துறை.

இந்தத் தொடரில் முக்கியமான ஓர் செய்தியை முதலிலேயே சொல்லிவிடவேண்டும். பணம் உருவானது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நான் குறிப்பிட்ட சில ஆய்வாளர்களின் முடிவுகளை மட்டும்  தொகுத்திருக்கிறேன்.

அன்றைய மனித சமுதாயங்கள்  சிறுசிறு குழுக்களாய் வாழ்ந்திருந்தபோது பண்டமாற்றுக்கள் நடந்ததற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.

ஒவ்வொரு குழுவின் உள்ளேயும் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் பிரிக்கவே முடியாத உறவுகளைக் கொண்டிருந்தார்கள். எல்லாப் பொருள்களும் சேவைகளும் இலவசமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டன (Gift Economy).

இலவசம் என்கிற பதமே தப்பு. விலை எனும் சொல், அல்லது கருத்தியல் என்பது நடைமுறையில், பாவனையில் இருந்தால் மட்டுமே அதன் எதிரான இலவசம் எனும் சொல் தோன்றி இருக்கும்.

விலை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில்?

பண அடிப்படையில் எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு  கொடுத்து அந்தக் கண்ணாடி மூலமே பார்த்துப் பழகியவர்கள் நாம்.

ஆகவே பழங்கால மனிதவாழ்வை கற்பனை செய்து பார்ப்பதில் நமக்கு சிரமங்கள் இருக்கின்றன.  அதற்கென்று இன்னோர் மனோநிலைக்கு மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு அது முடியும்?

இன்று ஒரு குடும்பத்துப் பிள்ளைகளே நான் வேறு, நீ வேறு என்கிற மனோநிலையில் குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்த இடைவெளியை உருவாக்குவதில் உளவியல் ரீதியாக இன்றைய பணம் பின்னால் இருந்து  செயல்படுகிறது. தவிர, வளர்ந்து அவர்களே குடும்ப வாழ்க்கை துவங்கும் போது இடைவெளி இன்னும் பெரிதாகி விடுகிறது.

அன்றைய வாழ்வே ஒரு போராட்டம் தான். இருந்தும் அன்பும் பாசமும் துன்பங்களை மறக்க உதவின. நான் வேறு நீ வேறு என்னும் சிந்தனை இருக்கவில்லை. பகிர்தலில் இருந்த இனிமையை அனைவரும் அனுபவித்தார்கள்.

அன்றைய எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு என்ன பெரிதாய்த்  தேவைப்பட்டிருக்கும்? ஆடுமாடுகள், ஆடைகள், உணவு எல்லாமே, எல்லாருக்கும் பகிரப்பட்டன.

உறவு முறைகளுக்குத் தான் முக்கியத்துவம் தரப்பட்டது. பொருள்களுக்கு அல்ல. உதாரணமாய், ஒரு திருமணத்துக்கு என்ன பரிசு கொடுப்பது, ஒரு கொலை நடந்துவிட்டால் அதற்கு என்ன இழப்பீடு கொடுப்பது போன்றவை…  இவை தான் பெரும் விவாதங்களாய் இருந்தன.

பண்டமாற்றுக்கள் வெவ்வேறு குழுக்களிடையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மிகமிக அபூர்வமாக,  சிறுசிறு அளவிலேயே நடந்தன.  பெரிதாய் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

ஒவ்வொரு குழுவும் அதன் மக்கள் தொகையில் ஒரே எண்ணிக்கையில் என்றென்றும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தவிர, காலம் செல்லச் செல்ல வேட்டையாடுதலைக் கைவிட்டு  நதி ஓரங்களில் பயிர்ச் செய்கை என்று முன்னேறி வந்தார்கள்.

இப்போது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பல குழுக்கள், வித்தியாசமான குணங்கள் கொண்டவர்கள் ஒன்று  சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை.

மக்கள் தொகை பெருகிற்று. கூடவே சச்சரவுகள் பெருகின. ஆனாலும் இந்த நாகரிகம் தோன்ற முன்னமே  மனிதர்களிடையே ஒரு பொதுமைப் பண்பு நிலவியிருந்ததை மானிடவியலாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

பயிர்ச் செய்கை  துவங்கப்பட்ட போது இந்தப் பண்பு மேலும் ஒரு சிக்கலாகி, அதே சமயம் உறுதியாக நிலை கொள்ள ஆரம்பித்தது.

உலகின் எந்தப் பகுதியானாலும் பண்டைக் காலம் முதல் எல்லா சமுதாயங்களிலும் ஓர் தலைவனோ அல்லது தலைவியோ, அல்லது ஒரு சிறு குழுவோ மற்றவர்களைக்  கட்டுக்குள் வைத்திருக்க உருவானார்கள்.

கூட்டாக வாழும் விலங்குகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும்.

எதிரிகளைத் துரத்தியடிக்க, தம் நிலப்பரப்பைக் காத்துக் கொள்ள பலசாலியான அல்லது புத்திசாலியான ஒருவர் தேவைப்பட்டார்.

யார் இந்த வாழ்வுப் போராட்டத்தில் நின்று பிடிக்க உதவினாரோ, கட்டளைகள் பிறப்பித்தாரோ அவருக்கு குழுவின் மற்ற ஆட்களைவிட, மிகவும் மரியாதை தரப்பட்டது.

சுருக்கமாக சொன்னால், பின்னால் வந்த அரசர்கள் பரம்பரைக்கு இவர்கள் தான் முன்னோடிகள்.

அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தத்  தலைமைகள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்னும் நிலைப்பாடுகள் ஏற்பட்டன.  அவரைக் கடவுள்/கடவுள்களின் பிரதிநிதியாகவும் காண்கின்ற போக்கும் உருவாகிற்று.

இந்த இடத்தில், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் தனது கருத்தை முன்வைக்கிறார்.

பொருட்கள், சேவைகளை மதிப்பீடு செய்ய ஒரு அளவுகோல் தேவை என்று எல்லாரும் உணரும் நிலை ஏற்பட்டபோது, அது என்ன அளவுகோல் என்பதில் ஆயிரம் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும்.

அத்தனை பேரும் எதையுமே ஒருமனதாய் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்ப முடியாது. ஆளுக்கொரு நியாயம் பேசி இருப்பார்கள். குழப்பங்கள் மட்டுமல்ல அடிதடிகளும் ஏற்பட்டிருக்கும். இது மனித இயற்கை.

ஆகவே அதிகாரத்தில் உள்ளவரின் ஆணை அல்லது அவர் மேல் ஏற்படும் பயபக்தி இல்லாமல் அந்த அளவுகோலை, அந்தக் குழுவோ, சமுதாயமோ ஏற்றுக் கொண்டிருக்கவே முடியாது.

தவிர, அந்த அளவுகோல் அந்தக் குழுவுக்குள் அல்லது சமுதாயத்துக்குள்  மட்டுமே  செல்லுபடியாகும். 

அப்படி அதிகாரத்தால் ஏற்படுத்தப்பட்ட அளவுகோல் தான் பணம் என்கிறார் அவர்.

இனி மானுடவியலாளர், டேவிட் கிரேபர் சொல்வதைப்  பார்ப்போம்: இவர் பணம் எனும் அளவுகோல் வந்ததற்கு யுத்தங்கள் தான் காரணம் என்று பெரிய அதிர்ச்சி கொடுக்கிறார்.

அவர், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் சொன்னதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு படி மேலே போகவேண்டி இருக்கிறது என்கிறார்.

தனித்தனி சமுதாயங்களின் உள்ளே பண்டமாற்று இருக்கவில்லை.  ஆனால் வெளியார் குழுக்களுடன் சில சமயங்களில் பண்டமாற்று இருந்திருக்கிறது.

வெளியாட்களின் நடத்தைகள் பற்றி எதுவும் தெரியாத நிலையில் அது எப்படி நடந்திருக்கும்? ஓர் கணம் யோசித்துப் பாருங்கள். சந்தேகம், பயம், ஒருவித தயக்கம் நிச்சயம் இருந்திருக்கும். எந்த நேரமும் வன்முறை வெடிக்கலாம். இல்லையா?

சமுதாயத்தில் பணம் உருவாக இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டன. ஓன்று அடிமைகள் வர்த்தகம். அடுத்து எகிறிக்கொண்டே போன கடன்கள்.

மனித வரலாற்றில், அரசுகளோ, பேரரசுகளோ நின்று பிடித்ததற்கு முக்கிய காரணம்: அவை புதுப்புது ஊர்களோ, நாடுகளோ பிடிக்க முனைந்து நின்றது தான். (எப்போதுமே.)

அப்போது தேவைப்பட்டது பெரும் எண்ணிக்கையில் ஆன போர்வீரர்கள். அவர்களுக்கு உணவு உடை, சிறப்பு சலுகைகள்  கொடுக்கவேண்டும்.

தவிர, உள்ளூர் மக்களையும் திருப்திப் படுத்தவேண்டும். ஆகவே மன்னர்களின் கடன்கள் எந்தக் காலத்திலும் எகிறியதே தவிர குறையவில்லை.

ஆகவே எப்போதும் போர் முழக்கம் தான்.

போரில் சிறை பிடிக்கப்பட்ட அந்நிய நாட்டு மக்களை, கொள்ளை அடித்த பொருள்களை எப்படிப் பகிர்வது? சந்தைகள் ஏற்பட்டன.

அடிமைகளால் பொருளாதாரக்  கஷ்டங்களைத்  தீர்க்கக் கூடியதாக இருந்தது. அதற்கு எந்த சமுதாயமும் விதிவிலக்கல்ல. அடிமைகளை எந்த வேலைக்கும் உபயோகிக்கலாம். படுக்க இடம், உணவு போதும். தீர்த்துக் கட்டினாலும் யாரும் கேட்கப் போவதில்லை.

(தொடரும்..)

காசு நம் அடிமை – 2

கடுமையாய் உழைத்து முன்னேறி  இன்று பணக்காரனாய் இருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அது யாரின் உழைப்பில் என்று திருப்பிக் கேளுங்கள். 

-ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

தொடர் -2

(மானுடவியலாளர் டேவிட் கிரேபர்,  பொருளியல் பேராசிரியர் பெர்னார்ட் லீட்டேர், பொறியலாளர் மார்கரீட் கென்னடி, பொருளியல் மேதை கெயின்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் இந்தத் தொடரில் அலசப்படுகின்றன.)

டேவிட் கிரேபர் தொடர்ந்து பேசுகிறார்:

அடிமை வர்த்தகம் எல்லா சமுதாயங்களிலும் இருந்திருக்கிறது. அன்றைய சந்தைகளில் போர்வீரர்களை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அடுத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்ற சந்தைகள் தயாராகவே  இருந்தன.

சந்தைகள் எப்படி வந்தன? அரசுகள் தான் அவற்றை அறிமுகப் படுத்தின. அங்கே காவலர்கள் ஆயுதங்களுடன் வலம் வந்தார்கள். மேலும் அதிகாரம் உங்களைக் கண்காணிக்கிறது என்பதை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.

சிலசமயங்களில், போர்களில் எதுவுமே கிடைக்காமல் போகலாம். இந்த நிலைமையை சமாளிக்க, மன்னர்கள் அவர்கள் பேர் பொறிக்கப்பட்ட  (அல்லது முகம்.. அல்லது ..) உலோகத் துண்டுகளை அவர்கள் போர்களுக்குப் போக முன்னரே  கொடுத்திருந்தார்கள்.

எனவே தோற்றுப்போய்த் திரும்பி சந்தைகளுக்கு வர நேர்ந்தாலும் சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.

மன்னர்களுக்கும் அந்த உலோகத் துண்டுகள், வரி என்னும் போர்வையில் பின்னால் தம்மிடமே திரும்பி வரும் என்று தெரிந்திருந்தது. யுத்தங்கள் செய்வது லாபம் தரும் நடவடிக்கை என்பதை அனுபவத்தில் கண்டிருந்தார்கள்.

பணம் என்பது உருவாக  இந்த ஆரம்ப முயற்சி உதவி இருக்கிறது. இது ஒருவிதமான கடன். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க உதவிய கடன்.  நாணயங்களின் (பணத்தின்) முன்னோடி.

மக்களும் அந்த உலோகத் துண்டுகளுக்கு ஒரு தனி மரியாதை கொடுத்தார்கள். கொள்ளையில் கிடைத்த பொருள்கள், அடிமைகள் என்று களை கட்டிய சந்தைகள் உலகம் பூரா இருந்ததைக் கவனிக்க வேண்டும்.

நாணயங்கள் புழக்கத்துக்கு வர முன்னரேயே, கடன் கொடுக்கும் அமைப்புகள் தோன்றி இருந்தன. ஆசிய, அய்ரோப்பிய கண்டங்களில் தோன்றிய பழைய நாகரிகங்களில் இது மிக முக்கிய அம்சம்.

உண்மையிலேயே, பணம் என்பது கடன் கொடுப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி. அது பொருள்கள், சேவைகளின் மதிப்பை  அளக்க, அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட  ஒரு அளவுகோல் என்றாலும் கடன் கொடுத்தலும் வாங்குதலும் முன்னமேயே வந்துவிட்டது என்பதையும் நாம் நோக்கவேண்டும்.

கடன் ஒரு தவிர்க்க முடியாத, அவசிய தேவையாக இருந்ததால் பணம் அந்த இடத்தை நிரப்ப வந்த ஓர் உற்ற நண்பன் என்று கொள்ளலாம்.

எழுத்தில் கிடைத்துள்ள வரலாற்று செய்திகளின்படி, கி.மு.5000 களில் பணம் ஷே-கெல்  (shekel) என்கிற பெயரில் உலகின் மிகப் பழைய மெசொபொட்டாமிய நாகரிகத்தில், சுமேரியர்களின் பாவனையில் இருந்திருக்கிறது.

பணம் என்பதைக் கண்டுபிடித்தார்களோ இல்லையோ, அதை நடைமுறைப் படுத்திக் காட்டியவர்கள் வரிசையில் சுமேரியர்கள் தான் இன்று வரை முன்னணியில் நிற்கிறார்கள்.

ஷே (she) என்றால் கோதுமை. கெல் (kel ) என்பது அளவுகோல் (ஏறக்குறைய ஒரு மரக்கால்). ஒரு மரக்கால் கோதுமைப் பொதியை அவர்கள் பண அளவுகோலாக வைத்திருந்தார்கள்.

அது விவசாய சமூகம். விவசாயிகள் விளைந்த கோதுமையை அரச களஞ்சியத்துக்கு கொண்டு வந்து கொடுத்து களிமண் தட்டுகளில் எழுதப்பட்ட பற்றுச்சீட்டு பெற்றுக் கொண்டார்கள். (ஏனென்றால் அன்று காகிதம் என்றால் என்னவென்றே தெரியாது.)

விவசாயிகள் வானத்தை நம்பி இருந்தவர்கள். ஏழைகள். மும்மாரி பொழிவது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில சமயம் வெள்ளம் வரும். சில சமயம் வரட்சி வாட்டும்.

ஆகவே, கஷ்ட காலங்களில் அவர்களுக்கு மன்னர்களால் கடன் (நிவாரண நிதி) கொடுக்கப்பட்டது. இருந்தும் அநேகமான விவசாயிகளுக்கு அது போதவில்லை. சிலநேரங்களில் செல்வாக்கோடு வாழ்ந்த செல்வந்தர்களிடமும் கையேந்த நேரிட்டது. 

அந்த காலத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. முழுக் குடும்பத்தையுமே பணயக் கைதிகளாக்கினார்கள். அடிமை வர்த்தகம் சர்வ சாதாரணமாய் நடந்தது. 

சமூகத்தின் முதுகெலும்பான விவசாயிகள், பெருவாரியான மக்கள் தொடர்ந்து வறுமையில் வாடினால் அரசு எப்படி இயங்கமுடியும்? எனவே காலத்துக்கு காலம் மன்னர்கள் கடன்களை ரத்து செய்து கொண்டே இருந்தார்கள். மற்றவர்களையும் ரத்து செய்யச் சொல்லி ஆணை இட்டார்கள். 

இது மெசொபொட்டாமிய நாகரிகத்தின் பாணி. பின்னால் வந்த எகிப்திய நாகரிகமும் இதே முறையைக் கையாண்டாலும் அவர்கள் பிரமிட்கள் என்று பிரம்மாண்டமாய் யோசித்தவர்கள்.

ஆகவே பற்றாக்குறை என்று வரும்போது அடுத்த ஊரை, நாட்டைக் கொள்ளை அடித்தால் தான் நின்றுபிடிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டபோது, அவர்கள் தயங்கவே இல்லை. 

இனி கிரேக்கர்களின் அரசுகள், ரோமர்களின் பேரரசு என்று நாகரிகங்கள் விரிவடைந்தபோது அவர்களும் தொடர்ச்சியான போர்கள் மூலம் புது நாடுகள் பிடித்து பொருளியல் பற்றாக்குறையை ஈடு செய்ய முயற்சித்தார்கள். 

பின்னைய இந்த நாகரிகங்களின் ஆளும் வர்க்கவர்க்கத்தினர் புத்திசாலித்தனமான ஒரு காரியமும் செய்தார்கள். கொண்டு வரும்  கொள்ளைப் பொருள்கள், அடிமைகளை (ஓரளவு) அவர்களின் இளைஞர் பட்டாளத்திடம் (ஆண்கள்) ஒப்படைத்துவிட்டு  சொன்னார்கள்:

டேய் பையன்களா, என்ன செய்வீர்களோ தெரியாது. நம் ஊர்க்காரர்கள் ஏழைகளாய், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தளவு இவை அவர்களிடம் போய்ச்  சேரவேண்டும். அவ்வளவு தான்.

இந்த ஆளும் வர்க்கங்கள் கையாண்ட நிதி நடைமுறைகள் (Financial practices), கடன்களை கட்டுக்குள் வைத்திருக்க மேற்கொண்ட உத்திகள் (Debt-coping strategies), பண அமைப்பு நிர்வாகம் (Management of money system), அடிமை வர்த்தகம் (Slavery) – இவற்றுக்கிடையில்  இருந்த நெருங்கிய தொடர்புகளை நாம் கவனிக்க வேண்டும். 

மத்திய காலகட்டத்துக்கு (Middle ages) முன்னைய கால கட்டத்தை (கி.மு. 8 – கி.மு.3 ம் நூற்றாண்டுகள்) வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய காலகட்டம்  என்று சொல்லலாம். ஆசிய, அய்ரோப்பிய கண்டங்களில் கலாசாரங்களும்  படைப்புத் திறன்களும் துளிர்விட்டுப் படர ஆரம்பித்த காலம் அது. 

சீனாவிலும் இந்தியாவிலும் பேரரசுகள் எழுந்தன. இங்கும் நாணயங்கள் பாவனைக்கு வந்த காலம். சந்தைகள், பொருளீட்டல் சாதனங்கள் பிரபலம் அடையத் துவங்கின. நிதிப் பற்றாக்குறை எகிற, எகிற யுத்தம் ஒரு  அவசியமான ஒரு தொழிலாக வளர்ந்தது. அடிமை வர்த்தகம் தினசரி வாடிக்கையாக மாறியது.  

அந்த யுகத்தில் ஏற்பட்ட இன்னோர் சுவாரஸ்யமான அம்சம்: மக்கள் மனதில் நாணயங்களின் பாவனை அழுத்தமாய்ப் பதியத் துவங்க, எண்ணிக்கை முதலிடம் வகிக்க ஆரம்பித்தது.

எந்தப் பொருளுக்கும், சேவைக்கும் ஒரு மதிப்பு, இலக்கத்தில் தோன்ற ஆரம்பித்தது. உறவு முறைகள், கலாசாரம், நம்பிக்கைகள், அவர்கள் புனிதமாய் நினைத்திருந்த அத்தனை விஷயங்களும் மதிப்பில் அடங்கிப் போக, வாழ்க்கையே  தலைகீழ் ஆகிவிட்டது. 

பொருள் மதிப்புக்கு முதலிடம் கொடுக்கும் இந்தப் போக்கு தவறானது. அதை எதிர்க்கவேண்டும் என்று மாற்று மனிதநேய தத்துவங்கள் தோன்ற ஆரம்பித்தன. 

சோபிஸ்ட்டுகள் (Sophists) என்றொரு பிரிவினர் கிரேக்கத்தில் அன்று சிறந்த பேச்சாளர்களாக, நட்சத்திர அந்தஸ்தோடு வலம் வந்தார்கள். (காசு மட்டும் கொடுத்துவிட்டால்) எந்த ஒரு தலைப்பு கொடுத்தாலும் வெளுத்துக் கட்டக் கூடியவர்கள். புகழ் பெற்ற கிரேக்கத்தின் தத்துவங்கள் அனைத்தும் இவர்களுக்கு எதிராக உருவாகின. 

வெறும் சடங்குகளில் மட்டும் நம்பிக்கை கொண்ட வைதீக மதங்களுக்கு எதிராய் இந்தியாவில் பவுத்தம் எழுந்தது. 

சீனாவில் நிலவிய பழைய லீகலிச (Legalism) தத்துவத்துக்கு ( அரசு கொடியதாய் இருந்தால் என்ன,  அநீதிகள் புரிந்தால் என்ன, எல்லாருமே சட்டம், ஒழுங்குக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் எனும் சித்தாந்தம்) எதிராக, நேர்மை, நீதியை வலியுறுத்திய கன்பூசியன் தத்துவம் (Confucianism) தோன்றியது.

20 ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பொருளியலாளர், ஜான் மேனார்ட் கெயின்ஸ் சொல்லும் பணத்தின் தோற்றம் :

பணம் எப்போது தோன்றியது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் காலத்தை விட, அல்லது நமக்கு எப்போது என்று சொல்லித்தந்ததை விட, இன்னும் பழமையானது பண அமைப்பு என்று நம்புகிறேன்.

பூமியின் பனியுகம் உருகத் துவங்கிய காலகட்டத்துக்கும் பின்னர் மிதமான, இதமான காலநிலை தோன்றிய காலகட்டத்துக்கும் இடையிலே, எந்த காலகட்டத்தில் மனித வரலாறு ஆரம்பமானதோ, அதே நேரம் எந்தக் கட்டத்தில் புதுப்புது சிந்தனைகள் மனிதமனத்தில் அரும்ப ஆரம்பித்தனவோ அப்போது பணத்தின் மூலம் தோன்றி இருக்கவேண்டும்.

அது ஹெஸ்பெரிட்ஸ் தீவுகளில் தோன்றி இருக்கலாம் (Islands of Hesperides). அல்லது தத்துவஞானி பிளாட்டோ விவரித்த அட்லாண்டிஸ் (Atlantis) எனும் கற்பனைக் கண்டத்தில் தோன்றி இருக்கலாம். அல்லது எங்காவது மத்திய ஆசியாவில் இருந்த ஏதோ ஒரு ஏடன் தோட்டத்தில் தோன்றி இருக்கலாம்.

அய்யா என்ன சொல்ல வருகிறார்? உங்களுக்குப் புரிகிறதா?

அவர் ஒரு பொருளியல்  மேதை. அவருக்குப் பணம் என்றால் என்ன என்று தெரியாமலா இருந்திருக்கும் என்று அடுத்த கேள்வியைக் கேட்டால்:

பணமா? நான் அறிந்தவரை, எனக்குத் தெரிந்த மூன்று பேர்கள் மட்டுமே பணம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டவர்கள்.

ஒருவர் இன்னோர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறார். அடுத்தவர் என் மாணவர்களில் ஒருவர். மற்றவர் இங்கிலாந்து மத்திய வங்கியில் வேலை செய்யும் ஒரு சாதாரண எழுத்தர்.

யார் அவர்கள் என்று அவர் சொல்லவே இல்லை.

(தொடரும்..)

காசு நம் அடிமை – 3

காசு பேசும் என்பதை நீங்கள் நம்புவீர்களா இல்லையோ நான் நம்புகிறேன். ஒருநாள் அது சொன்னதை என் ரெண்டு காதாலும் கேட்டேனே: Goodbye.

-ரிச்சர்ட் ஆர்மர் 

தொடர் -3

பணத்தின் வரைவிலக்கணம் 

பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் பணத்தின் ஐந்து தன்மைகள் பற்றி சொல்கிறார். (அதில் கொஞ்சம் தண்ணி கலந்திருக்கிறேன்):

  • Money of account – மனிதர்கள் பொதுவாய் மற்றவர்களின் தரம் பற்றித்தான் பேசுவது வழக்கம். தன் தரம் பற்றி மூச்சு விடமாட்டார்கள். பணமும் அப்படியே. தன சொந்த மதிப்பைப் பற்றிக் கவலைப்படாது. அந்தப் பொருள் அப்படி .. இந்த சேவை இப்படி… என்று எடை போடுவது மட்டுமல்ல, ஒரு மதிப்பும் கொடுத்து விடுகிறது.
  • Storing value – அதை சேர்த்து வைத்துக் கொள்ளலாம். பொருள்கள், சேவைகளுக்கு இந்த தைரியம் இல்லை. 
  • Transporting value – சேர்த்த மதிப்பை எங்கும் அனுப்பலாம். பண நோட்டாய் அல்லது கணனி மூலம், அது உங்கள் வசதி. 
  • Debtor-Creditor relationship –  வாங்குவோர்- கொடுப்போர் என்னும் சமூக உறவை உருவாக்குகிறது. 
  • Political element – அதற்குப் பெரும் அரசியல் செல்வாக்கு இருக்கிறது. பேராசிரியர் ஏற்கெனவே சொல்லிவிட்டாரே. 

அந்தக் காலத்தில் உலோகங்கள் தெய்வீக அம்சம் பொருந்தியவை என்று நம்பினார்கள். (நாணயங்கள் தங்கம், வெள்ளியில் வார்க்கப்பட்டன.) தங்கத்தை சூரிய பகவான் அம்சம் என்றும் வெள்ளியை சந்திர பகவான் என்றும் கொண்டாடி இருக்கிறார்கள். 

Money என்கிற பேரே Juno Monita என்னும் ரோமர்களின் தேவதையின் பேரில் இருந்து தான் வந்தது. 

பணம் என்றுமே தட்டுப்பாட்டில் இருந்தது என்று சொல்ல முடியாது. 12ம் – 15ம் நூற்றாண்டுகளின் இடைவெளியில் புழக்கத்தில் இருந்த பணம் மக்களுக்குப் பெரிதும் சேவை செய்திருக்கிறது. 

பிராக்டியேட்டன் பணம் (Braktieaten money)

அய்ரோப்பாவின் பல பகுதிகளும் அன்றிருந்த சிற்றரசர்கள், பிஷப்புகள் உருவாக்கிப் பாவனையில் விட்ட இந்தப் பணம் ஒவ்வோர் ஆண்டும் திருப்பி வாபஸ் வாங்கப் பட்டுவிடும். ஆகவே மக்கள் இந்தப் பணத்தை சேர்த்து வைக்கவே விரும்பவில்லை. செலவழித்துவிடத் துடித்தார்கள்.

விளைவு: வேலைகள், பணிகள், வணிக செயல்பாடுகள் எல்லாம் விறுவிறு என்று நடந்தன.

வாபஸ் வாங்கப்பட்ட இந்தத் தங்க, வெள்ளி நாணயங்கள் உருக்கப்பட்டு, அவற்றின் உலோக அளவும், மதிப்பும் குறைக்கப்பட்டு மீண்டும் பாவனைக்கு விடப்பட்டது. (சராசரி 25 விழுக்காடு)

மக்களின் யோசனை வேறு திசையில் திரும்பியது. பணத்தை எங்கே முதலீடு செய்யலாம் என்று யோசித்தார்கள். பண முதலீடு, காணி நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள், கலைப் பொருள்கள் என்று போனதில் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது.

கைவினைஞர்கள், தொழிலாளர்கள் வரம் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்தார்கள். இந்தக் காலகட்டத்தில்  அய்ரோப்பாவில் புதிய சிந்தனைகள் தோன்றின, கலைகள் மேம்பட்டன என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இருந்தும், மக்களுக்குப்  பணம் அடிக்கடி மறைந்து போவது பிடிக்கவில்லை. பணத்தின் கவர்ச்சி மங்க ஆரம்பித்த சமயம், பென்னி நாணயம் அறிமுகம் ஆகியது. இனி நான் தான் ராஜா, மறையவே மாட்டேன் என்றது. கூடவே வட்டியும் வந்தது.

முடிவில், பணம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டும் குவிய ஆரம்பித்தது. மக்களோ, வாழ்க்கையே ஒரு சோதனை என்று தத்துவம் பேச ஆரம்பித்தார்கள்.

இஸ்லாம் காட்டிய பொருளியல்  

பாலைவனத்தில் நெறிகள், நீதிகள் எதுவுமே இல்லாமல் மனம் போனபடி வாழ்ந்த அரேபியர்களுக்கு, அறங்கள் வகுத்து ஓர் புதிய மதத்தை மட்டும் அறிமுகம் செய்யவில்லை முகமது நபி.

வாழ்வியலின் பிரிக்கவே முடியாத பொருளியலிலும் சிறப்பான ஓர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவரே ஓர் வணிகர். மக்களின் தேவைகளை உணர்ந்தவர். பணத்தை வட்டிக்கு வாங்கி மக்கள் பட்ட துயரங்களை அவர் கண்டிருக்க வேண்டும்.

அதன் எதிரொலியாய், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று முழங்கினார். செல்வந்தர்களே, வணிகர்களுடன் பங்குதாரர்களாக சேர்ந்து கொள்ளுங்கள். நட்டமோ, லாபமோ பகிர்ந்து கொள்ளுங்கள். இறைவன் உங்களைக் கைவிட மாட்டான் என்று அறைகூவல் விடுத்தார்.

வட்டி வாங்குவதை யூத, கிறிஸ்தவ மதங்களும் எதிர்த்தன. ஆயினும் நடைமுறை சாத்தியமான ஓர் வழியைக் காட்டுவதில் தவறிவிட்டன.

இஸ்லாம் வளர வணிகமும் உதவியிருக்கிறது. இந்திய நாட்டில் பவுத்தம் வளர வணிகர்கள் உதவியதையும்  இதோடு ஒப்பிட்டு நோக்கலாம்.

இந்தியாவில் வணிகர்கள் சமூகத்தின் கீழ்மட்டத்தில் வைக்கப்பட, (சூத்திர மக்களுக்கு மேலே, ஆனால் பார்ப்பன, சத்திரியர்களுக்குக் கீழே) முஸ்லீம் நாடுகளிலோ அவர்களுக்குத் தனி அந்தஸ்து தரப்பட்டது.

அய்ரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ குருமார்களின் தலையீடுகள் அரசியலில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தின.

முஸ்லிம் நாடுகளில் அரசியலும் வணிகமும் வெவ்வேறு தளங்களில் இயங்கின. வணிகர்களின் மார்க்க அறிஞர்களைப் பார்த்து, கலீஃபாக்களே (அரசர்கள்) மரியாதையுடன் நடந்து கொண்டார்கள். ஒருவர் விவகாரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்று எழுதாத ஒப்பந்தம் இருந்தது.

வணிகர்கள் புதுப்புது நாடுகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்க, அரசர்கள் புதுப்புது நாடுகளில் போர்களில் ஈடுபட்டிருந்தார்கள்.

தெய்வீகமும் பணமும் (வணிகம்) இஸ்லாத்தில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. மற்ற மதங்கள் பணத்திலோ, பொருளியலிலோ பெரிதாக நாட்டம் காட்டவில்லை. அவர்கள் பார்வை ஆன்மிகம், உளவியலோடு நின்றுவிட்டது. முகமது நபி ஒரு படி அல்ல, பல படிகள் மேலே போயிருக்கிறார்.

அதை யாராலும் மறுக்க முடியாது.

இன்றைய வங்கிகளின் முன்னோடிகள்

தங்கமும் வெள்ளியும் இருக்கும் இடத்தில் தானே பொற்கொல்லர்களுக்கு வேலை இருக்கும்?  ஆகவே அவர்களுக்கு சமூகத்தில் தனி மவுசு இருந்தது.

தவிர, அவர்களிடம் தடிப்பான இரும்புப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் உடைக்க முடியாத பூட்டுகள் தொங்கின. கூடவே ஆயுதம் தாங்கிய காவலர்கள் இருந்தார்கள்.

தங்கமும் வெள்ளியும் வைத்திருந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போய்விட்டது. வீட்டில் பாதுகாப்பு இல்லையே. ஆகவே வைத்திருந்த செல்வத்தை பொற்கொல்லர்களிடம் கொடுத்து ஓர் பற்றுச்சீட்டு வாங்கிக் கொண்டார்கள்.

பொற்கொல்லர்களும் நேர்மையும் நாணயமும்  உள்ளவர்களாக இருந்தார்கள்.

ஒரே ஒரு பிரச்னை: எல்லாரும் கொடுத்துவிட்டுப் போனார்களே தவிர வந்து மீட்டு எடுத்துக் கொண்டு போக ஆர்வம் காட்டவில்லை.

காரணம்: பற்றுச்சீட்டு வைத்திருந்தவர்களோ, யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால், பதிலாக பற்றுச்சீட்டைக் கடன்காரரிடம் கொடுத்து கணக்கை நேர் செய்யப் பழகி இருந்தார்கள்.

கடன் கொடுத்தவர்களுக்கும் அந்தப் பற்றுச்சீட்டைக் கொண்டு போய் பொற்கொல்லரிடம் நீட்டினால், அந்த மதிப்பளவு தங்கமோ வெள்ளியோ கிடைத்துவிடும் என்று தெரிந்திருந்தது.

மனிதர்கள் நல்லவர்கள். சந்தர்ப்பங்கள் தான் மோசமானவை.

சும்மா தங்கமும் வெள்ளியுமாய்ப் பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறோமே. கொஞ்சம் கூடுதலாக சில பற்றுச்சீட்டுகள் எழுதித் தேவை என்று வருகிற ஆட்களுக்குக் கொடுத்து,  கொஞ்சம் கூடுதலாக வருவாய் ஈட்டினால் என்ன என்று அவர்கள் யோசிக்கவில்லை.  சந்தர்ப்பங்கள் அப்படி யோசிக்க வைத்தன.

முதலில் இந்த யோசனை இத்தாலிய பொற்கொல்லர்களுக்குத் தான் வந்தது. அவர்கள் வாங்குகளில் அமர்ந்தபடி இப்படிப் பற்றுச்சீட்டுகள் எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். வாங்குகளுக்கு இத்தாலிய மொழியில் banco என்று பேர்.

banco விரைவிலேயே மற்ற அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.

வங்கிகள் 

பொற்கொல்லர்கள் துவங்கிய வங்கிகள் என்னும் அமைப்பின் வளர்ச்சியை  யாராலும் தடுக்க முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை.

பணமோ, தங்கமோ, எந்த உலோகமோ வைப்பில் இருக்கும் மதிப்பைவிட, அதிகமாய் பற்றுச் சீட்டுக்கள் எழுதிக் கொடுக்கும் கலைக்கு வங்கிகள் இன்னும் மெருகு ஏற்றின.

பற்றுச் சீட்டுகள் பணநோட்டுகளாக உருமாற அதிக நாள் பிடிக்கவில்லை. நாணயங்கள், உலோகங்களைக் கையாளுவதில் கஷ்டங்கள் அதிகம் என்று தெரிந்ததே.

தவிர, வங்கிகள் தாராளமாகக் கடன் கொடுக்க ஆரம்பித்தன. ஏன் அரசர்களே கடன் கேட்க ஆரம்பித்தார்கள். (அந்தப்புர செலவுகள் கூடிப்போயிருக்குமோ என்று சிலர் யோசிக்கலாம்.) அதுவும் உண்மை தான்.

அதே சமயம் நாட்டைக்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மந்திரிகள், தந்திரிகள்  வேலையாட்கள், போர்வீரர்கள் ஊதியங்கள், அது இது என்று ஒன்றா, ரெண்டா?

அரசராய் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

அன்றைய பொருளாதாரம் பண நோட்டுகளுக்கு மாறத் துவங்கினாலும் நாணயங்களிலேயே  தங்கி இருந்தது. போர்கள் மட்டுமல்ல, புது உலோக சுரங்கங்களும் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருந்தது.

அரசின் செலவுகள் இன்று போலவே அன்றும் கூடிக்கொண்டே இருந்தன.

மக்களோ நாணயங்கள்/ உலோகங்களை எங்கே பதுக்கலாம், எப்படிப் பதுக்கலாம் என்கிற யோசனையில் இருந்தார்கள். ஒரு படி மேலே போய்  வெளிநாடுகளுக்கு எப்படிக் கடத்தலாம் என்றும் சிந்தித்தார்கள்.

(நாணயங்கள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? பொருளாதாரப்  பிரச்னைகளை சமாளிக்க மக்கள் வேறுவழிகளும் வைத்திருந்தார்கள்.)

பொதுவாக, அரசர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. போரோ, அமைதியோ வங்கிகள் அவர்களுக்குக் கடன் கொடுத்தன. சில சமயங்களில் துயர சம்பவங்களும் நடந்தன.

தெய்வீகம் துவங்கிய வங்கி 

பொருளியலில் இஸ்லாத்துக்குக் குறைந்ததல்ல கிறிஸ்தவம். காலத்துக்குக்  காலம் சுடர் விட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

நைட்ஸ் டெம்ப்ளர் (Knights Templar) என்னும் கிறிஸ்தவ அமைப்பு 12 ம் நூற்றாண்டளவில் தோன்றி மிகவும் பிரபலம் அடையத் துவங்கியது.

காரணம், முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் பெற்ற வெற்றிகள். பல கிறிஸ்தவ நாடுகள் முஸ்லிம்களின் கைக்குள் வீழ்ந்திருந்தன. 11 ம் – 13 ம் நூற்றாண்டுகளுக்கு இடையில், இரு பகுதிகளுக்கும் நடந்த யுத்தங்கள் (சிலுவை யுத்தங்கள் )  வரலாற்றில் மறக்க முடியாதவை.

கிறிஸ்தவத்தைக் காக்க உயிரையும் கொடுப்போம் என்னும் முழக்கத்துடன் எழுந்தது இந்த இயக்கம். அனைவரும் துறவிகள். வாளேந்திய துறவிகள்.

அவர்களின் பொருளியல் ஈடுபாடு ஆச்சரியமான ஒன்று. போர்களில் பங்குகொண்டது மட்டுமல்ல, அவர்கள் வங்கிகளும் நடத்தினார்கள்.

12 ம் நூற்றாண்டில் இருந்த கத்தோலிக்க பாப்பரசரே அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வங்கி நடத்த அனுமதி அளித்தார்.

அய்ரோப்பிய நாடுகள் எங்கினும் கிளைகள் துவங்கப்பட்டன. துறவிகளிடம் இருந்தவை சில நோட்டுப் புத்தகங்களும் பேனாவும் மட்டுமே. (மன்னிக்கவும்: சில இரும்புப் பெட்டிகளும்)

அங்கே வணிகர்கள் பணத்தைக்  கொண்டு வந்து கொடுத்து ஒரு பற்றுச் சீட்டு பெற்றுக் கொண்டார்கள். அதை எந்த நாட்டிலோ, ஊரிலோ டெம்ப்ளர் வங்கிக் கிளை ஒன்றில் காட்ட வேண்டியது தான் பாக்கி. இங்கே போட்ட காசு அங்கே கிடைத்துவிடும். இன்றைய வெஸ்டர்ன் யூனியன் (Western Union) ஆட்கள் இதைக் கேட்டால் பொறாமையில் வெந்து போவார்கள்.

வெந்து போகட்டுமே. நமக்கென்ன? அந்த 12 ம் நூற்றாண்டிலே மின்சாரம் இல்லை. கணனிகள் இல்லை. கேவலம் ஒரு ஒரு டெலிபோன் கூட இல்லை. டெம்ப்ளர் துறவிகள் எப்படி சாதித்திருப்பார்கள்? இன்னொரு இனிய ஆச்சரியம்:

சில சமயங்களில், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. யுத்தபூமிகளில் வெள்ளைக் கொடிகள் பறந்தன. பாலஸ்தீன் நாட்டின் ஜெருசலேம் நகர் தான் இரண்டு குழுவினருக்கும் குறிக்கோள். ஏனென்றால் மூன்று மதங்களினதும் (கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம்) புனித நகரம் அல்லவா அது!

அய்ரோப்பாவில் இருந்து திரள் திரளாக கிறிஸ்தவர்கள் புனித பூமிக்கு யாத்திரை போவது வழக்கம். (அந்த காலத்தில் விமானம், ரயில், கார்கள் எதுவும் இருக்கவில்லை.) எல்லாருமே கால்நடை தான். மிஞ்சிப் போனால் லொடக்கு லொடக்கு என்று குதிரை வண்டி.

யுத்த நிறுத்தம் என்றதும் எல்லாருக்கும் புத்துணர்ச்சி. வாங்க போகலாம் எல்லாரும் என்று யாத்திரை கிளம்பினார்கள். (அன்று யுத்த நிறுத்தம் என்றால் அதை இரண்டு பிரிவினரும் மதித்தார்கள். ஒரு எறும்புக்குக் கூட ஊறு செய்யவில்லை.)

இருந்தும் ஒரு விஷயம் உறுத்தியது : செலவுக்குப் பணம் கொண்டு போவது தான் பிரச்னையாய் இருந்தது. காரணம்: வழிப்பறி கொள்ளைக்காரர்கள்.

சும்மா இருப்பார்களா டெம்ப்ளர் துறவிகள்? விளம்பரம் போட்டார்கள்: யாத்திரிகர்களே, கவலைப்படாதீர்கள். எங்களுக்கு ஜெருசலேம் நகரிலும் கிளை இருக்கிறது. பணத்தை எங்கள் வங்கியில் கொடுத்து விடுங்கள். அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம்.

ஞாபகம் இருக்கட்டும். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிறது ஜெருசலேம் நகர். எப்படி?… எப்படி?…

இவர்களின் வங்கிகள் கிறிஸ்தவத்தின் கொள்கைப்படியே இயங்கின. வட்டியே வாங்கவில்லை. சேவைகளுக்கு ஒரு சிறு கட்டணம். அவ்வளவே.

ஒரு உதாரணம்: 1200 களில் ஆண்ட இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் ஹென்றிக்கு பிரான்சின் போர்தோ நகரின் அருகில் இருந்த ஒரு தீவை வாங்க ஆசை வந்திருக்கிறது. டெம்ப்ளர் துறவிகளுக்கு செய்தி போனது.

அரசே, அது சின்ன விஷயம் என்றார்கள். சிலநாள் கழித்து, மன்னரிடம் போனார்கள். ஆண்டுக்கு 200 பவுண்டுகள் படி 5 ஆண்டுகளுக்கு தீவின் சொந்தக்காரருக்குக் கட்டிவிடுங்கள் என்றார்கள். அப்படி ஒப்பந்தத்தைக் கச்சிதமாக முடித்துத் தந்தவர்கள் துறவிகள்.

கடன் வாங்க வாங்க சந்தோஷமாய் இருக்கும். ஆனால் திருப்பிக் கேட்டால் தான் நமக்குக் கோபம் வருகிறது இல்லையா?  பிரான்சின் மன்னர் 4 ம் பிலிப்புக்கும் அது தான் வந்தது.

மன்னர்  துறவிகளின் வங்கியில் எக்கச்சக்கமாய் கடன் வாங்கியிருந்தார். (போர்கள்.. போர்கள்..) கொஞ்சமாவது திருப்பிக் கட்டுங்கள் என்று சொல்லிப் பார்த்தார்கள் துறவிகள். என்ன அடிக்கடி தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்று எரிந்து விழுந்தவர், ஒருநாள் உத்தரவு போட்டார்: டாய்! எல்லாத்தையும் கொளுத்திருங்கடா!

கொளுத்திவிட்டார்கள். வங்கித் தலைவரையும் சேர்த்து உயிரோடு. கண்டத்தின் எல்லா மூலைகளிலும் வன்முறை எதிரொலித்தது. அவர்களின் எல்லா வங்கிகளும் அழிக்கப்பட்டன. துறவிகளும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப் பட்டார்கள்.

1139 ம் ஆண்டு தெய்வீகம் துவங்கிய வங்கியின் கதையை 1312 ம் ஆண்டில் இப்படி முடித்துவிட்டார்கள்.

(தொடரும்..)

காசு நம் அடிமை – 4

பணப் பற்றாக்குறை,  தீமைகளின் வேர்.

– ஜார்ஜ் பெர்னார்ட் ஷா 

தொடர் – 4

வங்கிகளின் புது அவதாரங்கள்

18 ம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பிய நாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. விவசாயத்தை நம்பியிருந்த சமுதாயங்கள் எந்திர யுகத்தை  நோக்கிப் பயணிக்கத் துவங்கின.

புதுத் தொழில் பேட்டைகள், புதுத் தொழில்கள், வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்து சாதனங்கள், நவீன தொடர்பு வசதிகள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ராணுவம், காலனி நாடுகளை உருவாக்க வேண்டிய தேவைகள் எல்லாம் சேர்ந்ததில், அதற்கு ஏற்ற ஓர் பண அமைப்பு தேவை என்று உணரப்  பட்டது.

முன்பு சிற்றரசுகள் அய்ரோப்பிய கண்டத்துள்ளேயே பொருளாதார நோக்கங்களுக்காகப் போட்டி போட்டன. இப்போ ஆசியாவில், ஆப்பிரிக்காவில், அமெரிக்க கண்டங்களில் இருந்து எல்லையில்லாத செல்வங்கள் அள்ளி வரலாம் என்று தெரிந்துவிட்டது.

வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை காணுவோம் என்றொரு புதிய சிந்தனை ஏற்பட்டது. மொழிவாரியான அல்லது மதரீதியான சிறு சிறு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து புதிய நாடுகள், எல்லைகள் தோன்றின.

தேசிய அரசுகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அரசுக்கு ஆலோசனைகள் சொல்லவும், நாட்டு நிதி விவகாரங்களைக் கையாளவும் மத்திய வங்கி என்னும் அமைப்பு தோன்றியது.

மத்திய வங்கியின் வழிகாட்டுதலில் தனியார் வங்கிகள் பணம் உருவாக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

மன்னர்கள் ஆண்ட காலம் போய்விட்டது. இன்று நாம் மக்களாட்சிக்கு வந்துவிட்டோம் என்று பெருமையாகப் பேசுவதில் ஒரு தவறும் இல்லை. நம் உழைப்புக்குப் பஞ்சமில்லை. இருந்தும் அதற்கு ஈடு கட்டும் வகையில் பணம் போதாமல்  தவிக்கிறோமே. ஏன்?

பண அமைப்பையும் வங்கிகளின் செயல்பாடுகளையும்  பார்க்கும்போது நாம் எந்த சுயநினைவும் இல்லாமல் செய்த முடிவுகள் போலத் தெரிகின்றன.

உண்மையில் அவை விரல்விட்டு எண்ணக்கூடிய, முழு அதிகாரம் படைத்த  ஒரு சில மனிதர்களால் இன்னொரு கால கட்டத்தில், அன்று நிலவிய பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப் பட்டவை.

19 ம் நூற்றாண்டில், விக்டோரியா மகாராணியின் காலத்துக்கு முன்னால் ஏற்பட்ட தொழில் புரட்சியின் போது (Industrial Revolution) யாருக்கும் சூழல் மாசடைதல் என்றால் என்ன என்று தெரியாது.

தீவிரமாகும் தேசிய வாதம், மக்கள் தொகைப் பெருக்கம்,  பூமி வெப்பமடைதல் (Greenhouse effect) என்றெல்லாம் அவர்கள் எதுவும் கேள்விப்பட்டதில்லை.

பூமியில் மூல வளங்கள் வரம்பில்லாமல் நிரம்பி இருக்கின்றன. அது எடுக்க எடுக்கக் குறையாத அமுதசுரபி என்று நம்பினார்கள். யார் மற்றவர்களை முந்தி அள்ளி எடுப்பது என்பது தான் ஒரே நோக்கம். போட்டிக்கு முதலிடம் தந்தார்கள். மற்றவை எதுவுமே ஒரு பொருட்டல்ல.

ஆகவே பண அமைப்பும் வங்கிகளின் செயல்பாடுகளும் இந்த எண்ணங்களின் அடிப்படையில் தான் திட்டமிடப் பட்டன. இன்றும் அதுவே தொடர்கிறது.

இன்றைய பணத்தின் புது அவதாரங்கள் 

தொழில் புரட்சியின் போது உருவாகிய இன்றைய பண அமைப்பு நான்கு அவதாரங்கள் கொண்டது.

1) பூகோள ரீதியாக ஒரு நாட்டுடன் பணம் இணைந்திருக்கிறது.

2) வெற்றிடத்தில் இருந்து பணத்தை உருவாக்கலாம் (Fiat money )

3) வங்கிக் கடன் பணமாகிறது

4) வட்டி அதன் சொத்து

1) நாட்டின் பணம்: நம் நாட்டுப் பணம் என்றாலே நம் உடம்பு கொஞ்சம் புல்லரிக்கும். (சிலருக்கு வேறு நாட்டுப் பணத்தைக் கண்டால் தான் அரிப்பு ஏற்படும் என்பது வேறு விஷயம்.) எப்படியோ, நம் நாடு.. நம் நாடு.. என்று ஒரு பாசத்தை ஏற்படுத்துவதில் பணம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

வலைப்பின்னல், ஒரு வேலியும் போட்டுக் கொள்ள உதவுகிறது. இது என் பணம். அது அவர் பணம். இது நான். அது அவர்  எனும் வேற்றுமை உணர்வை எளிதாக, நமக்கே தெரியாமல் நம் மனதில் படிய வைக்கிறது.

சோவியத் கூட்டரசு வீழ்ந்தபோது, அதன் கிளை அரசுகள் தமக்கென்று சொந்த நாணயம் உருவாக்கிக் கொண்டது தான் அவர்கள் செய்த முதல் வேலை என்பதைக் கவனிக்க வேண்டும்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது. மேற்கு அய்ரோப்பிய நாடுகள், தம் சொந்த நாணயங்களைக் கடாசிவிட்டு யூரோ நாணயத்துக்கு மாறியதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நாம்  அய்ரோப்பியர்கள். நமக்கென்று தனி அடையாளம் இருக்கிறது. என் வழி தனி வழி.

2, 3) வெற்றிடத்தில் இருந்து எதையும் உருவாக்க முடியாது என்று யார் சொன்னார்? ஏன் இன்றைய பணத்தை (Fiat money) அதில் இருந்து தானே வங்கிகள் படைக்கின்றன?

பிரிக்க முடியாதது எது? இன்றைய பணமும் வங்கிக் கடனும். 

Fiat என்பது லத்தீன் சொல். Fiat Lux என்னும் பதம் விவிலிய நூலில் மிகப் பிரசித்தமானது. ஒளி உண்டாவதாக! என்று கர்த்தர் முதலாவதாக சொன்ன சொல் அது.

வங்கியாளரும் சக்தி படைத்தவர். சூன்யத்தை நோக்கி ஒரு சொடக்குப் போடுகிறார். பணம் உண்டாவதாக என்கிறார். பணம் உருவாகிறது. அதை வங்கிக் கடனாய் உங்களுக்குத் தருகிறேன், என்ன சொல்கிறீர்கள்? என்கிறார். மறுபேச்சில்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.

உலகின் எல்லா நாடுகளிலும் (கிட்டத்தட்ட 99 விழுக்காடு?) இந்த மாயமந்திரப் பணம் தான் பாவனையில் இருக்கிறது. 

Fiat money என்பதைத் தமிழில் கட்டளைப் பணம் என்று தமிழக அரசின் பாடப்  புத்தகங்கள் குறிக்கின்றன. அது சரி தான். வங்கியாளர், இவ்வளவு பணம் உருவாகட்டும்! என்று கட்டளை இடுகிறார். பணம் எங்கிருந்தோ வந்து  நிற்கிறது.

அதைக் கடன் என்று வாடிக்கையாளரின் பேரில் எழுதிக் கொள்கிறார். பணத்தை நோட்டுகளாகவோ, காசோலையாகவோ அல்லது ஏதோ ஒரு வழியில் கொடுக்கிறார்.

இருக்க, இன்னோர் முக்கிய தகவல்:

விக்டோரியா மகாராணி காலத்திற்கு முன்பேயே பணம் பெரும் இக்கட்டில் மாட்டியிருந்தது.

காரணம்: தங்கத்தில், வெள்ளியில் அது தங்கி இருந்தது. எவ்வளவு தங்கம் வங்கிகளிடம் இருக்கின்றன? அரசின் கையிருப்போ ரகசியம். எல்லாரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தனியார் வங்கிகள் உருவாக்கிய வங்கிக்கடன் பணத்துக்கும், அரசின் மேற்பார்வையில் புழக்கத்துக்கு விடப்பட்ட பணத்துக்கும் இடையில் நிறைய உரசல்கள் இருந்தன. இரண்டு பிரிவுகளும் முரண்பட்டதால் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது.

புதிதாய் உருவாகிய கட்டளைப் பணம் மூளைசாலி. டாலர்னா டாலர்! என்று 1971 களில் அமெரிக்கர்கள் பெருமையாக அறிவித்த விஷயம் பற்றி முன்னர் சொல்லியிருந்தோம். அந்த கால கட்டத்தில் இருந்து கட்டளைப் பணத்தின் செல்வாக்கு  எகிறத் துவங்கியது.

இது சில தந்திரங்கள், சட்டங்கள், ஒப்பந்தங்கள் மூலம் மாற்று வழிகள் கண்டு வங்கிகளையும் அரசையும் நண்பர்களாக்கி விட்டது.

மத்திய வங்கிகள், தனியார் வங்கிகளுடன் உடன்பாட்டுக்கு வந்தன.

தனியார் வங்கிகள் தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தின் 90 சத வீதம் வரை வாடிக்கையாளர்களுக்குக் கடன்கள் கொடுக்கலாம்.

மத்திய வங்கி (அதாவது அரசு வங்கி) பண நோட்டுக்களை அச்சடிக்கும். நாணயங்களை வார்க்கும்.

தனியார் வங்கிகள் உருவாக்கப் போகும் கடன்களை, இந்தப் பண நோட்டுக்களாக, நாணயங்களாக வாடிக்கையாளர்களுக்குக்  கொடுக்கலாம். இல்லாவிட்டால் அவர்களின் கணக்கில் வரவு வைக்கலாம்.

நாளாந்தம் எவ்வளவு பண நோட்டுகள் தேவை? நாணயங்கள் தேவை? சொல்லி அனுப்புங்கள். அல்லது டெலிபோன் பண்ணுங்கள். உங்கள் வங்கி வாசலுக்கே கொண்டு வந்து தருகிறோம்.

எல்லாருக்கும் மகிழ்ச்சி. நம்மைத் தவிர.

மத்திய வங்கி இப்போது சகல கலா வல்லவன் ஆகிவிட்டது. சகல அதிகாரங்களையும் வைத்திருக்கும் ஒருவர் எப்போதும் மற்றவர்களைத் தனக்குக் கீழ்மட்டத்தில் தான் வைத்திருக்க ஆசைப்படுவார் இல்லையா?

அதைத் தான் மத்திய வங்கியும் செய்து கொண்டே இருக்கிறது. பணப்  பாவனையில் எப்போதுமே ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.

பொருளாதாரப் பேராசிரியர்கள் ஜாக்சனும் மக்டொனால்டும் சொல் கிறார்கள்: அது மட்டுமல்ல . சர்வதேச நாணய சந்தையிலும், எல்லா நாட்டு மத்திய வங்கிகளும் தம் பணத்தை ஒரு சார்பு நிலை பற்றாக்குறை நிலையில் (relatively in shortage) வைத்திருக்க விரும்புகிறார்கள். 

இந்த செயற்கையான தட்டுப்பாடு, மக்களிடையே, வங்கிகளின் இடையே போட்டியை உருவாக்குகிறது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வை  உண்டாக்குகிறது. கூட்டுறவை அல்ல.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம். மத்திய வங்கி இப்படி ஆட்டம்  போட்டால், நாம் ஒட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்தினோமே. அந்த அரசியல்வாதிகளுக்கு இது தெரியாதா?

தெரியும். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவது நாலோ அல்லது ஐந்து ஆண்டுகள். எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ, எப்போது இவர்கள் காலை வாரிவிடலாம் என்கிற சிந்தனையில் இருப்பவர்கள்.

நான் தான் இந்த நாட்டை ஆளத் தகுதியான ஆள் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். எல்லாரும் என்ன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியா?

அடுத்து, அநேகமாய் பெருவாரியான அரசியல்வாதிகளுக்குப் பணம் பற்றி  எதுவுமே தெரியாது. மத்திய வங்கி ஆட்கள் ரொம்பப் படித்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். நாம் ஏன் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்?

அரசியல்வாதிகளில் சட்டம் படித்தவர்கள் அல்லது வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இருக்கலாம். சிலருக்கு பொருளியல், பண அமைப்பு போன்ற துறைகளில் அறிவு இருந்தாலும், பழைய பொருளியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்கள் அவர்கள்.

சிலருக்கு  இருக்கும் அமைப்பை சீரமைப்பு செய்தால் போதும் என்கிற நினைப்பு.

சிலருக்கு திட்டமிட்ட பொருளாதாரத்துக்குள் (கம்யூனிச நாடுகளின் பண அமைப்பு) போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நினைப்பு.

சிலருக்கு இந்த அமைப்பை மாற்றவேண்டும் என்று தோன்றினாலும், எப்படி என்பதில் ஒரே குழப்பம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களுக்கே பணம் பற்றிய புரிதல் இல்லை.

வட்டி 

வட்டி, இன்றைய பணத்தின் அடித்தளம்.

புகழ்பெற்ற இயற்பியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், பிரபஞ்சத்தின் மிகவும் சக்தி வாய்ந்த விசை எது? என்று ஒரு  செய்தியாளர் கேட்டாராம்.

பூமியின்  ஈர்ப்பு விசை அல்லது அணுவைப் பிளக்கும் போது பீறிட்டு வெளிவரும் சக்தி.. இப்படி ஏதோ ஒன்றை சொல்லப் போகிறார் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க, ஐன்ஸ்டீன் ஒரே வார்த்தையில் சொன்னாராம்: கூட்டு வட்டி.

அந்த செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது. இருந்தாலும் வட்டியின் சக்தியை, அதன் வலுவை சாதாரணம் என்று நினைத்துக் கடந்து போய்விட முடியாது என்பதை இது காட்டுகிறது.

பணத்துக்கு வட்டியே வாங்கக் கூடாது என்று எல்லா மதங்களுமே போதனை செய்திருக்கின்றன. 15 நூற்றாண்டுகளாக அய்ரோப்பிய நாடுகளில் வட்டிக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.

அதை 1545 களில் முடிவுக்குக் கொண்டுவந்தவர் இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் ஹென்ரி. வட்டியை சட்டமூலம் உறுதி செய்தவர் இவர்.

கத்தோலிக்க திருச்சபை, வட்டி என்பதை 19 ம் நூற்றாண்டு வரை கடுமையாக எதிர்த்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக பல தகவல்கள் உண்டு. வட்டி வாங்குபவர்களை திருச்சபையின் சமூகத்தில் இருந்தே தள்ளி வைத்துவிடுவது (Excommunication) வழக்கமாக இருந்தது.

ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு நகர்கிறோம்.

1822 ம் ஆண்டளவில், பிரான்சின் லியோன் நகரத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணி, அந்தத் தண்டனையில் இருந்து விதிவிலக்கு தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் பணத்துக்கு வட்டி வாங்கியவர் என்று ஆதாரங்கள் இருந்தன. ஆகவே முடியாது என்கிற பதிலோடு…

இன்னொரு வரியும் திருச்சபை சேர்த்திருந்தது: அவர் இதுவரை வாங்கியிருந்த வட்டித்தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டால் அவருடைய மனுவை மீளாய்வு செய்யத் தயாராய் இருக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில், வட்டி என்பதில் உங்களின் கொள்கை என்ன என்று கேட்டால் திருச்சபை பதிலே சொல்லாமல் அமைதியாக இருக்கிறது.

இன்றைய பணத்தின் உள்ளே இருந்தபடி, வட்டி செய்யும் தில்லுமுல்லுகள்  வெளியே தெரிவதில்லை. அது மிக நுண்ணிய முறையில், அப்பாவி போல் வேடம் போட்டு ஆட்டம் போடுகிறது. ஆகவே மக்கள் அதன் சுயரூபத்தைப்  புரிந்து கொள்வது அபூர்வம்.

(தொடரும்..)