என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

மனிதன் நிலவில் இறங்கியது உண்மை அல்ல. அரிசோனா மாநிலத்தின் ஒரு வனாந்தரத்தில் கச்சிதமாய் நடிக்கப்பட்ட ஒரு நாடகம் அது. அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், அன்றைய துணை அதிபரின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார். அதிபர் ஒபாமா கென்யாவில் இருந்து வந்த ஒரு பக்கா கம்யூனிஸ்ட். தேர்தல்கள் எல்லாமே ஏமாற்று வேலைகள் ...

முக்கிய நிகழ்வுகளின் பின் உள்ள காரணங்களைத் தோண்ட ஆரம்பித்தால் நிச்சயம் அவற்றின் அடியில் சதி வலைகள் இருப்பது தெரியும். சூழ்ச்சிக்காரர்கள் இயங்குவது உண்மை. முழு உலகையும் ஆட்டிப் படைக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுத்தப் பினாத்தல்? அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். கேள்வி: 2001 செப்டெம்பர் 9ந் தேதி விமானங்கள் மூலம் நியூ யார்க் நகரின் பிரம்மாண்ட உலக வர்த்தக மய்யம் (World Trade Center) அழிக்கப்பட்டதே. யார் செய்திருப்பார்கள்?

எப்படி சொல்ல முடியும்? அரசாங்கமே கமுக்கமாய் இருக்கிறது. விளக்கமோ நம்பக்கூடிய மாதிரி இல்லை. இது ஒரு உள்ளடி வேலையாகக் கூட இருக்கலாம் . இப்படி பதில் சொன்னவர்கள் அதே அமெரிக்கர்கள். அதுவும் 50 விழுக்காடு.

இன்னொரு கேள்வி : பருவநிலை மாற்றம் (climate change ) என்கிறார்களே. உண்மையா? அதெல்லாம் கப்ஸா. நாங்க நம்பமாட்டோம் என்று சொன்ன அமெரிக்கர்கள் 25 சத விகிதம்.

இதெல்லாம் ஒரு கேள்வி பதிலா? 2013 ல் ஒரு க.கணிப்பு நடந்தது. தன் உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒரு பாம்பு இனம் இருக்கிறது. அது மனித உருவில் இந்த உலகில் நடமாடுவதாக நிச்சயமாய் நம்புகிறோம் என்று அடித்து சொன்னவர்கள் சுமார் 12 மில்லியன் மக்கள். (கிட்டத்தட்ட அந்த நாட்டு மக்கள் தொகையின் 4 விழுக்காடு.)

இருக்கும். இருக்கும். எங்களுக்கும் சந்தேகம் இருக்கு. ஆனால் நிச்சயமா சொல்ல முடியலியே என்று கவலைப்பட்டவர்கள் 7 விழுக்காடு.

ராப் பிரதர்டான் (Rob Brotherton) அவரின் Suspicious Minds, Why We Believe Conspiracy Theories என்கிற நூலில் இப்படி நிறைய கசாமுசாக்களுடன் துவங்குகிறார். துவங்கி நாம் அல்லது நம்மில் பலர் ஏன் நம்புகிறோம் என்று உளவியல் ஆய்வில் இறங்குகிறார்.

நினைவிருக்கட்டும். மேலே சொன்ன இந்த மதிப்பீடுகள் எல்லாம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. கேள்விகளை யார் கேட்கிறார்கள்? எந்த சூழ்நிலையில்? எப்போது கேட்கிறார்கள்? – இப்படிப் பல பரிமாணங்களில் இவை தங்கி இருக்கின்றன.

இது போல சுவாரஸ்யமான தகவல்கள், நம்பிக்கைகள் சில உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்குமே. அவ்வளவு தூரம் ஏன்? இதை வாசிக்கும் நீங்களே அவர்களில் ஒருவராய் இருக்கக்கூடும் அல்லது ரெண்டும் கெட்டானாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்? – தொடர்கிறார் அவர்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் ஒரு சோதனை நடத்தினார்கள். ரகசியமாய் இயங்கும் அதிகாரம் மிக்க குழு ஒன்று (பேர் : New World Order) உலகம் முழுவதையும் தன் கைக்குள் கொண்டு வர திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது என்று ஒரு பாரா (ச்சும்மா!) எழுதப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

ஒரு வித்தியாசம் : ஒரு குழுவுக்கு பிரகாசமான எழுத்துரு ஒன்றில் (font : Arial) பாரா எழுதப் பட்டிருந்தது. மற்ற குழுவுக்கு சாய்வான, வளைவான, மங்கலான எழுத்துரு ஒன்றில் இருந்தது. இரண்டு குழுக்களும் வாசித்தபின் இதை நம்பலாமா என்று கேள்வி கேட்கப்பட்டது. Arial எழுத்துரு குழு நம்பலாம் என்றார்கள். மற்ற குழுவினர் சந்தேகமா இருக்கு என்றார்கள்.

ஒரே செய்தியை ஏன் நம் மனசு மாற்றி மாற்றிக் குழப்புகிறது? நூலாசிரியர் நம்மை ஈகில்மெண்ட் (David Eaglement) என்கிற மூளை நரம்பியல் நிபுணரிடம் இழுத்துக் கொண்டு போகிறார். (புத்தகம் முழுக்க பல நிபுணர்களிடம் நாம் போகிறோம்.)

ஈகில்மெண்ட் சொல்கிறார் : நம் மூளையின் செயல்பாடுகள் பற்றி எதுவுமே சரியாகச் சொல்ல முடியவில்லை. மற்ற உறுப்புகளுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. தானே இயங்குகின்றன. அப்டி செய். இப்டி செய் என்று யாரும் அட்டகாசம் பண்ணுவதில்லை.

ஆனால் மூளை அப்படி அல்ல. அதாவது “நான்” என்கிற தன்னுணர்வு மில்லியன் கணக்கான நியூரான்களின் தொடர்பில் முதலில் உருவாகிறது. அடே! நான் இருக்கிறேன். அமைதி அடைகிறோம். அந்த உணர்வை உண்மை என்று நம்புகிறோம்.

அடுத்த கட்டம் : எல்லாரும் (மற்ற எல்லா உறுப்புகளும்) என் மேற்பார்வையில் தான் இயங்குகிறார்கள். தெரிஞ்சிக்கோ! – என்கிறது அந்த உணர்வு. நம்புகிறோம்.

இதே கருத்தை கானேமன் (Daniel Kahnemann) என்கிற புகழ் பெற்ற உளவியலாளரும் ஆமோதிக்கிறார். அவர் சொல்கிறார்: ஒரு திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் சில நிமிடங்களே வந்து போகும் ஒரு துணை நடிகர், நான் தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதே. அதே.

சூழ்ச்சிக்காரர்கள் இருக்கிறார்கள். நம்மைக் கவிழ்த்துவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சதிகள் நடக்கின்றன என்கிற சிந்தனைகள், பயம் அத்தனைக்கும் பின்னே இருப்பது இந்த “நான்”.

இந்த சதிக் கோட்பாடுகள் (conspiracy theories) ஏன் மிகவும் பிரபலமாக இருக்கின்றன? அவை உண்மையாய் இருக்கலாமா இல்லையா என்று ஆராய்வது என் வேலையல்ல என்று முதலிலேயே எச்சரித்து விடுகிறார் நூலாசிரியர். ஏன் அவை உருவாகின்றன? ஏன் நம்புகிறோம்? இது தான் கேள்விகள் என்கிறார்.

சகோ (சதிக் கோட்பாடு) உற்பத்தி அநேகமாய் எல்லார் வீட்டிலும் குடிசைக் கைத்தொழில் ரேஞ்சுக்கு நடக்கிறது. மற்ற வீடுகளில் இருந்து வரும் உற்பத்தியையும் நம்மோடு சேர்த்து இன்னும் புதுவித லேட்டஸ்ட் சகோக்கள் சுடச்சுட உருவாகின்றன. சகோக்கள் நம் உடன்பிறப்புகள். சந்தேகம் என்பது நம்மோடு கூடப் பிறந்தது. தவிர்க்கவே முடியாதது.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

சமூக வலைத்தளங்களில் தான் சகோக்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன என்று நம்பிவிடக்கூடாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னேயே வெற்றிநடை போட்டு மனித வரலாற்றையே புரட்டிப் போட்டதில் அவைகளுக்குப் பெரும் பங்குண்டு.

ரோமர்களின் ஆட்சிக்காலம் சகோக்களின் பொற்காலம் என்று சொல்லலாம். ஒரு உதாரணம் : கி.மு. 64 ம் ஆண்டு ஜூலை 14ந் தேதி நடந்த சம்பவம் இது. அன்றைய ரோம சக்கரவர்த்தி நீரோ ரோமிலிருந்து 36 மைல்கள் தள்ளியிருந்த ஒரு ஊரில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று தலைநகரத்தில் பெருந்தீ!

நகரத்தின் அரைவாசி மக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. இறந்தோர், காயம் பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காமலேயே போய்விட்டது. அன்றைய ரோம வரலாற்று ஆசிரியர் டசீட்டஸ் (Tacitus) இப்படி எழுதுகிறார் : சக்கரவர்த்தி வேகவேகமாய் ஓடிவந்தார். வந்ததும் முதல்வேலையாய் நிவாரண உதவிகள், மற்றும் அவசர பணிகளை உடனடியாய் ஆரம்பித்தார்.

இது நடந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னோர் வரலாற்றாசிரியர், சக்கரவர்த்தி நீரோவின் ஆணையின் பேரில் தான் தீ வைக்கப்பட்டது என்கிறார். 165 ஆண்டுகளின் பின் இன்னொருவர் எழுதுகிறார் : சக்கரவர்த்தி நீரோ தன் கையாலேயே தீ வைத்து ஆட்டத்தை ஆரம்பித்தார்!

அடுத்து இலுமினாட்டி விவகாரம். இது இன்றும் சமூக வலைத்தளங்களில் இளமை குன்றாமல் வலம் வருகிறது. 1772 களில் இந்த இயக்கம் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது. துவங்கியவர் : ஆடம் வைஷாப்ட் (Adam Weishaupt) என்கிற ஜெர்மானியர்.

நாட்டில் நடக்கிற விஷயங்கள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை. சிஸ்டம் சரியில்ல. எல்லாத்தயும் மாத்தணும் மாத்தணும் என்று யோசித்தவர் ரகசியமாகவே தன் இயக்கத்தை ஆரம்பித்தார். (அந்தக் காலத்தில் அரசுகளுக்கு எதிராய்ப் பேசுவது, மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட, பேசாமல் தற்கொலை செய்து கொள்வது நல்ல உத்தி என்று எல்லாரும் நம்பினார்கள்.)

இயக்கத்தில் சேர்பவர்கள் எதுவுமே வெளியே சொல்லக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட 300 பேர் சேர்ந்தாலும் யாரோ ஒரு கிறுக்குப் பயல் விஷயத்தை வெளியில் கக்கிவிடவே, தலைவர் பார்த்தார். இனியும் மவுனமாய் இருந்தால் ஆபத்து என்று தெரிந்தது. தானே போய் அதிகாரிகளிடம் சரணடைந்தார். தப்பிவிட்டார். ஆனால் பெருவாரி மக்களுக்கு இது பிடிக்கவில்லை. அதெப்டி? புகை என்று இருந்தால் நெருப்பு இல்லாமலா இருக்கும்?

இது நடந்து கொஞ்சநாளில் பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற பிரஞ்சுப் புரட்சி துவங்கியது. அந்த சமயத்தில் அந்நாட்டின் இரண்டு பிரபலங்கள், புரட்சிக்குப் பின்னால் இலுமினாட்டி இருக்கிறது என்று (தெரிந்தோ தெரியாமலோ) எழுதப்போக, விஷயம் கைமீறிப் போய்விட்டது. காரணம் : அந்த இயக்கத்தின் நோக்கமே அரசு, சமயங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு புது யுகம் படைக்க வேண்டும் என்று தெளிவாக இருக்கும்போது வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்றைய பாப் யுகத்தில் பாடகர்கள் எப்போதும் பரபரப்பாக இயங்காவிட்டால் வீட்டுக்குப் போய் ஒப்பாரி வைக்க வேண்டிய அவலம் நேரலாம். அவர்களின் உடலமைப்பில் மட்டுமே கவர்ச்சி இருந்தால் போதாது. பாடல்களிலும் கிக் இருக்க வேண்டும். மடோனா, லேடி ககா, ஜே இசட், கான்யே வெஸ்ட் ..என்று இன்று ஒளிவிடும் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் நாங்களும் இலுமினாட்டி தாங்க என்று அப்பப்போ (பாடல்களில்) குறிப்பிடும்போது நம்பாமல் இருக்க முடியுமா என்ன?

இதய சுரங்கத்தில் எத்தனை கேள்வி

பதில் தெரியாத கேள்விகள் எத்தனையோ இருக்கின்றன. கேட்டுப் பதில் வராதவையும் அத்தனை இருக்கின்றன.

எங்கெல்லாம் அரசு வெளிப்படைத்தன்மை இன்றி செயல்படுகிறதோ அங்கெல்லாம் சகோக்கள் தானாகவே உருவாகின்றன. நாட்டின் முக்கிய நிகழ்வுகளை அரசு கையாளும் விதத்தை மக்கள் கூர்மையாகக் கவனிக்கிறார்கள்.

சில சமயங்களில் அரசு நேர்மையாக நடந்தாலும் நிர்வாக எந்திரம் (அதிகாரிகளின் செயல்பாடுகள்) நோக்கத்தை மழுங்கடித்து விடுகிறது.

அமெரிக்காவின் அன்றைய அதிபர் நிக்சன் பதவி இழந்ததன் காரணம் அறிந்திருப்பீர்கள். (வாட்டர்கேட் ஊழல்). நிக்சன் அந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் என்பது சரி தான். இருந்தாலும் நிக்சனின் அன்றைய ஆலோசகரும் அமெரிக்காவின் பெரும் பணக்காரரான நெல்சன் ராக்பெல்லர் வேண்டுமென்றே அதிபரைப் பதவியில் இருந்து இறக்கிவிட செய்த சூழ்ச்சியாக அது ஏன் இருக்கக்கூடாது?

நிக்சனின் வெளிவிவகார அமைச்சர் கிஸ்ஸிங்கர். நிக்சன் என்ன பெரிய அறிவாளியா இல்லை திறமை உள்ளவரா? நம்ம கிஸ்ஸிங்கர் மாதிரி வருமா? என்னா சாணக்கியத்தனம்! என்னா அறிவு! மக்களும் பத்திரிகைகளும் கொண்டாடிக் கொண்டிருந்தார்களே. ஏன் அந்த சாணக்கியர் கிஸ்ஸிங்கரே நிக்சனை மாட்டி விட்டிருக்கலாமே.

அல்கைதா தலைவர் ஒசாமா பின் லாடனை அமெரிக்கர்கள் தேடிப்பிடித்துக் கொலை செய்ததாக பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி நம்புவது? ஏன் அந்த இயக்கத்தில் ஏற்பட்ட உள்குத்துக்களால் அவர்களே தலைவரைத் தீர்த்துக் கட்டியிருக்கலாமே?

அதிபர் ஜான் கென்னடி கொலை வழக்கில் என்ன தான் அமெரிக்க அரசு ஒரே ஒருவர் தான் (லீ ஓஸ்வால்ட் ) கொலையாளி என்று கமிஷன்கள் நியமித்து பைல்களை மூடிவிட்டாலும் கேள்விகள் இருக்கின்றனவே.

கென்னடியின் துணை அதிபர் லின்டன் ஜான்சன் திட்டம் தீட்டி இருக்கலாம். அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ செய்திருக்கலாம். அவர் இருந்த வண்டியின் டிரைவர் சுட்டிருக்கலாம். ஏன் அவர் மனைவி ஜாக்குலினே முடித்திருக்கலாமா இல்லையா?

பதில் இல்லாத கேள்விகள். ஆச்சரியம் என்னவென்றால் இதில் குற்றம் சுமத்தப் பட்டவர்கள் யாருமே முன் வந்து நல்லா கேட்டுக்கங்க. நாங்க செய்யல செய்யல என்று சொல்லவே இல்லை.

உண்மையோ பொய்யோ எதுவும் திட்டவட்டமான கருப்பு அல்லது வெள்ளை போலத் தெரிவதில்லை. சகோக்கள் ஒரு விஷயத்தில் தவறு செய்கின்றன. இல்லாத எதிரிகளை உருவாக்குவதனால் அந்த நோக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றன. இல்லாத எதிரியை எப்படி வீழ்த்துவது? சகோக்களைத் தோற்கடிக்க நினைப்பவர்கள் சிந்திக்க வேண்டியது இது என்கிறார் நூலாசிரியர்.

நீதிக்குத் தலைவணங்கு

சமுதாயம் குளறுபடிகள், அநியாயங்கள் நிறைந்தது. குற்றங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? அவர்களைப் பிடித்துத் தண்டனை கொடுக்காமல் வேறென்ன வேண்டிக் கிடக்கிறது?

எவ்வளவு பெரும் குற்றங்கள் இழைத்தாலும் தப்பி விடுகிறார்களே சில சாத்தான்கள்? சில சமயங்களில் வேறு யாராவது ஒருவர் மேலோ அல்லது ஒரு குழுவின் மேலோ பழி போடப்படுகிறதே. அது மட்டுமா? விசாரணை செய்கிற ஆட்களுக்கு அறிவே இல்லையா? தாங்க முடியலியே. நமக்குத் தெரிகிற கோணம் அந்த எருமைகளுக்கு ஏன் தெரியவில்லை?

நீதி, ஒழுக்கம் நமக்கு மிக முக்கியம். இல்லாவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்று நாம் நினைக்கும்போது நம் மூளை நுணுக்கமாக சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சகோ உருவாகிறது.

கென்னடியைக் கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட வாரன் கமிஷன் (Warren Commission) முன் சாட்சியம் சொன்னவர்களில் 81 சத வீத ஆட்கள் மூன்று வேட்டு சத்தங்கள் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். மிகுதிப்பேர் 4 அல்லது 5 வேட்டுக்கள் கேட்டதாக சொன்னார்களே? யார் சொன்னது சரி? கமிஷன் எல்லாரையும் விசாரித்தார்களா அல்லது பெரும்பான்மை சொன்னதை உண்மை என்று நம்பினார்களா?

விசாரணை முடிவுகள் எப்படி இருந்தாலும் அதில் குற்றம் குறைகள் இருப்பதாகவே நம் மூளை நினைக்கிறது. தவறுகளைத் தேட ஆரம்பிக்கிறது. சகோக்கள் உருவாகின்றன. அவை உண்மையாக இருக்கலாம் அல்லது வெறும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சாத்தியக்கூறுகளை மறுக்க முடிமா?

அறிவியலாளர்களில் ஒரு குறிப்பிட்ட என்ணிக்கையில் இருப்பவர்கள் கூட சில சகோக்களை நம்புகிறார்கள் என்கிறார் நூலாசிரியர். சிலர் அவரின் நண்பர்கள். பறக்கும் தட்டுகள், வெளியுலக மனிதர்கள் பற்றிய விவரங்களை நாசா நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கிறது என்று நம்பும் ஒரு சில அறிவியலாளர்களை மேலும் சுட்டிக் காட்டுகிறார்.

நீங்களும் நானும் கூட அனாயாசமாக சகோக்களை உருவாக்கி உலாவ விடலாம். ஆனால் நேர்த்தியான, தர்க்க ரீதியான, அறிவியல் ரீதியில் சகோக்களை உருவாக்கிட கொஞ்சமாவது சித்தப்பிரமை பிடித்திருக்க வேண்டும்.

கிறுக்குத்தனம் நிறைந்தவர்களால் தான் அந்தத் துறையில் கொடி கட்டிப் பறக்க முடியும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் தருகிறார் நூலாசிரியர். அறிவு ஜீவிகளின் மேதைமை எவ்வளவுக்கு எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல இவர்களின் திறமை. ஆனால் அறிவியலாளர்களே தயங்கும் களத்தில் துணிச்சலோடு இறங்கி சோதனைகள் செய்து பார்க்கக் கூடியவர்கள் இந்தக் கில்லாடிகள்.

இது ஒரு பக்கம் இருக்க, நம்புகிற பேர்வழிகள் யார் என்றால் அநேகமாய் பேய் பிசாசுகள், சாமியாட்டம், ஜோசியம், கர்மவினை, அடுத்த பிறப்பு போன்ற விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் யோசிக்கவே மாட்டார்கள். உடனடியாகவே ஆமா. எனக்கு எல்லாந் தெரியும் என்கிற நினைப்பு உள்ளவர்களையும் இதில் சேர்க்கலாம்.

ஏன் நாம் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஜேம்ஸ் பாண்ட், வொன்டர் உமன் என்றால் விழுந்தடித்துப் பார்க்கிறோம்? தனி மனிதர்களாக இவர்கள் பேராசை பிடித்த பெரு நிறுவனங்களுக்கு எதிராகப் போரிட்டு வெல்கிறார்கள். மேலும் உலகத்தையே காலடியில் போட நினைக்கிற New World Order மாதிரி வில்லன்களை போட்டுத் தள்ளும்போது நமக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை.

சகோக்களில் பெருவாரி இந்த ரகத்தை சேர்ந்தவை. இந்த நாசமாப்போன பயலுகளை நம்மால் அடிக்க முடியலியே. நீ அடிரா ராஜா. நீயும் பறந்து பறந்து அடி ராணிம்மா!

நாம் ஹீரோக்களைப் பார்த்து விசிலடிப்பது மட்டுமல்ல பயங்கர மனிதர்களையும் ரசிக்கிறோம் என்று மிரள வைக்கிறார் போமிஸ்டர் (Baumister) என்கிற உளவியலாளர்.

உதாரணத்துக்கு, ஜெர்மனியின் ஹிட்லர், கம்பூச்சியாவின் பொல் பொட் போன்ற பயங்கர கொலைகாரர்களின் வரலாறு சொல்லும் புத்தகங்களை இன்றும் மக்கள் ரசித்து வாசிக்கிறார்கள். அவர்கள் பற்றிய படங்கள் செமையாய் ஓடுகின்றன. ஏன்?

தப்புகள் செய்கிறவன் எங்கே எங்கே என்று மனம் தேடிக்கொண்டே இருக்கிறது. அவனைப் பிடித்துத் தண்டனை கொடு கொடு என்கிற தாளாத அரிப்பு நம் மனதில் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த வக்கிரங்களை இரை மீட்டி கடைசியில் அவனுகளப் போட்டுத் தள்ளிட்டமா இல்லியா? நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். ஒரு ஆறுதல். தற்காலிக ஆறுதல்.

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

செடிகள் ஆடுகின்றன. அவை சும்மா ஆடாதே? காற்றடிக்கிறது. எதையும் நிலத்தில் தூக்கிப் போட்டால் விழுகிறது. சும்மா விழாதே? புவி ஈர்ப்பு.

ஒன்று நடந்தால் அடுத்து இப்படி நடக்கும். குழந்தைப் பருவத்தில் இருந்து நம் மூளை இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துப் பதிந்து வைத்துக் கொள்கிறது. வயது ஏற ஏற இன்னும் இன்னும் ஏராளமான தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறது.

தானாகவே நம் மூளை எல்லாவற்றையும் ஆராய்வதில்லை. வீட்டிலே, பள்ளியிலே பல்கலைக்கழகத்தில், வாழ்க்கையில் கிடைக்கும் தகவல்களை ஒவ்வொன்றையும் உண்மை என்று நாம் சோதித்துப் பார்த்தா ஏற்றுக் கொள்கிறோம்?

மூளை வேலை செய்யவேண்டும் என்றால் சக்தி தேவை. வேலை மெனக்கெட்டு எல்லாவற்றையும் பரிசோதனை செய்யப் போனால் அளவிட முடியாத சக்தி தேவைப்படும். மூளைக்கே அத்தனை சக்தியும் போய்விட்டால் மற்ற உறுப்புகள் எப்படி வேலை செய்வது? சுருக்கமாய் சொன்னால் உயிர் வாழ்வதே கேள்விக் குறி ஆகிவிடும்.

இயற்கை சாமர்த்தியமாய் இதை சமாளிக்கிறது. ஏற்கெனவே சேகரித்த தகவல்களில் இருந்து (இந்த நிமிஷம் உட்பட) நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கிறது. முடிவுக்கு வருகிறது. சக்தியும் அதிகம் விரயமாவதில்லை.

ஒரு நிகழ்வைப் பல கோணங்களில் இருந்து பார்த்ததனால் கிடைத்த தகவல்களையும் மூளை சேமித்து வைத்திருக்கிறது. ஆகவே எந்த வினைக்கும் மேல் சொல்லப்பட்ட களஞ்சியத்தில் இருந்து ஒன்றை எடுத்து எதிர்வினை ஆற்றுகிறோம்.

அது சரியாக இருக்கலாம் அல்லது அடிமுட்டாள்த்தனமாய் இருக்கலாம். மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, மூளை இந்த உத்தியைக் கையாண்டு வருகிறது. அதே அந்தக் காலத்துக்குப் போவோம். ஒரு மனிதனுக்குப் பசிக்கிறது. உணவு தேடுகிறான். ஒரு புதர் அசைகிறது. அது மானாக இருந்தால் அவன் பசி தீர்ந்திருக்கும். புலியாய் இருந்தால் அதன் பசி தீர்ந்திருக்கும். ஆகவே எடுக்கும் முடிவுகளும் முக்கியமானவை.

தகவல்கள் தேடுதல் வாழ்வு முழுக்க நடந்து கொண்டே இருக்கிறது. தகவல்களில் தவறுகள் என்று தெரிந்தால் திருத்தங்கள் நடக்கின்றன. முழுக்கத் தவறு என்றால் அழிக்கப் படுகின்றன. அதிகமாக உபயோகிக்கப் படவில்லை என்றாலும் அழிக்கப் படுகின்றன.

ஒரு நிகழ்வுக்குப் பல காரணிகள் இருக்கலாம். சகோக்கள் உருவாகிறார்கள். எது சரி, தவறு என்பதை விட, அவை நமக்கு எப்படி உதவுகின்றன என்கிற புள்ளிக்கு வருகிறார் நூலாசிரியர்.

ஒரு நிகழ்வு மட்டுமல்ல பல நிகழ்வுகளை ஒன்று சேர்ப்பதிலோ அல்லது அவற்றில் இடையில் உள்ள தொடர்புகளையும் கோடிட்டுக் காட்டும் சூட்சுமத்திலும் சகோ முன்னிற்கிறது.

அறிவியலுக்கும் அது தான் அடிப்படை. இந்த சிந்தனை நுணுக்கங்கள் இல்லாவிட்டால் நாம் இன்னும் குகைகளில் வாழ்ந்திருப்போம். நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் இருந்திருக்காது.

அதுக்காக, அநியாயத்துக்கும் எல்லாரும் சகோக்கள் உருவாக்க முனையுங்கள் என்று நூலாசிரியர் சொல்லவில்லை. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

உள்ளத்தில் நூறு நினைத்தேன்

அது பெண்டாட்டி புருஷனாக இருக்கட்டுமே. காதலி அல்லது காதலனாக இருக்கட்டுமே. அதுக்கும் மேலே பஸ்ஸிலே, ரயிலிலே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற ஆளாக இருக்கட்டுமே. இந்த நிமிஷம் மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது நம் ஒவ்வொருவர் மனசிலும் குறுகுறுக்கும் கேள்வி.

மனிதர்களின் அத்தனை நடப்புகளுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று நம் மனம் நம்புகிறது. அதற்கென்று ஒரு கருவியை நம் மனசு வைத்திருக்கிறது. இது நோக்கம் கண்டுபிடிக்கும் கருவி. சிலருக்கு சூப்பராய் வேலை செய்யும். சிலருக்குத் தப்புத் தப்பாய் வேலை செய்யும். ஆபத்திலும் மாட்டிவிடும்.

அதோ அவர் ரொம்ப சோகமாய் இருக்கிறார். காரணங்கள் : அவர் பெண்டாட்டி ஏசியிருக்கலாம். அவர் காதலி பைபை சொல்லியிருக்கலாம். பண நெருக்கடியாக இருக்கலாம். இன்னும் எத்தனையோ இருக்கலாம்.

இதெல்லாம் நம் மனசுக்கு எப்படித் தெரியும்? நம் வாழ்க்கையில் நடந்த, பார்த்த, கேட்ட நிகழ்வுகளை காணொலிக் காட்சியாகப் பதிவு செய்து படத்தை ஓடவிட்டுப் பார்க்கிறது. அதுவும் கடைசிக் காட்சியில் இருந்து முதல் காட்சிக்கு ஓட விடுகிறது.

உதாரணமாய், பெண்டாட்டி மேட்டரை எடுப்போமா? கடைசி வினாடியில் அவர் முகம் படு பரிதாபமாக இருக்கிறது. மனைவி விளாசித் தள்ளுகிறார். அவர் குரல் உச்சகட்டத்தில் முழங்குகிறது. நடுப்பகுதியில் மனைவியின் சத்தம் குறைந்திருக்கிறது. கணவர் முகத்தில் ஓரளவே சோகம் தெரிகிறது. முதல் வினாடிக்கு வந்துவிட்டோம். கணவர் முகத்தில் சிரிப்பு. மனைவி சிரிக்காவிட்டாலும், உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று ஆரம்பிக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர் டல்லாய் இருப்பதன் காரணம் : மனைவி கொடுத்த டோஸ். இப்படிப் பல கட்டங்களை நம் மனசு பதிந்து கொள்கிறது. பின்னால் எந்த சோக மூஞ்சிகளைப் பார்த்தாலும் இப்படி நடந்திருக்கலாம் அல்லது அப்படி என்று பதிந்த எல்லாப் படங்களையும் போடுகிறது. இதுவாக இருக்கலாம் என்று ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்கிறோம். (அது சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.)

நோக்கம் கண்டுபிடிக்கும் கருவி இல்லாவிட்டால் நம்மால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாய் உங்கள் கருவி அணைக்கப் பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அறுவை சிகிச்சை அறையில் இருக்கிறீர்கள். அங்கே நடக்கும் விஷயங்களைப் பார்த்ததும் அய்யோ கொலை! – நீங்கள் கத்தியிருப்பீர்கள்.

அறுவை சிகிச்சை நோயாளியைக் காப்பாற்றுவதற்காக அது என்று உங்களுக்குத் தெரியாது. அது பற்றி அறிந்ததில்லை. வயிற்றில் இருக்கும் கட்டியை அகற்றத் தான் வயிற்றைக் கீறினார்கள். ரத்தம் வரத்தான் செய்யும். சிகிச்சை முடிந்தபின் தைத்துவிடுவார்கள். நோயாளி சுகமாகி விடுவார்.

இந்த ஒழுங்கு அல்லது வரிசைக் கிரமத்தை உங்கள் மூளை ஏற்கெனவே அறிந்திருந்தால் உங்களைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போயிருக்க மாட்டார்கள். முடிவில் இருந்து துவக்கத்தை நோக்கி ஓடும் படங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல மிக மிக அவசியமானவை.

குழந்தைப் பருவத்தில் இந்தக் கருவி பொதுவாக வேலை செய்யாது. வயது ஏற ஏறத்தான் காரணங்களை எடை போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறது அது. வண்டிகள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் சாலையைக் கடக்க குழந்தைகள் பயப்படுவதில்லை. நாம் தான் பதறிப் போகிறோம். காரணம் : குழந்தைகளுக்கு வண்டி மோதலாம் என்று தெரியாது. மோதினால் உயிராபத்து நேரும் என்று தெரியாது. (ஒழுங்கு, வரிசை).

தற்செயலாக நடக்கும் சம்பவங்களுக்குக் கூட ஏதாவது காரணம் கற்பிக்கிறது அதே மனசு. யாரோ ஒருத்தர் அல்லது ஒரு குழு அதை நடத்தி இருக்கலாமோ? பிறகு கப்சிப் என்று இருக்கிறார்களோ?

ஐபோனோ அல்லது ஸ்மார்ட்போனோ உபயோகிக்கும் போது மக்கர் பண்ணினால் நமக்கு எப்படியெல்லாம் கோபம் வருகிறது! போட்டு உடைத்துவிடும் அளவுக்கு ரத்தம் சூடேறுகிறது. கேவலம் அது ஒரு சாதாரண கருவி. அதற்கு உயிர் இல்லை என்று ஏன் அந்த சமயத்தில் நம் மனசு சொல்வதில்லை?

சில சமயங்களில் அறிவாளிகள் கூட இதே பொறிக்குள் சிக்கி விடுகிறார்கள். முதலாம் உலகப்போர் துவங்கக் காரணமாக இருந்த ஒரு சின்ன சம்பவத்தை உதாரணம் காட்டுகிறார் நூலாசிரியர்.

அன்றைய ஆஸ்திரியாவின் ஆளுநர் பெர்டினாண்டைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியது ஒரு குழு. மனைவியுடன் போஸ்னியாவின் சரயீவோ நகரத்துக்கு விஜயம் செய்கிறார் அவர். அவர் இருந்த வண்டியின் மீது முதலாவது கொலையாளி குண்டுகளை வீசுகிறார். ஆனால் குறி தப்பிவிடுகிறது. அடுத்தவர் வீசிய குண்டோ பின்னால் வந்த வண்டியில் விழுந்து வெடிக்கிறது. குறி தவறிவிட்டதே என்கிற விரக்தியில் அவர் சயனைட் குப்பியை விழுங்குகிறார். அதுவும் வேலை செய்யாவிட்டால் என்று நினைத்து பக்கத்தில் இருந்த ஆற்றில் குதிக்கிறார். மக்களோ அவரை மீட்டெடுத்துக் காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

ஆளுநர் வண்டியை ஒட்டிய சாரதியின் மூளை வேகமாக முடிவெடுக்கிறது. வேறு பாதையால் போக வேண்டும். ஒரு குறுக்கு வழிச்சாலையில் வண்டியை வேகமாக ஒட்டிப் போய்க் கடைசியில் ஒரு ஓட்டல் அருகில் மெதுவாக நிறுத்துகிறார் அவர்.

அந்த ஓட்டலில் நான்காவது கொலையாளி தங்கி இருந்திருக்கிறார். திட்டம் எல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டதே என்கிற மனச் சோர்வில் ஓட்டலுக்கு வெளியே வந்தவர், அதே ஆளுநரும் மனைவியும் வண்டியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். உடனேயே தன் துப்பாக்கியை எடுத்து சுட்டு இருவரையும் சாய்க்கிறார். தப்ப வைத்துவிட்டேன் என்று நினைத்த சாரதி விக்கித்துப் போய் நிற்கிறார்.

அந்தக் கொலையின் எதிரொலியாய் முதலாம் உலகப்போர் துவங்கிற்று. அது இருக்கட்டும். எப்படி இந்தக் கொலை சாத்தியமாயிற்று? வரலாற்று ஆசிரியர்களே பல சகோக்களை நம்பி அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.

பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

சகோக்களில் பல ரகங்கள் உண்டு. ஒரு உயிரியல் பூங்காவில் வைரஸ் கிருமி ஒன்று பரவிற்று. மிருகங்கள் இறக்க ஆரம்பித்தன. இருந்தும் அதை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து சில மிருகங்களைக் காப்பாற்றி விட்டார்கள். ஒரு முயல் குட்டி அல்லது ஒரு கரடி தான் அந்த வைரஸுக்குக் காரணம் என்று கதையை சுருக்கிவிட்டு கேள்வி கேட்டார்கள்.

கொஞ்ச மிருகங்களே இறந்தன என்று கதை விட்டபோது அதற்குக் காரணம் முயல் குட்டி என்று பதில் வந்தது. நிறைய மிருகங்கள் பலியாகி விட்டன என்று சொன்னபோது, ஆ! அப்போ அது கரடியாகத் தான் இருக்கும் என்று பதில் கிடைத்தது.

லேமான், சின்னிரெல்லா (Leman, Cinnirella) என்கிற இரு உளவியலாளர்கள் இரண்டு கதைகள் இட்டுக்கட்டி ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். 1) ஒரு நாட்டின் அதிபர் சுடப்பட்டார். உடனடியாகவே மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். காயம் சின்னது. உயிர் தப்பிவிட்டார். 2) சின்னக் காயம் தான். ஆனால் மறுநாள் இறந்து போனார். காரணம் : மாரடைப்பு.

கேள்வி கேட்கப்பட்டது. (1) தப்பிட்டாரா? அப்போ யாரோ ஒரு தனி ஆள் இந்த வேலை செஞ்சிருக்கான். (2) என்னது செத்துப் போய்ட்டாரா? மாரடைப்பு எல்லாம் பம்மாத்து சார். இதுக்குப் பின்னால ஒரு பெரிய குழு இருக்கு. திட்டம் போட்டு நடத்திருக்காங்க. ம்ம்.

சகோக்கள் பெரிய புள்ளிகளுக்கு அல்லது முக்கிய சம்பவங்களுக்கு பெரிய கோலங்கள் போட்டுக் கவர்வது வழக்கம். சின்ன விஷயங்களுக்கு சின்னதாய் ரெண்டு மூன்று புள்ளிகளோடு முடித்துவிட்டு விர்ரென்று அடுத்த விஷயத்துக்குத் தாவுவது சாதாரணம்.

சகோக்களால் பெரும் பிரச்னைகள் உருவாகின்றன என்று கோபப்படுபவர்களை சுட்டிக் காட்டி அவர்களின் நியாயத்தையும் பதிவு செய்கிறார் நூலாசிரியர். அதே சமயம், சகோக்கள் மனிதர்களின் கற்பனைத் திறனையும் தர்க்க ரீதியான முடிவுகளை எட்டும் நேர்த்தியான நுணுக்கங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்கிற உளவியலாளர்களின் ஆய்வுகளையும் எழுதுகிறார்.

ஒரு முக்கிய புள்ளி : சில சகோக்களால் பெரும் அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்பாவி மனிதர்கள் பலியாக்கப் பட்டிருக்கிறார்கள். துயரங்களுக்கு எல்லையே இல்லாமல் போயிருக்கிறது. சகோக்களை எப்போதும் மீளாய்வு செய்து கொண்டே இருக்கவேண்டும். எத்தனை நேர்த்தியாக, லாவகமாக சகோக்கள் பின்னப் பட்டிருந்தாலும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முற்படுவதும் மிக அவசியம்.

மூன்று பேர் பேசிக் கொண்டே நடக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் மனமும் மற்றவர் என்ன நினைக்கிறார் என்று துருவிக் கொண்டே இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். அவர்கள் மட்டுமா? இந்த உலகின் 6 பில்லியன் மக்களின் மனங்களும் அது போலவே ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ளத் துடிக்கின்றன. ஆனால் அது சாத்தியமில்லையே.

அங்கே தோன்றுகின்றன சதிக் கோட்பாடுகள். தவிர்க்கவே முடியாத கோலங்கள் அவை. இல்லாவிட்டால் நாம் மனிதர்களாகவே இருக்க முடியாது என்கிறார் நூலாசிரியர்.

நான் மிகவும் ரசித்து ரசித்து வாசித்த புத்தகங்களில் ஒன்று இது.

அது சரி. அமெரிக்காவில் ஒருத்தன் கடைக்குப் போனானாம். ஒரு துப்பாக்கி வாங்கினானாம். அதுவும் கேவலம் 13 டாலராம். ஒரு கட்டட மாடிக்குப் போனானாம். அங்கே இருந்து ஆனானப்பட்ட அமெரிக்க அதிபரையே சுட்டுத் தள்ளிட்டானாம். நாங்க நம்பணுமாம். யார் காதுல பூ சுத்துரானுக?

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்

நாம் எல்லாருமே ஒரு விதமான பைத்தியங்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் ஒத்துக் கொள்ள மாட்டோம் – ஒரு சிலரைத் தவிர. என் நாடு, என் மொழி, என் மதம், என் கொடி தான் உலகிலேயே உயர்ந்தது என்கிறோம். எவனாவது கை வச்சான்னா பிச்சிருவேன் பிச்சி!

சிலர் ஷேர்ட்டை மடித்தபடி கையைத் தூக்குகிறார்கள். மற்ற நாட்டுக்காரர்கள், வேறு மொழி பேசுவோர், வேற்று மதத்தவர்கள் எல்லாரும் உங்கள் மாதிரியே சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்களே? இதைக் கேட்டதும் வீராப்பு குறைந்து விடுகிறது. ஆங், அதுவா? அது நார்மல் சார் என்று நழுவுகிறார்கள்.

நார்மல் பைத்தியங்கள்?

வன்முறையில் இறங்குவதற்கு நாம் எப்போதுமே தயாராகவே இருக்கிறோம். பிறகு ஜகா வாங்கி, சமாதானக் கொடி காட்டுகிறோம். வன்முறை நம்மோடு கூடவே பிறக்கிறதா? அல்லது சமூகம் சொல்லித் தருகிறதா?

கண்ணுக்குக் கண். பழிக்குப் பழி. இதை நாம் இன்று நேற்றல்ல, மில்லியன்கள் ஆண்டுகள் முன்னேயே துவங்கி விட்டோம் என்கிறார்கள் மானிடவியல் ஆய்வாளர்களில் ஒரு குழுவினர். வன்முறையில் இருந்து தான் மனிதனின் ஆரம்பமே துவங்குகிறது என்பது இவர்கள் வாதம்.

இல்லை. தற்காப்புக்காக, விலங்குகள் மற்றும் எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வழிமுறையாக மட்டுமே மனிதர்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தார்கள். இது இயற்கையிலேயே வந்ததல்ல என்பது எதிரணியின் வாதம்.

Sapiens இணையத்தில் பிரசுரமாகிய Josh Gabbatiss எழுதிய கட்டுரை மற்றும் உளவியலாளர் Anthony Stevens எழுதிய The Roots of War & Terror நூலில் இருந்து சில செய்திகளை இந்தக் கட்டுரையில் தொகுத்திருக்கிறேன்.

முதலில் Josh. ஒரு துண்டிக்கப்பட்ட கையின் தசைநார்களை ஒரு கிட்டார் வாத்தியத்தின் குமிழ்களுடன் இணைத்திருக்கிறார்கள். கையின் மற்றப் பகுதியோடு சில எடைக் கற்கள் கட்டப் பட்டிருக்கின்றன. எடையை மாற்றினால் தசைநார்கள் இறுகுகின்றன. கிட்டார் குமிழ்கள் எடையின் அழுத்தத்துக்கு ஏற்றபடி சுழல்கின்றன.

ஆய்வாளர், David Carrier, அவரின் ஆய்வுகூடத்தில் இந்த சோதனையை மேற்கொள்கிறார். எதற்காக? மனிதனின் கைகள் முஷ்டியாய் இறுகுவது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு அம்சம். வேறெந்த விலங்குகளுக்கும் இந்தக் குணாம்சம் இல்லை. ஆகவே?

வன்முறையின் அடையாளம் மனிதன். வன்முறையை உபயோகிக்கப் பிறந்தவன் மனிதன். வன்முறை இல்லை என்றால் மனிதன் இல்லை என்கிறார் அவர்.

அவரின் சக ஆய்வாளர்கள், மனிதர்களின் முகம், கைகளின் அமைப்பு, இரண்டு கால்களில் நிற்கும் தன்மை எல்லாவற்றையும் தனியாக ஆய்வு செய்து, இவை வன்முறையின் அடித்தளத்தைப் பிரதிபலிக்கின்றன என்கிறார்கள்.

எதிரணி சொல்வதென்ன? மனிதர்களுக்கு வன்முறையில் இறங்கப் போதுமான ஆற்றல் இருக்கிறது. உடலமைப்பு இருக்கிறது. ஆனால் வன்முறைக்கு இவை தான் காரணம் என்று நினைப்பது தவறு என்கிறார் அமெரிக்க மானுடவியலாளர்கள் கழகத் தலைவர், Alisse Waterston.

மனிதன், வன்முறையின் வார்ப்பு என்கிற கருத்து, 1970 களில் இருந்து சமூக உயிரியலாளர்கள் (social biologists) மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதாவது, நம் மரபணுக்கள், நம் உடலின் வடிவமைப்பை மட்டும் சந்ததி சந்ததியாகக் கொண்டு செல்வதில்லை. நம் குணாம்சம்களையும் கூடவே கொண்டு செல்கின்றன. வன்முறை அதில் ஒன்று.

இது புதிதாக முளை விட்டிருக்கும் ஒரு கோட்பாடு. இது உண்மை என்று உறுதி செய்ய ஆய்வுகள் ஒரு பக்கம் நடக்க, அப்படி இருக்க முடியாது என்கிற ஆய்வாளர்களின் ஆய்வுகள் இன்னொரு பக்கம் நடக்கின்றன.

வன்முறை மனிதனின் இயற்கை குணம் என்றால் மனிதர்கள் ஏன் சமாதானம், சமாதானம் என்று வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? போர்களே இல்லாத உலகத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று ஏன் துடிக்கிறார்கள்? முரணாக இல்லை?

அடிதடி மனிதன் குழுவுக்கு ஆதரவாக, பல சமூக உயிரியலாளர்கள் ஆதாரங்கள் காட்டுகிறார்கள். பிரேசில், வெனிசுலா காடுகளில் வாழும் யனோமாமி (Yanomami) பழங்குடியினர் எப்போ பார்த்தாலும் போர் செய்வதையே பெருந் தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

இதில் இருக்கும் அனுகூலம் : எதிராளிக் குழு ஆண்களை அடித்து விரட்டி விட்டால் அல்லது மேலுலகம் அனுப்பி விட்டால், அவர்களின் பெண்களை மனைவிகள் ஆக்கிக் கொள்ளலாம். நிறைய பிள்ளைகள் பிறக்கப் பிறக்க, அந்த சந்ததி, ஜெய் யனோமாமி! கோஷம் போட்டபடி பெருகிக் கொண்டே இருக்குமே.

அமைதி மனிதன் குழுவினர் சும்மா இருப்பார்களா? நீங்கள் ஒரு குழுவைக் காட்டி ஊதிப் பெருக்குகிறீர்கள். நாங்கள் 70 க்கு மேற்பட்ட பழங்குடிகளின் வாழ்க்கை முறையைக் கைவசம் வைத்திருக்கிறோமே.

இந்தப் பழங்குடிகள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டதே இல்லை. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் மார்ட்டு (Martu) மற்றும் மலேசியாவின் செமாய் (Semai) பழங்குடிகளின் மொழிகளில் சண்டை, யுத்தம் என்கிற சொற்களே இல்லை. சண்டை வரும் என்றால் முதல் வேலையாய் காட்டுக்குள் ஒடி ஒளிந்து கொள்கிறார்கள்.

நூதனமாக, தென் ஆபிரிக்காவின் கலஹாரி பகுதியில் வாழும் !குங் (!Kung) பழங்குடிகள் கையை முறுக்கிக் கொண்டு யுத்தத்தில் இறங்குவதில்லை. சிறு ஆயுதங்கள் உபயோகிக்கப் படுகின்றன. எதிரிகளைக் கை கால்களால் அடித்து உதைத்து மல்யுத்த பாணியில் துவம்சம் நடக்கிறது.

மனிதர்கள் சுமார் 12 000 ஆண்டுகள் முன்பு வரை காட்டுமிராண்டிகள் போல் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட யுத்தங்களில் மனித இழப்புகள் 15 வீதம்.

நாகரீகம் அடைந்தபின் ஏற்பட்ட மரணங்கள் சுமார் 3 வீதமே என்கிற ஒரு ஆய்வாளரின் கருத்தை மனிதனின் கொலைவெறிக்கு எடுத்துக் காட்டாய் சுட்டிக் காட்டுகிறார்கள் அடிதடி மனிதன் குழுவினர்.

மரபணு இயலின் சில கொள்கைகளின் படி (அவை உறுதி செய்யப் படவில்லை) போர்களால் கிடைக்கும் த்ரில் மற்றும் பாலியல் அனுபவங்கள், குழு ஆண்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்திருக்கும். இந்த உந்துதல்கள் ஆண்கள் மத்தியில் போட்டி பொறாமைகளை வளர்த்திருக்கும். மூளை ஆய்வுகளின் போது வன்முறைக்குப் பொருத்தமான அமைப்புகள் இருப்பதை நாம் காண முடியும் என்கிறார்கள் இவர்கள்.

David Adams எனும் ஆய்வாளரின் அனுபவம் சுவாரஸ்யமானது. அவர், தன் முடிவுகளைத் தனியாக வெளியிட்டால் பொது மக்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும் என்று இன்னும் 20 அறிவியலாளர்களுடன் சேர்ந்து விவாதித்து ஓர் குழுவின் முடிவாக வெளியிட ஏற்பாடு செய்தார்.

Seville Statement என்கிற அந்த விளக்கம் : சூழல் அமைவதைப் பொறுத்தே மனிதன் வன்முறையை உபயோகிக்கிறான். இயற்கையாகவே அவனிடம் வன்முறை அமைந்திருக்கிறது என்று நிச்சயமாக சொல்லமுடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனெஸ்கோவின் ஆட்கள் இந்த விளக்கத்தை உடனடியாகவே தத்தெடுத்துக் கொண்டார்கள். சமாதானமே எங்கள் நோக்கம், பணி என்று அறிக்கை விட்டார்கள்.

விஷயத்தை ஏற்கெனவே கேள்விப்பட்ட பத்திரிகை நிருபர்கள் அந்த மாநாட்டில் அக்கறை காண்பிக்கவில்லை. ஒரு நிருபர் சொன்னாராம் : போர் செய்யத் தூண்டும் மரபணுவை முதலில் கண்டுபிடியுங்கள். அதற்கு அப்புறம் போன் பண்ணுங்கள். வருகிறோம்.

ரத்தம், அழிவு என்றால் மட்டுமே மனிதர்களுக்கு (ஆண்களுக்கு) ஆர்வம் ஏற்படுகிறது. சமாதானம் என்றால் போரடிக்கிறது.

John Horgan எனும் அறிவியல் எழுத்தாளர், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஓர் புள்ளிவிவர ஆய்வு நடத்தினார். மனிதர்களுக்கு வன்முறையில் நாட்டம் அதிகம் என்றால், நிச்சயம் அரசியல் தலைவர்களும் யுத்த நடவடிக்கைகளில் கூடுதலான கவனம் செலுத்துவார்கள். யுத்தங்களைத் தவிர்க்கவே முடியாது என்றால் 29 வீதமான மாணவர்கள், யுத்தத்துக்கு ஆதரவு தெரிவிப்பதில் என்ன தவறு என்று கேட்டார்கள்.

வன்முறை நம்மிடம் இருந்து துவங்குகிறதோ, இல்லையோ ஒரு கருத்தே யுத்தம் செய்யும் நோக்கத்தை இன்னும் வேகமாகத் தூண்டிவிடக்கூடும் என்பதை இது காட்டுகிறது.

மானிடவியலாளர்கள் அநேகமாக அமைதி குழுவின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். சிம்பான்சிக் குரங்குகள் மனிதர்களை விட, ஒப்பீட்டளவில் மூர்க்கம் கொண்டவை. ஆனால் போனோபோஸ் (bonobos) குரங்குகள், கொரில்லாக்கள் மிகவும் மென்மையான குணங்கள் கொண்டவை. (பெண் தலைமைகளின் பங்கு அதிகம்)

ஆகவே, படிநிலை மாற்றத்தில் மனிதர்கள், போனோபோஸ் குரங்குகள், கொரில்லாக்கள் (மூன்று இனங்களும்) ஒரு பொது உயிரினத்தில் இருந்து தோன்றி இருக்கலாம் என்கிற கருத்தை இவர்கள் சொல்கிறார்கள்.

மனிதன் பயங்கரமான விலங்கு. அவனின் வன்முறையைத் தவிர்க்கவே முடியாது. வன்முறையின் வேர்களைத் தேடும் பணியில் இருக்கிறோம். எதற்காக, ஏன் என்று ஆராய்வதால் வன்முறையைத் தடுக்கும் தீர்வுகளையும் கண்டு பிடிக்கலாமே என்கிறார்கள் அடிதடி மனிதன் குழுவினர்.

உளவியலாளர் Anthony Stevens இதை ஆதரிக்கிறார். அவரின் The Roots of War & Terror நூலின் முக்கிய பக்கங்கள் இனி வருகின்றன.

பிரபல உளவியலாளர் யுங் (Jung) இன் கோட்பாடுகளில் தோய்ந்து போனவர் நூலாசிரியர் ஸ்டீவன்ஸ். ஆகவே, தாராளமாக யுங்ஙின் கருத்துக்களை செம்மைப் படுத்தியபடி தன் சொந்த விளக்கங்களையும் சொல்கிறார்.

மனித வன்முறையின் உச்சக்கட்டம் யுத்தங்கள். அதனால் நன்மைகளும் விளைகின்றன.

மனிதர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனால் உணவுத் தட்டுப்பாடு நிச்சயம் உண்டாகும். தவிர, வாழ்விட நெருக்கடி, சுற்றுச் சூழல் அழிவு, நோய்கள், சமூகப் பிரச்னைகள் என்று பல கண்டங்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. யுத்தங்கள் இந்த நிலையை சமன் செய்ய உதவுகின்றன.

(அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்பங்கள் இந்த அவலங்களை ஓரளவு சரி செய்கின்றன.)

யுத்தம் என்று வரும்போது, சொந்த சச்சரவுகள், புகைச்சல்கள் எல்லாம் மறந்து போய்விடும். பொது எதிரியை வீழ்த்துவது தான் ஒரே நோக்கம். எல்லாரும் பாசமலர்களாய் மாறிவிட சந்தர்ப்பங்கள் உண்டு. காணி சண்டை இருக்காது. கடன் கொடுத்தவர்களும் கடன் வாங்கினவர்களும் மச்சி! மச்சி! என்று உருகக்கூடும். தோளில் கைபோட்டபடி ஊர்வலம் போகக்கூடும்.

அடுத்து, யுத்தம் என்று வரும்போது மனிதர்களின் மூளை பக்காவாய் வேலை செய்யும். புதிய கண்டுபிடிப்புகள், வேலைகள், யோசனைகள் என்று எல்லாருமே பரபரப்பாய் இயங்குவது வழக்கம்.

போர்க்கால கண்டுபிடிப்புகளால் சமாதான காலத்தில் நன்மைகள் விளைந்திருக்கின்றன. ஒரு உதாரணம் : எதிரிகளின் சங்கேத வார்த்தைகளை ஓட்டுக் கேட்டு பிரித்து மேயப் போனதில், அது இன்றைய இணைய செயல்பாட்டுக்கு வழி வகுத்தது.

சில சமயங்களில், யுத்தத்தை இயற்கையே வலிந்து மனிதர்கள் தலையில் சுமத்துகிறது. இனுயிட் (Inuit) என்று இன்று நாம் அழைக்கும் எஸ்கிமோ பழங்குடிகளின் ஒரு பிரிவு அலாஸ்காவில் வாழ, மற்றது கிரீன்லாந்தில் வாழ்கிறது.

கிரீன்லாந்து உலகின் மிகப் பெரிய தீவு. இனுயிட் மக்களின் எண்ணிக்கையோ கம்மி. ஆகவே, எல்லாரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அலாஸ்காவில் நிலைமை தலைகீழ். மக்கள் அடர்த்தியாக வாழ்வதால், அடிக்கடி போர்கள் ஏற்படுகின்றன.

எனக்காகவா நான் உனக்காகவா எனைக் காணவா நெஞ்சில்

பெண்களுக்கும் அதி பராக்கிரம ஆண்களுக்கும் இடையில் ஒரு கவர்ச்சி இருப்பதை நாமறிவோம். காதலும் வீரமும் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகம் முழுவதுமே அது விரிந்து பரந்திருக்கிறது.

உதாரணத்துக்கு, கிரேக்க புராணங்களையும் நமது புராணங்களையும் போட்டு லவ் மேட்டரில் எது உசத்தி என்று பட்டிமன்றம் வைத்தால் இந்த உலகம் உள்ள வரை அந்த சீரியல்களை இழுத்துக் கொண்டு போகலாம்.

இன்னும் இருக்கிறது. யுத்தம் முடிந்து விட்டால் குழந்தைகளின் பிறப்பு வீதம் எட்டாத உயரத்துக்குப் போய்விடுவது எதற்காம்?

யுத்தத்தில், பெண்களின் பங்காக செவிலியரை சிலாகித்துச் சொல்லலாம். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைத் (Florence Nightingale) தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிரிட்டிஷ் படைகள் கிரீமியா யுத்தத்தில் மூழ்கி இருந்தபோது, போர்வீரர்களின் காயம் பட்ட வலிகளை மறக்க உதவியவர்கள் செவிலியர்கள்.

அவர்கள் பக்கத்தில் இல்லாதபோது வலி கூடியதாம். அருகில் இருந்தபோது வலி குறைந்ததாக போர்வீரர்கள் சொன்னார்கள். தவிர, சிப்பாய்களின் காதலிகள், மனைவிகளின் வார்த்தைகளால் உற்சாகம் பீறிட்டுப்போய் போர் செய்ததை அநேகமாய் எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள்.

பெண்கள் போர்களில் பெரிசாய் ஈடுபாடு காட்டுவதில்லை என்று ஒரேயடியாய் நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது. அமைதியாய் இருந்தாலும், தன் குழந்தைகளுக்கு ஆபத்து என்றால் பயங்கரமாய்ப் பாய்ந்து சண்டை போடத் தயங்காதவர்கள் அவர்கள்.

இன்றைய யுத்தங்களில் அவர்களின் சாகசங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன. அரபு நாடுகளில் மற்றும் கிளர்ச்சிப் படைகளில் தற்கொலைப் போராளிகளாக எத்தனையோ பெண்கள் அவர்களின் வீரத்தைக் காட்டவில்லை?

இன்றைய அரச படைகளில் பெண்களும் சேர்கிறார்கள். சேரும்படி அரசுகளே அழைக்கின்றன.

இருந்தும், சில ஜெனரல்கள் பெண்களைப் போர்முனைக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறார்கள். ஒரு எடுத்துக்காட்டு : 1948 களில் நடந்த இஸ்ரேல் – அரபு போரில் இஸ்ரேல் படைகளில் பெண்களும் இருந்தார்கள். ஆனால் போரில் கவனமாய் இருப்பதை விட்டுவிட்டு, சக பெண் சிப்பாய்களுக்கு ஆபத்து வராமல் காப்பதில் தான் ஆண் சிப்பாய்கள் மும்முரமாய் இருந்தார்களாம்.

வன்முறையைப் பெண்கள் ஒதுக்கவில்லை. அவர்களும் பங்காளிகளாகவே இருக்கிறார்கள் – ஆனால், ஆண்கள் போல் எடுத்ததற்கெல்லாம் ஆ! ஊ! என்று பாய்வதில்லை. தேவை என்றால் கோதாவில் இறங்க ரெடி.

காதலுக்கு முன்னுரிமை கொடுத்தால் வன்முறை எண்ணங்கள் குறைந்துவிடும், அமைதி நிலவும் என்று சில ஆய்வாளர்கள் நினைப்பது தப்பு. ஏன் என்றால் வன்முறையும் காதலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

பயணங்கள் முடிவதில்லை

யுங்ஙின் கோட்பாடுகளில் Shadow (உள்மனம்) மற்றும் archetypes (பிம்பங்கள், குறியீடுகள்) முக்கிய பங்கு வகிக்கின்றன.

Ego என்பது நாம் அறிந்த மனதின் பகுதி. மனதில் நாம் தெரிந்து கொள்ள முடியாத ஒரு அங்கம் உண்டு என்றால் அதை நிழல் மனம் (Shadow) என்று அழைக்கிறார் யுங்.

சில எண்ணங்களை நாம் வெளியே சொல்ல விரும்புவதில்லை. வக்கிர நினைவுகள், நோக்கங்கள், இச்சைகள் … என்று ஒரு பட்டியலே போடலாம். இவை நிழல் மனதில் உள்ள எதிர்மறையான அம்சங்கள்.

நேர்மறையான உணர்ச்சிகளும் அதே நிழல் மனசுக்குள் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நம் தாழ்வு மனப்பான்மை, தடுமாற்றங்கள், முட்டாள்தனமான நம்பிக்கைகள் என்று பல ரகசியங்கள் கூடவே அங்கே மறைந்திருக்கின்றன.

ஒரு தனி மனிதனின் சொந்த அனுபவங்கள் (குழந்தைப் பருவத்தில் இருந்து) இந்த நிழல் மனதைக் கட்டமைக்கின்றன. இது பல அடுக்குகளாக அமைந்திருக்கிறது. சமூகத்தோடு, சூழ்நிலைகளோடு கிடைக்கும் உடனடி அனுபவங்கள், நமது எதிர்வினைகள் எல்லாம் மேலிருக்கும் அடுக்குகளில் படிகின்றன.

புதிய அனுபவங்கள், எதிர்வினைகள் மேல் மட்டத்தில் படியப் படிய, பழையவை கீழே தள்ளப் படுகின்றன. சில தானாக மறையலாம். சில விஷயங்களை நாமே வலிந்து உள்ளே அமுக்கி விடுகிறோம்.

இந்த அடுக்குகளின் அடியில் அலைகள் (?) போல் அமைந்திருப்பவை archetypes (பிம்பங்கள், குறியீடுகள்). நமது அனுபவங்களின் எதிர்வினையாக இவை உருவாகின்றன. பல அவதாரங்கள் எடுக்கக் கூடியவை.

தாய்மை உணர்வு, குழந்தைக்குத் தாயின் மேல் ஏற்படும் பாசம், அன்பு, கருணை, கபடம், வன்முறையைத் தூண்டும் குணம் .. நல்லது, கெட்டது என்று எல்லா உணர்வுகளும் மனம் என்னும் திரையில் பிம்பங்கள், குறியீடுகளாய்த் தோன்றுகின்றன. மொழி இல்லை. கிட்டத்தட்ட பேசாத படம் போல் ஓடுகின்றன.

மில்லியன் ஆண்டுகள் முன்பு, நாம் விலங்கினங்களில் இருந்து எப்படி படிப்படியாக மாற்றம் அடைய ஆரம்பித்தோமோ அப்போதிருந்து இந்தத் தன்மைகள் நம்மோடு பயணம் செய்கின்றன.

அழுகிறோம். சிரிக்கிறோம். உருகுகிறோம். உதவுகிறோம். ஏமாற்றுகிறோம். கொலை செய்கிறோம். எல்லாம் archetypes செயல். நம் கையில் எதுவும் இல்லை.

அமைதி நிலவும் காலங்களில் நிர்வாகம், பொருளியல் நடவடிக்கைகள், அரசியல் நடப்புகளை முன்னெடுக்க நேர்மறை archetypes இருக்க,

யுத்தங்கள், குற்றச் செயல்கள், அழிவுகள், அநியாயங்களை நடத்திக் காட்ட எதிர்மறை archetypes இருக்கின்றன.

சூழலுக்கு ஏற்றது போல் விழித்துக் கொள்கின்றன அல்லது மீண்டும் தூங்கப் போய்விடுகின்றன இவை. நல்லது கெட்டது என்று எந்தப் பிரிவிலும் சேராத தன்மைகள் இவை என்று அவருடைய கோட்பாட்டை முன் வைக்கிறார் யுங்.

நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்

மனிதர்களுக்குத் தொடர்ந்து அமைதி சூழலில் (relaxed state) வாழ்ந்தாலும் பிடிக்காது. தொடர்ந்து போர் சூழலில் (mobilized state) சுட்டுத் தள்ளிக் கொண்டே இருந்தாலும் பிடிக்காது.

அமைதி காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் மும்முரமாய் இருக்கும். கன்னா பின்னா என்று காதல் பாடல்கள் கேட்கும். இடைவேளைகளில் மெய் வல்லுநர் போட்டிகள். கணனிகளில் கேம்ஸ் அல்லது மீம்ஸ். கிட்டே போனால் உஸ்ஸ்!

யுத்தம் செய்வோம் வாருங்கள் என்றால் இந்தக் காலத்தில் எவன் வருவான்? இதற்காக, அரசியல்வாதிகள், ஜெனரல்கள் பெரும் திட்டங்கள், தந்திரங்கள், மந்திரங்கள் (ஊடகங்களில் பரப்புரைகள்) என்று பல பரிமாணங்களில் ஊடுருவி வேலைகள் செய்கிறார்கள்.

எப்படி சாத்தியமாகிறது? மூன்று மட்டங்களில் இது நடைபெறுகிறது என்கிறார் நூலாசிரியர் ஸ்டீவன்ஸ்.

முதலாவதாக, அவர்கள் (எதிரிகள்) வேறு நாம் வேறு என்கிற உணர்வைத் தூண்ட வேண்டும். நமக்குள் இருக்கும் எதிரி archetypes களை உசுப்பி எதிரிக் குழுவின் மேல் படியச் செய்ய வேண்டும் (யுங்ஙின் கருத்தியல்). எதிரிகள் மனிதப் பிறவிகளே அல்ல. ஈனப் பிறவிகள் என்கிற கருத்தாடல் அவசியம். மேனி நிறம், வேற்று இனம், மொழி, மதம் இன்னும் வசதி.

1998 களில் ஒரு ராணுவ அதிகாரியின் குறிப்பில் இருந்து : அமெரிக்க துருப்புகள் பசிபிக் பிராந்தியத்தில் நடந்த போரில் ஒரே ஒரு ஜப்பானிய போர்வீரனைத் தவிர, மற்ற எல்லாரையும் கொன்றுவிட்டு அவனை ஓடச் சொன்னார்கள். அவன் தன் உயிருக்காகப் பட்ட அவலங்களை அணு அணுவாய் ரசித்து சிரித்தார்கள். போதும் இனி என்று அவர்கள் நினைத்த போது …

இரண்டாவது வகை archetypes எப்போதுமே அதிகாரத்தை அடைந்து விட வேண்டும். எல்லாமே எனக்கு அடங்கி இருக்கவேண்டும் என்கிற வேட்கை கொண்டவை.

இதற்காக, பிரமிட் போன்ற சமூகத்தின் அடுக்குகளை இன்னும் அதிகமாய் வலுவாக்க வேண்டும். எந்தக் கேள்வியும் கேட்காதே. சொன்னதை செய். கீழ்ப்படிந்து நட. இப்படி குணாம்சங்களை ஊக்குவிக்க வேண்டும்.

1974 களில் ஆய்வாளர் Stanley Milgram நடத்திய ஆய்வு : ஒருவர் ஆசிரியர் வேலை பார்ப்பார். கடுமையாகத் தண்டனை தரும் ஆசிரியர். அவர் முன்னால் ஒரு மின்சார அதிர்ச்சி கொடுக்கும் நாற்காலி இருக்கிறது. மாணவர்கள் ஒவ்வொருவராய் அதில் உட்காருவார்கள். கேள்விகள் தொடர்ந்து வரும். தப்பாய்ப் பதில் சொன்னால் ஷாக் தரப்படும்.

தப்புகள் கூடக் கூட அதிர்ச்சியின் அளவும் கூடும். ஆசிரியரால் மின் அதிர்ச்சியைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். ஆசிரியரோ மாணவர்களோ எல்லாருமே காசுக்கு நடிக்க வந்தவர்கள். 450 வோல்ட்களுக்கு மேல் மின் அதிர்ச்சி கூடினால் உயிராபத்து என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது.

அப்போ, யாருமே அந்த 450 த் தாண்ட யோசித்திருப்பார்கள்? இல்லை. அவர்கள் யோசிக்கவில்லை. 450 என்ன, இன்னும் கூடப் போயிருப்பார்கள். நல்ல காலமாய் சோதனை நிறுத்தப் பட்டுவிட்டது. (நீங்க பாஸ். சொல்ரீங்க. நாங்க செய்ரோம்.)

ஹிட்லரின் நாஜிப்படையில் உயர் ராணுவ அதிகாரியாய் இருந்து கணக்கில்லாமல் படுகொலைகள் செய்த Adolf Eichmann கூட விசாரணையில் அதைத் தானே சொன்னார்?

மூன்றாவதாக, நம் சொந்தப் பாதுகாப்பு. இந்த archetypes வகைகள் முன் சொல்லப்பட்ட இரண்டு வகைகளுக்கும் நெருங்கியவை. நம் குழுவின் பாதுகாப்புக்காக நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஆபத்து நேரலாம். எந்த சமயமும் எதிரி நம்மைத் தாக்கலாம். ஆகவே விழிப்போடு இருக்க வேண்டும். செயல்பாடுகள் தொடர்ந்தபடி இருக்க வேண்டும்.

சோதனையில் archetypes எப்படி செயல்பட்டன? பங்கு கொண்டவர்கள் காசுக்காய் வந்தவர்கள். அந்த சமயமே, அவர்களின் நிழல் மனம் (Shadow) ஆய்வாளரின் ஆளுமைக்குள் வந்துவிட்டது. அவர்களின் archetypes களை, அவர் தன் விருப்பப்படி செயல்படுத்த ஆரம்பிக்கிறார்.

தாய் தந்தையரின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குழந்தை போல் சோதனையில் பங்கு கொண்டவர்கள் ஆகிவிட்டதன் பின்னர் கேள்விகளுக்கே இடமில்லை.

இது தனிப்பட்ட மனிதர்கள் மேல் கொண்ட ஆய்வு. ஒரு குழு என்றால் என்ன நடந்திருக்கும்? நூலாசிரியர் கேட்கும் போதே மிரண்டு போகிறோம்.

தூங்காத கண் என்று ஒன்று

சின்னங்கள், குறியீடுகளை மையப்படுத்தியே யுத்தங்கள் துவங்குகின்றன. இவை உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை மதிப்புகள். நம்பிக்கைக்குரிய மதிப்புகள்.

இந்த நம் மதிப்புகளை மற்றவர்கள் இருப்பதால் தான் மதிக்கிறோம். மற்றவர்கள் இல்லாவிட்டால் மதிப்பு என்று எதுவும் இல்லை.

archetypes நித்திரை பாதி, விழிப்பு பாதியாய் இருக்கும் சக்திகள். எப்போது துள்ளி எழலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சக்திகள்.

போர் மூலமோ வேறு தந்திரங்கள் மூலமோ எதிராளியை மடக்கிவிட்டால் பிறகு பிரச்னை வராது என்று நினைப்பது இன்னொரு முட்டாள்தனம். வன்முறை archetypes தூங்குவது போல் நடிக்கும். ஆனால் தூங்காது.

வியட்னாமில் அமெரிக்கா நடத்திய போரில் ஏன் வெல்ல முடியாமல் போயிற்று? பெருவாரி அமெரிக்கர்களின் archetypes முழுவதுமாக விழிப்புடன் இருக்கவில்லை.

தூரத்தில் எங்கேயோ இருக்கும் ஒரு சின்ன நாட்டினால் நமக்கு என்ன ஆபத்து வரப் போகிறது? தவிர, போரில் அமெரிக்க படைகள் செய்த அட்டூழியங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருந்தன. நமக்கு, நம் சொந்த நாட்டு மக்களே ஆதரவு தரவில்லை என்கிற விரக்திக்குள் மூழ்கிப் போனார்கள் படை வீரர்கள்.

சோவியத் ஒன்றியம் வீழ்ந்தது. நமது தந்திரங்கள் வென்றன என்று மேற்குலகு ரொம்ப நாள் வெற்றி விழா கொண்டாட முடியவில்லை. விரைவிலேயே, யூகோஸ்லாவிய உள்நாட்டுப் போர் வெடித்தது. இராக், இஸ்லாமிய பயங்கர வாதம் என்று புதிய தலைவலிகள் வராமலா போய்விட்டன?

பிரெஞ்சுப் புரட்சி ஏன் நின்று பிடிக்கவில்லை? புரட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தின் archetypes வகைகளை அழிக்க நினைத்தார்கள். அது மக்களின் archetypes களை உசுப்பிவிட்டது. கடைசியில், மக்கள் இவர்களை மிருகங்கள் என்று தூற்றினார்கள். அழித்தார்கள்.

கார்ல் மார்க்ஸ் கூட, தொழிலாளர்களைத் தவறாக எடை போட்டார். அவரின் சித்தாந்தத்தின் படி, யுத்தம் என்பதே முதலாளித்துவத்தின் வெளிப்பாடு. சோஷலிசம் வந்துவிட்டால் தொழிலாளர்கள் போரை விரும்ப மாட்டார்கள் என்று நினைத்தார்.

மலிவான மூலப் பொருட்கள் எங்கே கிடைக்கும்? குறைவான ஊதியத்துக்கு யார் வேலை செய்வார்கள்? எப்படி காலனி ஆதிக்கத்தை இன்னும் விரிவாக்கலாம் என்று முதலாளித்துவம் யோசிக்கும் நிலையில் தான் போர்கள் வெடிக்கும் என்றார் அவர்.

ஆனால் 1914 களில் முதலாம் உலக யுத்தம் துவங்கியபோது, அய்ரோப்பாவின் சோஷலிச கட்சிகளுக்கு தேசபக்தி தான் முக்கியமாய்த் தெரிந்தது . ஆஸ்திரிய, ஜெர்மனி நாடுகளின் தொழிலாளர்கள் பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்ய தொழிலாளர்களை எதிர்த்துப் போரிடத் தயங்கவில்லை.

போர்கள், மனித சமுதாயத்தை அடிக்கடி தொற்றும் ஒரு வியாதி என்று சில சமூகவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், மனிதர்கள் எல்லாருமே மன நோயாளிகள் என்று ஆகிவிடும். தவறான சிந்தனை இது. மார்க்சிய வாதமோ, தாராளமய வாதமோ archetypes வகைகளின் படிநிலை வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறந்து விட்டன.

இன்று மரபணுவில் மாற்றங்கள் செய்யும் (Genetic Engineering) உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுகள் துவங்கி விட்டன. சிலர் நினைப்பது போல், இந்த அறிவியல் முன்னேற்றம் மூலம் மனிதனின் வன்முறை உணர்வுகளை மாற்றலாம் என்பது சந்தேகமே.

முதலாவதாக, அது வந்து சேர எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியாது. இரண்டாவதாக, அந்த ஆய்வுகளுக்காக ஒதுக்கும் தொகையை விடப் பல மடங்கு பணம், ஆயுதங்கள் உற்பத்திக்குப் போய்விடும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

மூன்றாவது, பெரிய சிக்கல். மரபணுவில் வன்முறையை மாற்றப்போய், மனிதனின் படைப்பாற்றல், மன உறுதி, பாலுணர்வு என்று நம் குண நலன்கள் நசிந்து போய்விட்டால்? இந்தப் பண்புகளுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.

archetypes வகைகள் நம்மை விடப் புத்திசாலிகள். ஒரு சில அரசியல் தலைவர்கள் வேண்டுமானால், செய்து காட்டுகிறோம் என்று செயல்பாடுகளில் இறங்கலாம். ஆனால் எல்லா உலகத் தலைவர்களுமே அப்படி யோசிப்பார்கள் என்று எண்ண முடியாது.

உலகம் முழுவதையும் தன் அதிகாரத்துக்குள் கொண்டுவரக்கூடிய ஒரு சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரியால் தான் அது சாத்தியமாகும். அதிலும் ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது. அவரின் மெய்ப் பாதுகாவலர்களை எப்படி நம்புவது? ஒரு ஆள் போதுமே.

archetypes களை உசுப்பி விடக் கூடிய தன்மைகள் தான் சந்ததி சந்ததியாகப் பயணம் செய்கின்றன. archetypes வகைகள் அல்ல என்று யுங் சொன்னதை நாம் கவனிக்க வேண்டும். இது உயிரியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய கோட்பாடு.

archetypes களை மாற்றவே முடியாது. ஏன் அப்படி? நம் முன்னோர்கள், காடுகளில் அலைந்து திரிந்த போது எந்த வினாடியும் ஆபத்து வந்திருக்கும். விலங்குகள், இயற்கையின் சீற்றங்கள், தவிர, மற்ற மனித குழுக்களின் எதிர்ப்பு என்று விழிப்புடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.

எந்த நேரமும் விழிப்புடன் இருப்பது நூற்றுக்கு நூறு முடியாத காரியம். ஆகவே அவர்கள் இயற்கைக்கு ஏற்றபடி அவர்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்திருப்பார்கள். சில உண்மைகளை மறுதலிக்க வேண்டிய நிலைமை நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்.

அப்படி எதுவும் நடக்காது என்று அவர்களை அவர்களே தேற்றிக் கொண்டு ஓய்வெடுக்க நினைத்திருப்பார்கள். அப்படி அவர்கள் நடந்திருக்காவிட்டால் பைத்தியமே பிடித்திருக்கும். மனித குலமே அழிந்திருக்கும்.

இன்று நம்மை வேட்டையாட விலங்குகள் இல்லை. நம்மைக் காத்துக் கொள்ள கதகதப்பான சூழலில் வாழ்கிறோம். ஆனால் ஏதோ ஒரு உணர்வு, பயம் காட்டியபடியே இருக்கிறது.

விளைவு : பிரச்னைகளை உருவாக்குகிறோம். வன்முறை கிளர்ந்தெழுகிறது. சாதா அடிதடிகளில் துவங்கி பெரும் போர்கள் வரை முன்னேறுகிறோம். அந்த உணர்வுக்கு வடிகால் எதிரிகள் தான். எதிரிகள் இல்லாமல் நாம் முழு மனிதர்கள் ஆக முடியவில்லை. எதிரிகளை அழித்த பிறகு தான் நிம்மதி கிடைக்கிறது.

2 – 3 மில்லியன்கள் ஆண்டுகள் முன்னே இருந்த அதே மனம் இன்றும் அலை பாய்ந்தபடி இருக்கிறது. நாம் மாறவில்லை.

சில archetypes ஏற்கெனவே விழித்திருக்கின்றன என்கிறார் யுங். (சில காத்திருக்கின்றன. சில செயல்படாமலேயே போய்விடும்.) உதாரணமாய், தாய்மை உணர்வுகள் பெண் குழந்தைகளின் சிறு வயதில் தூண்டப் படுவதில்லை. வயது வரும் வரை காத்திருக்கின்றன.

வன்முறை உணர்வுகள் ஆண் குழந்தைகளின் சிறு வயதில் தோன்றுவதில்லை. விடலைப் பருவம் வரட்டுமே என்று அமைதியாய் இருக்கின்றன.

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே

போர்களைத் தவிர்க்க, சமாதானம் என்கிற கருத்தியலை இன்னும் அதிகமாய் பரப்புரை செய்யலாம். ராஜதந்திர முயற்சிகளில் இறங்கலாம்.

பையன்கள் மனதில் விரைவிலேயே வன்முறை archetypes தோன்றிவிடுகின்றன. அவர்களிடம் அமைதி உபதேசங்கள் பலன் தராது. ஆகவே, போரடிக்காமல் இருக்க, விளையாட்டுப் போட்டிகள், கணனிகளில் கேம்ஸ் என்று ஊக்கப் படுத்தலாம்.

பெண்களை அரசியலில் கூடுதலாய்ப் பங்கு கொள்ள வைத்தால் போரில் இறங்க வைக்கும் காரணிகளைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். (முஸ்லிம் நாடுகளில் இதற்கு எதிர்ப்பு இருக்கும். தெரிந்ததே. இருந்தும் முயற்சி செய்யலாம்.)

இந்த செயல்பாடுகள் நல்லது. உதவும். ஆனால் இவைகளை மட்டும் நம்பிப் பயன் இல்லை என்கிறார் யுங்.

ஆபத்துகள் நம் மனசுக்குள் இருந்தே வருகின்றன என்பதை மறந்து விடுகிறோம். அல்லது அதை அறியாமல் வாழ்கிறோம். தெரிந்தாலும் அலட்சியப் படுத்துகிறோம். அப்படி எல்லாம் நடக்காது. நாம் நல்லவர்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

நாம் நல்லவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நல்லவர்கள் என்கிற கோணங்கிப் புத்தி நம்மை விட்டு அகல்வதே இல்லை.

நாஜிப்படை முகாமில் இருந்து தப்பிய Elie Wiesel தன் நூலில் (Night) இப்படிக் குறிப்பிடுகிறார் : நாஜிப்படைகள் செய்த அட்டூழியங்களை வீடு வீடாக, ஊர் ஊராகப் போய் சொன்னேன். தப்பிவிட முயற்சி செய்யுங்கள் என்று கெஞ்சினேன். முட்டாள் என்று கேலி செய்தார்களே தவிர என்னை நம்பவே இல்லை.

ஜெர்மனியின் Dachau முகாமை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு அங்கிருந்த யூதர்கள், மற்றும் கைதிகளை விடுதலை செய்தபோது சரணடைந்த நாஜி ராணுவ வீரர்கள், இன்று நாம் 130 பேரைக் கொன்றோம் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்களாம்.

அந்த நாஜிகள், எப்பேர்ப்பட்ட குற்றங்கள் இழைத்திருக்கிறோம் என்கிற நினைவு கொஞ்சம் கூட இல்லாமல் சொன்னபோது அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம்.

இந்த நினைவு ஒரு வித மறுதலிப்பு. நான் அதை செய்யவில்லை. நான் அதை யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கைதிகள் வாழ்ந்தால் என்ன? செத்துப் போனால் என்ன?

archetypes வகைகள், அவற்றின் இருப்பை நாம் அறிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. நம்மை ஒரு மாயையில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன.

ஒருவரை வன்முறையாளராக மாற்றுவதற்கு archetypes மூன்று படிநிலைகளில் தூண்டுகின்றன.

நான் ஒரு மனமுதிர்ச்சி அடைந்த மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பார்த்ததும் கோபம் வருகிறது. ஆனால் அதை மறைத்துக் கொள்கிறேன். அப்படி எதுவும் இல்லை என்று என்னை நானே மறுக்கிறேன். அந்த உணர்வு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. என்னுடன் ஒட்டிக் கொள்கிறது.

அதே சமயம், நீங்கள் என்னிடம் கோபம் கொள்ளவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கோபம் அடையவில்லை என்று நான் வைத்த குற்றச்சாட்டை நீங்கள் ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள். இது அநீதி. உங்களைத் தாக்குவது சரி தான்.

மாறாக, நீங்களும் என்னிடம் கோபம் கொண்டால், என் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிறது. நான் கோபம் கொண்டது சரி தான். கைகலப்பு துவங்குகிறது.

நம் எதிரிகள் என்று நாம் நினைப்பவர்கள் இருந்தே ஆகவேண்டும். எதிரிகள் இல்லாவிட்டால் நம் சஞ்சலம் அதிகரிக்கிறது. எதிரிகள் தான் நம்மை முழு மனிதர்கள் ஆக்குகிறார்கள். archetypes களுக்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்?

நம் மன அழுக்குகளை, பய உணர்வுகளை, வக்கிரங்களை உற்றுப் பார்க்க நாம் தயங்குகிறோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதிலேயே கவனமாய் இருக்கிறோம். ஆகவே archetypes கள் ஜாலியாய் இருக்கின்றன.

archetypes களை அழிக்கவே முடியாது என்றால், அவைகள் அடிக்கும் கொட்டமும் தாங்க முடியவில்லையே என்றால் என்ன தான் செய்வது?

வன்முறை உணர்வுகள் எல்லாரிடமும் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். போர் பற்றிய பயம் மனதில் இருப்பது நல்லது.

பகுத்தறிவு அல்லது அறிவு சார்ந்த செயல்பாடுகளால் மனதின் வன்முறை எண்ணங்கள், பதட்டங்களை தாண்டிப் போகவோ அல்லது அவற்றில் இருந்து விடுதலை அடையவோ முடியாது என்கிறார் யுங்.

அறிவுலகம் தெளிவற்ற மனோநிலையை ஏற்றுக் கொள்வதில்லை. ஏதோ, எங்கோ ஒரு மூலம் இருக்க வேண்டுமே என்று நிச்சயித்துக் கொள்கிறது. அதைத் தேட ஆரம்பிக்கிறது.

புள்ளி என்று எதுவும் இல்லை. கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டிருக்கும் உணர்வலைகளை அறிவுலகம் புரிந்து கொள்ளாது.

சின்னங்கள், குறியீடுகள் யுத்தங்களுக்கு அடித்தளமாய் அமைகின்றன. சமாதானம், அமைதிக்கு ஏன் சின்னங்கள் , குறியீடுகளை நாம் உபயோகிக்கக் கூடாது? ஏன் என்றால் உணர்வுகள் என்பன சின்னங்கள், பிம்பங்கள், குறியீடுகளின் எதிரொலிகள்.

Hutterites இனம் அமைதியை விரும்பும் ஒரு சமுதாயம். குழுக்களாக இயங்குகிறார்கள். ஒவ்வொரு குழுவின் எண்ணிக்கையும் 150 பேருக்கு மேல் போகாது. எண்ணிக்கை கூடிவிட்டால் இன்னொரு குழுவாகப் பிரிந்து விடுவார்கள்.

உன்னைப் போல் மற்றவர்களையும் நேசி என்கிற யேசுவின் வாக்கு செல்வாக்கை இழந்து விட்டதற்கு குழுவினர் எண்ணிக்கையும் ஒரு காரணமாய் இருக்கலாம். உலகத்தின் 6 பில்லியன் மக்களையும் நம்மால் நேசிக்க முடியாது. (சிறுசிறு குழுக்களாக இயங்குங்கள் என்கிறாரோ யுங்?)

archetypes எப்போது வேண்டுமானாலும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்லலாம் என்கிற பயம் தான் நம்மைக் காப்பாற்றும் என்று முடிக்கிறார் நூலாசிரியர்.

உணர்வுகளை உணர்வுகளால் தான் வெல்ல முடியுமோ?

நானே நானா யாரோ தானா

நான் என்று நினைக்கும்போது அது நான் மட்டும் தான் வேறு யாரும் அல்ல என்று நினைப்பது  பெரும் முட்டாள்த்தனம். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சிந்திக்கும்போது தான் நான் என்னும் சுய உணர்வு தோன்றுகிறது என்கிறார் மைக்கேல் பாண்ட் (Michael Bond ).

ஏற்கெனவே, நான் யார் என்கிற கட்டுரை ஒரு விதமாய்ப்
பயமுறுத்த, மைக்கல் இன்னொரு விதமாய் மிரள வைக்கிறார்.

நம் கடந்த கால நினைவுகள் அடுக்குகளாய் நம் மூளையில் குவிகின்றன. அந்தக் களஞ்சியத்தில் இருந்து தான் இது நான், அது மற்றவர்கள் என்னும் வித்தியாசங்கள் தோன்றி, அதன் விளைவாக நான் என்கிற  சுய உணர்வு தோன்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்தோம். கவலை இருக்கவில்லை.

உளவியல் ஆய்வாளர்கள் மத்தியிலே  இப்போது ஒரு புதுசாய் ஒரு சித்தாந்தம் உலாவிக் கொண்டிருக்கிறது.

அதாவது, ஓர் இரண்டு மாதக் குழந்தை முதன் முதலாக சிரிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பெற்றோருக்கு வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அட .. அட.. என்னா அழகு… அழகு என்று மாய்ந்து போவார்கள்.

ஆனால் குழந்தை சிரிக்கிறதா?  அது உண்மையில் பிட் அடிக்கிற வேலையை அதன் ஆரம்ப காலத்திலேயே துவங்கி விடுகிறது. அம்மா, அப்பாவின்  முகம் பார்த்து அந்தந்த  முகபாவங்களை அப்படியே  காப்பி அடிக்கிறது. (கவனிக்கவும்: அம்மாவோ, அப்பாவோ பொதுவாக சிரித்தபடி தான் குழந்தையைப் பார்ப்பது வழக்கம்.)

இதில் இன்னோர் நுணுக்கமும் இருக்கிறது. மற்றவர்களின் உணர்வுகளுடன்  குழந்தை தன்னையும் இணைத்துக் கொள்கிறது. அன்பு, அனுதாபம் என்கிற உணர்வுகள் அதன் மனதில் பதிவது மட்டுமல்ல. அதற்கு மேலே..

Empathy என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன? (பச்சாத்தாபம் என்கிற சொல்லில் இது அடங்காது.)

அந்தச் சொல்லை இப்படி விளக்கலாம். சக மனிதர்களின் சூழ்நிலையில் தன்னை நிறுத்திப் பார்ப்பது. அந்த சூழ்நிலையில்நான் இருந்தால் எப்படி உணர்ந்திருப்பேன்? அவர்களுக்கு ஏற்படும் வலியை, துன்பத்தை எப்படி நான் அனுபவித்திருப்பேன்? அவர்களுக்கு வரும் மகிழ்ச்சி, இன்பம் எப்படி
இருந்திருக்கும்?  இப்படி எல்லா உணர்வுகளையும் கற்பனை செய்து பார்க்கும் மனோநிலையை இந்தச் சொல் குறிக்கிறது.

அதே குழந்தையைப் பார்த்து அழுது பாருங்கள். அழும். சிரித்துப் பாருங்கள். சிரிக்கும். சத்தம் போட்டுப் பாருங்கள். அதுவும் சத்தம் போட முயற்சிக்கும். பிட் அடிப்பது தப்பே இல்லை. அது அவசியம். Empathy.

The Self Illusion நூலில் அதன் ஆசிரியர், Bruce Hood இப்படி சொல்கிறார்: நாம் எல்லாருமே மற்றவர்களுடன் தொடர்புடன் இருக்க விழைபவர்கள். இந்த விருப்பு அல்லது ஏக்கம் எல்லாரின் ஆழ்மனதிலும் ஊன்றியிருக்கிறது. நாம் யார் என்று அறிந்து கொள்ள இந்த மனத் தூண்டல் உதவுகிறது.

Michael Lewis என்கிற இன்னோர் உளவியலாளர், ” நான் என்கிற தன்னுணர்வு (self ) இல்லாமல் உங்களோடு தொடர்பு கொள்ள முடியாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் யார், உங்களின் தரவுகள் என்ன என்று பல தகவல்கள் தேவைப்படுகின்றன. நான் யார் என்று தெரிந்தால் தான் அந்தத் தகவல்களை என்னால் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆட்டிஸம் (Autism) குறைபாடு உள்ளவர்களை சோதனைகள் செய்தபோது இந்த அனுமானத்துக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. (ஆட்டிஸம்  குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றவர்களின் முகபாவங்களைப் புரிந்து கொள்வது இயலாத காரியம்.) இதுவே அவர்களின் நான் என்கிற தன்னுணர்வுக்குத் தடையாக இருக்கிறது.

அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருந்து வளர, வளர (சிகிச்சைகள் மூலம்) தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து ஓரளவு சில முகபாவங்களைப் புரிந்து கொள்கிறார்கள். தவிர, அவர்கள் வாழ்க்கையின் ஒரு சில சம்பவங்களையாவது நினைவில் வைத்திருக்கிறார்கள்.

சோதனைகளில், அவர்களின் மூளையின் ஒரு பகுதியின் செயல்பாடுகள் (prefrontal cortex) சாதாரண ஒருவரை விட, மிகவும் மங்கலாக இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

உளவியலாளர்  (Antonio Damasio) சொல்கிறார்:  நான் என்று ஒரு தனித் தீவு போல்  மற்றவர்களிடம்  இருந்து பிரித்துச் சொல்வது சரியாக இருக்காது. என்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன் என்று சொல்வது தான் சரி.  

நானாக நான் இல்லை தாயே..

அடுத்து எவ்வகையான சமூகத்தில் வாழ்கிறேன் என்பதைப் பொறுத்தே நான் என்பது அமைகிறது என்கிறார் இன்னோர் ஆய்வாளர், Richard Nisbett  (The Geography of Thought நூலாசிரியர்)

அய்ரோப்பிய, சீன மக்களிடம் இவர் நடத்திய ஆய்வுகளில் இருந்து:

கிழக்கு ஆசிய மக்கள் எந்த நிகழ்வையும் அந்தந்த சூழலின் அடிப்படையில் பார்ப்பது வழக்கம். அதாவது ஒவ்வொருவரும் அந்த சமுதாயத்தின் இன்னொருவர் இதே விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார், எதிர்வினை ஆற்றுவார் என்று ஒப்பு நோக்கி செயல்படுகிறார்கள். அந்த எதிர்வினையில் சமுதாயத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள், வரலாறு எல்லாமே கலந்திருக்கும்.

அய்ரோப்பிய மக்கள் முதல் வேலையாக அந்த நிகழ்வை அப்படியே பிரித்தெடுத்து விடுவார்கள். அது எனக்கு லாபம் தருமா, நஷ்டம் தருமா என்று கணக்குப் பார்த்து (சொந்த நலன்) செயல்படுவது அவர்கள் வழக்கம்.

ஜப்பான் நாட்டவர்கள், அந்தந்த  நிகழ்வுக்கேற்றபடி தம் செயல்பாட்டை மாற்றிக் கொள்வதில் சமர்த்தர்கள். இதில் அவர்களின்  நான் எனும் உணர்வு தளர்வடைந்து போவதைக் கவனிக்கலாம்.

இந்த வகை வேறுபாடுகள் குழந்தைப் பருவத்தில் இருந்தே தென்பட ஆரம்பித்து விடுகின்றன. அதாவது நான் எனும் நினைப்பு கீழை நாட்டுக் கலாசாரங்களில் சுதந்திரமாக செயல்படுவதில்லை.

ராஜா என்பார்  மந்திரி என்பார்..

நான் என்று சொல்லும்போது கூடவே பல அடைமொழிகள், தகுதிகள், பெருமைகள் என்று வருகின்றன. நான் படித்தவன், கல்யாணம் முடித்தவன், இந்த ஊர் அல்லது அந்த ஊரைச் சேர்ந்தவன் என்று என்ன சொல்லிக் கொண்டாலும் அவை அந்தந்தக் கலாசாரத்தில் கட்டமைக்கப் பட்டவையே தவிர வேறல்ல.

எல்லாக் கலாசாரங்களுக்கும் உள்ள ஒற்றுமை: மனிதர்களின் குணநலன்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்தெந்தக்  கலாசாரத்துக்குள்  நாம் போகிறோமா, அதை அப்படியே காப்பி அடித்து அவர்களுக்குள் புகுந்து வாழ்கிறோம். நான் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது.

இந்தியர்களைக் கவனியுங்கள்: நீ எந்த ஊர்? (பேரை விட ஊர் முக்கியம்.). அந்த ஊரில் அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா? இன்னாரை எனக்குத் தெரியுமே? உனக்குத் தெரியாதா? இப்படிப் போகும். ஏதாவது ஒரு ஒற்றுமையைக் கண்டு பிடிக்கப் படாதபாடு படுவார்கள். கண்டு பிடித்தால் தான் நிம்மதி.

ஜெர்மனி நாட்டில் ஹலோ மட்டும் தான். எல்லாருக்கும் அவரவர் வேலை தான் முக்கியம். சும்மா பேசிக்கொண்டிருக்க என்ன பைத்தியமா?

இன்னும் மேலே, பின்லாந்து போனால் ஹலோவும் இருக்காது. முன்னால்  ஒரு ஆள் நிற்கிறாரே என்கிற நினைவும் இருக்காது. தனிமை தான் இனிமை.

இந்த சமூக நான் (social me) என்பதற்கு ஆதாரங்கள் பெருகினாலும் அது நமக்கு நன்மைகள் தருகின்றன என்று சொல்வதற்கில்லை.

ஆய்வாளர், Susan Blackmore சொல்வது இன்னும் பயத்தை உண்டாக்குகிறது:

நான் எனும் தன்னுணர்வு, நம் தொடர்புகளின்  நேரடி விளைவாக இல்லாமல் ஒரு துணை விளைவாகக்கூட (by-product) இருக்கலாம் என்கிறார் அவர். துரதிர்ஷ்ட வசமாக, அதனோடு சில தேவையில்லாத தொந்தரவுகளும் நம்மோடு தொற்றிக் கொள்கின்றன என்று அடுத்த குண்டையும் போடுகிறார் அவர்.

உதாரணமாக, நான் என்பது தோன்றும்போது நம் மூளை நரம்புகள் அளவு மீறி நம்மை நொந்து போகச் செய்து அல்லது துக்கத்தில் ஆழ்த்தி நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணங்களை அழித்துவிடுகின்றன.

நான் என்பது மூளை உருவாக்கும் ஒரு பொய் என்று ஒரு பகுதி சொல்கிறது.

அது தொடர்ந்து மின்னும் நரம்புகளின் மின்தூண்டல்களில் உண்டாகும் ஓர் மாயவலை என்று இன்னோர் பகுதி சொல்கிறது.

நான் என்பது உருவாக சுற்றி இருக்கும் சமூகம், நிகழ்வுகள் தேவை. இல்லாவிட்டால் நான் என்பதே இல்லை என்று இன்னோர் பகுதி சாதிக்கிறது.

நான் என்பது ஓர் நேரடி விளைவு அல்ல. அது ஓர் துணை விளைவாகக் கூட இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்புகிறது இன்னொரு குழு.

நான் என்பதே ஓர் மயக்கமோ?

மெல்ல மெல்ல மாறினேனா… வாணி ஜெயராம் பாடலில்  மயங்குவதைத் தவிர வேறு வழி ?

………………………………………………………………………………………………..

New Scientist, 23 February 2013 இதழில்  Michael Bond  எழுதிய கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பு மேலே.

நான் யார்?

குடியிருந்த கோயில் படத்தில், நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார், யார்? என்று எம்ஜிஆர் பாடுவார். மற்றவர்கள் பதில் சொல்ல முடியாமல் முழிப்பார்கள். நான் ரசித்த காட்சி அது. நல்ல கேள்வியும் கூட. ஆனால் படத்தில் கடைசி வரை பதிலே இல்லை.

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முனைகிறார் பேராசிரியர், ஜான் வெஸ்டர்ஹொப் (Jan Westerhoff). அவரின் கட்டுரை என் பார்வையில்:

நான் யார் என்பது கடினமான கேள்வி தான்.
நான் என்பதற்கு என்ன ஆதாரம்? நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் இருக்கிறேன். இது பிரஞ்சு கணித இயல் அறிஞரும் தத்துவப் பேராசிரியருமான ரெனே டெஸ்கார்ட் (Renė Descartes) சொன்ன விளக்கம்.

நான் குழந்தையாய் இருந்தபோது, பிறகு பள்ளிப்பருவ வயதில், இன்னும் இளைஞன்/இளைஞி… என்று இப்படியே வயது ஏறிக் கொண்டே போனாலும், நடந்த சம்பவங்கள், என் நடத்தைகள், மற்றவர்களின் நடத்தைகள், பேச்சுகள் மனதில் இன்றும் இருக்கின்றன. நாளையும் இருக்கும். அதற்கு அடுத்த நாளும் .. இருக்கத்தான் போகின்றன.

ஆகவே இந்த நினைவுகள் ஒரு தொடர்ச்சியாகவும் மாறாமலும் இருப்பதால் நான் என்னும் நினைப்பு உண்டாகிறது. (உதாரணமாக, ஐந்து வருஷம் முன்னே இருந்த நான் தான் இப்போதும் இருக்கிறேன். இன்னும் ஐந்து வருஷம் போனாலும் அதே போலத்தான் இருப்பேன்.) இது முதலாவது காரணம்.

வெளி உலகத்தில் எப்போதுமே களேபரம் தான். ஏதோ ஒன்று ஓடுகிறதா? அழுகை சத்தமா அது? சிரிக்கிறார்களா? பலர் ஓடுகிற மாதிரி இருக்கிறதே? என்று வித்தியாசமான காட்சிகள், நடப்புகள், சத்தங்கள்… புரியாமல் தத்தளிக்கிறோம்.

நம் மூளை உதவிக்கு வருகிறது. முன்பு அது பதிவு செய்து வைத்திருந்த சம்பவங்களை இப்போது நாம் பார்க்கும், கேட்கும், நடப்புகளோடு ஒப்பிடுகிறது. ஒரு ஒழுங்கை ஏற்படுத்துகிறது.

இப்போது நமக்குப் புரிகிறது. ரயில் வண்டி ஓடுகிறது. அது நம் குழந்தை அல்லது அடுத்த வீட்டு சாத்தான். (எப்ப பாத்தாலும் முரண்டு பிடிக்கும். அழும்.) அவர்கள் எனக்குத் தெரிந்த வேலைவெட்டி இல்லாத பயல்கள். ஏதோ சொல்லிச் சிரிக்கிறார்கள். அவர்கள் அம்மா, அப்பா வேலைக்கு ஓடுகிறார்கள்… புரிகிறது.

மூளையின் உதவியால் நான் சிந்திக்கிறேன். நான் என்னும் சிந்தனை உருவாகிறது. இது இரண்டாவது காரணம்.

அடுத்து, நாங்கள் எந்த நேரமும் எதிர்வினை (reaction) ஆற்றிக் கொண்டே இருக்கிறோம். பசித்தால் சாப்பிடுகிறோம். தாகம் எடுத்தால் கோக் வேண்டாம். பெப்சி என்கிறோம். செல்போனை மீட்டுகிறோம். மயங்கிப் போகிறோம்.

அதாவது, நம் உடம்பு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனசு அதைவிட லோல் படுகிறது. ஆகவே நம் இருப்பு என்பது நம்மை
யோசிக்க வைக்கிறது. ஏதாவது செய்ய வைக்கிறது. நான் எனும் நினைப்புக்கு இது மூன்றாவது காரணம்.

கோர்க்கவோ, திரிக்கவோ?

ஒரு முத்துமாலையின் சரம் போல நான் இருக்கிறது என்று ஒரு கொள்கை உளவியலில் இருக்கிறது. அனுபவங்கள், முத்துக்கள் போல நான் என்னும் சரம் ஊடாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன என்பது இதன் பொருள்.

துக்கம், கோபம், மகிழ்ச்சி என்று இப்படிப் பல உணர்வுகள் (அனுபவக் கூறுகள்) எப்போதும் நம்மைப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன. காலம் ஓடினாலும் தாக்கம் இருக்கிறது. முத்துக்களின் தன்மைகள் எப்படி இருந்தாலும் அவை கோர்க்கப்பட்டிருக்கும் சரம் அப்படியே இருக்கிறதே. அந்த சரமா நான்? இந்த எடுத்துக்காட்டில் குறை இருக்கிறதே.

கயிறு போல நான் இருக்கிறது என்பது இன்னொரு கொள்கை. அதாவது, நான் என்பது எல்லா அனுபவங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கயிற்றின் நார்கள் போல் பிணைந்திருக்கின்றன என்பது இந்த உதாரணம். நான் என்பது எண்ணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் படிந்த அடுக்குகள்.

இந்த எடுத்துக்காட்டிலும் தவறு உண்டு. நான் யோசிக்கிறேன் என்று வைத்துக் கொண்டால், எனது ஒரு பகுதியா சிந்திக்கிறது? என் முழு மனதும் ஒருமுகமாய் சிந்திக்கிறதே. ஒரு தனி நார் கயிறாகாது. ஆகவே இந்த உதாரணப்படி, மனத்தின் ஒரு பகுதி மட்டும் சிந்திக்கிறது என்று தவறான முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.

மேல் சொன்ன, முழுமை பெறாத இரண்டு உதாரணங்களோடு திருப்திப்பட வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். உளவியல் ஆய்வுகள் கயிறு உதாரணத்தை நெருங்கித் தோன்றுகின்றன. ஆயினும் எந்த முடிவுக்கும் வந்த பாடில்லை.

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ..

நம் மூளை நம்மைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கிறது என்று மேலே கண்டோம். அதிலும் ஒரு பின்னடைவு இருக்கிறது. ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்லும் என்று நமக்குத் தெரியும்.

அப்படியானால், ஒருவர் பேசுவதற்கு வாயசைத்தால் அது நமக்கு முன்னமே தெரிய வேண்டும். அவர் பேச்சு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகவேண்டுமே. அப்படி நடப்பதில்லை. அவர் வாயசைப்பதும் சொல்லுவதும் ஒரே நேரத்தில் நமக்குத் தெரிகின்றனவே. என்ன காரணம் ?

இங்கே மூளை சிறப்பாக நாடகம் ஆடுகிறது. ஒளியை முதலில் உள்வாங்கிக் கொண்டாலும் ஒலி வந்து சேரும்வரை காத்திருக்கிறது. இந்தக் கால இடைவெளி நமக்குத் தெரியவே தெரியாது. (ஏனென்றால் நாம் மூளையை முழுதாக நம்பியிருக்கிறோம்.) பின்பு இரண்டையும் கலந்து ஒன்றாய் வெளியிடுகிறது.

மேற்படி விளக்கத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும். அதிலும் கோளாறுகள் இருக்கின்றன. Beta phenomenon என்பதை எடுத்துக் கொள்வோம். இது ஒரு நூதனமான நிகழ்வு. ஆனால் மிகவும் எளிமையான ஒரு செயல்பாடு.

ஒரு பிரகாசமான புள்ளியை ஓர் கணம் திரையில் ஒரு மூலையில் மின்ன விட்டு, அடுத்த கணம் அதன் எதிர் மூலையில் அது போல இன்னோர் பிரகாசமான புள்ளியை மின்ன விட்டுப் பார்த்தால், முதல் புள்ளி இரண்டாவது புள்ளியையே நோக்கி நகர்வது போலத் தெரியும்.

இதை மேல் சொன்ன முறையில் இப்படி சொல்லலாம். நம் மூளை இரண்டு புள்ளிகளையும் பதிவு செய்து அவற்றின் இடைவெளியில் மாயப்புள்ளிகளை உருவாக்கி முதல் புள்ளி இரண்டாவது புள்ளியை நோக்கி நகர்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. சரி. ஏற்றுக் கொள்ளலாம்.

இப்போ மின்னும் புள்ளிகளின் வண்ணத்தை மாற்றினால் என்ன நடக்கும்? உதாரணமாக, முதலில் ஒரு சிவப்புப் புள்ளி மின்னுகிறது. எதிர் மூலையில் பச்சைப் புள்ளி மின்னுகிறது. பார்ப்பவர்களுக்கு இரண்டுக்கும் நடுப் புள்ளியில் சிவப்பு பச்சையாக மாறுவது போல் தெரியும்.

கேள்வி என்னவென்றால், பச்சை நிறப் புள்ளி ஒரு தடவை மின்னி மறைந்து விட்டாலும், அது மீண்டும் தோன்றும் முன்னரே, இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டின் நடுப் புள்ளியில் இருந்து பச்சை வண்ணம் ஆரம்பிக்கிறது. மூளைக்கு, இனி பச்சை வண்ணம் தான் மின்னப் போகிறது என்று எப்படித் தெரியும்?

இதை இந்த முறையில் விளக்கலாமோ? சிவப்புப் புள்ளியை முதலில் உள்வாங்கிக் கொள்கிறது. பச்சை வரும் வரை காத்திருக்கிறது. வந்தபிறகு, இரண்டுக்கும் நடுப் புள்ளியில் இருந்து சிவப்பை பச்சையாக மாற்றி விடுகிறது. இரண்டு புள்ளிகளையும் அதன் பின்னரே அந்தந்த இடத்தில் தெரிய வைக்கிறது.

ஆனால்?… ஒரு காட்சியைத் தூண்டி உருவாக்க, ஒரு குறிப்பிட்ட கால எல்லை தேவை. அதுவும் இயற்பியல் ரீதியாக சாத்தியப்படும் கால இடைவெளிக்குள் (physically possible time interval) மட்டுமே நடந்தாக வேண்டும். இங்கே மின்னும் புள்ளிகளின் ஒளி நம் மூளையை அடைந்து அங்கே பகுப்பாய்வு செய்யப்பட்டு மீண்டும் நான் என்னும் நமக்கு மாஜிக் காட்ட மூளைக்கு அதிக நேரம் எடுக்குமே.

ஆகவே இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை.
Beta phenomenon என்பதை வேறு வழியில் தான் நாம் புரிந்து கொள்ள முடியும்.

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் …

ஒருவேளை, உலகின் நிகழ்வுகளை ஒருமுகமாக்கி, நம் மூளை ஓரே ஒரு காட்சி தான் காட்டுகிறது என்று நினைப்பது தப்போ? நம் மூளையின் நியூரான்கள் (neurons) ஒரு பொது அணியாக இல்லாமல் பல்வேறு அமைப்புகளாக செயல்படுகின்றனவா? பல்வேறு உணர்வு நிலைகள் உருவாகின்றனவா? ஒரே ஒரு மனம் என்பது தப்பான கருத்தா? வித்தியாசமான மனநிலைகள் (different mental processes) தோன்றிக் கொண்டே இருக்கின்றனவா?

பொதுவான மனம் என்று ஒன்றுமே இல்லை என்கிற முடிவுக்கு நாம் வந்துவிட்டால், Beta phenomenon நிகழ்வை விளக்க, நேரம் அது இது என்று எதுவும் தேவைப்படாது.

இதை இன்னொரு உதாரணம் மூலமும் விளக்கலாம். இந்த வசனத்தைப் பாருங்கள். அந்த மனிதர் வெளியே வந்தார், அவர் சாப்பிட்ட பிறகு.

நமக்கு சொல்லப்பட்ட வரிசை குழப்பத்தை உருவாக்கினாலும் சுதாரித்துக் கொள்கிறோம். ஏனென்றால் நமக்குக் கால வரிசை முக்கியம். முதலில் அவர் சாப்பிட்டார். பிறகு வெளியே வந்தார்.

மூளை ஒவ்வொரு சொல்லையும் கணக்கில் எடுத்து பிறகு கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தி நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. என்றாலும் …

அந்த விளக்கத்தை விட , பல நியூரான் அமைப்புகள் தோன்றி ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கிய பிறகு அப்படியே படம் காட்டுகின்றன. நாம் ஒவ்வொரு சொல்லையும் நமக்குப் புரிகிற கால வரிசைப்படி எடுத்துக் கொள்கிறோம். இப்போ நமக்குப் புரிகிறது.

உளவியல் ஆய்வுகள், இந்த விளக்கத்துக்குத் தான் ஆதரவாய் நிற்கின்றன.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…

ஒரு உளவியல் ஆய்வு நடத்தினார்கள். ஒரு தன்னார்வலர் (volunteer) கணனி முன் உட்கார்ந்திருக்கிறார். கணனியின் திரையில் 50 சிறிய பொருட்கள் தெரிகின்றன. அவர் கணனி சுட்டி (mouse) மூலம் ஒவ்வொரு பொருளாய்த் தொட்டுக் கொண்டே போகலாம். 30 வினாடிகளுக்கு ஒரு தடவை, ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தொடுங்கள் என்பார். அதைத் தொடவேண்டும்.

ஆய்வாளரும் கணனி முன் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் முன்னையவரின் அதே கணனி நிரல் தான். வித்தியாசம் என்னவென்றால், இவரால் தன்னார்வலரின் கணனி சுட்டி அசைவைத் தன் கணனி சுட்டி மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த விஷயம் முன்னவருக்குத் தெரியாது.

உதாரணமாய், ரோஜாப்பூவை ஆய்வாளர் தொடப் போகும்போது (30 வினாடிகள் முடிய ஒரு சில வினாடிகள் இருக்க) ஆய்வாளர், ரோஜாபூவைத் தொடுங்கள் என்கிறார். முதலாமவரின் திரையிலும் ரோஜாப்பூ தொடப்பட்டுவிட்டது. நினைவிருக்கட்டும். முதலாமவர் தொடவில்லை. ஆய்வாளர் தான் தன் சுட்டி மூலம் தொட்டார்.

முதலாமவரிடம் கேட்டபோது, ரோஜாப்பூ என்று காதில் கேட்டதும் நான் தொட்டுவிட்டேன் என்கிறார். அவர் பொய் சொல்லவில்லை. அவர் அப்படி நினைத்திருக்கிறார். இதில் தெரிவது: நம் மூளை, தன்னுடைய நடவடிக்கைகளை மறைத்துக் கொள்கிறது. உண்மை வேறாக இருக்க, இன்னொரு காட்சியை உருவாக்குகிறது. மூளை ஏன் பொய் சொல்லவேண்டும்?

(இந்த ஆய்வு American Psychologist,, vol 54, page 480 இல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.)

இதுவரை நாம் நம்பிக்கொண்டிருக்கும் (ஒரு) மூளை, (ஒரு)மத்திய செயல்பாட்டு அமைப்பு என்னும் கொள்கையை புதிய ஆய்வுகள் கேள்விக்குள்ளாக்குகின்றன.

வாழ்வே மாயம்?..

நியூரான் அமைப்புகள் என்பது ஒவ்வொரு கணமும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பிறகு மறைந்து விடுகின்றன. இந்தத் தொடர்ச்சி நடந்து கொண்டே இருப்பதால் இந்தக் கோர்வை நான் என்னும் மயக்கத்தை உருவாக்குகிறது.

நான் மாற்றங்கள் எதுவும் இல்லாத ஒரே ஒரு ஆள் . என் அனுபவங்கள் எல்லாம் உண்மை என்று நினைப்பது …

யோசித்துப் பார்த்தால், நான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கருத்தே சந்தேகமாக இருக்கிறது.

நான் என்பதே ஒரு மாயை . அதே சமயம், நமது வாழ்க்கைக்கு இந்த மாயை அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெலாம் சொப்பனந் தானோ? மகாகவி மட்டுமா பாடுகிறான்?

…………………………………………………………………………………..

NewScientist, 23 February 2013 இதழில் வெளிவந்த Durham பல்கலைக்கழக உளவியல், தத்துவப் பேராசிரியர், Jan Westerhoff எழுதிய கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பு மேலே.