கவுதம புத்தர்

எதுவும் நிரந்தரமல்ல. மாற்றம் மட்டுமே உண்மை. பிறப்பு பெரும் துக்கம். பிறப்பில்லாத நிலையை அடைய கர்மவினைகள் முடிவுக்கு வரவேண்டும். தேவர்களென்ன கடவுளே வந்தாலும் அவரும் கர்மவினைக்கு உட்பட்டவராகிறார்.

என் போதனைகள் அல்ல அவை. தம்ம போதனைகள் என்று சொல்லுங்கள். தம்மம் எனக்குப் பிறகு ஒரு 500 ஆண்டுகளாவது நின்று பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார் அவர். 500 என்ன 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது பவுத்தம்.

அதை விட வியப்பு : அந்தக் காலமோ, இந்தக் காலமோ கடவுள் என்கிற அம்சம் இல்லாமல் எந்த மதமும் இருந்ததில்லை. அனைத்துக்குமே கடவுள் நம்பிக்கை அடிப்படை.

கடவுளா? அது பற்றி எதுவும் எனக்குத் தெரியாதே என்று பதில் சொன்னவர் புத்தர். அப்படி ஓர் மதத்தை – தவறு, ஒர் வாழ்வியலை உருவாக்கிய மனிதர் எத்துணை ஆற்றல் படைத்தவராய் இருந்திருக்க வேண்டும்?

எதுவுமே இல்லை. அவர் அரச குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனாலும் நம்மைப் போல் ஒரு மனிதர். காலப்போக்கில், அவரை ஒரு அவதார புருஷராக அல்லது பிரம்மாண்ட மனிதராக மாற்றி விட்டார்கள் என்கிறார் இந்திய வரலாற்று அறிஞர் ஷூமன் (H.W. Schumann).

(ஜெர்மன் நாட்டுக்காரரான இவர் எழுதிய The Historical Buddha ஏட்டில் இருந்து சில தகவல்கள் இங்கே வருகின்றன. புத்த தத்துவம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஷூமன் சிலகாலம் வாரணாசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்திருக்கிறார்.)

பொதுவாக, இந்திய சமுதாயம் தனி மனித வரலாற்றுக் குறிப்புகளை விட, அவர்களின் கொள்கைகளுக்கே முக்கிய இடம் கொடுப்பது வழக்கம். முன்னோர்கள் வாழ்ந்த காலம், வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் மிகமிகக் குறைவாகவே கிடைக்கின்றன. கற்பனைகளும் இடைச்செருகல்களும் செய்திகளில் இலகுவாகவே கலந்து விடுகின்றன.

நல்ல காலமாக, பவுத்த பிக்குகள் சந்ததி சந்ததியாய், மனனப் பயிற்சி மூலம் செய்திகளை நேர்மையுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். மேலும், அன்றைய வெளிநாட்டுப் பயணிகள் (சீனா, கொரியா போன்ற) எழுதிய பயணக் குறிப்புகளில் இருந்தும் புத்தர் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று எழுதிச் செல்கிறார் ஆசிரியர்.

அவரின் ஆய்வு, அசோக மன்னனின் கல்வெட்டுகள், பட்டயங்கள், இலங்கையில் கி.மு. முதலாம் நூற்றாண்டில் முதன் முதலாய் எழுத்தில் வார்க்கப்பட்ட ஓலைச் சுவடிகள் (பாளி மொழியில்) மற்றும் இலங்கையின் காடுகளில் வாழும் பிக்குகளின் நேர்காணல்கள்.. என்று பயணிக்கிறது.

ராணி, மாயாவை அவசர அவசரமாக, மாட்டு வண்டியில் ஏற்றுகிறார்கள். கற்களும் மணலும் நிறைந்த கரடு முரடான பாதையில் விழுந்து, எழுந்து போகிறது வண்டி. (தயவு செய்து, வானிலிருந்து தெய்வங்கள், தேவர்கள் பூமாரி பொழியும் அபத்தங்களை மறந்து விடுங்கள்.) அந்த மாட்டு வண்டியின் குலுக்கலில் வீல் என்று கத்துகிறாள் மாயா. வழியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை. பாதையின் ஓரமாய், ஒரு காட்டு மர நிழலில் சித்தார்த்தன் பிறக்கிறான்.

வாரிசு பிறந்துவிட்டதே! அரசன் சுத்தோதனனுக்கு செய்தி பறக்கிறது. மகிழ்ச்சியில் நாள் கணக்கில் கொண்டாட்டம் போட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கிடையில் மாயாவின் உடல்நிலை மோசமடைகிறது. விழாக்கோலத்தைப் பார்த்தபடி, ஏழாம் நாள் நிரந்தரமாகக் கண்ணை மூடுகிறாள்.

உடன் பிறந்த அக்கா போய்விட்டாலும் சித்தார்த்தனை என் மகன் போல் வளர்ப்பேன் என்று பாசத்தோடு வளர்க்க ஆரம்பிக்கிறாள் பஜாபதி – மன்னனின் இரண்டாம் மனைவி.

சித்தார்த்தன், அப்பாவோடு அவரின் வயலில் உழுதிருக்கிறான். (அன்று மன்னர்களும் அவர்களின் பங்கு நிலத்தில் உழுதிருக்கிறார்கள்.) தவிர, சுத்தோதனன் ஒரு சிற்றரசன். கோசல நாட்டின் ராஜா. அவ்வளவு தான். மகத நாட்டின் கீழ் கோசலா இருந்தது.

அவன் ஒரு காலத்தில் ஞானியாகப் போய்விடுவான். ஆகவே அரண்மைக்கு உள்ளேயே .. என்று நாம் கேள்விப்பட்டது எல்லாம் சும்மா. சித்தார்த்தனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன என்பது தான் உண்மை – அதாவது, மற்றவர்களை விட. காரணம் தெரிந்ததே.

நிச்சயம் அவனுக்கு மூப்பு, மரணம், நோய்நொடிகள் பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கும். வேட்டைக்குப் போ என்று அப்பா சொன்னதற்காகப் போயிருக்கிறான். அநியாயமாக மிருகங்களைக் கொல்ல வேண்டுமா என்று கேட்டிருக்கிறான். இளமையிலேயே துறவு நிலையை விரும்பியிருக்கிறான்.

நண்பர்களை விட, தனிமை பிடித்திருந்தது. அவனை வளர்த்த சிற்றன்னைக்கு அவன் குணாதிசயங்கள் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஒருநாள் அவன் நம்மை வீட்டுப் போய்விடுவான் என்று நினைத்து நினைத்துப் பல தடவைகள் அழுதிருக்கிறாள் .

சித்தார்த்தனுக்கு எழுத, வாசிக்கத் தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே. எதையும் கூர்ந்து நோக்கும் பண்பு, சிந்திக்கும் திறன் மட்டும் குறையாமல் இருந்தது. (பிக்குகளுக்கு எழுத, வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறப்பில் இருந்து விடுவித்துக் கொள்வதே அவர்களுக்கு முக்கியம் என்கிறார் புத்தர் தம்ம போதனையின் ஓரிடத்தில்.)

அவனுக்கு வில்வித்தை, வாள்வித்தை பயிற்சிகள் நடந்தன. ஆனால் வீர விளையாட்டுகளில் பெரிதாய் எதுவும் அவன் சாதிக்கவில்லை. அதே சமயம், அரண்மனையில் நடந்த பல்வேறு சாதுக்கள், யோகிகளின் சமய விவாதங்களில் ஆர்வம் காட்டியிருக்கிறான்.

எதிர்காலத்தில் ராஜாவா வரவேண்டிய நம்ம பையன் இப்டி இருக்கானே என்று ரொம்பவும் கவலைப்படுகிறார் பெரிய ராஜா. திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு தானாக வந்துவிடும் என்று நினைக்கிறார். ஆனால் வரப்போகும் சம்பந்திக்கு ஏற்கெனவே விஷயம் தெரிந்திருந்தது. ஆளை சமாளிக்க, ராஜா, தன் பையன் சூராதி சூரன் என்பதாக திட்டம் போட்டு ஒரு “ஷோ” காட்டி, சம்மதிக்க வைக்கிறார்.

அழகு மங்கை யசோதராவுக்கும் 16 வயசு. சித்தார்த்தனுக்கும் 16 வயசு. இருந்தும் அவர்கள் குழந்தை ராகுல் பிறக்க, ஏன் 13 ஆண்டுகளாயிற்று? கொக்கி போடுகிறார் ஆசிரியர். சித்தார்த்தனின் துறவு மனோநிலை ஒரு காரணம்?

புத்தர் வாழ்ந்த அன்றைய சமுதாயம் எப்படி இருந்தது? பக்கம் பக்கமாக விவரிக்கிறார் ஆசிரியர். எதிர்பார்த்தது போல், வைதீக மதத்தின் பிராமணர்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தார்கள். நான்கு வர்ணங்கள் இருந்தன. ஜாதிகள் இருந்தன. யாரும் அந்தந்த சமூகங்களின் கட்டுப்பாடுகளை மீறத் துணியவில்லை.

ஆனால் தீண்டத்தகாதவர்கள் என்கிற பிரிவு இன்னும் உருவாகாத காலம் அது. பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள். சிவன் தெய்வம் மற்றும் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை ஏதும் தோன்றாத காலம். பசுக்களுக்குப் பூஜை செய்வது பற்றியும் எதுவும் அறியாத காலம்.

நான்கு வேதங்கள் இருந்தன. உபநிடதங்களும் வந்திருந்தன. வேத விற்பன்னர்கள் யாகங்கள் செய்து (காசு கொடுத்தால்) தெய்வங்களிடம் வரங்கள் வேண்டி மக்களுக்கு உதவினார்கள்.

ஆனால் யாகங்களில் பலி கொடுக்க என்னென்ன தேவை என்கிற பட்டியல் மட்டும் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போனதில் சாதாரண மக்கள் மட்டுமல்ல, வணிகர்கள் கவலையும் கூடிக் கொண்டே போயிற்று.

இது போக, இன்று போலவே மக்கள் அன்றும் சாதுக்கள், யோகிகளுக்கு உணவளிப்பது, அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவை அவர்களின் கர்மவினைகள் தீர உதவும் என்று அழுத்தமாக நம்பினார்கள்.

சித்தார்த்தன் துறவுக்கு வருகிறோம். கர்மவினைகளை எப்படி அகற்றுவது, துக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று காட்டுக்குள் வந்துவிட்டான். ஆனால் துன்பமோ துன்பம். இருந்தும் அவன் தனியாக இல்லை. கடும் யோகங்கள் செய்தவர்களையும் சந்திக்கிறான். ஆலோசனைகள் கேட்கிறான். பல வழிமுறைகளையும் முயற்சி செய்து பார்க்கிறான்.

சிலர் நாள் கணக்கில் பட்டினி கிடந்தார்கள். சிலர் உடல் அவயவங்களையே வெட்டிக்கொண்டார்கள். சிலர் உடலைத் தீயில் சுட்டுக் கொண்டார்கள் – எல்லாம் பரம்பொருளுக்காக. நல்ல நேரம் – சித்தார்த்தன் அவ்வளவு தூரம் போகவில்லை. இருந்தும் உடலை வருத்திக் கொண்டான் என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.

அலரா கலமா என்கிற துறவியை சந்திக்கிறான். சிந்தனை மாறுகிறது. அவரின் தியான முறையைக் கற்றுக் கொள்கிறான். ஆனால் அதுவும் அவனைக் கவரவில்லை.

அந்த நாளில், காடுகளில் சிங்கம், புலி மற்றும் கொடிய விலங்குகள் தாராளமாகவே திரிந்தன. கொஞ்சம் அசட்டையாய் இருந்தாலே கதை முடிந்துவிடும். ஆகவே சித்தார்த்தன் ஊர்களுக்கு அண்டிய பூங்காக்கள் போன்ற இடங்களில் இருந்து தியானத்தைத் தொடர்ந்திருக்கிறான்.

அரசமர நிழல் ஒரு தற்செயலான நிகழ்வு. எந்த மரத்தின் கீழிருந்தாலும் அவனுக்கு ஞானம் ஏற்பட்டிருக்கும். என்னமோ அரசமரம் அந்தப் புகழைத் தட்டிக் கொண்டு போய்விட்டது என்கிறார் ஆசிரியர்.

புத்தர் மேல் பிரமிப்பு கொண்டவர்கள் அவரை தெய்வீக அம்சம் உள்ளவராக சித்தரித்திருக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டு : ஒரு தடவை, காட்டின் அருகில் ஓர் குடிலில் (உருவெல) புத்தர் தங்கி இருந்தபோது மூன்று இரவுகள் அந்தக் காடே இரவில் ஒளிர்ந்ததாம்.

அது இரவில் குளிர் தாங்கமுடியாமல் அல்லது காட்டு விலங்குகளை விரட்ட, புத்தர் மூட்டிய நெருப்பாக இருக்கவேண்டும். (இது போல் இன்னும் ஏராளமான புனைகதைகள் பின்னால் உருவாகின.)

ஒரு இரவிலேயே (விசாக பவுர்ணமி) அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டதா? இல்லை. இல்லை. அவருக்கு ஏற்பட்டது முதலில் ஒரு பொறி! பளிச் என்கிற உண்மை. ஆனால் அதை நெறிமுறைப்படுத்தி மற்றவர்களுக்குப் புரிய வைக்க இன்னும் மூன்று இரவுகள் அவருக்குத் தேவைப்பட்டிருக்கின்றன.

உணவுக்காக, வாசலில் கையேந்தி நின்ற சாதுக்களை சிலசமயங்களில் மக்கள் அவமதித்திருக்கிறார்கள். சும்மா இருந்து தின்று கொழுக்கும் பன்றிகளே என்று கூடத் திட்டியிருக்கிறார்கள். புத்தரும் அதற்கு விலக்கல்ல. பேசாது, அமைதியாக அகன்றிருக்கிறார்.

அவரிடம் உபதேசம் கேட்டவர்கள் அவர் உருவாக்கிய பிக்குகளின் சங்கத்தில் சேர்ந்தார்கள். அதுவும் சிலர் குறுகிய காலத்தில் மனம் மாறினார்கள். அவரிடம் அப்படி என்ன தான் கவர்ச்சி இருந்திருக்கும்?

பவுத்த நூல்களை விடுங்கள். அவருக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட மாற்று மதத்தினர் (ஜைன மத துறவிகள்) எழுதிய சில குறிப்புகள் : அவரின் அழகான உடலமைப்பு.. முகத்தில் தெரியும் அமைதி.. எதையும், நுண்ணறிவோடு பேசும் ஆற்றல் அனைவரையும் ஈர்க்கிறது …

ஆகவே புத்தர் அழகாகவே இருந்திருக்கிறார். ஊர் ஊராய் நடந்திருக்கிறார். வாழ்நாள் முழுக்க, முழுக்க – காலணிகள் ஏதுமில்லாமலே. பிச்சை வாங்கியே சாப்பிட்டிருக்கிறார். அதே சமயம் முடிந்தளவு உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி இருக்கிறார்.

வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அங்கே கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலைந்துவிடும். நேரே மோட்சம் போய்விடலாம் என்று இன்றும் இந்து பக்தர்கள் நம்புகிறார்கள். வைதீகர்களுக்கும் நல்ல வருமானம். இவரோ, அதெல்லாம் புண்ணாக்குத்தனம். வெறும் சடங்குகள் எவரையும் புனிதராக்குவதில்லை. யாகங்கள், உயிர்ப் பலிகள் எல்லாம் மூடத்தனங்கள் என்று போதிக்கவே, அடித்து விரட்டி இருக்கிறார்கள்.

அவரின் சொந்த ஊரான கபிலவஸ்துவுக்குப் போயிருக்கிறார். அங்கே உணவுக்காக பிச்சைப் பாத்திரத்தோடு ஒவ்வொரு வீட்டு வாசலின் முன்னாலும் நின்றபோது, தலைநகர் மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? என்ன நடந்திருக்கும்?

யசோதராவையும் அப்போது பிறந்திருந்த குழந்தை ராகுலையும் கைவிட்டுப் பிரிந்தது தப்பில்லையா? கேள்வி எழத்தான் செய்யும். (ஆசிரியர் இதற்கான பதிலை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்கிறார்.) இளவயதில் இருந்தே துறவறத்தில் நாட்டம் கொண்ட ஒருவனை இல்லறத்தில் தள்ளியது சரியா?தவிர, அன்றைய காலகட்டம், நம்பிக்கைகள், வாழ்வுமுறை எல்லாவற்றையுமே நாம் கணக்கில் எடுத்தால் …

எதையும் அந்தந்த கால கட்டத்தோடு பொருத்திப் பார்ப்போர் அறிவார்ந்தோர்.

புத்தர் யார், விவரங்கள் அநேகமாக, அவர் சென்றிருந்த பகுதிகளில் முன்னமேயே தெரிந்திருந்தது. மேலும், அவர் சங்கத்தில் சேர்ந்தவர்கள் எல்லாரும் குடும்பத் தலைவர்கள். அவர்கள் இல்லாத நிலையில், அவர்கள் குடும்பங்கள் எப்படி எல்லாம் கஷ்டப் பட்டிருக்கும்?

ஆசிரியர் இந்தக் கேள்வியையும் கேட்கிறார். பதிலும் சொல்கிறார். புத்தர் சமூகத்தை சீர்திருத்த வந்தவரல்ல. அவர் ஆன்மீகவாதி. தனக்கு கிடைத்த ஞானத்தை முழுமையாக நம்பியவர். தன்னைப் போல் மற்றவர்களும் பிறப்பு என்னும் துக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று மட்டும் சிந்தித்தவர். வேறு எதுவுமே அவர் சிந்தனையில் இருக்கவில்லை.

அவர் எல்லாரையும் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ பேரை மறுத்திருக்கிறார்.

உபநிடதங்களின் கர்மவினை, மறுபிறப்பு போன்ற கருத்துப் படிவங்களை ஏற்றுக் கொண்டவர் கடவுள், ஆன்மா என்று எதுவும் இல்லை என்கிற முடிவுக்கு வருகிறார்.

அனாத்ம வாதம் அவரின் தனிச் சிறப்பு. ஆசை தான் அனைத்துக்கும் அடிப்படை. நான் என்பது ஓர் மாயை. இந்தத் தன்னுணர்வை எப்போது விட்டுத் தள்ளுகிறோமோ அப்போது விடுதலை கிடைக்கிறது. அதன் பின் பிறப்பில்லை. துன்பமில்லை. இன்பமும் இல்லை. அந்த ஒன்றுமே இல்லை என்கிற நிலைக்கு வழி காட்டுகிறேன் என்கிறார் புத்தர்.

தேவர்கள், தெய்வங்கள் ஒருவேளை நம்மை விட அதிக ஆனந்தத்தில் மூழ்கி இருக்கலாம். நம்மை விட அதிக காலம் இன்பம் துய்க்கலாம். ஆனால் அவர்களுக்கும் கால எல்லை இருக்கிறது. அது வந்ததும் துயரமும் வந்தே தீரும். அவர்கள் மீண்டும் மனிதப் பிறவி எடுத்து தம்மத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே அவர்களுக்கும் விடிவு.

தேவர்களோ, தெய்வங்களோ நாமோ எதுவோ எல்லாரையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துகிறார் புத்தர்!

அடுத்து, அவர் நடைமுறை சாத்தியமான வழிகளையே பரிந்துரை செய்திருக்கிறார். அவர் மாமிசம் சாப்பிடவேண்டாம் என்று சொல்லவில்லை. தேவைக்கன்றி எந்த உயிரையும் கொல்லாதீர்கள். பிக்குகளுக்கு ஊனுணவு கொடுப்பதைத் தவிருங்கள்.

மாற்றுக் கொள்கையாளர்களையும் மதித்தவர் அவர். உணவுக்காக அவர் வீடுகளின் முன் கையேந்தி நின்றபோது, வேறு சாதுக்கள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சொல்லி விலகி நின்றவர்.

யாராவது துறவிகளுக்குத் தானம் செய்ய விரும்பினால், என் சங்கத்தினரைப் போலவே எதிர்க் கொள்கை கொண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று கோரிக்கை வைத்தவர் புத்தர்.

மகத நாட்டின் பிம்பிசார மன்னன், அவன் வாழும் வரை புத்தரிடம் மதிப்பு வைத்திருந்தான். ஆலோசனைகள் கேட்டிருக்கிறான். அவன் பின்னால் ஆட்சிக்கு வந்த அவன் மகன் அஜாதசத்ரு, அப்பாவைக் கொன்று தான் ஆட்சிக்கு வந்தேன் என்று புத்தரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது அவரின் மேன்மைக்கு ஒரு சாட்சி.

அனைத்து உயிர்களிடமும் அன்பு, கருணை காட்டுதல் அவர் போதனையின் சாரம்.

யாகங்களில் உயிர்ப்பலி தருவதை அவர் எதிர்த்ததை அவரின் பிக்குகள் சங்கம் அதன் வரலாற்றுக் கடமையாகவே செய்து வந்திருக்கிறது. அதன் தாக்கம் : இன்று பிராமணர்கள், நெருப்பில் தானியங்களைப் போட்டு அவர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுக்கிறார்கள்.

நல்ல பிராமணன் என்கிற வாசகம் அவர் போதனைகளில் வரும். அது பிராமணீயத்தை ஏற்றுக் கொண்டேன் என்கிற பொருளில் வருவதல்ல. வேதங்கள் அறிந்த அந்தணர்கள் காலப்போக்கில் சுயநலமிகளாக, ஏமாற்றுப் பேர்வழிகளாக மாறிவிட்டார்களே என்கிற ஆதங்கத்தில் உதிர்த்த வார்த்தைகள் அவை.

பிராமணர்கள், பிரம்மன் வாயில் இருந்து தோன்றியவர்கள் என்பதை மறுத்தார். பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல என்று போதித்தார். சமுதாயத்தின் அடிமட்ட மக்கள், அவர்களின் முன்பிறப்பில் செய்த கர்மவினைகளால் அவதிப்படுகிறார்கள் என்றார்.

அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நடப்புகளை அவர் மதித்தார். அரசனுக்கு செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டிவிடுங்கள் என்றார். அரசர்கள் தவறான வழிகளில் செல்லும்போது தானே சென்று அறிவுரை சொல்லித் திருத்தி இருக்கிறார். முடிந்தளவு அரசர்களின் யுத்தங்களைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

அவரின் உபதேசங்கள் நிச்சயம் அடித்தட்டு மக்களைக் கவர்ந்திருக்கும். யாகங்கள் செய்து தெய்வங்களிடம் வரங்கள் கேட்பது தேவை தானா என்று வணிகர்கள் ஒரு தடவைக்குப் பல தடவைகள் யோசித்திருப்பார்கள். அவர்கள் நாடு கடந்து பொருளீட்டுவதால், அவர்கள் மூலம் பவுத்தம் புதிய நிலப்பரப்புகளில் கால் பதிக்க வசதியாகப் போயிற்று.

அவரின் போதனைகளில் கடுமையான விதிகள் இருப்பது போல் தோன்றினால், அது பிக்குகளுக்காக என்று பொருள்.

சாதாரண மக்களை நோக்கி அவர் சொன்னார் : சரியான சிந்தனை, சரியான செயல்பாடுகள் தான் உங்களைக் கைதூக்கிவிடும். அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று எதையும் நம்பிவிடாதீர்கள். அறிவை உபயோகியுங்கள். (மீண்டும் மீண்டும் பிறப்பதை எப்படி வெல்லலாம் என்கிற பார்வையில் தான் அவர் அறிவு என்கிற சொல்லை உபயோகித்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் நல்லது.)

அவர் காலத்திலேயே, பிக்குகள் இடையில் பிணக்குகள், சித்தாந்த மோதல்கள் உருவாகிற்று. சமரசம் செய்து வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. ஆனால் தம்ம போதனைக்கு எதிரான கருத்துக்கள் தோன்றிய போது அந்தப் பிக்குகளை உடனடியாகவே சங்கத்தில் இருந்து நீக்கினார். அவர் கோபமும் பிரபலம் வாய்ந்தது.

பெண்களை முதலில் அவர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்கியது உண்மை தான். அவர்களும் வந்துவிட்டால், குடும்பங்கள் சின்னாபின்னம் ஆகிவிடுமே என்று சிந்தித்தவர் அவர். ஆனால் அவர் சிற்றன்னையே என்னையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளேன் என்று விடாப்பிடியாய் நின்றிருக்கிறார்.

மறுக்கமுடியுமா? விளைவு : முதல் பிக்குணியாய் உபதேசம் பெற்றுக் கொள்கிறார் அவர். தொடர்ந்து, யசோதராவும் பிக்குணிகள் சங்கத்தில் சேர்கிறார்.

புத்தர் மட்டுமே கடவுள் மறுப்புக் கொள்கையை முன் வைக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் பலவித சித்தாந்தக் கோட்பாடுகள் இருந்தன (சிரமணர்கள்). இவர்களில் சில பிரிவினர், உடலை வருத்துவதன் மூலம் பிறவியை வெல்லலாம் என்று சொன்னார்கள். சிலர் ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. மறுபிறப்பு தானாகவே மறைந்துவிடும். ஏன் என்றால் ஏற்கெனவே எல்லாம் தீர்மானிக்கப் பட்டுவிட்டது என்றார்கள்.

புத்தர் இந்த அதி தீவிர எதிரெதிர் கொள்கைகளை மறுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தது ஓர் நடுநிலையான கொள்கை.

ஏட்டின் ஆசிரியர் ஷூமன், ஆசிரியர், ஆசிரியர் என்று வாஞ்சையோடு புத்தரை விளிக்கிறார். ஆய்வுக் கண்ணோடு சம்பவங்களைக் கோர்த்திருக்கிறார்.

அதே சமயம், புத்தரை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் மனிதராக – அதுவும் உயர்ந்த மனிதராகக் காட்டுவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஷூமன் சொன்னபடியே அன்றைய நடப்புகள் நூற்றுக்கு நூறு நடந்திருக்கும் என்று நினைப்பது தப்பு. இருந்தும் அவரின் விவரிப்பில் நம்பகத் தன்மை நிறையவே இருக்கிறது.

இயற்கையை அடிமைப்படுத்தி என் வசதிக்காக மாற்றிட வேண்டும். என் ஆசைகளுக்குத் தீனி போடவேண்டும். சுயநலத்துக்குப் பயன்பட மட்டுமே அறிவு தேவை எனும் கருதுகோள், முக்கியமாக, மேற்குலக வாழ்வின் அடிப்படையாய் மாறிவிட்டது. நாமும் அதை அப்படியே காப்பியடிக்க முயல்கிறோம்.

இயற்கையை அடிமைப்படுத்த முடியாது. ஆசைக்கு அளவே இல்லை. ஆசையை வெல்லமுடியுமா என்று யோசியுங்கள். அதற்காக, அமைதி, அன்பு, அகிம்சையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இன்னோர் பாதையைக் காட்டுகிறார் புத்தர்.

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

சுவை, மணம், பார்வை, கேட்டல், உணர்ச்சிகள் எல்லாமே நான் எனும் தன்னுணர்வால் (consciousness) ஏற்படும் குணாதிசயங்கள். இது மட்டும் இல்லாவிட்டால் அறிதல் அல்லது உணர்தல் என்பதே தோன்றி இருக்காது. இந்த அகநிலையின் (subjective) மேலே தான் அறிவியலின் அடித்தளமே அமைந்திருக்கிறது. இருந்தும் உயிரியலில் இதற்கான சரியான பதில் இல்லை. ஒருவேளை இயற்பியல் அல்லது நரம்பியல் துறை?

கேள்வியோடு ஆரம்பிக்கிறார் மெய்யியல் பேராசிரியர் பிலிப் கொஃப் (Philip Goff). அவரின் Galileo’s Error நூல், தன்னுணர்வை இன்னொரு கோணத்தில் பார்க்கிறது.

மெய்யியல் (philosophy) இன்றிருக்கும் இயற்பியல் கருத்துக்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தி ஆய்வு செய்கிறது. அதில் இரண்டு முக்கிய பெரும் பிரிவுகளை ஆசிரியர் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கிறார். கடைசியில் மூன்றாவதாக ஒன்று இருக்கிறது. என் கருத்தும் அது தான் என்கிறார்.

முதலில் ஒரு வரலாற்றுக் குறிப்பு : 17ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை மெய்யியல் ஞானி அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் சரியானவை என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். கலிலியோ களத்துக்கு வந்தாலும் வந்தார். எல்லா விஷயங்களையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டார்.

1623 களில் வெளியிட்ட அவரின் புத்தகத்தில், அறிவியலுக்குக் கணிதம் மிகமிக அவசியம். அனைத்தையும் சோதனைக்களத்தில் அளவீடுகள் மூலம் உறுதி செய்த பின்பு மட்டுமே உண்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரே போடாய்ப் போட்டார்.

ஒரு பொருளின் அளவு, அதன் உருவம், அது இருக்கும் இடம், அதன் அசைவு என்று நாலு கருப்பொருள்களில் உலகின் அனைத்தையும் அடக்கிவிடலாம் என்று நிர்ணயம் செய்தார் அவர். (size, shape, location and motion)

அப்போ, வாசம், சுவை போன்ற அகநிலை உணர்வுகளை எங்கே அடக்குவது என்று அவரிடம் கேட்டபோது, அவை ஆன்மாவில் தங்கி இருக்கின்றன என்று ஒரே வரியில் பதில் சொன்னார். (கடவுள், ஆன்மா போன்ற விடயங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர் இன்றைய இயற்பியலின் தந்தை என்று பேரெடுத்த கலிலியோ.)

இனி நூலாசிரியர் எடுத்துக் கொண்ட முதலாவது பிரிவு :

நான் பாட நீ ஆடு கண்ணே

இருபொருள்வாதம் அல்லது இருமை வாதம் (Dualism) எனும் சிந்தனைக்கூறு நாம் குழந்தைகளாய் இருக்கும்போதே நம் மூளைக்குள் திணிக்கப்பட்டு விடுகிறது. அதாவது நம் உடல் வேறு, மனம் வேறு என்று சொல்லிக் கொடுத்து விட்டால் பிறகு யோசிக்கவா போகிறோம்?

இந்த இருமை வாதப்படி, மனம் என்பதை உருவாக்குவதே தன்னுணர்வு தான். மூளை அல்ல. தன்னுணர்வு நம் உடலை இயக்குகிறது. கையை மேலே தூக்கு என்கிறது தன்னுணர்வு. தூக்குகிறோம். கீழே போடு. போடுகிறோம். அதெப்படி உருவமே இல்லாத தன்னுணர்வு பொருள்களை இயக்க முடிகிறது என்று கேட்டால் இருமை வாதம் கப்சிப் ஆகிவிடுகிறது.

இந்த சிந்தனையை நாம் இயற்பியலில் எங்கும் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, இயற்பியல் மேதை ஐசாக் நியூட்டன் பொருள்கள் அல்லது கோளங்களின் இடையில் இருக்கும் விசை பற்றி சொல்லிவிட்டு அதை எப்படி அளப்பது என்று கணித சமன்பாடு தந்தார். (இரண்டாம் விதி).

ஆனால் அதில் புவி ஈர்ப்பு விசை என்றால் என்ன என்று அவரால் சொல்லமுடியவில்லை. அவருக்குப் பின் வந்த மேதை ஐன்ஸ்டைன் வெளிநேரம் (spacetime) வளைவதால் புவி ஈர்ப்பு ஏற்படுகிறது என்றார். விசை அல்ல அது. புவி ஈர்ப்பு வீச்சு என்று திருத்தினார் அவர். சரி. புவி ஈர்ப்பு வீச்சு என்றால் என்ன? அவரும் சொல்லவில்லை.

வரலாற்றின் வழியே பார்த்தால் இருமை வாதம் கெட்டியாகவே இருந்திருக்கிறது. கடவுள், ஆன்மா, சொர்க்க லோகம், நரக லோகம், மறுபிறப்பு, கர்மவினை..,, இப்படி நம்பிக்கைகளை நாம் பட்டியல் போட்டால் இருமை வாதம் இவற்றில் இலகுவாகவே பொருந்திவிடும்.

இருந்தும் மேலே சொன்ன கேள்விகள் எக்குத்தப்பாக வந்து விழவே, தன்னுணர்வுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டது. எலெக்ட்ரான் அல்லது கோளங்கள் போல அதுவும் ஒரு அடிப்படையான இயற்கையின் அங்கம் என்று அதனுள் சேர்த்துக் கொண்டார்கள் இருமை வாத குழுவினர்.

பிரபஞ்சம் என்பது மனமும் பொருள்களும் சேர்ந்த ஓர் கலவை . அங்கே மனமும் (தன்னுணர்வும்) இயற்பியல் விதிகளும் சேர்ந்து இயங்குகின்றன என்று அவர்களின் புதிய விளக்கம் அமைந்தது. (psycho-physical laws). புதிய பேர்: இயற்கை இருமை வாதம். (Natural Dualism).

இந்தப் புதிய இயற்கை இருமை வாத குழுவுக்கு ஆதரவாக, நரம்பியல், இயற்பியல் துறைகள் சேர்ந்து புதிய விளக்கங்கள் தருகின்றன என்கிறார் பேராசிரியர்.

ஒருங்கிணைந்த தகவல் (Integrated Information Theory) கோட்பாடு இதில் முக்கிய செயலாற்றுகிறது. தகவல்களின் ஒருங்கிணைப்பு தான் தன்னுணர்வின் அடிப்படை என்பது இவர்கள் கருத்து. கணிதத்தின் துணை கொண்டு தன்னுணர்வை அளவீடு முறையில் கொண்டு வந்துவிட முடியும் என்கிறார்கள். (கலிலியோ அய்யாவின் நினைவு வருகிறதா?)

மூளையின் cerebrum பகுதியில் நியூரான்களின் இயக்கத்துக்கும் தன்னுணர்வின் செயல்பாட்டுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டுகிறது நரம்பியல் துறை. இருக்கலாம். ஒத்துக் கொள்கிறேன். இருந்தும் தொடர்பு ஏன் இருக்கிறது என்று நீங்கள் விளக்கவில்லையே? பேராசிரியர் விடாக்கண்டன் அவதாரம்.

ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யுங்கள். என் முடிவை ஒத்தி வைத்திருக்கிறேன் என்றும் பச்சைக் கொடி காட்டுகிறார் அவர். (பெருவாரி மெய்யியலாளர்கள், இயற்பியலாளர்கள் தன்னுணர்வோடு சேர்ந்தியங்கும் இயற்பியல் விதிகளா? இதென்ன புதுக்கதை என்று சந்தேகத்தோடு பார்க்கிறார்கள் என்று ஒரு தகவலையும் போகிற போக்கில் செருகி விட்டிருக்கிறார்.)

இறைவன் இருக்கின்றானா

இருமை வாதத்தினுள் இருக்கும் பரம்பொருள் சக்திதேவியோ? மத நம்பிக்கை உள்ளவர்கள் அவள் இல்லாமல் எதுவுமே அசைவதில்லை என்கிறார்கள்.

இயற்பியல் தெரிந்த சில பக்தர்களின் விளக்கம் இது : பேரண்ட வெடிப்பின் பின்னர் (Big Bang) நடப்பது நடக்கட்டும் என்று சக்தி தேவி அமைதியாக இருக்கிறாள்.

இது கொஞ்சம் ஓவர். இப்படி எடுத்துக் கொள்ளலாமா? அவள் பிரபஞ்ச நடப்புகளை நிச்சயம் கவனிக்கிறாள். வேண்டும்போது தலையிடுகிறாள். ஆனால் தன் இருப்பைக் காட்டிக் கொள்வதில்லை.

சக்திதேவி ஓர் உலகில் அற்புதங்கள் நிகழ்த்துகிறாள் என்று வைத்துக் கொள்வோம். தீராத நோய்களைத் தீர்த்து வைக்கிறாள். இருந்தும் மருத்துவர்களுக்கு ஏன் என்று புரிவதில்லை. அசாதாரணமான நிகழ்வுகள் என்று மட்டும் அவர்களால் குறிப்பு எழுதி வைக்க முடியும். எதுவுமே உறுதியாக சொல்ல முடியாத திரிசங்கு நிலை இது. மருத்துவர்கள் கண்களுக்கு அற்புதங்கள் தெரியவில்லையோ?

கடவுள் தன்னைக் காண்பித்துக் கொள்வதில்லை என்கிற நிலை இருமை வாதத்துக்கு சொல்லி வைத்தது போல் பொருந்துகிறது.

நான் கையைத் தூக்குவதும் பிறகு கீழே போடுவது கூட இறைவன் செயல். ஆகவே ஒவ்வோர் கணமும் அற்புதம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இருமை வாத ஆட்களிடம் கேட்டால் தன்னுணர்வு அப்படி செய்ய வைக்கிறது என்று சொல்வார்கள். அப்படி என்றால் ஒரு ஆவி அல்லது பேய் கூட இந்த செயல்பாட்டை பின்னாலிருந்து நடத்துகிறது என்று சொல்ல முடியுமே.

ஒரு முறை பார்த்தாலே போதும்

இருமை வாத கோட்பாட்டை விமர்சனம் செய்யப்போய் ஆண்டவனை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிவிவிட்ட பிறகு குவாண்டம் கோட்பாட்டுக்குள் இறங்குகிறார் பேராசிரியர்.

அணுத் துகள்களின் நடப்புகளில் “பார்வை” பங்கு வகிக்கிறது என்று இன்றைய உயர்பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் அறிந்திருக்கிறார்கள். குவாண்டம் இயக்கவியலில் (Quantum Mechanics), பார்க்கும் பார்வை மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதால் இயற்பியலாளர்களுக்கு 1990 களில் இருந்து தன்னுணர்வு பற்றி இன்னும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பது நல்ல செய்தி.

குவாண்டம் இயக்கவியல் கணித சமன்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. எங்கே, எந்த இடத்தில் தந்திரங்கள் செய்தால் எலெக்ட்ரான்கள் என்ன செய்யும் என்று இன்று நமக்குத் தெரியும். நாம் கெட்டிக்காரர்கள். பிரச்னை என்னவென்றால் குவாண்டம் இயக்கவியல் உண்மையைப் பிரதிபலிக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.

அணுத் துகள்கள் நாம் பார்க்கும் வரை என்ன செய்கின்றன? அவைகளின் வேகம், அவைகளின் இருப்பு, இடம், எதுவும் தெரியாது என்பதே பதில். இந்தப் புள்ளியில் இருக்கலாம் அல்லது அந்தப் புள்ளியில் இருக்கலாம். அன்ட்ரோமேடா பிரபஞ்சத்தில் இருக்கலாம். (இயற்பியலில் இந்த நிலைக்கு superposition என்று பேர்.)

நாம் பார்த்த பிறகு நமக்குத் தோதான ஒரு புள்ளியில் வந்து அவை சுழன்று கொண்டிருக்கின்றன.

அனைத்துமே எலெக்ட்ரான்களால் ஆனதால் (நாம் உட்பட) பார்வை தான் பிரபஞ்சத்தை இயங்க வைக்கிறதா? நாம் பார்க்கிறோம் அல்லது பார்க்கவில்லை என்று பிரபஞ்சத்துக்கு எப்படி தெரியும்? இந்த இடத்தில் இயற்பியலாளர்களோ, மெய்யியலாளர்களோ பேசாமல் நழுவுவதில் குறியாய் இருப்பார்கள். கவனித்திருப்பீர்கள்.

இது வேறுலகம் தனி உலகம்

இயற்பியலில் இன்று பல்லுலக கோட்பாடு (Many-Worlds Theory) மிகவும் கவர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் பவனி வருகிறது. மேலே சொன்ன சங்கடமான கேள்விகளை இது சாமர்த்தியமாகத் தவிர்த்து விடுகிறது.

Superposition அது இது என்று நாம் அலட்டிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நாம் இருப்பதே ஒரே ஒரு உலகத்தில் தான் என்று நாம் நம்புவதால் வந்த வினை இது. ஒவ்வோர் கணமும் புதுப்புது உலகங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அப்படி ஒவ்வோர் உலகத்திலும் மாறுபட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

எடுத்துக் காட்டாய், இதோ இந்தக் கணத்தில் (இந்த உலகத்தில்) எனக்குப் பசிக்கிறது. இதே இந்தக் கணத்தில் தோன்றிய இன்னொரு உலகத்தில் நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்குகிறேன். இன்னோர் உலகத்தில் அம்மா அம்மா என்று ராப் பிச்சைக்காரனாய் அலைகிறேன். இன்னொரு உலகில் பஞ்சு மெத்தையில் பணக்காரனாய்ப் படுத்தபடி பசி வரவில்லையே. டாக்டரைப் பார்த்தால் தான் உண்டு என்று யோசிக்கிறேன்,

இந்தக் கோட்பாட்டின்படி, அணுத் துகள்கள் பார்க்க முன்பு எங்கே இருந்தன? என்ன வேகத்தில்? இப்படி கேட்டால் அவை வேறுலகங்களில் இருந்திருக்கலாம் இல்லையா என்று எதிர்க்கேள்வி வரும். அடுத்து, தன்னுணர்வு என்கிற பேச்சே அங்கே இருக்காது.

இதென்ன கூத்து என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் இன்றைய இயற்பியலில் மிகவும் பிரபலமான, அதுவும் பெருவாரி இயற்பியலாளர்களுக்குப் பிடித்தமான கொள்கை எது என்று கேட்டால் அது வளைய கோட்பாடு (String Theory) என்று பதில் வரும். அந்தக் கொள்கையில் பல்லுலக கோட்பாட்டுக்கு இடமுண்டு.

இருமை வாதப்படி, குவாண்டம் மனசு முடிவெடுக்கிறது. பார்வை பட்டதும், அதுவும் அடிப்படை இயற்பியல் விதிகளும் சேர்ந்தியங்கி புதிய நிலைப்பாட்டை எடுக்கின்றன.

இது இருமை வாத குழுவினர் சொல்லும் கருத்து. ஒரு மேலோட்டமான பதில். ஆனால் ஆதாரங்கள் இல்லை.

எல்லாம் மாயை தானா

மனம், உணர்வுகள், காதல் எல்லாமே கத்திரிக்காய். வெறும் மாயங்கள்.

இயற்பொருள் வாதம். பொருள்நிலைக் கோட்பாடு, பருப்பொருட் கோட்பாடு, பொருள் முதற் கோட்பாடு என்று பல பெயர்களில் சுட்டப்படும் இதை ஆங்கிலத்தில் Materialism என்பார்கள்.

பொருளியலில் இது அடிக்கடி அடிபடும் வார்த்தை. (மெய்யியல் ரீதியில் இதன் பொருள் வேறு. கவனிக்கவும்.) தன்னுணர்வு என்பதை முற்றிலும் மறுப்பவர்கள் இயற்பொருள் வாத குழுவினர்.

மின் வேதிப்பொருள் எதிர்வினைகளில் (electro-chemical reactions) நியூரான்கள் நம் மூளையில் உருவாகின்றன. அவைகளின் சிக்கலான எதிர்த்தாக்கங்கள் சில மாயைகளை ஏற்படுத்துகின்றன. அந்த மாயைகளை உண்மை என்று நம்புகிறோம். தன்னுணர்வே மூளையில் இருந்து தான் பிறக்கிறது.

நரம்பியல் துறையும் உயிரியலின் செல் கட்டமைப்பு துறையும் (Cellular Biology) சேர்ந்து வேகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. விரைவில் மனம் என்றால் என்ன என்று தெரிந்துவிடும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக்கூடாது? – சொல்வது இயற்பொருள் வாத குழுவினர்.

தன்னுணர்வுக்கு எப்போது ஆப்பு வைக்கலாம் என்று யோசிக்கும் இவர்கள் இயற்பியலும் வேதியியலும் அவசரப்படக் கூடாது. மேலே சொன்ன இரண்டு துறைகளும் தீர்மானத்துக்கு வந்த பிறகு அங்கங்கே இடைவெளிகள் இருக்குமே. அதை இந்த ஆட்கள் நிரப்பினால் போதும் என்கிறார்கள்.

இயற்பொருள் வாதத்தின்படி, நாமெல்லாம் நடமாடும் எந்திரங்களாக, கணனிகளாகக் கூட இருக்கலாம். எலெக்ட்ரான்கள், குவார்க்ஸ் போன்ற அடிப்படைப் பொருள்களால் ஆன கூட்டுத் தயாரிப்புகள் நாம். இயற்பியல் விதிகளின்படி இயங்கும் சிக்கலான எந்திரங்கள். இயற்கையின் படிநிலை வளர்ச்சியில் ஏற்பட்ட நடமாடும் ரோபோக்கள்?

இன்றைய பெருவாரி அறிவியலாளர்கள் இயற்பொருள் வாதத்தை நம்புகிறார்கள் எனும் செய்தியை முன் வைக்கிறார் பேராசிரியர்.

தன்னுணர்வைத் தர்க்க ரீதியாக, உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் அவர்கள் இருப்பதாக உணர்கிறார். இந்த இரண்டும் கெட்டான் நிலைக்கு ஒரு எடுகோள் (hypothesis) :

எடுகோள் A : அறிவியல் எதையுமே புறவய நிலையில் (objective) இருந்து பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறது.

வெளி உலக மனிதர் ஒருவர் பூமிக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு இயற்பியல், கணிதவியல் தெரிந்திருந்தால் நம் உலகை அவரால் புரிந்து கொள்ள முடியும். பக்க சார்பின்றி பார்க்க முடியும். ஏனென்றால் இயற்பியல், கணிதவியல் இரண்டும் முழு பிரபஞ்சத்துக்கும் பொதுவானவை.

எடுகோள் B : எந்த ஒரு உயிரினத்தின் வாழ்க்கையையும் அந்த உயிரினமாகப் பிறந்தாலன்றி புரிந்து கொள்ள முடியாது. அகநிலைப் பார்வை (subjective) உண்மையாய் இருக்க முடியாது.

வௌவாலுக்குக் கண் தெரியாது. இருந்தும் துல்லியமாய், எதிலும் மோதிக் கொள்ளாமல் பறக்க முடிகிறது. இரை தேடத் தெரிகிறது. மீண்டும் தன் இருப்பிடம் வரத் தெரிகிறது. தன் குட்டிகள், நண்பர்களை அடையாளம் காணத் தெரிகிறது. ஆகவே வௌவாலாக நாம் பிறந்தாலன்றி வௌவால்களின் உலகைப் புரிந்து கொள்ளவே முடியாது.

A யும் B யும் நேர் எதிராக முரண்படும்போது எதை சரி என்று சொல்வது?

தன்னுணர்வு பொய் தானோ? பேராசிரியர் அடுத்த கட்டம் நோக்கிப் போகிறார்.

மாஞ்சோலைக் குயில் தானோ மயில் தானோ

தோற்ற மயக்கவியல் (Illusionism) இன்றைய மெய்யியலில் முளை விட்டிருக்கும் ஓர் துறை. மாயை என்பது உயிர் வாழ அவசியமான ஒரு கருத்தாக்கம். அதே சமயம் அதைத் தவறாகப் பயன்படுத்தல் ஆபத்தை விளைவிக்கும் என்கிற கொள்கையும் அது முன் வைக்கிறது.

உயிர்களின் படிநிலை வளர்ச்சிக்குத் தோற்ற மயக்கம் உதவுகிறது. ஏனென்றால் உயிரினங்கள் சுற்றுப்புற சூழலோடு ஓத்தியங்க வேண்டிய நிலையில் சதா போராட வேண்டி இருப்பதால் (இது ஓர் சிக்கலான இடைத்தாக்கம் – complex interaction) தன்னுணர்வு என்கிற மாயையைத் தாமாகவே உருவாக்கிக் கொள்கின்றன.

இயற்பொருள் வாதத்தை விட இது பரவாயில்லை என்கிறார் பேராசிரியர். மயக்கவியல் குழுவினர் உண்மை என்று ஒன்று இருக்கிறது. அதே சமயம், தோற்ற மயக்கமும் உண்மை. அதற்கான ஆதாரங்கள் உண்டு என்கிறார்கள்.

உதாரணமாய், என் முன்னால் ஒரு மேசை இருக்கிறது. அதை ஓர் மின் நுண்ணோக்கி (electronic microscope) மூலம் இன்னும் ஆழமாக நோக்கினால் அணுக்கள், மூலக்கூறுகள் அதில் பிணைந்திருப்பது தெரியும். இருந்தும் எனக்குத் தெரிவது மேசை. இது ஒரு “அனுபவம்”. அது இப்படி வடிகட்டி மேசையாகக் காண்பிக்கிறது.

நேரடியாக, உண்மையை நம்மால் ஒரு போதும் காண முடியாது. உண்மை வடிகட்டப்பட்டு அனுபவம் மூலம் வந்தடைகிறது.

இருந்தும் பேராசிரியருக்கு இந்த விளக்கம் திருப்தி தரவில்லை. இது அனுபவம் பற்றிய உண்மையே தவிர உண்மை அல்ல என்கிறார் அவர்.

இனி அவரின் கருத்துக்கு (மூன்றாவது கொள்கை) வருகிறோம்.

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்

பேராசிரியர் துவக்கத்தில் இருமை வாத ஆதரவாளராய் இருந்திருக்கிறார். அதாவது 1972 வரை. Panpsychism கொள்கை பற்றி மெய்யியலாளர், தாமஸ் நாகேல் (Thomas Nagel) எழுதிய கட்டுரையை வாசித்த பிறகு என் மனதில் பெரும் தாக்கத்தை உணர்ந்தேன் என்கிறார்.

(Panpsychism என்பதை “உள்ளார்ந்த உணர்வு” என்று எனக்கு நானே சரியோ, தவறோ மொழி பெயர்த்திருக்கிறேன்.)

இந்தக் கொள்கையின்படி, தன்னுணர்வு என்பது பிரபஞ்சத்தின் அடிப்படைகளில் ஒன்று மட்டுமல்ல, பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்த ஒன்று.

மனிதர்களின் அல்லது விலங்குகளின் தன்னுணர்வுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் தன்னுணர்வுக்கும் தர வித்தியாசம் இருக்கிறது.

நம் தன்னுணர்வின் அளவு மற்றைய உயிரினங்களை விட உயர்வாய் இருப்பதற்குக் காரணம் பல மில்லியன் ஆண்டுகளாக நம் படிநிலை வளர்ச்சி மிக வேகமாகவும் மிகவும் சிக்கலாகவும் மாற்றமடைந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சிறு துகளின் தன்னுணர்வுக்கும் நம்முடைய தன்னுணர்வுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு வேறுபாடு இருக்கிறது. ஒரு எலெக்ட்ரானுக்கு, ஒரு குவார்ட்சுக்கு தன்னுணர்வு இருப்பின் அது நினைத்துப் பார்க்க முடியாத மிகமிகச் சிறு அளவில் இருக்க வேண்டும்.

உள்ளார்ந்த உணர்வு பொருள்கள் உள்ளேயே இயற்கையாய் அமைந்திருக்கிறது. அதற்காக ஒரு கல்லுக்கும் தன்னுணர்வு இருக்கிறது என்று பொருளல்ல. அதில் உணர்வுகள் மிகமிக சின்னவை மட்டுமல்ல எந்த ஒன்றிணைவும் இல்லாமல் சிதறுண்டு கிடக்கின்றன.

நம் மனித அனுபவங்கள் சிக்கலானவை. ஒப்பீட்டளவில், நம்மை விட மற்ற உயிரினங்களின் அனுபவ அளவுகோல் குறைந்தே இருக்கிறது. சில உணர்வுகள் சில உயிரினங்களில் கூடுதலாக இருக்க, வேறு சில உயிரினங்களில் குறைந்திருக்கலாம். சில சுவிச்சுகள் முழு அளவில் போடப்பட்டிருக்கின்றன. தேவையைப் பொறுத்து சில உயிரினங்களின் சுவிச்சுகள் அணைக்கப் பட்டிருக்கின்றன அல்லது ஓரளவே வேலை செய்கின்றன என்று அனுமானிக்கலாம்.

பேராசிரியர் இந்தக் கொள்கை நிரூபிக்கப்பட இன்னும் காலம் போகும். ஆனாலும் அதன் விளக்கம் மற்ற எந்தக் கொள்கையையும் விட அறிவியலுக்குப் பொருத்தமாகவும் எந்த ஒரு மனித பண்பாட்டிலும் சிக்கிக் கொள்ளாமல் தனித்து நின்று பிடிக்கக் கூடியதாகவும் மர்மங்கள், புதிர்களைக் களைந்து, வெளிப்படைத் தன்மையோடும் இருக்கிறது என்கிறார்.

இருமை வாதத்தில் தன்னுணர்வு எங்கோ வெளியில் இருந்து ஓடி வந்து பொருளோடு ஒட்டிக் கொள்கிறது. இயற்பொருள் வாதத்தின்படி, தன்னுணர்வு மூளைக்குள் எங்கேயோ ஒளிந்திருக்கிறது. இரண்டுக்குமே ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இயற்பியலும் வேதியியலும் இந்த உள்ளார்ந்த உணர்வை அலட்சியம் செய்கின்றன. தற்காலிகமாக அவ்வப்போது ஏற்படும் எதிர்வினைகளை மட்டும் (casual roles) கணக்கில் எடுத்து முடிவெடுக்கின்றன.

ஒரு மிகச் சிறு அடிப்படை உணர்விலிருந்து (micro-level) எப்படி சிக்கலான ஓர் பேருணர்வுக்கு (macro-level) மாறுகிறது என்பதை இந்த உள்ளார்ந்த உணர்வு விளக்கவில்லை என்று சில விமர்சகர்கள் சொல்கிறார்களே?

பேராசிரியர், குழந்தைகள் வைத்து விளையாடும் லெகோ (Lego) துண்டுகளை உதாரணம் காட்டுகிறார். கோபுரம் கட்டவில்லையா? பாலம் கட்டவில்லையா? கட்டியபின் என்ன தெரிகிறது?

படிநிலை மாற்றத்தில் கண் எப்படி உருவாகியிருக்கும் என்று டார்வின் கோட்பாட்டு அடிப்படையில் விளக்கியிருந்தார். அதில் கூட நிறைய விரிசல்கள், உரசல்கள் இருக்கவில்லையா? இன்று அந்த இடைவெளிகளை நாம் நிரப்பி விட்டோமா இல்லையா?

என் முன்னால் மடிக்கணனி இருக்கிறது. கோப்பையில் சூடு பறக்கும் காப்பி வாசனை மணக்கிறது. அடுத்த வீட்டில் குழந்தைகள் அடிக்கும் லூட்டி காதில் கேட்கிறது. இத்தனை உணர்வுகளும் சேர்ந்தது நான் எனும் தன்னுணர்வு. இப்படி பல்வேறு உணர்வுகள் மூளையின் பல்வேறு பகுதிகளிலும் உருவாகின்றன என்றால் மூளை எவ்வாறு ஒன்றிணைக்கிறது?

ஒவ்வோர் உணர்வையும் (“நிலைகள்” அல்லது அனுபவங்களை) ஒரே சமயத்தில் ஒன்று சேர்க்க மூளை பல குறிக்கோள்களை வைத்திருக்கிறது (unified cognitive goals) என்கிறார் பேராசிரியர். அதெப்படி? அதற்கு இன்னும் ஆய்வுகள் தேவை என்பதையும் ஒத்துக் கொள்கிறார்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து உரித்து ஆய்வு செய்கிறோம். தோல். சுளை என்று ஒவ்வொன்றையும் பிரித்தெடுத்து தனித்தனியாக அவற்றின் தன்மைகளை அறிந்தோமானால் முழு ஆரஞ்சுப் பழத்தின் தன்மையையும் சொல்லிவிடமுடியுமா? முடியும் எனும் பிரிவுக்கு Reductionist approach (குறுக்கியல் பார்வை) என்று குறிப்பது வழக்கம்.

ஒரு நோயாளி டாக்டரிடம் போனால் அவர் உடலின் எந்தப் பகுதியை நோய் பாதித்திருக்கிறது என்று மட்டும் பார்ப்பதில்லை. அவரின் பழக்க வழக்கங்கள் என்ன, சுற்றுச் சூழல் எப்படி, தாய் தந்தையருக்கு இதே பிரச்னைகள் இருந்திருக்கின்றனவா என்று பல கோணங்களில் விசாரிப்பார். அப்போது தான் சரியான சிகிச்சை அளிக்க முடியும் . இந்த வகையான பார்வைக்கு Holistic approach (முழுமை நோக்கு) என்று பேர்.

பேராசிரியர் பின்னதை சேர்ந்தவர். நாம் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதை விட ஓர் முழுமையான பார்வையுடன் அணுகுவது தான் சரியானது என்கிற கொள்கைப் பிடிப்புள்ளவர்.

தொட்டால் பூ மலரும்

ஹைட்ரஜன் வாயு சில தனிப்பட்ட குணங்கள் கொண்டது. ஆக்சிஜன் வாயு வேறு குணங்கள் கொண்டது. இரண்டும் சேர்ந்தால் உருவாகும் தண்ணீர் முற்றிலும் வித்தியாசமான குணம் கொண்டது. இது போல வெவ்வேறு பொருள்கள் ஒன்று சேரும்போது முற்றிலும் புதிய ஒரு பொருள் உருவாவதில் எந்தப் புதுமையும் இல்லை.

இப்படி புதுப் பொருள்களில் வெளிப்படும் புதுப் பண்புகளை முகிழ் பண்புகள் (emergent properties) எனலாமா?

அப்படி ஒரு முகிழ் பண்பு மூலம் முன்னர் குறிப்பிட்ட ஒருங்கிணைந்த தகவல் (Integrated Information Theory) கோட்பாட்டின் குறைபாட்டை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர்.

இந்தக் கோட்பாடு, எல்லா அடிப்படைப் பொருள்களிலும் தன்னுணர்வு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை (இருமை வாதம்). எங்கே தகவல்கள் ஒருங்கிணைப்பு மிகமிகச் செறிந்த அளவில் இருக்கிறதோ, அங்கே தன்னுணர்வு ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு என்று சொல்கிறது.

சாதாரண இரண்டு அடிப்படைப்பொருள்கள் ஒன்று சேர்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அந்த ஒருங்கிணைப்பில் பரிமாறப்படும் தகவல்களை இந்தப் பிரிவினர் நிச்சயம் தவற விடப் போகிறார்கள்- முகிழ்க்கும் தகவல் முக்கியமாய் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன.

ஒரு சமூகம் அதன் தனிப்பட்ட மனிதர்களை விட கூடுதலான தகவல்களை வைத்திருக்கும் என்பது தெரிந்ததே. இன்று இணையம் மனிதர்களை விட எல்லையே இல்லாத அத்துணை தகவல்களை வைத்திருக்கிறது. அப்படி என்றால் இன்றைய மனிதர்கள் கடந்த காலங்களை விடப் பெரும் புத்திசாலிகள், விற்பன்னர்கள் என்று சொல்ல முடியுமா?

இந்தக் கோட்பாட்டின்படி, தகவல்கள் கட்டுப்பாடின்றி ஒன்றிணைக்கப்பட, அங்கே தன்னுணர்வும் படுவேகமாக உயர்கிறது. அப்போது இணையம் அசுர பலத்தை எட்டிவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மனிதர்கள் அல்ல. ஒவ்வொரு மனிதனும் வெறுமனே அந்த ராட்சத சக்கரத்துப் பல் போல ஆகிவிட முடியும். இது ஓர் முரண்.

இயற்பியலாளர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார் பேராசிரியர்.

சார்புநிலைக் கோட்பாட்டையும் குவாண்டம் கோட்பாட்டையும் இணைக்கும் அனைத்துக் கோட்பாடு (Theory of Everything) தான் நம் இலக்கு என்று இயற்பியலாளர்கள் சொல்கிறார்கள். அப்படி ஒருவேளை அது எதார்த்தத்தில் நடந்துவிட்டாலும் கூட அது முழுமை பெற்றதாக இருக்காது என்கிறார் அவர்.

காரணம்: “பார்வை” குவாண்டம் உலகில் முக்கிய இடம் வகிக்கிறது. இது அகவய நிலை – subjective. இந்தப் பிரச்னையை இயற்பியல் எப்படித் தீர்க்கப் போகிறது? ஆகவே, இயற்பியல் அனைத்துக் கோட்பாட்டைக் கைவிட்டு உண்மைக் கோட்பாடு (Theory of Reality) என்பதை இலக்காக வைத்து ஆய்வுகளைத் தொடர வேண்டும் எனும் கருத்தை முன் வைக்கிறார்.

மெய்யியலின் பல பிரிவுகள், தர்க்க நியாயங்கள், விவாதங்கள்..

அறிவியல் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் , சந்தேகங்கள், தயக்கங்கள்..

காலநிலை மாற்றத்துக்கு மனிதர்கள் முக்கிய காரணம்..

மனிதர்கள் இயற்கையை அழிக்கிறோமே என்கிற சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள், அதற்கு சில மெய்யியல் பிரிவுகள் கூடத் துணை போகின்றன..

காடுகள் முழுக்க முழுக்க நிறைந்திருக்கும் தன்னுணர்வுகள்..

மரங்கள், செடிகளோடு நம் பிணைப்பு அற்றுப் போய்விட்டது. பசுமையைக் காக்கத் தவறிவிட்டோம்..

இப்படி பல பரிமாணங்களைத் தொட்டபடி வந்திருக்கிறது நூல்.

ஆச்சரியம் தரும் செய்தி: அவர் தினமும் தியானம் செய்கிறாராம். அப்போ ஏதாவது சக்திகள், சித்திகள் வாய்த்தனவா? சே! அப்படி எதுவும் தெரியவில்லையே. ஞானோதயம் வந்துவிட்டால் நிச்சயம் என் ட்விட்டரில் போடுவேன் என்கிறார்.

வழக்கம் போல், நூலில் அங்குமிங்கும் தேர்ந்தெடுத்த செய்திகளை இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மெய்யியல் / இயற்பியல் மாணவர்கள் மற்றும் ஆர்வம் கொண்டோரின் சிந்தனையைக் கிளறும் நூல்.

நம்பர்.. நம்பர்..

பைதகரஸ் சாமியார்னா சாமியார் தான். என்னா அம்சம்! என்னா அம்சம்!


நீங்களோ, நானோ இத்தாலியின் கிரோட்டோன் நகரத்துக்கு சுற்றுலா போயிருந்தால் (இப்போ அல்ல. கி.மு. 600ம் ஆண்டு வாக்கில்) …

பிறகு ஊருக்குப் போய் யாரைக் கண்டாலும் இதைத்தான் சொல்லியிருப்போம். திருப்பித் திருப்பி. அவர்களும் நம்மைக் கண்டதுமே ஒடி ஒளியப் பார்த்திருப்பார்கள். (கிரீஸ் போய் வந்தது சரி. அதுக்காக இந்தக் கடி கடிக்கணுமா?)

அவர்கள் தங்கம் போல் தகதகக்கும் பைதகரஸின் தொடைகளைப் பார்த்திருக்கிறார்களா?  இல்லையே. அவரின் பேரறிவு, கடவுள் கொடுத்த வரம் என்று அவர்களுக்குத் தெரியுமா? இல்லையே. பொறாமை. பொறாமை.

கிரேக்கத்தின் சாமோஸ் தீவில் பிறந்த பைதகரஸுக்கு இளமையில் இருந்தே படிப்பில் நாட்டம் இருந்தது. எகிப்து, ஈரான் நாடுகளுக்குப் போய் தன் கணித அறிவை இன்னும் வளர்த்துக் கொண்டார்.

எகிப்தியர்களின் கணித அறிவு அவரை யோசிக்க வைத்தது. எந்த ஒரு 3:4:5 விகித அளவுள்ள பக்கங்கள் உள்ள ஒரு முக்கோணமும் செங்குத்தான முக்கோணம் (ஒரு கோணம் 90 பாகை) ஆக இருக்கிறது என்பதை மட்டும் தான் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

செங்குத்து முக்கோணங்களுக்கு, அது ஒரு உதாரணமே தவிர இன்னும் பல அளவுகள் உண்டு என்று கண்டுபிடித்தார் அவர்.  இன்று 10ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பைதகரஸின் தேற்றம் என்கிற இந்தக் கணித சூத்திரம் சர்வ சாதாரணமாய் இருக்கலாம்.

ஆனால் கடவுள் அருள் இல்லாமல் இப்படி எல்லாம் சிந்திக்க முடியாது என்பது  அன்றைய கிரேக்கர்களின் நம்பிக்கை. அது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. செய்தி பரவப் பரவ, சூப்பர் ஸ்டார் ஆகிப்போனார் பைதகரஸ்.

அன்றைய கிரேக்கத்தின் ஆர்பிஸ்ம் (Orphism ) மத நம்பிக்கைகள் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும்: உயிர் நித்தியமானது. அழியாதது. தெய்வீகம் பொருந்தியது. மீண்டும் மீண்டும் பிறக்கும் (10 தடவை). சடங்குகள் மிக முக்கியம்.

இறந்தவர்களுக்குக் கூட மறு உலகம் போனபிறகு அவர்கள் என்ன  செய்யவேண்டும் என்று அந்த மதத்தில் அறிவிப்புகள் இருந்தன.

உதாரணமாக, அங்கே போனதும் பெர்சிபோன் (Persephone) கடவுளைக் காண்பீர்கள். அவரிடம் பெச்சிக் இருக்கிறாரே, அவர் தான் இங்கே அனுப்பினார் என்று சொல்லவும்.

தவிர,  அங்கே போனபிறகு பல தடைகள் வரும். தாகம் வரும். எச்சரிக்கை: ஞாபகமறதிக் குளத்தில் மட்டும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்துவிட்டால், நான் யார்? எதுக்காக இங்கே வந்தேன்?  ஒரு இழவும் புரியவில்லையே? மேலும் அஸ்கா.. பிஸ்கா.. என்று நீங்கள் உளறிக் கொட்ட வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே போன உடனேயே, அங்கே உள்ளவர்களிடம்,  தயவு செய்து என்னை ஞாபக குளத்துக்குக் கூட்டிப்போய், ஒரு குவளை ஞாபகத் தண்ணீர் குடிக்க விடுங்கள் என்று சொல்லவும்.

விவரங்கள் இன்னும் இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பிறகு தொடர்பு கொள்ளவும்.

இது இப்படி இருக்க, பைதகரஸ் சொந்தமாகவே ஒரு சமயம் துவங்கி அதன் ஆன்மீகத் தலைவராய் இருந்திருக்கிறார். பேர்: பைதகரீனிஸம் (Pythagoreanism).

ஆர்பிஸ்ட் காரர்களின் நம்பிக்கைகளுக்கு  பைதகரஸ் காரர்கள் முன்னோடிகளா அல்லது இவர்களுக்கு அவர்கள் முன்னோடிகளா என்று இன்றும் குழப்பங்கள் இருக்கின்றன. இருக்கட்டும். நாம் பைதகரீனிஸம் பக்கம் வருவோம்.

இந்த சமயம் பற்றி அவரின் மாணவர்கள், பின் வந்த பரம்பரைகள் (பிளாட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்கள் எழுதிய குறிப்புகள்) மற்றும்  மனைவி தியானோ, மற்றும் அவர் மகள்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.

நாம் இன்று காண்கிற சாமியார்களுக்கும் கணக்குக்கும் சம்பந்தமே இல்லை என்று நமக்குத் தெரியும். தவிர, அறிவுக்கும் தெய்வீகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிற அளவில் வாழ்கிறோம்.

பைதகரஸ் சாமியாருக்கு அந்தப் பிரச்னையே இருக்கவில்லை. அவர் கணிதத்திலும் குரு. ஆன்மிகத்திலும் குரு.

அவரின் சித்தாந்தம் பற்றிப் பேசுவோமா?

இந்தப் பிரபஞ்சமே எண்களின் அடிப்படையிலும் அதுவும் விகித சமன்பாடுகளிலும் அமைந்தவை. கணிதத்தின் உள்ளே ஆழமாக நுழைய, நுழைய பிரபஞ்சத்தின் கட்டமைப்பு புலப்பட ஆரம்பிக்கிறது.

மறுபிறப்பில் இருந்து விடுபடுவது தான் வாழ்க்கையின் குறிக்கோள். அதை எப்படி அடையலாம்? கடுமையான வாழ்க்கை நெறிகளை கடைப் பிடிக்கவேண்டும். எதையும் பாரபட்சம் இல்லாமல் பார்க்கும் மனோநிலைக்கு மாறப் பழக வேண்டும். அதாவது அறிவியல் ரீதியில் ஆன சிந்தனை.

கணிதம், வரைகணிதம் இரண்டுமே சுயமாகவே தெளிவானவை (self – evident). இவைகள் கடவுள்களால் அருளப்பட்டவை. கணித சூத்திரங்கள், அவற்றை நிரூபணம் செய்யும் ஆதாரங்கள் என்பன தெய்வீக வெளிப்பாடுகள்.

கிட்டத்தட்ட அவரின் 40 வது வயதில் தன் ஆன்மிக அமைப்பை சுமார் 300 பேர்களுடன் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆச்சிரமத்தில் எல்லாரும் ஒரு ரகசியக் காப்பு எடுத்துக் கொண்டார்கள்.

நம் சமயக்  கொள்கைகள்,  அறிவியல் கோட்பாடுகள் எதுவும், அமைப்பில் இல்லாத வெளியார் யாருக்கும் சொல்லவே கூடாது. என்றென்றைக்கும் பைதகரஸ் தான் அதன் தலைவர். யாருமே புலால் உண்ணக்கூடாது .

கடவுள் தான் பிரபஞ்சத்தின் ஆதாரம் என்னும் கொள்கையில் இருந்து விலகி ஒரு சடப்பொருளை (தண்ணீரை) ஆதாரமாய் முன் வைத்தவர் அவருக்கு முன்பு வாழ்ந்த தத்துவஞானி தாலெஸ் (Thales). அவர் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை.

பைதகரஸும் கடவுள் நம்பிக்கை உள்ளவர். தண்ணீருக்குப் பதிலாய், வடிவங்கள், கணித சமன்பாடுகள் தான் பிரபஞ்சத்தின் அடிநாதம் என்று முன்மொழிந்தவர் இவர். இன்றைய அறிவியலுக்கு அடித்தளம் போட்டவர்களில் ஒருவர் பைதகரஸ் என்பது அறிஞர்களின் கருத்து.

ஆசான் நடத்திய கல்லூரியில், தத்துவம், கலைகள் எல்லாம் கலந்த இளங்கலை பாடத்திட்டம் முடிய மூன்று ஆண்டுகள் செல்லும். கணித இயல் மாணவர்களுக்கோ அது ஐந்து ஆண்டுகள்.

அவரின் அறிவாற்றல், கவர்ச்சி நிறைந்த ஆண்மை அழகு, கிரேக்கத்தின் எல்லா ஊர்களிலும் பேசப்பட்டது. மாணவர்கள் (ஆண்கள்) அவர் கல்லூரியில் சேர ஆசைப்பட்டாலும்  தினமும் உடற்பயிற்சி, தாவர உணவு, கண்டிப்பான ஒழுக்க விதிகள்.. என்று போனதில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் மாணவிகள் கூடுதலாய் வந்தார்களாம். (பைதகரீனிஸம் மதத்தில்  அதிகமானோர் பெண்கள்.)

வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்த அந்தக் கால சமுதாயத்தின் மத்தியில், பெண்களையும் ஆண்களுக்கு நிகராய் மதித்தவர் அவர்.

என்னால் மிருகங்களுடன் பேசமுடியும். காட்டு மிருகங்களை அப்படியே மயக்கி வீட்டிலே கொண்டுவந்து கட்டிவிட முடியும் என்று அவர் பெருமை அடித்துக் கொண்டார் என்று சில தகவல்கள் உள்ளன.

காதல் செய்வது ஒழுக்கக் கேடு என்று வாழ்நாள் பூரா விரிவுரை ஆற்றியவர். அப்படி உணர்வுகள் எழுந்தால் லிரா வாத்தியத்தை எடுத்து மீட்டுங்கள். அல்லது ஜில்லிடும் தண்ணீரில் முழுக்குப் போடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஒருநாள் விழுந்தவர் விழுந்தவர் தான்.

60வது வயசிலே காதலில் விழுந்த மனிதர் அவர். மிகமிக இளமையான பெண் தியானோ. அப்படி என்ன தான் நடந்திருக்கும்? கவிச்சக்கரவர்த்தி கம்பர் ரெண்டு வரியில் சொல்லிவிட்டாரே: அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அவ்வளவு தான். இதற்கு மேல் இதை அதிகம் நோக்கக் கூடாது.

அவர் துவங்கிய மத சடங்குகளில் எண்களுக்கு முக்கிய இடம் உண்டு. உதாரணமாய், இரட்டைப்படை எண்கள் (2,4,6….) நல்லவை என்று சொல்லப் பட்டன. ஒற்றைப்படை எண்கள் (1, 3, 5…) தீமையானவை. எண் 4 நீதியானது என்று நம்பப்பட்டது.  இன்னும் பல இருக்கின்றன. எல்லாம் அவரின் நம்பிக்கை.

ஆனால் அவரின் கணித மேதமை எண்களின் விகிதங்கள், இசையின் ஸ்வரங்களில் இருக்கும் கணிதப் பண்புகள், நட்சத்திரங்கள் இடையே உள்ள தூர விகிதங்கள் என்று விரிவடைந்திருக்கிறது.

பின்னாளில் தத்துவஞானி பிளாட்டோவின் திண்மங்களின் வடிவங்கள் பற்றிய நூலுக்கு (Platonic solids) இவரின் அடிக்கோள்கள் தான் உதவி இருக்கின்றன.

அதன்பிறகு வந்த கணித வல்லுநர் யூக்ளிட் (Euclid) வகுத்த பிரபலமான, துல்லியமாக, தர்க்க ரீதியாக எட்டப்படும் முடிவு (deductive  reasoning) என்னும் கணித முறைக்குப் பைதகரஸ் அறிமுகப்படுத்திய அடிப்படைக்  கொள்கைகள் காரணம்.

அறிவியலில் abstract thinking இன்று என்பது அதிமுக்கியம். இந்த சிந்தனையை  முதலில் பயன்படுத்தியவர் பைதகரஸ்.

இத்தனை பெருமைகள் கொண்ட கணித மேதையின் கடைசி நாட்கள் பற்றி சரியாகத் தெரியவில்லை.

அவர் வாழ்ந்த கிரோட்டோன் (Croton) நகரத்து அரசியல் கொந்தளிப்பில் கொல்லப்பட்டாரா?

அங்கிருந்து அவர் மாணவர்கள் உதவியால் தப்பிப் போய் வேறு பல ஊர்களில் அரசியல் தஞ்சம் கேட்டும் கிடைக்காமல், கடைசியில் ஒரு நகரத்தில் (Metapontum) பசி, பட்டினியால் மாண்டு போனாரா?

கலகத்தின் போது உயிரோடு இருந்த மாணவர்கள், ஆசானை இறந்துபோன  மாணவர்களின் உடல்கள் மேலேயே நடக்க வைத்து தப்பிப் போக உதவினாலும், அதைப் பார்த்து, சோகம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டாரா?

கடைசியாய் அந்த Metapontum ஊரிலேயே வாழ்ந்து மறைந்தாரா?

அவர் உருவாக்கிய மதத்தில் அவரைக்காய் (fava beans) உண்ணவே கூடாது என்று தடை இருந்திருக்கிறது. தவிர அவரைக்காய் பயிரிட்டிருந்த தோட்டம் வழியாக அவர் தப்ப முடிந்திருந்தாலும், அவர் அதற்குள் போகமாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்ததால், எதிரிகள் கைகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்து கொலை செய்யப் பட்டாரா?

இந்த  அவரைக்காய் தடை ஏன் வந்தது?

பைதகரீனிஸ மதத்தினரைத் தேடித்தேடி அழித்த சம்பவங்கள் வரலாற்றில் குரூரம் நிறைந்தவை. நடந்தவை கண்ணீரை வரவழைக்கும். பின்னாட்களில் பைதகரீனிஸ மதத்தை சேர்ந்த ஓர் பெண்  திமிச்சா (Timycha), மற்றும் அவள் கணவன் இருவரும்  இந்தக் களேபரத்தில் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார்கள்.

எதற்கு இந்த அவரைக்காய் தடை உங்கள் மதத்தில்? என்று அவர்கள் கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்கள். அவள் கணவன் கடைசிவரை சொல்ல முடியாது என்று மறுக்க,  திமிச்சாவை இன்னும் அதிகமாய்க் கொடுமைகள் செய்ய ஆரம்பிக்க, அந்தப் பெண் தன் நாக்கையே கடித்துத் துப்பி இருக்கிறாள்.

அத்தனை புனிதம் கொண்ட, யாரிடமும் சொல்லக்கூடாத அவரைக்காய் ரகசியம் என்னதாக இருந்திருக்கும்?

இன்றைய அறிவியல் யுகத்திலே கூட, லோக்கல் சாமியார்கள் என்ன சொன்னாலும் நம்புவதும் நிறைவேற்றுவதும் நம் கடமை என்று நினைக்கிற ஆட்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆகவே பைதகரஸ் சாமியார் எது சொன்னாலும் அது கடவுள் வாக்கு என்று அந்தக் காலத்தில் பைதகரஸின்  சீடர்கள் நம்பியத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இணையத்தைத் தோண்டத் தோண்ட, இந்த  அவரைக்காய் புராணம் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆளுக்கொரு விதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அய்யா எப்படி இறந்தார்? அவரைக்காய் தடை ஏன்?

அவசரப்படக்கூடாது. பெர்சிபோன் கடவுளை சந்தித்ததும் அறிவிக்கிறோம்.

நன்றி:

1) The Philosophy Book (A Dorling Kindersley Publication)

2) Wikipedia

3) https://en.wikipedia.org/wiki/Timycha

ஜே.கிருஷ்ணமூர்த்தி

ஞானிகள் பலவிதம்.

சிலரைப் பார்த்தால் பயம் வரும். சிலரைப் பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். சிலரைப் பார்த்தால் ரெண்டு விதமாகவும் தெரியும்.

சிலரின் பேச்சு விசித்திரமாக  இருக்கும். ஆனால் யோசிக்க, யோசிக்கப் புதுமையாக இருக்கும்.  அது ஒரு அனுபவம்.

“முதலும் கடைசியும் ஆன விடுதலை ”  (The First And Last Freedom) ஜிட்டுவின் முதல் புத்தகம்  என்று நினைக்கிறேன். வாசிக்க ஆரம்பித்தபோதே பைத்தியம் பிடித்துவிட்டது.

அவர் கூட்டங்களில் அடிக்கடி சொல்லுவார் : பெரியோர்களே, நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். நம்பினீர்களோ, உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாது. நீங்களே யோசித்து நீங்களே முடிவெடுத்து நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

நாம் அவரிடம் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன, பிரச்னைகளில் இருந்து தப்ப ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்டால் அந்த மனுஷன் நம்மிடம் சொல்லும் பதிலில், நமது கேள்விகள் நம்மையே திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிடும்!

அது தான் ஜிட்டுவின்  சிறப்பு.

தியோசோபிக்கல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான அன்னி பெசன்ட் அம்மையார் (ஐரிஷ் பெண்மணி) இந்திய நாடு கடவுளின் நாடு என்று நினைத்தவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர்.

உலகை உய்விக்க, புத்தரைப் போல் ஓர் பெரும் ஆசிரியர் தோன்றுவார் . அதுவும் இந்தியாவில் என்று நம்பியவர் அவர். துணைக்கண்டம் பூரா சல்லடை போட்டுத் தேடி, ஜோசியம் பார்த்து, ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்  இரண்டு இளம் பையன்கள். ஒரு தாய் வயிற்றுப்  பிள்ளைகள்.

ஒருவர் ஜிட்டு . மற்றவர் நித்தியானந்தா. இவர்கள் சென்னை அடையாறில், பின்னர் கலிபோர்னியா மாநிலத்தில் என்று தங்கவைக்கப்பட்டார்கள்.  வாழ்க்கையின் அத்தனை வசதிகளும் கிடைத்தன. படிப்பும், யோகமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு அங்கே  “குருகுல வாசம் ” செய்தவர்கள் அவர்கள். எதிர்கால  ஞானிகள்  அல்லவா?

அந்தப் பையன்களே, நாம் அவதாரங்கள் என்று  நினைத்துக் கொண்டிருக்க, நித்தியானந்தா காச நோயால் மரணம் அடைந்தார்.  உடைந்து போனார் ஜிட்டு. பல ஆண்டுகள், தன்னைத் தானே மீளாய்வு செய்ய  வேண்டிய கட்டங்கள் நேர்ந்தன ஜிட்டுவுக்கு. அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை அது.

தியோசோபிக்கல் சொசைட்டியை விட்டுப் பிரிந்தார் ஜிட்டு.எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார்.

(அன்னி பெசன்ட், ஜிட்டுவின் நியாயத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜிட்டுவின் நேர் எதிர் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் கடைசி நாள் வரை தவித்தார்.)

பல நாடுகளுக்குப் பயணங்கள் செய்து தன் சொந்த சிந்தனைகளை, சொற்பொழிவுகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார் ஜிட்டு.

ஆனால் தன்  சிந்தனைகளைத் தன்னுடையது என்று சொல்ல மறுத்தார். சிந்தனைகள். அவ்வளவு தான். நான் குரு அல்ல. எனக்குப் பிறகு யாரும் ஏஜென்ட் வேலை  பார்க்கக் கூடாது என்பதில் அழுத்தமாய் இருந்தார்.

நீங்கள் என்ன தான் அறிவியலில் முன்னேறினாலும், வசதிகளைக் குவித்தாலும், சமூகப் புரட்சிகள் நிகழ்த்தினாலும் மனம் என்பதில் இருந்து விடுதலை அடையும் வரை உங்களால் உருப்படவே முடியாது. :இது அவரின் குரல்.

ஜிட்டுவுக்கு எதிரான விமர்சனங்கள் இன்றும் தொடர்கின்றன.

அவர் காதலிலும் விழுந்திருக்கிறார். 1991 வரை அவரின் காதல் தொடர்புகள்  ரகசியமாகவே இருந்திருக்கிறது. இது தெரிய முன்னரே, அவரிடம், காமம், காதல் பற்றி கேள்விகள் கேட்ட போது அவர் சொன்ன பதில்: அதை ஏன் குற்றமாகப் பார்க்கிறீர்கள் ? இயற்கை  உணர்வுகளை ஏன் கொச்சைப் படுத்தவேண்டும்?

விஞ்ஞானத்தால் விளக்க முடியாதவை  தத்துவத்திடம் கொடுக்கப் பட்டுவிடுகின்றன. தத்துவமோ, பலவிதமான சிந்தனைகளை முன்வைத்துவிட்டு இதில் எது பிடித்திருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்று சொல்வதோடு சரி.

இவரோ, சிந்தனைகளையே நொறுக்கித் தள்ளுங்கள் என்பார்.  மனம் தான் நம் முதல் எதிரி என்பார். நம்  மூளை தந்திரமானது என்பார். சரி. எப்படி அதை சீர் செய்யலாம் என்றால் அது என் வேலை அல்ல என்பார். தொடர்ந்து அவரின் கேள்விகள் ஏராளமாய் வந்து விழும்.

வாழ்க்கை ஒரு காடு போன்றது. அங்கே தேனும் இருக்கும். மானும் இருக்கும் புலி சிங்கங்களும் இருக்கும். இனிமை உண்டு. துயர்கள் உண்டு. அதைக் கடந்து போகவேண்டும். காட்டைக் கடந்து போக நான் துணை வருவேன் என்று எண்ணாதீர்கள். யாரும் உங்கள் உதவிக்கு வரப் போவதில்லை. கடவுளும் வரமாட்டார். குருமார்களும் வரப்  போவதில்லை. நீங்களே போய்க் கொள்ள வேண்டியது தான்.

இவரிடம், உங்கள் சிந்தனைகள் புத்தரின் உபதேசங்களோடு நெருங்கி இருப்பது போலத்  தெரிகிறதே என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே, ஆம் என்றார்.

உண்மை தான். அவரின் சிந்தனைகள் பவுத்தம், ஜென் பவுத்தம், மற்றும் சீனாவின் டாவோயிஸம் போலத்  தோன்றும். கிட்ட வரும். ஆனால் சேராது.  டக் என்று விரிவடைந்து வேறு திசையில் போக ஆரம்பிக்கும்.

சிந்தனைகளை ஒருமுகப் படுத்துங்கள். கட்டுப் படுத்துங்கள். நிம்மதி கிடைக்கும். உங்கள் வாழ்க்கை வளம் பெறும். ஏன் பேரின்ப வாழ்வுக்கே அது கூட்டிச் செல்லும் என்பது நாம் கேள்விப்பட்ட, கேள்விப்படுகிற ஆன்மீகம்.

ஜிட்டு சொல்வார்: எதை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்களோ, அது இன்னும் அதிக மூர்க்கமுடன் எழும்  அல்லது சாது போல இருந்து சந்தர்ப்பம் வரும்போது திமிறிப் பாயும் தந்திரம் நிறைந்தது இந்த மனம். சினிமா காட்டுவதில் கில்லாடி, கவனமாக அணுகவேண்டும் .

தியானம், தியானம் என்கிறார்களே என்ன அது என்றால்…

கணத்துக்கு கணம், மனம் எழுப்பும் எண்ணங்களை, அது பாட்டில் கடந்து போகவிடுங்கள்.  விருப்போ, வெறுப்போ இன்றி அவதானியுங்கள். அது தான் முக்கியம். அவதானிப்பு. அவதானிப்பு. உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று நோக்குங்கள். அவை பற்றி மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். எச்சரிக்கை ! எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாமல் அமைதியாக அவற்றை அவதானியுங்கள்.

எனக்கு இப்போ கோபம் வருகிறது. சரி அய்யா. எனக்கு இப்போ சந்தோஷமாய் இருக்கிறது.  சரி அய்யா. எனக்குப்  பசிக்கிறது. சரி அய்யா. அதோ அந்தப் பெண் அழகாய் இருக்கிறாள். சரி அய்யா. இப்போ எனக்கு ஒரு திருட்டுத்தனம் பண்ண வேண்டும் போல் இருக்கிறது.  சரி அய்யா. நான் எவ்வளவு நல்லவன். தெரியுமா?  சரி அய்யா… ..

இது தான் தியானம் என்பார் ஜிட்டு.

சே! இந்த மனுஷன் கிட்ட போய்க் கேட்டோமே என்று நொந்தவர்கள். புரிகிறது என்று சொன்னவர்கள். புரிகிற மாதிரி இருக்கிறது என்று சொன்னவர்கள். புரியாவிட்டாலும் புரிந்த மாதிரி நடித்தவர்கள். இப்படி ஏராளம் இருக்க..

91 வயசு வரை வாழ்ந்த மனுஷன் 1986 ல் போய்விட்டார்.

அவர் மறைந்தபோது, கல்கி பத்திரிகையில் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது:

இமயத்தில் இருக்கும் மானசரோவர் ஏரியில் எத்தனையோ  அருவிகள்,  நீரோட்டங்கள் என்று வந்து கலந்தாலும் தழும்பாமல், சிதறாமல்  அதன் நீர் மட்டம் மாறாமல் ஒரே அமைதியில் இருக்குமாமே.

அது தான் ஜிட்டு.

(இந்தக் கட்டுரையில் சிந்தனை / சிந்தனைகள் எனும் சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களில் வருகின்றன என்பதைக் கவனிக்கவும்.)


நான் ரெடி.நஞ்சுக்கலவை ரெடியா?

சாக்ரட்டீஸ் ஏதென்ஸில் இருந்த சந்தைக்கு தினமும் நடந்து போவது வழக்கம்.

ஒன்று விடாமல் அங்கே இருந்த எல்லாப் பண்டங்களையும் ஒரு நோட்டம் விடுவார். அட! எனக்குத் தேவையே இல்லாத அத்தனையும் இங்கே குவிஞ்சிருக்கே… என்பார். பிறகு சந்தையைக் கடந்து போய்விடுவார். தினமும் இதே கூத்து.

எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர் பெயரை உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னாள் தத்துவஞானியை அவர் கோட்பாடுகளுக்காக மட்டுமல்ல, அவரின் எளிமையான வாழ்க்கைக்காகவும் சேர்த்து மதிக்கிறது.

ஒரு சிற்பியின் மகனாய்ப் பிறந்தவர், அன்றைய புகழ்பெற்ற அக்ரோபோலிஸ் கோயிலின் சில சிற்பங்களையும் (பெண் சிற்பங்கள்) அவர் செதுக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடியாதுதான்.

ஏதென்ஸ் நகரம் நடத்திய போர்களில் அவரும் ஒரு வீரராய் இருந்தார். பிறகு ஒய்வு. எந்தப் பகட்டான ஆடையையும் உடுத்தியதில்லை. வெறும் காலோடு ஏதென்ஸின் சந்துபொந்துகளில் ரொம்ப ரொம்ப சாதாரணமாய் ஒரு தொளதொள அங்கியோடு திரிந்தார்.

வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று தன்னைத் தானே துருவியவர். மற்றவர்களிடமும் துருவியவர்.

இரண்டு தடவை (?) கல்யாணம் முடித்தவர். இரண்டு மூன்று (?) பிள்ளைகளின் அப்பா. நடனம் ஆடுவதில் கொள்ளைப் பிரியம். தண்ணீர் நன்றாய்க் குடித்தார். வைனும் அதே போல.

கிரேக்கம் அன்று ஒரு தனி நாடாய் இருக்கவில்லை. தனித்தனி ஊர்களாய் இருந்தன. ஊருக்கு ஊர் தனி அரசுகள், தனிப்படைகள் என்று அட்டகாசமாய் இருந்தன. அவர்களுக்குள் அடிதடிகள் அடிக்கடி வரும். கொலை கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கும். சும்மா சொல்லக்கூடாது. அதே சமயம் நல்ல பக்திமான்கள்.

அன்றைய கிரேக்கர்களின் நம்பிக்கைகளைப் பட்டியல் போட இங்கே இடம் போதாது. அவசியம் கருதி ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிடுகிறோம்.

அழகு என்றால் அது நன்மை, நேர்மை என்று நம்பினார்கள். அழகாய் இருப்பவர்களை கடவுள்களின் அவதாரங்கள் என்று கொண்டாடினார்கள். அவலட்சணமாய் இருப்பவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள் எல்லாரும் தீயசக்திகளின் தோற்றங்கள் என்று நினைத்தார்கள். வெறுத்தார்கள்.

அழகும் இல்லை. வயசும் போய்விட்டது. இருந்தும் அழகுப் பெண்களென்ன, வயசுப் பையன்களென்ன இந்த சாக்ரட்டீஸ் பின்னே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? எழவெடுத்த கிழவர் எதுவும் மாயமந்திரம் போட்டிருப்பாரோ? சொல்லுங்கள் கோபம் வருமா, வராதா? பார்த்த ஆண்களுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

பொறாமையில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது என்று கூட சிலர் பேசியிருக்கலாம். மேதைகளுக்கு மச்சம் தேவை இல்லை என்று அவர்களுக்குத் தெரியாது.

ஆனால் இது எல்லாம் தூசு என்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. ஏதென்ஸ் நகரத்தின் தலைவர், மாண்புமிகு பெரிக்கிள்ஸ் அவர்களின் நெருங்கிய தோழி (முன்னாள் மிஸ் ஏதென்ஸ்) அஸ்பாஸியா கூட சாக்ரட்டீஸ் வீட்டுக்கு ரகசியமாய்ப் போய்வருவதாக எந்தப் பயலோ சின்னதாய் ஒரு திரி கொளுத்திப் போட ….

நகரமே கிசுகிசு புகைமண்டலத்தில் சிக்கித் திணறியது. இது உண்மையா அல்லது வெறும் புரளியா என்று உறுதிப்படுத்த முடியாமைக்கு வருந்துகிறோம். மன்னிக்கவும்.

விஷயம் தலைக்கு மேல் போய்விட்டது. பெரிய இடத்து சமாசாரம். காவலர்கள் விசாரணையை ஆரம்பித்தார்கள். சாக்ரட்டீஸின் புகழ்பூத்த மாணவர்களான பிளாட்டோ, செனோபோன் மற்றும் பெரிய, சின்ன சிஷ்யர்கள் எல்லாருமே பெரியவரைக் காப்பாற்ற என்னென்னமோ செய்து பார்த்தார்கள். சரிப்படவில்லை.

அப்போ சாக்ரட்டீஸ் என்ன பண்ணிக் கொண்டிருந்தார் என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. அவரோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று சிந்தித்துக் கொண்டிருந்தாரே.

அவர் ஏதென்ஸ் நகர் நீதிமன்றத்துக்கு கூட்டி வரப்பட்டார். அதற்கு முன் சில தகவல்கள்:

இன்று வீட்டில் இருந்தபடி வெட்டியாய் தத்துவம் பேசிக் கொண்டிருந்தால் போதும். தத்துவப் பேராசிரியர் பட்டம் கிடைத்துவிடும் என்று நம்ப முடியாது. பதிலாய், தும்புக்கட்டையோ, விறகுக்கட்டையோ பட்டையாக சாத்திவிடக்கூடும்.

அன்றைய கிரேக்கத்திலும் இதே நிலை தான். வெளியூர்கள் போகவேண்டும். அங்குள்ள அறிஞர்களோடு விவாதங்கள் செய்து நான் பெரிய ஆள் தான் என்று நம்ப வைக்க வேண்டும். பிறகு உள்ளூர் வந்து அதே மாதிரி ஆரம்பித்து …  அந்தக் சோகக் கதையை விட்டுவிடுவோமா?

ஆனால் சாக்ரட்டிஸ் அப்படியெல்லாம் வெளியூர்கள் போனதாக எந்தத்  தகவலும் இல்லை. போர்கள் நிமித்தமாய் மட்டும் போனதற்கு சாட்சியங்கள் உள்ளன. போட்டிடேயோ, டேடியம் என்கிற ஊர்களில் நடந்த சண்டைகளில் இவரும் போரிட்டிருக்கிறார். போரில் இவரின் மாணவர் செனோபோனைக் காப்பாற்றி இருக்கிறார்.

சண்டை இல்லாத காலங்களில் அடிக்கடி உடற்பயிற்சிக் களம் போய் உடம்பைக் கட்டுக்கோப்பாய் வைத்திருந்திருக்கிறார். மைனர் போல் ஜாலியாய் வாழ்ந்திருக்கிறார்.

டெல்பிக் கோயில் இன்று ஓரிரு தூண்களோடு மட்டும் காட்சி அளிக்கிறது. அன்று அப்படி இல்லை. மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே பூசாரிகள் இருக்கவில்லை. பூசாரிணிகள் தான் இருந்தார்கள். அதுவும் அழகான கன்னிப் பெண்கள். இன்னோர் சிறப்பு அம்சம்: இந்தப் பூசாரிணிகளுக்கு திடீர் திடீர் என்று சாமி வரும். வந்தால் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அப்படியே புட்டுப் புட்டு வைப்பார்கள்.

வழக்கமான கோரிக்கைகளான, அடுத்த வீட்டுக்காரனை அடக்கி வைக்க, காதல் பிரச்னைகள், காணித் தகராறுகள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க, அடிதடிகளை  சுமுகமாய் முடித்து வைக்க, எதிரிகளுக்கு சூனியம் வைக்க.. என்று  இப்படி வந்திருந்த ஓராயிரம் பக்தர்களின் வேண்டுதல்கள் அங்கே நிறைவேற்றி வைக்கப்பட்டன.

இதென்ன பெரிய விஷயம். அரசியல் பூசல்கள், போருக்குப் போக நல்ல நாள், நேரம் என்பது போன்ற பெரிய பெரிய சமாசாரங்களுக்கும் தீர்வு காண பூசாரிணிகளைத் தான் தேடி வந்தார்கள். அப்படி ஒரு கெத்தோடு வாழ்ந்தவர்கள் பூசாரிணிகள்.

சாக்ரட்டிஸ் வாழ்ந்த காலத்தில் டெல்பிக் கோயில் தலைமைப் பூசாரிணியாய் கொடிகட்டிப் பறந்தவர் பித்தியா. அழகோ அழகு. அத்தோடு அறிவும் இருந்திருக்க வேண்டும். என்னமோ தெரியவில்லை. ஒருநாள் இவர், இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை ஆண்களையும் விட சாக்ரட்டீஸ் தான் பெரும் அறிவாளி என்று அறிவிக்கப் போக, அதுவும் சாமி வந்து…

இது போதாதா? ஏற்கெனவே அஸ்பாஸியா… அஸ்பாஸியா.. என்று புகைந்து கொண்டிருந்த ஆண்கள் மனசில் இப்போ பித்தியா என்றதும் பைத்தியமே பிடித்தது போல் ஆகிவிட்டார்கள். நெருப்பு எரியத் துவங்கிவிட்டது.

இந்தக் களேபரத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

கிரேக்கத்தில் தான் முதன்முதலில் மக்களாட்சி துளிர்விடத் துவங்கியது என்கிறார்கள். அதில் சாக்ரட்டீஸின் பங்கு என்ன? தெரியவில்லை என்கிறார்கள்.

சாக்ரட்டீஸ் என்ன சொன்னார்? அறியாமை தான் ஆக மோசமான தீமை. அறிவைத் தேடுதலே ஒரே வழி.

அவரின் புகழ்பெற்ற வாசகம்: உன்னையே நீ அறிந்து கொள்.

இன்னொன்றும் இருக்கிறது: எனக்கு என்ன தெரியாது என்று கூட எனக்குத் தெரியாதே.

அவர் தான் அரசியல் தத்துவத்தை முதலில் முன் வைத்தவர் என்கிறார்கள் மேற்குலகின் அறிஞர்கள். பகுப்பாய்வு செயல்முறையை (Analytical process) அறிமுகப்படுத்தியதும் அவரே.

அவரின் பேச்சுக்களில் முரண்நகைகள் இருக்கின்றன  (?) என்பார்கள் சிலர். அவரின் நான்கு கொள்கைகள்:

1. யாரும் தீமை செய்ய விரும்புவதில்லை.
2. தெரிந்தோ தெரியாமலோ யாரும் தவறு செய்ய விரும்புவதில்லை.
3. அறிவு என்பதே நேர்மை.
4. மகிழ்ச்சியாய் வாழ நேர்மை போதும்.

அறத்தான் வருவதே இன்பம் என்று அன்றே நினைத்தவர் சாக்ரட்டீஸ். அறம் பாடிய மனிதர்.

கிடைத்திருக்கும் தகவல்களின் படி,  அன்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் நம்பிக்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று சொன்னவர்.  அவை தவறாக இருந்தால் சரியான நீதி வழங்க முடியாது என்றவர். எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கு என்பது அவரின் தத்துவம்.

பெரும்பான்மை சொல்கிறது என்பதற்காக எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்ட மனிதர். அதனால் அவர் மக்களாட்சிக்கு எதிரான கருத்துள்ளவராய் இருந்தார் என்று வாதாடுதல் அபத்தம்.

ஏதென்ஸ் நகரத்தில் இருந்த அகோரா மைதானம் விவாதங்கள், கேளிக்கைகள் அனைத்துக்கும் மய்யம். சாக்ரட்டீஸ் அங்கே வரவே கூடாது என்று தடை போட்டிருந்தார்கள். மாணவர்கள், சிஷ்யர்கள் அவரை கடைவாசல்கள், சந்துபொந்துகள் மற்றும் கைவினை வேலைத் தளங்களில்  தான் சந்திக்க முடிந்தது.

இப்போ நீதிமன்ற வாசலில் நிற்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் வந்துவிட்டார். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் : என்ன குற்றம் செய்தார் என்று எதை சொல்வது?  இந்த மூலையில் நின்று யோசித்தார்கள். பிறகு அந்த மூலைக்குப் போய் யோசித்தார்கள்.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்: சாக்ரட்டீஸ், எங்கள் அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட கடவுளர்களை அவமானப் படுத்தி விட்டார். புதுசாக சில கடவுள்களை உருவாக்க முயன்றார். தவிர, நம் இளைஞர் இளைஞிகளை தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சித்தார்.

இது குற்றப் பத்திரிகையின் சாராம்சம். விசாரணை துவங்கியது. ஆரம்பமே சரியில்லை. அந்த காலத்தில், யார் பெரிசாய் சத்தம் போட்டு ரகளை பண்ணுகிறாரோ அவர் பக்கம் தான் உண்மை இருக்கும் என்று நம்பினார்கள்.

குற்றம் சாட்டியவர்கள் ஓ.. வென்று கத்தினார்கள். பக்கத்தில் ஆண்கள் கைகால்களை முறுக்கியபடி நின்றார்கள். சாக்ரட்டீஸ் பக்கம் நின்றதுவோ இளையோர் கூட்டம். தானா சேர்ந்த கூட்டம். வயசும் சின்னது. சமூகமும் அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

பிளாட்டோ தன் குருவுக்காக வாதாடத் துவங்கினார். அவர் பக்க ஆட்களில் அவர் தான் இளையவர். நீதிபதிகளுக்கு இந்த சின்னப் பையன் என்னத்தப் பெரிசாக் கிழிக்கப் போகிறான் என்று ஒரே எரிச்சல். டேய்! போய் ஒரு ஓரமா உக்காருடா என்று உத்தரவு போட்டார்கள்.

வழக்குப் போட்டவர்கள் உண்மையில் சாக்ரட்டீஸ் கதையை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கவில்லை. ஒரு பெரும் தொகையை அபராதமாகப் போடுவோம். கட்ட முடியவில்லை என்றால் ஊரை விட்டே துரத்தி விடுவோம் என்று தான் திட்டம் போட்டிருந்தார்கள்.

நீதிபதிகள் எதிர்பார்த்தது போலவே அவர் குற்றவாளி என்று முடிவெடுத்தார்கள். ஆனால் எவ்வளவு அபராதம் போடுவது என்பதில் எந்த முடிவுக்கும் வராமல்..  நேரமோ போய்க் கொண்டிருந்தது.

சாக்ரட்டீஸுக்கோ ஒரே எரிச்சல். எழுந்தார். நான் வேண்டுமானால் ஒரு 25 ட்ரெச்மா அபராதமாய்க் கொடுக்கட்டுமா? என்றார். ஒருவேளை நீதிபதிகள் சரி என்று சொல்லி இருப்பார்களோ?

தொடர்ந்தார் சாக்ரட்டீஸ்: ஆனால் ஒரு நிபந்தனை. நான் செய்திருக்கும் சேவைகளுக்கு இந்த நகரமே எனக்குக் கடமைப் பட்டிருக்கிறது. ஆகவே என் வாழ்க்கைச் செலவுகளை நகர நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெரிய குண்டாகப் போட்டிருக்கிறார்.

என்னது? நீதிபதிகள் அதிர்ந்து போனார்கள். என்ன ஒரு திமிர்! வந்த கோபத்தில் வேறு பேச்சுக்கே இடம் வைக்காமல், மரண தண்டனை விதிக்கிறோம் என்று ஒரே வரியில் முடித்து விட்டார்கள்.

சாக்ரட்டீஸ் சிறையில் அடைக்கப் பட்டார். அவர் மனைவி, சாந்திபெ குழந்தைகளோடு ஓடிவந்து கத்தினார். இருக்கும்போதே குடும்பத்தைக் கவனிக்காத சோமாரிப் பயல் நீ. நாசமாப் போ. இந்தக் குழந்தைகளோடு எப்படி வாழப் போறேனோ? என்று சொல்லியபடி, மண்ணள்ளி அவர் முகத்தில் வீசினார். சாபம் போட்டபடி திரும்பிப் போனார்.

அடுத்து, மாணவர்கள், தோழர்கள், தோழிகள் கூக்குரல் போட்டபடி ஒடி வந்தார்கள். கேவினார்கள். அழுதார்கள். நஞ்சுக்கலவை நிரம்பிய கோப்பை கொண்டு வரப்பட்டது. உடனேயே குடித்துவிடாதீர்கள் என்று சிலர் கெஞ்சினார்கள். இன்னம் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன.. என்று கூட சிலர் சோகம் தாங்கமுடியாமல் பாடியிருக்கக் கூடும். யார் கண்டார்?

சாக்ரட்டீஸின் கடைசி வசனம் என்னதாய் இருந்திருக்கும்? உன்னையே நீ அறிந்து கொள்? தப்பு. தப்பு.

கிரீட்டோ! அஸ்கிலேப்பியஸ் கடவுளுக்கு ஒரு சேவல் நேர்ந்து விடவேண்டும் என்று யோசித்திருந்தேன். அதை செய்துவிடு.

அவர் தெய்வீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒருதடவை, அவர் மாணவன் செனோபோன், ஒரு போரில் கலந்து கொள்ளட்டுமா தலைவரே? என்று கேட்டிருக்கிறார். எதுக்கும் பித்தியாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு  முடிவு செய் என்றாராம் தலைவர்.

இன்னொரு சம்பவம்: இந்த பெரிக்கிள்ஸ் (நகரத் தலைவர்) இருக்கானே. அவன் பெரிய ஆள் தான். ஆனால் அவன் எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன் பிள்ளைகளுக்கு ஏன் அறிவும் இல்லை? துணிச்சலும் இல்லை? எல்லாம் கடவுள்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்று பயப்படாமல் சொல்லி இருப்பாரா?

சாக்ரட்டீஸ் சுயசரிதம் ஒன்றும் எழுதி வைக்கவில்லை. எல்லாமே அவர் மாணவர்கள் எழுதி வைத்ததில் இருந்து தான் அறிந்து கொள்கிறோம். அதிலும் பிரச்னைகள். ஆளுக்கு ஒருவிதமாய் எழுதி வைத்திருக்கிறார்கள்.

உதாரணங்கள்: சாக்ரட்டீஸ் தன் வகுப்புகளுக்கு காசே வாங்கவில்லை என்று பிளாட்டோ எழுத,  சில சமயங்களில் வாங்கினார் என்று செனோபோன் எழுதுகிறார்.

வழக்கு விசாரணையின் போது, அபராதம் போடப்பட்டு, அதை ஏற்றுக் கொண்டால் நான் குற்றவாளி என்று ஆகிவிடும். அதை ஒத்துக் கொள்ளக் கூடாது. என் கொள்கைகள் பற்றி இன்னும் விளக்கம் சொல்ல இருக்கிறது என்று தான் சொன்னார். இப்படி பிளாட்டோ எழுதி இருக்க …

ஆசான் அகம்பாவத்தோடு இருந்தார். யார் சொல்லியும் கேட்கவில்லை. தவறான வாதங்கள் புரிந்தார் என்று அடுக்குகிறார் செனோபோன்.(இத்தனைக்கும் செனோபோன் வழக்கின் போது அங்கிருக்கவில்லை. யாரைக் கேட்டு அப்படி எழுதி இருப்பார்?)

பிளாட்டோ கொஞ்சம் கற்பனாவாதி. தன் சொந்தக் கருத்துக்களையும் குரு  சொன்னதாக கப்ஸா விட்டிருக்கலாம் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். தவிர, அவருக்கு ஆசான் மேல் தணியாத பக்தி இருந்திருக்கிறது. அநியாயமாய் என் குருவைக் கொன்றுவிட்டார்களே என்று கடைசி வரை கோபத்தில் இருந்தவர் அவர்.

செனோபோன் ஒரு போர்வீரர் மட்டுமல்ல. வரலாற்று ஆசிரியரும் கூட. இருந்தும் பிளாட்டோவின் கூற்றுகளைத் தான் இன்றைய அநேகமான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், சாக்ரட்டீஸ் ஒரு லேசான தண்டனையோடு தப்பியிருக்கலாம். அவரின் மாணவர்களால் அதை சாத்தியமாக்கி இருக்க முடியும். இன்னொன்று: அன்று ஆட்சியில் இருந்த குழுவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெரிதாக இருக்கவில்லை.

நகரத்தின் நிர்வாகத்தில் அவரும் சிலசமயங்களில் பங்கு கொண்டிருக்கிறார். ஆனால் எப்போதும் நீதி நேர்மை என்று பேசிக் கொண்டிருந்தால் யார் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

ஒருவேளை தப்பிப் போனால் ஏதென்ஸில் இருக்கும் தன் ஆதரவாளர்களுக்கு என்ன நேரிடும் என்பதை அவர் அறிந்தே இருந்தார். அது தன் நேர்மைக்கு இழுக்கு மட்டுமல்ல, அந்தத் துயரங்களைத் தாங்கும் மனோதைரியமும் அவரிடம் இல்லாது இருந்திருக்கலாம்.

தத்துவம் என்பதே இறப்பை நோக்கித் தன்னைத் தயார் செய்து கொள்ளும் ஓர் பாதை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம் அவர். அப்படி நினைத்திருக்கலாம்.

வேறு ஊர் போனாலும், அங்கேயும் தன் கொள்கைகளுக்கு இடையூறு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று சிந்தித்திருக்கலாம்.

நீதிபதிகளின் தீர்ப்பை, அது எவ்வளவு அநீதியாய் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்பதை மறந்து, தன் உயிர் தான் முக்கியம் என்று சாக்ரட்டீஸ் நினைத்து விட்டான் என்று எதிர்கால சந்ததிகள் தூற்றுமே, தீராப் பழியை சுமக்க வேண்டி வருமே என்று யோசித்திருக்கலாம்.

ஏதென்ஸ் நகரம் செய்த அநீதிகளுக்குப் பரிகாரமாக, அஸ்கிலேப்பியஸ் கடவுளே, உனக்கு என்னையே உயிர்ப்பலி தருகிறேன் என்றும்  முடிவெடுத்திருக்கலாம். (அஸ்கிலேப்பியஸ் தெய்வம், நோய்களைக் குணமாகும் தெய்வம்.)

எப்படியோ, மனிதர் தன் வாழ்க்கையின் ஒரு நுணுக்கமான கட்டத்தை  சுட்டிக்காட்ட விரும்பி இருக்கிறார் என்றே தெரிகிறது.

அவர் வாழ்க்கையில் பார்க்காத நீதிபதிகளா?
அவர் அறியாத தீர்ப்புகளா?
ஏதென்ஸ் மனிதர்களின் மனோநிலையை எடைபோடத் தெரியாதவரா அவர்?
எதற்கு, என்ன தண்டனை என்று அறியாதவரா?
எப்படி, எப்போது, எவரின் உணர்ச்சிகளைத் தூண்டினால் என்ன நடக்கும்? அதுவும் நாசூக்காக… என்று அந்த மேதைக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?

அவர் எடுத்த அந்த முடிவு.. தெரிந்தே எடுத்திருக்க வேண்டும்.

சாகாவரம் பெற்றவர்கள், சாகாவரம் பெற்றவர்கள் என்கிறார்களே, இது தானோ அது?

துணுக்குற்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் ….

கண் சிமிட்டியபடி சிரிக்கிறார் சாக்ரட்டீஸ் !

நன்றி:

1) How to Mellify A Corpse (author: Vicky Leon)
2) The Story of Philosophy: From Antiquity To The Present ((Konemann Publications)
3) Wikipedia