காசு நம் அடிமை – 1

தொடர் -1

பணம் ஒரு மூக்கணாங்கயிறு போன்றது . அதுவும் இரும்பால் செய்த மூக்கணாங்கயிறு. உங்களை எங்கே வேண்டுமானாலும் இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் அதை வடிவமைத்து மூக்கில் மாட்டிக்கொண்டதே நாம் தான் என்பதை மட்டும் மறந்துவிட்டோம்.

– மார்க் கின்னி

பணம் எல்லாருக்கும் தேவை. பணம் என்பது நம் பொருளியல் தேவைகளைப்  பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல, நம் உறவுகள், தொடர்புகள், உணர்வுகள் எல்லாவற்றையுமே அது பாதிக்கிறது.

ஆனால் இன்றைய பணத்துக்கு இன்னொரு முகமும் இருக்கிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் கைகளிலும் அவர்களோடு ஒட்டியிருக்கும் பெரும் பணக்காரப் புள்ளிகளின் கைகளிலும் இருக்கும் பெரும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம் அது என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

இன்று பணம் கொடுக்கல்கள்,  வாங்கல்கள் எல்லாம் ஜோராக நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பண நோட்டுகள், நாணயங்களுக்கு முடிந்தளவு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறோம் .

டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், பிட் காயின், மின் பரிமாற்றங்கள் என்று நவீனமாய்க் கலக்குகிறோம்.

இன்னும் ஒருபடி மேலேறி, கொஞ்ச நாளில் நாம் எல்லோரும் மெய்நிகர் உலகத்தில் (virtual world) சஞ்சரிக்கலாம் என்கிறோம்.

சரி. அங்கே பணத்துக்கு  என்ன நடக்கப் போகிறது என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் கலாட்டாவுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

அது வருகிற நேரம் வரட்டும். இன்று புழங்கும் பணம் தான் பெரிய கவலை.  ஏனெனில் பணத்தின் நோக்கம், அதைக்  கையாளும் விதம் இரண்டுமே விக்டோரியா மகாராணி காலத்தைத் தாண்டாமலேயே  இருக்கின்றன.

18 ம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த மாற்றங்கள் என்ன? மக்கள், அன்றைய அதிகார வர்க்கத்தினர், பணக்காரர்களை எல்லாரையும்  தேடித்தேடிப்  போட்டுத் தள்ளினார்கள். மெட்ரிக் அளவுகோலுக்கு மாறினார்கள். சட்டங்களை மாற்றினார்கள். கலண்டரையும் மாற்ற முயற்சிகள் நடந்தன.

ஆனால் ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாமே என்று கேலி செய்த பண அமைப்பை (Monetary system) மட்டும் மாற்ற மறந்தே போய்விட்டார்கள்.

20ம் நூற்றாண்டின் ரஷ்யப் புரட்சியில் எல்லாம் பொது உடைமைகள் ஆக்கப் பட்டன. வங்கிகள் அனைத்தும் அரசின் கைகளுக்கு வந்தன. ஆனால் பண அமைப்பு மட்டும் அப்படியே இருந்தது.

என்ன, ஒரு சின்ன வித்தியாசம். பண நோட்டுகளில் பழைய ஹீரோக்கள் இல்லை. பதிலாய், புதிய கதாநாயகர்கள்  புதுக் கோஷங்களுடன் காட்சி அளித்தார்கள். அவ்வளவு தான்.

மாவோ தலைமையில் உருவாகிய சீனம் மட்டுமல்ல  மற்றும் ஏகாதிபத்தியங்களில் இருந்து விடுதலை பெற்ற புதிய நாடுகள் எல்லாமே பத்தாம் பசலித்தனமான அதே பண அமைப்பை ஏற்றுக்கொண்டன.

இன்று வரை இதுவே தொடர்கிறது. நம் வாழ்க்கையையே ஒரு சுமை ஆக்கியிருக்கும் இந்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் முதலில் பணம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பணம் ஒரு பண்டம் அல்ல !

பணம் ஒரு பண்டம் அல்ல. அது ஒரு மாயா ஜாலம் என்று சொல்ல நிறைய உதாரணங்கள் காட்டலாம்.

ஆரம்பத்தில் அமெரிக்க டாலர், அந்த நாட்டின் மத்திய வங்கி  வைத்திருந்த தங்க மதிப்பை அதன் அளவுகோலாய் வைத்திருந்தது. (கிட்டத்தட்ட, எல்லா நாடுகளுமே, தங்கம், வெள்ளி போன்ற உலோக மதிப்பைத்தான் அளவுகோலாக வைத்திருந்தன.)

1971 ல், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் இனி அப்படி இருக்காது. டாலர்னா டாலர் தான் என்றார். ஒரு சின்ன அறிவிப்பு வந்தாலும் வந்தது. பணம் (டாலர்) தன்னை டக் என்று மாற்றிக் கொண்டது.

இனி டாலருக்கு என்ன அளவுகோல் கேட்டதற்கு இன்னொரு டாலர் ! என்று பதில் வந்தது. மாயா ஜாலம் அல்லாமல் வேறென்ன அது?

எந்த ஒரு மாஜிக்காரரும் பொருட்களை மாயமாக்கிக் காட்டுவார். நாம் மலைத்துப்போய் இருக்கும்போது அந்தப் பொருள் வேறொரு வடிவில் வரும்.

பணமும் ஆரம்பத்தில் அது பலவித பொருள்களாய் இருந்தது.

பண நோட்டுகளுக்கு நாம் வந்து சேர முன்பு, உலோகங்களில் வார்க்கப்பட்ட நாணயங்களைப் பணம் என்று சொல்லிக் கொண்டோம்.

அதற்கு முன்பு உலோகத் தகடுகள்.  இன்னும் பின்னால் போனால், அம்பர், தோல் கருவிகள், யானைத் தந்தங்கள், சோழிகள், முட்டைகள், நகங்கள், பானைகள், சட்டிகள், என்று எத்தனையோ பொருட்கள் பணமாகப் பாவனையில் இருந்தன.

கிலின் டேவிஸ் ஒரு பெரும் அட்டவணையே  போட்டிருக்கிறார்.

பிறகு பிளாஸ்டிக் அட்டைகளாய் (கிரெடிட் , டெபிட் மற்றும் இன்னோரன்ன கார்ட்டுகள்) மாறியது. தவிர, கணனிகளில் 0, 1 என்கிற  இரண்டு இலக்கங்களில் (binary) இன்று காட்சி அளிக்கிறது.

மெய்நிகர் உலகில் (virtual world) எப்படித்  தோன்றுமோ தெரியாது.

பணம் என்றால் என்ன?

எனவே பணம் என்பது நம் மனித வரலாற்றிலேயே ஏதோ ஒரு உருவில்  இருந்திருக்கிறது. இருக்கிறது. அது எந்த உருவத்திலும் வரலாம். ஆகவே அது ஒரு கருத்து. நம் மனதில் இருக்கும் ஒரு சிந்தனைக் கூறு.

இறைவன் என்பது நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. இறைவன் எந்த உருவத்திலும் இருக்கக்கூடியவர் என்று நம்புகிறோம். அவர் இருப்பது நம் மனதில் என்பதையும் நம்புகிறோம்.

அது போலவே பணம் என்பதும்  நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. அது நம் மனதில் இருக்கும் நம்பிக்கை. நம் பொருளியல் தேவைகளை இலகுவாகப்  பூர்த்தி செய்துகொள்ள அது உதவுகிறது.

ஆனால் ஒரு வித்தியாசம்.

முன்னர் சொன்ன சிந்தனைக் கூறு நமக்கு வாழ்நாள் பூரா தேவைப்படும். மற்றவர்களிடம் அந்த நம்பிக்கை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எனக்குள் அது இருக்கும் வரை என் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். நிம்மதியாய் இருக்கும். யாரும் எதுவும் சொல்ல முடியாது.

பின்னதோ, என்னிடமும் இருக்கவேண்டும். மற்றவர்களிடமும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வேலை செய்யாது. இந்த நம்பிக்கை பொதுவாக எல்லாரிடமும் இருக்கவேண்டிய சூழ்நிலை. கஷ்டமான வேலை.  இருந்தும் நடைமுறை சாத்தியமாகிவிட்டதே. எப்படி?

பணம் எப்படி உருவாகியிருக்கும்?

பொருளியல் புத்தகங்களைப் புரட்டினால், ஆரம்பத்தில் மனிதர்கள் பண்டமாற்று செய்து கொண்டிருந்தார்கள். இன்ன பொருளுக்கு, இன்ன சேவைக்கு,  இதைத் தருகிறேன் என்று தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்…

ஆனால் அதில் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டன. ஆகவே பொதுவாக ஒரு அலகு ஏற்படுத்திக் கொள்ளுவோம் என்று நினைத்தார்கள். பணம் என்று ஒரு அலகை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கு அடையாளமாய் ஏதோ ஒரு பொருளை எல்லாரும் ஒரே மனதாய் ஏற்றுக்கொண்டார்கள்.

இப்படித்  தான் ஒவ்வொரு சமுதாயங்களிலும் பணம் உருவானது என்று ஒரு அம்புலிமாமா கதை சொல்லப் பட்டிருக்கும்.

இருந்தும் இந்த அழகான கற்பனைக்கு சான்றுகளோ, தடயங்களோ கிடைக்கவில்லை என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருவாரியான பொருளியல் வல்லுனர்களோ, நாங்கள் அப்படித் தான் சொல்லுவோம். வேண்டுமானால் நீங்கள் கண்டுபிடியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். (எல்லாரும் அல்ல)

மானுடவியல் (Anthropology) என்பது மனிதர்கள் எப்படி ஆதிகாலத்தில் வாழ்ந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் நாகரிகம் அடைந்திருப்பார்கள்? எப்படி படிப்படியாய் முன்னேறி இன்றைய நிலைக்கு வந்திருப்பார்கள்? என்பதை ஆய்வு செய்யும் ஓர் துறை.

இந்தத் தொடரில் முக்கியமான ஓர் செய்தியை முதலிலேயே சொல்லிவிடவேண்டும். பணம் உருவானது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நான் குறிப்பிட்ட சில ஆய்வாளர்களின் முடிவுகளை மட்டும்  தொகுத்திருக்கிறேன்.

அன்றைய மனித சமுதாயங்கள்  சிறுசிறு குழுக்களாய் வாழ்ந்திருந்தபோது பண்டமாற்றுக்கள் நடந்ததற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.

ஒவ்வொரு குழுவின் உள்ளேயும் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் பிரிக்கவே முடியாத உறவுகளைக் கொண்டிருந்தார்கள். எல்லாப் பொருள்களும் சேவைகளும் இலவசமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டன (Gift Economy).

இலவசம் என்கிற பதமே தப்பு. விலை எனும் சொல், அல்லது கருத்தியல் என்பது நடைமுறையில், பாவனையில் இருந்தால் மட்டுமே அதன் எதிரான இலவசம் எனும் சொல் தோன்றி இருக்கும்.

விலை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில்?

பண அடிப்படையில் எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு  கொடுத்து அந்தக் கண்ணாடி மூலமே பார்த்துப் பழகியவர்கள் நாம்.

ஆகவே பழங்கால மனிதவாழ்வை கற்பனை செய்து பார்ப்பதில் நமக்கு சிரமங்கள் இருக்கின்றன.  அதற்கென்று இன்னோர் மனோநிலைக்கு மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு அது முடியும்?

இன்று ஒரு குடும்பத்துப் பிள்ளைகளே நான் வேறு, நீ வேறு என்கிற மனோநிலையில் குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்த இடைவெளியை உருவாக்குவதில் உளவியல் ரீதியாக இன்றைய பணம் பின்னால் இருந்து  செயல்படுகிறது. தவிர, வளர்ந்து அவர்களே குடும்ப வாழ்க்கை துவங்கும் போது இடைவெளி இன்னும் பெரிதாகி விடுகிறது.

அன்றைய வாழ்வே ஒரு போராட்டம் தான். இருந்தும் அன்பும் பாசமும் துன்பங்களை மறக்க உதவின. நான் வேறு நீ வேறு என்னும் சிந்தனை இருக்கவில்லை. பகிர்தலில் இருந்த இனிமையை அனைவரும் அனுபவித்தார்கள்.

அன்றைய எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு என்ன பெரிதாய்த்  தேவைப்பட்டிருக்கும்? ஆடுமாடுகள், ஆடைகள், உணவு எல்லாமே, எல்லாருக்கும் பகிரப்பட்டன.

உறவு முறைகளுக்குத் தான் முக்கியத்துவம் தரப்பட்டது. பொருள்களுக்கு அல்ல. உதாரணமாய், ஒரு திருமணத்துக்கு என்ன பரிசு கொடுப்பது, ஒரு கொலை நடந்துவிட்டால் அதற்கு என்ன இழப்பீடு கொடுப்பது போன்றவை…  இவை தான் பெரும் விவாதங்களாய் இருந்தன.

பண்டமாற்றுக்கள் வெவ்வேறு குழுக்களிடையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மிகமிக அபூர்வமாக,  சிறுசிறு அளவிலேயே நடந்தன.  பெரிதாய் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

ஒவ்வொரு குழுவும் அதன் மக்கள் தொகையில் ஒரே எண்ணிக்கையில் என்றென்றும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தவிர, காலம் செல்லச் செல்ல வேட்டையாடுதலைக் கைவிட்டு  நதி ஓரங்களில் பயிர்ச் செய்கை என்று முன்னேறி வந்தார்கள்.

இப்போது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பல குழுக்கள், வித்தியாசமான குணங்கள் கொண்டவர்கள் ஒன்று  சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை.

மக்கள் தொகை பெருகிற்று. கூடவே சச்சரவுகள் பெருகின. ஆனாலும் இந்த நாகரிகம் தோன்ற முன்னமே  மனிதர்களிடையே ஒரு பொதுமைப் பண்பு நிலவியிருந்ததை மானிடவியலாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

பயிர்ச் செய்கை  துவங்கப்பட்ட போது இந்தப் பண்பு மேலும் ஒரு சிக்கலாகி, அதே சமயம் உறுதியாக நிலை கொள்ள ஆரம்பித்தது.

உலகின் எந்தப் பகுதியானாலும் பண்டைக் காலம் முதல் எல்லா சமுதாயங்களிலும் ஓர் தலைவனோ அல்லது தலைவியோ, அல்லது ஒரு சிறு குழுவோ மற்றவர்களைக்  கட்டுக்குள் வைத்திருக்க உருவானார்கள்.

கூட்டாக வாழும் விலங்குகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும்.

எதிரிகளைத் துரத்தியடிக்க, தம் நிலப்பரப்பைக் காத்துக் கொள்ள பலசாலியான அல்லது புத்திசாலியான ஒருவர் தேவைப்பட்டார்.

யார் இந்த வாழ்வுப் போராட்டத்தில் நின்று பிடிக்க உதவினாரோ, கட்டளைகள் பிறப்பித்தாரோ அவருக்கு குழுவின் மற்ற ஆட்களைவிட, மிகவும் மரியாதை தரப்பட்டது.

சுருக்கமாக சொன்னால், பின்னால் வந்த அரசர்கள் பரம்பரைக்கு இவர்கள் தான் முன்னோடிகள்.

அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தத்  தலைமைகள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்னும் நிலைப்பாடுகள் ஏற்பட்டன.  அவரைக் கடவுள்/கடவுள்களின் பிரதிநிதியாகவும் காண்கின்ற போக்கும் உருவாகிற்று.

இந்த இடத்தில், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் தனது கருத்தை முன்வைக்கிறார்.

பொருட்கள், சேவைகளை மதிப்பீடு செய்ய ஒரு அளவுகோல் தேவை என்று எல்லாரும் உணரும் நிலை ஏற்பட்டபோது, அது என்ன அளவுகோல் என்பதில் ஆயிரம் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும்.

அத்தனை பேரும் எதையுமே ஒருமனதாய் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்ப முடியாது. ஆளுக்கொரு நியாயம் பேசி இருப்பார்கள். குழப்பங்கள் மட்டுமல்ல அடிதடிகளும் ஏற்பட்டிருக்கும். இது மனித இயற்கை.

ஆகவே அதிகாரத்தில் உள்ளவரின் ஆணை அல்லது அவர் மேல் ஏற்படும் பயபக்தி இல்லாமல் அந்த அளவுகோலை, அந்தக் குழுவோ, சமுதாயமோ ஏற்றுக் கொண்டிருக்கவே முடியாது.

தவிர, அந்த அளவுகோல் அந்தக் குழுவுக்குள் அல்லது சமுதாயத்துக்குள்  மட்டுமே  செல்லுபடியாகும். 

அப்படி அதிகாரத்தால் ஏற்படுத்தப்பட்ட அளவுகோல் தான் பணம் என்கிறார் அவர்.

இனி மானுடவியலாளர், டேவிட் கிரேபர் சொல்வதைப்  பார்ப்போம்: இவர் பணம் எனும் அளவுகோல் வந்ததற்கு யுத்தங்கள் தான் காரணம் என்று பெரிய அதிர்ச்சி கொடுக்கிறார்.

அவர், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் சொன்னதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு படி மேலே போகவேண்டி இருக்கிறது என்கிறார்.

தனித்தனி சமுதாயங்களின் உள்ளே பண்டமாற்று இருக்கவில்லை.  ஆனால் வெளியார் குழுக்களுடன் சில சமயங்களில் பண்டமாற்று இருந்திருக்கிறது.

வெளியாட்களின் நடத்தைகள் பற்றி எதுவும் தெரியாத நிலையில் அது எப்படி நடந்திருக்கும்? ஓர் கணம் யோசித்துப் பாருங்கள். சந்தேகம், பயம், ஒருவித தயக்கம் நிச்சயம் இருந்திருக்கும். எந்த நேரமும் வன்முறை வெடிக்கலாம். இல்லையா?

சமுதாயத்தில் பணம் உருவாக இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டன. ஓன்று அடிமைகள் வர்த்தகம். அடுத்து எகிறிக்கொண்டே போன கடன்கள்.

மனித வரலாற்றில், அரசுகளோ, பேரரசுகளோ நின்று பிடித்ததற்கு முக்கிய காரணம்: அவை புதுப்புது ஊர்களோ, நாடுகளோ பிடிக்க முனைந்து நின்றது தான். (எப்போதுமே.)

அப்போது தேவைப்பட்டது பெரும் எண்ணிக்கையில் ஆன போர்வீரர்கள். அவர்களுக்கு உணவு உடை, சிறப்பு சலுகைகள்  கொடுக்கவேண்டும்.

தவிர, உள்ளூர் மக்களையும் திருப்திப் படுத்தவேண்டும். ஆகவே மன்னர்களின் கடன்கள் எந்தக் காலத்திலும் எகிறியதே தவிர குறையவில்லை.

ஆகவே எப்போதும் போர் முழக்கம் தான்.

போரில் சிறை பிடிக்கப்பட்ட அந்நிய நாட்டு மக்களை, கொள்ளை அடித்த பொருள்களை எப்படிப் பகிர்வது? சந்தைகள் ஏற்பட்டன.

அடிமைகளால் பொருளாதாரக்  கஷ்டங்களைத்  தீர்க்கக் கூடியதாக இருந்தது. அதற்கு எந்த சமுதாயமும் விதிவிலக்கல்ல. அடிமைகளை எந்த வேலைக்கும் உபயோகிக்கலாம். படுக்க இடம், உணவு போதும். தீர்த்துக் கட்டினாலும் யாரும் கேட்கப் போவதில்லை.

(தொடரும்..)